M’Cheyne Bible Reading Plan
எப்பொழுதும் தேவனை நேசித்துக் கீழ்ப்படி!
6 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குப் போதிக்கும்படி என்னிடம் கூறியக் கட்டளைகளும், சட்டங்களும், நியாயங்களும் இவைகளே. குடியேறும்படி நீங்கள் போகிற தேசத்திலே இந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். 2 நீயும் உன் சந்ததியினரும் நீங்கள் வாழ்கின்ற காலம்வரை உங்கள் தேவனாகிய கர்த்தரை மதிக்க வேண்டும். நான் உங்களுக்குத் தரும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்தால், நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.
4 “இஸ்ரவேல் ஜனங்களே, கவனியுங்கள், நமது தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன்! 5 உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு இருதயத்துடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும். 6 இன்று நான் கூறும் இந்தக் கட்டளைகளை என்றும் உங்கள் மனதில் வைக்கவேண்டும். 7 நீங்கள் இவற்றைக் கட்டாயமாக உங்கள் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். உங்கள் வீட்டினுள் இருக்கும்போதும் வீதிகளில் நடக்கும்போதும் அவற்றைப் பற்றிப் பேசவேண்டும். நீங்கள் தூங்கச் செல்லும்போதும் உறங்கி எழும்போதும் அவற்றைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும். 8 அவற்றை எழுதிக்கொண்டு அடையாளமாக உங்கள் கைகளில் அணிந்து கொள்ளுங்கள். என் போதனைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் பயன்படும்படி எப்போதும் அவைகளை உங்கள் நெற்றியில் அணிந்துகொள்ளுங்கள். 9 அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.
10 “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.
12 “ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்! கர்த்தரை மறந்துவிடாதிருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள், ஆனால் கர்த்தர் உங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தார். 13 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செய்து அவர் ஒருவரை மட்டும் சேவியுங்கள். அவரது பெயரை மட்டுமே வைத்து மற்றவருக்கு வாக்களியுங்கள் (பிற பொய்த் தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்தாதிருங்கள்!) 14 நீங்கள் கண்டிப்பாக பிற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றக் கூடாது. உங்களைச் சுற்றியிருக்கின்ற ஜனங்களின் பிற பொய்த் தெய்வங்களை நீங்கள் பின்பற்றக் கூடாது. 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். அவர் தமது ஜனங்கள் பிற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கின்றார். எனவே, நீங்கள் அத்தகைய தெய்வங்களைப் பின்பற்றினால் உங்கள் மீது கர்த்தர் மிகவும் கோபங்கொள்வார். அவர் உங்களை இந்தப் பூமியில் இருந்தே அழித்துவிடுவார்.
16 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள். 17 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 18 நீங்கள் கர்த்தரைத் திருப்திப்படுத்தும்படி நல்லவற்றையும், சரியானவற்றையும் மட்டுமே செய்யவேண்டும். அப்போது எல்லாம் உங்களுக்கு நன்றாகவே நடக்கும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு உறுதியளித்த தேசத்தில் போய் நல்ல நிலங்களை எடுத்துக்கொள்ளலாம். 19 கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.
தேவன் செய்தவற்றை உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்
20 “வருங்காலத்தில், ‘நமது தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய போதனைகளுக்கும், சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் அர்த்தம் என்ன?’ என்று உன்னுடைய மகன் உன்னிடம் கேட்கலாம். 21 நீ உன் மகனிடம் சொல், ‘நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது கர்த்தர் தன் வல்லமையான கரத்தினாலே எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்து மீட்டுக்கொண்டார். 22 கர்த்தர் அங்கே சிறந்த அற்புதங்களைச் செய்தார். கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பே எகிப்தின் மீதும், பார்வோன் மீதும், அவன் குடும்பம் அனைத்தின் மீதும், கொடிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார். 23 பின்பு கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு கூறியபடி இந்த தேசத்தை நமக்குக் கொடுக்கும்படி நம்மை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார், 24 கர்த்தர் போதித்த அனைத்தையும் நாம் பின்பற்றும்படி கர்த்தர் நமக்கு கட்டளையிட்டார். நாம் நமது தேவனாகிய கர்த்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும். அப்போது கர்த்தர் நாம் இன்று இருக்கிற வண்ணமாக எப்போதும் வாழ்ந்து செழிப்பாக இருக்கும்படிச் செய்வார். 25 நமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே அவரது சட்டங்களை நாம் கவனமாகப் பின்பற்றினோம் என்றால், அப்போது தேவன் நாம் மிக நல்ல காரியத்தைச் செய்தோம்’” என்று சொல்வார்.
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு,
அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
ஆமென், ஆமென்!
தேவன் தமது பகைவர்களைத் தண்டிப்பார்
34 அனைத்து நாடுகளே, அருகில் வந்து கவனியுங்கள் ஜனங்கள் அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும். பூமியும், பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் இவற்றைக் கவனிக்க வேண்டும். 2 எல்லா நாடுகளின்மீதும், அவற்றிலுள்ள படைகளின் மீதும் கர்த்தர் கோபத்தோடு இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கர்த்தர் அழிப்பார். அவர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு அவர் காரணமாக இருப்பார். 3 அவர்களின் உடல்கள் வெளியே எடுத்தெறியப்படும். உடல்களிலிருந்து நாற்றம் கிளம்பும், மலைகளில் இரத்தம் வடியும். 4 வானங்கள் புத்தகச் சுருளைப்போலச் சுருட்டப்படும். நட்சத்திரங்கள் திராட்சைக் கொடியின் இலைகள் அல்லது அத்திமர இலைகள்போல உதிரும். வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களும் உருகிப்போகும். 5 “எனது வாளானது வானில் இரத்தத்தால் மூடப்படும்போது இது நிகழும்” என்று கர்த்தர் கூறுகிறார்.
பார்! கர்த்தருடைய வாள் ஏதோமை வெட்டிப்போடுகிறது. அந்த ஜனங்களை கர்த்தர் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். அவர்கள் மரிக்கவேண்டும்.
6 கர்த்தருடைய வாள் ஆட்டுக் குட்டிகள் மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் பூசப்பட்டு, செம்மறியாட்டு கொழுப்பினால் வழுவழுப்பாக்கப்பட்டதாயும் இருக்கிறது. ஏனென்றால், கர்த்தர் போஸ்றாவிலும் ஏதோமிலும் கொல்வதற்கு இதுதான் நேரம் என்று முடிவு செய்தார். 7 எனவே, ஆட்டுக் குட்டிகள், கடாக்கள், பலமிக்க காளைகள் எல்லாம் கொல்லப்படும். அவற்றின் இரத்தத்தால் நாடு நிறைந்துவிடும். அதின் மண்ணானது கொழுப்பால் மூடப்படும்.
8 இவையனைத்தும் நிகழும். ஏனென்றால், கர்த்தர் தண்டனைக்கென்று ஒரு காலத்தைத் தேர்தெடுத்திருக்கிறார். கர்த்தர் ஒரு வருடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் சீயோனில் தாங்கள் செய்த பாவங்களுக்கு விலை தரவேண்டும்.
9 ஏதோமின் ஆறுகள் சூடான தாரைப்போலாகும். ஏதோமின் பூமி எரிகிற கந்தகம் போன்று ஆகும். 10 இரவும் பகலும் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். எவராலும் அதனை அணைக்க முடியாது. அதன் புகை ஏதோமிலிருந்து என்றென்றும் கிளம்பிக்கொண்டிருக்கும். அந்தப் பூமியானது சதாகாலமாக அழிக்கப்படும். மீண்டும் அந்த நாட்டின் வழியாக எந்த ஜனங்களாலும் பயணம் செய்யமுடியாது. 11 பறவைகளும் சிறு மிருகங்களும் அந்த நாட்டைச் சொந்தமாக்கும். ஆந்தைகளும் காக்கைகளும் அங்கே வாழும். “காலியான வனாந்திரம்” என்று அந்த நாடு அழைக்கப்படும்.
12 பிரபுக்களும் தலைவர்களும் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஆட்சி செய்ய அங்கே எதுவும் இருக்காது.
13 அங்குள்ள அழகான வீடுகளில் முட்செடிகளும் புதர்களும் வளரும். அந்த வீடுகளில் காட்டு நாய்களும், ஆந்தைகளும் வாழும். காட்டு மிருகங்கள் தம் வாழிடங்களை அங்கே அமைத்துக்கொள்ளும். அங்கு வளர்ந்துள்ள பெரிய புல்வெளிகளில் பெரிய பறவைகள் வாழும். 14 அங்கே காட்டுப் பூனைகள் ஓரிகளுடன் வாழும் காட்டு ஆடுகள் தம் நண்பர்களைக் கூப்பிடும். அங்கே சாக்குருவிகளும் ஓய்வெடுக்க இடம் தேடிக்கொள்ளும். 15 பாம்புகள் தங்கள் வீடுகளை அங்கே அமைத்துக்கொள்ளும். பாம்புகள் தங்கள் முட்டைகளை அங்கே இடும். அம்முட்டைகள் பொரித்து, சிறு பாம்புகள் இருட்டில் திரிந்துகொண்டிருக்கும். மரித்துப்போனவற்றைத் தின்னும் பறவைகள், பெண்கள் தம் நண்பர்களைப் பார்வையிடுவதுபோன்று சேர்ந்துகொள்ளும்.
16 கர்த்தருடைய புத்தகச்சுருளைப் பாருங்கள் அதில் எழுதப்பட்டிருப்பதை வாசியுங்கள். எதுவும் குறையாமல் இருக்கும். அந்த மிருகங்கள் சேர்ந்திருக்கும் என்று அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தேவன் அவற்றை ஒன்று சேர்ப்பதாகச் சொன்னார். எனவே தேவனுடைய ஆவி அவற்றை ஒன்று சேர்க்கும்.
17 அவர்களோடு என்ன செய்யவேண்டும் என்று தேவன் முடிவு செய்துவிட்டார். பிறகு அவர்களுக்காக தேவன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். தேவன் ஒரு கோடு வரைந்து, அவர்களின் நாட்டை அவர்களுக்குக் காட்டினார். எனவே என்றென்றைக்கும் அந்த நாட்டைச் சொந்தமாக்கிக்கொண்டு அவர்கள் ஆண்டாண்டு காலம் அங்கே வாழ்வார்கள்.
யோவான் பரலோகத்தைப் பார்த்தல்
4 பிறகு நான் பார்த்தேன். அங்கே எனக்கு முன்னே பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. என்னிடம் முன்பு பேசிய அதே குரலை அங்கு கேட்டேன். அக்குரல் எக்காளத்தைப்போன்று ஒலித்தது. “இங்கே ஏறிவா. இதற்கப்புறம் என்ன நிகழவேண்டும் என்பதை உனக்குக் காட்டுகிறேன்” என்றது அக்குரல். 2 பின்னர் ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டேன். பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் எனக்கு முன்பாக இருந்தது. அதன் மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3 அவர் பார்ப்பதற்கு வைரக்கல்லும், பதுமராகக் கல்லும்போல இருந்தார். அந்த சிம்மாசனத்தைச் சுற்றி மரகதம் போன்ற ஒரு வானவில் இருந்தது.
4 சிம்மாசனத்தைச் சுற்றி இருபத்தி நான்கு சிறிய சிம்மாசனங்கள் இருந்தன. அந்த இருபத்துநான்கு சிறிய சிம்மாசனங்களில் இருபத்து நான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். மூப்பர்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் தலையில் தங்கக் கிரீடங்கள் இருந்தன. 5 சிம்மாசனத்திலிருந்து மின்னல்கள் ஒளிர்ந்தன. இடியோசை கேட்டது. சிம்மாசனத்திற்கு முன்பு ஏழு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அந்த ஏழு விளக்குகள் தேவனுடைய ஏழு ஆவிகளாகும். 6 அந்தச் சிம்மாசனத்துக்கு முன்பாகப் பார்ப்பதற்கு கண்ணாடிக் கடல்போல ஒன்றிருந்தது.
அக்கடல் பளிங்குபோல் தெளிவாகவும் இருந்தது. அந்தச் சிம்மாசனத்தின் முன்னாலும் பக்கங்களிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன. அவற்றிற்கு முன்புறமும் பின்புறமும் கண்கள் நிறைந்திருந்தன. 7 அந்த முதல் ஜீவன் சிங்கத்தைப் போன்றிருந்தது. இரண்டாவது ஜீவன் காளையைப்போல இருந்தது. மூன்றாவது ஜீவனுக்கு மனிதனைப்போல முகமிருந்தது. நான்காவது ஜீவன் பறக்கும் கழுகைப் போன்றிருந்தது. 8 இந்த நான்கு ஜீவன்களுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. இவற்றுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்கள் இருந்தன. இரவும், பகலும் அவை நிறுத்தாமல் கீழ்க்கண்டவற்றைக் கூறிக்கொண்டிருந்தன:
“சகல வல்லமையும் உள்ளவராகிய கர்த்தராகிய தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,
அவர் எப்போதும் இருந்தார், இருக்கிறார், இனிமேல் வரப்போகிறார்.”
9 அந்த உயிர்வாழும் ஜீவன்கள் சிம்மாசனத்தின் மேல் வீற்றிருப்பவருக்கு மகிமையையும், பெருமையையும் நன்றியையும் செலுத்துகின்றன. அவரே எல்லாக் காலங்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். எப்பொழுதும் அந்த உயிர் வாழும் ஜீவன்கள் இப்புகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கின்றன. 10 அந்த இருபத்துநான்கு மூப்பர்களும் தேவனுக்கு முன் குனிந்து வணங்குகின்றனர். எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றவரை மூப்பர்கள் வணங்குகின்றனர். அவர்கள் தங்கள் கிரீடங்களைக் கழற்றி சிம்மாசனத்தின் முன் வைத்து விட்டு கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்:
11 “எங்கள் கர்த்தரும் தேவனுமானவரே!
மகிமைக்கும், கனத்திற்கும், வல்லமைக்கும் தகுதியானவர் நீர் அதிகாரமும் உள்ளவர்.
எல்லாவற்றையும் படைத்தவர் நீர்.
உம் விருப்பத்தாலேயே யாவும் படைக்கப்பட்டு நிலைத்திருக்கவும் செய்கின்றன.”
2008 by World Bible Translation Center