Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 4

தேவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு மோசே ஜனங்களுக்குக் கூறுகிறான்

“இஸ்ரவேல் ஜனங்களே, இனி நான் போதிக்கும் கட்டளைகளையும், நியாயங்களையும் கவனியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நீங்கள் வாழலாம். பிறகு உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் நிலத்தை, சென்று எடுத்துக்கொள்ளுங்கள். நான் இடும் கட்டளைகளுடன் எதையும் நீங்கள் சேர்க்கவும் கூடாது. மேலும் எதையும் (நீங்கள்) நீக்கவும் கூடாது. நான் உங்களுக்குத் தரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.

“பாகால்பேயோரின் நிமித்தம், கர்த்தர் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள். பொய்த் தெய்வங்களான அங்குள்ள பாகாலை வழிபட்ட உங்கள் ஜனங்கள் அனைவரையும், உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கே அழித்தார். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருந்த நீங்கள் அனைவரும் இன்று உயிருடன் இருக்கின்றீர்கள்.

“என் தேவனாகிய கர்த்தர் எனக்கிட்ட கட்டளையின்படி உங்களுக்கு கட்டளைகளையும், நியாயங்களையும் போதித்தேன். நீங்கள் நுழையவும் வசப்படுத்தவும் தயாராகவுள்ள எந்த நாட்டிலும் அச்சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென்பதற்காகவே நான் அவற்றைப் போதித்தேன், எச்சரிக்கையுடன் இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் அறிவும், ஞானமும் உள்ளவர்கள் என்பதை இது மற்ற நாட்டு ஜனங்களுக்கு எடுத்துக்காட்டும். அந்நாட்டு ஜனங்களும் இச்சட்டங்களைக் கேள்விப்படும்போது, ‘உண்மையிலேயே, இந்த பெரிய ஜனத்தின் (இஸ்ரவேலர்) ஜனங்கள் ஞானமுள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள்.

“நாம் உதவி கேட்கும்பொழுது தேவனாகிய கர்த்தர் நமது அருகில் இருக்கிறார். வேறெந்த நாட்டிற்கும் அவரைப்போல ஒரு தேவன் இல்லை! நான் இன்று உங்களுக்கு வழங்கும் போதனைகளைப் போன்று நீதியான சட்டவிதிகள் வேறு எந்த பெரிய ஜனத்துக்கும் இல்லை. ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஓரேப் மலையில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் நின்றதை நினைத்துப்பாருங்கள். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்வதைக் கேட்க ஜனங்களை ஒன்று கூட்டு. பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயந்து மதிப்பளிக்க கற்பார்கள். மேலும் இவற்றை அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பார்கள்’என்று கூறினார். 11 நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது. 12 பின் நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களிடம் பேசினார். யாரோ பேசும் குரலை நீங்கள் கேட்டீர்கள். ஆனால் உருவம் எதையும் நீங்கள் பார்க்கவில்லை. குரல்மட்டுமே கேட்டது. 13 கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களை கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார். 14 அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.

15 “ஒரேப் மலை மீது நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களுடன் பேசிய நாளில், நீங்கள் அவரைப் பார்க்கவில்லை. ஏனென்றால் தேவனுக்கு உருவமில்லை. 16 எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எந்த உயிரினத்தின் வடிவத்திலும் சிலைகளையோ பொய்யான தெய்வங்களை உருவாக்கும் பாவத்தைச் செய்து உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள். ஆண் அல்லது பெண் போன்ற சிலைகளைச் செய்யாதீர்கள். 17 நிலத்தில் வாழும் ஒரு மிருகத்தைப்போலவோ அல்லது வானில் பறக்கும் ஒரு பறவையைப் போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். 18 நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள். 19 வானத்தைப் பார்க்கும் பொழுதும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானில் உள்ள பல்வேறு பொருட்களைப் பார்க்கும் பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றைத் தொழுதுகொள்ளவும், சேவை செய்யவும் தூண்டப்படாதிருக்க எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உலகின் மற்ற ஜனங்களை அவ்வாறு செய்யும்படி விட்டிருக்கிறார். 20 ஆனால் கர்த்தர் எகிப்திலிருந்து உங்களை வெளியேற்றி தமது சிறப்பான ஜனமாக்கியுள்ளார். இது, இரும்பை உருக்கும் வெப்பமிக்க உருக்காலையிலிருந்து [a] உங்களை வெளியே இழுத்துப்போட்டது போலாகும். இப்பொழுதோ நீங்கள் அவருடைய ஜனங்கள்!

21 “உங்களால் என்மீது கோபங்கொண்ட கர்த்தர், நான் யோர்தான் நதியைக் கடக்க இயலாது என்று ஆணையிட்டார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் சிறப்பான நாட்டிற்குள் நான் கடந்து போவதில்லை” என்றார். 22 ஆகவே நான் இங்கேயே மரிக்க வேண்டும். ஆனால் நீங்களோ விரைவில் யோர்தான் நதியைக் கடந்து நல்ல நிலப்பகுதியைக் கைப்பற்றி அங்கு வாழ்வீர்கள். 23 அப்புதிய பூமியில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நீங்கள் மறக்கக்கூடாது. கர்த்தருடைய கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த உருவிலும் விக்கிரகங்களைச் செய்யாதீர்கள். 24 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கிறார். அழிக்கும் அக்கினியாகவும் கர்த்தர் விளங்குவார்!

25 “அந்நாட்டில் நீங்கள் நீண்டகாலம் வசிப்பீர்கள். அங்கே குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் பெறுவீர்கள். அங்கு நீங்கள் முதுமையடைவீர்கள். பின் எல்லா வகையான விக்கிரகங்களையும் செய்து உங்கள் வாழ்க்கையை பாழாக்குவீர்கள். நீங்கள் அவ்வாறுச் செய்யும்போது, தேவனுக்கு மிகுந்த கோபமூட்டுவீர்கள்! 26 ஆகவே இப்பொழுதே நான் உங்களை எச்சரிக்கிறேன். பரலோகமும் பூமியும் எனக்குச் சாட்சி! அக்கொடியச் செயலை நீங்கள் செய்தால் விரைவில் அழிக்கப்படுவீர்கள். அப்பூமியைக் கைப்பற்ற நீங்கள் யோர்தான் நதியை இப்பொழுது கடக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் ஏதேனும் விக்கிரகங்களைச் செய்தால், அங்கே நீங்கள் நீண்ட காலம் வசிக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் முழுவதுமாக அழிக்கப்படுவீர்கள்! 27 கர்த்தர் உங்களைப் பல நாடுகளில் சிதறடிப்பார். கர்த்தர் உங்களை அனுப்பும் நாடுகளுக்குச் செல்ல உங்களில் வெகுசிலரே மீதியாயிருப்பீர்கள். 28 அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்டு பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ அல்லது நுகரவோ சக்தியற்ற, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்குச் சேவை செய்வீர்கள். 29 ஆனால் மற்ற நாடுகளில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் முழு மனதுடனும் முழு இருதயத்துடனும் தேடினால் அவரைக் கண்டடைவீர்கள். 30 நீங்கள் துன்பமடைகிற பொழுது, இவைகளெல்லாம் உங்களுக்கு நேரும்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவீர்கள். அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தர் கருணைமிக்க தேவன், உங்களை அங்கே விட்டுவிடமாட்டார் அவர் உங்களை முழுமையாக அழிக்கமாட்டார். உங்கள் முற்பிதாக்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கமாட்டார்.

தேவன் செய்த பெரும் செயல்களை நினையுங்கள்

32 “இதைப்போன்ற பெரிய செயல் ஏதும் இதற்கு முன் நடந்ததுண்டா? இல்லவே இல்லை. கடந்த காலத்தைப் பாருங்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள். பூமியில் தேவன் மனிதர்களைப் படைத்த காலம் வரைக்கும் பின்னோக்கிப் பாருங்கள். இவ்வுலகில் நடந்த எல்லாவற்றையும் பாருங்கள். இப்படிப்பட்ட பெரிய காரியம் எதனையும் யாரும் கேள்விப்பட்டதுண்டா? இல்லை! 33 தேவன் அக்கினியிலிருந்து உங்களுடன் பேசியதைக் கேட்டும் உயிருடன் இருக்கிறீர்கள்! வேறெவருக்கேனும் அவ்வாறு நடந்ததுண்டா? இல்லை! 34 மேலும் வேறு எந்த தேவனும் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தன் ஜனங்களை தனக்காகத் தேர்ந்தெடுக்க முயன்றதுண்டா? இல்லை! ஆனால் இந்த அற்புதச் செயல்களை உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்ததை நீங்களே கண்டீர்கள்! தன் வல்லமையையும் பலத்தையும் உங்களுக்குக் காண்பித்தார். ஜனங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கண்டீர்கள். அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டீர்கள். போரையும், கொடுஞ் செயல்கள் ஏற்பட்டதையும் பார்த்தீர்கள். 35 கர்த்தர் அவர் தேவன் என்பதை நீங்கள் அறியவே அவற்றை நிகழ்த்தினார். அவரைப் போல் வேறொரு தேவன் இல்லை! 36 உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பரலோகத்திலிருந்து நீங்கள் அவரது குரலைக் கேட்க வைத்தார். பூமியின் மீது அவருடைய பெரும் நெருப்பை நீங்கள் காணும்படிச் செய்து, அதிலிருந்து உங்களுடன் பேசினார்.

37 “கர்த்தர் உங்கள் முற்பிதாக்களை நேசித்தார். அதனால்தான், அவர்களின் சந்ததியினரான உங்களைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். அவர் உங்களுடன் இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை வெளியேற்றினார். 38 நீங்கள் முன்னேறியபொழுது, உங்களைவிடவும் பெரியதும் வலிமை மிக்கதுமான ஜனங்களை கர்த்தர் வெளியில் துரத்தினார். அந்நாடுகளுக்குள் உங்களை வழிநடத்தினார். நீங்கள் வாழ்வதற்காக உங்களுக்கு அவர்களுடைய நாடுகளைக் கொடுத்தார். இன்றும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்.

39 “ஆகவே கர்த்தரே தேவன் என்பதை நீங்கள் இன்று உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள பரலோகத்திலும், கீழேயுள்ள பூமியிலும் அவரே தேவன். வேறு தேவன் இல்லை! 40 நான் உங்களுக்கு இன்று தரும் அவரது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கும் உங்களுக்குப் பின் வசிக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒவ்வொன்றும் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கே எப்பொழுதும் சொந்தமாக உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள். இது என்றும் உங்களுடையதாயிருக்கும்!” என்றான்.

பாதுகாப்பு நகரங்களை மோசே தேர்ந்தெடுத்தல்

41 பின் யோர்தான் நதியின் கிழக்குத் திசையில் மோசே மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுத்தான். 42 ஒருவன் முற்பகையின்றி மற்றவனைக் கைத்தவறி கொலை செய்தால், அவன் அம்மூன்று நகரங்களில் ஒன்றுக்குள் கொல்லப்படாமல் ஓடிவிடலாம். ஆனால் அவன் மற்றவனை வெறுக்காமலும், வேண்டுமென்றே கொலை செய்யாதிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கமுடியும். 43 மோசே தேர்ந்தெடுத்த மூன்று நகரங்களாவன: ரூபனின் கோத்திரத்திற்குரிய உயரமான சமவெளியில் உள்ள பேசேர், காத்தின் கோத்திரத்திற்குரிய கீலேயாத்தில் உள்ள ராமோத் மற்றும் மனாசேயின் கோத்திரத்திற்குரிய பாசானில் உள்ள கோலான் ஆகியவையாகும்.

மோசேயின் சட்டங்களுக்கான அறிமுகம்

44 தேவனின் சட்டங்களை மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தான். 45 இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபின், மோசே இப்போதனைகளையும் பிரமாணங்களையும் தந்தான். 46 அவர்கள் பெத்பேயோரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் யோர்தான் நதிக்குக் கிழக்கில் இருந்தபொழுது, மோசே இச்சட்டங்களை அவர்களுக்கு வழங்கினான். எஸ்போனில் வசித்த எமோரிய அரசனாகிய சீகோனின் நாட்டில் அவர்கள் இருந்தார்கள். (எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் சீகோனைத் தோற்கடித்தனர். 47 அவர்கள் சீகோனின் தேசத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மேலும் பாசானின் அரசனாகிய ஓக்கின் தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். இவ்விரு எமோரிய அரசர்களும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் வசித்தார்கள். 48 இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஆரோவேர் முதல் சிரியோன் மலை (எர்மோன் மலை) வரையிலும் பரவியுள்ளது. 49 யோர்தான் நதியின் கிழக்கில் யோர்தான் பள்ளத்தாக்கு முழுவதையும் இந்நிலப்பகுதி உள்ளடக்கியுள்ளது. இது தெற்கில் சவக்கடல் வரையிலும் கிழக்கில் பிஸ்கா மலையின் அடிவாரம் வரையிலும் பரவியுள்ளது.)

சங்கீதம் 86-87

தாவீதின் விண்ணப்பம்

86 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
    கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
    தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள்.
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன்.
    எனவே என்னைக் காப்பாற்றும்.
என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
    நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
    என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
    உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள்.
    நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
    நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
    நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
    அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர்.
    நீரே, நீர் மட்டுமே தேவன்!
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
    நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
    என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
    கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
    கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
    அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
    நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
    நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
    நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
    என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
    நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.

கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்

87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
    இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
    அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
    அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
    மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
    ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.

விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
    அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
    அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.

ஏசாயா 32

தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும்

32 நான் சொல்லுகிறவற்றைக் கேளுங்கள்! ஒரு அரசன் நன்மையைத்தரும் ஆட்சி செய்ய வேண்டும். தலைவர்கள் ஜனங்களை வழிநடத்திச் செல்லும்போது நீதியான முடிவுகளை எடுக்க வேண்டும். இது நிகழ்ந்தால், அரசன் காற்றுக்கும் மழைக்கும் மறைந்துகொள்வதற்கு ஏற்ற இடமாக இருப்பான். வறண்ட பூமிக்கு நீரோடை வந்ததுபோல இருக்கும். இது வெப்பமான பூமியில் பெருங்கன்மலையில் குளிர்ந்த நிழல்போல் இருக்கும். ஜனங்கள் உதவிக்காக அரசனிடம் திரும்புவார்கள். ஜனங்கள் உண்மையில் அவர் சொல்லுவதைக் கவனிப்பார்கள். குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள். நாத்திகர்கள் உயர்ந்த மனிதர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். மோசடிக்காரர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்றழைக்கப்படமாட்டார்கள்.

ஒரு நாத்திகன் தீயவற்றைப் பேசுகிறான். அவனது மனதில் தீயவற்றைச் செய்வதற்கே திட்டங்கள் இருக்கும். ஒரு துன்மார்க்கன் தவறானவற்றைச் செய்வதற்கே விரும்புகிறான். ஒரு துன்மார்க்கன் கர்த்தரைப்பற்றி கெட்டவற்றையே பேசுகிறான். ஒரு துன்மார்க்கன் பசித்த ஜனங்களைச் சாப்பிட அனுமதிக்கமாட்டான். ஒரு துன்மார்க்கன் தாகமாயிருக்கும் ஜனங்களைத் தண்ணீர் குடிக்கவிடமாட்டான். அந்த நாத்திகன் கெட்டவற்றைக் கருவியாகப் பயன்படுத்துவான். ஏழை ஜனங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் வழிகளை அவன் திட்டமிடுவான். அந்த துன்மார்க்கன் ஏழை ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்லுகிறான். அவனது பொய்கள் ஏழை ஜனங்களை நேர்மையான தீர்ப்பு பெறுவதிலிருந்து விலக்குகிறது.

ஆனால் நல்ல தலைவன், நல்லவற்றைச் செய்யத் திட்டமிடுகிறான். அந்த நல்லவை அவனை நல்ல தலைவனாகச் செய்கிறது.

கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன

உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும். 10 பெண்களாகிய நீங்கள் இப்போது அமைதியை உணருகிறீர்கள். ஆனால், ஒரு ஆண்டுக்குப் பிறகு தொல்லைக்குள்ளாவீர்கள். ஏனென்றால், அடுத்த ஆண்டு திராட்சைகளை நீங்கள் பறிக்க மாட்டீர்கள். ஏனென்றால், பறிப்பதற்குத் திராட்சைகள் இருக்காது.

11 பெண்களே! இப்பொழுது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் அச்சுறுத்தப்பட வேண்டும். பெண்களே! இப்போது நீங்கள் அமைதியை உணருகிறீர்கள். ஆனால் நீங்கள் கவலைக்குட்பட வேண்டும். உங்களது மென்மையான ஆடைகளை எடுத்துவிடுங்கள். துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அந்த ஆடைகளை உங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள். 12 துக்கத்துக்குரிய ஆடைகளை துன்பம் நிறைந்த உங்கள் மார்புக்கு மேல் போட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் வயல்கள் காலியானதால் அலறுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டங்கள் ஒரு காலத்தில் திராட்சைப் பழங்களைத் தந்தன. ஆனால் இப்போது அவை காலியாக உள்ளன. 13 எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.

14 ஜனங்கள் தலைநகரத்தைவிட்டு வெளியேறுவார்கள். அரண்மனையும் கோபுரங்களும் காலியாகும். ஜனங்கள் வீடுகளில் வாழமாட்டார்கள். அவர்கள் குகைகளில் வாழுவார்கள். காட்டுக் கழுதைகளும் ஆடுகளும் நகரத்தில் வாழும். மிருகங்கள் அங்கே புல்மேயப்போகும்.

15-16 தேவன் மேலேயிருந்து அவரது ஆவியைக் கொடுக்கும்வரை இது தொடரும். இப்பொழுது பூமியில் நன்மை இல்லை. இது இப்போது வனாந்திரம்போல் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில். இந்த வனாந்திரம் கர்மேல் போலாகும். அங்கே நேர்மையான தீர்ப்புகள் இருக்கும். கர்மேல் பசுமைக் காடுகளைப்போன்று ஆகும். நன்மை அங்கே வாழும். 17 என்றென்றைக்கும் இந்த நன்மை சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். 18 எனது ஜனங்கள் சமாதானத்தின் அழகிய வயலில் வாழுவார்கள். எனது ஜனங்கள் பாதுகாப்பின் கூடாரங்களில் வாழுவார்கள். அவர்கள் அமைதியும் சமாதானமும் உள்ள இடங்களில் வாழுவார்கள்.

19 ஆனால் இவை நிகழும்முன்பு, காடுகள் விழவேண்டும். நகரம் தோற்கடிக்கப்படவேண்டும். 20 நீங்கள் தண்ணீர் நிலையுள்ள இடங்களில் விதைக்கிறீர்கள். அங்கே உங்கள் கழுதைகளையும் மாடுகளையும் சுதந்திரமாகத் திரியவும் மேயவும் விடுகிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வெளி 2

எபேசு சபைக்கு இயேசுவின் நிருபம்

“எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

“தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் உனக்கு இதனைக் கூறுகின்றார்.

“நீ என்ன செய்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ கடினமாக வேலை செய்கிறாய். உன் செயல்களை நீ விட்டுவிடுவதில்லை. கெட்ட மக்களை நீ ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்குத் தெரியும். உண்மையில் அப்போஸ்தலர்கள் இல்லாமல் வெளியே தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லித் திரிபவர்களை நீ சோதனை செய்திருக்கிறாய். அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறாய். நீ விலகிப் போகாமல், தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். நீ என் நிமித்தம் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறாய். நீ இவற்றைச் செய்வதில் சோர்வு இல்லாமலும் இருக்கிறாய்.

“ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய். எனவே விழுவதற்கு முன்பு எங்கிருந்தாய் என்பதை நினைத்துப்பார். உன் மனதை மாற்றிக்கொள். துவக்க காலத்தில் செய்தவைகளை தொடர்ந்து செய். நீ மாறாவிட்டால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அதனிடத்தில் இருந்து நீக்கிவிடுவேன். ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள் [a] செய்வதை வெறுக்கிறாய்.

“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். வெற்றி பெறுகிறவனுக்கு தேவனுடைய தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடும் உரிமையை நான் கொடுப்பேன்.”

சிமிர்னா சபைக்கு இயேசுவின் நிருபம்

“சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

“துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர்.

“உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர். 10 உங்களுக்கு நிகழ்வதைக் குறித்து அச்சப்படவேண்டாம். பிசாசு உங்களில் சிலரைச் சிறையில் போடுவான். அவன் உங்களைச் சோதிப்பதற்காகவே அவ்வாறு செய்கிறான். நீங்கள் பத்து நாட்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் இறக்க வேண்டியதாக இருந்தாலும் உண்மையானவர்களாக இருங்கள். நீ இறுதிவரை உண்மையாயிருந்தால் ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்.

11 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”

பெர்கமு சபைக்கு இயேசுவின் நிருபம்

12 “பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

“இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.

13 “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன்Ԕ விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம்.

14 “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். 15 இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். 16 எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன்.

17 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்!

“ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன். [b] அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.”

தியத்தீரா சபைக்கு இயேசுவின் நிருபம்

“தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

18 “தேவனின் குமாரன் இவற்றைக் கூறுகிறார். அவர் ஒருவரே அக்கினிபோல ஒளிவிடும் கண்களையும், பிரகாசமான வெண்கலம் போன்ற ஒளி தரும் பாதங்களையும் கொண்டவர். அவர் உனக்குச் சொல்வது இது தான்.

19 “நீ செய்கின்றவற்றை நான் அறிவேன். நான் உன் அன்பையும், விசுவாசத்தையும், சேவையையும், பொறுமையையும் அறிவேன். துவக்கக்காலத்தை விட இப்போது நீ அதிகமாகச் செய்வதையும் நான் அறிவேன். 20 எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள். 21 அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை.

22 “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். 23 நான் இப்பொழுதே இதனை நிகழ்த்துவேன். அவளைப் பின்பற்றுகிறவர்களையும் நான் கொல்லுவேன். அப்பொழுது எல்லாச் சபைகளும், ‘நான் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிந்துள்ளவர்’ என்பதை அறிவார்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் உங்கள் செயல்களுக்கு ஏற்றபலன் தருவேன்.

24 “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். 25 நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்துவாருங்கள்.

26 “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன்.”

27 “‘அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான்.
    மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான்.’ (A)

28 “என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.” 29 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center