M’Cheyne Bible Reading Plan
செலோப்பியாத்தின் மகள்களின் பகுதி
36 மனாசே யோசேப்பின் மகன். மாகீர் மனாசேயின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். கீலேயாத் கோத்திரத்தின் தலைவர்கள் மோசேயோடும் மற்ற இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களோடும் பேசப் போனார்கள். 2 அவர்கள், “ஐயா, எங்கள் நிலத்தின் பங்குகளைச் சீட்டுக்குலுக்கல் மூலம் நாங்கள் பெறுமாறு கர்த்தர் கட்டளையிட்டு இருக்கிறார். அதோடு செலோப்பியாத்தின் நிலப்பங்கானது அவனது மகள்களுக்குச் சேர வேண்டும் என்றும் கர்த்தர் கூறியிருக்கிறார். செலோப்பியாத் எங்களது சகோதரன். 3 வேறு ஒரு கோத்திரத்தில் உள்ளவர்கள் செலோப்பியாத்தின் மகளை மணக்க நேரிடலாம். அப்போது அந்தப் பங்கு எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விடுமே. வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பூமியை பெற்றுக்கொள்வார்களா? இவ்வாறு சீட்டுக் குலுக்கல் மூலம் நாங்கள் பெற்ற நிலப்பாகத்தை நாங்கள் இழந்துவிடுவதா? 4 ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்கலாம். ஆனால் யூபிலி ஆண்டில் எல்லா நிலமும் உண்மையில் நில உரிமையாளனுக்கே திரும்பி அளிக்கப்படும். அப்போது செலோப்பியாத்தின் மகள்களுக்குரிய நிலம் யாருக்கு வந்து சேரும்? நித்தியத்துக்கும் எங்கள் குடும்பம் அந்த நிலத்தை இழந்து விட வேண்டியதுதானா?” என்று கேட்டனர்.
5 மோசே பின்வரும் கட்டளையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தான். இந்தக் கட்டளை கர்த்தரிடமிருந்து வந்தது. “யோசேப்பின் கோத்திரத்தில் உள்ள மனிதர்கள் கூறுவது சரியே. 6 செலொப்பியாத்தின் மகள்கள் விஷயத்தில் கர்த்தர் கூறும் கட்டளைகளாவன: அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்துகொள்ளலாம். எனினும் அவர்கள் தங்கள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். 7 இதனால் இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் உள்ள சொத்தானது இன்னொரு கோத்திரத்திற்குச் செல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வான். 8 ஒரு பெண் தன் தந்தைக்குரிய நிலத்தைப் பெற்றால், பின்னர் அவள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு இஸ்ரவேல் குடிமகனும் தங்கள் முற்பிதாக்களின் சொத்துக்களைத் தம் வசமே வைத்திருப்பார்கள். 9 எனவே, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் இருந்து இன்னொரு கோத்திரத்திற்கு நிலம் போகாமல் இருக்கும். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலத்தை பாதுகாத்துக்கொள்வான்.”
10 செலொப்பியாத்தின் மகள்கள், மோசேக்கு கர்த்தர் அளித்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். 11 எனவே மக்லாள், திர்சாள், ஓக்லாள், மில்காள், நோவாள் எனும் செலொப்பியாத்தின் மகள்கள் தம் தந்தையின் சகோதரரின் மகன்களை மணந்துகொண்டனர். 12 அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் கோத்திரத்தினரை மணந்துகொண்டபடியால் அவர்களின் சொத்தானது அக்கோத்திரத்திற்குள்ளேயே இருந்தது.
13 எரிகோவின் எதிரே, யோர்தானுக்கு இக்கரையில் மோவாப் சமவெளியில் கர்த்தர் மோசேக்கு கொடுத்த சட்டங்களும் கட்டளைகளும் இவைகளேயாகும்.
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
வட இஸ்ரவேலுக்கு எச்சரிக்கைகள்.
28 சமாரியாவைப் பாருங்கள்!
எப்பிராயீமின் குடிகார ஜனங்கள் அந்நகரைப்பற்றித் தற்பெருமை கொள்கிறார்கள்.
மலைக்கு மேலே வளமான பள்ளாத்தாக்கு சூழ இருக்கிறது.
சமாரியா ஜனங்கள் தம் நகரத்தை அழகான பூக்களாலான கிரீடம் என்று நினைத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் திராட்சைரசத்தைக் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த “அழகான கிரீடமானது” வாடிப்போகும் செடிபோல் உள்ளது.
2 பார், எனது ஆண்டவர் பலமும் தைரியமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பெருங்காற்றும் கல்மழையும் கொண்ட நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு புயலைப்போன்று நாட்டுக்குள் வருவார்.
அவர் ஒரு சக்திவாய்ந்த ஆறு நாட்டுக்குள் பெருக்கெடுத்து வருவதுபோன்று இருப்பார்.
அவர் அந்தக் கிரீடத்தை (சமாரியா) தரையில் தள்ளுவார்.
3 எப்பிராயீமிலுள்ள குடிகார ஜனங்கள் தமது “அழகான மகுடத்தைப்” பற்றி பெருமை கொள்கிறார்கள்.
ஆனால், அந்த நகரம் மிதியுண்டு போகும்.
4 மலைக்குமேல் வளமான பள்ளத்தாக்கு சுற்றிலும் இருக்க இந்நகரம் உள்ளது.
அந்த “அழகான பூக்களாலான மகுடம்” வாடும் செடியைப்போன்றுள்ளது.
அந்த நகரம் கோடையில் முதலில் பழுத்த அத்திப்பழம் போன்றது.
ஒருவன் அப்பழத்தில் ஒன்றைப் பார்க்கும்போது, அவன் உடனே அதனை எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறான்.
5 அந்தக் காலத்திலே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “அழகான மகுடமாக” ஆவார். அவர் “ஆச்சரியத்துக்குரிய பூக்களாலான மகுடமாக” விடுபட்ட தன் ஜனங்களுக்கு இருப்பார்.
6 பிறகு கர்த்தர் தமது ஜனங்களை ஆளுகின்ற நீதிபதிகளுக்கு ஞானத்தைக் கொடுப்பார். நகர வாசல்களில் நடைபெறும் போர்களில் கர்த்தர் தம் ஜனங்களுக்குப் பலத்தைக் கொடுப்பார்.
7 ஆனால் இப்போது, அந்தத் தலைவர்கள் குடித்திருக்கிறார்கள். ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் திராட்சை ரசத்தையும் மதுவையும் குடித்திருக்கிறார்கள். அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். தீர்க்கதரிசிகள் தங்கள் கனவுகளைக் காணும்போது குடித்திருக்கிறார்கள். நீதிபதிகள் தங்கள் முடிவை எடுக்கும்போது குடித்திருக்கிறார்கள்.
8 ஒவ்வொரு மேசையும் வாந்தியால் நிறைந்துள்ளது. சுத்தமான இடம் எங்குமே இல்லை.
தேவன் அவரது ஜனங்களுக்கு உதவ விரும்புகிறார்
9 கர்த்தர் ஜனங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க விரும்புகிறார். கர்த்தருடைய போதனைகளை ஜனங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், ஜனங்களோ சிறு குழந்தைகளைப்போன்று இருக்கின்றனர். அவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்னரே பால்குடிப்பதை மறந்த குழந்தைகளைப்போன்று இருக்கிறார்கள். 10 எனவே, கர்த்தர் அவர்களைக் குழந்தைகளாக எண்ணி:
சா லசவ் சா லசவ்
குவா லகுவா குவா லகுவா
சீர் ஷேம் சீர் ஷேம்
11 என்பதுபோன்ற விநோதமான மொழியில் பேசுவார். அவர் அந்த ஜனங்களோடு வேறு மொழிகளையும் பயன்படுத்துவார்.
12 கடந்த காலத்தில் தேவன் அந்த ஜனங்களோடு பேசினார். அவர், “இங்கே ஓய்விடம் உள்ளது. இது சமாதானமான இடம். சோர்ந்துபோன ஜனங்கள் வந்து ஓய்வுகொள்ளட்டும். இது சமாதானத்திற்குரிய இடம்” என்றார்.
ஆனால், அந்த ஜனங்கள் தேவனைக் கவனிக்க விரும்பவில்லை. 13 எனவே, தேவனிடமிருந்து வந்த:
என்பது போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அந்நிய மொழியைப்போன்று இருந்தது.
ஜனங்கள் தங்கள் சொந்த வழிகளில் நடந்தார்கள். எனவே, ஜனங்கள் பின்னிட்டு விழுந்து தோற்கடிக்கப்பட்டார்கள். ஜனங்கள் வலையில் அகப்பட்டு கைப்பற்றப்பட்டனர்.
தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது
14 கர்த்தருடைய செய்தியை எருசலேமிலுள்ள தலைவர்களாகிய நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் நீங்கள் அவர் சொல்வதைக் கவனிக்க மறுக்கிறீர்கள்.
15 நீங்கள், “நாங்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எங்களுக்கு மரணத்தின் இடமாகிய பாதாளத்துடன் ஒப்பந்தம் உள்ளது. எனவே நாங்கள் தண்டிக்கப்படமாட்டோம். தண்டனை எங்களைக் கடந்துபோகும். அது எங்களைப் பாதிக்காது. நாங்கள் எங்களது தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப்பின் மறைந்து கொள்வோம்” என்று சொல்கிறீர்கள்.
16 ஆதலால், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார், “நான் சீயோனில் அஸ்திபாரமாக ஒரு கல்லை வைப்பேன். இது ஒரு விலை உயர்ந்த கல்லாக இருக்கும். மிக முக்கியமான கல்லின் மேலேயே எல்லாம் கட்டப்படும். அக்கல்லின்மேல் நம்பிக்கை வைக்கிற எவனும் ஏமாந்து போகமாட்டான்.
17 “சுவர் நேராக இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள ஒரு அளவுக் கருவியை ஜனங்கள் பயன்படுத்துகின்றனர். அதே வழியில் நான் நீதியையும், நன்மையையும் பயன்படுத்தி எது சரியென்று காட்டுகிறேன்.
“தீய ஜனங்களாகிய நீங்கள் உங்கள் தந்திரங்கள் மற்றும் பொய்களுக்குப் பின்னால் மறைகிறீர்கள். ஆனால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். ஒரு புயல்அல்லது வெள்ளம் வருவதுபோன்று வந்து உங்கள் மறைவிடங்களை அழிக்கும். 18 மரணத்தோடு உங்களுக்குள்ள ஒப்பந்தம் நீக்கப்படும். பாதாளத்துடனுள்ள ஒப்பந்தம் உங்களுக்கு உதவாது.
“எவனோ ஒருவன் வந்து உங்களைத் தண்டிப்பான். அவன் உங்களைப் புழுதியாக்கி நடந்து போவான். 19 அப்பகைவன் இரவு பகலாகத் தன் சேனையுடன் உங்கள் நாட்டின் மீது வருவான். இந்தச் செய்தியை அறிபவர் யாராயினும் அச்சத்தால் நடுங்குவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
20 “பிறகு, நீங்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வீர்கள்: ஒருவன் அவனை விடச் சிறிய ஒரு படுக்கையில் தூங்க முயல்கிறான். அவனிடம் ஒரு போர்வை உள்ளது. ஆனால் அது அவனை மூடப்போதுமானதாக இல்லை. அந்தப் படுக்கையும் போர்வையும் பயனற்றவை. அவற்றைப்போன்றே உங்கள் ஒப்பந்தங்களும் உள்ளன”.
21 பெராத்சீம் மலையில் கர்த்தர் போர் செய்தது போலவே செய்வார். கிபியோனின் பள்ளத்தாக்கிலே இருந்ததுபோலவே, கர்த்தர் கோபத்தோடு இருப்பார். பிறகு, தான் செய்ய வேண்டியவற்றை கர்த்தர் செய்வார். சில விநோதமானவற்றை கர்த்தர் செய்வார். ஆனால் அவர் தன் வேலையை முடிப்பார். அவரது வேலையும் விநோதமானதாகும். 22 இப்பொழுது, நீங்கள் அவற்றுக்கு எதிராகப்போரிட வேண்டாம். நீங்கள் செய்தால், உங்களைச் சுற்றியுள்ள கயிறுகள் இறுக்கும்.
நான் கேட்ட வார்த்தைகள் மாறாது. அந்த வார்த்தைகள் பூமியை ஆளுகின்ற சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தவை. இது நிகழ்ந்தே தீரும்.
கர்த்தர் சரியாகத் தண்டிக்கிறார்
23 நான் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தியை நெருக்கமாகக் கவனியுங்கள். 24 எல்லா நேரத்திலும் ஒரு விவசாயி உழுதுகொண்டிருப்பானா? இல்லை. 25 ஒரு விவசாயி பூமியைத் தயார் செய்கிறான், பிறகு அவன் விதைகளை விதைக்கிறான். விவசாயி பல் வேறு வழிகளில் பல்வேறு விதைகளைத் தூவுகிறான். ஒரு விவசாயி உளுந்தைத் தூவுகிறான். சீரகத்தைப்போடுகிறான். வரிசைகளில் கோதுமையை விதைக்கிறான், வாற்கோதுமையை அதற்குரிய சிறப்பான இடத்தில் தூவுகிறான், கம்பை வயலின் ஓரங்களில் விதைக்கிறான்.
26 நமது தேவன் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தன் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர் நீதியாக இருக்கிறார் என்பதை இந்த உதாரணம் காட்டும். 27 ஒரு விவசாயி உளுந்து தாலத்தாலே போரடிக்கச் செய்வானா? செய்யமாட்டான். ஒரு விவசாயி சீரகத்தின் மேல் வண்டியின் உருளையைச் சுற்றவிடுவானா? இல்லை. உளுந்தைக் கோலினாலும் சீரகத்தை மிலாற்றினாலும் அடிப்பான்.
28 ஒரு பெண் அப்பம் செய்யும்போது, மாவைப் பிசைந்து கையால் அழுத்துவாள். ஆனால் அவள் இதனை எப்பொழுதும் செய்யமாட்டாள். கர்த்தர் இதே வழியில் தன் ஜனங்களைத் தண்டிக்கிறார். அவர் வண்டிச் சக்கரத்தால் அவர்களைப் பயமுறுத்துவார். ஆனால் அவர் முழுமையாக நசுக்குகிறதுமில்லை. அவர் பல குதிரைகள் அவர்களை மிதிக்க விடுகிறதுமில்லை. 29 இப்படி இந்த பாடம் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிறது. கர்த்தர் ஆச்சரியகரமான ஆலோசனைகளைத் தருகிறார். தேவன் உண்மையான ஞானம் உடையவர்.
1 மூப்பனாகிய நான், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும் [a] அவளது குழந்தைகளுக்கும் எழுதுவது. நான் உங்கள் அனைவரையும் உண்மையான நற்செய்தியின்படி நேசிக்கிறேன். உண்மையை அறிந்த அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். 2 நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உண்மையால் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்றென்றைக்கும் இந்த உண்மை நம்மோடு கூட இருக்கும்.
3 பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.
4 உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். 5 இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். 6 நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான்.
7 இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். 8 எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.
9 கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். 10 ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். 11 நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.
12 நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 13 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.
2008 by World Bible Translation Center