M’Cheyne Bible Reading Plan
விசேஷ பொருத்தனைகள்
30 இஸ்ரவேல் கோத்திரங்களில் உள்ள தலைவர்களைப் பார்த்து மோசே பேசினான். கர்த்தர் தனக்குச் சொன்ன இக்கட்டளைகளை எல்லாம் மோசே அவர்களிடம் சொன்னான். அவன்,
2 “ஒருவன் கர்த்தருக்கு ஏதாவது விசேஷ பொருத்தனை செய்ய விரும்பினால், அல்லது கர்த்தருக்கு விசேஷமானவற்றைக் கொடுக்க விரும்பினால், அவன் அவ்வாறே செய்யட்டும். ஆனால் அவன் வாக்களித்தபடிக் கொடுக்க வேண்டும்!
3 “ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம். 4 இதைப்பற்றி அவளது தந்தை தெரிந்துகொண்டு அந்த வாக்கை நிறைவேற்ற ஒப்புக்கொண்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். 5 ஆனால் அவளது வேண்டுதலை அவளது தந்தை அறிந்து அதைத் தடுத்தால், பிறகு அவள் தன் வாக்கில் இருந்து விடுதலை பெறுகிறாள். அவள் தனது பொருத்தனையை நிறைவேற்றத் தேவையில்லை. அவளது தந்தை அவளைத் தடுத்துவிட்டால் அவளை கர்த்தர் மன்னித்துவிடுவார்.
6 “ஒரு பெண் தான் கர்த்தருக்கு சிலவற்றைக் கொடுப்பதாக விசேஷ வாக்கை கர்த்தரிடம் செய்த பிறகு திருமணம் ஆகியிருக்கலாம். 7 அவளது கணவன் அந்த வேண்டுதலை அறிந்து அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டால் அவள் அதை நிறைவேற்ற வேண்டும். 8 ஆனால் அவளது கணவன் அவளது வேண்டுதலை அறிந்து மறுத்துவிட்டால் பிறகு அவள் தன் வாக்கை நிறைவேற்ற வேண்டாம். அவளது கணவன் அந்த வாக்கை முறித்து அதனை நிறைவேற்ற முடியாதபடி செய்துவிட்டதால் கர்த்தர் அவளை மன்னித்துவிடுவார்.
9 “ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்துகொண்ட பெண் சிறப்பான பொருத்தனை செய்திருக்கலாம். அப்போது அவள் தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.
10 “ஒரு திருமணமானப் பெண் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை செய்திருக்கலாம். 11 இதைப்பற்றி அவளது கணவன் அறிந்து அதை அவன் அனுமதித்துவிட்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். அவள் வாக்கின்படி அனைத்தையும் கொடுக்க வேண்டும். 12 ஆனால் அவளது கணவன் அதனை அறிந்து மறுத்துவிட்டால், அவள் தன் வாக்கை நிறைவேற்ற தேவையில்லை. அவளது வாக்கை அவளது கணவன் முறித்துவிட்டதால் அது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. எனவே கர்த்தர் மன்னித்துவிடுவார். 13 ஒரு திருமணமான பெண் கர்த்தருக்குச் சிலவற்றைத் தருவதாக வாக்களித்திருக்கலாம்; அல்லது அவள் தன் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது விசேஷ வாக்குறுதிகளைச் செய்திருக்கலாம். அவற்றை அவளது கணவன் தடுக்கவோ அல்லது காப்பாற்றவோ செய்யலாம். 14 எவ்வாறு ஒரு கணவன் தன் மனைவியின் வாக்கை நிறைவேற்ற உதவ முடியும்? அவன் அதைப் பற்றி அறிந்ததை ஏற்றுக்கொண்டால் போதும். அவன் மறுக்காத பட்சத்தில் அவள் அதனை முழுமையாகச் செய்து முடித்துவிட வேண்டும். 15 ஆனால் அவளது கணவன் அவளது வாக்கை அறிந்தும் தடுத்துவிட்டால், வாக்குறுதியை உடைத்த பொறுப்பு அவனைச் சார்ந்ததாகும்” என்றான்.
16 இந்தக் கட்டளைகளையே மோசேயிடம் கர்த்தர் கூறினார். இவை, ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் உரிய கட்டளைகளாகும். இவை, ஒரு தந்தைக்கும் தந்தை வீட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும் உரிய கட்டளைகளாகும்.
ஆசாபின் ஒரு மஸ்கீல்
74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
5 பகைப்படை வீரர்கள்
கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர்.
இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
22 தேவனே, எழுந்து போரிடும்!
அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.
எருசலேமிற்கு தேவனுடைய செய்தி
22 தரிசனப் பள்ளத்தாக்கைப் பற்றிய சோகமான செய்தி:
ஜனங்களே உங்களுக்கு என்ன தவறு ஏற்பட்டது?
உங்கள் வீட்டு மாடிகளில் ஏன் மறைந்துகொண்டிருக்கிறீர்கள்?
2 கடந்த காலத்தில் இந்நகரம் பரபரப்புடைய நகரமாக இருந்தது.
இந்த நகரம் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உடையதாக இருந்தது.
ஆனால் இப்போது அவை மாறியுள்ளன.
உனது ஜனங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் வாள்களினால் அல்ல.
ஜனங்கள் மரித்தனர்.
ஆனால் போரிடும்போது அல்ல.
3 உங்கள் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து தூரத்துக்கு ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வில் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள்,
தலைவர்கள் அனைவரும் சேர்ந்து தூர ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 எனவே, “என்னைப் பார்க்கவேண்டாம்!
என்னை அழ விடுங்கள்!
எருசலேமின் அழிவைப்பற்றி நான் வருந்தும்போது
எனக்கு ஆறுதல் சொல்ல வரவேண்டாம்”.
5 கர்த்தர் ஒரு விசேஷமான நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த நாளில் அமளியும் குழப்பமும் ஏற்படும். தரிசனப் பள்ளத்தாக்கில் ஜனங்கள் ஒருவர் மீது ஒருவர் நடப்பார்கள். நகரச் சுவர்கள் கீழேத் தள்ளப்படும். பள்ளத்தாக்கில் உள்ள ஜனங்கள் நகரத்திலுள்ள மலை மேல் உள்ள ஜனங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். 6 ஏலாமிலிருந்து வந்த குதிரை வீரர்கள் தங்கள் அம்புகள் நிரப்பப்பட்ட பைகளை எடுத்துக்கொண்டு போர் செய்யப்போவார்கள். கீர் நாட்டு ஜனங்கள் தங்கள் கேடயங்களோடு ஆரவாரம் செய்வார்கள். 7 உங்களது சிறப்பான பள்ளத்தாக்கில் படைவீரர்கள் சந்திப்பார்கள். பள்ளத்தாக்கானது இரதங்களால் நிறைந்துவிடும். குதிரை வீரர்களை நகர வாசலுக்கருகில் நிறுத்தி வைப்பார். 8 அந்த நேரத்தில், யூதாவிலுள்ள ஜனங்கள் தம் ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புவார்கள். அவர்கள் அவற்றை பெத்-ஹ-யார்ல் [a] வைத்திருக்கிறார்கள். யூதாவைப் பாதுகாக்கும் சுவர்களைப் பகைவர்கள் இடித்துப்போடுவார்கள். 9-11 தாவீதின் நகரச் சுவர்கள் விரிசல்விடத் துவங்கின. அந்த விரிசல்களை நீ பார்ப்பாய். எனவே நீ வீடுகளை எண்ணிக் கணக்கிடுவாய். நீ வீட்டிலுள்ள கற்களைக் கொண்டு சுவர்களை நிலைப்படுத்த பயன்படுத்துவாய். இரண்டு சுவர்களுக்கு இடையில் பழைய ஓடையில் உள்ள தண்ணீரைச் சேமித்து வைக்க இடம்பண்ணுவாய். நீ தண்ணீரைப் பாதுகாப்பாய்.
உன்னைக் காத்துக்கொள்ள நீ இவ்வாறு அனைத்தையும் செய்வாய். ஆனால் நீ இவற்றையெல்லாம் செய்த தேவனை நம்பமாட்டாய். நீண்ட காலத்திற்கு முன்பே இவற்றைச் செய்தவரை (தேவனை) நீ பார்க்கமாட்டாய்.
12 எனவே, சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், ஜனங்களிடம் அவர்களது மரித்துப்போன நண்பர்களுக்காக அழவும் சோகப்படவும் சொல்வார். ஜனங்கள் தங்கள் தலைகளை மழித்துக்கொண்டு, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.
13 ஆனால், பார்! ஜனங்கள் இப்பொழுது மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
அவர்கள் சந்தோஷமாய் கொண்டாடுகிறார்கள்.
ஜனங்கள் சொல்லுகிறதாவது: “ஆடுகளையும் மாடுகளையும் கொல்லுங்கள்.
நாம் கொண்டாடுவோம்.
உங்கள் உணவை உண்ணுங்கள். திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
உண்ணுங்கள் குடியுங்கள்.
ஏனென்றால், நாளை மரித்துவிடுவோம்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னிடம் இவற்றையெல்லாம் சொன்னார். இவற்றை நான் என் காதுகளால் கேட்டேன். “நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். குற்றம் மன்னிக்கப்படுவதற்கு முன்னால் நீங்கள் மரித்துப்போவீர்கள் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன்!” சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
செப்னாவிற்கு தேவனுடைய செய்தி
15 சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: செப்னா என்ற வேலைக்காரனிடம் போ, அந்த வேலைக்காரனே அரண்மனையின் மேலாள்: 16 “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் குடும்பத்திலுள்ள யாராவது இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? ஏன் இங்கே ஒரு கல்லறையை உருவாக்கினாய்?” என்று அந்த வேலைக்காரனைக் கேள்.”
அதற்கு ஏசாயா, “இந்த மனிதனைப் பாருங்கள்! இவன் தனது கல்லறையை உயர்ந்த இடத்தில் அமைத்துக்கொண்டிருக்கிறான். இந்த மனிதன் அவனது கல்லறையை அமைக்க பாறைக்குள் வெட்டிக்கொண்டிருக்கிறான்.
17-18 “மனிதனே, கர்த்தர் உன்னை நசுக்கி விடுவார். கர்த்தர் உன்னை உருட்டி சிறு உருண்டையாக்கி வெகு தொலைவிலுள்ள இன்னொரு நாட்டின் திறந்த கைகளில் எறிந்துவிடுவார். அங்கே நீ மரித்துப்போவாய்” என்று கூறினான்.
கர்த்தர்: “நீ உனது இரதங்களைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தொலைதூர நாட்டிலுள்ள உனது புதிய அரசன் உன்னுடையதைவிட சிறந்த இரதங்களை வைத்திருப்பான். அவனது அரண்மனையில் உனது இரதங்கள் முக்கியத்துவம் பெறாது. 19 உன்னை உன் பதவியை விட்டுத் துரத்திவிடுவேன். உனது முக்கியமான வேலையிலிருந்து உன்னைப் புதிய அரசன் எடுத்து விடுவான். 20 அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் மகனான எலியாக்கீமை அழைப்பேன். 21 நான் உனது ஆடையை எடுத்து அந்த வேலைக்காரன் மீது போடுவேன். நான் அவனுக்கு உனது செங்கோலைக் கொடுப்பேன். நான் உனக்குரிய முக்கியமான வேலையை அவனுக்குக் கொடுப்பேன். அந்த வேலைக்காரன் எருசலேம் ஜனங்களுக்கும் யூதாவின் குடும்பத்திற்கும் ஒரு தந்தையைப்போல இருப்பான்.
22 “தாவீதின் வீட்டுச் சாவியை அந்த மனிதனின் கழுத்தைச்சுற்றி நான் போடுவேன். அவன் ஒரு கதவைத் திறந்தால், அக்கதவு திறந்தே இருக்கும். எந்த நபராலும் அதனை அடைக்கமுடியாது. அவன் ஒரு கதவை அடைத்தால், அது மூடியே இருக்கும் எந்த நபராலும் அதனைத் திறக்கவே முடியாது. அந்த வேலையாள், தந்தையின் வீட்டிலுள்ள மதிப்பிற்குரிய நாற்காலியைப்போல இருப்பான். 23 நான் மிகப்பலமான பலகையில் அடிக்கப்பட்ட ஆணியைப்போல அவனைப் பலமுள்ளவனாக்குவேன். 24 அவன் தந்தையின் வீட்டிலுள்ள அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் கொண்ட பொருட்களெல்லாம் அவன்மேல் தொங்கும். முதியவர்களும், சிறுவர்களும் அவனைச் சார்ந்து இருப்பார்கள். அந்த ஜனங்கள் சிறு பாத்திரங்களும், தண்ணீர் நிரம்பிய பெரிய பாட்டில்களும் அவனுக்குமேல் தொங்குவதுபோல் இருக்கும்.
25 “அந்த நேரத்தில், பலமான பலகையில் அடிக்கப்பட்டிருந்த ஆணியானது (செப்னா) பலவீனமாகி உடைந்துபோகும். அந்த ஆணி தரையில் விழுந்துவிட அந்த ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அனைத்து பொருட்களும் விழுந்து அழிந்துபோகும். பிறகு நான் சொன்ன அனைத்தும் நிகழும் (இவையெல்லாம் நிகழும்.” ஏனென்றால், கர்த்தர் அவற்றைச் சொன்னார்).
இயேசு திரும்பவும் வருவார்
3 எனது நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் நிருபம் இது. உங்கள் நேர்மையான மனங்கள் சிலவற்றை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையில் நான் உங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினேன். 2 கடந்த காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நமது கர்த்தரும் இரட்சகரும் நமக்கு அளித்த கட்டளையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் மூலமாக அக்கட்டளையை அவர் நமக்கு அளித்தார்.
3 கடைசி நாட்களில் நடக்கவிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியம். மக்கள் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் செய்ய விரும்புகிற தீய காரியங்களைப் பின்பற்றி அம்மக்கள் வாழ்வார்கள். 4 அம்மக்கள், “அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது” என்பார்கள்.
5 ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார். 6 இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது. 7 ஆனால் தேவனுடைய அந்த வார்த்தையாலேயே இன்றைய வானமும் பூமியும் நெருப்பால் அழிபடும் பொருட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவனுக்கு எதிரான மக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு அழிக்கப்படும் நாளுக்காக அவை வைக்கப்பட்டுள்ளன.
8 ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை. 9 கர்த்தர் வாக்குறுதி அளித்ததைச் செய்வதில் சில மக்கள் நிதானத்தைப் பற்றி கருதுவதைப் போன்று உங்களோடு மிகவும் பொறுமையாக இருக்கிறார். எந்த மனிதனும் இழக்கப்படுவதை கர்த்தர் விரும்பவில்லை. ஒவ்வொருவனும் அவனது இதயத்தை மாற்றி, பாவம் செய்வதை விட்டுவிட வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
10 திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும். 11 நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும். 12 தேவனுடைய நாளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருங்கள். அந்த நாள் வருகிறபோது, வானம் நெருப்பால் அழிக்கப்படும். வானிலுள்ள பொருள்கள் அனைத்தும் வெப்பத்தால் உருகும். 13 ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும்.
14 எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். 15 நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். 16 பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
17 அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 18 கிருபையிலும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
2008 by World Bible Translation Center