Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 28

அனுதின பலிகள்

28 கர்த்தர் மோசேயிடம் பேசினார். அவர், “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தக் கட்டளையையும் கொடு. எனக்குரிய தானியக் காணிக்கையையும், பலிகளையும் உரிய காலத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல். அவற்றில் தகனபலியும் ஒன்று. அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். கர்த்தருக்கு ஜனங்கள் கொடுக்க வேண்டிய பலிகளில் நெருப்பில் இடப்படும் தகன பலியும் ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிட வேண்டும். இவற்றில் ஒன்றைக் காலையிலும், மற்றொன்றைச் சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் பானங்களின் காணிக்கையோடு கொடுக்க வேண்டும். பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும். (சீனாய் மலையில் அவர்கள் இவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் இதனை நெருப்பில் தனகபலியாகச் செய்தனர். அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமாயிருந்தது.) அவர்கள் தகனபலியோடுச் சேர்த்து பானங்களின் காணிக்கையையும் கொடுத்தனர். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் அவர்கள் காற்படி திராட்சை ரசத்தையும் அளிக்க வேண்டும். பலிபீடத்தின் பரிசுத்தமான இடத்தில் பானங்களின் காணிக்கையை ஊற்ற வேண்டும். இது கர்த்தருக்குத் தரும் அன்பளிப்பாகும். மாலையில் சூரியன் அஸ்தமித்த பிறகு இன்னொரு ஆட்டுக்குட்டியைப் பலியிட வேண்டும். காலையில் செய்தது போலவே மாலையிலும் செய்ய வேண்டும். அதோடு பானங்களின் பலியையும் கொடுக்க வேண்டும். இந்தப் பலியானது நெருப்பின் மூலம் செலுத்தப்பட வேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்குப் பிடிக்கும்.”

ஓய்வு நாள் பலிகள்

“ஓய்வு நாளுக்கு, நீங்கள் ஒரு வயதான 2 ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும். அவை பழுதற்றதாக இருக்க வேண்டும். அதோடு தானியக் காணிக்கையையும் கொடுக்க வேண்டும். மெல்லிய மாவிலே பத்தில் இரண்டு பங்கினை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து தரவேண்டும். பானங்களின் காணிக்கையையும் தரவேண்டும். 10 இது ஓய்வு நாளுக்குரிய சிறப்பான பலியாகும். இது, வழக்கமான தினப் பலிகளோடு சேர்த்து கொடுக்க வேண்டிய பலியாகும் பானங்களின் காணிக்கையும் இதோடு சேரவேண்டும்.

மாதாந்தர கூட்டங்கள்

11 “ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் கர்த்தருக்கு விசேஷமான ஒரு தகனபலி கொடுக்க வேண்டும். இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதுடைய ஏழு பழுதற்ற ஆட்டுக் குட்டிகளையும் பலி தரவேண்டும். 12 ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். 13 ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் தரப்படும் தானியப்பலியில் பத்திலே ஒரு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். இவற்றை நெருப்பில் தகன பலிகயாகக் கொடுக்கவேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். 14 பானங்களின் காணிக்கையானது ஒவ்வொரு காளையோடு அரைப்படி திராட்சைரசமாக இருக்க வேண்டும். செம்மறி ஆட்டுக்கடாவோடு ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சை ரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் அரைப்படி திராட்சைரசமும் கொடுக்க வேண்டும். இவை தகன பலியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் அளிக்க வேண்டும். 15 வழக்கமாக நாள் தோறும் தரப்படும் தகன பலியோடும், பானபலியோடும் ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்க வேண்டும்.

பஸ்கா

16 “முதல் மாதத்தின் 14வது நாள் கர்த்தருடைய பஸ்கா பண்டிகையாகும். 17 அம்மாதத்தின் 15வது நாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை துவங்குகிறது. இது ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த நாட்களில் புளிப்பில்லாத அப்பத்தை மட்டும் சாப்பிட வேண்டும். 18 இதன் முதல் நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 19 கர்த்தருக்கு தகனபலி தர வேண்டும். அதில் 2 காளைகள், 1 ஆட்டுக்கடா, ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகள் இருக்க வேண்டும். இவற்றில் எந்தக்குறையும் இருக்கக் கூடாது. 20-21 தானியக் காணிக்கையாக ஒவ்வொரு காளையோடும் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடாவோடு பத்தில் இரண்டு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும்; ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும். 22 அத்தோடு நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். அது உங்களை சுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலியாகும். 23 இதனை நீங்கள் வழக்கமாகக் காலையில் கொடுக்கும் பலியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

24 “இதுபோலவே, ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளிலும் இவற்றை நெருப்பில் தகன பலியாகக் கொடுக்க வேண்டும். அதனோடு பானங்களின் காணிக்கையும் சேரும். கர்த்தருக்கு இம்மணம் மிகவும் பிடிக்கும். இப்பலிகள் ஜனங்களுக்கு உணவாகும். நீங்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பலியோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.

25 “இதன் ஏழாவது நாள் இன்னொரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எவ்வித வேலையும் செய்யக்கூடாது.

வாரங்களின் விழா (பெந்தெகோஸ்தே)

26 “முதல் கனிகளைச் செலுத்தும் பண்டிகையின் போதும் (பெந்தெகோஸ்தே என்னும் வாரங்களின் பண்டிகை) புதிய அறுவடையின்போது கர்த்தருக்கு தானியக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 27 நீங்கள் ஒரு தகன பலியைக் கொடுக்க வேண்டும். இது நெருப்பின் மூலம் அளிக்கப்பட வேண்டும். இந்த வாசனை கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். அப்போது நீங்கள் 2 காளைகளையும், 1 செம்மறி ஆட்டுக்கடாவையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தர வேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதுடையதாய் பழுதற்றதாய் இருக்க வேண்டும். 28 ஒவ்வொரு காளையோடும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்; ஒவ்வொரு செம்மறி ஆட்டுக் கடாவோடும், 16 கிண்ணம் மெல்லியமாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 29 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும், 8 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். 30 ஒரு வெள்ளாட்டுக் கடாவை உங்களைச் சுத்தப்படுத்த பாவப்பரிகார பலியாகத் தர வேண்டும். 31 நீங்கள் இந்தப் பலிகளை வழக்கமாகத்தரும் தினப் பலிகளோடு சேர்த்துத் தர வேண்டும். மிருகங்களில் எவ்வித குறையும் இல்லாதவாறு எச்சரிக்கையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பானங்களின் காணிக்கைகளிலும் குறையில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சங்கீதம் 72

சாலொமோனுக்கு

72 தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
    உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும்.
அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
    உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும்.
    திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
    அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
    என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும்.
    பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
    சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
    கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
    புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
    ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும்.
    எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார்.
    ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள்.
    அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
    அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை.
15 அரசன் நீடூழி வாழ்க!
    அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
    மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
    நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும்.
    சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
    அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.

18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
    தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
    அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.

ஏசாயா 19-20

எகிப்துக்கு தேவனுடைய செய்தி

19 எகிப்தைப் பற்றியத் துயரமான செய்தி: பார்! விரைவான மேகத்தில் கர்த்தர் வந்து கொண்டிருக்கிறார். கர்த்தர் எகிப்துக்குள் நுழைவார். எகிப்திலுள்ள அனைத்து பொய்த் தெய்வங்களும் பயத்தால் நடுங்கும். எகிப்து தைரியமுடையது. ஆனால், அந்தத் தைரியம் சூடான மெழுகைப்போல உருகிப்போகும்.

“எகிப்து ஜனங்கள் தங்களுக்கு எதிராகச் சண்டையிட்டுக்கொள்ள நான் காரணமாக இருப்பேன். ஜனங்கள் தம் சகோதரர்களோடு சண்டையிடுவார்கள். அயலார் தங்கள் அயலாருக்கு எதிராக இருப்பார்கள். பட்டணங்கள் பட்டணங்களுக்கு எதிராக இருக்கும். இராஜ்யங்கள் இராஜ்யங்களுக்கு எதிராக இருக்கும். எகிப்து ஜனங்கள் குழம்பிப்போவார்கள். ஜனங்கள் தமது பொய்த் தெய்வங்களையும், ஞானிகளையும் என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். ஜனங்கள் குறி சொல்பவர்களையும், மந்திர வாதிகளையும் கேட்பார்கள். ஆனால் அவர்களது ஆலோசனைகள் பயனற்றுப்போகும்” என்று தேவன் சொல்கிறார்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் (தேவன்) எகிப்தை ஒரு கடினமான எஜமானனிடம் கொடுப்பேன். ஜனங்களின்மீது ஒரு வல்லமை வாய்ந்த அரசன் ஆட்சிசெய்வான்.”

நைல் நதி வறண்டுபோகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும். அனைத்து ஆறுகளும் மிகக் கெட்ட மணம் வீசும். எகிப்திலுள்ள கால்வாய்கள் வறண்டுபோகும். அதிலுள்ள தண்ணீரும் போய்விடும். எல்லா தண்ணீர் தாவரங்களும் வாடிப்போகும். ஆற்றங்கரைகளில் உள்ள செடிகள் எல்லாம் வாடும். அவை பறக்கடிக்கப்படும். ஆற்றின் அருகே உள்ள அகன்ற இடங்களில் உள்ள செடிகளும் வாடிப்போகும்.

நைல் நதியில் மீன் பிடிக்கிற மீனவர்கள் அனைவரும் துயரப்படுவார்கள். அவர்கள் அலறுவார்கள். அவர்கள் தங்கள் உணவிற்காக நைல் நதியை நம்பி இருந்தனர். ஆனால் அது வறண்டுபோகும். ஆடை நெய்கிற அனைத்து ஜனங்களும் மிக மிகத் துன்பப்படுவார்கள். அந்த ஜனங்களுக்கு சல்லா துணிகளை நெய்ய சணல் தேவைப்படும். ஆனால் ஆறு வறண்டுபோகும். எனவே சணல் வளராது. 10 தண்ணீரைத் தேக்கி வைக்க அணை கட்டுகிறவர்களுக்கு வேலை இருக்காது. எனவே அவர்கள் துயரமாக இருப்பார்கள்.

11 சோவான் பட்டணத்திலுள்ள தலைவர்கள் மூடர்கள். “பார்வோனின் ஞானமுள்ள ஆலோசனைக்காரர்கள்” தவறான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். தம்மை ஞானிகள் என்று அந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள். அரசர்களின் பழைய குடும்பத்திலிருந்து வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தாம் நினைப்பதுபோல அவர்கள் அத்தனை புத்திசாலிகள் அல்ல.

12 எகிப்தே! உனது புத்திசாலிகள் எங்கே? சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்திற்காக என்ன திட்டமிட்டிருக்கிறார் என்று அந்த புத்திசாலிகள் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன நிகழும் என்பதை உங்களுக்குச் சொல்லும் ஜனங்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

13 சோவானின் தலைவர்கள் மூடரானார்கள். நோப்பின் தலைவர்கள் பொய்யானவற்றை நம்பினார்கள். எனவே, தலைவர்கள் எகிப்தை தவறான வழியில் நடத்திச்சென்றனர். 14 கர்த்தர் தலைவர்களைக் குழப்பமடைய செய்தார். அவர்கள் அலைந்து திரிந்து எகிப்தை தவறான வழிகளில் நடத்திச் சென்றனர். தலைவர்கள் செய்கிற அனைத்தும் தவறாயின. அவர்கள் குடிகாரர்கள் மயக்கத்தோடு தரையில் உருளுவதுபோலக் கிடந்தனர். 15 அந்தத் தலைவர்களால் செய்ய முடிந்தது எதுவுமில்லை. (இந்தத் தலைவர்கள் “தலைகளாகவும், வால்களாகவும்” இருக்கின்றனர். அவர்கள் “கிளையாகவும் நாணலாகவும்” இருக்கின்றனர்).

16 அந்தக் காலத்தில், எகிப்தியர்கள் அச்சமுள்ள பெண்களைப்போன்றிருப்பார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு பயப்படுவார்கள். ஜனங்களைத் தண்டிக்க கர்த்தர் தம் கையைத் தூக்குவார். அவர்கள் அஞ்சுவார்கள். 17 யூதாவின் தேசம் எகிப்தியார்களுக்குப் பயங்கரமான இடமாக இருந்தது. எகிப்திலுள்ள எவனும் யூதாவின் பெயரைக் கேட்டால் நடுங்குவான். இவை நிகழும், ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்திற்கு பயங்கரங்கள் நிகழத் திட்டமிட்டிருக்கிறார். 18 அப்பொழுது, எகிப்தில் ஐந்து நகரங்கள் இருக்கும். அங்குள்ள ஜனங்கள் கானான் மொழியைப் (யூதமொழி) பேசிக்கொண்டிருப்பார்கள். இந்நகரங்களுள் ஒன்று “அழிவின் நகரம்” என்று பெயர் பெறும். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றுவதாக ஜனங்கள் வாக்களிப்பார்கள். 19 அந்தக் காலத்தில், ஒரு பலிபீடம் எகிப்தின் மத்தியில் கர்த்தருக்காக இருக்கும். எகிப்தின் எல்லையில் கர்த்தருக்கு மகிமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று இருக்கும். 20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வல்லமை மிக்க செயல்களைச் செய்கிறார் என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். கர்த்தரிடம் உதவி கேட்டு ஜனங்கள் எந்த நேரத்தில் அலறினாலும் கர்த்தர் உதவியை அனுப்புவார். ஜனங்களைக் காப்பாற்றி பாதுகாக்க கர்த்தர் ஒருவனை அனுப்புவார். அந்த ஆள் இந்த ஜனங்களை அவர்களை ஒடுக்கும் மற்ற ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவான்.

21 அந்தக் காலத்தில், எகிப்தின் ஜனங்கள் கர்த்தரைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்வார்கள். எகிப்தின் ஜனங்கள் தேவனை நேசிப்பார்கள். அந்த ஜனங்கள் தேவனுக்குச் சேவை செய்வார்கள். பல பலிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பல வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் அவ்வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள்.

22 எகிப்தின் ஜனங்களை கர்த்தர் தண்டிப்பார். பிறகு, கர்த்தர் அவர்களை மன்னிப்பார். (குணப்படுத்துவார்) அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். கர்த்தர் அவர்களது ஜெபங்களைக் கேட்டு அவர்களைக் குணப்படுத்துவார். (மன்னிப்பார்)

23 அந்தக் காலத்தில், எகிப்திலிருந்து அசீரியாவிற்கு ஒரு பெரும் பாதை இருக்கும். பிறகு, ஜனங்கள் அசீரியாவிலிருந்து எகிப்திற்குப்போவார்கள். ஜனங்கள் எகிப்திலிருந்து அசீரியாவிற்குப்போவார்கள். எகிப்து அசீரியாவோடு சேர்ந்து வேலை செய்யும்.

24 அந்தக் காலத்தில், இஸ்ரவேல் அசீரியாவுடனும் எகிப்துடனும் சேர்ந்து உடன்பாடு செய்யும். இது நாட்டுக்கான ஆசீர்வாதமாக விளங்கும். 25 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இந்த நாடுகளை ஆசீர்வதிப்பார். “எகிப்தியரே நீங்கள் என் ஜனங்கள். அசீரியாவே நான் உன்னை உருவாக்கினேன். இஸ்ரவேலே நான் உன்னைச் சொந்தமாக்கினேன். நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்!” என்று அவர் சொல்வார்.

எகிப்தையும் எத்தியோப்பியாவையும் அசீரியா தோற்கடிக்கும்

20 அசீரியாவின் அரசனாகச் சர்கோன் இருந்தான். சர்கோன் தர்த்தானை அஸ்தோத்துக்கு எதிராக சண்டையிட அனுப்பினான். தர்த்தான் அங்கே போய் அந்நகரத்தைக் கைப்பற்றினான். அந்த நேரத்தில், கர்த்தர், ஆமோத்சின் மகனான ஏசாயா மூலமாகப் பேசினார். “போ உன் இடுப்பில் இருந்து துயரமாகிய ஆடையை எடு. உன் கால்களில் உள்ள பாதரட்சைகளைக் கழற்று” என்று கர்த்தர் கூறினார். ஏசாயா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். ஏசாயா ஆடைகளும் பாதரட்சைகளும் இல்லாமல் நடந்தான்.

பிறகு, “மூன்று ஆண்டு காலமாக ஏசாயா ஆடைகளும் பாதரட்சைகளும் இல்லாமல் நடந்து வந்தான். இது எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. அசீரியாவின் அரசன் எகிப்து மற்றும் எத்தியோப்பியாவைத் தோற்கடிப்பான். அசீரியா சிறைக் கைதிகளை அவர்களது நாடுகளிலிருந்து அழைத்துச்செல்லும். முதியவர்களும் இளைஞர்களும், ஆடைகளும், பாதரட்சைகளும் இல்லாமல் அழைத்துச்செல்லப்படுவார்கள். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். எகிப்திலுள்ள ஜனங்கள் வெட்கம் அடைவார்கள். அவர்கள் எகிப்தின் மகிமையைப் பார்த்து அதிசயித்தனர். அவர்கள் ஏமாந்து நாணம் அடைவார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.

கடற்கரையில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜனங்கள், “அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று அந்த நாடுகளின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். நாங்கள் அவர்களிடம் ஓடிப்போனோம். ஆதலால், அவர்கள் எங்களை அசீரியா அரசனிடம் இருந்து தப்புமாறு செய்வார்கள். ஆனால் அவர்களைப் பாருங்கள் அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. எனவே எப்படி நாங்கள் தப்பித்துக்கொள்வோம்?” என்று சொல்வார்கள்.

2 பேதுரு 1

இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவிடமிருந்து, எங்களைப் போலவே மதிப்புமிக்க விசுவாசத்தைப் பெற்ற மக்களாகிய உங்களுக்கு: நம்முடைய தேவனுடைய நீதியாலும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றீர்கள். சரியானதையே அவர் செய்கிறார்.

தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக!

நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் கொடுத்திருக்கிறார்

தேவனுடைய வல்லமை இயேசுவிடம் உள்ளது. நாம் வாழ்வதற்கும், தேவனுக்கு சேவை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவரது வல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. நாம் அவரை அறிவதால் நமக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன. இயேசு தன் மகிமையாலும், கருணையினாலும் நம்மை அழைத்தார். அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். அறிவால் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கவும், சுயக்கட்டுப்பாட்டால் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், சகிப்புத்தன்மையால் தேவனுக்கான அர்ப்பணிப்பை உருவாக்கவும் முயல வேண்டும். தேவ பக்தியின் மூலம் சகோதர சகோதரிகளின் மேல் நேசமும், உங்கள் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள இந்த நேசத்தின் மூலம் அன்பை உருவாக்கவும் முயற்சி செய்யுங்கள். இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.

10 எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. 11 நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள்.

12 நீங்கள் இக்காரியங்களை அறிவீர்கள். உங்களிடமுள்ள உண்மையில் நீங்கள் உறுதியுடன் உறுதிப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இக்காரியங்களை நினைவூட்ட நான் எப்போதும் உதவுவேன். 13 நான் இச்சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன். 14 இந்த சரீரத்தினின்று விரைவில் நான் நீங்க வேண்டும் என்பதை அறிவேன். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குக் காட்டியுள்ளார். 15 என் மறைவுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்ந்துகொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற அளவு செய்வேன்.

கிறிஸ்துவின் மகிமையை நாங்கள் கண்டோம்

16 இயேசு கிறிஸ்து வல்லமையோடு வருவார் என நாங்கள் உங்களிடம் சொன்னபோது புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுக்கதைகளை நாங்கள் சார்ந்திருக்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய மாட்சிமையை நாங்களே கண்டோம். 17 மிகவும் மகிமை வாய்ந்தவரிடமிருந்து விசேஷ குரலானது அவரை வந்தடைந்த போது பிதாவாகிய தேவனிடமிருந்து அவர் கௌரவமும் மகிமையையும் பெற்றார். அக்குரல், “இவர் என் அருமை மகன். நான் இவரைக் குறித்து சந்தோஷப்படுகிறேன்” என்றது. 18 நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.

19 தீர்க்கதரிசிகளின் செய்தியானது நம்பகமானவை என்று நாங்கள் நம்புகிறோம். தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைப் பின்பற்றுவது உங்களுக்கு நல்லது. அவர்கள் கூறியவை, பொழுது விடிந்து, உங்கள் இதயங்களில் விடிவெள்ளி எழுகிறவரைக்கும் இருளில் ஒளிவிடும் தீபத்தைப் போன்றவை. 20 நீங்கள் இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எந்தத் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்திலிருந்தும் வேதவாக்கியத்தின் எந்தத் தீர்க்கதரிசனமும் வெளிப்படுவதில்லை. 21 ஒரு மனிதன் சொல்ல நினைத்ததிலிருந்து எந்தத் தீர்க்கதரிசனமும் வந்ததில்லை. ஆனால் மக்கள் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு தேவனிடமிருந்து வந்த செய்திகளைக் குறித்துப் பேசினார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center