M’Cheyne Bible Reading Plan
பேயோரில் இஸ்ரவேலர்கள்
25 இஸ்ரவேல் ஜனங்கள் அகாசியாவின் அருகில் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மோவாப் பெண்களோடு பாலுறவுப் பாவத்தில் ஈடுபட்டார்கள். 2-3 மோவாப் பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துப் போய் தங்கள் போலியான தேவர்களுக்குப் பலி கொடுக்கச் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் அப்போலியான தெய்வங்களை வணங்கவும் அவர்களிட்ட பலிகளை உண்ணவும் ஆரம்பித்தனர். அந்த இடத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் பாகால் பேயோர் போன்ற போலியான தேவர்களை வணங்கத் துவங்கினார்கள். இதனால் அவர்கள் மீது கர்த்தர் பெருங்கோபம் கொண்டார்.
4 கர்த்தர் மோசேயிடம், “இந்த ஜனங்களின் தலைவர்களையெல்லாம் ஒன்று சேர். பிறகு மற்றவர்கள் பார்க்கும்படி அவர்களைக் கொன்றுவிடு. அவர்களின் பிணங்களை என் பார்வையில் தூக்கில் போடு. பிறகு மற்ற இஸ்ரவேல் ஜனங்கள் மீது நான் கோபம் கொள்ளாமல் இருப்பேன்” என்றார்.
5 எனவே மோசே இஸ்ரவேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கோத்திரங்களில், பாகால் பேயோர் போன்ற போலியான தெய்வங்களை வணங்க அழைத்துப் போனவர்களை கண்டு பிடித்து, அவர்களைக் கொல்லவேண்டும்” என்றார்.
6 அதே நேரத்தில் மோசேயும் இஸ்ரவேலரின் மூப்பர்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூடினார்கள். இஸ்ரவேலன் ஒருவன் மீதியானிய பெண் ஒருத்தியைத் தன் சகோதரனின் குடியிருப்பிற்கு அழைத்துப் போனதை மோசேயும் மற்ற தலைவர்களும் பார்த்து மிகவும் வருத்தப்பட்டனர். 7 இதை ஆரோனின் பேரனும், எலெயாசாரின் மகனுமான பினெகாசும் பார்த்தான். ஒரு பெண்ணைக் கூடாரத்திற்கு இஸ்ரவேலன் அழைத்துச் செல்வதை அந்த ஆசாரியன் பார்த்ததும் தன் ஈட்டியை எடுத்துக்கொண்டான். 8 அவனும் அக்கூடாரத்திற்குள் பின் தொடர்ந்து சென்றான். அந்த ஈட்டியால் இஸ்ரவேலனையும் மீதியானியப் பெண்ணையும் கூடாரத்திலேயே கொன்றான். இருவரையும் ஒருசேர ஈட்டியால் குத்திக் கொன்றுவிட்டான். அதே நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் நோய் பரவிவிட்டது. பினெகாஸ் அவர்களைக் கொன்றதும் நோய் நிறுத்தப்பட்டது. 9 அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள்.
10 கர்த்தர் மோசேயை நோக்கி, 11 “நான் ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமே சொந்தமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் இஸ்ரவேல் ஜனங்களை என் கோபத்திலிருந்து காப்பாற்றினான். எனவே, நான் அவர்களைக் கொல்லவில்லை. 12 நான் அவனோடு சமாதான உடன்படிக்கைச் செய்துகொள்வேன் என்று பினெகாசிடம் கூறுங்கள். 13 அவனும் அவனது குடும்பத்திலுள்ளவர்களும், அவனுக்குப் பின் வாழும் சந்ததியினரும் எப்போதும் ஆசாரியர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவனுக்கு தேவன் மீது பலமான பக்தியுள்ளது. இஸ்ரவேல் ஜனங்களை சுத்தப்படுத்தும் செயல்களை அவன் செய்துவிட்டான்” என்றார்.
14 மீதியானியப் பெண்ணோடு கொல்லப்பட்ட இஸ்ரவேலனின் பெயர் சிம்ரி. இவன் சாலூவின் மகன். இவன் சிமியோன் கோத்திரத்திலுள்ள தலைவன். 15 கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் மகள். சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான்.
16 கர்த்தர் மோசேயிடம் 17 “மீதியானிய ஜனங்கள் உங்கள் பகைவர்கள். நீ அவர்களை கொல்ல வேண்டும். 18 அவர்கள் ஏற்கெனவே உங்கள் அனைவரையும் பகைக்கின்றனர். பேயோரில் அவர்கள் தந்திரம் செய்தனர். அவர்கள் கஸ்பி என்ற பெண் மூலம் உங்களிடம் தந்திரம் செய்தனர். அவள் மீதியானிய தலைவரின் மகள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும் நோய் வந்தபோது அவள் கொல்லப்பட்டாள். ஜனங்கள் தந்திரத்திற்குட்பட்டு பாகால்பேயார் போன்ற பொய்யான தேவர்களை வணங்கியதால் இந்நோய் ஏற்பட்டது” என்றார்.
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
4 தேவனை நோக்கிப் பாடுங்கள்.
அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
அவரது நாமத்தைத் துதியுங்கள்.
5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
8 பூமி அதிர்ந்தது,
இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
11 தேவன் கட்டளையிட்டார்,
பலர் நற்செய்தியைக் கூறச் சென்றனர்.
12 “வல்லமையுள்ள அரசர்களின் படைகள் ஓடிப்போயின!
வீரர் போருக்குப்பின் தந்த பொருள்களை வீட்டில் பெண்கள் பங்கிட்டனர்.
வீட்டில் தங்கியிருந்தோர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
13 அவர்கள் வெள்ளியால் மூடப்பட்ட (விலை உயர்ந்த நகைகள்.)
புறாக்களின் சிறகுகளை பெறுவார்கள்.
அச்சிறகுகள் பொன்னால் பளபளத்து ஒளிரும்.”
14 சல்மோன் மலையில், பகையரசர்களை தேவன் சிதறடித்தார்.
அவர்கள் விழும் பனியைப் போலானார்கள்.
15 பாசான் மலை பல சிகரங்களையுடைய பெரிய மலை.
16 பாசான் மலையே, ஏன் சீயோன் மலையை இழிவாகப் பார்க்கிறாய்?
தேவன் அம்மலையை (சீயோன்) நேசிக்கிறார்.
என்றென்றும் வாழும்படி கர்த்தர் அம்மலையைத் தேர்ந்தெடுத்தார்.
17 பரிசுத்த சீயோன் மலைக்கு கர்த்தர் வருகிறார்.
அவரை இலட்சக்கணக்கான இரதங்கள் பின் தொடருகின்றன.
18 உயர்ந்த மலையில் அவர் ஏறினார்.
சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வழிநடத்தினார்.
எதிராகத் திரும்பியவர்கள் உட்பட, மனிதரிடமிருந்து அவர் பரிசுகளை ஏற்றார்.
தேவனாகிய கர்த்தர் அங்கு வசிப்பதற்கு ஏறிச்சென்றார்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
தேவன் நம்மை மீட்கிறார்.
20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
21 தேவன் அவரது பகைவர்களைத் தோற்கடிக்கிறார் என்பதைக் காட்டுகிறார்.
அவரை எதிர்த்த ஜனங்களை தேவன் தண்டிக்கிறார்.
22 என் ஆண்டவர், “பாசானிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
மேற்கிலிருந்து பகைவனை வரவழைப்பேன்.
23 நீ அவர்களின் இரத்தத்தில் நடப்பாய்,
உன் நாய்கள் அவர்களின் இரத்தத்தை நக்கும்” என்றார்.
24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
என் அரசராகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.
28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
அரசர்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.
32 பூமியிலுள்ள அரசர்களே, தேவனைப் பாடுங்கள்!
நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!
33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.
தேவனைத் துதியுங்கள்!
மோவாபிற்கு தேவனுடைய செய்தி
15 இது மோவாயைப்பற்றி துக்கமான செய்தி.
ஒரு இரவு, ஆர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
ஒரு இரவு, கீர், மோவாப் ஆகியவற்றிலிருந்து படைகள் செல்வங்களை எடுத்தனர்.
அந்த இரவில் நகரம் அழிக்கப்பட்டது.
2 அரசனது குடும்பத்தினரும் தீபோனின் ஜனங்களும் அழுவதற்குத் தொழுதுகொள்கிற இடங்களுக்குப்போனார்கள்.
மோவாப்பின் ஜனங்கள் நேபோவுக்காகவும் மேதெபாவுக்காகவும் அழுதனர்.
ஜனங்கள் தம் தலைகளையும், தாடிகளையும் மழித்துக்கொண்டு
அவர்கள் துக்கமாக இருப்பதாகக் காட்டினர்.
3 மோவாபின் எல்லா இடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும், தெருக்களிலும்,
ஜனங்கள் துக்கத்தின் ஆடைகளை அணிந்து அழுதுகொண்டிருந்தனர்.
4 எஸ்போன் மற்றும் எலெயாலே நகர ஜனங்கள் உரத்து அழுதுகொண்டிருந்தனர்.
வெகு தொலைவிலுள்ள யாகாஸ் நகரம் வரை அவர்களின் சத்தங்களை நீ கேட்கலாம்.
படைவீரர்களும்கூட கதறுகிறார்கள்.
அவர்கள் அச்சத்தால் நடுங்கிக்கொண்ருக்கிறார்கள்.
5 மோவாபுக்காக எனது இதயம் துயரத்தோடு அழுகிறது.
ஜனங்கள் பாதுகாப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வெகு தொலைவில் உள்ள சோவாருக்கு ஓடுகிறார்கள்.
அவர்கள் எக்லாத் செலிஸ்ஸியாவுக்கு ஓடுகிறார்கள். லூகித்துக்குப்போகும் மலைப்பாதையில் அவர்கள் ஏறிப்போகும்போது அழுகிறார்கள்.
ஓரோனாயீமின் வழியில் அவர்கள் நடந்து செல்லும்போது மிக உரத்து அழுகிறார்கள்.
6 ஆனால் நிம்ரீம் புருக் பாலைவனமாகக் காய்ந்திருக்கிறது.
அனைத்து தாவரங்களும் காய்ந்துள்ளன. எதுவும் பசுமையாக இல்லை.
7 எனவே, ஜனங்கள் தமக்குச் சொந்தமானவற்றைச் சேகரித்துக்கொண்டு மோவாபை விட்டு விலகுகிறார்கள்.
அவர்கள் அவற்றைச் சுமந்துகொண்டு பாப்லர்கிரீக்கின் எல்லையைக் கடக்கின்றனர்.
8 மோவாபின் எல்லா இடங்களிலும் அழுகையைக் கேட்கலாம்.
வெகு தொலைவிலுள்ள எக்லாயிம் வரை ஜனங்கள் அழுதுகொண்டிருந்தனர்.
பெரேலீம் நகரத்தில் ஜனங்கள் அழுதுக்கொண்டிருந்தனர்.
9 தீமோனின் தண்ணீரானது இரத்தத்தால் நிறைந்திருக்கும்.
தீமோனுக்கு மேலும் அதிகக் கேடுகளை நான் (கர்த்தர்) கொண்டுவருவேன்.
மோவாபில் வாழ்கிற சில ஜனங்கள் பகைவரிடமிருந்து தப்பியிருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களை உண்ண சிங்கங்களை அனுப்புவேன்.
மனைவியரும் கணவன்மார்களும்
3 அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். 2 உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். 3 கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. 4 உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,
5 பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தேவனின் நம்பிக்கைக்கொண்ட பரிசுத்த பெண்கள் அவ்வாறே வாழ்ந்தனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். 6 நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள்.
7 அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு எந்தக் தொந்தரவும் நேராமல் இருக்க இவற்றைச் செய்யுங்கள்.
நேர்மையினிமித்தம் துன்பம்
8 எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். 9 உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் 10 வேதவாக்கிம் கூறுகிறது:
“வாழ்க்கையை நேசிக்கவும்
நல்ல நாட்களை அனுபவிக்கவும்
விரும்புகிற மனிதன் தீயவற்றைப்
பேசுவதை நிறுத்தல் வேண்டும்.
11 அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும்.
அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும்.
12 கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார்.
அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார்.
ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.” (A)
13 எப்போதும் நன்மை செய்யவே நீங்கள் முயன்றுகொண்டிருந்தால் ஒருவனும் உங்களைத் துன்புறுத்த முடியாது. 14 ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.” 15 ஆனால் உங்கள் இதயங்களில் கர்த்தராகிய கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கிக் கூறும்படியாகக் கேட்போருக்குப் பதில் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள். 16 ஆனால் அவர்களுக்கு மரியாதையோடும் மென்மையாகவும் பதில் கூறுங்கள். உங்கள் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது கிறிஸ்துவைப் பின்பற்றும் உங்கள் நடத்தையைக் குறை கூறிப் பேசுகின்ற மக்கள் வெட்கமடைவார்கள். கிறிஸ்துவில் நீங்கள் வாழும் நல்வாழ்க்கைக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்களுக்கெதிராகப் பேசியவற்றிற்காக வெட்கமடைவார்கள்.
17 தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது.
18 ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம்
பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார்.
குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார்.
இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார்.
இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது.
ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில்
அவர் மீண்டும் எழுப்பப்பட்டார்.
19 சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். 20 நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள். 21 இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. 22 இப்போது இயேசு பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் தேவதூதர்களையும், அதிகாரங்களையும், ஆற்றல் வாய்ந்தோரையும் ஆளுகிறார்.
2008 by World Bible Translation Center