M’Cheyne Bible Reading Plan
மிரியாமின் மரணம்
20 இஸ்ரவேல் ஜனங்கள் முதல் மாதத்தில் சீன் பாலைவனத்தை அடைந்தனர். ஜனங்கள் காதேசில் தங்கியிருந்தபோது மிரியாம் மரணமடைந்தாள். அவள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
மோசேயின் தவறு
2 அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர். 3 அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்? 4 எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா? 5 எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர்.
6 எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது.
7 கர்த்தர் மோசேயோடு பேசினார். 8 அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார்.
9 பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான். 10 மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான். 11 மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர்.
12 ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார்.
13 இந்த இடம் மேரிபாவின் தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது! இங்குதான் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரோடு தர்க்கம் பண்ணினார்கள். அங்கே கர்த்தர் தம்மை பரிசுத்தர் என்று அவர்களுக்குக் காட்டினார்.
ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல்
14 மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் அரசனிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்:
“உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்னவென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். 15 வெகு காலத்திற்கு முன்னர் நமது முற்பிதாக்கள் எகிப்துக்குள் சென்றனர். அங்கே நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்தோம். எகிப்து ஜனங்கள் எங்களிடம் கொடூரமாக நடந்துகொண்டனர். 16 ஆனால் நாங்கள் கர்த்தரிடம் உதவி செய்யுமாறு கேட்டோம். கர்த்தர் எங்கள் குறையைக் கேட்டு தேவதூதனை அனுப்பி உதவினார். கர்த்தர் எங்களை எகிப்தைவிட்டு வெளியே அழைத்து வந்தார்.
“இப்போது நாங்கள் உங்கள் நாடு தொடங்குகிற காதேசில் இருக்கிறோம். 17 நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.
18 ஆனால் ஏதோம் அரசனோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான்.
19 இஸ்ரவேல் ஜனங்களோ, “நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே பயணம் செய்வோம். உங்களுக்கு சொந்தமான தண்ணீரை நாங்களோ எங்கள் மிருகங்களோ குடித்தால் அதற்குரிய தொகையைத் தந்துவிடுவோம். நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக நடந்து செல்லவே விரும்புகிறோம். நாங்கள் உங்கள் நாட்டை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்றனர்.
20 ஆனால் மீண்டும் ஏதோம் அரசன், “எங்கள் நாட்டின் வழியாக நீங்கள் நடந்து செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றான்.
பிறகு ஏதோம் அரசன் மிகப் பெரியதும், பலமுள்ளதுமான படையைக் கூட்டினான். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு போரிட வந்தனர். 21 ஏதோம் அரசன் இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர்.
ஆரோனின் மரணம்
22 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் காதேசிலிருந்து பயணம் செய்து ஓர் என்னும் மலைக்குச் சென்றனர். 23 அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 24 “இது ஆரோன் மரிப்பதற்குரிய நேரம். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான். நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களித்த நாட்டிற்குள் அவன் நுழையமாட்டான். ஏனென்றால் நீயும் ஆரோனும் எனது ஆணைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. மேரிபாவின் தண்ணீர் பற்றிய நிகழ்ச்சியில் தவறு செய்து விட்டீர்கள்.
25 “இப்போது, ஆரோனையும் அவனது மகன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா. 26 ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அவனது மகன் எலெயாசாருக்கு அணிவித்து அழைத்து வா. ஆரோன் மலைமீது மரித்துப்போவான். அவன் தன் முற்பிதாக்களோடு போய்ச் சேருவான்” என்றார்.
27 கர்த்தருடைய ஆணைக்கு மோசே கீழ்ப்படிந்தான். ஓர் என்னும் மலையின் மீது மோசே, ஆரோன், எலெயாசார் ஆகியோர் ஏறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவர்கள் செல்வதைப் பார்த்தனர். 28 மோசே, ஆரோனின் சிறப்புக்குரிய ஆடையை அகற்றி அதனை ஆரோனின் மகனான எலெயாசாருக்கு அணிவித்தான். பிறகு மலை உச்சியிலேயே ஆரோன் மரித்துப்போனான். மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கி வந்தனர் 29 ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல்.
58 நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்புகளில் நியாயமானவர்களாக இருக்கவில்லை.
நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்கவில்லை.
2 நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள்.
இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.
3 அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
4 அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள்.
காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.
5 பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை.
அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.
6 கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.
எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.
7 வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும்.
பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.
8 அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும்.
அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.
9 நெருப்பில் வைக்கப்படும் பானையைச் சூடேற்றுவதற்காக
விரைந்து எரியும் முட்களைப்போன்று அவர்கள் விரைவில் அழியட்டும்.
10 நல்லவனுக்குத் தீமைசெய்த ஜனங்கள் தண்டிக்கப்படுவதை, அவன் பார்க்கையில் மகிழ்ச்சியடைவான்.
அக்கெட்ட மனிதர்களின் இரத்தத்தால் அவன் தனது பாதங்களைக் கழுவுவான்.
11 அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், “நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர்,
உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்” என்பார்கள்.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
59 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
2 தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
4 அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
5 நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
6 அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
7 அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
8 கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
9 தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
நீரே என்னை நேசிக்கும் தேவன்.
தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார்
8 எனது கர்த்தர் யாக்கோபின் ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) எதிராக ஒரு கட்டளையிட்டார். இஸ்ரவேலின்மேல் அந்தக் கட்டளை வரும்.
9 பிறகு எப்பிராயீமில் (இஸ்ரவேலில்) உள்ள ஒவ்வொருவரும், சமாரியாவில் உள்ள தலைவர்களும்கூட தேவன் அவர்களைத் தண்டித்தார் என்பதை அறிந்துகொள்வார்கள்.
இப்போது அந்த ஜனங்கள் பெருமையும் ஆணவமும் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், 10 “இந்தச் செங்கற்கள் விழலாம், ஆனால் நாங்கள் மீண்டும் கட்டுவோம். நாங்கள் பலமான கற்களால் கட்டுவோம். இந்தச் சிறு மரங்கள் வெட்டப்படலாம். ஆனால் நாங்கள் புதிய மரங்களை நடுவோம். அப்புதிய மரங்கள் பெரியதாகவும், உறுதியுடையதாகவும் இருக்கும்” என்றனர். 11 எனவே, கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகப்போரிட ஜனங்களை கண்டுபிடிப்பார். கர்த்தர் ரேத்சீனின் பகைவர்களை அவனுக்கு எதிராகக் கொண்டுவருவார். 12 கர்த்தர் கிழக்கிலிருந்து ஆராமியரையும் மேற்கிலிருந்து பெலிஸ்தர்களையும் கொண்டுவருவார். அவர்கள் தம் படையால் இஸ்ரவேலர்களைத் தோற்கடிப்பார்கள். ஆனால், கர்த்தர் மேலும் இஸ்ரவேலர்களோடு கோபமாக இருப்பார். கர்த்தர் அந்த ஜனங்களை மேலும் தண்டிக்கத் தயாராக இருப்பார்.
13 தேவன் அவர்களைத் தண்டிப்பார். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களை நிறுத்தமாட்டார்கள். அவர்கள் அவரிடம் திரும்பமாட்டார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றமாட்டார்கள். 14 எனவே கர்த்தர் இஸ்ரவேலின் தலையையும் வாலையும் வெட்டி வீசுவார். ஒரே நாளில் கர்த்தர் கிளைகளையும் நாணலையும் வெட்டிப்போடுவார். 15 (தலை என்றால் மூப்பர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் என்று பொருள். வால் என்றால் பொய் சொல்லும் தீர்க்கதரிசிகள் என்று பொருள்).
16 ஜனங்களை வழிநடத்துபவர்கள் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள். அவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் அழிந்துபோகிறார்கள். 17 அனைத்து ஜனங்களும் தீமையானவர்கள். எனவே இளைஞர்களைப்பற்றி கர்த்தர் மகிழ்ச்சியடையமாட்டார். அவர்களின் விதவைகளிடமும், அநாதைகளிடமும் அவர் இரக்கம் காட்டமாட்டார். ஏனென்றால், அனைவரும் தீமையானவர்கள். ஜனங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானவையே. ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். எனவே, தேவன் தொடர்ந்து ஜனங்களிடம் கோபமாக உள்ளார். தேவன் தொடர்ந்து அந்த ஜனங்களை தண்டிக்கிறார்.
18 தீமையானது சிறு நெருப்பைப்போன்றது. முதலில் அது முட்களையும் நெருஞ்சியையும் எரிக்கும். பிறகு அது காட்டிலுள்ள பெரும் புதர்களை எரிக்கின்றது. இறுதியாக அது பெருநெருப்பாகி எல்லாம் புகையோடு போகும்.
19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கோபமாக இருக்கிறார். எனவே, இந்த நாடு எரியும். எல்லா ஜனங்களும் நெருப்பில் எரிவார்கள். எவரும் தன் சகோதரனைக் காப்பாற்ற முயலமாட்டார்கள். 20 ஜனங்கள் வலது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். இடது பக்கத்திலிருந்து பிடுங்கித் தின்றாலும் பசியோடு இருப்பார்கள். பிறகு ஒவ்வொருவரும் திரும்பித் தங்களையே தின்பார்கள். 21 (இதற்கு மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் எதிர்த்துப்போராடுவார்கள். பிறகு இருவரும் யூதாவிற்கு எதிராகத் திரும்புவார்கள் என்று பொருள்).
கர்த்தர் இன்னும் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாக இருக்கிறார். கர்த்தர் அந்த ஜனங்களைத் தண்டிக்கத் தயாராக உள்ளார்.
10 தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது. 2 அந்தச் சட்ட வல்லுநனர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்குவதில்லை. அவர்கள் ஏழைகளின் உரிமைகளை பறித்துக்கொண்டனர். விதவைகள் மற்றும் அநாதைகளிடமிருந்து திருடுமாறு அவர்கள் அனுமதித்தனர்.
3 சட்டமியற்றுபவர்களே, நீங்கள செய்தவற்றுக்கெல்லாம் விளக்கம் தரவேண்டும். அப்போது என்ன செய்வீர்கள்? உங்களுக்குத் தூர நாட்டிலிருந்து அழிவு வரும். உதவிக்கு நீங்கள் எங்கே ஓடுவீர்கள்? உங்கள் பணமும் செல்வமும் உங்களுக்கு உதவி செய்யாது. 4 நீங்கள் சிறைக் கைதியைப்போன்று பணிந்து வாழவேண்டும். நீங்கள் மரித்துப்போனவனைப்போன்று கீழே விழ வேண்டும். ஆனாலும் அது உங்களுக்கு உதவாது! தேவன் இன்னும் கோபமாக இருக்கிறார். தேவன் இன்னும் உங்களைத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்.
நாம் சொல்வதைக் கட்டுப்படுத்துதல்
3 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் பலர் போதகர்களாகக் கூடாது. ஏனென்றால் போதிப்பவர்களாகிய நாம் மற்றவர்ளைவிட அதிகமாக நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
2 நாமெல்லோரும் பல தவறுகளைச் செய்கிறோம். ஒருவன் எப்பொழுதும் தவறாகப் பேசாதவனாக இருந்தால் அவன் முழுமையானவனாகிறான். அவன் தனது முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவனாகிறான். 3 நாம் குதிரைகளை அடக்கவேண்டுமானால் அவற்றின் வாயிலே கடிவாளத்தைப் போடுகிறோம். அதன் மூலம் அதன் முழு சரீரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம். 4 இது போலத் தான் கப்பலிலும். ஒரு கப்பல் மிகப் பெரியது; அது பெருங்காற்றால் தள்ளப்படுவது. ஆனால் சிறு சுக்கான் அந்த முழு கப்பலையும் இயக்கப் பயன்படுகின்றது. சுக்கானை இயக்குபவனுக்குக் கப்பலை எங்கே கொண்டு போவது என்று தெரியும். அவன் விரும்புகிற இடத்துக்கே கப்பல் போகும். 5 நமது நாக்கும் அப்படித்தான். அது சரீரத்தின் ஒரு சிறிய உறுப்பு. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்வதைப்பற்றிப் பெருமை பேசுகிறது.
மேலும் சிறிய ஒரு நெருப்புப் பொறி எப்படி ஒரு முழுக் காட்டையே எரித்துவிட முடியும் என்பதைப் பற்றி எண்ணுங்கள். 6 மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது.
7 மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். 8 ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. 9 அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். 10 துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. 11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது. 12 என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது.
உண்மையான ஞானம்
13 உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும். 14 உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும். 15 அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது. 16 எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். 17 ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. 18 சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.
2008 by World Bible Translation Center