Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 14

யூதாவில் அமத்சியா ஆட்சி செய்தல்

14 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜா ஆனான். அவன் தனது 25வது வயதில் ராஜா ஆனான். எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் எருசலேம் நகரத்தைச் சேர்ந்த யொவதானாள். அவன் கர்த்தரால் சரியானவை என்று சொல்லப்பட்ட காரியங்களைச் செய்தான். ஆனால் தனது முற்பிதா தாவீதைப் போன்று முழுமையாக தேவனைப் பின்பற்றவில்லை. தந்தை யோவாஸ் செய்த பல செயல்களை இவனும் செய்தான். இவனும் பொய் தெய்வங்களின் கோவில்களை அழிக்கவில்லை. ஜனங்கள் அங்கு தொழுதுக் கொள்ள பலிகள் இடுவதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.

அமத்சியா கையில் ஆட்சி உறுதியான போது, தனது தந்தையைக் கொன்ற வேலைக்காரர்களை (அதிகாரிகளைக்) கொன்றான். ஆனால் அவன் மோசேயின் சட்டங்களின் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, கொலையாளிகளின் குழந்தைகளைக் கொல்லவில்லை. கர்த்தர் தன் ஆணைகளையே அந்த புத்தகத்தில் மோசே மூலம் எழுதியுள்ளார். மோசே, “குழந்தைகள் செய்த தவறுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் கொல்லப்படக் கூடாது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு மாத்திரமே மரணத்தை அடையவேண்டும்” என்று எழுதியுள்ளான்.

அவன் 10,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் கொன்றுபோட்டான். சேலாவைப் போர் மூலம் பிடித்து அவனை “யொக்தியேல்” என்று அழைத்தான். அந்த இடம் இன்றும் “யொக்தியேல்” என்று அழைக்கப்படுகிறது.

அமத்சியா யோவாசுக்கு எதிராகப் போர்செய்ய விரும்பியது

அமத்சியா தூதுவர்களை யெகூவின் குமாரனும் யோவாகாசின் குமாரனும், இஸ்ரவேலின் அரசனுமான யோவாசிடம் அனுப்பினான். அவன், “வா, நேரில் ஒருவரையொருவர் சந்தித்து போரிட்டுப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டான்.

இஸ்ரவேலரின் ராஜாவாகிய யோவாஸ் அதற்குப் பதிலாக யூத ராஜா அமத்சியாவிற்கு, “லீபனோனிலுள்ள முட்செடியானது கேதுரு மரத்தை நோக்கி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்துக் கொடு’ என்று சொல்லச்சொன்னது. ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10 நீ ஏதோமியரைத் தோற்கடித்ததால் உன் மனம் உன்னைக் கர்வம் கொள்ளச்செய்தது. நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலேயே இரு! நீ இதனைச் செய்தால், நீ விழுவாய், யூதாவும் உன்னோடு விழும்” என்றான்.

11 ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர். 12 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள். 13 பெத்ஷிமேஸ், என்னும் இடத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் குமாரன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவைச் சிறை பிடித்தான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோய், எருசலேமிலுள்ள சுவரை, 600 அடி நீளத்திற்கு எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல்மட்டும் இடித்துப்போட்டான். 14 பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.

15 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவன், அமத்சியாவிற்கு எதிராக எவ்வாறு போரிட்டான் என்ற விளக்கமும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 16 யோவாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடவே சமாரியாவில் அடக்கமானான். யோவாசின் குமாரனான யெரொபெயாம் புதிய ராஜா ஆனான்.

அமத்சியாவின் மரணம்

17 இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாசின் குமாரனான அமத்சியா, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரனான யோவாஸ் மரித்தபின், 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். 18 அமத்சியாவின் மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 19 எருசலேமில் அமத்சியாவிற்கு எதிராக ஜனங்கள் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஆனால் ஜனங்கள் லாகீசுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் அவனை அங்கே கொன்றனர். 20 ஜனங்கள் அமத்சியாவின் உடலைக் குதிரையில் வைத்துக் கொண்டுவந்தனர். அவனை தாவீதின் நகரத்தில் எருசலேமில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

யூதாவில் அசரியா தனது ஆட்சியைத் தொடங்குதல்

21 பிறகு யூதாவிலுள்ள அனைத்து ஜனங்கள், அமத்சியாவின் குமாரன் அசரியாவைப் புதிய ராஜாவாக்கினர். அப்போது அவனுக்கு 16 வயது. 22 ஆகையால் அமத்சியா ராஜா மரித்து அவனது முற்பிதாக்களோடு அடக்கமான பிறகு அசரியா மீண்டும் ஏலாதைக்கட்டி, அதனை யூதாவிற்குத் திரும்பக் கொடுத்தான்.

இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி தொடங்கியது

23 யோவாசின் குமாரனான பெரொபெயாம் இஸ்ரவேல் ராஜாவாக சமாரியாவில் ஆட்சியைத் தொடங்கி 41 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அப்போது யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்தாம் ஆட்சியாண்டில் இருந்தான். 24 தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே யெரொபெயாம் செய்துவந்தான். இஸ்ரவேலுக்கு பாவத்தைக் கொண்டுவந்த நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் பாவச்செயல்களை இவன் நிறுத்தவில்லை. 25 யெரொபெயாம் லெபொ ஆமாத்தின் எல்லை முதல் அரபா கடல் மட்டுமுள்ள இஸ்ரவேல் பகுதிகளைத் திரும்ப சேர்த்துக்கொண்டான். இது, இஸ்ரவேலின் கர்த்தர் தமது ஊழியக்காரனான அமித்தாயின் குமாரனான யோனாவான காத்தேப்பேரிலிருந்து வந்த தீர்க்கதரிசி மூலம் சொன்னபடி நிகழ்ந்தது. 26 இஸ்ரவேலில் ஒவ்வொருவரும், அவர்கள் அடிமைகளாகவோ அல்லது சுதந்திரமானவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் துன்பப்படுவதைக் கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர்களுக்கு உதவ ஒருவர் கூட மீதியாக இருக்கவில்லை 27 உலகத்திலிருந்து இஸ்ரவேலர்களின் பெயரை எடுத்து விடவேண்டுமென்று கர்த்தர் என்றும் சொன்னதில்லை. எனவே கர்த்தர் யோவாசின் குமாரனான யெரொபெயாம் மூலம் இஸ்ரவேல் ஜனங்களைக் காப்பாற்றினார்.

28 யெரொபெயாம் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவரது வலிமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் யெரொபெயாம் தமஸ்குவையையும் ஆமாத்தையும் போரிட்டு இஸ்ரவேலோடு சேர்த்துக் கொண்டதும் உள்ளது. (இந்நகரங்கள் யூதாவோடு சேர்ந்திருந்தது) 29 யெரொபெயாம் மரித்ததும் இஸ்ரவேல் ராஜாக்களான முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். யெரொபெயாமின் குமாரனான சகரியா அடுத்த புதிய ராஜா ஆனான்.

2 தீமோத்தேயு 4

தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி.

மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க.

என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது. நான் போரிலே நன்றாகப் போராடியிருக்கிறேன். நான் பந்தயத்தை முடித்துவிட்டேன். நான் விசுவாசத்தைப் பாதுகாத்திருக்கிறேன். இப்பொழுது எனக்காக ஒரு கிரீடம் காத்திருக்கிறது. அந்த நாளில் தேவன் என்னிடம் இதைக் கொடுப்பார். கர்த்தரே நியாயம் தீர்க்கிறவர். அவர் சரியாகச் செய்வார். அந்த நாளில் அவர் எனக்குக் கிரீடத்தைத் தருவார். அவரது வருகையை விரும்பி, அவருக்காகவே காத்திருக்கிற அனைவருக்கும் அவர் கிரீடத்தைத் தருவார்.

தனிப்பட்ட வார்த்தைகள்

உன்னால் எவ்வளவு விரைவில் என்னிடம் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வர முயற்சி செய். 10 தேமா இந்த உலகை மிகுதியாக நேசித்தான். அதனாலேயே அவன் என்னை விட்டுப் போனான். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனான். கிரெஸ்கெ கலாத்தியாவுக்குப் போனான். தீத்து தல்மாத்தியாவுக்குப் போனான். 11 லூக்கா மட்டுமே என்னோடு இருக்கிறான். நீ வரும்போது உன்னோடு மாற்குவையும் அழைத்து வா. இங்கே அவன் எனது பணிக்கு உதவியாக இருப்பான். 12 நான் தீகிக்குவை எபேசுவுக்கு அனுப்பினேன்.

13 நான் துரோவாவில் இருந்தபோது எனது மேலங்கியை கார்ப்புவிடம் விட்டு, விட்டு வந்தேன். நீ வரும்போது அதை எடுத்து வா. எனது புத்தகங்களையும் எடுத்து வா. குறிப்பாக தோலால் ஆன என் புத்தகச்சுருளை எடுத்து வா. அவையே எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகும்.

14 கொல்லனாகிய அலெக்சாண்டர் எனக்கு எதிராகப் பல தீய செயல்களைச் செய்தான். அவன் செய்த செயல்களுக்கு கர்த்தர் அவனைத் தண்டிப்பார். 15 அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான்.

16 முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். 17 ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். 18 எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.

இறுதி வாழ்த்துக்கள்

19 பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஓநேசிப்போரின் வீட்டாருக்கும் என் வாழ்த்துக்களைக் கூறு. 20 கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு, விட்டு வந்தேன். 21 குளிர் காலத்துக்கு முன்னால் நீ வந்து சேருமாறு கடும் முயற்சி எடுத்துக்கொள். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும் கிறிஸ்துவில் உள்ள எல்லா சகோதரர்களும் உன்னை வாழ்த்துகின்றனர்.

22 உன் ஆவியோடுகூட கர்த்தர் இருப்பாராக. அவரது கிருபை உங்களோடு இருப்பதாக.

ஓசியா 7

“நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன்.
    பிறகு ஜனங்கள் எப்பிராயீம் பாவம் செய்ததை அறிவார்கள்.
ஜனங்கள் சமாரியாவின் பொய்களை அறிவார்கள்.
    ஜனங்கள் நகரத்திற்குள் வந்துபோகிற திருடர்களைப் பற்றி அறிவார்கள்.
அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள்.
    அவர்கள் செய்த கெட்டவைகளெல்லாம் சுற்றிலும் உள்ளன.
    நான் அவர்களது பாவங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.
அவர்களது தீமை அவர்களின் ராஜாவை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
    அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான்.
    அவன் அடுப்பில் அப்பத்தை வைக்கிறான்.
அப்பத்தின் மாவு புளித்துகொண்டிருக்கும்போது அப்பம் சுடுபவன் அடுப்பில் அளவுக்கு அதிகமான நெருப்பைப் போடமாட்டான்.
    ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறு இல்லை.
    இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதும் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர்.
நம்முடைய ராஜாவின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள்.
    தலைவர்கள் திராட்சைரசத்தின் சூட்டால் நோயடைகின்றனர். எனவே ராஜாக்கள் தேவனைப் பரிகாசம் செய்யும் ஜனங்களோடு சேருகின்றார்கள்.
ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள்.
    அவர்களது இதயங்கள் சூட்டடுப்பைப் போன்று கிளர்ச்சியடைகின்றன.
அவர்களின் ஆர்வம் இரவு முழுவதும் எரியும்.
    காலையில் அது நெருப்பாய் எரியும்.
அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள்.
    அவர்கள் தமது ஆட்சியாளர்களை அழித்தார்கள்.
அவர்களின் ராஜாக்கள் அனைவரும் விழுந்தார்கள்.
    அவர்களில் ஒருவரும் என்னை உதவிக்கு அழைக்கவில்லை.”

இஸ்ரவேலும் மற்ற தேசங்களும்

“எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலந்திருக்கிறான்.
    எப்பிராயீம் இரண்டு பக்கமும் வேகாத அப்பத்தைப் போன்று இருக்கிறான்.
அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள்.
    ஆனால் எப்பிராயீம் இதை அறியவில்லை எப்பிராயீம் மேல் நரை மயிர்கள் தெளிக்கப்பட்டுள்ளன.
    ஆனால் எப்பிராயீம் இதனை அறியவில்லை.
10 எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது.
    ஜனங்களுக்குப் பற்பல தொல்லைகள் இருக்கின்றன.
ஆனால் அவர்கள் இன்னும் தமது தேவனாகிய கர்த்தரிடம் திரும்பிப் போகவில்லை.
    ஜனங்கள் உதவிக்கு அவரை நோக்கிப் பாக்கவில்லை.
11 எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான்.
    ஜனங்கள் எகிப்திடம் உதவிக் கேட்டார்கள்.
    ஜனங்கள் அசீரியாவிடம் உதவி கேட்டுப்போனார்கள்.
12 அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள்.
    ஆனால் நான் அவர்களை கண்ணியில் சிக்கவைப்பேன்.
நான் எனது வலையை அவர்கள் மேல் வீசுவேன்.
    நான் அவர்களை வானத்துப் பறவைகளைப் போன்று பிடித்து அவர்களை கிழே கொண்டு வருவேன்.
நான் அவர்களை அவர்களது உடன்படிக்கைகளுக்காகத் தண்டிப்பேன்.
13 இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள்.
    அவர்கள் எனக்கு அடிபணிய மறுத்தார்கள்.
    எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
நான் அந்த ஜனங்களைக் காப்பாற்றினேன்.
    ஆனால் எனக்கு எதிராக அவர்கள் பொய்களைப் பேசுகின்றார்கள்.
14 அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை.
    ஆம் அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து அழுகின்றார்கள்.
தானியத்திற்காகவும் புதுத் திராட்சை ரசத்திற்காகவும் கேட்கும்போது தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள்.
    ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கிறார்கள்.
15 நான் அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் கைகளை பலப்படுத்தினேன்.
    ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் தீய திட்டங்களைப் போட்டிருக்கிறார்கள்.
16 ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள்.
    அவர்கள் தங்கள் திசைகளை மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால் என்னிடம் திரும்பி வரவில்லை. அவர்கள் தலைவர்கள் தங்கள் பலத்தைப்பற்றி பெருமை பேசுகிறார்கள்.
    ஆனால் அவர்கள் வாள்களால் கொல்லப்டுவார்கள்.
பிறகு எகிப்து ஜனங்கள்
    அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.”

சங்கீதம் 120-122

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.

120 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது,
    உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.

பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா?
    நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
வீரனின் கூரிய அம்புகளும்,
    சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும்.

பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும்
    கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.
சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு
    நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
நான் சமாதானம் வேண்டும் என்றேன்.
    ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.

121 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன்.
    ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது?
எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும்
    படைத்த கர்த்தரிடமிருந்து வரும்.

தேவன் உன்னை விழவிடமாட்டார்.
    உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.
இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை.
    தேவன் ஒருபோதும் உறங்கார்.
கர்த்தர் உன் பாதுகாவலர்.
    அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார்.
பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது.
    இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது.
எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார்.
    கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.
நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார்.
    இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார்.

ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்.

122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
    நான் மிகவும் மகிழ்ந்தேன்.
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே
    நின்றுகொண்டிருக்கிறோம்.

இது புதிய எருசலேம்.
    ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
    கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
    அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
அங்கு ராஜாக்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
    தாவீதின் குடும்பத்து ராஜாக்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
    “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
    உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
    இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
    இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center