Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 8

எலிசா சூனேமியப் பெண்ணைப் போகச் சொன்னது

எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், “நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்” என்றான்.

எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள். ஏழு ஆண்டுகள் முடிந்ததும் அவள் பெலிஸ்தியர்களின் நிலத்திலிருந்து திரும்பினாள்.

அவள் ராஜாவோடு பேசுவதற்குச் சென்றாள். தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்காக முறையிட்டாள்.

ராஜா தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், “எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு” எனக்கேட்டான்.

கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று ராஜாவிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, “எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப்பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!” என்று கூறினான்.

ராஜா அவளது விருப்பத்தை விசாரிக்க அவளும் விளக்கிச் சொன்னாள்.

பிறகு ராஜா ஒரு அதிகாரியை அவளுக்கு உதவுமாறு நியமித்தான். அவனிடம், “இவளுக்குரியவற்றையெல்லாம் இவள் பெறுமாறு செய். இவள் இந்த நாட்டைவிட்டு போன நாள் முதல் இன்றுவரை இவள் நிலத்தில் விளைந்த தானியத்தையும் இவள் பெறுமாறு செய்” என்றான்.

பெனாதாத் ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினது

எலிசா தமஸ்குவுக்குச் சென்றான். ஆராம் தேசத்து ராஜா பெனாதாத் நோயுற்றிருந்தான். ஒருவன் அவனிடம். “தேவமனிதர் (தீர்க்கதரிசி) இங்கே வந்துள்ளார்” என்றான்.

பிறகு பெனாதாத் ஆசகேலிடம், “அன்பளிப்போடு போய் தேவமனிதரை (தீர்க்கதரிசி) சந்தி, நான் நோயிலிருந்து குணமடைவேனா என்று அவரை கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறு” என்றான்.

எனவே, ஆசகேல் எலிசாவை சந்திக்க சென்றான். தன்னோடு அன்பளிப்பையும் எடுத்துச்சென்றான். தமஸ்குவிலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொண்டு சென்றான். அவற்றை 40 ஒட்டகங்களில் எடுத்துச் சென்றான். அவன், “உங்கள் தொண்டனான ஆராமின் ராஜாவான பெனாதாத் என்னை உங்களிடம் அனுப்பினார். நோயிலிருந்து தான் குணமாவேனா என்று கேட்கச்சொன்னார்” என்றான்.

10 பிறகு எலிசா ஆசகேலிடம், “போய் பெனாதாத்திடம், ‘நீ நோய் நீங்கிப் பிழைப்பாய்’ என்று கூறு. எனினும், கர்த்தர் ‘அவன் மரித்துப்போவான்’ என்றே கூறுகிறார்” என்றான்.

எலிசா ஆசகேலைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னது

11 எலிசா ஆசகேலை உற்றுப் பார்த்து பிறகு அழுதான். 12 ஆசகேல் அவனிடம், “ஐயா ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான்.

அதற்கு எலிசா, “நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்” என்றான்.

13 ஆசகேல், “நான் வல்லமையுள்ளவன் அல்ல! என்னால் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய முடியாது!” என்று கூறினான்.

அதற்கு எலிசா, “நீ ஆராம் நாட்டின் ராஜா ஆவாய் என்று கர்த்தர் என்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான்.

14 பிறகு ஆசகேல் எலிசாவிடமிருந்து கிளம்பி ராஜாவிடம் போக, அவன் இவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று கேட்டான்.

ஆசகேல், “நீர் பிழைப்பீர் என்று எலிசா சொன்னார்” என்றான்.

ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்கிறான்

15 ஆனால் மறுநாள், ஆசகேல் ஒரு போர்வையை எடுத்து தண்ணீரில் நனைத்து அதனை பெனாதாத்தின் முகத்தில் மூடினான். மூச்சை நிறுத்தினான். பெனாதாத் மரித்துப்போனான். எனவே ஆசகேல் புதிய ராஜா ஆனான்.

யோராம் ஆளத்தொடங்குகிறான்

16 யூதாவில் யோசபாத்தின் குமாரனான யோராம் ராஜாவாக இருந்தான். இவனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஆகாபின் குமாரனான யோராம் ராஜாவாக இருந்தபோது அவன் ஆளத் தொடங்கினான். 17 யோராம் ஆளத் துவங்கும்போது அவனுக்கு 32 வயது. எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். 18 ஆனால், அவன் இஸ்ரவேலின் ராஜாக்களைப் போன்றே கர்த்தருக்குப் பிடிக்காதப் பாவங்களைச் செய்து வந்தான். அவனது மனைவி ஆகாபின் குமாரத்தியானதால் யோராம் ஆகாபின் குடும்பத்தவர்களைப் போன்றே வாழ்ந்து வந்தான். 19 ஆனால் தன் வேலையாள் தாவீதிற்கு கர்த்தர் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால் யூதாவை அழிக்கமாட்டார். அவர் ஏற்கெனவே தாவீதின் குடும்பத்தில் உள்ளவனே ராஜாவாக எப்பொழுதும் இருப்பான் என்று ஆணையிட்டுள்ளார்.

20 யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்து ஏதோம் கலகம் செய்ததால் உடைந்துவிட்டது, அவர்கள் தங்களுக்குரிய ராஜாவைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

21 அதனால் யோராம் (யூதாவைச் சேர்ந்தவன்) இரதங்களோடு சாயீருக்குப் போனான். அவர்களை ஏதோமிய படை சூழ்ந்தபோது, யோராமும் அவனது தளபதிகளும் ஏதோமியர்களைத் தாக்கினார்கள். யோராமின் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குத் தப்பிச் சென்றார்கள். 22 எனவே ஏதோம் யூதாவின் ஆட்சியிலிருந்து (கலகத்தால்) உடைந்துவிட்டது. இன்றுவரை அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர்.

அப்போது, லிப்னாத்தும் யூதாவின் ஆட்சியில் இருந்து பிரிந்தது.

23 யோராம் செய்த மற்ற செயல்களும் அவன் செய்த அனைத்தும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

24 இவன் மரித்தப்போது இவனை தாவீது நகரத்தில் முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவனது குமாரன் அகசியா ராஜாவானான்.

அகசியா தனது ஆட்சியைத் தொடங்குகிறான்

25 யோராமின் குமாரனான அகசியா யூதாவின் ராஜாவானான். அப்போது, இஸ்ரவேலில் ஆகாபின் குமாரனான யோராம் 12வது ஆட்சியாண்டில் இருந்தான். 26 அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி ராஜாவின் குமாரத்தி. 27 தவறு என்று கர்த்தர் குறிப்பிட்ட செயல்களையே அவனும் செய்தான். ஆகாபின் குடும்பத்தவர்களைப்போன்றே ஆண்டான். ஏனெனில் அவன் ஆகாபின் மருமகன்.

ஆசகேலுக்கு எதிரான போரில் யோராம் புண்பட்டது

28 யோராம் ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆராமிய ராஜாவாகிய ஆசகேலோடு ராமோத் கீலேயாத்தில் போரிடுவதற்காக அகசியா யோராமுடன் சென்றான். ராமோத் கீலேயாத்தில் ஆராமியர்கள் யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். 29 ராஜாவாகிய யோராம் இஸ்ரவேலுக்குத் திரும்பித் தன்னைக் காயங்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ள யெஸ்ரயேல் பகுதிக்குச் சென்றான். யோராமின் குமாரனான அகசியா யூதாவின் ராஜாவாயிருந்தான். அகசியா யோராமைக்காண யெஸ்ரயேலுக்குச் சென்றான்.

1 தீமோத்தேயு 5

முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து. முதிய பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து.

மற்றவர்களோடு வாழ்வதற்கான சில விதிமுறைகள்

உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட. ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், இவர்கள் தம் பெற்றோர்களுக்கு உதவுவதன் மூலம் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதை முதலில் கற்கவேண்டும். இவர்கள் இதைச் செய்தால் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தியவர்களாவார்கள். இதையே தேவன் ஒப்புக்கொள்கிறார். விதவையாக இருக்கும் ஒருத்தி தேவனைத் தன் ஒரே விசுவாசமாகக்கொண்டிருப்பாள். இரவு பகல் என அவள் எப்பொழுதும் பிரார்த்தனை செய்வாள். தேவனிடம் உதவியை வேண்டுவாள். தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள். அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள். ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.

உன் விதவைகள் பட்டியலில் சேர்க்கப்பட, விதவையானவளுக்கு அறுபது வயதுக்கு மேலாகி இருக்கவேண்டும். அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக இருந்திருக்க வேண்டும். 10 நல்ல காரியங்களைச் செய்யும் ஒரு பெண் என அறியப்பட்டிருக்க வேண்டும். அதாவது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டில் அந்நியர்களை உபசரித்தல், தூயவர்களின் கால்களைக் கழுவுதல், துன்பப்படுகிறவர்களுக்குத் துணை புரிதல் போன்று தன் வாழ்க்கை முழுவதும் பலவித நன்மைகளைச் செய்தல் வேண்டும்.

11 அந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்க்காதீர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குத் தம்மை ஒப்படைத்தாலும், பலமான காம ஆசைகளால் அவரை விட்டு வெளியே இழுக்கப்படுவர். அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பலாம். 12 இதற்காகவே அவர்கள் குற்றவாளியாவார்கள். தாங்கள் முதலில் வாக்குறுதி கொடுத்தபடி நடந்துகொள்ளாததால் குற்றவாளியாவார்கள். 13 இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள். 14 ஆகையால் இளம் விதவைகள் மீண்டும் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வீட்டைக் கவனித்துக்கொள்வார்களாக. இதுவே அவர்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வழியில் அவர்கள் எதிரிக்கு விமர்சிக்கும் வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள். 15 ஆனால், ஏற்கெனவே சில இளம் விதவைகள் சாத்தானைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.

16 விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும்.

மூப்பர்களைப்பற்றியும் பிற காரியங்களைப்பற்றியும் இன்னும் சில விஷயங்கள்

17 சபைகளை நன்றாக நடத்திச்செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர். 18 ஏனென்றால், “பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும்”(A) என்று வேதவாக்கியம் கூறுகிறது. “உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும்”(B) என்றும் கூறுகிறது.

19 மூப்பர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கவனிக்காதே, இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் இருந்தால் அதை ஏற்றுக்கொள். 20 பாவம் செய்பவர்களைக் கண்டிக்க வேண்டும். அதுவும் சபைக்கு முன்னால் மற்றவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி கண்டிக்க வேண்டும்.

21 தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ தூதர்களுக்கும் முன்பாக இவற்றை நீ செய்யவேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். பாரபட்சத்தோடு ஒன்றும் செய்யாதே. அதைப்பற்றி ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளும் முன்பு முடிவு செய்யாதே.

22 எவர் மீதும் கைகள் வைக்கும் முன்பு எச்சரிக்கையோடு யோசி. மற்றவர்கள் செய்யும் பாவங்களில் பங்குகொள்ள வேண்டாம். உன்னைச் சுத்தம் உள்ளவனாகக் காத்துக்கொள்.

23 தீமோத்தேயுவே! நீ இதுவரை தண்ணீரையே குடித்து வந்தாய். அதை நிறுத்தி கொஞ்சம் திராட்சை இரசமும் குடி. அது உன் வயிற்றுக்கு நல்லது. உனக்கு அடிக்கடி வரும் வியாதியில் உனக்கு இது உதவக் கூடும்.

24 சிலரது பாவங்கள் வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும்படியாக இருக்கும். அவர்கள் நியாயம்தீர்க்கப்படுவார்கள் என்பதை அவர்கள் பாவங்களே காட்டுகின்றன. ஆனால் சிலரது பாவங்களோ தாமதமாகவே வெளிப்படும். 25 அவ்வாறே சிலரது நற்செயல்களும் வெளிப்படையாகவே இருக்கும். அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்க முடியாது.

தானியேல் 12

12 “தரிசனத்தில் அந்த ஆள், தானியேலே, அந்த நேரத்தில், பெரிய அதிபதியாகிய மிகாவேல் தூதன் எழுந்து நிற்பான். மிகாவேல் உனது யூத ஜனங்களுக்கு பொறுப்பானவன். மிகத் துன்பமான ஒரு காலம் வரும். பூமியில் தேசங்கள் தோன்றிய நாள் முதலாக இதுபோன்ற துன்பகாலம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தானியேலே, அந்த நேரத்தில், உன் ஜனங்களில் எவருடைய பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். பூமியில் உள்ள ஜனங்களில் செத்துப் புதைக்கப்பட்டவர்கள் எல்லாரும் எழும்புவார்கள். அவர்களில் சிலர் என்றென்றும் வாழ்வதற்காக எழுந்திருப்பார்கள். ஆனால் சிலர் என்றென்றும் வெட்கமும் வெறுப்பும் அடைவதற்காக எழும்புவார்கள். ஞானமுள்ள ஜனங்கள் வானத்து ஒளியைப்போன்று பிரகாசிப்பார்கள். ஜனங்களை நல்ல வழியில் வாழக் கற்றுத்தந்த ஞானிகள் என்றென்றைக்கும் வானத்து நட்சத்திரங்களைப் போன்று ஒளி வீசுவார்கள்.

“ஆனால் தானியேலாகிய நீ, இச்செய்தியை இரகசியமாக வைத்துக்கொள். நீ இந்தப் புத்தகத்தை மூடிவை. நீ முடிவு காலம்வரை இந்த இரகசியத்தைக் காக்க வேண்டும். அநேக ஜனங்கள் உண்மையான அறிவைத் தேடி அங்கும் இங்கும் அலைவார்கள். அவர்களுக்கு உண்மையான அறிவு வளரும்.”

பிறகு தானியேலாகிய நான் வேறு இரண்டு பேரைப் பார்த்தேன். ஒருவன் ஆற்றங்கரையில் எனது பக்கம் நின்றுகொண்டிருந்தான். இன்னொருவன் ஆற்றின் இன்னொரு கரையில் நின்றுகொண்டிருந்தான். சணல் துணி அணிந்திருந்த ஒருவன், ஆற்றின் தண்ணீரின் மேல் நின்றுகொண்டிருந்தான். இருவரில் ஒருவன் அவனிடம் சொன்னான், “இந்த அதிசயங்களெல்லாம் உண்மையாவதற்கு எவ்வளவு காலமாகும்?”

சணல் ஆடை அணிந்து ஆற்றுத் தண்ணீரின்மேல் நின்றவன் தனது வலது கையையும், இடது கையையும் வானத்தை நோக்கி நீட்டினான். அவன் என்றென்றும் ஜீவித்திருக்கிற தேவனுடைய நாமத்தால் ஆணையிட்டதை நான் கேட்டேன். அவன் சொன்னான்: “இது மூன்றும், அரை ஆண்டு காலமும் இருக்கும். பரிசுத்த ஜனங்களின் வல்லமை உடையும். இவை அனைத்தும் இறுதியில் உண்மையாகும்.”

நான் பதிலைக் கேட்டேன். ஆனால் உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே நான் கேட்டேன், “ஐயா, இவை எல்லாம் உண்மையானதும் என்ன நிகழும்?” என்று கேட்டேன்.

அவன், என்னிடம், “தானியேலே, உன் வாழ்க்கையை நீ தொடர்ந்து நடத்து. இந்த வார்த்தைகள் முடிவுகாலம் வரை இரகசியமாகவும் மறைக்கப்பட்டும் இருக்கும். 10 பலர் சுத்தமாக்கப்படுவார்கள். அவர்கள் தம்மைத் தாமே சுத்தப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் தீயவர்கள் தீமையில் தொடருவார்கள். அக்கெட்டவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் ஞானமுள்ளவர்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள்.

11 “தினபலிகள் நிறுத்தப்படும். அக்காலம் முதல் அழிவை உண்டாக்கும் பயங்கரம் ஏற்படுத்தப்பட்ட நாள்வரை 1,290 நாள் செல்லும். 12 1,335 நாள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.

13 “தானியேலே நீயோவென்றால் முடிவு வருமட்டும் சென்று வாழ்ந்திரு. உனது இளைப்பாறுதலை முடிவில் நீ பெறுவாய். மரணத்திலிருந்து எழும்பி, உனது பங்கைப் பெறுவாய்” என்றான்.

சங்கீதம் 119:49-72

சாயீன்

49 கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த வாக்குறுதியை நினைவுக்கூரும்.
    அவ்வாக்குறுதி எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
50 நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர்.
    உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
51 என்னைவிட உயர்ந்தோராகக் கருதிக்கொள்வோர் என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டிருந்தனர்.
    ஆனால் நான் உமது போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
52 உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன்.
    கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.
53 தீயோர் உமது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிடுகின்றனர்.
    அதைப் பார்க்கும்போது நான் கோபமடைகிறேன்.
54 உமது சட்டங்கள் எனது வீட்டின்[a] பாடல்களாகின்றன.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன்.
    நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.
56 நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிவதால் இவ்வாறு நிகழ்கிறது.

கேத்

57 கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
58 கர்த்தாவே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன்.
    நீர் வாக்குறுதியாளித்தபடியே என்னிடம் தயவாயிரும்.
59 என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன்.
    உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.
60 தாமதமின்றி
    உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.
61 தீயோர்களின் கூட்டமொன்று என்னைப் பற்றி தீயவற்றைக் கூறின.
    ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
62 உமது நல்ல முடிவுகளுக்காக நன்றி கூறும்படி நள்ளிரவில் நான் எழுகிறேன்.
63 உம்மைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவருக்கும் நான் நண்பன்.
    உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஒவ்வொரு வருக்கும் நான் நண்பன்.
64 கர்த்தாவே, உமது உண்மை அன்பு பூமியை நிரப்புகிறது.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

தேத்

65 கர்த்தாவே, நீர் உமது பணியாளாகிய எனக்கு நல்லவற்றைச் செய்தீர்.
    நீர் செய்வதாக எனக்கு உறுதியளித்தபடியே செய்தீர்.
66 கர்த்தாவே, ஞானமுள்ள முடிவுகளை எடுப்பதற்குரிய அறிவை எனக்குத் தாரும்.
    உமது கட்டளைகளை நான் நம்புகிறேன்.
67 நான் துன்புறும்முன்பு, பல தவறுகளைச் செய்தேன்.
    ஆனால் இப்போது, நான் உமது கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
68 தேவனே, நீர் நல்லவர், நீர் நல்ல காரியங்களைச் செய்கிறீர்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
69 என்னைக் காட்டிலும் உயர்ந்தோரெனத் தங்களைக் கருதியவர்கள் என்னைப் பற்றித் தீய பொய்களைக் கூறினார்கள்.
    ஆனால் கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடும் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்ந்தேன்.
70 அந்த ஜனங்கள் மூடர்கள், ஆனால் நானோ
    உமது போதனைகளைக் கற்பதில் களிப்படைகிறேன்.
71 துன்புறுவது எனக்கு நல்லது.
    நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
72 கர்த்தாவே, உமது போதனைகள் எனக்கு நல்லவை.
    ஆயிரம் பொன்னையும் வெள்ளியையும் பார்க்கிலும் அவை நல்லவை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center