M’Cheyne Bible Reading Plan
ஆலயத்தில் வைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி
8 பின் சாலொமோன் இஸ்ரவேலரின் முதியவர்களையும் கோத்திரத் தலைவர்களையும் கூட்டினான். அவர்களை எருசலேமுக்கு வரச்செய்தான். அவர்களை தாவீது நகரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்திற்கு கொண்டு வரும்படி கேட்டான். 2 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சாலொமோனிடம் வந்தனர். இது, ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்து அடைக்கல கூடார பண்டிகைக்குரியதாக இருந்தது. 3 இஸ்ரவேலின் முதியவர்கள் அனைவரும் அங்கு வந்துசேர்ந்ததும் பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் எடுத்தனர். 4 அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியோடு ஆசரிப்புக் கூடாரத்தையும் கூடாரத்திலிருந்து பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்துகொண்டு ஆசாரியரும் லேவியர்களும் வந்தனர். 5 சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் கூடினார்கள். அவர்கள் பல பலிகளைக் கொடுத்தனர். எவராலும் எண்ணிப்பார்க்க முடியாதபடி ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர். 6 பின்னர் ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதற்கு உரிய சரியான இடத்தில் வைத்தனர். அது ஆலயத்தின் உள்ளே மகா பரிசுத்தமான இடத்தில் இருந்தது. உடன்படிக்கைப் பெட்டியானது கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் இருந்தது. 7 கேருபீன்கள் தங்கள் சிறகுகளை விரித்து பரிசுத்தப் பெட்டியையும் அதன் தண்டுகளையும் மூடின. 8 தூக்கிச் செல்லத்தக்க தண்டுகள் மிகவும் நீளமானவை. அவை பரிசுத்த இடத்திற்கு முன்னால் மகா பரிசுத்த இடத்தில் நிற்கும் எவராலும் காணத்தக்கதாக இருந்தன. என்றாலும் அவை வெளியே காணப்படவில்லை. அவை இன்றும் அங்கே தான் உள்ளன. 9 அப்பரிசுத்தப் பெட்டிக்குள்ளே இரண்டு கற்பல கைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவற்றை மோசே ஓரேப் என்ற இடத்தில் பரிசுத்தப் பெட்டிக்குள்ளே வைத்தான். அந்த இடத்தில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததும் கர்த்தர் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டார்.
10 ஆசாரியர்கள் பரிசுத்தப் பெட்டியை மகா பரிசுத்த இடத்தில் வைத்தனர். ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியேறியதும் மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை மூடிக்கொண்டது. 11 ஆசாரியர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது. ஏனென்றால் கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிவிட்டது. 12 பிறகு சாலொமோன்:
“கர்த்தர், கனமான மேகத்தில் வாழ்வதாகச் சொன்னார்,[a]
13 நான் உங்களுக்காக ஒரு பிரமாதமான ஆலயத்தைக் கட்டினேன்,
என்றென்றும் நீங்கள் வாழத்தக்க இடத்தை உருவாக்கினேன்” என்றான்.
14 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் அங்கே நின்றுக்கொண்டு இருந்தனர். எனவே சாலொமோன் அவர்களை நோக்கி திரும்பி ஆசீர்வதிக்கும்படி தேவனை வேண்டினான். 15 பிறகு சாலொமோன் ராஜா கர்த்தருக்கு முன் மிக நீண்ட நேரம் ஜெபித்தான். அவன்:
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மிகப் பெரியவர். கர்த்தர் தாமாகவே என் தந்தையான தாவீதிற்குச் செய்த வாக்குறுதியைச் செய்து முடித்தார், அவர் என் தந்தையிடம், 16 ‘நான் என் இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். ஆனால் நான் இன்னும் என்னை மகிமைப்படுத்தும் ஆலயத்தைக் கட்டுவதற்குரிய இடத்தை இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவில்லை. அதோடு இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்திச் செல்லும் தலைவனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் மகிமைப்படுவதற்குரிய இடமாக எருசலேமை தேர்ந்தெடுத்துள்ளேன். அதோடு, இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தாவீதைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.’
17 “என் தந்தையான தாவீது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்திட, ஒரு ஆலயத்தை கட்ட விரும்பினார். 18 ஆனால் அவரிடம் கர்த்தரோ, ‘என்னை மகிமைப்படுத்திட நீ ஆலயம் கட்ட வேண்டுமென்று விரும்புகிறாய். நீ என் ஆலயத்தைக் கட்ட விரும்புவது நல்லதுதான். 19 ஆனால் நான் என் ஆலயத்துக்காக உன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. உன் குமாரன் என் ஆலயத்தைக்கட்டுவான்!’ என்று கூறினார்.
20 “எனவே கர்த்தர் தனது வாக்குறுதியை நிறைவேற்றிக்கொண்டார். நான் என் தந்தையான தாவீதின் இடத்தில் ராஜாவாக இருக்கிறேன். கர்த்தருடைய வாக்குறுதியின்படி இப்போது நான் இஸ்ரவேலை ஆண்டு வருகிறேன். நான் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டிவிட்டேன். 21 ஆலயத்திற்குள் பரிசுத்தப் பெட்டியை வைக்கவும் இடம் அமைத்துவிட்டேன். அப்பரிசுத்தப் பெட்டிக்குள் கர்த்தர் நமது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிறது. இந்த உடன்படிக்கையை அவர் நமது முற்பிதாக்களோடு எகிப்தை விட்டு வெளியே வந்ததும் செய்தார்” என்றான்.
22 பிறகு சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்தின் முன்பு நின்றான். அனைவரும் அவனுக்கு முன்பு நின்றனர். 23 அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி,
“இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர். 24 உமது சேவகனான என் தந்தை தாவீதிடம், ஒரு வாக்குறுதி தந்தீர். அதையும் காப்பாற்றினீர். உம்முடைய வாயாலேயே அந்த வாக்குறுதியைச் செய்தீர். அதை உண்மையாக்கிட உம்முடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தினீர். 25 இப்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தாவீதிற்குத் தந்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நீர், ‘உன் குமாரர்கள் உன்னைப்போலவே எனக்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் பிறகு எப்பொழுதும் உன் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்ரவேல் ஜனங்களை ஆள்வார்கள்’ என்று சொன்னீர். 26 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தந்தைக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
27 “ஆனால், தேவனே உண்மையில் நீர் இந்தப் பூமியில் எங்களோடு வாழ்கின்றீரா? வானங்களும், வானாதி வானங்களும் உமக்குப் போதாதே. என்னால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28 ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும். 29 முன்பு நீர், ‘அங்கே நான் மகிமைப்படுத்தப்படுவேன்’ என்றீர். இவ்வாலயத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும். இந்த ஆலயத்தில் நான் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும் 30 கர்த்தாவே, நானும் இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே உம்மிடம் திரும்பி ஜெபிக்கிறோம். தயவு செய்து அந்த ஜெபங்களைக் கேளும்! நீர் பரலோகத்தில் இருப்பதை அறிவோம். அங்கிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களை மன்னியும்.
31 “எவனாவது ஒருவன் இன்னொருவனுக்குத் தப்பு செய்தால், அவன் இங்கே பலிபீடத்திற்குக் கொண்டு வரப்படுவான். அவன் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால், ஒரு சத்தியம் செய்துக்கொள்வான். தான் ஒன்றும் அறியாதவன் என்று அவன் வாக்குறுதி செய்யவேண்டும். 32 பரலேகத்திலிருந்து கவனித்து நியாயம் வழங்கவேண்டும். அவன் குற்றவாளியானால், தயவு செய்து அதை எங்களுக்கு உணர்த்தும். அவன் ஒன்றும் அறியாத அப்பாவியாக இருந்தால், அவன் குற்றமற்றவன் என்பதை உணர்த்தியருளும்.
33 “சில நேரங்களில் உமது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யலாம், அவர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்கலாம். பிறகு அவர்கள் உம்மைத் துதிப்பார்கள், இந்த ஆலயத்தில் வந்து ஜெபம் செய்வார்கள். 34 தயவு செய்து பரலோகத்திலிருந்து அவற்றைக் கேளும். அவர்களை மன்னித்து நமது நாட்டைப் பெற்றுக்கொள்ளும்படி உதவும், நீர் இந்த நாட்டை அவர்களின் முற்பிதாக்களுக்கு தந்துள்ளீர்.
35 “சில வேளைகளில் இவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வதினால், நீர் மழையை நிறுத்திவிடுகிறீர். பிறகு அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஜெபித்து உம்மைத் துதித்து உமது பேரையும் புகழையும் பாடுவார்கள். நீர் துன்புறுத்த, அவர்கள் தமது பாவங்களுக்காக வருந்துவார்கள். 36 தயவு செய்து பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபத்தைக் கேளும். பிறகு எங்களது பாவங்களை மன்னியும். ஜனங்களுக்கு சரியான வழிகளை கற்பியும். கர்த்தாவே, உமது ஜனங்களுக்கு வாரிசுரிமையாகக் கொடுத்த மண்ணுக்கு மழையை அனுப்பிவையும்.
37 “இந்த பூமி வறண்டு போகலாம், உணவுப் பொருட்கள் விளையாமல் போகலாம், அல்லது ஜனங்களிடம் பெருநோய் பரவலாம் அல்லது பயிர்கள் புழுப் பூச்சிகளால் அழிக்கப்படலாம் அல்லது பகைவர்களால் ஜனங்கள் தம் நகரங்களில் தாக்கப்படலாம் அல்லது ஜனங்களுக்கு நோய் வரலாம். 38 இவற்றில் ஏதாவது ஒன்று ஏற்பட்டு, ஜனங்களில் ஒவ்வொருவனும் மனம்மாற விரும்பி, ஆலயத்தை நோக்கித் தன் கைகளை ஏறெடுத்து ஜெபம் செய்தால், 39 தயவு செய்து கவனியும். நீர் உமக்குரிய இடமாகிய பரலோகத்தில் இருந்தாலும் கவனியும். அவர்களை மன்னித்து உதவிசெய்யும். உமக்கு மட்டுமே மனிதர்கள் உண்மையாக நினைப்பது தெரியும். எனவே, ஒவ்வொருவரையும் அவரவர் செய்கிறபடி நடத்தும். 40 எங்கள் முற்பிதாக்களுக்காக நீர் கொடுத்த இந்நாட்டில் நாங்கள் வாழும்வரை உமக்கு பயந்துநடப்போம்.
41-42 “வெளி இடங்களில் உள்ள ஜனங்களும் உமது உயர்வையும் பலத்தையும் அறிவார்கள். இந்த ஆலயத்தில் ஜெபிப்பதற்காக அவர்கள் வெகு தூரத்திலிருந்து வருவார்கள். 43 பரலோகத்திலிருந்து அவர்களது ஜெபங்களுக்குச் செவிசாயும். அவர்கள் கேட்பவற்றை தந்து உதவும். பிறகு அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே உம்மிடம் பயமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பின் எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்களும் உமது நாமத்தைத் தாங்கிய நான் கட்டியிருக்கிற இந்த ஆலயத்தை அறிவார்கள்.
44 “சில நேரங்களில் உமது ஜனங்களுக்கு அவர்களது எதிரிகளோடு சண்டையிடுமாறு நீர் ஆணையிடுவீர். பிறகு உமது ஜனங்கள் உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நகரத்திற்கும் நான் உம்மை மகிமைப்படுத்துவதற்குக் கட்டியிருக்கிற ஆலயத்திற்கும் திரும்பிவந்து அவர்கள் உம்மிடம் ஜெபம் செய்வார்கள். 45 அப்போது, உம்முடைய பரலோகத்திலிருந்து அந்த ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவும்.
46 “உமது ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வார்கள். நான் இதனை அறிவேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் பாவம் செய்கின்றனர். உமது ஜனங்களின்மேல் கோபமாக இருப்பீர். பகைவர்களால் தோற்கடிக்கப்படச் செய்வீர். பகைவர்கள் அவர்களைக் கைது செய்து தூரநாடுகளுக்குக் கொண்டுப் போவார்கள். 47 அங்கே உமது ஜனங்கள் நடந்தவற்றை நினைத்துப் பார்ப்பார்கள். தம் பாவங்களுக்காக வருந்தி உம்மிடம் ஜெபிப்பார்கள், ‘பாவம் செய்து உமக்கு தவறிழைத்துவிட்டோம்’ என்பார்கள். 48 அவர்கள் தொலைவிலுள்ள அந்த நிலப்பகுதியில் இருப்பார்கள். அவர்களை அடிமைப்படுத்திய எதிரிகளின் நிலத்திலிருந்து முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் உம்மை நோக்கித் திரும்பினாலும் அவர்களது முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தை நோக்கி உம்மிடம் ஜெபித்தாலும், நீர் தேர்ந்தெடுத்த நகரத்தை நோக்கித் திரும்பினாலும் நான் உமது நாமத்தால் கட்டியுள்ள ஆலயத்தை நோக்கித் திரும்பினாலும், 49 நீர் அவர்களது ஜெபங்களுக்கு பரலோகத்திலிருந்து செவிசாய்த்து உதவும். 50 உமது ஜனங்களின் பாவங்களை மன்னியும். அவர்கள் உமக்கு எதிராக திரும்பியதற்கு மன்னித்துவிடும். பகைவர்கள் அவர்களிடம் இரக்கத்துடன் இருக்கச் செய்யும். 51 அவர்கள் உம்முடைய ஜனங்கள் என்பதை மறவாதீர். அவர்களை எகிப்திலிருந்து மீட்டு வந்ததை நினைவுகூரும். சூடான அடுப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியதைப் போன்ற செயல் அது!
52 “தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தையும் இஸ்ரவேல் ஜனங்களின் ஜெபங்களையும் கேளும். உதவி கேட்கும்போதெல்லாம் உதவும். 53 நீர் அவர்களை உலகிலுள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தீர். உமது வேலையாள் மோசே மூலம் எங்கள் முற்பிதாக்களை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தபோது நீர் அதை வெளிப்படுத்தினீர்” என்றான்.
54 சாலொமோன் இவ்வாறு தேவனிடம் ஜெபம் செய்தான். அவன் பலிபீடத்திற்கு முன்னால் முழங்காலிட்டு தன் கைகளை உயர்த்தி பரலோகத்தை நோக்கி வேண்டினான். அவன் தன் வேண்டுதல்களை முடித்தபிறகு எழுந்து நின்றான். 55 பின் உரத்த குரலில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினான்.
56 சாலொமோன், “கர்த்தரை துதியுங்கள்! அவரது ஜனங்களுக்கு அவர் வாக்களித்தது போன்று இளைப்பாறுதல் அளிக்கிற கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுங்கள்! கர்த்தர் தமது ஊழியன் மோசே மூலம் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வார்த்தை கூட தவறுவதில்லை. கர்த்தர் அத்தனையையும் காப்பாற்றுவார்! 57 தேவனாகிய கர்த்தர் நமது முற்பிதாக்களோடு இருந்ததுப்போலவே நம்மோடும் இருப்பார், கர்த்தர் நம்மை விட்டு விலகக்கூடாது என்று ஜெபிக்கிறேன். 58 நாம் அவர் பக்கம் திரும்பி அவரைப் பின்பற்றுவோம். நமது முற்பிதாக்களுக்கு அவர் கொடுத்த சட்டங்களுக்கும், முடிவுகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவோம், 59 நமது தேவனாகிய கர்த்தர், எனது இந்த ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் மறவாமல் இருப்பார். அவர் இதனை அவரது ஊழியனுக்கும் ராஜாவுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் செய்வார். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். 60 இவ்வாறு கர்த்தர் செய்துவந்தால், உலகில் உள்ள ஜனங்கள் அனைவரும் அவரை உலகின் ஒரே தேவனாகக் கருதுவார்கள். 61 நீங்கள் நமது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையோடும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டும். எப்பொழுதும் அவரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இப்பொழுது போலவே எதிர்காலத்திலும் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்” என்றான்.
62 பிறகு சாலொமோன் ராஜாவும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு பலிகளைச் செலுத்தினார்கள். 63 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் கொன்றனர். இவை சமாதானப் பலியாகக் கொடுக்கப்பட்டன. இவ்வழியில்தான், ராஜாவும் இஸ்ரவேலர்களும் ஆலயத்தை கர்த்தருக்கு உரியதாக ஆக்கினார்கள்.
64 அன்று சாலொமோன் ஆலயத்தின் முற்றத்தை அர்ப்பணித்தான். அவன் தகனபலி, தானியக் காணிக்கை, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு சமாதான பலி ஆகியவற்றைக் கொடுத்தான். சாலொமோன் இவற்றை ஆலயத்தின் முற்றத்தில் கொடுத்தான். ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் அவை அனைத்தையும் கொள்ளமுடியாத அளவு சிறியதாக இருந்தது.
65 ஆலயத்தில் சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் விடுமுறையைக்[b] கொண்டாடினார்கள். அனைத்து இஸ்ரவேலர்களும் ஆமாத்தின் எல்லை தொடங்கி எகிப்தின் நதி மட்டுமுள்ள ஜனங்களும் அங்கே இருந்தனர். அவர்கள் ஏழு நாட்கள் உண்பதும் குடிப்பதும் கர்த்தருடன் சேர்ந்து மகிழ்வதுமாக இருந்தனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் இருந்தனர். மொத்தம் 14 நாட்கள் கொண்டாடினர். 66 மறுநாள், சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்பச் சொன்னான். அனைவரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்கள். கர்த்தர் தனது ஊழியனான தாவீதிற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நன்மை செய்ததால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
5 நீங்கள் தேவனால் நேசிக்கப்படுகிற அவரது பிள்ளைகள். எனவே தேவனைப் போல ஆக முயலுங்கள். 2 அன்புக்குரிய ஒரு வாழ்க்கையை வாழுங்கள். கிறிஸ்து நம்மை நேசித்தது போலவே மற்றவர்களை நேசியுங்கள். கிறிஸ்து தம்மையே நமக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். இனிய நறுமணம் உடைய காணிக்கையாகவும், பலியாகவும் தேவனுக்குத் தம்மைத் தந்தார்.
3 ஆனால் உங்களிடையே மோகத்திற்குறிய பாவங்கள் இருக்கக்கூடாது. உங்களிடம் எவ்வகையான தீய செயல்களும், பொருளாசையும் இருக்கக்கூடாது. ஏனென்றால் இவை தேவனுடைய புனிதமான மக்களுக்கு ஏற்றதல்ல. 4 நீங்கள் வம்பு பேசக்கூடாது. முட்டாள்தனங்களும், பரியாசங்களும் பேசக்கூடாது. இவை உங்களுக்குப் பொருத்தமானவை அல்ல. நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். 5 பாலியல் பாவங்கள் செய்பவனும், தீயசெயல் புரிபவனும், தனக்கு மேலும், மேலும் வேண்டும் என ஆசைப்படும் சுயநலக்காரனுமான விக்கிரக வணக்கம் செய்பவனும் தேவனுடையதும், கிறிஸ்துவுடையதுமாகிய இராஜ்யத்தில் இடம் பெறுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
6 உங்களிடம் உண்மை இல்லாதவற்றைச் சொல்லி உங்களை எவரும் முட்டாளாக ஆக்கிவிட அனுமதிக்காதீர்கள். கீழ்ப்படியாதவர்கள் மீது தேவனைக் கோபம் கொள்ள அத்தீய செயல்கள் செய்கிறது. 7 எனவே அவர்களோடு இத்தகைய தீய செயல்களைச் செய்யாதீர்கள். 8 கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும். 9 வெளிச்சமானது எல்லாவகையான நன்மைகளையும், சரியான வாழ்க்கையையும், உண்மையையும் கொண்டு வரும். 10 தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். 11 இருட்டில் வாழ்பவர்கள் செய்கின்ற பாவங்களை எல்லாம் நீங்கள் செய்யாதீர்கள். அவற்றைச் செய்வதால் உங்களுக்கு நன்மை வருவதில்லை. இருட்டில் செய்யப்படுபவை எல்லாம் தவறானவை என்பதை எடுத்துக்காட்ட நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். 12 அவர்கள் இருட்டில் இரகசியமாகச் செய்பவற்றைக் குறிப்பிடுவது கூட வெட்கப்படத்தக்கது ஆகும். 13 அவற்றை நாம் தவறானவை என்று காட்டும்பொழுது அவற்றை எளிதாகப் பார்ப்பதற்கு வெளிச்சம் உதவும். 14 எளிதாகப் பார்ப்பதுபோல் இருக்கிற எல்லாப் பொருள்களும் தமக்குள் வெளிச்சமுடையதாகிவிடும். அதனால்தான் நாம் கூறுகிறோம்.
“தூங்குகிறவர்களே எழும்புங்கள்,
மரணத்திலிருந்து எழும்புங்கள்.
கிறிஸ்து உங்கள் மீது பிரகாசமாயிருப்பார்.”
15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். 16 நீங்கள் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நற்செயல்களைச் செய்யுங்கள். ஏனென்றால் நாம் கெட்ட காலங்களில் வாழ்கிறோம். 17 ஆகையால் முட்டாள்தனமாக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். பிதா உங்களிடம் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். 18 மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள். 19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், பக்திப் பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் கர்த்தருக்காக இசையுடன் பாடுங்கள். 20 பிதாவாகிய தேவனுக்கு எப்போதும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துங்கள். அதனைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் செலுத்துங்கள்.
கணவன்களும், மனைவிமார்களும்
21 ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள்.
22 மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். 23 சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். 24 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள்.
25 கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். 26 சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். 27 கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல
28 கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். 29 ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். 30 ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். 31 “ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது(A) 32 நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. 33 எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
கோகுக்கு விரோதமான செய்தி
38 கர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு. 3 கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன். 4 நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள். 5 பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள். 6 கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள்.
7 “‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக்கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு. 8 நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். 9 ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்குவீர்கள். 11 நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை! 12 நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’
13 “சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’”
14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய். 15 நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய். 16 எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூட வரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’”
17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப்பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.”
18 எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன். 19 நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன். 20 அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!”
21 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள். 22 நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன். 23 பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்.
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ராஜாவோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 “அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த ராஜாவின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த ராஜாவிடம் கோபங்கொண்டு,
அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
நீர் ராஜாவின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 ராஜாவின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் ராஜாவின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
உமது ராஜா யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
ஆமென், ஆமென்!
2008 by World Bible Translation Center