Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 22

மிகாயா ஆகாபை எச்சரித்தது

22 அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது. மூன்றாம் ஆண்டில், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைப் பார்க்கப் போனான்.

அப்போது, ஆகாப் அதிகாரிகளிடம், “சீரியாவின் ராஜா கீலேயாத்திலுள்ள ராமோத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டான். அதைத் திரும்பப்பெற ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை? அது நமக்குச் சொந்தமாக வேண்டும்” என்றான். எனவே யோசபாத்திடம், “நீ என்னோடு சேர்ந்து ராமோத்துக்காகப் போரிட வருகிறாயா?” என்று கேட்டான்.

அதற்கு அவன், “சரி, உன்னோடு சேர்ந்துகொள்கிறேன். எனது படை வீரர்களும் குதிரைகளும் உன் படையோடு சேர்ந்துகொள்ளத் தயார். ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான்.

எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள்.

யோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான்.

அதற்கு ஆகாப், “மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் மூலம் கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெறலாம். அவரது பெயர் இம்லாவின் குமாரனான மிகாயா. எனக்கு எதிராகவே அவன் பேசுவதால் அவனை வெறுக்கிறேன். எப்போதும் எனக்கு விருப்பம் இல்லாததையே அவன் கூறுவான்” என்றான்.

யோசாபாத், “நீ அவ்வாறு சொல்லக்கூடாது!” என்றான்.

எனவே, ஆகாப் ஒரு அதிகாரியை அனுப்பி மிகாயாவை அழைத்து வரச்சொன்னான்.

10 அப்போது இரு ராஜாக்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர். 11 அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் குமாரன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான். 12 மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர்.

13 இது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான்.

14 ஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான்.

15 பிறகு அவன் ராஜாவிடம் வந்து நின்றான். ராஜாவும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான்.

அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான்.

16 ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான்.

17 அதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான்.

18 ஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான்.

19 ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர். 20 கர்த்தர், ‘உங்களில் யாரேனும் ராஜா ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. 21 இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’ 22 கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான்.

23 மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான்.

24 பிறகு சிதேக்கியா மிகாயாவிடம் வந்து முகத்தில் அடித்தான். அவன் “கர்த்தருடைய சக்தி என்னை விட்டுவிலகி எந்த வழியாய் உன்னிடம் வந்தது?” என்று கேட்டான்.

25 அதற்கு மிகாயா, “விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!” என்றான்.

26 மிகாயாவைக் கைது செய்யும்படி ஆகாப், அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகாப் ராஜா, “இவனைக் கைது செய்து நகர ஆளுநரான ஆமோனிடத்திலும் பிறகு இளவரசனான யோவாசிடமும் அழைத்துக் கொண்டு போங்கள். 27 நான் சமாதானத்தோடு வரும்வரை இவனைச் சிறையில் அவர்களிடம் அடைக்கச்சொல். அதுவரை அப்பமும், தண்ணீரும் கொடுங்கள்” என்றான்.

28 அதற்கு மிகாயா, “நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை” என்று சத்தமாகச் சொன்னான்.

ராமோத் கீலேயாத்தில் போர்

29 பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது. 30 ஆகாப் யோசபாத்திடம், “நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் ராஜா என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்” என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான்.

31 சீரியா ராஜாவுக்கு 32 இரதப்படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரவேல் ராஜாவைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டான். ராஜாவைக் கொன்றுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். 32 போரின்போது, அவர்கள் யோசபாத்தைக் கண்டு இஸ்ரவேலின் ராஜா என்று எண்ணித் தாக்கினர். அவன் சத்தமிட்டான். 33 ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்துகொல்லாமல் விட்டுவிட்டனர்.

34 ஆனால் ஒருவன் குறிவைக்காமல் ஒரு அம்பை எய்தான். எனினும், அது ஆகாப் மீதுபட்டு கவசம் மூடாத உடலில் நுழைந்தது. அவன் இரத ஓட்டியிடம், “ஒரு அம்பு என்னைத் தாக்கியுள்ளது! இரதத்தை களத்தைவிட்டு வெளியே கொண்டு செல்” என்றான்.

35 படைகள் தொடர்ந்து போரிட்டன. ராஜா தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே, 36 படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர்.

37 இவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர். 38 அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி குமாரத்திகள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது.

39 இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ஆகாப் செய்த அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவன் தன் அரண்மனையைத் தந்தத்தால் அலங்கரித்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் உருவாக்கிய நகரைப்பற்றியும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. 40 ஆகாப் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்கு அடுத்து அவன் குமாரன் அகசியா, ராஜா ஆனான்.

யூதாவின் ராஜாவாகிய யோசபாத்

41 இஸ்ரவேலின் ராஜாவாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் ராஜாவானான். இவன் ஆசாவின் குமாரன். 42 யோசபாத் ராஜாவாகும்போது அவனுக்கு 35 வயது. இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாய் அசுபாள். இவள் சில்கியின் குமாரத்தி. 43 யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர்.

44 யோசபாத் இஸ்ரவேல் ராஜாவோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான். 45 இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் யூதா ராஜாக்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

46 தன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள்.

47 அப்போது, ஏதோமில் ராஜா இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

48 இவன் கப்பல்களைச் செய்தான். பொன் வாங்க ஓப்பீருக்குச் செல்ல விரும்பினான். ஆனால் அவை போகமுடியாதபடி எசியோன் கேபேரிலே உடைந்து போயின. 49 இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை.

50 யோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது குமாரன் யோராம் ராஜா ஆனான்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா

51 ஆகாபின் ராஜாவாகிய அகசியா இஸ்ரவேலுக்கு சமாரியாவில் ராஜா ஆனான். அப்போது யூதாவில் யோசபாத் 17ஆம் ஆண்டில் ஆண்டுகொண்டிருந்தான். அகசியா இரண்டு ஆண்டுகள் ஆண்டான். 52 அகசியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். அவன் தந்தை ஆகாப் மற்றும் தாய் யேசபேலைப் போன்றும், நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் போன்றும் பாவம் செய்து வந்தான். இவர்கள் நாட்டு ஜனங்களையும் பாவத்திற்குட்படுத்தினர். 53 அகசியா பாகால் தெய்வத்தை வழிபட்டான். இதனால் கர்த்தருக்கு கோபம் வந்தது. அவனது தந்தையிடம் போலவே அவனிடமும் கோபம்கொண்டார்.

1 தெசலோனிக்கேயர் 5

கர்த்தரின் வருகைக்காகத் தயாராகுங்கள்

சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது.

ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும்.

தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார். 10 அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. 11 எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்.

இறுதி அறிவிப்புகளும், வாழ்த்துக்களும்

12 சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 13 அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள்.

ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். 14 சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். 15 ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.

16 எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். 17 பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். 18 தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.

19 பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். 20 தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். 21 ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.

23 சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள்.

25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 26 நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள் 27 அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்கு கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன். 28 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக!

தானியேல் 4

நேபுகாத்நேச்சாரின் மரம் பற்றிய கனவு

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உலகமெங்கிலும் வாழும் சகல தேசத்தாருக்கும், ஜாதியாருக்கும், மொழிக்காரர்களுக்கும், பின்வரும் கடிதத்தை அனுப்பினான்.

வாழ்த்துக்கள்:

மிக உன்னதமான தேவன் எனக்காகச் செய்த அற்புதமும் ஆச்சரியமும்கொண்ட செயல்களை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தேவன் வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
    தேவன் வல்லமைமிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
தேவனுடைய இராஜ்யம் என்றென்றும் தொடர்கிறது.
    தேவனுடைய ஆட்சி அனைத்துத் தலைமுறைகளுக்கும் தொடரும்.

நேபுகாத்நேச்சாராகிய நான் எனது அரண்மனையில் மகிழ்ச்சியுடனும், வெற்றியோடும் இருந்தேன். என்னை அச்சுறுத்தும் ஒரு கனவை நான் கண்டேன். நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனதில் படங்களையும், தரிசனங்களையும் பார்த்தேன். அவை என்னை மிகவும் அச்சுறுத்தின. எனவே என் கனவிற்குரிய பொருளைக் கூறும்படி நான் பாபிலோனிலுள்ள அனைத்து ஞானிகளையும் அழைத்துவருமாறு கட்டளையிட்டேன். சாஸ்திரிகளும், கல்தேயர்களும் வந்தபோது நான் அவர்களிடம் என் கனவைப்பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் பொருளைச் சொல்ல முடியவில்லை. இறுதியாக, தானியேல் என்னிடம் வந்தான், (நான் தானியேலுக்கு என் தேவனைப் பெருமைப்படுத்தும்படி பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டிருந்தேன். பரிசுத்த தெய்வங்களின் ஆவி அவனிடமிருந்தது.) நான் தானியேலிடம் எனது கனவைச் சொன்னேன்.

“பெல்தெஷாத்சார், நீ சாஸ்திரிகளிலேயே மிகவும் முக்கியமானவன். உன்னிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதை நான் அறிவேன். உன்னால் புரிந்துகொள்ள முடியாத கடுமையான இரகசியம் இல்லை என்பதை அறிவேன். நான் கண்ட கனவு இதுதான். என்னிடம் இதன் பொருள் என்னவென்று சொல். 10 நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது கண்ட தரிசனங்கள் இதுதான். என் முன்னால் பூமியின் மத்தியில் ஒரு மரம் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மரம் மிக உயரமாக இருந்தது. 11 அம்மரம் பெரிதாகவும் பலமுடையதாகவும் வளர்ந்தது. அம்மரத்தின் உச்சி வானத்தைத் தொட்டது. அதனை பூமியின் எந்த இடத்தில் இருந்தும் பார்க்கமுடியும். 12 அம்மரத்தின் இலைகள் மிக அழகானவை. அதில் ஏராளமான நல்ல பழங்கள் இருந்தன. அம்மரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான உணவு இருந்தது. அம்மரத்தின் அடியில் காட்டு மிருகங்கள் தங்கின. அதன் கிளைகளில் பறவைகள் வசித்தன. ஒவ்வொரு மிருகங்களும் அம்மரத்திலிருந்து சாப்பிட்டன.

13 “நான் படுக்கையில் படுத்திருந்தபோது நான் அவற்றைக் காட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நான், ஒரு பரிசுத்தமான தேவதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 14 அவன் உரத்தகுரலில்: மரத்தை வெட்டிப்போடுங்கள். அதன் கிளைகளை வெட்டிப் போடுங்கள். அதன் இலைகளை உதிர்த்துவிடுங்கள். அதன் பழங்களைச் சிதறடியுங்கள். அம்மரத்தின் அடியிலுள்ள மிருகங்கள் ஓடிப்போகும். அதன் கிளைகளில் உள்ள பறவைகள் பறந்துபோகும். 15 ஆனால் அதன் தண்டையும், வேர்களையும், மண்ணிலே இருக்கவிடுங்கள். அதைச் சுற்றி இரும்பாலும், வெண்கலத்தாலுமான விலங்கைப் போடுங்கள். அதின் தண்டும் வேர்களும் தம்மைச் சுற்றிலும் புல்லிருக்கின்ற வெளியில் இருக்கும். அது காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு மத்தியில் இருக்கும். அது பனியில் நனையும். 16 அவன் ஒரு மனிதனைப்போல சிந்திக்கமாட்டான். அவன் ஒரு மிருகத்தின் மனதைப் பெறுவான். அவன் இவ்வாறு இருக்கையில் ஏழு பருவங்களும் கடந்துபோகும் என்று கூறினான்.

17 “பரிசுத்த தேவதூதன் இத்தண்டனையை அறிவித்தது ஏன்? அதனால் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் மனிதர்களின் இராஜ்யங்களை மிக உன்னதமான தேவன் ஆளுகிறார் என்று அறிந்துகெள்வார்கள். தேவன் அந்த இராஜ்யங்களை தாம் விரும்புகிற எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கிறார். தேவன் அந்த இராஜ்யங்களை ஆள பணிவானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

18 “நேபுகாத்நேச்சாரகிய நான் கண்ட கனவு இதுதான். இப்பொழுது பெல்தெஷாத்சாரே (தானியேல்), இதன் பொருள் என்னவென்று சொல். எனக்காக என் இராஜ்யத்தில் உள்ள எந்த ஞானிக்கும் இதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பெல்தெஷாத்சாரே, நீ இதற்கு விளக்கமளிக்கமுடியும். ஏனென்றால் பரிசுத்த தேவனுடைய ஆவி உன்னில் இருக்கிறது.”

19 தானியேல் (பெல்தெஷாத்சார்) ஒருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, ராஜா அவனிடம்: “பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப் பண்ண வேண்டியதில்லை” என்றான்.

பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) ராஜாவுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். 20-21 நீர் உமது கனவில் ஒரு மரத்தைப் பார்த்தீர். அம்மரம் பெரிதாகவும் பலமானதாகவும் வளர்ந்தது. அதின் உச்சி வானத்தைத் தொட்டது. அது பூமியின் எல்லா இடங்களிலிருந்தும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அதன் இலைகள் அழகாய் இருந்தன. அதில் ஏராளமாகப் பழங்கள் இருந்தன. அப்பழங்கள் ஏராளமானவர்களுக்கு உணவாகியது. அது காட்டுமிருங்களுக்கு வீடாகியது. அதன் கிளைகள் பறவைகளுக்குக் கூடாகியது. நீர் பார்த்த மரம் இதுதான். 22 ராஜாவே, நீரே அந்த மரம். நீர் சிறப்பும், வல்லமையும் பெற்றிருக்கிறீர். நீர் வானத்தைத் தொடும் மரத்தைப்போன்று உயர்ந்து உமது வல்லமை பூமியின் அனைத்துப் பாகங்களையும் போய் அடைந்திருக்கிறது.

23 “ராஜாவே, நீர் பரலோகத்திலிருந்து ஒரு பரிசுத்தமான தேவதூதன் வருவதைப் பார்த்தீர். அவன், இம்மரத்தை வெட்டு, இதனை அழித்துப்போடு, அதற்கு இரும்பாலும் வெண்கலத்தாலுமான விலங்கைப் போடு. அதன் தண்டையும் வேர்களையும் பூமியிலேயே விட்டுவிடு. அதனைப் புல்வெளியில் விட்டுவிடு. அது பனியில் நனையும். அவன் காட்டு மிருகத்தைப் போன்று வாழ்வான். ஏழு பருவங்கள் (காலங்கள்) அவன் இவ்வாறு இருக்கும்போதே கடந்துபோகும்.

24 “கனவின் பொருள் இதுதான், ராஜாவே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார். 25 ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர்.

26 “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். 27 எனவே, ராஜாவே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்.”

28 அவை யாவும் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன. 29-30 கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான்.

31 இந்த வார்த்தைகள் ராஜாவின் வாயில் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அச்சத்தம் சொன்னது: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, இவையெல்லாம் உனக்கு நிகழும். உன்னிடமிருந்து ராஜா என்னும் அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும். 32 நீ ஜனங்களிடமிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவாய். நீ காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ பசுவைப்போன்று புல்லைத் தின்பாய். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்), நீ உனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும் முன் கடந்துபோகும். பிறகு உன்னதமான தேவன் மனிதரின் இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதை நீ கற்பாய். அந்த உன்னதமான தேவன் அவர் விரும்புகிறவர்களுக்கு இராஜ்யங்களைக் கொடுக்கிறார்.”

33 அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது.

34 பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன்.

தேவன் என்றென்றும் ஆளுகிறார்.
    அவரது இராஜ்யம் எல்லா தலைமுறைகளுக்கும் தொடருகிறது.
35 பூமியிலுள்ள ஜனங்கள் உண்மையிலேயே முக்கியமானவர்களல்ல.
    பரலோகத்தின் வல்லமைகளோடும்,
    பூமியின் ஜனங்களோடும் தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறார்.
எவராலும் அவரது அதிகாரமுள்ள கையை நிறுத்தமுடியாது.
    எவராலும் அவரது செயல்களைக் கேள்விக் கேட்க்கமுடியாது.

36 எனவே, அந்த நேரத்தில், தேவன் எனது சரியான புத்தியை எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு சிறந்த மதிப்பையும், ராஜா என்ற வல்லமையையும் திரும்பக் கொடுத்தார். எனது ஆலோசகர்களும், பிரபுக்களும் மீண்டும் எனது ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினார்கள். நான் மீண்டும் ராஜாவானேன். நான் முன்பைவிட இன்னும் சிறந்தவனாகவும் மிகுந்த வல்லமையுள்ளவனாகவும் ஆனேன். 37 இப்பொழுது, நேபுகாத்நேச்சாரகிய நான் பரலோக அரசருக்கு புகழ்ச்சி, கனம், மகிமை ஆகியவற்றைக் கொடுக்கிறேன். அவர் செய்கிறவை எல்லாம் சரியானது. அவர் எப்பொழுதும் நேர்மையானவர். அவரால் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்தமுடியும்.

சங்கீதம் 108-109

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

108 தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
    எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
    சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம்.
    பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
    உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்!
    உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும்.
தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும்.
    எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.

தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி,
    “நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்!
என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன்.
    அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன்.
    அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்
கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும்.
    எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும்.
    யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல்
மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
    ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
    நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.”

10-11 யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்?
    யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்?
தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும்.
    ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர்.
    நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை!
12 தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்!
    ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!
13 தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும்.
    தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார்.

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று.

109 தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும்.
தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள்.
    உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
    எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள்.
    எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன்.
நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன்.
    ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள்.
நான் அவர்களை நேசித்தேன்.
    ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.

அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும்.
    அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.
என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும்.
    என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும்.
என் பகைவன் உடனே மடியட்டும்.
    அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.
என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும்.
10 அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.
11 என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும்.
    அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும்.
12 என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன்.
    ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன்.
13 என் பகைவனை முற்றிலும் அழியும்.
    அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும்.
14 என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
    அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன்.
    ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன்.

16 ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை.
    அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை.
    அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.
17 பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான்.
    எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும்.
    அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை.
18 சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும்.
    சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும்.
    சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும்.
19 சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும்.
    சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.

20 என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன்.
    என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன்.
21 கர்த்தாவே, நீரே என் ஆண்டவர்.
எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும்.
    உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.
22 நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன்.
    நான் உண்மையிலேயே கவலையடைகிறேன்.
    என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
23 என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன்.
    சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன்.
24 நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன.
    நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன்.
25 தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
    அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள்.

26 என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்!
    உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!
27 நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள்.
    உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.
28 அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும்.
    அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும்.
    அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன்.
29 என் பகைவர்களை வெட்கப்படுத்தும்!
    அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும்.

30 நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன்.
    பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
31 ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார்.
    அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center