M’Cheyne Bible Reading Plan
யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்
19 ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் ராஜா அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். 2 அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “ராஜா தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.
3 ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். 4 ராஜா முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது குமாரன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
5 ராஜாவின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் ராஜாவைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் குமாரர்கள், குமாரத்திகள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். 6 உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! 7 இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.
8 அப்போது ராஜா நகரவாயிலுக்குச் சென்றான். ராஜா வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் ராஜாவைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.
தாவீது மீண்டும் ராஜாவாகுதல்
9 எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது ராஜா நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார். 10 நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் ராஜாவாக்க வேண்டும்” என்றார்கள்.
11 தாவீது ராஜா ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் ராஜாவை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 12 நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் ராஜாவை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள். 13 அமாசாவிடம், ‘நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியினர். யோவாபின் இடத்தில் உங்களைப் படை தலைவன் ஆக்காவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
14 தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் ராஜாவுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.
15 பின்பு தாவீது ராஜா யோர்தான் நதிக்கு வந்தான். யூதா ஜனங்கள் ராஜாவைக் காண கில்காலுக்கு வந்தனர். ராஜாவை யோர்தான் நதியைத் தாண்டி அழைத்துச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்தனர்.
சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்
16 கேராவின் குமாரனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது ராஜாவைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான். 17 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆட்களும் சீமேயியோடு வந்தனர். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீபா என்னும் பணியாளும் வந்தான். சீபா தன் 15 குமாரர்களையும் 20 பணியாட்களையும் தன்னோடு அழைத்து வந்தான். தாவீது ராஜாவைச் சந்திப்பதற்கு இவர்கள் எல்லோரும் யோர்தான் நதிக்கு விரைந்தனர்.
18 ராஜாவின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். ராஜா விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். ராஜா நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் குமாரனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். ராஜாவுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான். 19 சீமேயி ராஜாவிடம், “என் ஆண்டவனே, நான் செய்த தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனது ராஜாவாகிய ஆண்டவனே, நீர் எருசலேமை விட்டுப் போனபோது நான் செய்த தீய காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள். 20 நான் பாவம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். யோசேப்பின் குடும்பத்திலிருந்து வந்து உங்களைச் சந்திக்கிற முதல் மனிதன் நான், எனது ஆண்டவனாகிய ராஜாவே” என்றான்.
21 ஆனால் செருயாவின் குமாரனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.
22 தாவீது, “செருயாவின் குமாரர்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் ராஜா என்பது இன்று எனக்குத் தெரியும்” என்றான். 23 பிறகு ராஜா சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். ராஜா சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான்.[a]
மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான்
24 தாவீது ராஜாவைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் ராஜா எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை. 25 மேவிபோசேத் எருசலேமிலிருந்து ராஜாவைச் சந்திக்க வந்தான். ராஜா மேவிபோசேத்தை நோக்கி, “மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?” என்று கேட்டான்.
26 மேவிபோசேத் பதிலாக, “எனது ராஜாவாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி ராஜாவோடு போவேன்’ என்றேன். 27 ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது ராஜாவாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள். 28 எனது பாட்டனாரின் குடும்பத்தார் எல்லோரையும் நீங்கள் கொன்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் மேசையில் உண்கிறவர்களோடு என்னையும் வைத்தீர்கள். எனவே எதைக் குறித்தும் ராஜாவோடு முறையிட எனக்கு உரிமையில்லை” என்றான்.
29 ராஜா மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.
30 மேவிபோசேத் ராஜாவிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது ராஜாவாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.
பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான்
31 கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது ராஜாவோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து ராஜாவை அழைத்துச் செல்வதற்காக அவன் ராஜாவோடு போனான். 32 பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது. 33 தாவீது பர்சிலாவிடம், “என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்” என்றான்.
34 ஆனால் பர்சிலா ராஜாவிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா? 35 எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்? 36 உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன். 37 ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது ராஜாவாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்” என்றான்.
38 ராஜா பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.
தாவீது வீட்டிற்குப் போகிறான்
39 ராஜா பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். ராஜாவும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.
40 ராஜா யோர்தான் நதியைத் தாண்டி, கில்காலுக்குப் போனான். கிம்காம் அவனோடு சென்றான். யூதா ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலில் பாதிப் பகுதியினரும் தாவீதை நதியைத் தாண்டி அழைத்துச் சென்றனர்.
யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர்
41 இஸ்ரவேலர் எல்லோரும் ராஜாவிடம் வந்தனர். அவர்கள் ராஜாவைப் பார்த்து, “ஏன் எங்கள் சகோதரராகிய யூதா ஜனங்கள் உங்களைத் திருடிச் சென்று, இப்போது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்களோடு யோர்தான் ஆற்றைத் தாண்டி அழைத்து வந்திருக்கின்றனர்!” என்றார்கள்.
42 யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் ராஜா எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் ராஜாவின் செலவில் சாப்பிடவில்லை. ராஜா எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.
43 இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள்.
ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.
பவுலின் சிறப்பான ஆசீர்வாதம்
12 நான் தொடர்ந்து என்னைப் பாராட்டிக்கொள்வது எனக்கு தகுதியாயிராது. எனினும் நான் இப்போது கர்த்தரின் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறேன். 2 கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். 3-4 அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான். 5 நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன்.
6 நான் என்னையே பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நான் முட்டாளாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் உண்மையைச் சொல்லிவிடுவேன். அதோடு நான் சொல்வதையும் செய்வதையும் காணும் மக்கள் என்னைப் பற்றி மிகுதியாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் என்னைப் பற்றி நானே பெருமை பேசிக்கொள்ளமாட்டேன்.
7 எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். 8 அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். 9 ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. 10 எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.
கொரிந்து கிறிஸ்தவர்கள் மேல் பவுலின் அன்பு
11 நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன். 12 நான் உங்களோடு இருந்த போது, நான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிக்கும் வகையில் பலவற்றைச் செய்தேன். நான் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பொறுமையோடு செய்தேன். 13 எனவே ஏனைய சபைகளைப் போன்று நீங்களும் எல்லாவற்றையும் பெற்றீர்கள். உங்களுக்கு எதிலும் குறைவில்லை. ஆனால் ஒரு வேறுபாடு, நான் எவ்வகையிலும் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இது தான் குறை. இதற்காக என்னை மன்னியுங்கள்.
14 மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும். 15 எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா?
16 நான் உங்களுக்குப் பாரமாக இல்லை என்பது தெளிவாயிற்று. ஆனால் என்னைத் தந்திரமானவன் என்றும், பொய் சொல்லி உங்களை வசப்படுத்திவிட்டேன் என்றும் எண்ணுகிறீர்கள். 17 நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். 18 உங்களிடம் செல்லுமாறு நான் தீத்துவை அனுப்பினேன். எங்கள் சகோதரனையும் அவனோடு சேர்த்து அனுப்பினேன். தீத்து உங்களை ஏமாற்றவில்லை. அல்லவா? தீத்துவும் நானும் ஒரே ஆவியால் வழி நடத்தப்பட்டு ஒரேவிதமான வாழ்வை நடத்தினோம்.
19 காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான். 20 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். 21 மீண்டும் நான் உங்களிடம் வரும்போது தேவன் என்னை உங்கள் முன் தாழ்த்தி விடுவாரோ என்று அஞ்சுகிறேன். பலர் தாங்கள் செய்த அசுத்தம், வேசித்தனம், பாலியல் குற்றங்கள் போன்ற பாவங்களைத் தொடக்கத்தில் செய்து, பிறகு மாறாமலும் அதற்காக மனம் வருந்தாமலும் இருப்பதைப் பற்றியும் நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.
தீருவைப்பற்றிய துக்கச் செய்தி
26 பதினோராம் ஆண்டின் முதல் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எருசலேமைப்பற்றி தீரு கெட்டவற்றைச் சொன்னது: ‘ஆ, ஆ! ஜனங்களைப் பாதுகாக்கிற நகரவாசல் அழிக்கப்பட்டது! நகரவாசல் எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நகரம் (எருசலேம்) அழிக்கப்படுகிறது எனவே அதிலிருந்து எனக்கு ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும்!’”
3 ஆகையால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு! நான் உனக்கு விரோதமானவன். உனக்கு எதிராகச் சண்டையிட பல நாடுகளை அழைத்துவருவேன். அவர்கள் மீண்டும், மீண்டும் கடற்கரை அலைகளைப்போன்று வருவார்கள்.”
4 தேவன் சொன்னார்: “அந்தப் பகைவீரர்கள் தீருவின் சுவர்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடித்துத் தள்ளுவார்கள், நானும் அந்நாட்டின் மேல் மண்ணைத் துடைப்பேன். தீருவை வெறும் பாறையைப்போன்று ஆக்குவேன். 5 தீருவானது மீன் பிடிப்பதற்கான வலைகள் விரித்து வைப்பதற்குரிய இடமாக ஆகும். நான் இதைச் சொன்னேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு, போரில் வீரர்கள் எடுக்கத்தக்கதான விலைமதிப்புள்ள பொருளாகும். 6 அவளது குமாரத்திகள் (சிறு நகரங்கள்), முக்கிய பிராதான நிலத்தில் போரில் கொல்லப்படுவார்கள். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்று அறிவார்கள்.”
தீருவை நேபுகாத்நேச்சார் தாக்குவான்
7 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தீருவுக்கு விரோதமாக வடக்கிலிருந்து பகைவரை வரவழைப்பேன். அப்பகைவன், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்! அவன் பெரும்படையைக் கொண்டுவருவான். அதில் குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர்கள், மற்றும் ஏராளமான வீரர்களும் இருப்பார்கள்! அவ்வீரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள். 8 நேபுகாத்நேச்சார் உனது முக்கியமான நிலத்திலுள்ள குமாரத்திகளை (சிறு நகரங்களை) கொல்வான். உன் பட்டணத்தைத் தாக்க அவன் கோபுரங்களைக் கட்டுவான். உன் நகரைச் சுற்றி மண் பாதை போடுவான். அவன் மதில் சுவர்வரை போகும் வழிகளை அமைப்பான். 9 உனது சுவர்களை இடிக்க பெருந்தடிகளைக் கொண்டுவருவான். அவன் கடப்பாரைகளைப் பயன்படுத்தி உனது கோபுரங்களை இடிப்பான். 10 அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் ராஜா நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும். 11 பாபிலோன் ராஜா நகரவாசல் வழியாக நகரத்திற்குள் சவாரி செய்து வருவான். அவனது குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளை எல்லாம் மிதிப்பான். அவன் உன் ஜனங்களை வாள்களால் கொல்லுவான். உன் நகரில் உள்ள பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 உனது செல்வங்களை நேபுகாத்நேச்சாரின் ஆட்கள் எடுத்துக்கொள்வார்கள். நீ விற்க விரும்புகிற பொருட்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன் சுவர்களை உடைத்தெறிவார்கள், கல்லாலும் மரத்தாலுமான இன்பமான வீடுகளை அழித்துக் குப்பையைப்போன்று கடலில் எறிவார்கள். 13 எனவே, நான் உனது மகிழ்ச்சியான பாடல் ஒலியை நிறுத்துவேன். ஜனங்கள் உனது சுரமண்டல ஒலியை இனிக் கேட்கமாட்டார்கள். 14 நான் உன்னை வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலையைப் பரப்புவதற்குரிய இடமாவாய்! நீ மீண்டும் கட்டப்படமாட்டாய். ஏனென்றால், கர்த்தராகிய நான் பேசினேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
பிற நாடுகள் தீருக்காக அழும்
15 எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும். 16 பிறகு அந்நாடுகளில் உள்ள தலைவர்கள் தம் சிங்காசனத்தை விட்டு இறங்கி தம் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தம் சிறப்பிற்குரிய ஆடைகளை அகற்றிவிடுவார்கள். அவர்கள் தம் அழகான ஆடைகளை அகற்றுவார்கள். பிறகு அவர்கள் தம் நடுக்கமாகிய ஆடையை (பயம்) அணிந்துகொள்வார்கள். அவர்கள் தரையில் அமர்ந்து அச்சத்தால் நடுங்குவார்கள். நீ இவ்வளவு விரைவாக அழிக்கப்பட்டதை எண்ணி அவர்கள் பிரமிப்பார்கள். 17 அவர்கள் உன்னைப்பற்றி இச்சோகப் பாடலைப் பாடுவார்கள்:
“‘ஓ தீருவே, நீ புகழ்பெற்ற நகரமாக இருந்தாய்.
ஜனங்கள் உன்னிடம் வாழக் கடல் கடந்து வந்தனர்.
நீ புகழோடு இருந்தாய்.
இப்போது நீ போய்விட்டாய்!
கடலில் நீ பலத்தோடு இருந்தாய்.
உன்னில் வாழ்பவர்களும் அப்படியே இருந்தார்கள்.
முக்கிய நிலத்தில் வாழ்பவர்களையெல்லாம் பயமுறுத்தினாய்.
18 இப்பொழுது நீ விழும் நாளில்
தீவுகளில் உள்ள நாடுகள் அச்சத்தால் நடுங்குகின்றன.
நீ பல குடியிருப்புக் கூட்டங்களைக் கடலோரமாகத் தொடங்கினாய்.
இப்பொழுது, நீ வீழ்ச்சியடையும் அன்று கடலோர நாடுகள் அச்சத்தால் நடுங்குவார்கள்.’”
19 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “தீரு, நான் உன்னை அழிப்பேன். நீ ஒரு பழைய வெறுமையான நகரமாவாய். அங்கு எவரும் வாழமாட்டார்கள். கடல் பொங்கி உன்மேல் பாயும்படி செய்வேன். பெருங்கடல் உன்னை மூடிவிடும். 20 நான் உன்னை மரித்த மனிதர்கள் இருக்கின்ற ஆழமான பாதாளத்திற்கு அனுப்புவேன். நீ நீண்ட காலத்திற்கு முன்னால் மரித்தவர்களோடு சேர்வாய். நீ குடியேறாமல் இருக்கும்படி தொடக்க காலம் முதல் பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடு நான் உன்னைத் தங்கச் செய்வேன். பிறகு உன்னில் எவரும் வாழமாட்டார்கள். உயிர்கள் வாழும் இடத்தில் நீ இருக்கமாட்டாய்! 21 பிற ஜனங்கள் உனக்கு ஏற்பட்டதைப் பார்த்து அஞ்சுவார்கள். நீ முடிந்துபோவாய். ஜனங்கள் உன்னைத் தேடுவார்கள். அவர்கள் உன்னை மீண்டும் காணமாட்டார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் சொல்வது இதுதான்.
ஆசாபின் ஒரு மஸ்கீல்.
74 தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா?
உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
2 பல்லாண்டுகளுக்கு முன் நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனங்களை நினைவுகூரும்.
நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள்.
நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
3 தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும்.
பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
4 ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள்.
போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
5 பகைப்படை வீரர்கள்
கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
6 தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி,
உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
7 அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள்.
அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது.
அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
8 பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான்.
தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
9 எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை.
எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
10 தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்?
உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
11 தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்?
நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
12 தேவனே, நீண்டகாலம் நீரே எங்கள் ராஜாவாக இருந்தீர்.
இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
13 தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி
செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
14 கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்!
லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர்.
பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
15 நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர்.
நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
16 தேவனே, நீர் பகலை ஆளுகிறீர்.
நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
17 பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர்.
நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
18 தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும்.
அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
19 அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்!
என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
20 நமது உடன்படிக்கையை நினைவுகூரும்!
இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
21 தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள்.
இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
22 தேவனே, எழுந்து போரிடும்!
அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
23 உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும்.
மீண்டும், மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.
2008 by World Bible Translation Center