M’Cheyne Bible Reading Plan
இஸ்ரவேலை ஓசெயா ஆளத்தொடங்கியது
17 யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் குமாரனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் ராஜாவானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அரசாண்டான். 2 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட காரியங்களையே ஓசெயா செய்துவந்தான். ஆனால் இவன் இதற்கு முன் இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களைப் போன்று அவ்வளவு கெட்டவனாக இல்லை.
3 அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் என்பவன் இவனுக்கு எதிராகப் போர்செய்ய வந்தான். ஓசெயா சல்மனாசாரின் சேவகன் ஆகி அவனுக்கு வரி செலுத்தி வந்தான்.
4 ஆனால், பிறகு ஓசெயா தனக்கு எதிராகச் சதி செய்வதை அசீரியா ராஜா அறிந்துகொண்டான். ஓசெயா எகிப்து ராஜாவுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தான். எகிப்து ராஜாவின் பெயர் சோ ஆகும். அந்த ஆண்டில், முன்னைய ஆண்டுகளை போன்று ஓசெயா சல்மனாசாருக்கு வரி செலுத்தவில்லை. அதனால் சல்மனாசார் ஓசெயாவைப் பிடித்து சிறையில்போட்டான்.
5 பிறகு அசீரிய ராஜா இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்தான். அவன் சமாரியாவிற்கு வந்தான். அவன் அதனை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டான். 6 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரிய ராஜா சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறை பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். அவன் அவர்களை கோசான் ஆற்று ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் நகரங்களிலும் குடிவைத்தான்.
7 இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுக்கு இவ்வாறு நடந்தது. கர்த்தர் தாமே இஸ்ரவேலர்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்! ஆனால் அவர்கள் வேறு தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். 8 அவர்களுக்கு முன்பு (அந்நிலப்பகுதியில்) அங்கிருந்து கர்த்தர் துரத்தியிருந்த நாட்டினரின் பழக்கங்களை அவர்கள் பின்பற்றினார்கள். அவர்களும் தங்கள் ராஜாக்கள் செய்து கொண்டிருந்தவற்றையே (தீமை) செய்தனர். 9 இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின.
இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள். 10 இவர்கள் ஞாபகக் கற்களையும் அசெரியா தூண்களையும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் ஒவ்வொரு பச்சைமரத்தடிகளிலும் உருவாக்கினார்கள். 11 இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது. 12 கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.
13 இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் மூலமும் ஞானதிருஷ்டிக்காரர்கள் மூலமும் கர்த்தர் எச்சரித்து வந்தார். கர்த்தர், “நீங்கள் செய்யும் கெட்ட செயல்களில் இருந்து திரும்புங்கள். எனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த சட்டங்களைப் பின்பற்றுங்கள். இச்சட்டங்களை நான் உங்களுக்கு எனது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்து வந்தேன்” என்றார்.
14 ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை. 15 ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது.
16 ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற்கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர். 17 நெருப்பில் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள். 18 எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை.
யூத ஜனங்களும் குற்றவாளியானது
19 யூத ஜனங்களும் கூட தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே வாழ்ந்தனர்.
20 இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் அனைவரையும் கர்த்தர் விலக்கினார். அவர்களுக்கு நிறைய துன்பங்களைக் கொடுத்தார். அவர்களது எதிரிகளால் அவர்களை அழியவிட்டார். இறுதியில், தமது பார்வையில் இருந்து தூர விலக்கினார். 21 கர்த்தர் இஸ்ரவேலை தாவீதின் (வீட்டைவிட்டுப்) குடும்பத்தை விட்டுப் பிரித்தார், நேபாத்தின் குமாரனான யெரொபெயாமை இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கினர். அப்போது அவன் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு விலகவும் பெரும்பாவங்கள் செய்யவும் வைத்துவிட்டான். 22 எனவே இஸ்ரவேலர் யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி 23 தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.
சமாரியர்களின் தொடக்கம்
24 அசீரியாவின் ராஜா இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து வெளியேற்றினான். பிறகு அவன் பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத், செப்பர்வாயிமிலும் ஆகிய நாடுகளிலிருந்து ஜனங்களை அங்கே குடியேற்றினான். அவர்கள் சமாரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர். 25 அவர்கள் சமாரியாவில் வாழத்தொடங்கியபோது, கர்த்தரை உயர்வாக மதிக்கவில்லை. எனவே, கர்த்தர் சிங்கங்களை அனுப்பி அவர்களைத் தாக்கினார். அவர்களில் சிலரை அச்சிங்கங்கள் கொன்றுபோட்டன. 26 சிலர் அசீரியாவின் ராஜாவிடம், “நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது” என்றார்கள்.
27 அதற்கு அசீரியாவின் ராஜா, “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான்.
28 எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.
29 ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர். 30 பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும், 31 ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர்.
32 அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர். 33 அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர்.
34 இன்றும் அவர்கள் முன்பு போலவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை கனப்படுத்துவதில்லை. அவர்கள் இஸ்ரவேலர்களின் விதிகளுக்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபுவின் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டத்திற்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. 35 இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கைச் செய்து கொண்டார். அவர் அவர்களிடம், “நீங்கள் அந்நிய தெய்வங்களை மதிக்கக் கூடாது. அதோடு அவற்றைத் தொழுதுகொள்ளவோ, அவற்றுக்கு சேவைசெய்யவோ பலிகள் செலுத்தவோ கூடாது, 36 ஆனால் நீங்கள் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். தேவனாகிய கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து மீட்டார். உங்களைக் காப்பாற்ற கர்த்தர் தனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தினார். நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்குப் பலிகள் தரவேண்டும். 37 நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது. 38 நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது. 39 உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் மதிக்க வேண்டும்! பிறகு அவர் உங்கள் பகைவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்” என்றார்.
40 ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர். 41 எனவே, இப்போது வேறு நாட்டினர் கர்த்தரை மதிப்பதோடு தங்கள் தெய்வங்களையும் சேவித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இதனை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தொடர்ந்து இன்றுவரையிலும் கூட செய்து வருகின்றனர்.
வாழ்வதற்கேற்ற சரியான வழி
3 கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், 2 யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு.
3 கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம். 4 ஆனால் பிறகு, இரட்சகராகிய தேவனுடைய கிருபையும், அன்பும் வெளிப்படுத்தப்பட்டன. 5 தேவனுடன் சரியான வகையில் இருக்கும்பொருட்டு நாம் செய்த எந்த நல்ல செயல்களாலும் இரட்சிக்கப்படவில்லை. அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நம்மைப் புதிய மனிதர்களாக்கும் சுத்திகரிப்பின் மூலமும், பரிசுத்த ஆவியின் புதுப்பிக்கும் வல்லமை மூலமும், அவர் இரட்சித்தார். 6 அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தப் பரிசுத்த ஆவியை நம் மீது முழுமையாகப் பொழிந்தார். 7 தேவனது கிருபையால் நாம் அவரோடு நீதிமான்களானோம். தேவன் நமக்கு ஆவியைக் கொடுத்தார். அதனால் நாம் நித்திய வாழ்வைப் பெறமுடியும். அதுவே நாம் நம்பிக்கொண்டிருப்பதும் ஆகும். 8 இந்தப் போதனை உண்மையானது.
மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை.
9 முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை. 10 எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு. 11 ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது.
நினைவில் வைக்கவேண்டியவை
12 நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன். 13 வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய். 14 நன்மை செய்வதற்குரியதாகத் தம் வாழ்வைப் பயன்படுத்தும்படி நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையானவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். பிறகு அவர்களின் வாழ்வு பயனற்றதாக இருக்காது.
15 என்னுடன் இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்து கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நீயும் வாழ்த்து கூறு.
உங்கள் அனைவரோடும் தேவனுடைய கிருபை இருப்பதாக.
இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது
10 இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன்.
ஆனால் இஸ்ரவேல் மேலும், மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு மேலும், மேலும் வளம் பெற்றது.
ஆகவே அவன் மேலும், மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.
2 இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார்.
அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார்.
இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள்
3 இப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு ராஜா இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய ராஜா நம்மை ஒன்றும் செய்யமுடியாது!”
4 அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள்.
5 சமாரிய ஜனங்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை ஆராதிக்கிறார்கள். அந்த ஜனங்கள் உண்மையில் அழுவார்கள். அந்த ஆசாரியர்கள் உண்மையில் அழுவார்கள். ஏனென்றால் அவர்களது அழகான விக்கிரகம் போய்விட்டது. அது தூக்கிச் செல்லப்பட்டது. 6 அசீரியாவின் பேரரசனுக்கு அன்பளிப்பாக அவ்விக்கிரகம் கொண்டுப்போகப்பட்டது. அவன் எப்பிராயீமின் அவமானகரமான விக்கிரகத்தை வைத்துக்கொள்வான். இஸ்ரவேல் அதன் விக்கிரகத்தினிமித்தம் அவமானம் அடையும். 7 சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும்.
8 இஸ்ரவேல் பாவம் செய்தது. பல உயர் மேடைகளைக் கட்டியது. ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும். அவர்கள் பலிபீடங்களில் முட்செடிகளும், களைகளும் வளரும். பிறகு அவர்கள் மலைகளிடம், “எங்களை மூடுங்கள்!” என்றும் குன்றுகளிடம் “எங்கள் மேல் விழுங்கள்” என்றும் கூறுவார்கள்.
இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும்
9 இஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும். 10 நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள்.
11 எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான்.
12 நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார்.
13 ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய். 14 எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள். 15 உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் ராஜா முழுமையாக அழிக்கப்படுவான்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
129 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
2 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.
3 என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள்.
எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
4 ஆனால் நல்லவராகிய கர்த்தர் கயிறுகளை அறுத்துக்
கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.
5 சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள்.
6 அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள்.
வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.
7 ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது.
ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை.
8 அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள்.
ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
கர்த்தர் நம்மை மீண்டும், மீண்டும் காப்பாற்றுகிறார்.
8 கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
2 நான் அமைதியாக இருக்கிறேன்.
என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.
2008 by World Bible Translation Center