M’Cheyne Bible Reading Plan
யெகூவை அபிஷேகம் செய்யும்படி எலிசா இளம் தீர்க்கதரிசிக்கு சொல்கிறான்
9 தீர்க்கதரிசிகளின் குழுவிலிருந்து தீர்க்கதரிசியான எலிசா ஒருவனை அழைத்தான். அவனிடம், “புறப்படத் தயாராகு. இச்சிறிய குப்பியில் உள்ள எண்ணெயை உன் கையில் எடுத்துக்கொண்டு ராமோத் கீலேயாத்துக்குப் போ! 2 நீ அங்கு போனதும், நிம்சியின் குமாரனான யோசபாத்தின் குமாரன் யெகூவைக் கண்டுபிடி. அவன் வீட்டிற்குள் போ. அவனது சகோதரர்களிடமிருந்து அழைத்து உள் அறைக்குப் போ. 3 இந்த சிறிய எண்ணெய்க் குப்பியை எடுத்துக்கொண்டு எண்ணெயை அவன் தலையில் ஊற்றி, ‘இது கர்த்தர் சொன்னது: உன்னை இஸ்ரவேலுக்கு ராஜா ஆக்குகிறேன்’ என்று சொல். பிறகு கதவைத் திறந்துக்கொண்டு ஓடிவந்துவிடு. அங்கே தங்காதே” என்றான்.
4 எனவே இந்த இளம் தீர்க்கதரிசி, ராமோத் கிலேயாத்திற்குச் சென்றான். 5 அவன் அங்கு நுழைந்ததும், படைத்தளபதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். இவன் அவனிடம், “தலைவரே, உங்களுக்காக என்னிடம் ஒரு செய்தி உண்டு” என்றான்.
அதற்கு யெகூ, “இங்கு இருக்கிற அனைவரிலும் உமது செய்தி யாருக்குரியது?” என்று கேட்டான்.
உடனே இளம் தீர்க்கதரிசி, “இந்த செய்தி உங்களுக்குரியதுதான் தளபதியே” என்றான்.
6 யெகூ எழுந்து வீட்டிற்குள் சென்றான். இளம் தீர்க்கதரிசி அவனது தலையில் எண்ணெயை ஊற்றி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னதைக் கூறுகிறேன்: ‘நான் உன்னை இஸ்ரவேலில் கர்த்தருடைய ஜனங்களின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன். 7 நீ உனது ராஜாவாகிய ஆகாபின் குடும்பத்தை அழிக்கவேண்டும். இதன் மூலம், எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழியையும் கர்த்தருடைய மரித்துப்போன சகல தொண்டர்களின் இரத்தப்பழியையும் யேசபேலின் கையிலே வாங்குவேன். 8 ஆகையால், ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரும் மரிப்பார்கள். ஆகாப் குடும்பத்திலுள்ள எந்த ஆண் குழந்தையையும் உயிரோடு விடமாட்டேன். அந்த ஆண் அடிமையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரவேலில் சுதந்திரமுள்ள ஆளாக இருந்தாலும் சரியே. 9 நான் ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் குடும்பத்தைப் போலவும் அகியாவின் குமாரனான பாஷாவின் குடும்பத்தைப் போலவும் அழிப்பேன். 10 நாய்கள், யெஸ்ரயேல் பகுதியில் யேசபேலை தின்னும். அவள் அடக்கம் செய்யப்படமாட்டாள்’” என்றான்.
பிறகு அந்த இளம் தீர்க்கதரிசி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
யெகூவை ராஜாவாக வேலைக்காரர்கள் அறிவிக்கிறார்கள்
11 ராஜாவின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) இருந்த இடத்திற்கு யெகூ போனான். அந்த அதிகாரிகளில் ஒருவன், “எல்லாம் சரியாக உள்ளதா? ஏன் அந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தான்” என்று கேட்டான்.
யெகூ வேலைக்காரர்களிடம், “உங்களுக்கு அவனையும் அவனது பைத்தியகாரத்தனச் செயலையும் தெரியுமே” என்றான்.
12 அதற்கு அதிகாரிகள், “இல்லை! உண்மையைச் சொல். அவன் என்ன சொன்னான்?” என்று கேட்க, யெகூ இளந்தீர்க்கதரிசி சொன்னதைக் கூறினான்: “அவன் என்னிடம், ‘கர்த்தர் சொன்னதாவது: நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்’ என்றான்” என்று சொன்னான்.
13 உடனே ஒவ்வொரு அதிகாரியும் தனது ஆடையைப் படிகளின் மேல் விரித்தனர். எக்காளத்தை ஊதி, “யெகூ ராஜா ஆனான்!” என்று அறிவித்தனர்.
யெகூ யெஸ்ரயேலுக்குச் சென்றது
14 எனவே நிம்சியின் குமாரன் யோசபாத்தின் குமாரனான யெகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான்.
அப்போது, யோராமும் இஸ்ரவேலரும் சேர்ந்து ஆராமின் ராஜாவாகிய ஆசகேலிடமிருந்து ராமோத் கீலேயாத்தை பாதுகாக்க முயன்றனர். 15 யோராம் ராஜா ஆசகேலுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் ஆராமிய வீரர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். அவனும் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போனான்.
எனவே யெகூ, அதிகாரிகளிடம, “என்னை நீங்கள் புதிய ராஜாவாக ஏற்றுக்கொள்வதானால் நகரத்திலிருந்து எவரும் தப்பித்துப் போய் இந்தச் செய்தியை யெஸ்ரயேலின் சொல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.
16 யோராம் யெஸ்ரயேலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். எனவே யெகூ இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். அப்போது யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.
17 ஒரு காவல்காரன் யெஸ்ரயேல் நகரக் கோபுரத்தின் மீது நின்று பார்த்தான். யெகூவின் பெரிய கூட்டம் வருவதைக் கவனித்து, “ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்றான்.
யோராம், “சிலரைக் குதிரையில் அனுப்பி அவர்களை சந்தித்து, அவர்கள் சமாதானத்தோடு வருகிறார்களா என்று விசாரியுங்கள்” என்றான்.
18 எனவே, தூதுவன் யெகூவை சந்திக்க குதிரையில் சென்றான். தூதுவன், “நீங்கள் சமாதானத்தோடு வருகிறீர்களா? என்று ராஜா கேட்கச் சொன்னார்” என்று கேட்டான்.
அதற்கு யெகூ, “சமாதானத்துடன் எந்த சம்பந்தமும் உனக்கு இல்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
காவல்காரன் யோராமிடம், “தூதுவன் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டான். அவன் திரும்பி வரவில்லை” என்றான்.
19 பிறகு யோராம் இரண்டாவது தூதுவனை குதிரையில் அனுப்பினான். அவன் யெகூவிடம் சென்று, “யோராம் ராஜா ‘சமாதானம்’ சொன்னான்” என்றான்.
அதற்கு யெகூ, “சமாதானத்திற்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
20 காவல்காரனோ யோராமிடம், “இரண்டாவது தூதுவனும் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டான். அவனும் திரும்பி வரவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போன்று ஒருவன் இரதத்தை ஓட்டுகிறான். நிம்சியின் குமாரனான யெகூவைப்போல அவன் தேரோட்டுகிறான்” என்றான்.
21 யோராம், “எனது இரதத்தைக் கொண்டு வா!” என்றான்.
வேலைக்காரர் ராஜாவின் இரதத்தைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும் யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் யெகூவை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் அவனை யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே சந்தித்தனர்.
22 யோராம் யெகூவைப் பார்த்து, “யெகூ, நீ சமாதானமாக வந்திருக்கிறாயா” என்று கேட்டான். அதற்கு யெகூ, “உன் தாயான யேசபேல் விபச்சாரமும் சூன்யமும் செய்து கொண்டிருக்கும்வரை சமாதானமாக இருக்கமுடியாது” என்றான்.
23 யோராம் குதிரையில் வேகமாகத் திரும்பினான். அவன் அகசியாவிடம், “அகசியா, இது தந்திரம்” என்றான்.
24 ஆனால் யெகூ தன் பலத்தையெல்லாம் கூட்டி வில்லில் அம்பை எய்தான். அம்பு அவனது முதுகில் துளைத்து இதயத்தின் வழியாகச் சென்றது. அவன் இரதத்திலிருந்து விழுந்து மரித்தான்.
25 யெகூ தனது இரத ஓட்டியான பித்காரிடம், “யோராமின் உடலை எடுத்து யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயலில் ஏறி. நானும் நீயும் யோரோமின் தந்தையான ஆகாபோடு பயணம் செய்யும்போது, இவனுக்கு இவ்வாறே நிகழும் என்று கர்த்தர் சொன்னதை எண்ணிப்பார். 26 கர்த்தர், ‘நேற்று நான் நாபோத் மற்றும் அவனது பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்த்தேன். நான் ஆகாபை இதே வயலில் தண்டிப்பேன்’, என்று சொன்னார்! எனவே, அவர் சொன்னபடியே, யோராமின் உடலை எடுத்து வயலுக்குள் வீசு!” என்றான்.
27 யூதாவின் ராஜாவாகிய அகசியா இதனைப் பார்த்து ஓடிப்போனான். அவன் தோட்ட வீட்டிற்குப்போக, யெகூ அவனைத் துரத்திப்போனான். யெகூ, “அகசியாவை அவன் இரதத்தில் வெட்டிப் போடுங்கள்” என்றான்.
எனவே யெகூவின் ஆட்கள் அகசியாவை இப்லேயாம், அருகிலுள்ள கூர் மலைக்கான சாலையில் எய்தனர். அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கேயே மரித்துப்போனான். 28 அகசியாவின் வேலைக்காரர்கள் அவனது உடலை எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர். தாவீது நகரத்தில் முற்பிதாக்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.
29 இஸ்ரவேல் ராஜா யோராமின் 11வது ஆட்சியாண்டில் அகசியா யூதாவின் ராஜாவாகினான்.
யேசபேலின் பயங்கரமான மரணம்
30 யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். இச்செய்தியை யேசபேல் அறிந்தாள். தலையைச் சிங்காரித்து அலங்காரம் செய்து கொண்டு பிறகு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். 31 யெகூ நகரத்து வாசலில் நுழைந்ததும் அவள், “சிம்ரி! அவனை போல நீயும் உன் எஜமானனைக் கொன்றிருக்கிறாய்” என்றாள்.
32 யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, “என் பக்கத்தில் இருப்பது யார்?” என்று கேட்டான்.
மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள். 33 அவர்களிடம் யெகூ, “யேசபேலைக் கீழே தள்ளுங்கள்” என்றான்.
அவர்களும் அவ்வாறே கீழே அவளைத் தள்ளினார்கள். அவளது இரத்தத்தில் கொஞ்சம் சுவர் மீதும் குதிரைகள் மீதும் தெளித்தது. குதிரைகள் அவள் மேலே நடந்துச் சென்றன. 34 யெகூ, வீட்டிற்குள் போய் உண்டு குடித்தான். அவன், “இப்போது சபிக்கப்பட்ட இந்தப் பெண்ணைப் பாருங்கள். ராஜாவின் குமாரத்தியாகையால் அவளை அடக்கம் செய்யுங்கள்” என்றான்.
35 அந்த ஆட்கள் அவளை அடக்கம்பண்ணச் சென்றனர். ஆனால் அவளது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அவளது கபாலம், கால்கள், கைகள், ஆகியவற்றையே கண்டுபிடித்தனர். 36 அவர்கள் யெகூவிடம் திரும்பிவந்தனர். பிறகு யெகூ, “இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தமது தொண்டனைக் கொண்டு சொன்ன வார்த்தை: ‘யெஸ்ரயேலின் நிலத்தில் யேசபேலின் மாமிசத்தை நாய்கள் தின்னும், என்றும் 37 இதுதான் யேசபேல் என்று சொல்ல முடியாதபடி அவளது பிணம் வயல் வெளியில் போடப்படும் எருவைப் போன்று ஆகும்’” என்றான்.
அடிமைகளுக்கான விதிமுறைகள்
6 அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள் எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும். 2 சில அடிமைகளின் எஜமானர்கள் விசுவாசம் உடையவர்களாய் இருப்பார்கள். அதனால் அவர்கள் இருவரும் சகோதரர்களாய் இருப்பார்கள். எனினும் அந்த அடிமைகள் தங்கள் மரியாதையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் மேலும் சிறப்பான முறையில் தங்கள் வேலையைத் தங்கள் எஜமானர்களுக்காகச் செய்யவேண்டும். ஏனென்றால் தாம் நேசிக்கும் விசுவாசிகளுக்கு அந்த அடிமைகள் உதவிக்கொண்டும் பயன் விளைவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
இக்காரியங்களைச் செய்ய நீ அவர்களுக்கு இதனைப் போதிக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும்.
தவறான போதனையும் உண்மையான செல்வமும்
3 சிலர் தவறான போதனைகளைச் செய்துவருகிறார்கள். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான போதனையை அவர்கள் பின்பற்றுவதில்லை. தேவனுக்குச் சேவை செய்கிற உண்மையான வழியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 4 தவறான போதகன் தற்பெருமையை உடையவன். அவனுக்கு எதுவும் புரியாது. வாக்குவாதங்களின் மேல் ஒரு நோய் கொண்ட உற்சாகத்தை உடையவனாக இருக்கிறான். அது பொறாமையையும், சண்டையையும், அவதூறுகளையும், பொல்லாத ஐயங்களையும் உண்டாக்குகின்றன. 5 உக்கிரமான தீயமனம் உடையவர்கள் வெறும் வாக்குவாதங்களையே முடிவில் உருவாக்குகிறார்கள். அவர்கள் உண்மையைத் தொலைத்துவிட்டார்கள். தேவனை சேவிப்பது செல்வந்தனாகும் வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
6 தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை. 7 நாம் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் நம்மோடு கொண்டு வரவில்லை. நாம் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. 8 எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும். 9 மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். 10 பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும், மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள்.
நினைவுகொள்ளவேண்டிய விஷயங்கள்
11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். 12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.
17 இந்த ஆணைகளைச் செல்வர்களிடம் கூறு. பெருமிதம் கொள்ளவேண்டாம் என அவர்களுக்குச் சொல். செல்வத்தின் மீது விசுவாசம் நிரந்தரமாக வைக்கவேண்டாம் என்றும், தேவன் மீது விசுவாசம் வைக்குமாறும் கூறு. செல்வம் விசுவாசிப்பதற்கு உரியதன்று. ஆனால் தேவன் நம்மை செழிப்பாகப் பாதுகாக்கிறார். அவற்றை நாம் சந்தோஷமாக அனுபவிக்க அவர் கொடுக்கிறார். 18 நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு. 19 இவற்றைச் செய்வதன் மூலம் அவர்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பலமான அஸ்திபாரமாக எதிர்கால வாழ்வைக் கட்ட உதவியாக இருக்கும். அதனால் உண்மையான வாழ்வைப் பெறுவர்.
20 தீமோத்தேயுவே, தேவன் உன்னிடம் நம்பிக்கையுடன் பல நல்ல காரியங்களைத் தந்திருக்கிறார். அவற்றைப் பாதுகாத்துக்கொள். தேவனிடமிருந்து வராத முட்டாள்தனமான காரியங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகு. உண்மைக்கு எதிராக வாதம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகிப் போ. அவர்கள் “ஞானம்” என்று அழைப்பதெல்லாம் தவறான “ஞானம்” ஆகும். 21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள்.
தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
ஓசியாவின் மூலமாக தேவனாகிய கர்த்தருடைய செய்தி
1 பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு வந்த கர்த்தருடைய செய்தி இதுதான். இந்த வார்த்தை யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் இருந்தபோது வந்தது. இது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரனான யெரொபெயாம் என்பவனின் காலத்தில் நடந்தது.
2 இது கர்த்தருடைய முதல் செய்தியாக ஓசியாவிற்கு வந்தது. கர்த்தர், “நீ போய் தன் வேசித்தனத்தினால் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு வேசியை மணந்துகொள். ஏனென்றால் இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் எல்லோரும் வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்ளாக இருந்திருக்கிறார்கள்” என்றார்.
யெஸ்ரயேலின் பிறப்பு
3 எனவே ஓசியா திப்லாயிமின் குமாரத்தியான கோமேரைத் திருமணம் செய்தான். கோமேர் கர்ப்பமடைந்து ஓசியாவிற்கு ஒரு ஆண்மகனைப் பெற்றாள். 4 கர்த்தர் ஓசியாவிடம் “அவனுக்கு யெஸ்ரயேல். என்று பெயரிடு. ஏனென்றால் இன்னும் கொஞ்சக்காலததில் நான் ஏகூவின் வம்சத்தாரை அவன் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் சிந்திய இரத்தத்திற்காகத் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலின் இராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன். 5 அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்” என்றார்.
லோருகாமாவின் பிறப்பு
6 பின்னர் கோமேர் மீண்டும் கர்ப்பமடைந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றாள். கர்த்தர் ஓசியாவிடம், “அவளுக்கு லோருகாமா என்று பெயரிடு. ஏனென்றால் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் காட்டமாட்டேன். நான் அவர்களை மன்னிக்கமாட்டேன். 7 ஆனால் நான் யூதா நாட்டின் மீது இரக்கம் காட்டுவேன். நான் யூதா நாட்டைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் காப்பாற்ற எனது வில்லையோ வாளையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களைக் காப்பாற்ற போர் குதிரைகளையோ, வீரர்களையோ பயன்படுத்தமாட்டேன். நான் அவர்களை எனது சொந்த பலத்தால் காப்பாற்றுவேன்” என்றார்.
லோகம்மியின் பிறப்பு
8 கோமேர் லோருகாமாவை பால்மறக்க செய்த பிறகு அவள் மீண்டும் கர்ப்பம் அடைந்தாள். அவள் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றாள். 9 பிறகு கர்த்தர், “அவனுக்கு லோகம்மீ என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.
கர்த்தர் இஸ்ரவேல் தேசத்துடன் பேசுகிறார்
10 “எதிர்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கை கடற்கரையிலுள்ள மணலைப் போன்றிருக்கும். உங்களால் அம்மணலை அளக்கவோ, எண்ணவோ இயலாது. ‘நீங்கள் என் ஜனங்களல்ல’ என்று அவர்களுக்கு சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
11 “பிறகு யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒன்று கூட்டப்படுவார்கள், அவர்களுக்கு ஓர் ஆட்சியாளனை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களது இராஜ்யம் பூமியில் மிகப் பெரியதாக இருக்கும். யெஸ்ரயேலின் நாள் உண்மையில் மிகப் பெரியதாயிருக்கும்.”
யோட்
73 கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர்.
உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர்.
உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.
74 கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைப் பார்க்கிறார்கள்,
என்னை மதிக்கிறார்கள்.
நீர் சொல்வதை நான் நம்புவதால் அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
75 கர்த்தாவே, உமது முடிவுகள் நியாயமானவை என்பதை நான் அறிகிறேன்.
நீர் என்னைத் தண்டிப்பதும் நியாயமேயாகும்.
76 இப்போதும், உமது உண்மை அன்பினால் எனக்கு ஆறுதலளியும்.
நீர் உறுதியளித்தபடியே எனக்கு ஆறுதல் தாரும்.
77 கர்த்தாவே, எனக்கு ஆறுதல் தந்து என்னை வாழவிடும்.
நான் உண்மையாகவே உமது போதனைகளில் களிப்படைகிறேன்.
78 என்னிலும் உயர்ந்தோராகத் தங்களைக் கருதும் ஜனங்கள் என்னைப் பற்றிப் பொய் கூறினார்கள்.
அந்த ஜனங்கள் வெட்கமடைந்தார்கள் என நான் நம்புகிறேன்.
கர்த்தாவே, நான் உமது சட்டங்களைக் கற்கிறேன்.
79 உமது உடன்படிக்கையை அறியும்படி உம்மைப் பின்பற்றுவோர்
என்னிடம் திரும்பி வருவார்கள் என நான் நம்புகிறேன்.
80 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குச் சிறிதும் பிசகாது கீழ்ப்படியச்
செய்யும், எனவே நான் வெட்கப்படமாட்டேன்.
கப்
81 நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன்.
ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.
82 நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என் கண்களோ தளர்ந்து போகின்றன.
கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்?
83 குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும்,
நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன்.
84 எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்?
கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்?
85 சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள்.
அது உமது போதனைகளுக்கு எதிரானது.
86 கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும்.
அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்!
87 அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள்.
ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.
88 கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும்.
நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.
லாமேட்
89 கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும்.
உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
90 நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர்.
கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.
91 உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி
கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது.
92 உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால்
எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
93 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன்.
ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன.
94 கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும்.
ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன்.
95 தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள்.
ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று.
96 உமது சட்டங்களைத் தவிர,
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
2008 by World Bible Translation Center