M’Cheyne Bible Reading Plan
அதோனியா ராஜாவாக விரும்புகிறான்
1 தாவீது ராஜா வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது. 2 எனவே அவனது வேலைக்காரர்கள் அவனிடம், “உங்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறு பெண்ணைத் தேடுவோம். அவள் உங்கள் அருகே நெருக்கமாகப் படுத்து உங்களுக்கு சூட்டினை உண்டாக்குவாள்” என்றனர். 3 எனவே ராஜாவின் உடலில் சூடேற்றும் பொருட்டு ராஜாவின் வேலைக்காரர்கள் ஒரு அழகான சிறு பெண்ணை இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடினார்கள். அவர்கள் அபிஷாக் என்ற பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவள் சூனேம் நகரத்தவள். அவளை அவர்கள் ராஜாவிடம் அழைத்து வந்தனர். 4 அந்தப் பெண் மிகவும் அழகானவள். அவள் ராஜாவை மிகவும் கவனித்து சேவை செய்தாள். ஆனால் ராஜாவாகிய தாவீது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளவில்லை.
5 தாவீதிற்கும் அவனது மனைவி ஆகீத்திற்கும் அதோனியா எனும் குமாரன் இருந்தான். அவன் பெருமிதம் கொண்டவனாகி அவனே புதிய ராஜாவாக ஆவான் என்று முடிவு செய்தான். அவனுக்கு ராஜாவாவதில் மிகுந்த விருப்பமும் இருந்தது. எனவே அவன் ஒரு இரதத்தையும், குதிரைகளையும், முன்னால் ஓட்டிப்போக 50 ஆட்களையும் ஏற்பாடு செய்துக் கொண்டான். 6 அவன் அழகான தோற்றம் உடையவன். அப்சலோமுக்குப்பிறகு பிறந்தவன். ஆனால் தாவீதோ அவனைத் திருத்தவில்லை, “ஏன் இவ்வாறு செய்கிறாய்?” என்றும் கேட்கவில்லை.
7 செருயாவின் குமாரனான யோவாபோடும் ஆசாரியனாகிய அபியத்தாரோடும் அதோனியா பேசினான். அவன் புதிய ராஜாவாக அவர்கள் உதவ முடிவு செய்தனர். 8 ஆனால் பலர் அதோனியாவின் செயலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தாவீதிற்கு உண்மையானவர்களாக இருந்தனர். ஆசாரியனான சாதோக்கு, யோய்தாவின் குமாரனான பெனாயா, தீர்க்கதரிசியாகிய நாத்தான், சீமேயி, ரேயி, தாவீதோடு இருந்த பலசாலிகள் போன்றோர் அதோனியாவுக்குச் சாதகமாக இல்லை.
9 ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற குமாரர்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான். 10 ஆனால் அவன் தந்தையின் சிறப்பான மெய்க்காவலாளியையும், தன் சகோதரனான சாலொமோனையும், தீர்க்கதரிசிகளாகிய நாத்தான், பெனாயா ஆகியோரையும் அழைக்கவில்லை.
நாத்தானும் பத்சேபாளும் சாலொமோனுக்காக பேசுதல்
11 ஆனால் நாத்தான், இதைப்பற்றி அறிந்து சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் சென்றான். அவளிடம் அவன், “ஆகீத்தின் குமாரனான அதோனியா என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவீர்களா? அவன் தன்னையே ராஜாவாக்கிக்கொண்டான். நமது ஆண்டவனும் ராஜனுமான தாவீது இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். 12 உங்கள் வாழ்வும், உங்கள் குமாரன் சாலொமோனின் வாழ்வும் ஆபத்தில் உள்ளது. நான் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வழியைப்பற்றிக் கூறுகிறேன். 13 ராஜாவிடம் செல்லுங்கள். அவனிடம், ‘என் ராஜாவும் ஆண்டவனுமானவரே! என் குமாரன் சாலொமோனே அடுத்த ராஜாவாக வருவான் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதோனியா எவ்வாறு ராஜாவாக வரமுடியும்?’ என்று சொல்லுங்கள். 14 நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் ராஜாவிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.
15 எனவே பத்சேபாள் ராஜாவை அவனது படுக்கை அறையில் போய் பார்த்தாள். ராஜா முதியவனாயிருந்தான். சூனேமிலுள்ள பெண்ணான அபிஷாக் அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். 16 அவள் ராஜாவின் முன்பு குனிந்து வணங்கினாள். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று ராஜா கேட்டான்.
17 பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் குமாரனான சாலொமோனே அடுத்த ராஜா. சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள். 18 இப்போது, இதை அறியாமல் அதோனியா தன்னையே ராஜாவாக்கிக்கொண்டிருக்கிறான். 19 அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து குமாரர்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள குமாரனான சாலொமோனை அழைக்கவில்லை. 20 எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, இப்போது உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உமக்குப் பிறகு அடுத்த ராஜா யார் என்பதை முடிவு செய்ய அவர்கள் உமக்காக காத்திருக்கிறார்கள். 21 நீங்கள் மரிப்பதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்களை அடக்கம் செய்த பிறகு, அவர்களால் நானும் என் குமாரன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
22 இவ்வாறு அவள் ராஜாவோடு பேசிக் கொண்டிருக்கும்போதே, தீர்க்கதரிசியான நாத்தான் வந்தான். 23 வேலைக்காரர்கள் ராஜாவிடம் போய், “தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்” என்றனர். எனவே நாத்தான் ராஜாவிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். 24 பிறகு அவன், “எனது ஆண்டவனும் ராஜனுமானவரே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் அடுத்த ராஜா என்று நீங்கள் அறிவித்துள்ளீர்களா? இனி அதோனியாதான் ஜனங்களை ஆள்வான் என்று முடிவு செய்துவிட்டீர்களா? 25 ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து குமாரர்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா ராஜா நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர். 26 ஆனால் அவன் என்னையும், ஆசாரியனான சாதோக்கையும், யோய்தாவின் குமாரனான பெனாயாவையும், உங்கள் குமாரனான சாலொமோனையும் அழைக்கவில்லை. 27 எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் ராஜா ஆவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.
28 பிறகு ராஜாவாகிய தாவீது, “பத்சேபாளை உள்ளே வரச்சொல்!” என்றான். எனவே பத்சேபாளும் உள்ளே வந்தாள்.
29 பின்னர் ராஜா, ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது. 30 நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் குமாரனான சாலொமோனே ராஜாவாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.
31 பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து ராஜாவை வணங்கினாள். அவள், “தாவீது ராஜா நீண்டகாலம் வாழ்வாராக!” என்று வாழ்த்தினாள்.
சாலொமோன் புதிய ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுதல்
32 பிறகு தாவீது ராஜா, “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் குமாரனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து ராஜா முன்பு நின்றனர். 33 அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள். 34 அங்கே, ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யட்டும். பின் எக்காளத்தை ஊதி, ‘புதிய ராஜாவாகிய சாலொமோன் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். 35 பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் ராஜாவாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.
36 யோய்தாவின் குமாரனான பெனாயா, “எனது ராஜாவும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார். 37 என் ராஜாவும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.
38 எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் குமாரனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது ராஜாவுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை ராஜாவினுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். 39 ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி ராஜாவாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “ராஜா சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள். 40 பிறகு அனைவரும் சாலொமோனைப் பின்தொடர்ந்து நகருக்கு வந்தனர். நாதசுரங்களை ஊதினர். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பூமி அதிரும்படி அவர்கள் சத்தத்தை எழுப்பினர்.
41 இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.
42 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் குமாரனான, யோனத்தான் வந்தான்.
அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.
43 ஆனால் அவனோ, “இல்லை. இது உனக்கு நல்ல செய்தியில்லை! தாவீது ராஜா சாலொமோனைப் புதிய ராஜாவாக நியமித்துவிட்டான். 44 அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் ராஜாவின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள். 45 பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை ராஜாவாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம், 46 சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான். 47 அனைத்து அதிகாரிகளும் ராஜா தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது ராஜாவே, நீ மிகப் பெரிய ராஜா! சாலொமோனையும் மிகப் பெரிய ராஜாவாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’” என்று வாழ்த்தினர்.
அங்கே தாவீது ராஜாவும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான். 48 ராஜா தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் குமாரனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.
49 அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். 50 அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.[a] 51 சிலர் சாலொமோனிடம் போய், “அதோனியா உங்களைக் கண்டு அஞ்சுகிறான். அவன் பரிசுத்த கூடாரத்தில் பலி பீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். அவன், ‘என்னை கொல்லமாட்டேன் என சாலொமோனை வாக்குறுதி தரச்சொல்லுங்கள்’ என்கிறான்” என்றார்கள்.
52 எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான். 53 பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.
சுதந்தரத்தைப் பாதுகாத்துக்கொள்
5 நமக்கு இப்போது சுதந்தரம் இருக்கிறது. கிறிஸ்து நம்மைச் சுதந்தரம் உள்ளவர்கள் ஆக்கினார். எனவே உறுதியாய் நில்லுங்கள். மாறாதீர்கள். மீண்டும் அடிமைகளாக மறுத்துவிடுங்கள். 2 கவனியுங்கள்! நான் தான் பவுல். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு சட்டத்தின் அடிமைகளானால் கிறிஸ்து உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படமாட்டார். 3 மீண்டும் எல்லோரையும் நான் எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டே இருக்க வேண்டும். 4 சட்டத்தைப் பின்பற்றி நீங்கள் தேவனுக்கு வேண்டியவராக முயன்றால், கிறிஸ்துவோடு உங்களுக்கு உள்ள தொடர்பு அற்றுப்போகும். தேவனுடைய இரக்கத்தை விட்டு விட்டீர்கள். 5 ஆனால் தேவனுடைய கிருபை மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆவோம் என்று விசுவாசிக்கிறோம். ஆவியானவரின் உதவியோடு அதற்காகக் காத்திருக்கிறோம். 6 ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்குள் வாழ்வானேயானால் பின்னர், அவன் விருத்தசேதனம் செய்துகொண்டானா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை. அன்பும் விசுவாசமுமே மிகவும் முக்கியமானது.
7 பந்தயத்தில் நீங்கள் நன்றாக ஓடினீர்கள். நீங்கள் உண்மைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். ஆனால் இப்போது உண்மையின் வழியில் இருந்து உங்களைத் தடுத்தது யார்? 8 உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை. 9 கவனமாய் இருங்கள். “புளிப்புள்ள மிகச் சிறிதளவு மாவுகூட பிசைந்த மாவு எல்லாவற்றையும் புளிக்கும்படிச் செய்துவிடும்.” (மிகச் சிறிதான ஒன்றுகூட பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.) 10 வேறுவிதமாக நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள் என்று தேவனுக்குள் நான் நம்பிக்கையாய் இருக்கிறேன். சிலர் வேறு விதமாக உங்களைக் குழப்புகிறார்கள். அவ்வாறு குழப்புகிறவன் எவனாக இருந்தாலும் அவன் நிச்சயம் தண்டிக்கப்படுவான்.
11 சகோதர சகோதரிகளே! மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் என்றும் போதித்ததில்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் ஏன் இவ்வாறு துன்பப்பட வேண்டும்? மக்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தால் சிலுவையை ஏற்பதுபற்றி வரும் தடை நிறுத்தப்பட்டிருக்கும். 12 உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கும் அவர்கள் விருத்தசேதனத்துடன் துண்டித்துக்கொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.
13 சகோதர சகோதரிகளே, நீங்கள் சுதந்தரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். பாவக் காரியங்களுக்காக அச்சுதந்தரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால் ஒருவருக்கொருவர் அன்புடன் சேவை செய்யுங்கள். 14 “உன்னை நீ நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்ற ஒரு வாக்கியத்திலேயே மொத்த சட்டமும் அடங்கி இருக்கிறது. 15 நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்தும், கிழித்தும் வந்தீர்களேயானால் முழுவதுமாய் அழிந்து போவீர்கள். இது பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.
ஆவியும் மனித இயல்பும்
16 ஆகையால் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், ஆவிக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள். பிறகு நீங்கள் மாம்ச இச்சையை நிறைவேற்றமாட்டீர்கள். 17 ஆவிக்கு எதிராக மாம்ச இச்சையும், மாம்ச இச்சைக்கு எதிராக ஆவியும் செயல்பட விரும்புகிறது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆகையால் நீங்கள் உண்மையில் விரும்புவதை உங்களால் செய்ய முடியாது. 18 உங்களை ஆவியானவர் வழி நடத்தும்படி அனுமதித்தால், நீங்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல.
19 மாம்சத்தின் செயற்பாடுகள் தெளிவாய் உள்ளன. அவை விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரக வழிபாடு, பில்லிசூனியம், பகைமை, விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சுயநல ஆசைகள், பிரிவினைகள், கோஷ்டிப் பூசல்கள், 21 பொறாமை, குடிவெறி, களியாட்டங்கள் என்பன. நான் ஏற்கெனவே உங்களை எச்சரித்தது போன்று இப்போதும் எச்சரிக்கிறேன். இத்தகையப் பாவங்களைச் செய்பவர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள் இடம்பெற முடியாது. 22 ஆனால், ஆவியானவர் நமக்கு அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, கருணை, நன்மை, விசுவாசம், 23 நற்பண்பு, தன்னடக்கம் ஆகிய நற்கனிகளை உருவாக்குகின்றார். இவற்றைத் தவறு என்று எந்தச் சட்டமும் கூறுவதில்லை. 24 இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் மாம்சத்தைச் சிலுவையில் கொன்றுவிட்டார்கள். அவர்கள் ஆசைகளையும் கெட்ட விருப்பங்களையும் கூட விட்டிருக்கிறார்கள். 25 ஆவியானவரிடம் இருந்து நாம் புதிய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். எனவே நாம் அவரைப் பின்பற்ற வேண்டும். 26 வீண் புகழ்ச்சியை விரும்பக் கூடாது. நாம் ஒருவருக்கொருவர் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
பார்வோன்: ஒரு சிங்கமா அல்லது முதலையா?
32 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரெண்டாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் (மார்ச்) முதலாம் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் கூறினார்: 2 “மனுபுத்திரனே, எகிப்து ராஜாவாகிய பார்வோனைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு:
“‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய்.
ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன்.
நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய்.
நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய்.
நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’”
3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன்.
இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன்.
அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள்.
4 பிறகு நான் உன்னை வெறுந்தரையில் விடுவேன்.
நான் உன்னை வயலில் எறிவேன்.
எல்லாப் பறவைகளும் வந்து உன்னைத் உண்ணும்படிச் செய்வேன்.
காட்டு மிருகங்கள் எல்லா இடங்களிலுமிருந்து வந்து வயிறு நிறையும்வரை உன்னை உண்ணும்.
5 நான் உனது உடலை மலைகளில் சிதற வைப்பேன்.
நான் பள்ளத்தாக்குகளை உனது மரித்த உடலால் நிரப்புவேன்.
6 நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன்.
அது தரைக்குள் ஊறிச்செல்லும்.
நதிகள் உன்னால் நிறையும்.
7 நான் உன்னை மறையும்படி செய்வேன்.
நான் வானத்தை மூடி நட்சத்திரங்களை இருளச் செய்வேன்.
நான் சூரியனை மேகத்தால் மூடுவேன், நிலவு ஒளிவிடாது.
8 நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன்.
நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன்.
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
9 “நான் உன்னை அழிக்கப் பகைவரைக் கொண்டுவரும்போது பல ஜனங்கள் வருந்தி கலக்கமடையும்படிச் செய்வேன். உனக்குத் தெரியாத நாடுகள் கூடத் துக்கப்படும். 10 உன்னைப்பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் ராஜாக்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் ராஜாக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு ராஜாவும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”
11 ஏனென்றால், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பாபிலோன் ராஜாவின் வாள் உனக்கு எதிராகச் சண்டையிட வரும். 12 நான் அவ்வீரர்களை உன் ஜனங்களைப் போரில் கொல்லப் பயன்படுத்துவேன். அவ்வீரகள் மிகக் கொடூரமான நாடுகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் எகிப்து பெருமைப்பட்டுக்கொண்டிருப்பவற்றைக் கொள்ளையடிப்பார்கள். எகிப்து ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். 13 எகிப்தில் ஆற்றங்கரையில் பல மிருகங்கள் உள்ளன. நான் அந்த மிருகங்களையும் அழிப்பேன். ஜனங்கள் இனிமேல் தங்கள் கால்களால் தண்ணீரைக் கலக்கமுடியாது. இனிமேல் பசுக்களின் குளம்புகளும் தண்ணீரைக் கலக்கமுடியாது. 14 எனவே நான் எகிப்தில் உள்ள தண்ணீரை அமைதிப்படுத்துவேன். நான் நதிகளை மெதுவாக ஓடச் செய்வேன். அவை எண்ணெயைப்போன்று ஓடும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: 15 “நான் எகிப்து நாட்டைக் காலி பண்ணுவேன். அத்தேசம் எல்லாவற்றையும் இழக்கும். எகிப்தில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிவார்கள்!
16 “ஜனங்கள் எகிப்திற்காகப் பாடவேண்டிய சோகப் பாடல் இதுதான். வேறு நாடுகளில் உள்ள குமாரத்திகள் (நகரங்கள்) எகிப்திற்காக இச்சோகப் பாடலைப் பாடுவார்கள். இது அவர்கள் எகிப்திற்காகவும் அதன் ஜனங்களுக்காகவும் பாடுகிற சோகப் பாடல்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.
எகிப்து அழிக்கப்படும்
17 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரண்டாவது ஆண்டு அந்த மாதத்தின் பதினைந்தாம் தேதியன்று, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, எகிப்து ஜனங்களுக்காக புலம்பு. எகிப்தையும் அந்த குமாரத்திகளையும் பலம் வாய்ந்த நாடுகளிலிருந்து கல்லறைக்கு வழிநடத்து. அவர்களைக் கீழ் உலகத்திற்கு ஏற்கெனவே ஆழமான குழிகளில் இருக்கிறவர்களோடு அனுப்பு.
19 “எகிப்தே, வேறு எவரையும்விட நீ சிறந்ததில்லை! மரண இடத்திற்கு இறங்கிப்போ. அந்த அந்நியர்களோடு படுத்துக்கொள்.
20 “எகிப்து போரில் கொல்லப்பட்ட மனிதர்களோடு சேரும். பகைவன் அவளையும் அவளது ஜனங்களையும் வெளியே இழுத்துக்கொண்டான்.
21 “போரில் பலமும் ஆற்றலுமிக்க மனிதர்கள் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் மரண இடத்திற்குச் சென்றனர். அந்த இடத்திலிருந்து, அந்த மனிதர்கள் எகிப்தோடும் அதன் ஆதரவாளர்களோடும் பேசுவார்கள், அவர்களும் போரில் கொல்லப்படுவார்கள்.
22-23 “அசூரும் அதன் படையும் மரண இடத்தில் இருக்கும். அவர்களின் கல்லறைகள் ஆழமான குழிக்குள் செல்லும். அந்த அசூரிய வீரர்கள் போரில் கொல்லப்படுவார்கள். அசூரியப் படையானது அதன் கல்லறையைச் சுற்றி உள்ளது. அவர்கள் உயிரோடிருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் அமைதியாகிவிட்டது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.
24 “ஏலாமும் இங்கே இருக்கிறது. அதன் படை அவள் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் பூமிக்குக் கீழே போய்விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம்மோடு அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிகளுக்குள் சென்றுவிட்டார்கள். 25 அவர்கள் ஏலாமுக்கும் போரில் மரித்த அவர்களின் அனைத்து வீரர்களுக்கும் படுக்கை போட்டிருக்கிறார்கள். ஏலாமின் படை அதன் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அந்த அந்நியர்கள் அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது, ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம் அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிக்குள் சென்றார்கள். அவர்கள் கொல்லப்பட்ட மற்ற ஜனங்களோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
26 “மேசேக், தூபால் மற்றும் அவற்றின் படைகளும் அங்கே உள்ளன. அவர்களின் கல்லறைகள் அதைச் சுற்றியுள்ளன. அந்த அந்நியர்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். 27 ஆனால், இப்பொழுது நீண்ட காலத்துக்கு முன்னால் மரித்துப்போன, வல்லமையான மனிதர்களோடு படுத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் தம் போர்க்கருவிகளோடு புதைக்கப்பட்டார்கள். அவர்களின் வாள்கள் அவர்களின் தலைகளுக்குக் கீழ் வைக்கப்படும். ஆனால் அவர்களின் பாவங்கள் அவர்களின் எலும்பில் உள்ளன. ஏனென்றால், அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஜனங்களை பயப்படுத்தினார்கள்.
28 “எகிப்தே, நீயும் அழிக்கப்படுவாய். அந்த அந்நியர்களால் நீ வீழ்த்தப்படுவாய். போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு கிடப்பாய்.
29 “ஏதோமும் அங்கே இருக்கிறது. அவனோடு ராஜாக்களும் மற்ற தலைவர்களும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் பலம் பொருந்திய வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்பொழுது போரில் கொல்லப்பட்ட மற்றவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் அந்த அந்நியர்களுடன் கிடக்கிறார்கள். அவர்கள் ஆழமான குழிக்குள் கிடக்கும் மற்ற ஜனங்களுடன் இருக்கின்றனர்.
30 “வடக்கில் உள்ள ராஜாக்கள் அனைவரும் அங்கே இருக்கின்றனர்! சீதோனில் உள்ள அனைத்து வீரர்களும் அங்கே இருக்கின்றனர். அவர்களது பலம் ஜனங்களைப் பயப்படுத்தியது. ஆனால், அவர்கள் அதனால் அவமானமடைகிறார்கள். அந்த அந்நியர்கள் போரில் கொல்லப்பட்டவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் தம் அவமானத்தோடு அக்குழிக்குள் சென்றார்கள்.
31 “பார்வோன் மரண இடத்திற்குச் சென்ற ஜனங்களை பார்ப்பான். அவனும் அவனோடுள்ள அனைத்து ஜனங்களும் ஆறுதல் பெறுவார்கள். ஆம், பார்வோனும் அவனது அனைத்துப் படைகளும் போரில் கொல்லப்படுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
32 “பார்வோன் உயிரோடு இருக்கும்போது, ஜனங்கள் அவனுக்குப் பயப்படும்படிச் செய்தேன். ஆனால் இப்போது, அவன் அந்த அந்நியர்களோடு விழுந்துகிடக்கிறான். பார்வோனும் அவனது படையும் ஏற்கெனவே போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு விழுந்துகிடப்பார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
“உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
80 இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும்.
நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர்.
கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர்.
நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
2 இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும்.
வந்து எங்களைக் காப்பாற்றும்.
3 தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
4 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்?
என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
5 உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர்.
உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
6 எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர்.
எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
7 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
8 கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர்.
நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர்.
இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர்.
உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
9 “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர்.
அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர்.
உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
10 அது பர்வதங்களை மூடிற்று.
அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
11 அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது.
அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
12 தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்?
இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
13 காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன.
காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
14 சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும்.
பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
15 தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும்.
நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
16 உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது.
நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
17 தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும்.
நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
18 அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார்.
அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
19 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும்.
எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.
2008 by World Bible Translation Center