M’Cheyne Bible Reading Plan
தாவீதுக்கு பல போர்களில் வெற்றி
8 இதற்குப் பின்பு தாவீது பெலிஸ்தியரை வென்றான். பெலிஸ்தியரின் தலைநகரம் பரந்த நிலப்பகுதியைக் கொண்ட நகரமாக இருந்து வந்தது. தாவீது அந்த இடங்களின் ஆட்சியைக் கைப்பற்றினான். 2 மோவாபின் ஜனங்களையும் தாவீது தோற்கடித்தான். அவர்கள் எல்லோரையும் தரை மட்டும் பணியச் செய்தான். பின் அவர்களை வரிசைகளாக ஒரு கயிற்றினால் பிரித்தான். அவர்களில் இரண்டு வரிசை ஆட்களைக் கொன்றான். மூன்றாவது வரிசை ஆட்களை உயிரோடுவிட்டான். இவ்விதமாக மோவாபின் ஜனங்கள் தாவீதின் பணியாட்களாயினர். அவர்கள் தாவீதுக்கு கப்பம் கட்டினார்கள்.
3 ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் சோபாவின் ராஜாவாக இருந்தான். ஐபிராத்து நதியருகேயுள்ள நிலப்பகுதியை தாவீது கைப்பற்றுவதற்காகச் சென்றபோது தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்தான். 4 ஆதாதேசரிடமிருந்து 1,700 குதிரை வீரர்களையும் 20,000 காலாட்படைகளையும் தாவீது கைப்பற்றினான். 100 இரதக் குதிரைகளைத் தவிர்த்துப் பிறவற்றை தாவீது முடமாக்கினான்.
5 சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவுவதற்காக தமஸ்கு நகரிலிருந்து ஆராமியர்கள் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தாவீது 22,000 ஆராமியர்களையும் வென்றான். 6 பின் தாவீது, ஆராமிலுள்ள தமஸ்குவில் வீரர்களைக் கூட்டம் கூட்டமாக நிறுத்தினான். ஆராமியர்கள் தாவீதின் பணியாட்களாகி அவனுக்கு கப்பம் கட்டி வந்தனர். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
7 ஆதாதேசரின் பணியாட்களுக்குரிய வெண்கல கேடயங்களைத் தாவீது எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் எருசலேமுக்குக் கொண்டு வந்தான். 8 பேத்தா, பேரொத்தா ஆகிய நகரங்களிலிருந்து வெண்கலத்தாலாகிய பற்பல பொருட்களைத் தாவீது எடுத்துக்கொண்டான். (பேத்தாவும், பேரொத்தாவும் ஆதாதேசேருக்குச் சொந்தமான நகரங்கள்)
9 ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ, ஆதாதேசரின் படைகளையெல்லாம் தாவீது தோற்கடித்ததைக் கேள்வியுற்றான். 10 எனவே, தோயீ தன் குமாரனாகிய யோராமைத் தாவீது ராஜாவிடம் அனுப்பினான். தாவீது ஆதாதேசரைத் தோற்கடித்ததால் யோராம் தாவீதை வாழ்த்தி ஆசீர்வதித்தான். ஆதாதேசர் முன்பு தோயீக்கு எதிராக போரிட்டிருந்தான். பொன், வெள்ளி வெண்கலம் ஆகியவற்றாலான பொருட்களை யோராம் கொண்டு வந்திருந்தான். 11 தாவீது, இப்பொருட்களை வாங்கி கர்த்தருக்கு அர்ப்பணித்தான். கர்த்தருக்குக் கொடுத்த பிற பொருட்களோடு அவற்றையும் வைத்தான். தாவீது தோற்கடித்த தேசங்களிலிருந்து அவற்றை தாவீது எடுத்துக்கொண்டான். 12 ஆராம், மோவாப், அம்மோன், பெலிஸ்தியா, அமலேக்கு ஆகிய நிலப்பகுதிகளை தாவீது வென்றான். சோபாவின் ராஜாவும் ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசரையும் தாவீது வென்றான். 13 தாவீது 18,000 ஆராமியரையும் உப்புப் பள்ளத்தாக்கில் தோற்கடித்தான். அவன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பியபோது புகழ் பெற்றவனாக இருந்தான். 14 தாவீது ஏதோமில் வீரர்களின் கூட்டத்தை வைத்தான். ஏதோம் முழுவதும் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வீரர்களை நிறுத்தினான். ஏதோமியர் எல்லாரும் தாவீதின் பணியாட்களானார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீதின் ஆட்சி
15 இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்தான். தாவீது தனது ஜனங்கள் எல்லோருக்கும் சிறந்த நன்மையான தீர்மானங்களை எடுத்தான். 16 செருயாவின் குமாரனாகிய யோவாப் தாவீதின் படைத்தலைவனாக இருந்தான். அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். 17 அகிதூபின் குமாரனாகிய சாதோக்கும், அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான். 18 யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும்[a] பொறுப்பாளியாக இருந்தான். தாவீதின் குமாரர்களும் முக்கிய தலைவர்களாக இருந்தார்கள்.
சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான்
9 தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.
2 சவுலின் குடும்பத்தை சேர்ந்த சீபா என்னும் வேலைக்காரன் இருந்தான். தாவீதின் பணியாட்கள் சீபாவை தாவீதிடம் அழைத்து வந்தனர். தாவீது ராஜா, சீபாவிடம், “நீ சீபாவா?” என்று கேட்டான்.
சீபா, “ஆம் நான் உங்கள் பணியாளாகிய சீபா” என்றான்.
3 ராஜா, “சவுலின் குடும்பத்தில் யாராவது உயிரோடிருக்கிறார்களா? தேவனுடைய இரக்கத்தை நான் அவனுக்குக் காட்ட வேண்டும்” என்றான்.
தாவீதிடம், “யோனத்தானுக்கு இரு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான்” என்று சீபா சொன்னான்.
4 ராஜா சீபாவை நோக்கி, “அந்த குமாரன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
சீபா, ராஜாவிடம், “லோதேபாரில் அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்றான்.
5 தாவீது ராஜா பணியாட்களை லோதேபாரிலுள்ள அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் குமாரனை அங்கிருந்து அழைத்து வருவதற்காக அனுப்பினான். 6 யோனத்தானின் குமாரன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
தாவீது, “மேவிபோசேத்?” என்றான்.
மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான்.
7 தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான்.
8 மேவிபோசேத் மீண்டும் தாவீதை வணங்கினான். மேவிபோசேத், “உங்கள் பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக் காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான்.
9 அப்போது தாவீது ராஜா சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். 10 நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் குமாரர்களும் வேலையாட்களும் மேவிபோசேத்திற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச் சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மேவிபோசேத் உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும் என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான்.
சீபாவிற்கு 15 குமாரர்களும் 20 வேலைக்காரரும் இருந்தனர். 11 சீபா தாவீது ராஜாவை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது ராஜா கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான்.
மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய குமாரன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன். 13 மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் ராஜ பந்தியில் உணவுண்டான்.
2 எனது அடுத்த சந்திப்பு உங்களைத் துயரப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். 2 நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்? 3 இந்தக் காரணத்துக்காகத்தான் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். அதனால் உங்களை சந்திக்கும்போது, என்னை மகிழ்ச்சிப்படுத்தப்போகும் உங்களைத் துயரப்படுத்தமாட்டேன். எனது மகிழ்ச்சியை நீங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வீர்கள் என்று உறுதியாக எண்ணுகிறேன். 4 நான் இதற்கு முன்பு உங்களுக்கு எழுதும்போது மனதில் தொல்லைகளையும், துயரங்களையும் கொண்டிருந்தேன். நான் என் கண்ணீராலேயே எழுதினேன். உங்களைத் துயரப்படுத்த வேண்டுமென்று அதை எழுதவில்லை. உங்கள் மீதுள்ள என் அளவற்ற அன்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவ்வாறு எழுதினேன்.
தவறு செய்தவனை மன்னியுங்கள்
5 உங்கள் கூட்டத்திலுள்ள ஒருவனே துயரத்துக்குக் காரணமாக இருந்தான். எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவரின் துயரத்துக்கும் அவனே காரணமாக இருந்தான். அதாவது, ஏதாவது ஒரு வழியில் (நான் மிகைப்படுத்த விரும்பவில்லை) எல்லாருக்கும் துயரமுண்டாக அவன் காரணமாக இருந்தான். 6 உங்களில் பலர் அவனுக்குத் தந்த தண்டனையே போதுமானது. 7 ஆனால் இப்பொழுது அவனை மன்னித்து ஆதரவு அளிக்க வேண்டும். அது அவனை அதிக துயரத்தில் ஆழ்ந்து போகாதபடி காக்கும். 8 நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனால்தான் நான் உங்களுக்கு எழுதினேன். 9 நீங்கள் எல்லாவற்றிலும் பணிவுடன் இருக்கிறீர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன். 10 நீங்கள் யாரையாவது மன்னித்தால் அவர்களை நானும் மன்னித்துவிடுகிறேன். நான் மன்னிப்பவை அனைத்தும் (மன்னிக்கப்பட ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் பொருட்டே ஆகும். கிறிஸ்து எங்களோடு இருக்கிறார். 11 சாத்தான் என்னிடமிருந்த எதையும் வெல்ல முடியாதவகையில் இதைச் செய்தேன். சாத்தானின் சதிதிட்டங்களையும் நாம் நன்றாக அறிவோம்.
துரோவாவில் பவுலின் பணி
12 கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நான் துரோவாவிற்குப் போனேன். கர்த்தர் அங்கு எனக்கு நல்ல வாய்ப்பினைத் தந்தார். 13 அங்கே எனது சகோதரன் தீத்துவைப் பார்க்காததால் நான் அமைதியற்று இருந்தேன். எனவே நான் அங்குள்ளவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கதோனியாவிற்குப் போனேன்.
14 தேவனுக்கு நன்றி. தேவன் எப்பொழுதும் எங்களைக் கிறிஸ்துவின் மூலம் வெற்றி பெறும்படி வழி நடத்துகிறார். இனிய மணமுள்ள வாசனைப் பொருளைப் போன்று எல்லா இடங்களிலும் தேவன் தனது அறிவைப் பரப்ப நம்மைப் பயன்படுத்துகிறார். 15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்கிடையிலும் கெட்டுப்போவோரிடையேயும் நாங்கள் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். இதுவே நாங்கள் தேவனுக்குத் தரும் காணிக்கை. 16 கெட்டுப்போவோரிடையே இறப்புக்கு ஏதுவான மரணத்தின் வாசனையாக இருக்கிறோம். இட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே வாழ்க்கைக்கு ஏதுவான ஜீவ வாசனையாக இருக்கிறோம். இவைகளை செயல்படுத்தத் தகுதியானவன் யார்? 17 மற்றவர்களைப் போன்று, நாங்கள் தேவனுடைய வார்த்தையை இலாபத்துக்காக விற்பதில்லை. ஆனால் தேவனுக்கு முன்னால் கிறிஸ்துவுக்குள் உண்மையையே பேசுகிறோம். தேவனால் அனுப்பப்பட்டவர்களைப் போல் நாங்கள் பேசுகிறோம்.
16 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, எருசலேம் ஜனங்களிடம் அவர்கள் செய்திருக்கிற வெறுக்கத்தக்க செயல்களைப்பற்றி சொல். 3 நீ சொல்லவேண்டியது, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிற்கு இவற்றைச் சொல்கிறார்; உன் வரலாற்றைப் பார், நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உனது தந்தை எமோரியன்: உனது தாய் எத்தித்தி. 4 எருசலேமே, உன் பிறந்த நாளில் உன் தொப்புள் கொடியை அறுக்க யாருமில்லை, உன் மீது உப்பினைப் போட்டு உன்னைக் கழுவிச் சுத்தப்படுத்திட எவருமில்லை. எவரும் உன்னைத் துணியில் சுற்றவில்லை. 5 எருசலேமே, நீ தனிமையாக இருந்தாய். உனக்காக எவரும் வருத்தப்படவில்லை. உன்னை ஆதரிக்க எவருமில்லை. எருசலேமே, நீ பிறந்த நாளிலே உன் பெற்றோர் உன்னை வயல்வெளியில் வீசினார்கள். நீ அப்பொழுதும் பிறந்தவுடன் உன்மேலுள்ள இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன்.
6 “‘பிறகு நான் (தேவன்) கடந்து போனேன். அங்கே நீ இரத்தத்தில் கிடப்பதைப் பார்த்தேன். நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். நான் “நீ பிழைத்திரு!” என்றேன். ஆம் நீ இரத்தத்தால் மூடப்பட்டிருந்தாய். ஆனால் நான், “நீ பிழைத்திரு!” என்று சொன்னேன். 7 வயலில் வளரும் செடியைப்போன்று நீ வளர நான் உதவினேன். நீ இளம் பெண்ணானாய். நீ மேலும், மேலும் வளர்ந்தாய். உனது மாதவிலக்குத் தொடங்கியது. உனது மார்புகள் வளர்ந்தன. உனது முடி வளரத்தொடங்கியது. ஆனால் நீ அப்பொழுதும் நிர்வாணமாக இருந்தாய். 8 நான் உன்னை முழுவதாய் பார்த்தேன். நீ மணம் செய்ய தயாராக இருப்பதைப் பார்த்தேன். எனவே நான் எனது ஆடைகளை உன்மேல் விரித்து உனது நிர்வாணத்தை மறைத்தேன். நான் உன்னை மணந்துகொள்வதாய் வாக்களித்தேன். நான் உன்னோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தேன். நீ என்னுடையவளானாய்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: 9 “‘நான் உன்னை தண்ணீரில் கழுவினேன். நான் உன் இரத்தத்தைக் கழுவினேன். உன் தோல்மீது எண்ணெய் தடவினேன். 10 நான் உனக்கு சித்திரத் தையல் வேலை பொருந்திய ஆடையைக் கொடுத்தேன்: மென்மையான தோல் பாதரட்சைகளைக் கொடுத்தேன். நான் உனக்கு மெல்லிய புடவையையும் மூடிக்கொள்ள பட்டுச் சால்வையையும் கொடுத்தேன். 11 பிறகு, நான் உனக்கு சில நகைகளைக் கொடுத்தேன். நான் உனது கைகளில் கையணியையும், கழுத்துக்கு மாலையையும் கொடுத்தேன். 12 நான் உனக்கு மூக்கு வளையத்தையும், சில காதணிகளையும், அழகான கிரீடத்தையும் கொடுத்தேன். 13 நீ உனது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் அழகாக இருந்தாய். நீ மெல்லிய புடவையையும் பட்டையும் சித்திர வேலைப்பாடுகளுள்ள ஆடைகளையும் அணிந்தாய். நல்ல உணவினை உண்டாய். நீ மிக, மிக அழகுபெற்றாய். நீ இராணி ஆனாய்! 14 நீ உன் அழகில் புகழ்பெற்றாய். ஏனென்றால், நான் உன்னை அழகாகவும் மகிமையாகவும் ஆக்கியிருந்தேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
எருசலேம் என்னும் உண்மையற்ற மணவாட்டி
15 தேவன் சொன்னார்: “ஆனால் நீ உனது அழகை நம்பத்தொடங்கினாய். நீ உனது நல்ல பெயரைப் பயன்படுத்தி எனக்கு உண்மையற்றவளாக ஆனாய். உன்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் நீ வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அவர்கள் அனைவருக்கும் நீ உன்னையே கொடுத்தாய். 16 நீ உனது ஆடைகளை எடுத்து தொழுகை இடங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினாய். நீ அந்த இடங்களில் வேசியைப்போன்று நடந்துகொண்டாய். அங்கே வரும் அனைவருக்கும் நீ உன்னைக் கொடுத்தாய்! 17 பிறகு நீ உன் அழகான, நான் கொடுத்த நகைகளை எடுத்து, வெள்ளியாலும் தங்கத்தாலும் ஆன அந்நகைகளை ஆண் உருவங்களைச் செய்யப் பயன்படுத்தினாய். நீ அவர்களோடு பாலின உறவு வைத்துக்கொண்டாய். 18 பிறகு நீ உனது அழகான ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் பயன்படுத்தினாய். நான் உனக்குக் கொடுத்த நறுமணப் பொருட்களையும் தூபவர்க்கத்தையும் அவ்வுருவச் சிலைகளுக்கு முன்னால் வைத்தாய். 19 நான் உனக்கு அப்பம், தேன், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன். ஆனால் நீ அவற்றை அந்த விக்கிரகங்களுக்கு கொடுத்தாய். உனது பொய்த் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இனிய மணப்பொருட்களை வழங்கினாய்! அப்பொய்த் தெய்வங்களிடம் நீ ஒரு வேசியைப்போன்று நடந்துகொண்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
20 தேவன் சொன்னார்: “நீ எனக்குப் பெற்ற உன் குமாரர்களையும், உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களைக் கொன்று அப்பொய்த் தெய்வங்களிடம் கொடுத்துவிட்டாய்! ஆனால், நீ என்னை ஏமாற்றிவிட்டு அப்பொய்த் தெய்வங்களிடம் போனபோது நீ செய்த கெட்டக் காரியங்களில் இவைச் சில மாத்திரமே. 21 நீ எனது குமாரர்களை நெருப்பின் மூலம் கொன்று அப்பொய்த் தெய்வங்களுக்கு பலியாகக் கொடுத்தாய். 22 நீ என்னை விட்டு விலகி பயங்கரமானவற்றைச் செய்தாய். நீ இளமையாக இருந்த காலத்தைப்பற்றி நினைக்கவில்லை. நான் உன்னைக் கண்டபோது, நீ நிர்வாணமாக இரத்தம் படிந்து கிடந்ததை நினைப்பதில்லை.
23 “அனைத்துத் தீய செயல்களுக்கும் பிறகு, … ஓ எருசலேமே, உனக்கு மிகுந்த கேடு வரும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றையெல்லாம் கூறினார். 24 “அவை அனைத்துக்கும் பிறகு அந்தப் பொய்த் தெய்வத்தை தொழுதுகொள்ள நீ மேடையைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள நீ அவ்விடங்களைக் கட்டினாய். 25 ஒவ்வொரு சாலையின் முனையிலும் நீ உயர்ந்த மேடைகளைக் கட்டினாய். பிறகு நீ உன் அழகை கேவலப்படுத்திக்கொண்டாய். அவ்வழியாகப் போவோரைப் பிடிக்க அதனைப் பயன்படுத்தினாய். நீ உனது பாவாடையைத் தூக்கினாய். அதனால் அவர்களால் உன் கால்களைக் காணமுடிந்தது. பின் அம்மனிதர்களோடு வேசிகளைப்போன்று நடந்துகொண்டாய். 26 பிறகு நீ எகிப்துக்குப் போனாய். ஏனென்றால் அவனிடம் பெரிய ஆணுறுப்பு இருந்தது. எனக்குக் கோபம் ஊட்டுவதற்காக நீ அவனோடு பலமுறை பாலின உறவு வைத்துக்கொண்டாய். 27 எனவே நான் உன்னைத் தண்டித்தேன். நான் உனது சம்பளத்தின் (நிலம்) ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன். உனது பகைவர்களான பெலிஸ்தருடைய குமாரத்திகள் (நகரங்கள்) அவர்கள் விருப்பப்படி உனக்கு வேண்டியதைச் செய்ய அனுமதித்தேன். அவர்கள் கூட உனது முறைகேடான செயல்களைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். 28 பிறகு நீ அசீரியாவோடு பாலின உறவு செய்தாய். உனக்குப் போதுமானதை பெற முடியவில்லை, நீ எப்பொழுதும் திருப்திபட்டதில்லை. 29 எனவே நீ கானான் பக்கம் திரும்பினாய், பிறகு பாபிலோனில் இருந்தும் நீ திருப்தி அடையவில்லை. 30 நீ உன்னுடைய தீய வழிகளினால் பெலவீனமடைந்தாய். பாவம் செய்வதற்கு மற்ற அனைத்து ஆண்களையும் நீ அனுமதித்தாய். நீ ஒரு வெட்கமற்ற வேசியைப்போலவே நடந்துகொண்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
31 தேவன் சொன்னார், “ஆனால் நீ ஒரு சரியான வேசியாக இருக்கவில்லை. ஒவ்வொரு சாலை முனைகளிலும் நீ மேடைகளைக் கட்டினாய். ஒவ்வொரு தெருமுனையிலும் நீ வழிபடுவதற்கான இடங்களைக் கட்டினாய். நீ அம்மனிதர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாய். ஆனால் நீ வேசியைப்போன்று அவர்களிடம் பணம் கேட்கவில்லை. 32 நீ சோரம் போன பெண். நீ உன் சொந்தக் கணவனை விட்டுவிட்டு அந்நிய ஆண்களோடு பாலின உறவுகொள்வதை விரும்புகிறவள். 33 பெரும்பாலான வேசிகள் பாலின உறவுக்காக பணத்தை வற்புறுத்திக் கேட்பார்கள். ஆனால் நீ உனது நேசர்களுக்கு உன்னையே கொடுத்தாய். நீ உன்னுடைய நேசர்களுக்குப் பணத்தைக் கொடுத்து உன்னோடு பாலின உறவுகொள்ள வரும்படி அழைத்தாய். 34 நீ வேசிகளுக்கு எதிர்மாறாக இருக்கிறாய். வேசிகள் வேசித்தனம் செய்ய பணம் கேட்டு வற்புறுத்துவார்கள். ஆனால் நீயோ உன்னோடு உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய்.”
35 வேசியே, கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள். 36 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ உனது பணத்தைச் செலவழித்தாய். உன்னை நேசித்தவர்களும் பொய்த் தெய்வங்களும் உனது நிர்வாணத்தைக் காணவும் உன்னோடு பாலின உறவுகொள்ளவும் அனுமதித்தாய். நீ உன் குழந்தைகளைக் கொன்றிருக்கிறாய். அவர்களது இரத்தத்தைச் சிந்தினாய். அப்போலித் தெய்வங்களுக்கு இது நீயளித்த பரிசாகும். 37 எனவே நான் உன்னை நேசித்த யாவரையும் ஒன்று கூட்டுவேன். உன்னை நேசித்த எல்லா ஆண்களையும், நீ வெறுத்த எல்லா ஆண்களையும் ஒன்று கூட்டுவேன். அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி உனது நிர்வாணத்தைப் பார்க்கும்படிச் செய்வேன். அவர்கள் உனது முழு நிர்வாணத்தையும் பார்பார்கள். 38 பிறகு நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைக் கொலைக்காரியாகவும் சோரம் போனவளாகவும் தண்டிப்பேன். ஒரு கோபமும் பொறாமையும்கொண்ட கணவனால் பழி தீர்க்கப்படுவதுபோல் தண்டிப்பேன். 39 உன்னை நேசித்தவர்களிடம் உன்னை ஒப்படைப்பேன். அவர்கள் உனது மேடைகளை அழிப்பார்கள். அவர்கள் உன்னை தொழுதுகொள்ளும் இடங்களை எரிப்பார்கள், அவர்கள் உன்னுடைய உயர்ந்த ஆராதனை மேடைகளை உடைத்துப்போடுவார்கள். அவர்கள் உனது ஆடைகளை கிழித்தெறிவார்கள். உனது அழகான நகைகளை எடுத்துக்கொள்வார்கள். நான் உன்னை முதலில் பார்த்தபோது இருந்ததைப்போன்று அவர்கள் உன்னை நிர்வாணமாக விட்டு விட்டுப் போவார்கள். 40 அவர்கள் ஜனங்கள் கூட்டத்தைக் கூட்டி வந்து உன்மேல் கல்லை எறிந்து கொல்ல முயல்வார்கள், பிறகு அவர்கள் தம் வாள்களால் உன்னைத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள். 41 அவர்கள் உனது வீட்டை (ஆலயத்தை) எரிப்பார்கள். பிற பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீ ஒரு வேசியைப்போல் வாழ்வதை நான் தடுப்பேன். நீ உனது நேசர்களுக்குப் பணம் கொடுப்பதையும் நான் தடுப்பேன். 42 பிறகு நான் கோபமும் பொறாமையும் அடைவதை நிறுத்துவேன். நான் அமைதி அடைவேன். நான் இனிக் கோபங்கொள்ளமாட்டேன். 43 ஏன் இவை எல்லாம் நிகழ்கின்றன? நீ இளமையில் எவ்வாறு இருந்தாய் என்பதை நினைக்காததால் இவையெல்லாம் உனக்கு நிகழும். நீ அனைத்து தீயச்செயல்களையும் செய்து என்னைக் கோபமூட்டுகிறாய். அதனால் நான் உன்னைத் தீயச் செயல்களுக்காகத் தண்டித்தேன். ஆனால் நீ இன்னும் பயங்கரமான செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
44 “உன்னைப்பற்றி பேசுகிற ஜனங்கள் எல்லாரும் பேச இன்னுமொன்று உள்ளது. அவர்கள், ‘தாயைப் போல குமாரத்தி’ என்று சொல்வார்கள். 45 நீ உனது தாயின் குமாரத்தி. நீ உனது கணவன் அல்லது குழந்தைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. நீ உனது சகோதரியைப் போன்றிருக்கிறாய். நீங்கள் இருவரும் கணவனையும் குழந்தைகளையும் வெறுத்தீர்கள். நீ உனது பெற்றோர்களைப் போன்றிருக்கிறாய். உனது தாய் ஏத்தித்தி, உன் தகப்பன் எமோரியன். 46 உனது மூத்த சகோதரி சமாரியா. அவள் உனது வட புறத்தில் தன் குமாரத்திகளோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். உன் இளைய சகோதரி சோதோம். அவள் உனது தென்புறத்தில் தனது குமாரத்திகளோடு (நகரங்கள்) வாழ்ந்தாள். 47 அவர்கள் செய்த அனைத்து பயங்கரங்களையும் நீயும் செய்தாய். ஆனால் நீ அவற்றை விடவும் மோசமாகச் செய்தாய். 48 நானே கர்த்தரும், ஆண்டவரும் ஆவேன். நான் உயிரோடு இருக்கிறேன். என் உயிரைக்கொண்டு நான் வாக்குரைக்கிறேன். உன் சகோதரி சோதோமும் அவளது குமாரத்திகளும் நீயும் உனது குமாரத்திகளும் செய்ததுபோன்று அவ்வளவு தீயச்செயல்களைச் செய்யவில்லை.”
49 தேவன் சொன்னார்: “உனது சகோதரி சோதோமும் அவளது குமாரத்திகளும் தற்பெருமை கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக உண்டார்கள். அதிகமான நேரத்தை வீணாக செலவழித்தனர். அவர்கள் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவவில்லை. 50 சோதோமும் அவளது குமாரத்திகளும் மிகவும் தற்பெருமை கொண்டவர்களாகி எனக்கு முன்னால் தீமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைச் செய்வதைக் கண்டபோதெல்லாம் நான் தண்டித்தேன்.”
51 தேவன் சொன்னார்: “நீ செய்த தீயச் செயல்களில் பாதி அளவுக்கூட சமாரியா செய்யவில்லை. நீ சமாரியாவை விடப் பல மடங்கு தீமைகளைச் செய்திருக்கிறாய். நீ உன் சகோதரிகளை விடப் பல மடங்கு பாவங்களைச் செய்திருக்கிறாய். சோதோமும் சமாரியாவும் உன்னோடு ஒப்பிடும்போது நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். 52 எனவே, உனது அவமானத்தை நீ தாங்கிக்கொள்ள வேண்டும். உன்னோடு ஒப்பிடும்போது உனது சகோதரிகளை நீ நல்லவர்கள் ஆக்கிவிடுகிறாய். நீ பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறாய். எனவே, நீ அவமானப்படவேண்டும்.”
53 தேவன் சொன்னார்: “நான் சோதோமையும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தேன். நான் சமாரியாவையும் அதனைச் சுற்றியுள்ளவற்றையும் அழித்தேன். எருசலேமே, உன்னையும் நான் அழிப்பேன். ஆனால் அந்நகரங்களை நான் மீண்டும் கட்டுவேன். எருசலேமே உன்னையும் நான் கட்டுவேன். 54 நான் உனக்கு ஆறுதல் அளிப்பேன். பிறகு நீ செய்த பயங்கரமான காரியங்களை நினைவுபடுத்துவாய். நீ அதற்கு அவமானப்படுவாய். 55 எனவே, நீயும் உன் சகோதரிகளும் மீண்டும் கட்டப்படுவீர்கள். சோதோமும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் சமரியாவும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும், நீயும் உன்னைச் சுற்றியுள்ள நகரங்களும், மீண்டும் கட்டப்படுவீர்கள்.”
56 தேவன் சொன்னார், “முன்பு, நீ தற்பெருமை கொண்டு சோதோமைக் கேலி செய்தாய். ஆனால் நீ அவற்றை மீண்டும் செய்யமாட்டாய். 57 நீ தண்டிக்கப்படுவதற்கு முன்பும் உனது அயலவர்கள் உன்னைக் கேலிசெய்வதற்கு முன்பும் நீ அவற்றைச் செய்தாய். ஏதோமின் குமாரத்திகளும் (நகரங்கள்) பெலிஸ்தியாவும் உன்னை இப்போது கேலி செய்கிறார்கள். 58 இப்பொழுது நீ செய்த பயங்கரச் செயல்களுக்காக வருத்தப்படவேண்டும்.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்
59 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார், “நீ என்னை நடத்தின வண்ணம் நான் உன்னை நடத்துவேன்! நீ உனது திருமண உடன்படிக்கையை உடைத்தாய். நீ நமது உடன்படிக்கையை மதிக்கவில்லை. 60 ஆனால் நான் உனது இளமையில் செய்த உடன்படிக்கையை ஞாபகப்படுத்திக்கொள்வேன். நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கை உன்னோடு செய்தேன்! 61 நான் உன் சகோதரிகளை உன்னிடம் அழைத்து வந்தேன். நான் அவர்களை உனது குமாரத்திகளாக ஆக்குவேன். அது நமது உடன்படிக்கையில் இல்லை. ஆனால் அதனை உனக்காகச் செய்வேன். பிறகு நீ உனது தீய வழிகளை நினைத்து அதற்காக அவமானமடைவாய். 62 எனவே நான் எனது உடன்படிக்கையை உன்னுடன் செய்வேன். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய். 63 நான் உன்னிடம் நல்லபடி இருப்பேன். எனவே என்னை நீ நினைவுகொள்வாய். நீ செய்த தீமைகளுக்காக வெட்கப்படுவாய். உன்னால் ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால் நான் உன்னை தூய்மையாக்குவேன். நீ மீண்டும் வெட்கமடையமாட்டாய்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல்.
58 நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்புகளில் நியாயமானவர்களாக இருக்கவில்லை.
நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்கவில்லை.
2 நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள்.
இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.
3 அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.
பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
4 அவர்கள் பாம்புகளைப்போன்று ஆபத்தானவர்கள்.
காதுகேளாத விரியன் பாம்புகளைப் போன்று, அவர்கள் உண்மையைக் கேட்க மறுக்கிறார்கள்.
5 பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை.
அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.
6 கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.
எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.
7 வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும்.
பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.
8 அவர்கள், அசையும்போதெல்லாம் கரைந்து போகிற நத்தையைப் போலாகட்டும்.
அவர்கள் பகலின் ஒளியைக் காணாமல் பிறக்கும்போதே மரித்துப்போன குழந்தையைப்போல இருக்கட்டும்.
9 நெருப்பில் வைக்கப்படும் பானையைச் சூடேற்றுவதற்காக
விரைந்து எரியும் முட்களைப்போன்று அவர்கள் விரைவில் அழியட்டும்.
10 நல்லவனுக்குத் தீமைசெய்த ஜனங்கள் தண்டிக்கப்படுவதை, அவன் பார்க்கையில் மகிழ்ச்சியடைவான்.
அக்கெட்ட மனிதர்களின் இரத்தத்தால் அவன் தனது பாதங்களைக் கழுவுவான்.
11 அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், “நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர்,
உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்” என்பார்கள்.
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
59 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
2 தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
4 அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
5 நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
6 அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
7 அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
8 கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
9 தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
நீரே என்னை நேசிக்கும் தேவன்.
2008 by World Bible Translation Center