M’Cheyne Bible Reading Plan
பெலிஸ்தர் போருக்குத் தயாராகுதல்
28 பிறகு பெலிஸ்தர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட கூடினார்கள். ஆகீஸ் தாவீதிடம், “இப்போது நீயும் உனது ஆட்களும் என்னோடு இஸ்ரவேலுக்கு எதிராகச் சண்டையிட வரவேண்டும் என்று அறிவாயா?” என்று கேட்டான்.
2 தாவீது, “உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!” என்றான்.
ஆகீஸும், “நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்” என்றான்.
சவுலும் எந்தோரின் பெண்ணும்
3 சாமுவேல் மரித்ததும், அனைத்து இஸ்ரவேலரும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சாமுவேலை அவனது தாய் மண்ணான ராமாவில் அடக்கம் செய்திருந்தனர்.
சவுல் மரித்தவர்களின் ஆவிகளோடு பேசுகிறவர்களையும் ஆரூடம், குறி சொல்கிறவர்களையும் நகரத்தில் இராதபடித் துரத்தியிருந்தான்.
4 பெலிஸ்தர் போருக்குத் தயாரானார்கள். அவர்கள் சூநேமிலே கூடி முகாமிட்டு தங்கினார்கள். சவுல் இஸ்ரவேலரையெல்லாம் கூட்டி கில்போவாவில் முகாமிட்டான். 5 சவுல் பெலிஸ்தியரின் படையைப் பார்த்து பயந்தான். அவன் மனதில் பயம் நிறைந்தது. 6 சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை. 7 கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான்.
அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர்.
8 சவுல் தன்னை மறைத்து மாறுவேடத்தில் போனான். அன்று இரவு சவுல் இரண்டு ஆட்களோடு அந்தப் பெண்ணை சந்தித்தான். அவன் அவளிடம், “நீ ஒரு ஆவியைக் கூப்பிடு. நான் விரும்பி பேர் சொல்லுகிறவனின் ஆவியை நீ அழைக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள்.
10 சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான்.
11 அப்பெண்ணோ சவுலிடம், “உனக்காக யாரை வரவழைக்க நீ விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
அதற்கு அவன், “சாமுவேலின் ஆவியை” என்றான்.
12 அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள்.
13 ராஜா அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான்.
“நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து[a] வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள்.
14 சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான்.
அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள்.
அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது. 15 சாமுவேலின் ஆவி சவுலிடம், “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? எதற்காக எழுப்பினாய்!” என்று கேட்டது.
அதற்கு சவுல், “நான் ஆபத்தில் சிக்கி இருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகச் சண்டையிட வந்திருக்கிறார்கள். தேவன் என்னை கைவிட்டு விலகிவிட்டார். தேவன் இனி எனக்கு பதில் சொல்வதில்லை. அவர் தீர்க்கதரிசியையோ, கனவையோ பயன்படுத்தி பதில் சொல்லுவதில்லை. அதனால் உங்களை அழைத்தேன், நான் செய்யவேண்டியது இன்னது என்று நீங்கள் சொல்ல விரும்புகிறேன்” என்றான்.
16 சாமுவேலின் ஆவி, “கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? 17 கர்த்தர் என்ன செய்ய இருக்கிறாரோ அதையே என் மூலம் எற்கனவே கூறிவிட்டார்! கர்த்தர் சொன்னதை இப்போது நிறைவேற்றுகிறார். உனது கைகளிலிருந்து கர்த்தர் அரசைக் கிழித்தெடுத்து, உனக்கு அருகிலுள்ள தாவீதுக்குக் கொடுத்திருக்கிறார். 18 நீ கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அமலேக்கியரை நீ முழுமையாக அழிக்கவில்லை. கர்த்தர் அவர்கள் மீது கோபமுடையவராக இருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. அதனால் இன்று கர்த்தர் உனக்கு இவ்வாறு செய்கிறார். 19 கர்த்தர் உன்னையும் இஸ்ரவேல் படையையும் பெலிஸ்தர்கள் மூலமாகத் தோற்கடிப்பார். நாளை நீயும், உனது குமாரர்களும் இங்கே என்னோடு இருப்பீர்கள்!” என்றது.
20 சவுல் உடனே தரையில் விழுந்து கிடந்தான். சாமுவேல் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்தான். அன்று சவுல் இரவும் பகலும் உண்ணாமல் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தான்.
21 அந்தப் பெண் சவுலிடம் வந்து, உண்மையில் அவன் பயப்படுவதைக் கவனித்தாள். அவள் “நான் உங்கள் வேலைக்காரி, நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறேன். என் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் சொன்னப்படி செய்தேன். 22 இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள்.
23 ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான்.
சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான், தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். 24 அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள். 25 சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.
9 நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். 2 மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.
3 சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். 4 உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? 5 நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். 6 பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. 7 படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை.
8 இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. 9 ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.”(A) தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. 10 இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். 11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. 12 பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். 13 தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
15 ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும். 16 நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். 17 நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். 18 எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை.
19 நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். 20 யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். 21 சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) 22 பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். 23 நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.
24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.
7 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார்: “இப்பொழுது, மனுபுத்திரனே, இதைச் சொல்: எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இச்செய்தி இஸ்ரவேல் நாட்டுக்குரியது!
“முடிவு வந்திருக்கிறது.
நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
3 இப்பொழுது உன் முடிவு வந்துகொண்டிருக்கிறது!
நான் உன் மீது எவ்வளவு கோபத்தோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.
நீ செய்த பயங்கரமானவற்றுக்கெல்லாம் உன்னை விலை கொடுக்கும்படிச் செய்வேன்.
4 நான் உன்னிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்.
நான் உனக்காக வருத்தப்படமாட்டேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிக்கிறேன்.
நீ அத்தகைய பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறாய்.
இப்பொழுது நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்! 6 முடிவு வருகிறது, அது விரைவில் நிகழும்! 7 இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும், மேலும் அதிகரிக்கிறது. 8 இப்பொழுது மிக விரைவில் நான் எனது கோபத்தைக் காட்டுவேன். உனக்கு எதிரான எனது கோபம் முழுவதையும் நான் காட்டுவேன். நீ செய்த தீயவற்றுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கர செயலுக்காக விலை கொடுக்கச் செய்வேன். 9 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீங்கள் அத்தகைய பயங்கரங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை அடிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
10 “ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பதுபோல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஏற்கெனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான். 11 மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.
12 “அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். 13 தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.
14 “அவர்கள் ஜனங்களை எச்சரிக்க எக்காளத்தை ஊதுவார்கள். ஜனங்கள் போருக்குத் தயாராவார்கள். ஆனால் அவர்கள் போர் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கூட்டத்தின் மேல் நான் எவ்வளவு கோபங்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். 15 பகைவன் தனது வாளோடு நகரத்திற்கு வெளியே இருக்கிறான். நோயும் பசியும் நகரத்திற்குள்ளே இருக்கின்றன. ஒருவன் நகரத்திற்கு வெளியே போனால் பகைவரின் போர்வீரன் கொல்வான். அவன் நகரில் தங்கினால் பசியும் நோயும் அவனை அழிக்கும்.
16 “ஆனால் சில ஜனங்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் மலைகளுக்கு ஓடுவார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் தமது அனைத்து பாவங்களுக்காகவும் வருந்துவார்கள். அவர்கள் அழுவார்கள். புறாக்களைப் போன்ற துயர ஒலிகளை எழுப்புவார்கள். 17 ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும். 18 அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள். 19 அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.
20 “அந்த ஜனங்கள் தம் அழகான நகைகளைப் பயன்படுத்தி ஒரு சிலையைச் செய்தனர். அவர்கள் அச்சிலைக்காகப் பெருமைப்பட்டனர். அவர்கள் தமது வெறுக்கத் தக்க சிலைகளைச் செய்தனர்! அவர்கள் நரகலான அவற்றைச் செய்தனர். எனவே நான் (தேவன்) அவர்களை அழுக்கு நிறைந்த கந்தையைப்போல் வெளியே எறிவேன். 21 அவர்களை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்படி அனுமதிப்பேன். அந்நியர்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். அந்த அந்நியர்கள் சில ஜனங்களைக் கொன்று மற்றவர்களைக் கைதிகளாகச் சிறைபிடிப்பார்கள். 22 அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.
23 “சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும். 24 நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்.
25 “ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது. 26 நீங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் துன்பக் கதைகளைக் கேட்பீர்கள். நீங்கள் கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் தீர்க்கதரிசியைத் தேடி அவனிடம் தரிசனம் பற்றி கேட்பீர்கள், ஆனால் அது கிடைக்காது. ஆசாரியர்களிடம் உங்களுக்குக் கற்றுத்தர எதுவும் இருக்காது. மூப்பர்களிடம் உங்களுக்கு ஆலோசனை சொல்ல எதுவும் இருக்காது. 27 உங்கள் ராஜா மரித்துப்போன ஜனங்களுக்காக அழுதுகொண்டிருப்பான். தலைவர் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் மிகவும் பயந்து போயிருப்பார்கள். ஏனென்றால், நான் அவர்களுடைய தீயசெயல்களுக்கு ஏற்றவண்ணம் திருப்பிக்கொடுப்பேன். அவர்களுக்குரிய தண்டனையை நான் தீர்மானிப்பேன். நான் அவர்களைத் தண்டிப்பேன். பிறகு அந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.”
“சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல்.
45 ராஜாவுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும்.
தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
2 நீரே யாவரினும் அழகானவர்!
நீர் பேச்சில் வல்லவர், எனவே தேவன் உம்மை என்றென்றும் ஆசீர்வதிப்பார்.
3 வாளை எடும்.
மேன்மையான ஆடைகளை அணியும்.
4 நீர் அற்புதமாகக் காட்சியளிக்கிறீர்!
நன்மைக்காகவும், நீதிக்காகவும் சென்று போரில் வெல்லும்.
அதிசயங்களைச் செய்வதற்கு வல்லமைமிக்க உமது வலக்கரத்தைப் பயன்படுத்தும்.
5 உமது அம்புகள் ஆயத்தமாயுள்ளன.
நீர் பலரைத் தோற்கடிப்பீர். உமது பகைவர்கள் மீது ராஜாவாயிரும்.
6 தேவனே, உமது ஆட்சி என்றென்றும் தொடரும்.
நன்மையே உமது செங்கோலாகும்.
7 நீர் நன்மையை விரும்பித் தீமையைப் பகைக்கிறீர்.
எனவே உமது தேவன் உம் நண்பர்களுக்கு மேலாக உம்மை ராஜாவாக்கினார்.
8 வெள்ளைப்போளம், இலவங்கம், சந்தனம் ஆகியவற்றின் நறுமணம் உம் ஆடைகளில் வீசும்.
தந்தத்தால் மூடப்பட்ட அரண்மனைகளிலிருந்து உம்மை மகிழ்வூட்டும் இசை பரவும்.
9 மணத்தோழியரே ராஜாவின் குமாரத்திகள் ஆவர்.
உமது வலப் பக்கத்தில் மணப்பெண் பொன்கிரீடம் சூடி நிற்கிறாள்.
10 மகளே, கேள்,
கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய்.
உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.
11 ராஜா உன் அழகை விரும்புகிறார்.
அவர் உன் புது மணமகன்.
நீ அவரைப் பெருமைப்படுத்துவாய்.
12 தீருவின் செல்வந்தர்கள் ஜனங்கள் உனக்குப் பரிசுகள் தருவார்கள்.
அவர்கள் உன்னைக் காண விரும்புவார்கள்.
13 அரச குமாரத்தி
பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.
14 மணமகள் அழகிய ஆடையணிந்து ராஜாவிடம் அழைத்துவரப்பட்டாள்.
மணத் தோழியர் அவளைத் தொடர்ந்தனர்.
15 அவர்கள் மகிழ்ச்சி பொங்க வந்தனர்.
மனமகிழ்வோடு அரண்மனைக்குள் நுழைந்தனர்.
16 ராஜாவே, உம் குமாரர்கள் உமக்குப் பின் ஆட்சி செய்வார்கள்.
தேசம் முழுவதும் அவர்களை ஆளச் செய்வீர்.
17 உமது நாமத்தை என்றென்றும் புகழ் பெறச் செய்வேன்.
என்றென்றும் ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
2008 by World Bible Translation Center