Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 10

சூரியன் அசையாது நின்ற நாள்

10 அக்காலத்தில் அதோனிசேதேக் எருசலேமின் ராஜாவாக இருந்தான். யோசுவா ஆயீ நகரைத் தோற்கடித்து முற்றிலும் அழித்துவிட்டான் என்ற செய்தியை அந்த ராஜா அறிந்தான். எரிகோவிற்கும் அதன் ராஜாவுக்கும் யோசுவா அவ்வாறே செய்தான் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவன் அறிந்திருந்தான். அந்த ஜனங்கள் எருசலேமுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்தனர். எனவே அதோனிசேதேக்கும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்தனர். கிபியோன் ஆயீயைப் போன்ற சிறிய நகரமன்று. கிபியோன் ஒரு பெரிய பலமான நாடு. அங்கிருந்த ஆண்கள் அனைவரும் சிறந்த போர் வீரர்களாக இருந்தார்கள். எருசலேமின் ராஜாவாகிய, அதோனிசேதேக், எபிரோனின் ராஜாவாகிய, ஓகாமுடனும் யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுடனும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுடனும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருடனும் பேச்சு வார்த்தை நடத்தினான். எருசலேமின் ராஜா இவர்களிடம், “என்னோடு வந்து கிபியோனைத் தாக்குவதற்கு உதவுங்கள். யோசுவாவோடும் இஸ்ரவேல் ஜனங்களோடும் கிபியோனியர் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளனர்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

இந்த ஐந்து எமோரிய ராஜாக்களும் படை திரட்டினர். (அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆவார்கள்.) அப்படைகள் கிபியோனை நோக்கிச் சென்று நகரைச் சூழ்ந்து கொண்டு, போர் செய்ய ஆரம்பித்தன.

கிபியோன் நகர ஜனங்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கி இருந்த யோசுவாவிற்குச் செய்தியனுப்பினார்கள்: அதில், “நாங்கள் உமது பணியாட்கள்! எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வந்து எங்களுக்கு உதவுங்கள்! விரைந்து வாருங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள்! மலை நாட்டின் எமோரிய ராஜாக்கள் எல்லோரும் எங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு அவர்கள் படைகளைக் கொண்டுவந்துள்ளனர்” என்று இருந்தது.

எனவே யோசுவா தனது படையோடு கில்காலிலிருந்து புறப்பட்டான். யோசுவாவின் சிறந்த படை வீரர்கள் அவனோடிருந்தனர். கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.

யோசுவாவும், அவனது படையும் கிபியோனுக்கு இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே அவன் திடீரென்று தாக்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

10 இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். 11 அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம்.

12 கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி:

“சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும்.
    ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான்.

13 எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. 14 அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!

15 அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள். 16 ஆனால் போரின்போது, ஐந்து ராஜாக்களும் ஓடிப் போய் மக்கெதாவிற்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்தனர். 17 அவர்கள் குகைகளில் ஒளிந்திருந்ததைச் சிலர் பார்த்து யோசுவாவிற்கு தெரிவித்தார்கள். 18 யோசுவா, “குகையின் நுழை வாசலைப் பெரிய கற்களைப் புரட்டி மூடிவிடுங்கள். அக்குகையைக் காவல் செய்வதற்குச் சிலரை நியமியுங்கள். 19 ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான்.

20 யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் பகைவர்களை வென்றனர். ஆனால் சில பகைவர்கள் அவர்கள் நகரங்களுக்குப் போய் ஒளிந்துகொண்டனர். அவர்கள் கொல்லப்படவில்லை. 21 போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை.

22 யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து ராஜாக்களையும் என்முன் கொண்டு வாருங்கள்” என்றான். 23 யோசுவாவின் ஆட்கள் அப்படியே செய்தனர். அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகியவற்றின் ராஜாக்களாவார்கள். 24 அவர்கள் அந்த ஐந்து ராஜாக்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த ராஜாக்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த ராஜாக்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர்.

25 அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, “வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்” என்றான்.

26 யோசுவா அந்த ஐந்து ராஜாக்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான். 27 சூரியன் மறையும் வேளையில் யோசுவா அவனது ஆட்களிடம் அந்த உடல்களை மரங்களிலிருந்து கீழே இறக்குமாறு கூறினான். அவர்கள் அந்த உடல்களை இறக்கி முன்பு அந்த ராஜாக்கள் ஒளித்திருந்த குகைளில் போட்டு மூடி, அவற்றின் வாசல்களைப் பெரிய பாறைகளால் மூடினார்கள். அந்தப் பாறைகள் இன்றைக்கும் உள்ளன.

28 அன்று யோசுவா மக்கெதா என்னும் நகரத்தை வென்றான். அந்நகரின் ராஜாவையும் ஜனங்களையும் கொன்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை. எரிகோவின் ராஜாவுக்குச் செய்தபடியே மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.

தெற்குப் பகுதியின் நகரங்களைக் கைப்பற்றுதல்

29 பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள். 30 அந்நகரத்தையும் அதன் ராஜாவையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் ராஜாவுக்குச் செய்தபடியே லிப்னாவின் ராஜாவுக்கும் செய்தனர்.

31 பிறகு யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் லிப்னா நகரிலிருந்து லாகீசை நோக்கிச் சென்றனர். யோசுவாவும் அவனது படையும் லாகீசைச் சுற்றிலும் முகாமிட்டு அந்நகரத்தைத் தாக்கினார்கள். 32 லாகீசு நகரத்தைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவர்களை அனுமதித்தார். இரண்டாம் நாளில் அந்நகரைத் தோற்கடித்தார்கள். லிப்னாவில் செய்தபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரிலிருந்த அனைவரையும் கொன்றார்கள். 33 அப்போது கேசேரின் ராஜாவாகிய ஓராம், லாகீசுக்கு உதவியாக வந்தான். யோசுவா அவனையும் அவனது படையையும் கூட வென்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை.

34 பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள். 35 அவர்கள் அன்றைக்கு அந்நகரைக் கைப்பற்றியதோடு அங்கு வசித்து வந்த ஜனங்களையும் கொன்றனர். லாகீஸ் நகரில் செய்தபடியே இந்த நகரிலும் செய்தனர்.

36 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலரும் எக்லோன் நகரத்திலிருந்து எபிரோன் என்னும் நகருக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். 37 அவர்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர். நகரத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் இஸ்ரவேலர் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. அவர்கள் எக்லோனிலும் அவ்வாறே செய்திருந்தனர். அவர்கள் நகரத்தை அழித்து, எல்லா ஜனங்களையும் கொன்றனர்.

38 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லோரும் தெபீருக்குத் திரும்பிச்சென்று, அந்நகரைத் தாக்கினார்கள். 39 அவர்கள் நகரத்தையும், அதன் ராஜாவையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் ராஜாவுக்கும் செய்திருந்தனர்.

40 மலை நாடுகளிலும், பாலைவனங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு மலையடிவாரங்களிலும், இருக்கிற நகரங்களையெல்லாம் ஆட்சி செய்த எல்லா ராஜாக்களையும் யோசுவா தோற்கடித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எல்லா ஜனங்களையும் கொல்லும்படியாக யோசுவாவிற்குக் கூறினார். எனவே யோசுவா அந்த இடங்களில் யாரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை.

41 காதேஸ் பர்னேயாவிலிருந்து காத்சா வரைக்கும் இருந்த எல்லா நகரங்களையும் யோசுவா கைப்பற்றினான். எகிப்திலிருந்த கோசேன் நிலப் பகுதியிலிருந்து கிபியோன் வரையிலிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். 42 யோசுவா அந்த நகரங்கள் அனைத்தையும் அவற்றின் ராஜாக்களையும் ஒரே ராணுவ நடவடிக்கையில் கைப்பற்றினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் போராடியதால் யோசுவா இதை சாதித்தான். 43 பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.

சங்கீதம் 142-143

தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்.

142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
    நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
    நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
    நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
    ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
    எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.

எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
    கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
    கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
    என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
    அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
    நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று.

143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
    நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
    என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
    என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
    நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
    நான் என் தைரியத்தை இழந்தேன்.
    என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
    கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
    நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
    நீரே என் தேவன்.

11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
    அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
    என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
    ஏனெனில் நான் உமது ஊழியன்.

எரேமியா 4

“இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா.
    உனது விக்கிரகங்களைத் தூர எறி.
என்னை விட்டுத் தூரமாக அலையாதே.
நீ அவற்றைச் செய்தால்,
    பிறகு நீ எனது நாமத்தைப் பயன்படுத்தி, வாக்குகொடுக்க வல்லமை பெறுவாய்,
‘கர்த்தர் வாழ்கிறதுபோல’
    என்று நீ சொல்லும் வல்லமை பெறுவாய்.
அந்த வார்த்தைகளை உண்மையோடும்,
    நியாயத்தோடும், நீதியோடும், பயன்படுத்தும் வல்லமைபெறுவாய்:
நீ இவற்றைச் செய்தால்,
    பிறகு கர்த்தரால் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படும்.
அவர்கள் கர்த்தர் செய்திருக்கிறவற்றைப்பற்றி,
    மேன்மை பாரட்டுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:

“உங்கள் வயல்கள் உழப்படவில்லை,
    அவற்றை உழுங்கள்,
    முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள்.
கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள்.
    உங்கள் இதயங்களை மாற்றுங்கள்!
யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே!
    நீங்கள் மாற்றாவிட்டால் பிறகு நான் மிகவும் கோபம் அடைவேன்.
எனது கோபம் நெருப்பைப் போன்று வேகமாகப் பரவும்.
    எனது கோபம் உங்களை எரித்துப்போடும்.
எவராலும் அந்த நெருப்பை அணைக்கமுடியாது.
    இது ஏன் நிகழும் என்றால், நீங்கள் தீங்கான செயல்கள் செய்திருக்கிறீர்கள்.”

வடக்கிலிருந்து வரும் அழிவு

“யூதா ஜனங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள்.
    எருசலேம் நகரத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் சொல்,
‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்.’ உரக்கச் சத்தமிட்டு,
    ‘ஒன்றுசேர்ந்து வாருங்கள்! நாம் அனைவரும் பாதுகாப்புக்காக உறுதியான நகரங்களுக்குத் தப்புவோம்.’ என்று சொல்லுங்கள்.
சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள்.
    உங்கள் வாழ்வுக்காக ஓடுங்கள்! காத்திருக்காதீர்கள்.
இதனைச் செய்யுங்கள்.
ஏனென்றால், நான் வடக்கிலிருந்து பேரழிவைக் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறேன்.
    நான் பயங்கரமான பேரழிவைக் கொண்டுவருகிறேன்.”
ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது.
    தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான்.
அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான்.
உங்கள் நகரங்கள் அழிக்கப்படும்,
    அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான்.
எனவே, சாக்குத் துணியைக் கட்டிக்கொள்ளுங்கள்.
    சத்தமாய் அழுது புலம்புங்கள். ஏனென்றால், கர்த்தர் நம்மிடம் கோபமாக இருக்கிறார்.
கர்த்தர் இவ்வாறு சொல்கிறார், “இது நிகழும் காலத்தில் ராஜாவும், அவனது அதிகாரிகளும், தம் தைரியத்தை இழப்பார்கள்.
    ஆசாரியர்கள் அஞ்சுவார்கள், தீர்க்கதரிசிகள் அதிர்ச்சியடைவார்கள்.”

10 பிறகு எரேமியாவாகிய நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே! நீர் உண்மையிலேயே எருசலேம் மற்றும் யூதா ஜனங்களிடம் தந்திரம் செய்திருக்கிறீர். நீர் அவர்களிடம், ‘நீங்கள் சமாதானம் பெறுவீர்கள்’ எனச் சொன்னீர், ஆனால் இப்போது அவர்களின் கழுத்துக்கு நேராக வாள் குறிபார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

11 அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும்.
    “வறண்ட மலைகளிலிருந்து,
ஒரு சூடான காற்று வீசுகிறது.
    இது எனது ஜனங்களிடம் வனாந்தரத்திலிருந்து வருகிறது.
இது, உழவர்கள் தமது தானியங்களைப் பதரிலிருந்து,
    பிரித்தெடுக்கப் பயன்படுத்தும் காற்றைப் போன்றில்லை.
12 இது அதனைவிட பலமுடையதாக இருக்கிறது.
    இது என்னிடமிருந்து வருகிறது.
இப்பொழுது, யூதாவின் ஜனங்களுக்கு எதிரான எனது தீர்ப்பை நான் அறிவிப்பேன்.”
13 பாருங்கள்! பகைவன் மேகத்தைப்போன்று எழும்பியிருக்கிறான்.
    அவனது இரதங்கள் புயல் காற்றைப்போன்று தோன்றுகின்றன.
    அவனது குதிரைகள் கழுகுகளைவிட வேகமுடையதாயுள்ளன.
இது நமக்கு மிகவும் கேடாயிருக்கும்.
    நாம் அழிக்கப்படுகிறோம்.

14 எருசலேம் ஜனங்களே, உங்கள் இருதயங்களிலிருந்து, தீமையானவற்றைக் கழுவுங்கள்.
உங்கள், இருதயங்களைச் சுத்தப்படுத்துங்கள்.
அதனால் காப்பாற்றப்படுவீர்கள்.
    தீய திட்டங்களைத் தீட்டுவதைத் தொடராதீர்கள்.
15 கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த
    தூதுவனின் குரல் பேசிக்கொண்டிருக்கிறது.
எப்பிராயீம், என்ற மலை நாட்டிலிருந்து
    ஒருவன் கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான்.
16 “இந்த நாட்டு ஜனங்களிடம், இதனைச் சொல்லுங்கள்.
    எருசலேமிலுள்ள ஜனங்களிடம் இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.
பகைவர்கள் தூர நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பகைவர்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகப் போர் செய்வதுப்பற்றி
    சத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
17 எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று,
    வளைத்துக்கொண்டனர்.
யூதாவே, நீ எனக்கு எதிராகத் திரும்பிவிட்டாய்!
    எனவே, உனக்கு எதிராகப் பகைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18 “நீங்கள் வாழ்ந்த வழியும் நீங்கள் செய்த செயல்களும்,
    உங்களுக்கு இந்தத் தொல்லையைக் கொண்டுவந்துள்ளது,
உங்களது தீமையானது, உங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியிருக்கிறது.
உங்கள் தீமை கொடிய ஆபத்தைக் கொண்டுவந்தது.
    இது உங்கள் இதயத்தை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது.”

எரேமியாவின் அழுகை

19 எனது துக்கமும், கவலையும், எனது வயிற்றைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.
    நான் வலியால் வேதனையடைந்துவிட்டேன்.
நான் மிகவும் பயப்படுகிறேன்.
    எனது இதயம் எனக்குள் வேதனைப்படுகிறது.
என்னால் சும்மா இருக்கமுடியாது, ஏனென்றால் நான் எக்காள சத்தத்தைக் கேட்டிருக்கிறேன்,
    எக்காளமானது போருக்காகப் படையை அழைத்துக்கொண்டிருக்கிறது.
20 அழிவைத் தொடர்ந்து பேரழிவு வருகிறது.
    நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
எனது கூடாரங்கள் திடீரென்று அழிக்கப்படுகின்றன.
    எனது திரைச் சீலைகள் கிழிக்கப்படுகின்றன.
21 என் கர்த்தாவே எவ்வளவு காலமாக நான் போர்க் கொடிகளைப் பார்க்கவேண்டும்!
    எவ்வளவு காலமாக நான், போர் எக்காளத்தைக் கேட்க வேண்டும்?

22 தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள்.
    அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை.
அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள்.
    அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள்.
    ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார்.

அழிவு வந்துகொண்டிருக்கிறது

23 நான் பூமியை நோக்கிப் பார்த்தேன்.
    பூமி வெறுமையாய் இருந்தது.
    பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது.
நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன்.
    அதன் ஒளி போய்விட்டது.
24 நான் மலைகளைப் பார்த்தேன்,
    அவை நடுங்கிக்கொண்டிருந்தன.
    மலைகள் எல்லாம் அசைந்தன.
25 நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை.
    வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன.
26 நான் பார்க்கும்போது நல்ல நிலம் வனாந்தரமாகிவிட்டிருந்தது.
    அந்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன.
கர்த்தர் இதனைச் செய்தார்.
    கர்த்தரும் அவரது பெருங்கோபமும்தான் இதனைச் செய்தது.

27 “தேசம் முழுவதும் அழிக்கப்படும்
    (ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்).
28 எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள்.
    வானம் இருண்டுப்போகும் நான் சொல்லியிருக்கிறேன்.
அதனை மாற்றமாட்டேன்.
    நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன்.
நான் எனது மனதை மாற்றமாட்டேன்”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29 யூதாவின் ஜனங்கள் குதிரை வீரர்களின் சத்தத்தையும்
    வில் வீரர்களின் சத்தத்தையும் கேட்பார்கள்.
    ஜனங்கள் ஓடிப்போவார்கள்!
சில ஜனங்கள் குகைகளுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள்.
    சில ஜனங்கள் புதர்களுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள்.
    சில ஜனங்கள் பாறைகளுக்கு மேல் ஏறிக்கொள்வார்கள்.
யூதா நகரங்கள் எல்லாம் காலியாகிப் போகும்.
    அவற்றில் எவரும் வாழமாட்டார்கள்.

30 யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய்.
    எனவே, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
நீ அழகான சிவப்பு ஆடைகளை,
ஏன் அணிந்துக்கொண்டிருக்கிறாய்?
நீ தங்க நகைகளை ஏன் அணிந்துகொண்டிருக்கிறாய்?
நீ கண்ணுக்கு மையிட்டு ஏன் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாய்.
நீ உன்னை அழகு செய்கிறாய்.
    ஆனால் இது வீணாகும்.
உனது நேசர்கள் உன்னை வெறுக்கின்றனர்.
    அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயல்கின்றனர்.
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் குரலைப் போன்ற கதறலைக் கேட்கிறேன்.
    அது முதல் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணின் கதறல் போன்றிருந்தது. சீயோனின் குமாரத்தியின் கதறலாய் இது இருக்கிறது.
அவள் தனது கைகளை விரித்து,
    “ஓ! நான் எதிர்த்து போரிட முடியாமல், மயங்கி விழப்போகிறேன்.
    என்னைச் சுற்றிலும் கொலைக்காரர்கள் இருக்கிறார்கள்!” என்று ஜெபிக்கிறாள்.

மத்தேயு 18

இயேசு யார் பெரியவர் என்பது பற்றிச் சொல்லுதல்

(மாற்கு 9:33-37; லூக்கா 9:46-48)

18 அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “பரலோக இராஜ்யத்தில் யார் மிகப் பெரியவர்?” என்று கேட்டனர்.

இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார். பின் அவர்களிடம் கூறினார், “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன்.

“இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன், என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.

பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்

(மாற்கு 9:42-48; லூக்கா 17:1-2)

“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும். அவ்வாறு செய்கிறவன், ஒரு ஆட்டுக்கல்லைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் மூழ்குவதே நல்லது. பாவம் செய்ய மக்கள் சோதிக்கப்படுவதால், அவர்களுக்காக வருந்துகிறேன். அவ்வாறான செயல்கள் நடக்கவேண்டும்தான். ஆனால், அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு மிகுந்த தீங்கு வரும்.

“உங்களது கையோ அல்லது காலோ உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறியுங்கள். சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரு கை கால்களுடன் எரிகின்ற நரகத்தின் தீயில் என்றென்றைக்குமாக எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. உங்களது கண் உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைப் பிடுங்கி எறியுங்கள். ஒரு கண்ணை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரண்டு கண்களுடன் நரகத்தின் தீயில் எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது.

காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை

(லூக்கா 15:3-7)

10 “எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11 [a]

12 “நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13 காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14 அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.

ஒரு மனிதன் தவறு செய்தால்

(லூக்கா 17:3)

15 “உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். 16 ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். 17 அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள்.

18 “நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். 19 மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். 20 இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”

மன்னிப்பைப்பற்றிய உவமை

21 அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.

22 அதற்கு இயேசு அவனுக்கு, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை[b] தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

23 “எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24 மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25 ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.

26 “ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். 27 மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.

28 “பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.

29 “மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.

30 “ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். 31 மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.

32 “பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33 ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். 34 மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.

35 “என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center