M’Cheyne Bible Reading Plan
வாயில் காவலர்கள்
26 வாயில் காவலர் குழு: இவர்கள் கோராகிய வம்சத்தினர்.
மெஷெலேமியாவும் அவனது குமாரர்களும் ஆவார்கள். மெஷெலேமியா கோரேயின் குமாரன். இவன் ஆசாப்பின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். 2 மெஷெலேமியாவிற்கு குமாரர்கள் இருந்தனர். சகரியா மூத்த குமாரன். எதியாயேல் இரண்டாவது குமாரன். செபதியா மூன்றாவது குமாரன். யதனியேல் நான்காவது குமாரன், 3 ஏலாம் ஐந்தாவது குமாரன், யோகனான் ஆறாவது குமாரன், எலியோனாய் ஏழாவது குமாரன்.
4 ஓபேத்ஏதோமினுக்கு குமாரர்கள் இருந்தனர். மூத்த குமாரன் செமாயா, இரண்டாவது குமாரன் யோசபாத், மூன்றாவது குமாரன் யோவாக், நான்காவது குமாரன் சாக்கார், ஐந்தாவது குமாரன் நெதநெயேல், 5 ஆறாவது குமாரன் அம்மியேல், ஏழாவது குமாரன் இசக்கார், எட்டாவது குமாரன் பெயுள்தாயி. தேவன் உண்மையாகவே ஓபேத்ஏதோமை ஆசீர்வதித்திருந்தார். 6 ஓபேத்ஏதோமின் குமாரனான செமாயாவிற்கு குமாரர்கள் இருந்தனர். அவர்கள் பலமுள்ளவர்களாகத் தங்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். 7 செமாயாவுக்கு ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத், எலிகூ, செமகியா எனும் குமாரர்கள் இருந்தனர். எல்சாபாத்தின் உறவினர் திறமையுள்ள வேலையாட்கள். 8 இவர்கள் அனைவரும் ஓபேத்ஏதோமின் சந்ததியினர். இவர்களும் இவர்களின் குமாரர்களும் உறவினர்களும் வல்லமையுள்ளவர்கள், நல்ல காவலர்கள். ஓபேத்ஏதோமிற்கு 62 சந்ததியினர் இருந்தனர்.
9 மெஷெலேமியாவின் குமாரர்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் குமாரர்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.
10 மெராரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாயில் காவலர்கள் ஓசாவும் இருந்தான். சிம்ரி முதன்மையானவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். உண்மையில், இவன் மூத்த குமாரன் அல்ல, ஆனால் அவனது தந்தை இவனை முதலில் பிறந்தவனாக வைத்தான். 11 இல்க்கியா இவனது இரண்டாவது குமாரன், தெபலியா மூன்றாவது குமாரன், சகரியா நான்காவது குமாரன். ஆக மொத்தம் ஓராவின் குமாரர்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.
12 இவர்கள் வாயில் காவல் குழுவின் தலைவர்கள். இவர்கள் சிறப்பான வழியில் கர்த்தருடைய ஆலயத்தில் பணிசெய்து வந்தனர், இது இவர்களின் உறவினர்கள் செய்தது போன்றது. 13 ஒவ்வொரு குடும்பத்திற்கும் காவல் காப்பதற்கென ஒரு வாசல் கொடுக்கப்பட்டது. வாசலைத் தேர்ந்தெடுக்க இவர்கள் சீட்டுக்குலுக்கல் முறையைப் பயன்படுத்தினார்கள். முதியவர்களும், இளைஞர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
14 மெஷெலேமியா கிழக்கு வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பிறகு மெஷெலேமியாவின் குமாரனான சகரியாவிற்கு சீட்டு குலுக்கிப் போட்டனர். இவன் ஞானமுள்ள ஆலோசகனாக இருந்தான். வடவாசல் காவலுக்கு இவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். 15 ஓபேத் ஏதோம் தென்வாசல் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இவனது குமாரர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டின் காவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 16 மேற்குவாசல் காவலுக்கு சூப்பீமும் ஓசாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல் சாலையில் இருந்த ஷெல்லகத் வாசலையும் காவல் செய்தனர்.
காவலர்கள் பக்கம் பக்கமாக நின்றனர். 17 ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர். 18 நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.
19 இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.
கருவூல அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும்
20 அகியா, லேவியர் கோத்திரத்தில் உள்ளவன். தேவனுடைய ஆலயத்தில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்ட பொக்கிஷ அறைக்குப் பொறுப்பாளியாக இருந்தான். பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கும் பொறுப்பாளியாக இவன் இருந்தான்.
21 லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான். 22 யெகியேலியின் குமாரன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.
23 மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
24 செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் குமாரன். கெர்சோம் மோசேயின் குமாரன். 25 கீழ்க்கண்டவர்கள் சுபவேலின் உறவினர்கள், எலியேசர் மூலமாக வந்த உறவினர்கள். எலியேசரின் குமாரனான ரெகபியா, ரெகபியாவின் குமாரனான எஷாயா, எஷாயாவின் குமாரனான யோராம், யோராமின் குமாரனான சிக்கிரி, சிக்கிரியின் குமாரனான செலோமித். 26 செலோமித்தும் இவனது உறவினர்களும் ஆலயத்திற்காக தாவீது சேகரித்த அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளரானார்கள்.
படையில் உள்ள அதிகாரிகளும் ஆலயத்திற்காகப் பொருட்களைக் கொடுத்தனர். 27 அவர்கள் போரில் கைப்பற்றிய பொருட்களைக் கொடுத்தனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயம் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களைத் தந்தார்கள். 28 செலோமித்தும், அவனது உறவினரும் தீர்க்கதரிசியான சாமுவேலும், கீஸின் குமாரனான சவுலும், நேரின் குமாரனான அப்னேரும், செருயாவின் குமாரனான யோவாபும் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். ஜனங்கள் கொடுத்த பரிசுத்தமானப் பொருட்களையும் பாதுகாத்தனர்.
29 இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது குமாரர்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள். 30 எப்ரோன் குடும்பத்தில் அசபியா தோன்றினான். இவனும் இவனது உறவினர்களும் கர்த்தருக்கான வேலைகள் அனைத்துக்கும் பொறுப்பாளிகளாக இருந்தனர். யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள இஸ்ரவேல் பகுதியில் ராஜாவின் வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். 1,700 பலமிக்கவர்கள் அசபியாவின் குழுவில் இருந்தனர். 31 எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர். 32 எரியாவிற்கு 2,700 உறவினர்கள் இருந்தனர். அவர்கள் வல்லமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தாவீது ராஜா, தேவன் மற்றும் ராஜாவின் எல்லா வேலைகளையும் செய்யுமாறு ஆணையிட்டான். ரூபினியர், காதியர், மனாசேயின் கோத்திரத்தில் பாதிப்பேர்கள் ஆகியோரைக் கவனிக்கும்படியும் வைத்தான்.
படைக் குழுக்கள்
27 ராஜாவின் படையில் பணியாற்றும் இஸ்ரவேல் ஜனங்களின் பட்டியல் இது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதத்தில் பணியாற்றினார்கள். அவர்களில் குடும்பத் தலைவர்களும், தளபதிகளும், படைத்தலைவர்கள், காவல் வீரர்களும் இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 24,000 பேர் இருந்தனர்.
2 முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் குமாரன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். 3 யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.
4 இரண்டாவது மாதப் படைக் குழுவிற்குத் தோதாயி பொறுப்பாளி. இவன் அகோகியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
5 மூன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் மூன்றாவது மாதத்தின் பொறுப்பாளி. பெனாயா யோய்தாவின் குமாரன். யோய்தா தலைமை ஆசாரியன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர். 6 பெனாயா 30 நாயகர்களில் ஒருவனாகவும், அவர்களின் தலைவனுமாகவும் இருந்தான். பெனாயாவின் குழுவிற்கு அவனது குமாரனான அமிசபாத் பொறுப்பாளியாயிருந்தான்.
7 ஆசகேல் நான்காவது தளபதி ஆவான். இவன் நான்காவது மாதத்திற்கு பொறுப்பாளி. இவன் யோவாபின் சகோதரன். பின்பு ஆசகேலின் குமாரனான செபதியா இவனது பதவியை வகித்தான். ஆசகேலின் குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
8 சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
9 ஆறாவது தளபதி ஈரா ஆவான். இவன் ஆறாவது மாதத்திற்குரியவன். இவன் இக்கேசின் குமாரன். இக்கேசுதெக்கோவியா நாட்டினன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
10 ஏழாவது தளபதி ஏலேஸ் ஆவான். இவன் ஏழாவது மாதத்திற்குரியவன். இவன் எப்பிராயீம் சந்ததியிலிருந்து வந்தவன். பெலேனிய நாட்டவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
11 எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
12 ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
13 பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
14 பதினொன்றாவது தளபதி பெனாயா ஆவான். இவன் பதினொன்றாவது மாதத்திற்குரியவன். இவன் பிரத்தோனியன், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
15 பன்னிரெண்டாவது தளபதி எல்தாயி. இவன் பன்னிரெண்டாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன், ஒத்னியேல் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
கோத்திரங்களின் தலைவர்கள்
16 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் பெயர் பின்வருமாறு:
ரூபனியருக்கு சிக்ரியின் குமாரனான எலியேசர் தலைவன்.
சிமியோனியருக்கு மாக்காவின் குமாரனான செப்பத்தியா தலைவன்.
17 லேவியருக்கு கேமுவேலின் குமாரனான அஷாபியா தலைவன்.
ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.
18 யூதாவுக்கு தாவீதின் சகோதரர்களில் ஒருவனான எலிகூ தலைவன்.
இசக்காருக்கு மிகாவேலின் குமாரனான ஒம்ரி தலைவன்.
19 செபுலோனக்கு ஒபதியாவின் குமாரனான இஸ்மாயா தலைவன்.
நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரனான எரிமோத் தலைவன்.
20 எப்பிராயீமியருக்கு அசசியாவின் குமாரனான ஓசெயா தலைவன்.
மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குப் பெதாயாவின் குமாரனான யோவேல் தலைவன்.
21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரனான இத்தோ தலைவன்.
பென்யமீனுக்கு அப்னேரின் குமாரனான யாசியேல் தலைவன்.
22 எரோகாமின் குமாரனான அசாரியேல் தாணின் தலைவன்.
இவர்கள் இஸ்ரவேலரின் தலைவர்கள்.
தாவீது இஸ்ரவேலர்களை எண்ணிக் கணக்கிட்டது
23 தாவீது, இஸ்ரவேலர்களில் ஆண்களைக் கணக்கிட திட்டமிட்டான். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஏனென்றால் தேவன், இஸ்ரவேலர்களை வானத்து நட்சத்திரங்களைப் போன்று பெருக்குவதாக வாக்களித்திருந்தார். எனவே தாவீது இஸ்ரவேலர்களில் இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட்டான். 24 செருயாவின் குமாரனான யோவாப் இஸ்ரவேலர்களை எண்ணத் தொடங்கினான். ஆனால் அவன் அதைச் செய்து முடிக்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கோபங்கொண்டார். இதனால்தான், தாவீது ராஜாவின் வரலாறு, என்ற புத்தகத்தில் ஜனங்கள் தொகை குறிக்கப்படவில்லை.
ராஜாவின் நிர்வாகிகள்
25 ராஜாவின் சொத்துக்களை நிர்வகித்தவர்களின் பட்டியல் இது:
ராஜாவின் பொக்கிஷங்களுக்கு ஆதியேலின் குமாரனான அஸ்மாவேத் அதிகாரியானான்.
சிறிய பட்டணங்கள், கிராமங்கள், கோபுரங்கள் போன்றவற்றின் பொக்கிஷங்களுக்கு உசியாவின் குமாரன் யோனத்தான் அதிகாரியானான்.
26 நிலத்தைப் பயிரிடும் வயல்வெளிகளில் வேலை செய்பவர்களுக்கு கேலூப்பின் குமாரன் எஸ்ரி அதிகாரியானான்.
27 திராட்சைத் தோட்டங்களுக்கு ராமாத்தியனான சீமேயும், திராட்சைரசம் வைக்கும் இடங்களுக்கு சிப்மியனாகிய சப்தியும் அதிகாரிகளானார்கள்.
28 மேற்கு மலை நாடுகளிலுள்ள ஒலிவ மரங்களுக்கும், ஆலமரங்களுக்கும் கெதேரியனான பால் கானான் அதிகாரியானான்.
எண்ணெய் கிடங்குகளுக்கு யோவாசு அதிகாரியானான்.
29 சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான்.
பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் குமாரன் சாப்பாத் அதிகாரியானான்.
30 ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான்.
கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.
31 ஆடுகளுக்கு ஆசாரியனான யாசிசு அதிகாரியானான்.
இவர்கள் அனைவரும் தாவீதின் உடமைகளுக்கு அதிகாரிகளாய் இருந்தனர்.
32 யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் குமாரனான யெகியேல் ராஜாவின் குமாரர்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான். 33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக இருந்தான். ஊஷாயி ராஜாவின் நண்பன். இவன் அர்கியன். 34 யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலின் பதவியைப் பெற்று ராஜாவுக்கு ஆலோசனை கூறினார்கள். யோய்தா பெனாயாவின் குமாரன். யோவாப் ராஜாவின் படைத்தலைவனாக இருந்தான்.
1 இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவிடமிருந்து, எங்களைப் போலவே மதிப்புமிக்க விசுவாசத்தைப் பெற்ற மக்களாகிய உங்களுக்கு: நம்முடைய தேவனுடைய நீதியாலும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாலும் இந்த விசுவாசத்தை நீங்கள் பெற்றீர்கள். சரியானதையே அவர் செய்கிறார்.
2 தேவனை உண்மையாக அறிவதன் மூலமும், நமது கர்த்தராகிய இயேசுவின் மூலமும் உங்களுக்கு மென்மேலும் கிருபையும் சமாதானமும் கொடுக்கப்படுவதாக!
நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் கொடுத்திருக்கிறார்
3 தேவனுடைய வல்லமை இயேசுவிடம் உள்ளது. நாம் வாழ்வதற்கும், தேவனுக்கு சேவை செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவரது வல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. நாம் அவரை அறிவதால் நமக்கு இவை கொடுக்கப்பட்டுள்ளன. இயேசு தன் மகிமையாலும், கருணையினாலும் நம்மை அழைத்தார். 4 அவரது மகிமையாலும், நன்மையினாலும் அவர் நமக்கு வாக்களித்த மிகப் பெரிய உயர்ந்த பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். அப்பரிசுகளால் நீங்கள் தேவனுடைய தன்மையை பகிர்ந்து அடைய முடியும். தீய ஆசைகளால் உலகில் உருவாகும் அழிவுகளிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
5 உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். 6 அறிவால் சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கவும், சுயக்கட்டுப்பாட்டால் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், சகிப்புத்தன்மையால் தேவனுக்கான அர்ப்பணிப்பை உருவாக்கவும் முயல வேண்டும். 7 தேவ பக்தியின் மூலம் சகோதர சகோதரிகளின் மேல் நேசமும், உங்கள் சகோதர சகோதரிகளின் மேல் உள்ள இந்த நேசத்தின் மூலம் அன்பை உருவாக்கவும் முயற்சி செய்யுங்கள். 8 இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். 9 ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான்.
10 எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. 11 நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள்.
12 நீங்கள் இக்காரியங்களை அறிவீர்கள். உங்களிடமுள்ள உண்மையில் நீங்கள் உறுதியுடன் உறுதிப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இக்காரியங்களை நினைவூட்ட நான் எப்போதும் உதவுவேன். 13 நான் இச்சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன். 14 இந்த சரீரத்தினின்று விரைவில் நான் நீங்க வேண்டும் என்பதை அறிவேன். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குக் காட்டியுள்ளார். 15 என் மறைவுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்ந்துகொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற அளவு செய்வேன்.
கிறிஸ்துவின் மகிமையை நாங்கள் கண்டோம்
16 இயேசு கிறிஸ்து வல்லமையோடு வருவார் என நாங்கள் உங்களிடம் சொன்னபோது புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுக்கதைகளை நாங்கள் சார்ந்திருக்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய மாட்சிமையை நாங்களே கண்டோம். 17 மிகவும் மகிமை வாய்ந்தவரிடமிருந்து விசேஷ குரலானது அவரை வந்தடைந்த போது பிதாவாகிய தேவனிடமிருந்து அவர் கௌரவமும் மகிமையையும் பெற்றார். அக்குரல், “இவர் என் அருமை குமாரன். நான் இவரைக் குறித்து சந்தோஷப்படுகிறேன்” என்றது. 18 நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.
19 தீர்க்கதரிசிகளின் செய்தியானது நம்பகமானவை என்று நாங்கள் நம்புகிறோம். தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைப் பின்பற்றுவது உங்களுக்கு நல்லது. அவர்கள் கூறியவை, பொழுது விடிந்து, உங்கள் இதயங்களில் விடிவெள்ளி எழுகிறவரைக்கும் இருளில் ஒளிவிடும் தீபத்தைப் போன்றவை. 20 நீங்கள் இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எந்தத் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்திலிருந்தும் வேதவாக்கியத்தின் எந்தத் தீர்க்கதரிசனமும் வெளிப்படுவதில்லை. 21 ஒரு மனிதன் சொல்ல நினைத்ததிலிருந்து எந்தத் தீர்க்கதரிசனமும் வந்ததில்லை. ஆனால் மக்கள் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு தேவனிடமிருந்து வந்த செய்திகளைக் குறித்துப் பேசினார்கள்.
சட்டம் எருசலேமிலிருந்து வரும்
4 இறுதி நாட்களில்,
கர்த்தருடைய ஆலயம் அனைத்து மலைகளையும் விட மிக உயரத்தில் இருக்கும்.
அந்தக் குன்று மலைகளையும் விட உயரமாக உயர்த்தப்பட்டு இருக்கும்.
அங்கு எப்போதும் ஜனங்கள் கூட்டம் சென்றுகொண்டிருக்கும்.
2 பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள்.
அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம்.
யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம்,
பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார்.
நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.
தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி,
சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.
3 பிறகு தேவன் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கு நீதிபதியாக இருப்பார்.
தேவன் தூர தேசங்களைச் சேர்ந்த பல ஜனங்களின் விவாதங்களை முடிப்பார்.
அந்த ஜனங்கள் போருக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்.
அவர்கள் தமது வாள்களிலிருந்து கொழுக்களைச் செய்வார்கள்.
அவர்கள் தம் ஈட்டிகளைச் செடிகளை வெட்டும் கருவிகளாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
ஜனங்கள் போரிடுவதற்கு மீண்டும் பயிற்சிபெறமாட்டார்கள்.
4 ஒவ்வொருவரும் தமது திராட்சைச் செடி
மற்றும் அத்தி மரங்களின் கீழும் அமர்ந்திருப்பார்கள்.
எவரும் அவர்களைப் பயப்படும்படிச் செய்யமாட்டார்கள்.
ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சென்னது போல நடக்கும்.
5 மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் தமது சொந்தத் தெய்வங்களைப் பின்பற்றுகின்றார்கள்.
ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய வழியில் என்றென்றைக்கும் நடப்போம்.
இராஜ்யம் திரும்பிக் தரப்படும்
6 கர்த்தர் கூறுகிறார்:
“எருசலேம் புண்பட்டு நொண்டியானது.
எருசலேம் தூர எறியப்பட்டது.
எருசலேம் காயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது.
ஆனால் நான் அவனை என்னிடம் திரும்ப கொண்டு வருவேன்.
7 “‘அந்நொண்டி’ நகரின் ஜனங்கள், மீதியான ஜனங்களாவார்கள்.
சென்றுவிடும்படி நகரஜனங்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
ஆனால் நான் அவர்களை ஒரு வலிமையான நாடாக்குவேன்.”
கர்த்தர் அவர்களுடைய ராஜாவாய் இருப்பார்.
அவர் என்றென்றும் சீயோன் பர்வதத்திலிருந்து ஆளுவார்.
8 மந்தையின் துருகமே,[a] உங்கள் காலம் வரும். சீயோன், மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவாய்.
ஆமாம், முற்காலத்தைப் போன்று எருசலேமின் ராஜாங்கம் இருக்கும்.
இஸ்ரவேலர்கள் எதற்காக பாபிலோனுக்கு போகவேண்டும்
9 இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய்.
உங்கள் ராஜா போய்விட்டானா?
உங்கள் தலைவரை இழந்து விட்டீர்களா?
நீங்கள் பிரசவ வேதனைப்படும் பெண்ணைப் போன்று துக்கப்படுகிறீர்கள்.
10 சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் “குழந்தையை” பெற்றெடுங்கள்.
நீங்கள் நகரை விட்டு (எருசலேம்) வெளியே போகவேண்டும்.
நீங்கள் வயல் வெளியில் போவீர்கள்.
நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக் கருதுகிறேன்.
ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார்.
அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார்.
கர்த்தர் மற்ற நாடுகளை அழிப்பார்
11 பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர்.
அவர்கள், “பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!” என்கிறார்கள்.
12 அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர்.
ஆனால் கர்த்தர் என்ன திட்டமிட்டுக்கொண்டிருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.
கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இங்கே கொண்டுவந்தார்.
அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்ட தானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள்.
இஸ்ரவேல் அதன் எதிரிகளைத் தோற்கடித்து வெல்லுவார்கள்
13 “சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு.
நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன்.
உனக்கு இரும்பினாலான கொம்புகளும், வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளது போன்றும் இருக்கும்.
நீ பல மக்களை அடித்துச் சிறிய துண்டுகளாக்குவாய்.
அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய்.
பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்கு அவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்.”
மனம் மாறுங்கள்
13 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். 2 இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 3 இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 5 அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார்.
பயனற்ற மரம்
6 இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. 7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். 8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். 9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.”
ஓய்வு நாளில் குணமாக்குதல்
10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். 11 பிசாசினாலாகிய அசுத்த ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெண் அந்த ஜெப ஆலயத்தில் இருந்தாள். பதினெட்டு ஆண்டுகளாக அப்பெண்ணைப் பிசாசு ஊனப்படுத்திற்று. அவள் முதுகு கூனலாக இருந்தது. அவள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. 12 இயேசு அவளைப் பார்த்து அழைத்தார். மேலும் அவளை நோக்கி, “பெண்ணே, உன் நோய் உன்னை விட்டு நீங்கிற்று” என்றார். 13 இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள்.
14 ஓய்வு நாளில் இயேசு அவளைக் குணமாக்கியதைக் குறித்து ஜெப ஆலயத்தின் தலைவர் கோபம் அடைந்தார். அத்தலைவர் மக்களை நோக்கி, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் குணம்பெற வாருங்கள். ஓய்வு நாளில் குணமடைய வராதீர்கள்” என்றார்.
15 இயேசு பதிலாக, “நீங்கள் வேஷதாரிகளான மனிதர். ஓய்வு நாளில் கூட நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டில் கொட்டிலில் இருக்கும் எருதுவையோ அல்லது கழுதையையோ அவிழ்த்து நீர் பருகுவதற்கு அழைத்துச் செல்கிறீர்கள். 16 நான் குணமாக்கிய இப்பெண் நமது யூத சகோதரி.[a] ஆனால் சாத்தான் அவளைப் பதினெட்டு ஆண்டுகளாகப் பீடித்திருந்தான். ஓய்வு நாளில் அவளது நோயினின்று அவளை விடுவிப்பது நிச்சயமாகத் தவறல்ல” என்றார். 17 இயேசு இதைக் கூறியபோது அவரை விமர்சித்துக்கொண்டிருந்த அனைவரும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தார்கள். இயேசு செய்த அற்புதமான காரியங்களைக் குறித்து எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
கடுகு விதையின் உவமை
(மத்தேயு 13:31-33; மாற்கு 4:30-32)
18 பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்? 19 தேவனுடைய இராஜ்யம் கடுகுச் செடியின் விதையைப் போன்றது. ஒருவன் இந்த விதையை அவனது தோட்டத்தில் ஊன்றுகிறான். விதை முளைத்து மரமாகிறது. பறவைகள் அதன் கிளைகளில் கூடுகளைக் கட்டுகின்றன” என்றார்.
20 மீண்டும் இயேசு, “தேவனின் இராஜ்யத்தை எதனோடு ஒப்பிடுவேன்? 21 ஒரு பெரிய பாத்திரத்தில் அப்பத்திற்காக வைக்கப்படிருக்கும் மூன்று மடங்கு அளவுள்ள மாவோடு ஒரு பெண் கலக்கும் புளிப்பான பொருளுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அது மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும்” என்றார்.
குறுகிய வாசல்
(மத்தேயு 7:13-14,21-23)
22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். 23 ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான்.
24 இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. 25 ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். 26 பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். 27 அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான்.
28 “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். 29 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். 30 வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார்.
எருசலேமில் இயேசு மரிப்பார்
(மத்தேயு 23:37-39)
31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள்.
32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார்.
34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.
2008 by World Bible Translation Center