M’Cheyne Bible Reading Plan
ரூபனின் சந்ததியினர்
5 1-3 இஸ்ரவேலுக்கு முதல் குமாரன் ரூபன். இவன் மூத்த குமாரன் என்ற சிறப்பு உரிமைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ரூபன் தன் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொண்டிருந்தான். எனவே அந்த உரிமைகள் யோசேப்பின் குமாரர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வம்ச வரலாற்றில் ரூபனின் பெயர் முதல் குமாரனாகப் பட்டியலிடப்படவில்லை. யூதா தனது சகோதரர்களைவிடப் பலமுள்ளவனாக ஆனான். எனவே அவனது குடும்பத்தில் இருந்து தலைவர்கள் வந்தனர். ஆனால், யோசேப்பின் குடும்பம் மூத்த குமாரனின் குடும்பத்திற்கான சிறப்பு உரிமைகளைப் பெற்றது.
ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர் ரூபனின் குமாரர்கள்.
4 இவை யோவேலின் சந்ததியினரின் பெயர்கள். யோவேலின் குமாரன் செமாயா, செமாயாவின் குமாரன் கோக், கோக்கின் குமாரன் சிமேய். 5 சிமேய்யின் குமாரன் மீகா, மீகாவின் குமாரன் ராயா, ராயாவின் குமாரன் பாகால், 6 பாகாலின் குமாரன் பேரா, தில்காத் பில்தேசர் எனும் அசீரியாவின் ராஜா பேரா தனது வீட்டைவிட்டு வெளியேறும்படி பலவந்தப்படுத்தினான். எனவே பேரா ராஜாவின் கைதியானான். ரூபனின் கோத்திரத்தில் பேரா ஒரு தலைவனாயிருந்தான்.
7 யோவேலின் சகோதரர்களும், அவனது கோத்திரங்களும் வம்ச வரலாற்றில் எழுதப்பட்டுள்ளபடியே பட்டியலிடப்பட்டுள்ளது. ஏயேல் முதல் குமாரன், பிறகு சகரியாவும், பேலாவும். 8 பேலா ஆசாசின் குமாரன். ஆசாஸ் சேமாவின் குமாரன். சேமா யோவேலின் குமாரன். இவர்கள் ஆரோவேரிலும் நேபோ மட்டும் பாகால்மெயோன் மட்டும் வாழ்ந்து வந்தனர். 9 பேலாவின் ஜனங்கள் கிழக்கே ஐபிராத்து ஆறுமுதல் வனாந்தரத்தின் எல்லைவரை வாழ்ந்தனர். காரணம் அவர்களின் ஆடுமாடுகள் கீலேயாத் நாட்டில் அதிகமாக இருந்தன. 10 சவுல் ராஜாவாக இருந்தபோது, பேலாவின் ஜனங்கள் ஆகாரியரோடு சண்டையிட்டனர். இவர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். ஆகாரியரின் கூடாரங்களில் பேலா ஜனங்கள் வாழ்ந்தனர். அதோடு கீலேயாத்தின் கீழ்ப்பகுதி முழுவதும் பயணம்செய்தனர்.
காத்தின் சந்ததியினர்
11 காத்தின் கோத்திரத்தினர், ரூபனின் கோத்திரத்தினருக்கு அருகிலேயே வாழ்ந்தனர். காத்தியர்கள் பாசானில் சல்கா செல்லும் வழியெங்கும் வாழ்ந்தார்கள். 12 பாசானின் முதல் தலைவனாக யோவேல் இருந்தான், சாப்பாம் இரண்டாவது தலைவனாக இருந்தான். பிறகு, யானாய் பாசானின் தலைவன் ஆனான். 13 மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேரும் இந்த குடும்பத்தில் உள்ள சகோதரர்கள். 14 இவர்கள் அனைவரும் அபியேலின் சந்ததியினர். அபியேல் ஊரியின் குமாரன், ஊரி யெரொவாவின் குமாரன், யெரொவா கீலேயாத்தின் குமாரன், கீலேயாத் மிகாவேலுக்கு குமாரன். மிகாவேல் எசிசாயியின் குமாரன், எசிசாயி யாதோவின் குமாரன், யாதோ பூசுவின் குமாரன். 15 அகி அபியேலின் குமாரன், அபியேல் கூனியின் குமாரன், அகி அந்த வம்சத்தின் தலைவன்.
16 காத் கோத்திரத்தினர் கீலேயாத் பகுதியில் வாழ்ந்தனர். அவர்கள் பாசான் பகுதியிலும் அதைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் சாரோனின் வயல்வெளிகளிலும் அவற்றின் எல்லைப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர்.
17 யோதாம் மற்றும் யெரொபெயாமின் காலங்களில் இவர்கள் அனைவரும் காத்தின் குடும்ப வரலாற்றில் எழுதப்பட்டார்கள். யோதாம் யூதாவின் ராஜா. யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜா.
சில வீரர்களின் போர்த் திறமை
18 ரூபனின் ஜனங்களிலும், காத்தியரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தினரிலும் 44,760 பேர் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர். அவர்கள் போரில் திறமை உடையவர்கள். அவர்கள் கேடயங்களையும் வாட்களையும் தாங்கினார்கள். வில்லிலும் அம்புகளிலும் வல்லவர்களாக இருந்தனர். 19 அவர்கள் ஆகாரிய ஜனங்களுக்கு எதிராகச் சண்டையைத் தொடங்கினார்கள். பின் யெத்தூர் நோதாப் நாப்பீஸ் ஆகியோர்களோடும் சண்டை செய்தனர். 20 மனாசே, ரூபன், காத் ஆகியக் கோத்திரங்களின் ஜனங்கள் போரில் தேவனிடம் ஜெபித்தனர். அவர்கள் தேவனை நம்பியதால் வெற்றிக்கு உதவும்படி ஜெபித்தனர். எனவே, தேவன் உதவினார். அவர்கள் ஆகாரியர்களை வெல்லுவதற்கு தேவன் அனுமதித்தார். ஆகாரியர்களோடு சேர்ந்த மற்ற எதிரிகளையும் அவர்கள் தோற்கடித்தனர். 21 அவர்கள் ஆகாரியர்கள் உரிமையுடைய மிருகங்களைக் கவர்ந்துக்கொண்டனர். 50,000 ஒட்டகங்களையும், 2,50,000 ஆடுகளையும், 2,000 கழுதைகளையும், 1,00,000 ஜனங்களையும் கவர்ந்துகொண்டனர். 22 ஏராளமான ஆகாரியர்கள் கொல்லப்பட்டனர். ஏனென்றால் தேவன் ரூபனின் ஜனங்கள் போரில் வெல்லும்படி உதவினார். பிறகு மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்கள் ஆகாரியரின் நிலங்களில் வசித்தனர். அவர்கள் அங்கே பாபிலோனின் படைகள் வந்து சிறைபிடித்து போகும்வரை வாழ்ந்தனர்.
23 மனாசே கோத்திரத்தினரில் பாதி ஜனங்கள் பாசான் பகுதி தொடங்கி பாகால் எர்மோன், செனீர், எர்மோன் மலைவரை பரவியிருந்தனர். இவர்கள் மிகப் பெருங்கூட்டமாகப் பெருகி இருந்தனர்.
24 இவர்கள் மனாசேயின் பாதி கோத்திரங்களின் ஜனங்களுக்குத் தலைவர்கள். இவர்கள் ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் ஆகியோராவர். அவர்கள் வலிமையும், தைரியமும் கொண்டவர்களாய் இருந்தனர். அவர்கள் புகழ்பெற்றவர்களாயிருந்தனர். அவர்கள் தமது குடும்பத் தலைவர்களாகவும் இருந்தனர். 25 ஆனால் அத்தலைவர்கள் தமது முற்பிதாக்கள் தொழுதுவந்த தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்த தேவனால் அழிக்கப்பட ஜனங்கள் தொழுதுகொண்ட பொய் தெய்வங்களை தொழுதுவந்தனர்.
26 இஸ்ரவேலரின் தேவன் பூலைப் போருக்குப் போகும்படி செய்தார். பூல் அசீரியாவின் ராஜா, அவனது இன்னொரு பெயர் தில்காத் பில்நேசர். இவன் மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்களோடு சண்டையிட்டான். அவர்களை வீட்டிலிருந்து வெளியேறி கைதிகளாகும்படி பலவந்தப்படுத்தினான். பூல் அவர்களைப் பிடித்து ஆலா, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றங்கரை போன்ற இடங்களுக்குக் கொண்டு போனான். அந்த கோத்திரத்தினர் அவ்விடங்களில் அன்று முதல் இந்நாள்வரை வாழ்ந்து வருகின்றனர்.
லேவியின் சந்ததியார்
6 கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.
2 அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் குமாரர்கள்,
3 அம்ராம், மோசே, மிரியாம் ஆகியோர் அம்ராமின் குமாரர்கள்.
நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் அம்ராமின் பிள்ளைகள் 4 எலெயாசார் பினெகாசின் தந்தை, பினெகாஸ் அபிசுவாவின் தந்தை. 5 அபிசுவா புக்கியின் தந்தை, புக்கி ஊசியின் தந்தை. 6 ஊசி செராகியாவின் தந்தை, செராகியா மெராயோதின் தந்தை. 7 மெராயோத் அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 8 அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் அகிமாசின் தந்தை. 9 அகிமாஸ் அசரியாவின் தந்தை, அசரியா யோகானானின் தந்தை. 10 யோகானான் அசரியாவின் தந்தை. (இவன்தான் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டியபோது ஆசாரிய பணியைச் செய்தவன்.) 11 அசரியா அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 12 அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் சல்லூமின் தந்தை. 13 சல்லூம் இல்க்கியாவின் தந்தை, இல்க்கியா அசரியாவின் தந்தை. 14 அசரியா செராயாவின் தந்தை, செராயா யோசதாக்கின் தந்தை.
15 யூதர்களையும், எருசலேம் ஜனங்களையும் கர்த்தர் வெளியேற்றியபோது யோசதாக்கினையும் கட்டாயமாக வெளியேற்றினார். இவர்கள் இன்னொரு நாட்டில் அடிமைகளானார்கள். நேபுகாத்நேசரைப் பயன்படுத்தி கர்த்தர் இவர்களைச் சிறை பிடித்தார்.
லேவியின் மற்ற சந்ததியினர்
16 கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.
17 லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் குமாரர்கள்.
18 கோகாத்தின் குமாரர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.
19 மெராரியின் குமாரர்கள் மகேலி, மூசி ஆகியோர். இதுதான் லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் விபரமாகும். அவர்கள் தம் தந்தை பெயர்களோடு சேர்க்கப்பட்டனர்.
20 இது கெர்சோமின் சந்ததியினரின் விபரம்: கெர்சோமின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் யாகாத், யாகாத்தின் குமாரன் சிம்மா. 21 சிம்மாவின் குமாரன் யோவா, யோவாவின் குமாரன் இத்தோ, இத்தோவின் குமாரன் சேரா, சேராவின் குமாரன் யாத்திராயி.
22 இது கோகாத்தின் சந்ததியினரின் விபரம்: கோகாத்தின் குமாரன் அம்மினதாப், அம்மினதாபின் குமாரன் கோராகு, கோராகுவின் குமாரன் ஆசீர். 23 ஆசீரின் குமாரன் எல்க்கானா, எல்க்கானாவின் குமாரன் அபியாசாப், அபியாசாப்பின் குமாரன் ஆசிர். 24 ஆசிரின் குமாரன் தாகாத், தாகாத்தின் குமாரன் ஊரியேல், ஊரியேலின் குமாரன் ஊசியா, ஊசியாவின் குமாரன் சவுல்.
25 அமாசாயியும், ஆகிமோத்தும் எல்க்கானாவின் குமாரர்கள். 26 எல்க்கானாவின் இன்னொரு குமாரன் சோபாய், சோபாயின் குமாரன் நாகாத். 27 நாகாத்தின் குமாரன் எலியாப், எலியாப்பின் குமாரன் எரோகாம், எரோகாமின் குமாரன் எல்க்கானா. 28 சாமுவேலின் மூத்த குமாரன் யோவேல், இரண்டாவது குமாரன் அபியா.
29 இவர்கள் மெராரியின் பிள்ளைகள், மெராரியின் குமாரர்களில் ஒருவன் மகேலி. மகேலியின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் சிமேயி, சிமேயியின் குமாரன் ஊசா. 30 ஊசாவின் குமாரன் சிமெயா, சிமெயாவின் குமாரன் அகியா, அகியாவின் குமாரன் அசாயா.
ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்
31 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை கூடாரத்திற்குள் வைத்தபோது, அதைப் பாதுகாக்கவென தாவீதால் இசை சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு. 32 இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் பாடி சேவை செய்தனர். இப்பரிசுத்தக் கூடாரம் ஆசரிப்புக் கூடாரமென்றும் அழைக்கப்பட்டது. எருசலேமில் சாலோமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்வரை இவர்கள் சேவை செய்தனர். இவர்களது வேலைக்கான சட்டங்களைப் பின்பற்றி சேவை செய்து வந்தனர்.
33 கீழ்க்கண்ட பெயர்கள் இசை மூலம் சேவை செய்த ஆண்கள் மற்றும் அவர்களது குமாரர்களுக்குடையவை:
கோகாத் குடும்பத்தின் சந்ததியினர்: ஏமான் என்பவன் ஒரு பாடகன். இவன் யோவேலின் குமாரன், யோவேல் சாமுவேலின் குமாரன். 34 சாமுவேல் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யெரொகாமின் குமாரன், யெரொகாம் எலியேலின் குமாரன், எலியேல் தோவாகின் குமாரன். 35 தோவாக் சூப்பின் குமாரன், சூப் இல்க்கானாவின் குமாரன், இல்க்கானா மாகாத்தின் குமாரன், மாகாத் அமாசாயின் குமாரன், 36 அமாசாய் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யோவேலின் குமாரன், யோவேல் அசரியாவின் குமாரன், அசரியா செப்பனியாவின் குமாரன். 37 செப்பனியா தாகாதின் குமாரன், தாகாத் ஆசீரின் குமாரன், ஆசீர் எபியாசாப்பின் குமாரன், எபியாசாப் கோராகின் குமாரன், 38 கோராக் இத்சாரின் குமாரன், இத்சார் கோகாத்தின் குமாரன், கோகாத் லேவியின் குமாரன், லேவி இஸ்ரவேலின் குமாரன்.
39 ஏமானின் உறவினன் ஆசாப். இவன் ஏமானின் வலதுபுறத்தில் பணிசெய்வான். ஆசாப் பெரகியாவின் குமாரன், பெரகியா சிமேயாவின் குமாரன். 40 சிமேயா மிகாவேலின் குமாரன், மிகாவேல் பாசெயாவின் குமாரன், பாசெயா மல்கியாவின் குமாரன். 41 மல்கியா எத்னியின் குமாரன், எத்னி சேராவின் குமாரன், சேரா அதாயாவின் குமாரன். 42 அதாயா ஏத்தானின் குமாரன், ஏத்தான் சிம்மாவின் குமாரன், சிம்மா சீமேயின் குமாரன். 43 சீமேயி யாகாதின் குமாரன், யாகாத் கெர்சோமின் குமாரன், கெர்சோம் லேவியின் குமாரன்.
44 இவர்களுடைய சகோதரர்கள் மெராரியின் சந்ததியினர். இவர்கள் ஏமானின் இடது பக்கத்தில் நின்று பாடினார்கள். ஏதான் கிஷியின் குமாரன். கிஷி அப்தியின் குமாரன், அப்தி மல்லூகின் குமாரன். 45 மல்லூக் அஸபியாவின் குமாரன், அஸபியா அமத்சியாவின் குமாரன், அமத்சியா இல்க்கியாவின் குமாரன். 46 இல்க்கியா அம்சியின் குமாரன், அம்சி பானியின் குமாரன், பானி சாமேரின் குமாரன். 47 சாமேர் மகேலியின் குமாரன், மகேலி மூசியின் குமாரன், மூசி மெராரியின் குமாரன், மெராரி லேவியின் குமாரன்.
48 ஏமானும் ஆசாப்பின் சகோதரர்களும் லேவியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். லேவியின் கோத்திரத்தில் வந்தவர்கள் லேவியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்பரிசுத்தக் கூடாரமே தேவனுடைய ஆலயம். 49 ஆனால் ஆரோனின் சந்ததியினர் மட்டுமே நறு மணப் பொருட்களை தகனபலிக்காக பலிபீடத்தில் எரிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை ஆரோனின் சந்ததியினர் தேவனுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்தமான இடத்தில் செய்துவந்தனர். அவர்கள் இஸ்ரவேலரைச் சுத்தமாக்கும் சடங்குகளையும் செய்துவந்தனர். மோசே கட்டளையிட்ட சட்டங்களையும், அவர்கள் பின்பற்றி வந்தனர். மோசே தேவனுடைய ஊழியன்.
ஆரோனின் சந்ததியினர்
50 கீழ்க்கண்டவர்கள் ஆரோனின் குமாரர்கள்: ஆரோனின் குமாரன் எலெயாசார், எலெயாசாரின் குமாரன் பினெகாஸ், பினெகாஸின் குமாரன் அபிசுவா. 51 அபிசுவாவின் குமாரன் புக்கி, புக்கியின் குமாரன் ஊசி, ஊசியின் குமாரன் செராகியா. 52 செராகியாவின் குமாரன் மெராயோத், மெராயோத்தின் குமாரன் அமரியா, அமரியாவின் குமாரன் அகித்தூப். 53 அகித்தூப்பின் குமாரன் சாதோக், சாதோக்கின் குமாரன் அகிமாஸ்.
லேவியர் குடும்பங்களுக்கான வீடுகள்
54 ஆரோனின் சந்ததியினர் வாழ்ந்த இடங்கள் பின் வருவன: இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் வாழ்ந்தார்கள். கோகாத் குடும்பத்தினர் லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பங்கைப்பெற்றனர். 55 அவர்களுக்கு எப்ரோன் நகரமும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் கொடுக்கப்பட்டன. இவ்விடங்கள் யூதாவின் ஒரு பகுதியாக உள்ளது. 56 ஆனால் அந்நகரத்தின் வயல்களையும் கிராமங்களையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 57 ஆரோனின் சந்ததியினருக்கு எப்ரோன் எனும் நகரம் கொடுக்கப்பட்டது. இது அடைக்கலம் தேடுபவர்களுக்கான நகரமாக[a] விளங்கியது. அதோடு அவர்களுக்கு லிப்னா, யாத்தீர், எஸ்தெ மோவா, 58 ஈலேன், தெபீர், 59 ஆசான், பெத்சேமே சஸ், ஆகிய நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள வெளி நிலங்களையும் கொடுத்தனர். 60 பென்யமீன் கோத்திரத்தினர் கேபா, அலெமேத், ஆனதோத், ஆகிய நகரங்களையும் அதன் வெளிநிலங்களையும் பெற்றனர்.
கோகாத் கோத்திரத்தினருக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன.
61 மற்ற கோகாத்தின் சந்ததியினர் 10 நகரங்களைப் பெற்றனர். இவை மனாசே கோத்திரத்தின் பாதி பேர்களிடம் இருந்து பெறப்பட்டன.
62 கெர்சோமின் கோத்திரத்தினர் 13 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை, இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் உள்ள மனாசேயின் ஒரு பகுதி, கோத்திரத்தினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர்.
63 மெராரி கோத்திரத்தினர் 12 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றைச் சீட்டுக் குலுக்கல் முறையில் பெற்றுக்கொண்டனர்.
64 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரங்களையும் வயல்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தனர். 65 அந்நகரங்கள் எல்லாம் யூதா, சிமியோன், பென்யமீன் ஆகியோர்களிடமிருந்து வந்தன. அவர்கள் இதனைச் சீட்டு குலுக்கல் மூலமே தீர்மானம் செய்தனர்.
66 சில நகரங்களை எப்பிராயீம் கோத்திரத்தினர் கோகாத் ஜனங்களுக்குக் கொடுத்தனர். அந்நகரங்கள் சீட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. 67 அவர்களுக்குச் சீகேம் எனும் நகரமும் கொடுக்கப்பட்டது. இது பாதுகாப்பான நகரம். அவர்களுக்கு கேசேரும் அதைச் சுற்றிய வெளிநிலங்களும் கொடுக்கப்பட்டன. 68 அதோடு யோக்மேயாம், பேத் ஓரோன். 69 ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நகரங்களையும் வெளிநிலங்களையும் பெற்றனர். அந்நகரங்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்குள் இருந்தன. 70 மனாசே கோத்திரத்தினரின் பாதி குடும்பங்களுடைய ஆனேர் மற்றும் பீலியாம் நகரங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கோகாத் கோத்திரத்தினருக்கு கொடுத்தனர். அந்நகரங்களைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் கோகாத் கோத்திரத்தினர் பெற்றனர்.
மற்ற லேவிய குடும்பத்தினர் வீடுகள் பெற்றது
71 கெர்சோம் குடும்பங்கள் மனாசே கோத்திரத்தின் பாதி குடும்பங்களிடமிருந்து பாசான் மற்றும் அஸ்தரோத் ஆகிய பகுதிகளிலிருந்த கோலானின் நகரங்களைப் பெற்றன. இந்நகரங்களின் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களையும் அவர்கள் பெற்றார்கள்.
72-73 கெர்சோம் கோத்திரத்தினர் கேதேஸ், தாபிராத், ராமோத், ஆனேம் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை இசக்கார் கோத்திரத்தினருக்குரியவை.
74-75 கெர்சோம் கோத்திரத்தினர் மாஷால், அப்தோன், உக்கோக், ரேகோப் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தது.
76 கெர்சோம் கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேஸ், அம்மோன், கீரியாத்தாயீம் ஆகிய நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை நப்தலி கோத்திரத்தினருக்கு உரியவை.
77 மெராரியின் மற்ற ஜனங்களுக்கு ரிம்மோன், தாபோர் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புற நிலங்களையும் பெற்றனர். இவை செபுலோன் கோத்திரத்தினருக்குரியவை.
78-79 மெராரி கோத்திரத்தினர் மேலும் வனாந்திரத்திலிருந்த பேசேர் யாத்சா, கேதேமோத், மேப்பாத் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் பெற்றனர். இவை ரூபன் கோத்திரத்தினருக்குரியவை. ரூபன் கோத்திரத்தினர், எரிகோவுக்கப் புறமுள்ள யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்தனர்.
80-81 மெராரி கோத்திரத்தினர் மேலும் கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியும் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை காத் கோத்திரத்தினருக்குரியவை.
கிறிஸ்துவின் பலி நம்மை முழுமையாக்குகிறது
10 நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. 2 சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். 3 ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன. 4 ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது.
5 ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர்,
“நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை.
ஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர்.
6 மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது.
பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது.
7 பிறகு நான், ‘தேவனே! இதோ இருக்கிறேன்.
உம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.
நியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.”(A)
8 “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார். 9 பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார். 10 இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார்.
11 ஒவ்வொரு நாளும் ஆசாரியர்கள் நின்றுகொண்டு தமது மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்கள் மீண்டும், மீண்டும் அதே பலிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்பலிகள் ஒருபோதும் பாவங்களை நீக்காது. 12 ஆனால் கிறிஸ்து மக்களின் பாவங்களைப் போக்க ஒரே ஒரு முறைதான் தன்னைப் பலிகொடுத்தார். என்றென்றைக்கும் அது போதுமானதாயிற்று. அவர் தேவனுடைய வலதுபுறத்தில் அமர்ந்துகொண்டார். 13 அவர் இப்பொழுது தனது எதிரிகளைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரக் காத்துக்கொண்டிருக்கிறார். 14 ஒரே ஒரு பலியின் மூலம் அவர் என்றென்றைக்கும் தம் மக்களை முழுமையாக்கிவிட்டார். அம்மக்களே பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்.
15 பரிசுத்த ஆவியானவரும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். முதலில் அவர்,
16 “பிறிதொரு காலத்தில் அவர்களோடு நான் செய்யப்போகிற உடன்படிக்கை இதுதான்.
என் சட்டங்களை அவர்கள் இதயங்களில் பதியவைப்பேன்.
மேலும் அவற்றை அவர்களின் மனங்களில் எழுதுவேன்”(B)
17 என்று சொன்னார். மேலும்,
“அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன்.
மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்”(C)
18 ஒரு முறை இப்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. பிறகு பலிகளுக்கான தேவை இல்லை.
தேவனிடம் நெருங்கி வாருங்கள்
19 ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. 20 இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். 21 தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 22 நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். 23 மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.
உறுதிபெற ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்
24 நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும்.
25 சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும்.
கிறிஸ்துவிடமிருந்து விலகாதீர்கள்
26 நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. 27 நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். 28 மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். 29 ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். 30 “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(D) என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்”(E) என்றும் சொன்னார். 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும்.
உனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் விட்டுவிடாதே
32 நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். 33 சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். 34 ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள்.
35 எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். 36 நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். 37 கொஞ்ச காலத்தில்,
“வரவேண்டியவர் வருவார்,
அவர் தாமதிக்கமாட்டார்.
38 விசுவாசத்தினாலே நீதிமானாக
இருக்கிறவன் பிழைப்பான்.
அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால்
நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.”(F)
39 ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
இன்பத்தை விரும்பும் பெண்கள்
4 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே என்னைக் கவனியுங்கள். நீங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்கள் அந்த ஏழைகளை நசுக்குகிறீர்கள். நீங்கள் “எங்களுக்குக் குடிக்கக் கொஞ்சம் கொண்டு வாருங்கள்” என்று உங்கள் கணவர்களிடம் கூறுகிறீர்கள்.
2 கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி கொடுத்தார். அத்துன்பங்கள் உங்களுக்கு வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால் வாக்களித்தார். ஜனங்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அவர்கள் மீன் தூண்டிலைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள். 3 உங்கள் நகரம் அழிக்கப்படும். பெண்கள் நகரச்சுவர்களிலுள்ள வெடிப்புகள் வழியே அவசரமாக வெளியேறி பிணக் குவியல்களின் மேல் விழுவார்கள்.
கர்த்தர் இவற்றை கூறுகிறார். 4 “பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள்! கில்காலுக்குப் போய் மேலும் பாவம் செய்யுங்கள். உங்களது பலிகளை காலை நேரத்தில் செலுத்துங்கள். மூன்று நாள் விடுமுறைக்கு உங்கள் விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டு வாருங்கள். 5 புளித்த மாவுள்ள நன்றிக் காணிக்கையைக் கொடுங்கள். ஒவ்வொருவரிடமும் சுயசித்தக் காணிக்கைகளைப்பற்றிக் கூறுங்கள். இஸ்ரவேலே, அவற்றைச் செய்ய நீ விரும்புகிறாய். எனவே போய் அவற்றைச் செய்” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
6 “நான், உங்களை என்னிடம் வரச்செய்ய வேண்டுமென பலவற்றை முயற்சி செய்தேன். நான் நீங்கள் உண்ண எந்த உணவையும் தரவில்லை. உங்கள் நகரங்கள் எதிலும் உண்ண உணவு கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.
7 “நான் அறுவடைக்கு மூன்று மாதத்திற்கு முன்பு மழையையும் நிறுத்தினேன். எனவே விளைச்சல் விளையவில்லை. பிறகு நான் ஒரு நகரத்தில் மழை பெய்யும்படிச் செய்தேன். ஆனால் அடுத்த நகரில் மழை பெய்யவில்லை. நாட்டின் ஒரு பகுதியில் மழை பெய்தது. ஆனால் நாட்டின் அடுத்தப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது. 8 எனவே இரண்டு அல்லது மூன்று நகரங்களிலுள்ள ஜனங்கள் அடுத்த நகருக்கு தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றனர். ஆனால் எல்லோருக்கும் அங்கு தண்ணீர் போதுமானதாக இல்லை. இருந்தாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.
9 “நான் உங்கள் விளைச்சலை வெப்பத்தாலும் நோயாலும் மரிக்கும்படிச் செய்தேன். நான் உங்களது தோட்டங்களையும் திராட்சத் தோட்டங்களையும் அழித்தேன். உங்களது அத்தி மரங்களையும் ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றன. ஆனாலும் நீங்கள் உதவிக்காக என்னிடம் வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.
10 “நான் எகிப்திற்குச் செய்ததுபோல உங்களுக்கு எதிராக வியாதிகளை அனுப்பினேன். நான் உங்களது இளைஞர்களை வாள்களால் கொன்றேன். நான் உங்கள் குதிரைகளை எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் பாளயம் பிணங்களால் துர்நாற்றம் வீசும்படி செய்தேன். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.
11 “நான் சோதோமையும் கொமோராவையும் அழித்ததுபோன்று உங்களை அழித்தேன். அந்நகரங்கள் முழுவதுமாக அழிந்தன. நீங்கள் நெருப்பிலிருந்து வெளியே இழுக்கப்பட்ட எரிந்த குச்சியைப் போன்றவர்கள். ஆனாலும் நீங்கள் என்னிடம் உதவிக்காக வரவில்லை” என்று கர்த்தர் கூறினார்.
12 “எனவே இஸ்ரவேலே, நான் இவற்றை உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, உனது தேவனை சந்திக்கத் தயாராக இரு.”
13 நான் யார்? நானே மலைகளைப் படைத்தவர்.
நான் உங்கள் இருதயங்களையும் உண்டாக்கினவர்.
நான் ஜனங்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன்.
நான் இருளை விடியற் காலையாக மாற்றினேன்.
நான் பூமியின் மேலுள்ள மலைகைளின் மேல் நடக்கிறேன்.
நான் யார்? எனது நாமம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர்.
148 கர்த்தரைத் துதியுங்கள்!
மேலேயுள்ள தேவ தூதர்களே,
பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
2 தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது சேனைகள்[a] எல்லோரும் அவரைத் துதியுங்கள்!
3 சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்!
நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்!
4 மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்!
வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!
5 கர்த்தருடைய நாமத்தைத் துதி.
ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!
6 இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார்.
என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார்.
7 பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்!
சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்!
8 தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும்
புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார்.
9 மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும்
கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
10 எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும்
ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார்.
11 பூமியின் தேசங்களையும் ராஜாக்களையும் தேவன் உண்டாக்கினார்.
தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார்.
12 இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார்.
முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.
13 கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!
அவர் நாமத்தை என்றென்றும்
மகிமைப்படுத்துங்கள்!
பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்!
14 தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார்.
தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள்.
ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள்.
தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்.
149 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
அவர் அவர்களை மீட்டார்!
5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
8 தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான
ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தரைத் துதியுங்கள்!
150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
2 அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
3 எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
4 தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
5 ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!
6 எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!
கர்த்தரைத் துதிப்போம்!
2008 by World Bible Translation Center