Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 21

நாபோத்தின் திராட்சை தோட்டம்

21 சமாரியாவில் ஆகாப்பின் அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். ஒரு நாள் ராஜா அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக்கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான்.

அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான்.

எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை ராஜா விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான்.

ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான்.

அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் ராஜா! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள்.

பிறகு அவள் சில கடிதங்களை எழுதி ராஜாவின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். அக்கடிதத்தில்,

“நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். 10 அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் ராஜாவுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது.

11 எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். 12 தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். 13 பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் ராஜாவுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். 14 அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர்.

15 அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 16 அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான்.

17 அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், 18 “ராஜாவிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். 19 அவனிடம், ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும்’ என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார்.

20 எனவே எலியா ஆகாபிடம் சென்றான். ராஜாவோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான்.

அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். 21 எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். 22 உனது குடும்பமானது நேபாத்தின் குமாரனான ராஜா யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். 23 கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். 24 உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான்.

25 ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். 26 அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார்.

27 எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான்.

28 கர்த்தர் எலியாவிடம், 29 “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.

1 தெசலோனிக்கேயர் 4

தேவனை மகிழ்வூட்டும் வாழ்க்கை

சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம். நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும். உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள். உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம். நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை. எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.

கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். 10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும், மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். 12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.

கர்த்தரின் வருகை

13 சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை. 14 இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார்.

15 கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை. 16 கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள். 17 அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 18 ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

தானியேல் 3

தங்க விக்கிரகமும் நெருப்புச் சூளையும்

நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் தங்கத்தினால் செய்த ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகம் 60 முழம் உயரமும் 6 முழம் அகலமுமானது. பிறகு அவன் அந்த விக்கிரகத்தைப் பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான். பின்னர் ராஜா தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், கருவூலக்காரரையும், ஆலோசகரையும், ஆளுநரையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் கூடி வருமாறு அழைத்தான். ராஜா, அவர்கள் அனைவரும் விக்கிரகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினான்.

எனவே அவர்களெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள். பிறகு ராஜாவுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார். எவனாவது கீழே விழுந்து தங்க விக்கிரகத்தை தொழாமலிருந்தால் அவன் சீக்கிரமாக அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவான். இது அனைவருக்குமுரிய அரச கட்டளையாகும்” என்றான்.

எனவே அவர்கள், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டதும் மிக விரைவாக கீழே விழுந்து தங்க விக்கிரகத்தைக் தொழுதுகொண்டார்கள். சகல தேசத்தாரும், இனத்தாரும், மொழிக்காரர்களும் கீழே விழுந்து ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுவிய தங்க விக்கிரகத்தைத் தொழுதுகொண்டார்கள்.

பின்னர், சில கல்தேயர்கள் ராஜாவிடம் வந்தனர். அந்த ஆட்கள் யூதர்களுக்கு விரோதமாகப் பேசத்தொடங்கினர். அவர்கள் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம், “ராஜாவே! நீர் என்றும் வாழ்க. 10 ராஜாவே, நீர் ஒரு கட்டளை கொடுத்தீர். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகல இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் ஒவ்வொருவரும் இந்தத் தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னீர். 11 அதோடு, எவனாவது தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளாமலிருந்தால் அவன் அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர். 12 சில யூதர்கள் ராஜாவான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள்.

13 நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். அவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்தான். எனவே அவர்கள் ராஜா முன்பு கொண்டுவரப்பட்டார்கள். 14 நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? 15 இப்பொழுது நீங்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் நான் நிறுவிய தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழவேண்டும். நான் செய்திருக்கிற இவ்விக்கிரகத்தை நீங்கள் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் இதனைத் தொழாவிட்டால், மிகவும் சூடான எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். பிறகு உங்களை என் அதிகாரத்திலிருந்து எந்தத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்றான்.

16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவிடம்: “நேபுகாத்நேச்சாரே, நாங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை. 17 நீர் எங்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டால் நாங்கள் சேவிக்கிற எங்கள் தேவன் எங்களைக் காப்பாற்றுவார். அவர் விரும்பினால் உமது வல்லமையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவார். 18 ஆனால் எங்களை அவர் காப்பாற்றாவிட்டாலும்கூட, நாங்கள் உமது தெய்வங்களைச் சேவிக்கமாட்டோம். நீர் நிறுவிய தங்க விக்கிரகத்தை தொழமாட்டோம். இது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்றார்கள்.

19 பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். 20 பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான்.

21 எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். 22 ராஜா கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. 23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர்.

24 பின்னர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான்.

அவனது ஆலோசகர்கள்: “ஆம் ராஜாவே” என்றனர்.

25 ராஜா அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.

26 பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான்.

எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர். 27 அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை.

28 பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர். 29 எனவே, நான் இப்போது இந்தச் சட்டத்தை ஏற்படுத்துகிறேன். எந்த தேசத்தினராகவும், மொழியினராகவும் உள்ள என் ஜனங்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன். அவர்களது வீட்டை எருக்களமாகிப் போடுவேன். வேறு எந்த தேவனும் தம் ஜனங்களை இதுபோல் காப்பாற்ற முடியாது” என்றான். 30 பிறகு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.

சங்கீதம் 107

புத்தகம் 5

107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
    கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
    அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.

அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.
    அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள்.
    ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி,
    சோர்வடைந்து போனார்கள்.
எனவே அவர்கள் உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார்.
தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.
அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும்
    அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார்.
    பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.

10 தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள்.
    அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
11 ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள்.
    மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள்.
12 அவர்கள் செய்த காரியங்களால்
    தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார்.
அவர்கள் இடறி வீழ்ந்தார்கள்.
    அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை.
13 அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள்.
    தேவன் அவர்கள் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
14 அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார்.
    அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார்.
15 அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும்
    கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
16 நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார்.
    அவர்களின் வெண்கலக் கதவுகளை தேவனால் உடைக்க முடியும்.
    அவர்களின் வாயிற் கதவுகளின் இரும்புக் கம்பிகளை தேவனால் சிதறடிக்க முடியும்

17 சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள்.
    தங்களுடைய குற்றங்களுக்காக அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள்.
18 அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள்.
    அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.
19 அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள்.
    கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள்.
    அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
20 தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார்.
    எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
21 அவரது அன்பிற்காகவும்,
    அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
22 அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
    கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.

23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
    பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
    கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
    அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
    மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
    மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
    எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
29 தேவன் புயலை நிறுத்தினார்.
    அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
    அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
31 அவரது அன்பிற்காகவும்,
    அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
    முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள்.

33 தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார்.
    நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார்.
34 தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார்.
    அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.
35 தேவன் பாலைவனத்தை மாற்றினார்.
    அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று.
    தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
36 தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார்.
    அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.
37 அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள்.
    அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.
    அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.
38 தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார்.
    அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.

39 திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும்,
    அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.
40 தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார்.
    பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
41 பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார்.
    இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
42 நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
    ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.

43 ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான்.
    அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center