M’Cheyne Bible Reading Plan
சீபா தாவீதைச் சந்திக்கிறான்
16 தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன. 2 தாவீது ராஜா சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான்.
சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் ராஜாவின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான்.
3 ராஜா, “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான்.
சீபா ராஜாவிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான்.
4 பின்னர் ராஜா சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான்.
சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான்.
சீமேயி தாவீதை சபிக்கிறான்
5 தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் குமாரனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும், மீண்டும் தீயனவற்றையே பேசினான்.
6 தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர். 7 சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ. 8 கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் ராஜாவாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது குமாரனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான்.
9 செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவை நோக்கி, “எனது ராஜாவாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான்.
10 அதற்கு ராஜா, “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான். 11 தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த குமாரனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார். 12 ஒரு வேளை கர்த்தர் தீய காரியங்கள் எனக்கு நேரிடுவதைப் பார்ப்பார். பின்பு கர்த்தர் சீமேயி சொல்லும் தீய காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலாக நல்லதைச் செய்யலாம்” என்றான்.
13 இவ்வாறு தாவீதும் அவனுடைய ஆட்களும் பாதையில் தொடர்ந்து நடந்துச் சென்றனர். ஆனால் சீமேயி தாவீதைப் பின் தொடர்ந்தான். மலையோரமுள்ள மறுபுறத்துப் பாதையில் சிமேயி நடந்தான். சீமேயி தீயவற்றைச் சொல்லிக்கொண்டே நடந்தான். சீமேயி கற்களையும் அழுக்கையுங்கூட தாவீதின் மீது எறிந்தான்.
14 தாவீது ராஜாவும் அவனது ஆட்களும் பகூரிம்முக்கு வந்தனர். ராஜாவும் அவனது ஆட்களும் சோர்வுற்றிருந்தனர். ஆகையால் பகூரிமில் ஓய்வெடுத்தனர்.
15 அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர். 16 தாவீதின் நண்பனாகிய அற்கியனாகிய ஊசாய் அப்சலோமிடம் வந்தான். ஊசாய் அப்சலோமிடம், “ராஜாவே! நீண்டகாலம் வாழ்க” என்றான்.
17 அப்சலோம் பதிலாக, “நீ உன் நண்பனான தாவீதுக்கு உண்மையாக இருக்கவில்லையா? எருசலேமைவிட்டு உன் நண்பனோடு ஏன் போகவில்லை?” என்று கூறினான்.
18 அதற்கு ஊசாய், “கர்த்தர் தேர்ந்தெடுக்கும் ஆளைச் சார்ந்தவன் நான். இந்த ஜனங்களும் இஸ்ரவேலரும் உம்மைத் தேர்ந்தெடுத்தனர். நான் உம்மோடு தங்குவேன். 19 முன்பு நான் உமது தந்தைக்குப் பணியாற்றியிருக்கிறேன். ஆகவே இப்போது நான் தாவீதின் குமாரனுக்குப் பணிசெய்யவேண்டும். எனவே உமக்குப் பணி செய்வேன்” என்றான்.
அப்சலோம் அகித்தோப்பேலிடம் அறிவுரை கேட்கிறான்
20 அப்சலோம் அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான்.
21 அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் அவரது மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு பாலின உறவுக்கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான்.
22 பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தையின் மனைவியரோடு பாலின உறவுக்கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். 23 அந்நேரத்தில் அகித்தோப்பேலின் உபதேசம் தாவீதுக்கும், அப்சலோமுக்கும் மிக முக்கியமானதாக இருந்தது. தேவன் மனிதனுக்குச் சொன்ன வாக்கைப்போன்று முக்கியமானதாக இருந்தது.
உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவுதல்
9 தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. 2 நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. 3 ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். 4 நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) 5 ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.
6 “கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். 7 ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். 8 அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும்.
9 “அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான்.
அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.”(A)
என்று எழுதப்பட்டுள்ளது.
10 தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். 11 தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர்.
12 தேவைப்படும் தேவனுடைய மக்களுக்கு நீங்கள் உதவி செய்வது பெரும் சேவையாகும். இதற்கு இணையானது வேறில்லை. தேவனுக்கு அளவு கடந்த நன்றிகளை இது கொண்டு வரும். 13 நீங்கள் செய்யும் இச்சேவையானது உங்கள் விசுவாசத்திற்கான நல்ல சாட்சியாகும். இதற்காக மக்கள் தேவனைப் பாராட்டுவர். நீங்கள் விசுவாசிப்பதாக ஒத்துக்கொள்ளும் கிறிஸ்துவின் நற்செய்தியை நீங்கள் பின்பற்றுவதால் மக்கள் அவருக்கு நன்றி சொல்வார்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளிலும் ஒவ்வொருவரின் தேவைகளிலும் நீங்கள் தாராளமாகப் பங்கு கொள்கிறீர்கள். 14 அந்த மக்கள் தேவனிடம் ஜெபிக்கும்போது, அவர்கள் உங்களோடு இருக்கவே விரும்புவர். ஏனென்றால் தேவன் உங்களுக்கு மிகுதியாகக் கிருபை செய்திருக்கிறார். 15 தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக.
23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, சமாரியா மற்றும் எருசலேம் பற்றிய இந்தக் கதையைக் கேள். இரண்டு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் ஒரே தாயின் குமாரத்திகள். 3 அவர்கள் இளமையாக இருக்கும்போதே எகிப்தில் வேசிகள் ஆனார்கள், எகிப்தில் அவர்கள் முதலில் வேசித்தனம் செய்தனர். ஆண்கள் தம் மார்புகளைத் தொடவும் வருடவும் அனுமதித்தனர். 4 மூத்தவளின் பெயர் அகோலாள்; அவள் தங்கையின் பெயர் அகோலிபாள். அந்தச் சகோதரிகள் எனது மனைவிகள் ஆனார்கள். எங்களுக்குப் பிள்ளைகள் இருந்தனர். (அகோலாள் உண்மையில் சமாரியா. அகோலிபாள் உண்மையில் எருசலேம்).
5 “பிறகு அகோலாள் எனக்கு நம்பிக்கையற்றவள் ஆனாள். அவள் வேசியைப்போன்று வாழத் தொடங்கினாள். அவள் தனது நேசர்களை விரும்பத் தொடங்கினாள். அவள் அசீரிய படைவீரர்களை 6 அவர்களது நீல வண்ணச் சீருடையில் பார்த்தாள். அவர்கள் குதிரைமேல் சவாரி செய்கிற விரும்பத்தக்க இளம் வீரர்கள். அவர்கள் தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். 7 அகோலாள் அவர்கள் அனைவருக்கும் தன்னையே கொடுத்தாள். அவர்கள் அனைவரும் அசீரியப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள். அவள் அவர்கள் அனைவரையும் விரும்பினாள். அவள் அவர்களது தீட்டான சிலைகளோடு சேர்ந்து தீட்டானாள். 8 இதோடுகூட, அவள் எகிப்து மீதுகொண்ட நேசம் மோகத்தையும் நிறுத்தவில்லை. அவள் இளமையாக இருந்தபோது எகிப்து அவளோடு நேசம் செய்தது. அவளது இளம் மார்பகங்களைத் தொட்ட முதல் நேசன் எகிப்துதான். எகிப்து தனது உண்மையற்ற நேசத்தை அவள் மீது ஊற்றியது. 9 எனவே நான் அவளை நேசர்கள் வைத்துக்கொள்ளும்படி விட்டுவிட்டேன். அவள் அசீரியாவை விரும்பினாள். எனவே, நான் அவளை அவர்களுக்குக் கொடுத்தேன். 10 அவர்கள் அவளைக் கற்பழித்தனர். அவளது குழந்தைகளை எடுத்தனர். அவர்கள் அவளைக் கடுமையாகத் தண்டித்தனர். அவளை வாளால் கொன்றனர். பெண்கள் இன்றும் அவளைப்பற்றிப் பேசுகிறார்கள்.
11 “அவளது இளைய சகோதரி அகோலிபாள் இவை எல்லாம் நடப்பதைப் பார்த்தாள். ஆனாலும் அவள் தன் அக்காவைவிட மிகுதியாகப் பாவங்களைச் செய்தாள்! அவள் அகோலாளைவிட மிகவும் நம்பிக்கையற்றவள் ஆனாள், 12 அவள் அசீரியத் தலைவர்களையும், அதிகாரிகளையும் விரும்பினாள். அவள் நீலவண்ணச் சீருடையில் குதிரையில் சவாரி செய்துவரும் இளம் வீரர்களை விரும்பினாள். அவர்கள் அனைவரும் விரும்பத்தக்க இளம் ஆண்கள். 13 அவர்கள் இருவரும் அதே தவறால் தம் வாழ்வை தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் பார்த்தேன்.
14 “அகோலிபாள் தன் சோரத்தைத் தொடர்ந்தாள். பாபிலோனில், சுவரில் ஆண்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள். அவை சிவப்புச் சீருடை அணிந்த கல்தேயரின் உருவங்கள். 15 அவர்கள் தம் இடுப்பைச்சுற்றி கச்சை அணிந்திருந்தனர். தலையில் நீண்ட தலைப் பாகை அணிந்தனர். அவர்கள் அனைவரும் தேரோட்டிகளைப்போன்று காட்சி தந்தனர். அவர்கள் அனைவரும் பாபிலோனில் பிறந்தவர்களின் சாயலில் இருந்தனர். 16 அகோலிபாள் அவர்களை விரும்பினாள். அதனால் அவள் தூதர்களை கல்தேயாவுக்கு அவர்களிடம் அனுப்பினாள். 17 எனவே பாபிலோனியர்கள் அவளது நேசம் படுக்கைக்கு வந்து அவளோடு பாலின உறவுகொண்டனர். அவர்கள் அவளைப் பயன்படுத்தி மிகவும் தீட்டுப்படுத்தியதினால் அவள் அவர்கள் மேல் வெறுப்படைந்தாள்!
18 “அகோலிபாள் இவ்வாறு என்னிடம் விசுவாசமற்றவளாக இருந்ததை யாவரும் காணும்படிச் செய்தாள். பலர் அவளது நிர்வாணத்தை அனுபவிக்கும்படி அனுமதித்தாள். நான் அவளது அக்காளோடு வெறுப்படைந்ததுபோல அவளோடும் வெறுப்படைந்தேன். 19 மீண்டும், மீண்டும் அகோலிபாள் எனக்குத் துரோகம் செய்தாள். பிறகு அவள் தான் இளம்பெண்ணாக எகிப்தில் இருந்தபொழுது நடந்த வேசித்தனத்தை நினைவுபடுத்திக்கொண்டாள். 20 கழுதைக் குறிகள்போன்ற தன் நேசர்களின் ஆண் குறிகள் மீதும், குதிரைகளினுடையதைப்போன்ற தன் நேசர்களின் விந்துப் பெருக்கின் மீதும் தனக்கிருந்த ஆசையை அவள் நினைத்துக்கொண்டாள்.
21 “அகோலிபாளே, நீ உன் இளமையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறாய். அக்காலத்தில் உன் நேசர்கள் உன் மார்பகங்களைத் தொட்டு வருடினார்கள். 22 எனவே, அகோலிபாளே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீ உன் நேசர்கள்மேல் வெறுப்படைந்தாய், ஆனால் நான் இங்கு உன் நேசர்களைக் கொண்டுவருவேன். அவர்கள் உன்னை முற்றுகையிடுவார்கள். 23 நான் பாபிலோனில் உள்ள அனைத்து ஆண்களையும் குறிப்பாகக் கல்தேயர்களையும் அழைப்பேன். நான் பேகோடு, சோவா, கோவா ஆகிய தேசங்களில் உள்ளவர்களையும் அழைப்பேன். நான் அசீரியாவில் உள்ள ஆண்களையும் அழைப்பேன். நான் அனைத்துத் தலைவர்களையும் அதிகாரிகளையும் அழைப்பேன். அவர்கள் எல்லோரும் குதிரை மீது சவாரிசெய்யும் விரும்பத்தக்க இளம் ஆண்கள், அதிகாரிகள், சேனாதிபதிகள், மேலும் முக்கிய நபர்களாகவும் இருந்தனர். 24 அந்த ஆண்களின் கூட்டம் உன்னிடம் வரும். அவர்கள் தமது இரதங்களிலும் குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் தமது ஈட்டிகள், கேடயங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை அணிந்திருப்பார்கள். அவர்கள் உன்னைச் சுற்றி நிற்பார்கள். நான் அவர்களிடம் நீ எனக்குச் செய்திருந்ததைச் சொல்வேன். அவர்கள் தம் சொந்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பார்கள். 25 நான் எவ்வளவு பொறாமையுள்ளவன் என்பதை உனக்குக் காட்டுவேன். அவர்கள் மிகவும் கோபம்கொண்டு உன்னைத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உனது மூக்கையும் காதுகளையும் வெட்டுவார்கள். அவர்கள் வாளைப் பயன்படுத்தி உன்னைக் கொல்லுவார்கள். பிறகு உனது பிள்ளைகளை எடுத்துக்கொள்வார்கள். பிறகு விடுபட்டுள்ள உனக்குரியவற்றை எரிப்பார்கள். 26 அவர்கள் உனக்குரிய மெல்லிய ஆடைகளையும் நகைகளையும் எடுத்துக்கொள்வார்கள். 27 நான் உனது எகிப்தோடுள்ள வேசித்தனம் பற்றிய கனவை நிறுத்துவேன். அவற்றை நீ மீண்டும் தேடமாட்டாய். அவர்களை மீண்டும் நீ நினைக்கமாட்டாய்!’”
28 எனது கார்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நீ வெறுக்கிற ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். நீ அருவருப்படைந்த ஆண்களிடம் நான் உன்னைக் கொடுக்கிறேன். 29 அவர்கள் உன்னை எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டுவார்கள். அவர்கள் உன் உழைப்பின் பலனை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் உன்னை வெறுமையாகவும் நிர்வாணமாகவும் விட்டுவிடுவார்கள். ஜனங்கள் உன் பாவங்களைத் தெளிவாகக் காண்பார்கள். அவர்கள், நீ வேசியைப்போன்று நடந்துகொண்டதையும் கெட்ட கனவுகள் கண்டதையும் காண்பார்கள். 30 நீ என்னை விட்டுவிட்டு மற்ற நாடுகளைத் துரத்திக்கொண்டு போனபோது அப்பாவங்களைச் செய்தாய். அவர்களது அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளத் தொடங்கும்போது அப்பாவங்களைச் செய்தாய். அவற்றினால் நீ உன்னையே தீட்டுப்படுத்திக்கொண்டாய். 31 நீ உன் அக்காவைப் பின்பற்றி அவளைப்போன்று வாழ்ந்தாய். நீயே அவளுடைய விஷக் கோப்பையை எடுத்து உனது கைகளில் பிடித்துக்கொண்டாய். உனது தண்டனைக்கு நீயே காரணம் ஆனாய்.” 32 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நீ உன் சகோதரியின் விஷக் கோப்பையை குடிப்பாய்.
இது உயரமும் அகலமும்கொண்ட விஷக் கோப்பை.
அக்கோப்பையில் மிகுதியான விஷம் (தண்டனை) உள்ளது.
ஜனங்கள் உன்னைப் பார்த்துச் சிரித்துக் கேலிசெய்வார்கள்.
33 நீ ஒரு குடிகாரனைப்போன்று தடுமாறுவாய்.
நீ மிகவும் சஞ்சலம் அடைவாய்.
அது அழிவும் பாழ்க்கடிப்பும் உள்ள கோப்பை.
இது உன் சகோதரி குடித்த கோப்பையைப் (தண்டனை) போன்றது.
34 அக்கோப்பையிலுள்ள விஷத்தை நீ குடிப்பாய்.
அதிலுள்ள கடைசி சொட்டையும் நீ குடிப்பாய்.
நீ அந்தக் கோப்பையை எறிந்து துண்டு துண்டாக்குவாய்.
நீ வேதனையினால் உன் மார்பகங்களைக் கிழிப்பாய்.
இவை நிகழும், ஏனென்றால், நானே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிறேன்.
நான் இவற்றைக் கூறினேன்.
35 “எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: ‘எருசலேமே, என்னை மறந்து விட்டாய். நீ என்னை தூர எறிந்துவிட்டு என்னை விட்டுப் போய்விட்டாய். எனவே இப்போது என்னை விட்டு விலகியதற்காக நீ துன்பப்படவேண்டும். வேசியைப்போன்று வாழ்கிறாய். உனது கெட்ட கனவுகளுக்காகவும் உன் வேசித்தனங்களுக்காகவும் நீ துன்பப்பட வேண்டும்.’”
அகோலாள், அகோலிபாள் ஆகியோருக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
36 எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, அகோலாவையும் அகோலிபாளையும் நியாயம்தீர்க்கப்போகிறாயா? அவர்கள் செய்திருக்கிற அருவருப்பான செயல்களைப்பற்றி அவர்களிடம் கூறு, 37 அவர்கள் விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தனர். அவர்கள் கொலைக் குற்றவாளிகள். அவர்கள் வேசிகளைப்போன்று நடந்துகொண்டனர். அவர்கள் அசுத்த விக்கிரகங்களுக்காக என்னை விட்டுவிட்டனர். அவர்கள் என் மூலம் குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தீக்குள்ளாக்கி அந்த அசுத்த விக்கிரகங்களுக்கு போஜனப்பலியாகக் கொடுத்தனர். 38 மேலும் அவர்கள் என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி என் சிறப்பான ஓய்வு நாட்களை முக்கியமற்றதாக நடத்தினார்கள். 39 அவர்கள் தம் விக்கிரகங்களுக்காகக் குழந்தைகளைக் கொன்றார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குச் சென்று அவற்றையும் அருவருப்பானதாக ஆக்கினார்கள்! அவர்கள் இதனை என் ஆலயத்திற்குள் செய்தார்கள்!
40 “அவர்கள் தொலைதூர நாடுகளிலிருந்து ஆண்களை அழைக்க அனுப்பியிருந்தனர். நீ இம்மனிதர்களிடம் தூதுவனை அனுப்பினாய். அம்மனிதர்கள் உன்னைப் பார்க்க வந்தனர். அவர்களுக்காக நீ குளித்தாய். கண்ணுக்கு மை தீட்டினாய். நகைகளை அணிந்துகொண்டாய். 41 நீ அழகான படுக்கையில் அமர்ந்து அதனருகில் மேசையைப்போட்டாய். எனது வாசனைப்பொருட்களையும் எனது எண்ணெயையும் மேசைமேல் வைத்தாய்.
42 “எருசலேமில் உள்ள சத்தம் விருந்துண்ணும் ஒரு கும்பலின் இரைச்சலைப்போன்று கேட்டது. பல மனிதர்கள் விருந்துக்கு வந்தனர். அவர்கள் வனாந்தரத்திலிருந்து வந்ததுபோன்று ஏற்கெனவே குடித்திருந்தனர். அவர்கள் அப்பெண்களுக்கு கைவளைகளையும் கிரீடங்களையும் கொடுத்தனர். 43 பிறகு நான் விபச்சாரத்தால் களைத்துப் பழுதான ஒரு பெண்ணிடம் பேசினேன். நான் அவளிடம், ‘அவர்கள் உன்னோடும் நீ அவர்களோடும் தொடர்ந்து பாலின உறவு வைத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டேன். 44 ஆனால் அவர்கள் வேசிகளிடம் போவதுபோன்று அவளோடு போய்க்கொண்டிருந்தார்கள். ஆம், அவர்கள் மீண்டும், மீண்டும் அந்த முறைகேடான பெண்களான அகோலாளிடமும் அகோலிபாளிடமும் போனார்கள்.
45 “ஆனால் நல்லவர்கள் அவர்களைக் குற்றவாளியாக நியாயந்தீர்ப்பார்கள். அவர்கள் அப்பெண்களை அவர்களது விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களுக்காக நியாயந்தீர்ப்பார்கள். ஏனென்றால், அவர்கள் அகோலாளிடமும் அகோலிபாளிடமும் விபச்சாரப் பாவம் செய்தனர். அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தம் அவர்களது கையில் இன்னும் இருக்கிறது.”
46 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்: “ஜனங்களை ஒன்று சேருங்கள். அந்த ஜனங்கள் அகோலாவையும் அகோலிபாளையும் தண்டிக்க அனுமதியுங்கள். அந்த ஜனங்கள் குழு இரண்டு பெண்களையும் தண்டித்துக் கேலி பேசும். 47 பிறகு அந்த ஜனங்கள் குழு அவர்கள் மீது கல்லை வீசிக் கொல்லும், பிறகு அவர்கள் தம் வாள்களால் அப்பெண்களைத் துண்டுகளாக்குவார்கள். அவர்கள் அப்பெண்களின் பிள்ளைகளையும் கொல்வார்கள். அவர்களின் வீடுகளையும் எரிப்பார்கள். 48 இப்படியாக, நான் இந்நாட்டில் உள்ள அவமானத்தைப் போக்குவேன். நீங்கள் செய்தது போன்ற அவமானகரமான செய்கைகளைச் செய்யவேண்டாம் என்று எல்லாப் பெண்களும் எச்சரிக்கப்படுவார்கள். 49 நீங்கள் செய்த முறைகேடான செயல்களுக்காக அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீங்கள் உங்கள் அசுத்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டதற்காக தண்டிக்கப்படுவீர்கள். பிறகு நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்றும் நீங்கள் அறிவீர்கள்.”
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
70 தேவனே, என்னை மீட்டருளும்!
தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
மிகவும் தாமதியாதேயும்!
71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
7 நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
தேவன் அவனைக் கைவிட்டார்.
அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.
2008 by World Bible Translation Center