M’Cheyne Bible Reading Plan
அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்
15 இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர். 2 அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே[a] நின்று, நியாயத்திற்காக தாவீது ராஜாவிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான். 3 அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது ராஜா நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.
4 அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.
5 எவனாகிலும் அப்சலோமிடம் வந்து அவனை வணங்கியதும் அப்சலோம் அவனை நெருங்கிய நண்பனாக எண்ணி நடத்துவான். அப்சலோம் கையை நீட்டி, அவனைத் தொட்டு, முத்தமிடுவான். 6 தாவீது ராஜாவிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.
தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம்
7 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு[b] அப்சலோம், ராஜா தாவீதிடம், “எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன். 8 ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன்: ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்” என்றான்.
9 தாவீது ராஜா, “சமாதானமாகப் போ” என்றான்.
அப்சலோம் எப்ரோனுக்குப் போனான். 10 ஆனால் அப்சலோம் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்கள் மூலமாகவும் உளவாளிகளை அனுப்பினான். இந்த உளவாளிகள் ஜனங்களிடம், “நீங்கள் எக்காளம் முழங்கியதும், ‘அப்சலோம் எப்ரோனின் ராஜா ஆனான்’ என்று கூறுங்கள்!” என்றான்.
11 அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 12 அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
அப்சலோமின் திட்டங்களை தாவீது அறிகிறான்
13 ஒரு மனிதன் தாவீதிடம் அச்செய்தியைச் சொல்ல வந்தான். அவன், “இஸ்ரவேல் ஜனங்கள் அப்சலோமைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றான்.
14 அப்போது தாவீது எருசலேமில் தன்னோடிருந்த அதிகாரிகளை நோக்கி, “நாம் தப்பித்து விட வேண்டும். நாம் தப்பிக்காவிட்டால் அப்சலோம் நம்மை விட்டுவிடமாட்டான். அப்சலோம் நம்மைப் பிடிக்கும் முன்னர் விரைவாய் செயல்படுவோம். அவன் நம் எல்லோரையும் அழிப்பான், அவன் எருசலேம் ஜனங்களை அழிப்பான்” என்றான்.
15 ராஜாவின் அதிகாரிகள் அவனை நோக்கி, “நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்” என்றார்கள்.
தாவீதும் அவன் ஆட்களும் தப்பித்தனர்
16 தாவீது தன் வீட்டிலிருந்த எல்லோரோடும் வெளியேறினான். தன் பத்து மனைவியரையும் வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கு விட்டுச் சென்றான். 17 எல்லா ஜனங்களும் பின் தொடர்ந்து வர ராஜா வெளியேறினான். கடைசி வீட்டினருகே சற்று நின்றார்கள். 18 தன் அதிகாரிகள் எல்லோரும் ராஜா அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.
19 அப்போது ராஜா கித்தியனாகிய ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களோடு வந்துக் கொண்டிருக்கிறாய்? திரும்பிச் சென்று புதிய ராஜாவோடு (அப்சலோமோடு) தங்கியிரு. நீ ஒரு அந்நியன். இது உன் சொந்த தேசம் அல்ல. 20 நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்” என்றான்.
21 ஆனால் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக, “கர்த்தர் உயிரோடிருப்பதைப்போல நீங்கள் வாழும் காலம் வரைக்கும் நான் உங்களோடு இருப்பேன். வாழ்விலும், மரணத்திலும் நான் உங்களோடு இருப்பேன்!” என்றான்.
22 தாவீது ஈத்தாயை பார்த்து, “வா, நாம் கீதரோன் ஆற்றைக் கடக்கலாம்” என்றான்.
எனவே காத் நகரிலிருந்து வந்த ஈத்தாயும் அவனுடைய எல்லா ஜனங்களும் அவர்களுடைய குழந்தைகளும் கீதரோன் ஆற்றைக் கடந்தார்கள். 23 எல்லா ஜனங்களும் சத்தமாய் அழுதார்கள். தாவீது ராஜாவும் கீதரோன் ஆற்றைக் கடந்தான். ஜனங்கள் பாலைவனத்திற்குச் சென்றார்கள். 24 சாதோக்கும் லேவியரும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து சென்றார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கீழே வைத்தார்கள். எருசலேமை விட்டு எல்லா ஜனங்களும் வெளியேறும் வரைக்கும் அபியத்தார் ஜெபம் செய்துக் கொண்டிருந்தான்.
25 தாவீது ராஜா சாதோக்கிடம், “தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குத் திரும்பவும் கொண்டு போ. கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டினால் என்னைத் திரும்பவும் வரவழைத்துக்கொள்வார். கர்த்தர் எருசலேமையும் அவருடைய ஆலயத்தையும் பார்ப்பதற்கு எனக்கு உதவுவார். 26 கர்த்தர் என்னிடம் கருணை காட்டவில்லை என்பாராயின், அவர் விரும்புகிற எதையும் எனக்குச் செய்யட்டும்” என்றான்.
27 ராஜா ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் குமாரனாகிய அகிமாசையும் அபியத்தாரின் குமாரன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ. 28 ஜனங்கள் பாலைவனத்திற்குள் கடந்து செல்லும் இடங்களில் நான் காத்திருப்பேன். உங்களிடமிருந்து செய்தி எனக்குக் கிடைக்கும் வரைக்கும் நான் காத்திருப்பேன்” என்றான்.
29 எனவே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பரிசுத்த பெட்டியை எருசலேமுக்கு எடுத்துச் சென்று அங்கே தங்கினார்கள்.
அகித்தோப்பேலுக்கு எதிராக தாவீதின் ஜெபம்
30 தாவீது ஒலிவமலைக்குப் போனான். அழுதுக் கொண்டிருந்தான். அவன் தலையை மூடிக்கொண்டு, கால்களில் மிதியடி இல்லாமல் நடந்தான். தாவீதோடிருந்த எல்லா ஜனங்களும் அவர்களுடைய தலைகளை மூடிக்கொண்டனர். அவர்கள் அழுதபடியே, தாவீதோடு சென்றனர்.
31 ஒருவன் தாவீதிடம், “அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்” என்றான். அப்போது தாவீது, “கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்” என்று ஜெபம் செய்தான். 32 தாவீது மலையின் உச்சிக்கு வந்தான். இங்கு அவன் அடிக்கடி தேவனை தொழுதுகொள்ள வந்திருக்கின்றான். அப்போது அற்கியனாகிய ஊசாய் அவனிடம் வந்தான். அவன் அங்கி கிழிந்திருந்தது. தலையில் புழுதி இருந்தது.
33 தாவீது ஊசாய்க்கு, “நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாவாய். 34 ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம், ‘ராஜாவே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்’ என்று கூறு. 35 ஆசாரியர்களான சாதோக்கும், அபியத்தாரும் உன்னோடு இருப்பார்கள். நீ அரண்மனையில் கேட்கும் செய்திகளை அவர்களிடம் சொல்லவேண்டும். 36 சாதோக்கின் குமாரன் அகிமாசும் அபியத்தாரின் குமாரன் யோனத்தானும் அவர்களோடிருப்பார்கள். அவர்கள் மூலமாக உனக்குத் தெரியவரும் செய்திகளை எனக்கு அனுப்பு” என்றான்.
37 தாவீதின் நண்பனாகிய ஊசாய் நகரத்திற்குப் போனான். அப்சலோம் எருசலேமுக்கு வந்தான்.
கிறிஸ்தவர்களின் கொடுக்கும் தன்மை
8 சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 2 அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள். 3 தம்மால் முடிந்த அளவு அவர்கள் கொடுத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அந்த விசுவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கும் மீறி கொடுத்தார்கள். இதனை அவர்கள் சுதந்தரமாகச் செய்தனர். எவரும் அவர்களை அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. 4 ஆனால் அவர்கள் மீண்டும், மீண்டும் எங்களைக் கேட்டார்கள். தேவனுடைய மக்களுக்கான சேவையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப வேண்டினர். 5 நாம் எதிர்பார்த்திராத வகையில் அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் தம் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் கர்த்தருக்கும் எங்களுக்கும் தம்மையே கொடுத்தார்கள். இதைத்தான் தேவனும் விரும்புகிறார்.
6 எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். 7 நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.
8 கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம். 9 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.
10 உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள். 11 எனவே, இப்பொழுது தொடங்கிய செயலை முடித்துவிடுங்கள். பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். 12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். 13 மற்றவர்கள் சௌகரியமாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 14 இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இப்படியே எல்லாம் சமமாகும்.
15 “அதிகமாகச் சேர்த்தவன் எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை.
குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.(A)
தீத்துவும் அவனது குழுவும்
16 உங்கள் மீது எனக்கிருக்கும் அன்பைப் போலவே தீத்துவின் இதயத்திலும் அன்பைத் தந்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் என்னைப் போலவே உங்களிடம் அன்பாய் இருக்கிறான். 17 நாங்கள் செய்யச் சொன்னதையெல்லாம் தீத்து ஏற்றுக்கொண்டான். அவன் உங்களிடம் வர பெரிதும் விரும்பினான். இது அவனது சொந்த முயற்சியே ஆகும். 18 நாங்கள் தீத்துவோடு ஒரு சகோதரனையும் அனுப்பி வைத்தோம். அச்சகோதரன் அனைத்து சபைகளாலும் அவனது சிறப்பான ஊழியத்துக்காகப் பாராட்டப்படுகிறவன். 19 அதோடு, இக்காணிக்கைப் பணத்தை சுமந்துச் செல்லும்போது எங்களுக்குத் துணையாக இருக்க சபைகளால் நியமிக்கப்பட்டவனே இச்சகோதரன் ஆவான். தேவனுக்கு மகிமை உண்டாகவே நாங்கள் இச்சேவையைச் செய்ண்டிருக்கிறோம். சேவை செய்யும் எங்கள் விருப்பத்தைப் புலப்படுத்தவும் இதைச் செய்கிறோம்.
20 இப்பெரிய தொகையை கையாள்வது குறித்து நாங்கள் கொள்ளும் அக்கறைகளைப் பற்றி யாரும் விமர்சனம் செய்துவிடக் கூடாது எனக் கூடுமான வரையில் எச்சரிக்கையாய் உள்ளோம். 21 சரியானவற்றைச் செய்யவே நாங்கள் முயல்கிறோம். தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல. மக்களுக்கு முன்பாகவும் நேர்மையாகப்படுவதை மட்டுமே செய்ய விரும்புகிறோம்.
22 இவர்களோடு எங்கள் சகோதரனையும் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவத் தயாராய் இருப்பான். பல வழிகளில் அவன் இதை நிரூபித்திருக்கிறான். உங்கள் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பதால் அதிக அளவில் உதவ அவன் விரும்புகிறான்.
23 தீத்துவைப் பற்றிக் கூறுவதானால், அவன் எனது கூட்டாளி. உங்களுக்கு உதவுவதற்காக என்னோடு பணிபுரிபவன். மற்ற சகோதரர்களைப் பற்றி கூறுவதானால் அவர்கள் சபைகளால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குப் புகழ் சேர்த்தவர்கள். 24 எனவே, உங்களது உண்மையான அன்பை அவர்களுக்குக் காட்டுங்கள். ஏன் உங்களை நினைத்துப் பெருமைப் பாராட்டுகிறோம் என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிறகு எல்லா சபைகளும் இதைப் பார்க்க முடியும்.
எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசுகிறான்
22 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, நீ நியாயம் தீர்ப்பாயா? கொலைக்காரர்களின் நகரத்தை (எருசலேம்) நியாயம்தீர்ப்பாயா? நீ அவளிடம் அவள் செய்த அருவருப்புகளை எல்லாம் சொல்வாயா? 3 நீ கூறவேண்டும், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இந்நகரம் கொலைக்காரர்களால் நிறைந்திருக்கிறது. எனவே அவளது தண்டனைக் காலம் வந்திருக்கிறது. அவள் தனக்குள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தாள். அவை அவளை தீட்டுப்படுத்தின.
4 “‘எருசலேம் ஜனங்களே, நீங்கள் பல ஜனங்களைக் கொன்றீர்கள், நீங்கள் அசுத்த விக்கிரகங்களைச் செய்தீர்கள். நீங்கள் குற்றவாளிகள், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. உங்கள் முடிவு வந்திருக்கிறது. மற்ற நாடுகள் உங்களைக் கேலிசெய்கின்றன. அந்நாடுகள் உங்களைப் பார்த்துச் சிரிக்கின்றன. 5 தொலைவிலும் அருகிலும் உள்ள ஜனங்கள் உங்களைக் கேலிசெய்கின்றனர். நீங்கள் உங்கள் பெயர்களை அழித்தீர்கள். நீங்கள் உரத்த சிரிப்பைக் கேட்க முடியும்.
6 “‘பாருங்கள்! எருசலேமில் எல்லா ஆள்வோர்களும் தம்மைப் பலப்படுத்தினர். எனவே, அவர்கள் மற்ற ஜனங்களைக் கொல்லமுடியும். 7 எருசலேமில் உள்ள ஜனங்கள் தம் பெற்றோரை மதிப்பதில்லை. அந்நகரத்தில் அவர்கள் அயல் நாட்டினரைத் துன்புறுத்தினார்கள். அந்த இடத்தில் அவர்கள் அநாதைகளையும் விதவைகளையும் ஏமாற்றினார்கள். 8 நீங்கள் என் பரிசுத்தமான பொருட்களை வெறுக்கிறீர்கள். எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை நீங்கள் முக்கியமற்றவையாகக் கருதினீர்கள். 9 எருசலேமில் உள்ள ஜனங்கள் மற்ற ஜனங்களைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள். அவர்கள் அப்பாவி ஜனங்களைக் கொல்வதற்காக இவ்வாறு செய்கின்றனர். ஜனங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள மலைகளுக்குப் போகிறார்கள். பிறகு அவர்களின் ஐக்கிய உணவை உண்ண எருசலேமிற்கு வருகிறார்கள்.
“‘எருசலேமில், ஜனங்கள் பல பாலின உறவு பாவங்களைச் செய்கின்றனர். 10 எருசலேமில் ஜனங்கள் தம் தந்தையின் மனைவியோடு பாலின உறவு கொள்கின்றனர். எருசலேமில் ஆண்கள் பெண்களின் மாதவிலக்கு நாட்களிலும் பலவந்தமாக பாலின உறவுகொள்கின்றனர். 11 ஒருவன் அருவருக்கத்தக்க இப்பாவத்தை தன் அயலானின் மனைவியோடேயே செய்கிறான். இன்னொருவன் தன் சொந்த மருமகளிடமே பாலின உறவுகொண்டு அவளைத் தீட்டுப்படுத்துகிறான். இன்னொருவன் தன் தந்தைக்குப் பிறந்த குமாரத்தியை தன் சொந்த சகோதரியைக் கற்பழிக்கிறான். 12 எருசலேமில், நீங்கள் ஜனங்களைக் கொல்வதற்குப் பணம் பெறுகிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்து அவற்றுக்கு வட்டி வசூலிக்கிறீர்கள். நீங்கள் சிறிது பணம் பெறுவதற்காக உங்கள் நண்பர்களை ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் என்னை மறந்திருக்கிறீர்கள்.’ எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.”
13 தேவன் சொன்னார்: “‘இப்போது பார்! நான் எனது கையை நீட்டி உன்னைத் தடுக்கிறேன். நீ ஜனங்களை ஏமாற்றியதற்கும் கொன்றதற்கும் நான் உன்னைத் தண்டிப்பேன். 14 பிறகு தைரியமாக இருப்பாயா? நான் உன்னைத் தண்டிக்க வரும் காலத்தில் நீ பலமுடையவனாக இருப்பாயா? இல்லை! நானே கர்த்தர், நான் பேசியிருக்கிறேன்! நான் சொன்னவற்றைச் செய்வேன். 15 நான் உங்களைப் பலநாடுகளில் சிதறடிப்பேன். நீங்கள் பலநாடுகளுக்குப் போகும்படி நான் உங்களைப் பலவந்தப்படுத்துவேன். இந்நகரிலுள்ள தீட்டானவைகளை நான் முழுவதுமாக அழிப்பேன். 16 ஆனால் எருசலேமே, நீ தீட்டாவாய். இவை எல்லாம் நிகழ்வதை மற்ற நாடுகள் எல்லாம் பார்க்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”
இஸ்ரவேல் பயனற்ற பொருள் போலாகிறது
17 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பித்தளை, தகரம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை வெள்ளியோடு ஒப்பிடும்போது அவை பயன் குறைந்தவை. வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பிலே போடுவார்கள். வெள்ளி உருகிய பின் அதிலுள்ள அசுத்தத்தை வேலைக்காரர்கள் நீக்குவார்கள். இஸ்ரவேல் நாடு அந்த உதவாத மீதியான அழுக்கைப் போலாயிற்று. 19 எனவே எனது ஆண்டவரும் கர்த்தருமானவர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் எல்லோரும் பயனற்றவர்களாவீர்கள். நான் உங்களை எருசலேமிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். 20 வேலைக்காரர்கள் வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் போன்றவற்றை நெருப்பிலே போடுவார்கள். அது வெப்பம் அடைய காற்றை ஊதுவார்கள். பிறகு அந்த உலோகங்கள் உருக ஆரம்பிக்கும். அதுபோலவே, நான் உங்களை என் நெருப்பில்போட்டு உருகவைப்பேன். அந்நெருப்புதான் என் கோபம். 21 நான் உன்னை அந்நெருப்பில் போடுவேன். என் கோபத்தீயில் காற்று ஊதுவேன். நீ உருகத் தொடங்குவாய். 22 வெள்ளி நெருப்பில் உருகும். வேலைக்காரர்கள் வெள்ளியை மட்டும் தனியே ஊற்றி அதனைக் காப்பாற்றுவார்கள். அது போலவே நகரில் நீ உருகுவாய். பிறகு நானே கர்த்தர் என்பதை அறிவாய். அதோடு என் கோபத்தை உனக்கு எதிராக ஊற்றியதையும் நீ அறிவாய்.’”
எசேக்கியேல் எருசலேமிற்கு எதிராகப் பேசியது
23 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 24 “மனுபுத்திரனே, இஸ்ரவேலிடம் பேசு. அவள் பரிசுத்தமாக இல்லை என்பதைக் கூறு. அந்நாட்டின் மீது நான் கோபமாக இருக்கிறேன். எனவே அந்நாடு அதன் மழையைப் பெறவில்லை. 25 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் பாவத் திட்டங்களை இடுகிறார்கள். அவர்கள் சிங்கத்தைப் போன்றவர்கள். அது தான் பிடித்த விலங்கைத் தின்னத் தொடங்கும்போது கெர்ச்சிக்கும். அத்தீர்க்கதரிசிகள் பலரது வாழ்வை அழித்திருக்கின்றனர். அவர்கள் பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்திருக்கின்றனர். எருசலேமில் பல பெண்கள் விதவையாவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றனர்.
26 “ஆசாரியர்கள் உண்மையில் எனது போதனைகளை சிதைத்துவிட்டனர். எனது பரிசுத்தமானவற்றை அவர்கள் சரியாக வைத்துக்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் முக்கியமானதாகக் காண்பிப்பதில்லை. பரிசுத்தமானவற்றை பரிசுத்தமற்றவைபோன்று நடத்துகிறார்கள். அவர்கள் சுத்தமானவற்றைச் சுத்தமற்றவற்றைப்போல் நடத்துகிறார்கள். அவர்கள் ஜனங்களுக்கு இதைப்பற்றி கற்றுத் தரவில்லை. எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களுக்கு மதிப்பு மறுக்கிறார்கள். அவர்கள் என்னை முக்கியமற்றவராக நடத்தினார்கள்.
27 “எருசலேமில் தலைவர்கள் எல்லாம் தான் பிடித்த இரையைத் தின்கிற ஓநாய்களைப் போன்றவர்கள். அத்தலைவர்கள் செல்வம் பெறுவதற்காக ஜனங்களைப் பிடித்துக் கொல்கின்றனர்.
28 “தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரிப்பதில்லை. அவர்கள் உண்மையை மூடினார்கள். அவர்கள் சுவர் கட்டத்தெரியாத வேலைக்காரர்களைப் போன்றவர்கள். அவர்கள் துவாரங்களில் சாந்தை மட்டும் பூசுகிறவர்கள். அவர்கள் பொய்களை மட்டும் பேசுகிறார்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்துகொள்ள மந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்’ என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்களை மட்டும் சொல்கிறார்கள். கர்த்தர் அவர்களோடு பேசவில்லை!
29 “பொது ஜனங்கள் ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றுகிறார்கள்: ஒருவரை ஒருவர் திருடுகின்றனர். அவர்கள் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் பிச்சைக்காரர்களையும் தங்கள் உபயோகத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் அந்நிய நாட்டவரை ஏமாற்றுகின்றனர், அவர்களுக்கு எதிராக எந்த நியாயமும் இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கின்றனர்!
30 “நான் ஜனங்களிடம் அவர்களது வாழ்க்கையை மாற்றும்படியும் நாட்டைக் காப்பாற்றும்படியும் கேட்டேன். நான் ஜனங்களிடம் சுவரை இணைக்கும்படி கேட்டேன். அவர்கள் திறப்புகளில் நின்று பகைவருடன் சண்டையிட்டு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை! 31 எனவே, நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களை முழுமையாக அழிப்பேன். அவர்கள் செய்திருக்கிற தீயவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன். இதெல்லாம் அவர்களுடைய தவறு!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
“லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்.
69 தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என் வாய்வரை வெள்ளம் நிரம்பியுள்ளது.
2 நான் நிற்பதற்கு இடமில்லை.
சேற்றுக்குள் அமிழ்ந்துகொண்டிருக்கிறேன்.
ஆழமான தண்ணீரினுள் இருக்கிறேன்.
அலைகள் என்னைச் சுற்றிலும் மோதிக்கொண்டிருக்கின்றன.
நான் அமிழும் நிலையில் உள்ளேன்.
3 உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.
என் தொண்டை புண்ணாகிவிட்டது.
நான் காத்திருக்கிறேன், என் கண்கள் நோகும்வரை
உமது உதவிக்காக நோக்கியிருக்கிறேன்.
4 என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள்.
எக்காரணமுமின்றி அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என்னை அழிப்பதற்கு அவர்கள் மிகவும் முயன்றார்கள்.
என் பகைவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைப் பேசுகிறார்கள்.
நான் திருடியதாக அவர்கள் பொய்களைக் கூறினார்கள்.
நான் திருடாத பொருள்களுக்கு அபராதம் செலுத்தும்படி அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள்.
5 தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர்.
நான் உம்மிடமிருந்து எனது பாவங்களை மறைக்க முடியாது.
6 என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும்.
இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தொழுதுகொள்வோர் என்னால் அவமானப்படாதபடிச் செய்யும்.
7 என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது.
உமக்காக இவ்வெட்கத்தை நான் சுமக்கிறேன்.
8 என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள்.
என் தாயின் பிள்ளைகள் என்னை ஒரு அயல் நாட்டவனைப்போல நடத்துகிறார்கள்.
9 உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன.
உம்மைக் கேலி செய்யும் ஜனங்களின் அவதூறுகளை நான் ஏற்கிறேன்.
10 நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன்.
அவர்கள் என்னைக் கேலி செய்தார்கள்.
11 துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன்.
ஜனங்கள் என்னைக் குறித்து வேடிக்கை பேசுகிறார்கள்.
12 பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.
குடிக்காரர்கள் என்னைப்பற்றிப் பாடல்களைப் பாடுகிறார்கள்.
13 ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.
நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன்.
நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
14 என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.
நான் சேற்றில் அமிழ்ந்து போகாதபடி செய்யும்.
என்னைப் பகைக்கும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஆழமான தண்ணீரிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
15 அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.
ஆழத்தின் குழி என்னை விழுங்காதபடிச் செய்யும்.
கல்லறை என் மீது தன் வாயை அடைத்துக்கொள்ளாதபடிச் செய்யும்.
16 கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.
உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!
17 உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும்.
நான் தொல்லையில் சிக்கியிருக்கிறேன்!
விரைந்து எனக்கு உதவும்.
18 வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்.
என் பகைவரிடமிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
19 நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர்.
என் பகைவர்கள் என்னை அவமானப்படுத்தியதை நீர் அறிகிறீர்.
அவர்கள் எனக்கு அக்காரியங்களைச் செய்ததை நீர் கண்டீர்.
20 வெட்கம் என்னை நசுக்கிற்று!
வெட்கத்தால் நான் இறக்கும் நிலைக்கு ஆளானேன்.
எனக்காகப் பரிதபிப்பவர்களுக்காகக் காத்திருந்தேன்.
ஆனால் ஒருவரையும் நான் பார்க்க முடியவில்லை.
எனக்கு ஆறுதல் கூறுவோருக்காக நான் காத்திருந்தேன்.
ஆனால் ஒருவரும் வரவில்லை.
21 அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள்.
அவர்கள் எனக்குத் திராட்சை ரசத்தையல்ல, காடியைக் கொடுத்தார்கள்.
22 அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன.
ஐக்கிய பந்திக்கான உணவு வகைகள் நிரம்பியிருந்தன.
அந்த உணவுகளே அவர்களை அழிக்குமென நம்புகிறேன்.
23 அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன்.
24 உமது கோபத்தை அவர்கள் உணரட்டும்.
25 அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும்.
யாரும் அங்கு வாழவிடாதேயும்.
26 அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள்.
அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும்.
27 அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை அவர்களுக்குக் காட்டாதேயும்.
28 ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும்.
நல்லோரின் பெயர்களோடு அவர்கள் பெயர்களை அப்புத்தகத்தில் எழுதாதேயும்.
29 நான் கவலையும் புண்பட்டவனுமானேன்.
தேவனே, என்னைத் தூக்கிவிடும், என்னைக் காப்பாற்றும்.
30 நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன்.
நான் அவரை நன்றி நிறைந்த பாடல்களால் துதிப்பேன்.
31 இது தேவனை சந்தோஷப்படுத்தும்!
ஒரு காளையைக் கொன்று, அதனை முழுமையாகப் பலி செலுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது.
32 ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள்.
நீங்கள் இக்காரியங்களை அறிந்துக்கொண்டு மகிழ்வீர்கள்.
33 கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார்.
சிறைப்பட்ட ஜனங்களையும் கர்த்தர் விரும்புகிறார்.
34 பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக்கட்டும்.
கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.
35 கர்த்தர் சீயோனை மீட்பார்.
கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார்.
நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
36 அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள்.
அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.
2008 by World Bible Translation Center