M’Cheyne Bible Reading Plan
தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான்
11 வசந்த காலத்தில் ராஜாக்கள் போர் புரியப்போகும்போது தாவீது யோவாபையும் அதிகாரிகளையும் அனைத்து இஸ்ரவேலரையும் அம்மோனியரை அழிப்பதற்காக அனுப்பினான். யோவாபின் சேனை பகைவர்களின் தலைநகராகிய ரப்பாவைத் தாக்கிற்று.
ஆனால் தாவீது எருசலேமில் தங்கி விட்டான். 2 சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். 3 உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் குமாரத்தியாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.
4 தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். 5 ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.
தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது
6 தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான்.
எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். 7 உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். 8 பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான்.
ராஜாவின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். ராஜாவும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். 9 ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே ராஜாவின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். 10 காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர்.
தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.
11 உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான்.
12 தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான்.
உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். 13 அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக ராஜாவின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.
தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான்
14 மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். 15 கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.
16 யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். 17 ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.
18 யுத்தத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்து யோவாப் ஒரு குறிப்பு எழுதி தாவீதுக்கு அனுப்பினான். 19 போரில் நடந்தவற்றை தாவீது ராஜாவுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான். 20 “ராஜா கோபமடையக்கூடும், ‘யோவாபின் படை போரிடுவதற்கு நகரை மிகவும் நெருங்கியதேன்?’ என்று ராஜா கேட்கக் கூடும். அம்புகளை எய்யக்கூடிய ஆட்கள் நகர மதில்களில் அமர்ந்திருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். 21 எருப்சேத்தின் குமாரனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே, ‘ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது ராஜா இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும்: ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்’” என்றான்.
22 செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான். 23 அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம். 24 அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.
25 தாவீது அத்தூதுவனிடம், “யோவாபுக்கு இச்செய்தியைத் தெரிவி: ‘இதைக் குறித்து மிகவும் கலங்காதே, ஒரு வாள் ஒருவனை மட்டுமல்ல, அடுத்தவனையும் கொல்லக் கூடும். ரப்பாவின் மீது தாக்குதலைப் பலப்படுத்து. நீ வெற்றி பெறுவாய்’ இந்த வார்த்தைகளால் யோவாபுக்கு உற்சாகமூட்டு” என்று சொல்லியனுப்பினான்.
தாவீது பத்சேபாளை மணந்துகொள்கிறான்
26 தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள், 27 அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.
ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்
4 தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். 2 ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. 3 நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். 4 இந்த உலகத்தை ஆள்பவனாகிய[a] சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். 5 நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
7 இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். 8 எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. 9 நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10 எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11 நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12 ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.
13 “நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்”(A) என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம். 15 இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும்.
விசுவாசத்தால் வாழ்தல்
16 அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17 தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18 ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.
18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “ஜனங்களாகிய நீங்கள் இப்பழமொழியை மீண்டும், மீண்டும் சொல்கிறீர்கள்:
“‘ஏன்? நீங்கள் பெற்றோர்கள் புளித்த திராட்சை தின்றார்கள்.
ஆனால் குழந்தைகள் புளிப்புச் சுவையைப் பெறுகிறார்கள்’” என்று சொல்லுகிறீர்கள்.
3 ஆனால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “எனது உயிரைக்கொண்டு நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களிக்கிறேன். இப்பழமொழி இனிமேல் உண்மையாக இருக்காது. 4 நான் ஒவ்வொரு மனிதனையும் அவ்வாறே நடத்துகிறேன். அவன் பெற்றவனா, பிள்ளையா என்பதைப்பற்றி கவலையில்லை. பாவம் செய்கிற ஒருவன் அதற்கேற்றபடி மரிப்பான்!
5 “ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் நன்றாக வாழ்வான்! அந்நல்லவன் ஜனங்களிடம் நியாயமாக இருக்கிறான். 6 அந்நல்லவன் மலைகளுக்குச் சென்று பொய்த் தெய்வங்களுக்கு உணவு காணிக்கை தரவில்லை. இஸ்ரவேலில் உள்ள அசுத்த பொய்த் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யவில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரப் பாவத்தைச் செய்யவில்லை. அவன் தனது மனைவியுடன் அவளது விலக்குக் காலத்தில் பாலின உறவுவைத்துக் கொள்ளவில்லை. 7 அந்நல்லவன் பிறரை தன் நன்மைக்காகப் பயன்படுத்தவில்லை. எவராவது அவனிடமிருந்து பணம் கடன் வாங்கினால் திருப்பித் தரும்போது அடமானத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறான். அந்நல்லவன் பசித்தவர்களுக்கு உணவைத் தருகிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். 8 ஒருவன் அந்நல்லவனிடம் கடன் வாங்க விரும்பினால் அவன் கடன் கொடுப்பான். அவன் அந்தக் கடனுக்காக வட்டி பெறவில்லை. அவன் வஞ்சகமாக நடந்துகொள்ளவில்லை. அவன் எல்லோரிடமும் நேர்மையாக நடந்து கொள்கிறான். ஜனங்கள் அவனை நம்பலாம். 9 அவன் எனது சட்டங்களுக்கு அடிபணிகிறான், அவன் எனது முடிவுகளைப்பற்றி எண்ணுகிறான், நியாயமாக இருக்கக் கற்றிருக்கிறான். அவன் நல்லவன், அதனால் வாழ்வான்.
10 “ஆனால் அந்நல்லவனுக்கு ஒரு குமாரன் பிறந்து அவன் தன் தந்தையைப்போல் இந்நற்காரியங்களில் எதையும் செய்யாதவனாக இருக்கலாம். அந்த குமாரன் பொருட்களைத் திருடலாம், பிறரைக் கொலை செய்யலாம். 11 அந்த குமாரன் இத்தீமைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவன் மலைகளுக்குப் போய் பொய்த் தெய்வங்களுக்கு உணவுக் காணிக்கை தரலாம். அப்பாவியாகிய குமாரன் அயலான் மனைவியோடு கள்ள உறவு வைத்திருக்கலாம். 12 அவன் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் தவறாக நடத்தலாம். அவன் ஜனங்களை ஏமாற்றி பயன்பெறலாம். ஒருவன் தனது கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அவன் அடமானத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம். அந்தப் பாவி குமாரன் அந்த ஆபாசமான விக்கிரங்களுக்கு பிரார்த்தனை செய்து வேறு பயங்கரமான செயல்களைச் செய்யலாம். 13 ஒருவனுக்கு இப்பாவி மகனிடம் இருந்து பணம் கடன் வாங்கும் தேவை ஏற்படலாம். அம்மகன் அவனுக்குக் கடன் கொடுக்கலாம். ஆனால் அவன் அக்கடனுக்கு வட்டி கொடுக்கும்படி வற்புறுத்துவான். எனவே அப்பாவி குமாரன் வாழமாட்டான். அவன் எல்லா அருவருப்பான செயல்களையும் செய்தான். அதனால் மரணம் அடைவான். அவனது மரணத்திற்கு அவனே பொறுப்பாவான்.
14 “இப்பொழுது, இப்பாவி குமாரனுக்கு ஒரு குமாரன் பிறந்திருக்கலாம். ஆனால் இந்த குமாரன் தன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் பார்த்து அவன் தந்தையைப்போன்று வாழ மறுக்கலாம். அந்த நல்ல குமாரன் ஜனங்களை நியாயமாக நடத்தலாம். 15 அந்நல்ல குமாரன் மலைகளுக்குப் போய் தனது உணவைப் பொய்த் தெய்வங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில்லை. இஸ்ரவேலில் அசுத்தத் தெய்வங்களிடம் அவன் விண்ணப்பம் செய்வதில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரம் செய்வதில்லை. 16 அந்நல்ல குமாரன் ஜனங்களை ஒடுக்குவதில்லை. ஒருவன் இவனிடம் வந்து கடன் கேட்டால் இவன் அடமானத்தைப் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கிறான். அவன் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அடமானத்தை இவன் திருப்பிக் கொடுக்கிறான். இந்நல்ல குமாரன் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். 17 இவன் ஏழைகளுக்கு உதவுகிறான். ஒருவன் இவனிடம் பணம் கடன் கேட்க விரும்பினால் கடன் கொடுக்கிறான். இவன் அக்கடனுக்கு வட்டி வசூலிக்கவில்லை. இந்நல்ல குமாரன் எனது நியாயங்களுக்கு அடிபணிந்து எனது நியாயங்களைப் பின்பற்றுகிறான். இந்நல்ல குமாரன் தந்தையின் பாவங்களுக்காக மரணமடையமாட்டான். இந்நல்ல குமாரன் வாழ்வான். 18 இத்தந்தை ஜனங்களுக்குக் கொடுமை செய்து அவர்களின் பொருட்களைத் திருடியிருக்கலாம். அவன் தனது ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இத்தந்தை தனது சொந்தப் பாவங்களுக்காக மரிப்பான். ஆனால் அம்மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான்.
19 “நீ, ‘அந்த குமாரன் தந்தையின் பாவங்களுக்காக ஏன் தண்டிக்கப்படவில்லை?’ என்று கேட்கலாம், குமாரன் நல்லவனாக இருந்து நன்மையைச் செய்தான் என்பதுதான் காரணம்! அவன் வெகு கவனமாக எனது நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தான்! எனவே அவன் வாழ்வான். 20 பாவங்கள் செய்கிற ஒருவனே மரணத்திற்கு ஆளாவான். ஒரு குமாரன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு தந்தை தன் மகனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு நல்லவனின் நன்மை அவனை மட்டுமே சேரும். ஒரு கெட்டவனின் பாவங்கள் அவனை மட்டுமே சேரும்.
21 “இப்பொழுது, தீயவன் தனது வாழ்க்கை முறையை மாற்றினால் பிறகு அவன் மரிக்கமாட்டான் வாழ்வான். அவன் தான் செய்த பாவங்களை நிறுத்திவிடலாம் அவன் எனது சட்டங்களுக்கு கவனமாகக் கீழ்ப்படியலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 22 தேவன் அவன் செய்த தீயவைகளை நினைக்கமாட்டார். தேவன் அவனது நன்மைகளை மட்டுமே நினைப்பார்! எனவே அம்மனிதன் வாழ்வான்!”
23 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் தீயவர்கள் மரிப்பதை விரும்பவில்லை. நான் அவர்கள் தம் வாழ்வை மாற்றுவதை விரும்புகிறேன். எனவே, அவர்கள் வாழமுடியும்!
24 “இப்பொழுது, ஒரு நல்ல மனிதன் தனது நற்செயல்களை நிறுத்தலாம். அவன் தன் வாழ்வை மாற்றி முன்பு தீயவர்கள் என்னென்ன பாவங்களைச் செய்தார்களோ அவற்றைச் செய்யத் தொடங்கலாம். (அத்தீயவன் மாறினான் எனவே அவன் வாழமுடியும்). எனவே, அந்நல்ல மனிதன் மாறிப் தீயவனானால் பிறகு தேவன் அவன் செய்த நன்மைகளைப்பற்றி நினைக்கமாட்டார். அவன் அவருக்கு எதிராக மாறி பாவம் செய்யத் தொடங்கிவிட்டான் என்பதையே நினைப்பார். எனவே அம்மனிதன் தனது பாவங்களுக்காக மரிப்பான்.”
25 தேவன் சொன்னார்: “நீங்கள், ‘எனது தேவனாகிய ஆண்டவர் நியாயமானவராக இல்லை!’ என்று சொல்லலாம். ஆனால், கவனியுங்கள், இஸ்ரவேல் குடும்பத்தாரே, நியாயமற்றவர்கள் நீங்கள்தான்! 26 ஒரு நல்ல மனிதன் மாறிப் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் தனது பாவங்களுக்காக மரிப்பான். 27 ஒரு தீயமனிதன் மாறி நன்மை செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தனது வாழ்வைக் காப்பாற்றுவான். அவன் வாழ்வான்! 28 அந்த மனிதன், எவ்வளவு தீயவனாக இருந்தான், அவன், தான் எவ்வளவு மோசமானவன் என்று உணர்ந்து என்னிடம் திரும்பிவரத் தீர்மானித்தான். அவன் கடந்த காலத்தில் செய்த பாவத்தை நிறுத்தினான். எனவே அவன் வாழ்வான், மரிக்கமாட்டான்!”
29 இஸ்ரவேல் ஜனங்கள் சொன்னார்கள்: “அது செம்மையில்லை! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்கக்கூடாது!”
தேவன் சொன்னார்: “நான் நியாயமாகவே இருக்கிறேன். நீங்களே நியாயமற்றவர்கள்! 30 ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்தவற்றுக்காகவே நியாயம் தீர்க்கிறேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “எனவே என்னிடம் திரும்பி வாருங்கள்! அந்த அருவருப்பான பொருட்கள் (விக்கிரகங்கள்) உங்களைப் பாவம் செய்யத் தூண்ட அனுமதிக்காதீர்கள்! 31 எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வரவழைத்துக்கொள்கிறீர்கள்? 32 நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து திரும்பிவந்து வாழ்ந்திருங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
62 என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது.
என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
2 எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள்.
ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
3 எத்தனை காலம் என்னைத் தாக்குவீர்.
நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
4 மேன்மையான என் நிலையை எண்ணி
அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
5 தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது.
தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
6 தேவனே என் அரண்.
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
7 என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது.
அவர் எனக்குப் பலமான அரண்.
தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
8 ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்!
தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்!
தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
9 மனிதர்கள் உண்மையாகவே உதவ முடியாது.
உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது.
தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல்
ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
10 கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள்.
திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள்.
நீங்கள் செல்வந்தரானால்
அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
11 நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார்.
வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
12 என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது.
ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல்.
63 தேவனே, நீரே என் தேவன்.
நீர் எனக்கு மிகவும் தேவையானவர்.
நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று
என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.
2 உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன்.
நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.
3 ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது.
என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன்.
5 சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன்.
மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.
6 என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்.
7 நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்!
நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
8 என் ஆத்துமா உம்மைப் பற்றிக்கொள்கிறது.
நீர் என் கைகளைப் பிடித்துக்கொள்கிறீர்.
9 சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.
10 அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள்.
அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
11 ஆனால் ராஜாவோ அவரது தேவனோடு மகிழ்ச்சியாயிருப்பார்.
அவருக்குக் கீழ்ப்படிவதாக உறுதி தந்த ஜனங்கள் தேவனைத் துதிப்பார்கள்.
ஏனெனில் அவர் எல்லாப் பொய்யர்களையும் தோற்கடித்தார்.
2008 by World Bible Translation Center