M’Cheyne Bible Reading Plan
பெத்தேலில் யாக்கோபு
35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார்.
2 எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். 3 நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான்.
4 எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான்.
5 யாக்கோபும் அவனது மகன்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபோது, அப்பகுதியில் உள்ள ஜனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய் அவர்களைக் கொலைசெய்ய விரும்பினார்கள். ஆனால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயம் அவர்களுக்கு ஏற்பட்டபடியால் அவர்கள் யாக்கோபைப் பின்தொடரவில்லை. 6 எனவே, யாக்கோபும் அவனைச் சேர்ந்தவர்களும் கானானிலுள்ள லூசை அடைந்தனர். லூஸ் இப்போது பெத்தேல் என்று அழைக்கப்பட்டது. 7 யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு “ஏல் பெத்தேல்” என்று பெயரிட்டான். காரணம் அவன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது தேவன் அந்த இடத்தில் தான் அவனுக்கு முதலில் காட்சியளித்தார்.
8 தெபோராள் எனும் ரெபெக்காளின் தாதி அங்கு மரித்துபோனாள். பெத்தேலில் கர்வாலி மரத்தின் அடியில் அவளை அடக்கம் செய்தனர். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத் என்று பெயர் வைத்தனர்.
யாக்கோபின் புதிய பெயர்
9 பதான் அராமிலிருந்து யாக்கோபு திரும்பி வந்தபோது தேவன் மீண்டும் அவனுக்குக் காட்சியளித்தார், தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார். 10 தேவன், யாக்கோபிடம், “உன் பெயர் யாக்கோபு, உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்படாது. உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும்” என்று கூறி அவனுக்கு “இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
11 தேவன் அவனிடம், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். உனக்கு இந்த ஆசீர்வாதத்தைத் தருவேன். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். வேறு ஜாதிகளின் கூட்டமும், அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். 12 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்றார். 13 பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார். 14-15 யாக்கோபு தேவன் தன்னோடு பேசின அந்த இடத்தில் ஒரு ஞாபகக் கல் நிறுத்தி அதில் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் ஊற்றினான். இது ஒரு சிறப்பான இடம். ஏனென்றால் அதுதான் தேவன் அவனிடம் பேசிய இடம். எனவே யாக்கோபு அதற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான்.
ராகேல் மரணமடைதல்
16 யாக்கோபும் அவனது கூட்டமும் பெத்தேலை விட்டுப் புறப்பட்டது. எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. அப்போது ராகேல் பிள்ளை பெற்றாள். 17 ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, “பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்” என்றாள்.
18 ஆனால் அவள் ஆண் குழந்தை பெறும்போதே மரித்துபோனாள். மரிக்கும் முன்னால் தன் மகனுக்குப் பெனோனி என்று பெயர் சூட்டினாள். ஆனால் யாக்கோபு அவனைப் பென்யமீன் என்று அழைத்தான்.
19 ராகேல் எப்பிராத்தாவுக்குப் போகும் சாலை ஓரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாள். (எப்பிராத்தா என்பது பெத்லேகம் ஆகும்) 20 யாக்கோபு அதில் ஒரு சிறப்பான கல்தூணை நட்டு ராகேலின் கல்லறையைப் பெருமைப்படுத்தினான். இன்றும் அக்கல் (தூண்) உள்ளது. 21 இஸ்ரவேல் (யாக்கோபு) தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதேர் கோபுரத்திற்குத் தென் பகுதியில் கூடாரமிட்டான்.
22 இஸ்ரவேல் அங்கு கொஞ்சக்காலமே தங்கினான். அப்போது ரூபன், தன் தந்தையின் வேலைக்காரியான பில்காளோடு பாலின உறவு கொண்டதை அறிந்து இஸ்ரவேல் கடுங்கோபம் கொண்டான்.
இஸ்ரவேலின் குடும்பம்
யாக்கோபிற்கு (இஸ்ரவேலுக்கு) 12 மகன்கள் இருந்தார்கள்.
23 ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர் யாக்கோபுக்கும் லேயாளுக்கும் முதலில் பிறந்தவர்கள்.
24 யோசேப்பும் பென்யமீனும் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள்.
25 தாண், நப்தலி ஆகிய இருவரும் யாக்கோபுக்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள்.
26 காத், ஆசேர் இருவரும் யாக்கோபுக்கும் சில்பாளுக்கும் பிறந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் பதான் அராமில் யாக்கோபிற்குப் (இஸ்ரவேலுக்கு) பிறந்தவர்கள்.
27 யாக்கோபு தனது தந்தை ஈசாக்கு இருந்த கீரியாத் அர்பாவிலிருந்த மம்ரேக்கு சென்றான். அங்கேதான் ஆபிரகாமும் வாழ்ந்தான். 28 ஈசாக்கு 180 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 பிறகு ஈசாக்கு பலவீனமாகி மரித்துப் போனான். அவன் நீண்ட முழுமையான வாழ்க்கை வாழ்ந்தான். ஏசாவும் யாக்கோபும் ஆபிரகாமை அடக்கம் செய்த இடத்திலேயே ஈசாக்கையும் அடக்கம் செய்தனர்.
ஏசாவின் குடும்பம்
36 இது ஏசாவின் குடும்ப வரலாறு. 2 ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் மகளான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான். 3 இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். 4 ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற மகன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற மகன் பிறந்தான். 5 அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோரா என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர்.
6-8 யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)
9 ஏசா ஏதோம் ஜனங்களுக்குத் தந்தையானான். சேயீர் எனும் மலைப் பகுதியில் வாழ்ந்த ஏசா குடும்பத்தினரின் பெயர்கள் பின்வருமாறு:
10 ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்த மகன் எலிப்பாஸ். ஏசாவுக்கும் பஸ்மாத்துக்கும் பிறந்த மகன் ரெகுவேல்.
11 எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து மகன்கள்.
12 எலிப்பாசுக்கு திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற மகன் பிறந்தான்.
13 ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு மகன்கள்.
இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள்.
14 ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் மகள் ஆனாகினின் மகளான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் மகன்களைப் பெற்றாள்.
15 ஏசாவின் மகன்களில் கீழ்க்கண்ட கோத்திரங்கள் தோன்றினர்.
ஏசாவின் மூத்த மகன் எலீப்பாஸ். எலீப்பாசிலிருந்து தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், 16 கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள்.
இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள்.
17 ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள்.
இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள்.
18 ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள்.
19 இவர்கள் எல்லோரும் ஏசாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
20 அந்த நாட்டில் ஏசாவுக்கு முன் வாழ்ந்த சேயீருக்கு
லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 21 திஷோன், ஏதசேர், திஷான் என்னும் மகன்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் மகன்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
22 லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் மகன்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
23 சோபாலினுக்கு அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் எனும் மகன்கள் இருந்தனர்.
24 சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் மகன்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான்.
25 ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
26 திஷோனுக்கு எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் எனும் மகன்கள் இருந்தனர்.
27 ஏத்சேனுக்கு பில்கான், சகவான், அக்கான் என்னும் மகன்கள் இருந்தனர்.
28 திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் மகன்கள் இருந்தனர்.
29 ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 30 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள்.
31 அப்பொழுது ஏதோமிலே இராஜாக்கள் இருந்தார்கள். இஸ்ரவேலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏதோமில் பல மன்னர்கள் இருந்தனர்.
32 பேயோர் எனும் அரசனின் மகனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான்.
33 பேலா மரித்ததும் யோபாப் அரசன் ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் மகன்.
34 யோபாப் மரித்ததும் ஊசாம் அரசாண்டான். இவன் தேமானிய நாட்டினன்.
35 ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் மகன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன்.
36 ஆதாத் மரித்தபின் சம்லா அரசாண்டான். இவன் மஸ்ரேக்கா ஊரைச் சார்ந்தவன்.
37 சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன்.
38 சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய மகன்.
39 பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் மகள்.
40-43 ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான்.
ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
தன் சொந்த ஊரில் இயேசு(A)
6 அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். 2 ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? 3 இவர் ஒரு தச்சன் மட்டும்தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர்.
4 இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார். 5 இயேசு அந்த ஊரில் அதிக அளவில் அற்புதங்களைச் செய்ய இயலவில்லை. அவர் நோயுற்ற சிலரின் மேல் தன் கையை வைத்து குணமாக்கும் சில செயல்களை மட்டுமே செய்தார். 6 அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார்.
சீஷர்கள் அனுப்பப்படுதல்(B)
7 அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். 8 அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம். 9 செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள். 10 நீங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த ஊரை விட்டு நீங்கும்வரை அங்கேயே தங்கி இருங்கள். 11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது உங்கள் உபதேசங்களைக் கேட்க மறுத்தாலோ அந்த ஊரைவிட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் அங்கேயே உதறிவிட்டுச் செல்லுங்கள். அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.
12 சீஷர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் பல இடங்களுக்கும் சென்றனர். அவர்கள் மக்களிடம் உபதேசம் செய்தனர். தங்கள் மனதையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுமாறு போதித்தனர். 13 அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து விரட்டினர். அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு ஒலிவ எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர்.
ஏரோதுவின் தவறான கணிப்பு(C)
14 இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர்.
15 இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர்.
16 இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
17 ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். 18 ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். 19 எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை 20 யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது.
21 பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். 22 ஏரோதியாளின் மகள் அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர்.
ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். 23 “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.
24 அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள்.
25 உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள்.
26 ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. 27 உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். 28 பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29 அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.
5,000 த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு(D)
30 இயேசுவால் உபதேசம் செய்ய அனுப்பப்பட்ட அவரது சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடித் தாம் அனைவரும் செய்தவற்றையும் கற்பித்தவற்றையும் அவரிடம் சொன்னார்கள். 31 இயேசுவும், அவரது சீஷர்களும் மக்கள் நெருக்கடி மிக்க இடத்தில் இருந்தனர். அம்மக்கள் அளவில் மிக அதிகமாக இருந்தனர். இயேசுவுக்கும், அவரது சீஷர்களுக்கும் உணவு உட்கொள்ளக்கூட நேரம் இல்லாமல் இருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் “என்னோடு வாருங்கள். நாம் அமைதியான தனி இடத்துக்குப் போவோம். அங்கு நாம் ஓய்வு எடுக்கலாம்” என்றார்.
32 எனவே, இயேசுவும் அவரது சீஷர்களும் தனியாகச் சென்றனர். மக்களே இல்லாத இடத்துக்கு அவர்கள் படகில் சென்றனர். 33 ஆனால் அவர்கள் செல்வதை நிறைய மக்கள் கண்டனர். அந்த மக்களுக்கு அவர் இயேசு என்று தெரிந்தது. எனவே இயேசு செல்லுகிற இடத்துக்கு எல்லா நகர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் அங்கே ஓடினர். இயேசு போய்ச் சேர்வதற்கு முன்னரே அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர். 34 இயேசு அங்கே போய்ச் சேர்ந்ததும் தனக்காக ஏராளமான மக்கள் காத்திருப்பதை அறிந்தார். அவர் அவர்களுக்காக மனம் உருகினார். ஏனென்றால், அவர்கள் மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போன்று கவனிக்க ஆளில்லாமல் இருந்தனர். எனவே அவர்களுக்கு இயேசு நிறைய உபதேசம் செய்தார்.
35 அன்று அதிக நேரமாயிற்று. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். அவர்கள், “இங்கு எந்த மக்களும் வாழவில்லை, மற்றும் வெகு நேரமாகிவிட்டது. 36 எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர்.
37 ஆனால் இயேசுவோ, “அவர்களுக்கு உண்ண நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்றார்.
சீஷர்களோ இயேசுவிடம், “இவர்கள் அனைவரும் உண்ணுகிற அளவுக்கு நம்மால் அப்பத்தை வாங்கத் தேவையான பணத்துக்கு நாம் அனைவரும் ஒரு மாதக் காலத்துக்கு உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்றனர்.
38 இயேசு, தன் சீஷர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்” என்றார்.
சீஷர்கள் தங்களிடம் உள்ள அப்பங்களை எண்ணிப் பார்த்துவிட்டு இயேசுவிடம் வந்து, “நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன”, என்றார்கள்.
39 பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். 40 ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர்.
41 இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார்.
42 எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். 43 மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். 44 ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.
இயேசு கடலின் மேல் நடத்தல்(E)
45 பிறகு இயேசு சீஷர்களிடம் படகில் ஏறுமாறு சொன்னார். கடலின் அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்குப் போகும்படிக் கூறினார். தான் பிறகு வருவதாக இயேசு கூறியனுப்பினார். இயேசு அங்கே இருந்து அந்த மக்களைத் தம் வீடுகளுக்குச் செல்லுமாறு சொன்னார். 46 அந்த மக்களை இயேசு வழியனுப்பிய பின்பு பிரார்த்தனை செய்வதற்காக மலைக்குச் சென்றார்.
47 அன்று இரவு, அந்தப் படகு கடலின் நடுவிலேயே இருந்தது. இயேசுவோ தனியே கரையிலேயே இருந்தார். 48 கடலில் வெகு தூ ரம் படகு போய்விட்டதைக் கவனித்தார். அவரது சீஷர்கள் மிகவும் கஷ்டப்பட்டு துடுப்பு போடுவதையும் அறிந்தார். காற்றானது அவர்களுக்கு எதிராக அடித்துக் கொண்டிருந்தது. அதிகாலையில், மூன்று மணிக்கும் ஆறு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் தண்ணீரின் மேல் நடந்து நெருங்கினார். அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். 49 இயேசுவின் சீஷர்கள் அவர் தண்ணீரின் மேல் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் அவரை ஒரு ஆவி என்று நினைத்தனர். அவர்கள் அச்சத்தோடு கூச்சலிட்டனர். 50 எல்லாரும் இயேசுவைப் பார்த்து பயந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், “கவலைப்படாதீர்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று தேற்றினார். 51 பிறகு அவர் சீஷர்கள் இருந்த படகினுள் ஏறிக்கொண்டார். காற்று அமைதியாயிற்று சீஷர்கள் பெரிதும் பிரமித்தார்கள். 52 அவர்கள் இயேசு ஐந்து அப்பங்களில் இருந்து மிகுதியான அப்பங்களை உருவாக்கியதைப் பார்த்தார்கள். ஆனால் அதனுடைய பொருளை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதை அறிந்துகொள்ளும் சக்தியும் அவர்களுக்கு இல்லை.
அநேக நோயாளிகளை இயேசு குணமாக்குதல்(F)
53 இயேசுவின் சீஷர்கள் அக்கடலைக் கடந்தனர். அவர்கள் கெனெசரேத்தின் கரைக்கு வந்தனர். அங்கே படகைக் கட்டி வைத்தனர். 54 அவர்கள் படகை விட்டு இறங்கியபோது மக்கள் இயேசுவைப் பார்த்தனர். அவர் யாரென்று அவர்கள் அறிந்துகொண்டனர். 55 அம்மக்கள் ஓடிப்போய் அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை அறிவித்தார்கள். இயேசு போகிற எல்லா இடங்களிலும் மக்கள் நோயாளிகளைப் படுக்கையோடு எடுத்து வந்தனர். 56 அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் நகரங்களுக்கும் பண்ணைகளுக்கும் இயேசு சென்றார். இயேசு எங்கே சென்றாலும் அங்குள்ள மக்கள் நோயாளிகளை அவரிடம் எடுத்து வந்தனர். அவர்கள் இயேசுவிடம் அவரது ஆடை நுனியையாவது தொடுவதற்கு அனுமதி கேட்டனர். அவரைத் தொட்டவர்கள் எல்லோரும் குணமடைந்தனர்.
சாத்தான் யோபுவுக்கு மீண்டும் தொல்லைத் தருகிறான்
2 மற்றொருநாள், தேவதூதர்கள் கர்த்தரை சந்திக்க வந்தார்கள். சாத்தானும் கர்த்தரை சந்திப்பதற்காக வந்தான்.
2 கர்த்தர் சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். சாத்தான் கர்த்தருக்கு, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்துக்கொண்டிருந்தேன்” என்று பதில் கூறினான்.
3 அப்போது கர்த்தர் சாத்தானை நோக்கி, “என் தாசனாகிய யோபுவைக் கண்டாயா? பூமியில் அவனைப் போன்றோர் எவருமில்லை. அவன் உண்மையுள்ளவனுமாயிருக்கிறான். அவன் தேவனுக்கு பயந்து தீயவற்றைவிட்டு விலகுகிறான். எக்காரணமுமின்றி அவனுக்குள்ளவை அனைத்தையும் அழிக்கும்படி நீ கேட்டும் கூட, அவன் இன்னும் உண்மையுள்ளவனாக இருக்கிறான்” என்றார்.
4 சாத்தான், “தோலுக்குத் தோல்! [a] என்று பதில் சொன்னான். ஒருவன் தன் உயிரை காப்பதற்காக தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பான். 5 அவனது உடம்பைத் துன்புறுத்தும்படி நீர் உமது கையை நீட்டு வீரானால், அப்போது உமது முகத்திற்கு நேராக அவன் உம்மை சபிப்பான்!” என்றான்.
6 அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, “அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை” என்றார்.
7 பின்பு சாத்தான் கர்த்தரிடமிருந்து சென்று, யோபுவுக்கு வேதனைமிக்க புண்களைக் கொடுத்தான். அவனது பாதங்களின் அடிப்பகுதியிலிருந்து தலையின் உச்சிவரைக்கும் வேதனை தரும் அப்புண்கள் யோபுவின் உடலெங்கும் காணப்பட்டன. 8 எனவே யோபு குப்பைக் குவியலின் அருகே உட்கார்ந்தான். அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்.
9 யோபுவின் மனைவி அவனை நோக்கி, “நீ இன்னும் தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? நீர் தேவனை சபித்தவண்ணம் மரித்துவிடு?” என்று கேட்டாள்.
10 பிறகு யோபு தனது மனைவியிடம், “நீ மூடத்தனமானவளைப் போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது, நாம் அவற்றை ஏற்கிறோம். எனவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் தந்தான். எல்லாத் தொல்லைகளின்போதும் யோபு பாவம் செய்யவில்லை. அவன் தேவனுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.
யோபுவின் மூன்று நண்பர்கள் அவனைக் காண வருகிறார்கள்
11 தேமானிலிருந்து எலிப்பாசும், சூகியிலிருந்து பில்தாதும், நாகமாவிலிருந்து சோப்பாரும் யோபுவின் மூன்று நண்பர்கள். யோபுவுக்கு நேரிட்ட எல்லா தீய காரியங்களைபற்றி கேள்விப்பட்டார்கள். அம்மூவரும் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஓரிடத்தில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் போய், தங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் முடிவெடுத்தார்கள் (தீர்மானித்தார்கள்).
12 ஆனால் அம்மூவரும் யோபுவைத் தூரத்தில் கண்டபோது, (அவன் யோபுவா என ஐயுற்றார்கள்) யோபு மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டதால், அவன் யோபு என நம்புவது சிரமமாக இருந்தது! அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள், துகளைக் காற்றிலும் தலையிலும் வீசியெறிந்து, தங்கள் துக்கத்தையும் மனக்கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
13 பின்பு அந்த மூன்று நண்பர்களும் யோபுவோடு தரையில் ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அமர்ந்திருந்தார்கள். யோபு மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்ததால், ஒருவரும் யோபுவோடு எதையும் பேசவில்லை.
பாவத்தினால் மரணம்; கிறிஸ்துவினால் வாழ்வு
6 எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும் மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா? 2 முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்? 3 நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒரு பாகமாகிவிட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம். 4 ஆகையால் நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
5 கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம். 6 நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம். 7 எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான்.
8 நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும். 9 கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது! 10 அவர் பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். இப்போது அவருக்கு தேவனோடு புதிய வாழ்க்கை உள்ளது. 11 அவ்வாறே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12 ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. 13 நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.
நீதிக்கு அடிமைகள்
15 அதனால் இப்போது என்ன செய்யலாம்? நாம் சட்டவிதிக்குக் கீழ்ப்படாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா? 16 கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள். 17 கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். 18 நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள். 19 இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
20 முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 21 நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது. 22 ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும். 23 பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.
2008 by World Bible Translation Center