Historical
11 ரெகொபெயாம் எருசலேம் வந்தபோது 1,80,000 சிறந்த வீரர்களை அணி திரட்டினான். இவ்வீரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய கோத்திரங்களிடமிருந்து அணி திரட்டினான். இஸ்ரவேலர்களுக்கு எதிராகச் சண்டையிடவே அவர்களை அணி திரட்டினான். இதன் மூலம் அவர்களை தன் ஆட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பினான். 2 ஆனால் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி செமாயாவிற்கு வந்தது. அவன் தேவனுடைய மனிதன். கர்த்தர் அவனிடம், 3 “யூதாவின் ராஜாவாகிய சாலொமோனின் குமாரன் ரெகொபெயாமிடமும், இஸ்ரவேலிலும், யூதாவிலும், பென்யமீனிலும் உள்ள ஜனங்களிடமும் கூறு என்று 4 கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்.’” எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை.
ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான்
5 ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான். 6 அவன் பெத்லேகம், ஏத்தாம், தெக்கோவா, 7 பெத்சூர், சோகோ, அதுல்லாம், 8 காத்து, மரேஷா, சீப்பு 9 அதோராயீம், லாகீசு, அசேக்கா, 10 சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன. 11 ரெகொபெயாம் இவற்றைப் பலப்படுத்திய பிறகு அவற்றில் தலைவர்களை நியமித்தான். அவர்களுக்கு உணவு, எண்ணெய், திராட்சைரசம் போன்றவற்றை விநியோகித்தான். 12 இவன் ஈட்டிகளையும், கேடயங்களையும் வைத்து அந்நகரங்களைப் பலப்படுத்தினான். யூதா, பென்யமீன் ஆகிய நாடுகளின் நகரங்களையும் ஜனங்களையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தான்.
13 இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஆசாரியர்களும் லேவியர்களும் ரெகொபெயாமோடு சேர்ந்து கொண்டு அவனுக்கேற்றவர்கள் ஆனார்கள். 14 லேவியர்கள் தம் புல்வெளிகளையும் வயல்களையும் விட்டுவிட்டு யூதாவுக்கும் எருசலேமிற்கும் வந்தனர். காரணம், யெரொபெயாமும் அவனது குமாரர்களும், லேவியர்கள் கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதை மறுத்தனர்.
15 யெரொபெயாம் தன் சொந்த ஆசாரியர்களையே மேடைகளில் பலிசெலுத்த தேர்ந்தெடுத்தான். அவன் செய்த ஆடு மற்றும் கன்றுக் குட்டியின் விக்கிரகங்களை அந்த மேடைகளில் அமைத்தான். 16 லேவியர்கள் இஸ்ரவேலை விட்டு விலகியதும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மீது நம்பிக்கைகொண்ட இஸ்ரவேலின் அனைத்துக் கோத்திரங்களிலுமிருந்த ஜனங்களும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களின் தேவனாகிய கர்த்தருக்கு காணிக்கை செலுத்த எருசலேமுக்கு வந்தார்கள். 17 அவர்கள் யூத அரசைப் பலமுள்ளதாக்கினார்கள். அவர்கள் மூன்று ஆண்டு காலத்திற்குச் சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமிற்கு உதவினார்கள். அவர்கள் இக்காலக்கட்டத்தில் தாவீதைப்போலவும் சாலொமோனைப் போலவும் வாழ்ந்ததால் இவ்வாறு செய்தனர்.
ரெகொபெயாமின் குடும்பம்
18 ரெகொபெயாம் மகலாத் என்னும் பெண்ணை மணந்தான். அவளது தந்தை எரிமோத். அவளது தாய் அபியாயேல், எரிமோத் தாவீதின் குமாரன். அபியாயேல் எலியாப்பின் குமாரத்தி. எலியாப் ஈசாயின் குமாரன். 19 மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் குமாரர்களைப் பெற்றாள். 20 பிறகு ரெகொபெயாம் மாக்கா என்னும் பெண்ணையும் மணந்தான். அவள் அப்சலோமின் பேத்தி. இவள் இவனுக்கு அபியா, அத்தாயி, சீசா, செலேமித் ஆகியோரைப் பெற்றாள். 21 ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வேலைக்காரிகளையும் விட மாக்காவைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கு 18 மனைவியரும், 60 வேலைக்காரிகளும் இருந்தனர். இவனுக்கு 28 குமாரர்களும், 60 குமாரத்திகளும் இருந்தனர்.
22 ரெகொபெயாம் அபியாவைத் தனது சகோதரர்களுக்கும் மேலான தலைவனாகத் தேர்ந்தெடுத்தான். அவன் இவனை ராஜாவாக்க விரும்பியதால் இவ்வாறு செய்தான். 23 ரெகொபெயாம் புத்திசாலித்தனமாகத் தன் குமாரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய நாடுகளில் பரவலாக ஒவ்வொரு பலமான நகரத்திலும் இருக்கும்படி செய்தான். அவர்களுக்கு வேண்டியவற்றை விநியோகம் செய்தான். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான்
12 ரெகொபெயாம் ஒரு பலமிக்க ராஜா ஆனான். அவன் தனது ஆட்சியையும் பலமுள்ளதாக்கினான். பின்னர் அவனும், அவனது யூதா கோத்திரத்தினரும் கர்த்தருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். 2 சீஷாக் எருசலேம் நகரத்தை ரெகொபெயாமின் ஐந்தாவது ஆட்சியாண்டில் தாக்கினான். இவன் எகிப்தின் ராஜா. ரெகொபெயாமும், அவனுடன் ஆட்சி செய்தவர்களும் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால் இவ்வாறு நடந்தது. 3 சீஷாக்கிடம் 12,000 இரதங்களும், 60,000 குதிரை வீரர்களும், எவராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுடைய படைவீரர்களும் இருந்தனர். இவனது பெரியப் படையில் லிபியன் வீரர்களும், சூக்கிய வீரர்களும், எத்தோப்பிய வீரர்களும் இருந்தனர். 4 சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான்.
5 பிறகு செமாயா எனும் தீர்க்கதரிசி ரெகொபெயாமிடமும் யூதத் தலைவர்களிடமும் வந்தான். அந்த யூதத் தலைவர்கள் எருசலேமில் கூடியிருந்தனர். ஏனென்றால் அவர்கள் சீஷாக்குக்குப் பயந்தனர். செமாயா அவர்களிடம், “கர்த்தரால் சொல்லப்பட்டது இதுதான்: ‘ரெகொபெயாம்! நீயும், உனது ஜனங்களும் என்னைவிட்டு விலகி எனது சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டீர்கள். எனவே இப்போது உன்னைவிட்டு நான் விலகி நான் உங்களைச் சீஷாக்கின் கையில் அகப்படச் செய்வேன்’” என்றான்.
6 பிறகு யூதத் தவைர்களும், ரெகொபெயாம் ராஜாவும் வருத்தத்துடனும், பணிவுடனும் இருந்தனர். “கர்த்தர் சொல்வது சரிதான்” என்றனர்.
7 யூதத் தலைவர்களும், ராஜாவும் அடங்கிப் போனதைக் கர்த்தர் கவனித்தார். பிறகு கர்த்தரிடமிருந்து செமாயாவுக்குச் செய்தி வந்தது. கர்த்தர் செமாயாவிடம், “யூதத் தலைவர்களும், ராஜாவும் அடக்கமாயினர். எனவே நான் அவர்களை அழிக்கமாட்டேன். நான் விரைவில் அவர்களைக் காப்பேன். எனது கோபத்தை தீர்க்க சீஷாக்கை எருசலேமின் மீது அனுப்பமாட்டேன். 8 ஆனால் எருசலேம் ஜனங்கள் சீஷாக்கின் வேலைக்காரர்கள் ஆவார்கள். இதனால் அவர்களுக்கு எனக்கு சேவைச் செய்வதற்கும் மற்ற தேசத்து ராஜாக்களுக்கு சேவைச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும்” என்றார்.
9 சீஷாக் எருசலேமைத் தாக்கினான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த கருவூலத்தைக் கைப்பற்றிக்கொண்டான். அரண்மனையில் இருந்த கருவூலத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான். சாலொமோன் செய்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக் கொண்டான். 10 அவற்றுக்குப் பதிலாக ரெகொபெயாம் ராஜா வெண்கல கேடயங்களைச் செய்தான். அக்கேடயங்களை ரெகொபெயாம் அரண்மனை வாசல் காவல்காரர்களின் தலைவர்கள் கையில் கொடுத்தான். 11 ராஜா கர்த்தருடைய ஆலய வாசலுக்குள் நுழையும்போது காவலர்கள் வந்து கேடயங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். பிறகு அவர்கள் அக்கேடயங்களைத் தம் அறையிலே வைத்து பூட்டிவிடுவார்கள்.
12 ரெகொபெயாம் தனக்குள்ளே அடக்கமாகத் தாழ்வாக இருந்தபோது கர்த்தர் அவன் மீதுள்ள கோபத்தை விலக்கிக்கொண்டார். எனவே, கர்த்தர் ரெகொபெயாமை முழுவதுமாக அழிக்கவில்லை. ஏனென்றால் யூதாவில் சிலவற்றை நன்மையானதாகக் கண்டார்.
13 ரெகொபெயாம் தன்னை எருசலேமில் பலமுள்ள ராஜாவாக ஆக்கிக்கொண்டான். இவன் ராஜாவாகும்போது 41 வயது. இவன் எருசலேமில் 17 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். இந்நகரம் கர்த்தரால் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கர்த்தர் தனது பெயரை எருசலேமில் விளங்கும்படி செய்தார். ரெகொபெயாமின் தாய் நாமாள். நாமாள் அம்மோன் நாட்டிலிருந்து வந்தவள். 14 ரெகொபெயாம் தீயச் செயல்களைச் செய்தான். ஏனென்றால் அவனது மனதில் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
15 ரெகொபெயாம் தொடக்கக் காலமுதல், ஆட்சியின் இறுதிவரை செய்தச் செயல்களெல்லாம் தீர்க்கதரிசியான செமாயா மற்றும் ஞானதிருஷ்டிக்காரனான இத்தோ ஆகியோரின் எழுத்துக்களில் உள்ளன. இவர்கள் குடும்ப வரலாறுகளை எழுதினார்கள். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருவரும் ஆட்சிபுரிந்தக் காலம் முழுவதும் போர் நடந்தது. 16 ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் குமாரன் அபியா புதிய ராஜாவானான்.
யூதாவின் ராஜாவாகிய அபியா
13 இஸ்ரவேலில் யெரொபெயாமின் 18வது ஆட்சியாண்டில், அபியா யூதாவின் புதிய ராஜாவானான். 2 அபியா எருசலேமில் 3 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். அபியாவின் தாய் மாக்கா ஆவாள். மாக்கா ஊரியேலின் குமாரத்தி. ஊரியேல் கிபியா என்னும் ஊரைச் சேர்ந்தவன். அபியாவிற்கும் யெரொபெயாமிற்கும் சண்டை ஏற்பட்டது. 3 அபியாவின் படையில் 4,00,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர். அவர்களை அபியா போரில் ஈடுபடுத்தினான். யெரொபெயாமின் படையில் 8,00,000 வீரர்கள் இருந்தனர். யெரொபெயாம் அபியாவோடு போரிடத் தயாரானான்.
4 பிறகு அபியா மலைநாடான எப்பிராயீமில் செமராயீம் என்னும் மலைமீது ஏறி நின்றான். அபியா,
“யெரொபெயாமே! இஸ்ரவேல் ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். 5 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதிற்கும், அவரது பிள்ளைகளுக்கும் இஸ்ரவேல் ராஜாவாக என்றென்றைக்கும் இருக்கும்படியான உரிமையைக் கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தேவன் இந்த உரிமையை தாவீதிற்கு மாறாத உடன்படிக்கையாகக் கொடுத்திருக்கிறார். 6 ஆனால் யெரொபெயாம் தன் எஜமானுக்கு எதிராகிவிட்டான். நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் சாலொமோனின் வேலைக்காரர்களில் ஒருவன். சாலொமோன் தாவீதின் குமாரன். 7 பயனற்ற மோசமான நண்பர்களோடு சேர்ந்து யெரோபெயாம் சாலொமோனின் குமாரனான ரெகொபெயாமுக்கு எதிரானான். அவன் இளைஞனாகவும், அனுபவம் இல்லாதவனாகவும் இருந்தான். அதனால் அவனால் யெரொபெயாமையும், அவனது தீய நண்பர்களையும் தடுக்க முடியவில்லை.
8 “இப்போது யெரொபெயாமாகிய நீயும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருடைய அரசாட்சிக்கு எதிராக திட்டமிடுகிறீர்கள். கர்த்தருடைய அரசாங்கம் தாவீதின் சந்ததியாருக்கு உரியது. உங்களில் அநேகம் பேர் யெரொபெயாமால் செய்யப்பட்ட பொன் கன்றுக்குட்டிகளை தெய்வங்களாக வழிபடுகின்றீர்கள். 9 நீங்கள் கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் விரட்டிவிட்டீர்கள். ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததியினர். நீங்கள் உங்கள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். இதைத்தான் மற்ற நாட்டினரும் செய்கின்றனர். ஒரு காளைக் கன்றுக்குட்டியுடன் அல்லது ஏழு செம்மறியாட்டுக் கடாக்களுடன் தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வருகிற எவனும் ‘தெய்வங்கள் இல்லாத உருவச்சிலைகளுக்கு’ ஆசாரியனாகலாம்.
10 “ஆனால் எங்களுக்கோ கர்த்தரே தேவன். யூத ஜனங்களாகிய நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கவில்லை. நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தருக்கு சேவை செய்கிற ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததிகளே. மேலும் கர்த்தருக்கு சேவைசெய்ய ஆசாரியர்களுக்கு லேவியர்கள் உதவுகிறார்கள். 11 அவர்கள் தகனபலி செலுத்துவார்கள். ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். ஆலயத்தில் பரிசுத்தமான மேஜையின் மேல் சமூகத்தப்பங்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையில் விளக்கை அதற்குரிய தங்கத் தண்டின் மேல் ஏற்றி வைக்கிறார்கள். எனவே அது ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. எங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். ஆனால் யெரொபெயாமாகிய நீயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். 12 தேவன் தாமே எங்களோடு இருக்கிறார். அவரே எங்களை ஆள்பவர். அவரது ஆசாரியர்களே எங்களோடு இருக்கின்றனர். தேவனுடைய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி உங்களுக்கு எதிராகப் போரிட அழைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களால் வெற்றிபெற இயலாது” என்றான்.
13 ஆனால் யெரொபெயாம் ஒரு படைக் குழுவை அபியாவின் படைக்குப் பின்புறமாக அனுப்பினான். யெரொபெயாமின் படையோ அபியாவிற்கு முன்னால் இருந்தது. மறைவாகச் சென்ற படைக்குழுவோ அபியாவின் படைக்குப் பின்னால் இருந்தது. 14 அபியாவின் படைவீரர்கள் தம்மைச் சுற்றிப் பார்த்தபோது யெரொபெயாமின் படை வீரர்கள் சுற்றி நின்று முன்னும் பின்னும் தாக்குவதைக் கண்டனர். உடனே யூத ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள். 15 பின்னர் அபியாவின் படையிலுள்ள ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். யூத ஜனங்கள் ஆர்ப்பரித்தபோது தேவன் யெரொபெயாமைத் தோற்கடித்தார். யெரொபெயாமின் இஸ்ரவேல் படைவீரர்களை, அபியாவின் யூதப்படை தோற்கடித்தது. 16 இஸ்ரவேல் ஆண்கள், யூதாவின் ஆண்களைவிட்டு ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படைகளைத் தோற்கடிக்க தேவன் யூதப்படைகளை அனுமதித்தார். 17 அபியாவும் அவனுடைய படைவீரர்களும் இஸ்ரவேல் படை வீரர்களைத் தோற்கடித்து 5,00,000 வீரர்களைக் கொன்றுவிட்டனர். 18 இவ்வகையில் இஸ்ரவேல் ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டனர். யூத ஜனங்கள் வென்றனர். யூதப்படை வென்றதற்கான காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருந்ததுதான்.
19 அபியாவின் படை யெரொபெயாமின் படையைத் துரத்திச் சென்றது. அபியாவின் படை பெத்தேல், எஷானா, எப்பெரோன் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினார்கள்.
20 அபியா உயிரோடு இருந்தவரை யெரொபெயாம் பலமுள்ளவனாக ஆக முடியவில்லை. கர்த்தர் தாமே யெரொபெயாமைக் கொன்றார். 21 ஆனால் அபியா பலமுள்ளவன் ஆனான். அவன் 14 பெண்களை மணந்துக்கொண்டான். 22 குமாரர்களுக்கும், 16 குமாரத்திகளுக்கும் தந்தையானான். 22 அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
14 அபியா தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். ஜனங்கள் அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு அபியாவின் குமாரனான ஆசா புதிய ராஜாவானான். ஆசாவின் காலத்தில் நாட்டில் பத்தாண்டு காலம் சமாதானம் இருந்தது.
யூத ராஜாவாகிய ஆசா
2 ஆசா தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்லனவற்றையும், சரியானவற்றையும் செய்தான். 3 ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றினான். சிலைகளை உடைத்தான். விக்கிரகத் தோப்புகளை அழித்தான். 4 யூத ஜனங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றும்படி கட்டளையிட்டான். அவரே நம் முற்பிதாக்களால் ஆராதிக்கப்பட்ட தேவன். அவரது கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்றான். 5 ஆசா யூதா நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட்ட மேடைகளையும், நறுமணப் பொருட்கள் எரிக்கப்படும் பலிபீடங்களையும் அகற்றினான். எனவே ஆசா ராஜாவாக இருந்த காலத்தில் அவனது அரசு சமாதானமாக இருந்தது. 6 இந்த சமாதானமான காலத்தில் ஆசா யூதா நாட்டில் பலமிக்க நகரங்களை உருவாக்கினான். இக்கால கட்டத்தில் ஆசா எந்தவிதமான போரிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் கர்த்தர் அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.
7 ஆசா யூத ஜனங்களிடம், “இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.
8 ஆசாவின் படையில் 3,00,000 பேர் கொண்ட படை யூதா கோத்திரத்திலிருந்தும், 2,80,000 பேர் கொண்ட படைக்குழு பென்யமீனின் கோத்திரத்திலிருந்தும் சேர்ந்திருந்தனர். யூத வீரர்கள் பெரிய கேடயங்களையும் ஈட்டிகளையும் சுமந்துவந்தனர். பென்யமீன் வீரர்கள் சிறிய கேடயங்களையும் வில்லம்புகளையும் தாங்கினார்கள். இவர்கள் அனைவரும் தைரியமும் பலமும் மிக்க வீரர்கள்.
9 அப்போது ஆசாவின் படைகளுக்கு எதிராகச் சேரா என்பவன் கிளம்பினான். சேரா எத்தியோப்பியன். அவனிடம் 10,00,000 வீரர்களும் 300 இரதங்களும் இருந்தன. அவனது படை மரேசாவரை வந்தது. 10 ஆசா சேராவுக்கு எதிராகப் போரிடவந்தான். மரேசாவில் உள்ள செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கிலே ஆசாவின் படை வீரர்கள் போரிடத் தயாராக இருந்தனர்.
11 ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.
12 பிறகு கர்த்தர் எத்தியோப்பியா படையை வெல்ல ஆசாவின் படையைப் பயன்படுத்தினார். எத்தியோப்பியா படையினர் ஓடிப்போயினர். 13 ஆசாவின் படையினர் எத்தியோப்பியா படையினரைக் கேரார் வரை விரட்டிக்கொண்டு சென்றனர். எத்தியோப்பியா வீரர்கள் மீண்டும் கூடிப் போரிட முடியாதபடி கொல்லப்பட்டனர். கர்த்தராலும் அவரது படையினராலும் நசுக்கப்பட்டனர். பகைவரிடமிருந்து ஆசாவும், அவனது படையினரும் விலையுயர்ந்த பொருட்களைக் கைப்பற்றிக்கொண்டனர். 14 ஆசாவும், அவனது படையினரும் கேரார் அருகிலுள்ள அனைத்து நகரங்களையும் தோற்கடித்தனர். அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் கர்த்தருக்கு பயந்தார்கள். அந்நகரங்களில் ஏராளமாக விலையுயர்ந்தப் பொருட்கள் இருந்தன. அவற்றிலிருந்து ஆசாவின் படையினர் அந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள். 15 ஆசாவின் படை மேய்ப்பர்களின் கூடாரங்களையும் தாக்கியது. அவர்கள் அங்கிருந்த நிறைய வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கவர்ந்தனர். பிறகு ஆசாவின் படையினர் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றனர்.
2008 by World Bible Translation Center