Historical
சாலொமோன் கட்டிய நகரங்கள்
8 சாலொமோன் கர்த்தருக்கான ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடிக்க 20 ஆண்டு காலமாயிற்று. 2 ஈராம் தனக்குக் கொடுத்த நகரங்களைப் பிறகு சாலொமோன் கட்டத்தொடங்கினான். அந்நகரங்களில் சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை வாழ அனுமதித்தான். 3 இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான். 4 சாலொமோன் வனாந்தரத்திலே தத்மோர் என்ற நகரத்தையும் கட்டினான். சாலொமோன் ஆமாத் நாட்டிலே பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான நகரங்களைக் கட்டினான். 5 சாலொமோன் மீண்டும் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டினான். அந்த ஊர்களைப் பலமான கோட்டைகளாக்கினான். இந்நகரங்களுக்கு பலமான கதவுகளையும் வாசல்களையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். 6 சாலொமோன் மீண்டும் பாலாத்தையும் தனது பொருட்களைச் சேமித்துவைத்த வேறு சில ஊர்களையும் மீண்டும் கட்டினான். இரதங்களை நிறுத்திவைப்பதற்கான எல்லா நகரங்களையும், குதிரையோட்டிகள் வாழ்வதற்கான எல்லா நகரங்களையும் நிர்மாணித்தான். எருசலேம், லீபனோன் மற்றும் தான் ராஜாவாயிருந்த நாடு முழுவதும் தான் விரும்பியவற்றை எல்லாம் கட்டிமுடித்தான்.
7-8 இஸ்ரவேலர் அல்லாத வேறு இனத்தினரும் அங்கு வாழ்ந்தனர். ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என அவர்கள் பலவகையினர். சாலொமோன் இவர்களை அடிமை வேலைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினான். இவர்கள் இஸ்ரவேல் அல்லாதவர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களால் அழிக்கப்படாத இந்நிலப்பகுதியை விட்டுப் போனவர்களின் சந்ததியினர். இது இன்றைக்கும் அங்கே தொடர்ந்திருக்கிறது. 9 சாலொமோன் இஸ்ரவேலர் எவரையும் அடிமை வேலைச்செய்யுமாறு பலவந்தப்படுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் சாலொமோனின் போர் வீரர்களாக பணியாற்றினார்கள். இவர்கள் சாலொமோனின் படையில் தளபதிகளாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்கள் சாலொமோனின் தேர்ப்படை அதிகாரிகளாகவும், குதிரை வீரர்களின் அதிகாரிகளாகவும் இருந்தனர். 10 இஸ்ரவேலரில் சிலர் சாலொமோனின் முக்கியமான அதிகாரிகளுக்கான தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு 250 பேர் ஜனங்களை மேற்பார்வை செய்யும் தலைவர்களாக இருந்தார்கள்.
11 சாலொமோன் பார்வோனின் குமாரத்தியை தாவீதின் நகரத்திலிருந்து அழைத்துவந்து, அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகையில் குடிவைத்தான். சாலொமோன், “என் மனைவி தாவீதின் வீட்டிலே இருக்கக் கூடாது. ஏனென்றால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்ததால் அவ்விடங்கள் பரிசுத்தமானவை” என்றான்.
12 பிறகு சாலொமோன் கர்த்தருக்காக தகன பலிகளை கர்த்தருடைய பலிபீடத்தில் அளித்தான். இந்தப் பலிபீடத்தை சாலொமோன் ஆலய மண்டபத்திற்கு முன்பு அமைத்திருந்தான். 13 மோசே கட்டளையிட்டபடி ஒவ்வொரு நாளும் சாலொமோன் பலிகளைச் செலுத்தி வந்தான். ஓய்வுநாட்களிலும், மாதப் பிறப்பு நாட்களின் கொண்டாட்டங்களிலும், ஆண்டின் மூன்று விடுமுறை நாட்களிலும் பலிகள் செலுத்தப்பட வேண்டியிருந்தன. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை மற்றும் அடைக்கலக் கூடாரப் பண்டிகை ஆகியவை ஆண்டின் மூன்று விடுமுறை நாட்கள். 14 சாலொமோன் தனது தந்தை தாவீதின் அறிவுரைகளைப் பின்பற்றினான். மேலும் சாலொமோன் ஆசாரியர்கள் குழுவினரை அவர்களது சேவைகளுக்காகத் தேர்ந்தெடுத்தான். தம் பணிகளைச் செய்யுமாறு லேவியர்களையும் நியமித்தான். ஆலயப் பணிகளில் ஒவ்வொரு நாளும் லேவியர்கள் துதிப்பாடல் இசைப்பதில் முதன்மையாக இருந்தும் ஆசாரியர்ளுக்கு உதவியும் வந்தார்கள். அவன் வாசல் காவல் குழுவில் இருந்து பலரை வாயிலைக் காப்பதற்காகத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறுதான் தேவமனிதனான தாவீது அறிவுறுத்தியிருந்தான். 15 ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் சாலொமோன் இட்ட கட்டளைகளில் எதனையும் இஸ்ரவேல் ஜனங்கள் மாற்றவோ மீறவோ இல்லை. மதிப்பு வாய்ந்த பொருட்களைக் காக்கும் வழிமுறையிலும் அவர்கள் சாலொமோனின் கட்டளைகளை மீறவில்லை. கருவூலங்ளையும் இவ்வாறே காத்துவந்தனர்.
16 சாலொமோனின் அனைத்து வேலைகளும் முடிந்தன. கர்த்தருடைய ஆலயப்பணி தொடங்கிய நாள் முதல் முடியும்வரை திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்தன. எனவே காத்தருடைய ஆலய வேலையும் முடிந்தது.
17 பிறகு சாலொமோன் எசியோன் கேபர், ஏலோத் ஊர்களுக்குச் சென்றான். இவ்வூர்கள் ஏதோம் நாட்டில் செங்கடல் ஓரத்தில் உள்ளன. 18 ஈராம் என்பவன் தனது கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். ஈராமின் ஆட்களே கப்பலை ஓட்டினார்கள். அவர்கள் கடலில் கப்பல் ஓட்டுவதில் வல்லவர்கள். இவர்களோடு சாலொமோனின் வேலையாட்களும் சேர்ந்து ஓபிர் என்னும் நகருக்குச் சென்றனர். அங்கிருந்து சாலொமோன் ராஜாவுக்கு 450 தாலந்து பொன்னைக் கொண்டு வந்தனர்.
சீபா நாட்டு இராணி சாலொமோனைப் பார்க்க வருகிறாள்
9 சீபா நாட்டு இராணி சாலொமோனின் மேன்மையை அறிந்தாள். அவள் எருசலேமிற்கு வந்து சாலொமோனைக் கடினமான கேள்விகளால் சோதிக்க விரும்பினாள். அவளோடு ஒரு பெரிய குழுவும் வந்தது. அவள் தனது ஒட்டகங்களில் மணப்பொருட்களையும், பொன்னையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து அவனிடம் பேசினாள். சாலொமோனிடம் கேட்பதற்கு அவளிடம் ஏராளமான கேள்விகள் இருந்தன. 2 சாலொமோன் அவளுடைய கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தான். பதில் சொல்லவோ, விளக்கம் தரவோ சாலொமோனுக்கு எதுவும் கடினமாக இல்லை. 3 சீபா இராணி சாலொமோனின் அறிவு ஞானத்தையும், அவன் கட்டிய அரண்மனையையும் பார்த்தாள். 4 அவள் சாலொமோனின் மேஜையில் இருந்த உணவு வகைகளையும் அவனது முக்கிய அதிகாரிகளையும் பார்த்தாள். சாலொமோனின் வேலைக்காரர்கள் பணிசெய்யும் முறையையும், அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கும் விதத்தையும் கவனித்தாள். அவள் சாலொமோனின் திராட்சைரசம் பரிமாறுபவர்களையும் அவர்களது ஆடைகளையும் கவனித்தாள். கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோன் கொடுத்த தகனபலிகளையும் கண்டாள். அனைத்தையும் அவள் கண்டு வியப்பில் மூழ்கினாள்.
5 பிறகு அவள் சாலொமோன் ராஜாவிடம், “நான் உங்கள் அறிவைப்பற்றியும் அரிய வேலைகளைப்பற்றியும் எனது நாட்டில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். 6 நான் இங்கு வந்து என் கண்ணால் இவற்றைக் காணும்வரை நம்பாமல் இருந்தேன். உங்கள் மகத்தான ஞானத்தில் பாதியளவு கூட எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைவிடவும் நீங்கள் மகத்தானவர்! 7 உங்கள் மனைவிகளும் அதிகாரிகளும் பாக்கியசாலிகள்! அவர்கள் உங்களுக்கு சேவை செய்யும்போது உங்கள் ஞானத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்! 8 உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிப்போம். அவர் உங்களால் மகிழ்கிறார். தமது சிங்காசனத்தில் உங்களை அமரச்செய்திருக்கிறார். உங்கள் தேவன் இஸ்ரவேலின் மீது அன்பு வைத்திருக்கிறார். அவர் என்றென்றும் இஸ்ரவேலுக்கு உதவுகிறார். இதனால்தான், நியாயமானதையும் சரியானதையும் செய்வதற்காக கர்த்தர் உங்களை இஸ்ரவேலின் ராஜாவாக்கியுள்ளார்” என்றாள்.
9 பிறகு சீபா இராணி சாலொமோன் ராஜாவுக்கு 120 தாலந்து பொன்னையும் மிகுதியான உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சீபா இராணி கொடுத்தது போன்று சாலொமோன் ராஜாவுக்கு உணவில் சேர்க்கும் மிக உயர்ந்த நறுமணப் பொருட்களை யாரும் கொடுத்ததில்லை.
10 ஈராமில் வேலைக்காரர்களும் சாலொமோனின் வேலைக்காரர்களும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் இரத்தினக் கற்களையும் கொண்டு வந்தனர். 11 அந்த வாசனை மரங்களால் கர்த்தருடைய ஆலயத்திற்கும் அரண்மனைக்கும் சாலொமோன் படிக்கட்டுகளை அமைத்தான். சாலொமோன் அம்மரத்தால் பாடகர்களுக்காகச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் செய்தான். யூதா நாட்டிலே வாசனை மரங்களால் செய்யப்பட்ட பொருட்கள் இவைபோன்று இதற்கு முன்பு இருந்ததை எவரும் பார்த்ததில்லை.
12 சாலொமோன் ராஜா சீபா இராணிக்கு அவள் விரும்பியதையும் கேட்டவற்றையும் கொடுத்தான். அவள் அவனுக்குக் கொடுத்தவற்றைவிட அதிக அளவில் அவன் அவளுக்கு கொடுத்தான். பிறகு சீபா இராணியும் அவளது வேலைக்காரர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.
சாலொமோனின் பெரும் செல்வம்
13 ஓராண்டு காலத்திற்குள் சாலொமோன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து பொன்னைப் பெற்றான். 14 பயணம் செய்யும் வியாபாரிகளும், வணிகர்களும் மேலும் அதிகமான பொன்னைக் கொண்டு வந்தனர். அரேபியாவின் எல்லா ராஜாக்களும், நிலங்களை ஆள்பவர்களும் சாலொமோனுக்கு பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவந்து கொடுத்தனர்.
15 சாலொமோன் அடித்த பொன் தகட்டால் 200 பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 600 சேக்கல் எடை கொண்டதாக இருந்தது. 16 சாலொமோன் ராஜா அடித்த பொன் தகட்டால் 300 சிறிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயமும் 300 சேக்கல் பொன் எடையுள்ளதாக இருந்தது. சாலொமோன் இவற்றை லீபனோனின் காட்டு அரண்மனையில் வைத்தான்.
17 சாலொமோன் ராஜா தந்தத்தால் ஒரு பெரிய சிங்காசனத்தைச் செய்தான். அவன் அதனை பரிசுத்த தங்கத்தால் மூடினான். 18 அந்த சிங்காசனம் 6 படிக்கட்டுகளைக் கொண்டது. அதற்குத் தங்கத்தாலான பாதப்படியும் இருந்தது. சிங்காசனத்தின் இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கை சாய்மானங்கள் வைக்கப்பட்டன. இந்த இரண்டு சாய்மானங்களுக்கும் கீழே சிங்கத்தின் உருவங்கள் நிறுத்தப்பட்டன. 19 ஆறு படிக்கட்டுகளிலும் 12 சிங்கங்களின் உருவங்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு படிக்கட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சிங்கம் இருந்தது. எந்த அரசாங்கத்திலும் இதுபோன்ற சிங்காசனம் இருந்ததில்லை.
20 சாலொமோன் ராஜாவின் அனைத்து தண்ணீர் கோப்பைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. லீபனோனில் உள்ள வனமாளிகையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தூய பொன்னால் செய்யப்பட்டிருந்தன. சாலொமோனின் காலத்தில் வெள்ளியானது விலைமதிப்புள்ளதாகக் கருதப்படவில்லை.
21 தார்ஷிஸ் என்னும் நகருக்குச் செல்ல சாலொமோனிடம் கப்பல்கள் இருந்தன. சாலொமோனின் கப்பல்களை ஈராமின் ஆட்கள் செலுத்தினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கப்பல்கள் தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றோடு தார்ஷிஸிலிருந்து திரும்பி வந்தன.
22 பூமியில் உள்ள மற்ற ராஜாக்களைவிட செல்வத்திலும் ஞானத்திலும் சாலொமோன் பெரியவனாக இருந்தான். 23 பூமியிலுள்ள அனைத்து ராஜாக்களும் சாலொமோனிடம் வந்து அவனது ஆலோசனைகளைக் கேட்டனர். தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். 24 ஒவ்வொரு ஆண்டும் ராஜாக்கள் சாலொமோனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் வெள்ளியாலானப் பொருட்கள், தங்கத்தாலானப் பொருட்கள், துணிகள், ஆயுதங்கள், மணப்பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
25 சாலொமோனிடம் இரதங்களையும் குதிரைகளையும் நிறுத்திவைக்க 4,000 லாயங்கள் இருந்தன. அவனிடம் 12,000 இரதம் ஓட்டுபவர்கள் இருந்தனர். சாலொமோன் இரதங்களை அவற்றுக்குரிய சிறப்பு நகரங்களிலும் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான். 26 ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தரின் நாடுவரைக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் உள்ள அனைத்து ராஜாக்களையும் சாலொமோன் ஆண்டான். 27 எருசலேமிலே ராஜா சாலொமோனிடம் கற்களைப் போன்று ஏராளமான வெள்ளி இருந்தது. பள்ளத்தாக்குகளிலே உள்ள காட்டத்தி மரங்களைப்போன்று சாலொமோனிடம் கேதுருமரங்கள் இருந்தன. 28 எகிப்திலிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் ஜனங்கள் சாலொமோனுக்குக் குதிரைகளை கொண்டு வந்தனர்.
சாலொமோனின் மரணம்
29 தொடக்கக் காலமுதல் இறுதிவரை சாலொமோன் செய்த மற்ற செயல்களைப் பற்றிய குறிப்புகள் தீர்க்கதரிசியான நாத்தானின் எழுத்துக்களிலும் சீலோவின் அகியாவினது தீர்க்கதரிசனங்களிலும் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைப் பற்றி எழுதிய ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவினது தரிசனங்களிலும் உள்ளன. 30 எருசலேமில் சாலொமோன் 40 ஆண்டுகள் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். 31 பிறகு அவன் தன் முற்பிதாக்களோடு நித்திரையடைந்தான். அவனுடைய தந்தையாகிய தாவீதின் நகரத்திலேயே ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். சாலொமோனது இடத்தில் அவனது குமாரனான ரெகொபெயாம் ராஜா ஆனான்.
ரெகொபெயாம் முட்டாள்த்தனமாக நடந்துக்கொள்கிறான்
10 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை ராஜாவாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான். 2 யெரொபெயாம், சாலொமோனுக்கு அஞ்சி ஓடி எகிப்தில் இருந்தான். அவன் நேபாத்தின் குமாரன். ரெகொபெயாம் புதிய ராஜாவாகப் போகிற செய்தியை யெரொபெயாம் கேள்விப்பட்டான். எனவே யெரொபெயாம் எகிப்திலிருந்து திரும்பி வந்தான். 3 இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமைத் தங்களோடு வரும்படி அழைத்தனர். பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், 4 “உனது தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் உள்ளது. இப்பாரத்தை எளிதாக்கும். பிறகு நாங்கள் உமக்கு சேவைச்செய்வோம்” என்றனர்.
5 ரெகொபெயாம் அவர்களிடம், “மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
6 பிறகு ராஜா ரெகொபெயாம் தன் தந்தையான சாலொமோனுடன் கூடவே இருந்த மூத்த பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்தான். அவர்களிடம் அவன், “இந்த ஜனங்களுக்கு நான் என்ன பதில் சொல்லவேண்டும்?” என்று கேட்டான்.
7 அம்முதியவர்கள் அவனிடம், “நீங்கள் அந்த ஜனங்களோடு கருணையோடு இருந்தால் அவர்கள் மனம் மகிழும்படி செய்யுங்கள். நல்ல முறையில் பேசுங்கள் பின் அவர்கள் உங்களுக்கு என்றென்றும் சேவை செய்வார்கள்” என்றனர்.
8 ஆனால் ரெகொபெயாம் முதியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன்னோடு வளர்ந்து தனக்கு சேவை செய்துவரும் இளைஞர்களிடம் ஆலோசனை கேட்டான். 9 அவர்களிடம் அவன், “நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்? அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நான் அவர்களின் வேலை பாரத்தைக் குறைக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். என் தந்தை அவர்கள்மேல் சுமத்திய பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கேட்டான்.
10 ரெகொபெயாமோடு வளர்ந்த இளைஞர்களோ அவனிடம், “உன்னுடன் பேசிய ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான். ஜனங்கள் உன்னிடம், ‘உங்கள் தந்தை எங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கிவிட்டார். இது பெருஞ்சுமையை சுமப்பது போல் உள்ளது. ஆனால் நீங்கள் அந்தச் சுமையைக் குறைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தப் பதிலைத்தான் நீ கூறவேண்டும்: ‘எனது சுண்டு விரலானது என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது! 11 என் தந்தை உங்கள் மீது பெருஞ்சுமையை ஏற்றினார். நானோ அதைவிடப் பெருஞ்சுமையை ஏற்றுவேன். என் தந்தை உங்களைச் சவுக்கினால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக் கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்று ஆலோசனை வழங்கினர்.
12 மூன்று நாட்களுக்குப் பிறகு யெரொபெயாமும் இஸ்ரவேல் ஜனங்களும் ரெகொபெயாமிடம் வந்தனர். ராஜா ரெகொபெயாம், “மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்” என்று அவர்களிடம் சொல்லி இருந்தான். 13 பிறகு ரெகொபெயாம் ராஜா அவர்களோடு மிகக் கடுமையாகப் பேசினான். முதியவர்கள் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. 14 ரெகொபெயாம் ராஜா இளைஞர்கள் ஆலோசனை சொன்னபடியே பேசினான். அவன், “என் தந்தை உங்கள் சுமையை அதிகமாக்கினார். நான் அதைவிட அதிகமாக்குவேன். அவர் உங்களைச் சவுக்கால் தண்டித்தார். நானோ கூரான உலோக முனைகளைக்கொண்ட சவுக்கினால் உங்களைத் தண்டிப்பேன்” என்றான். 15 எனவே ராஜா ரெகொபெயாம் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. இம்மாற்றங்கள் தேவனிடமிருந்து வந்ததினால் அவன் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. தேவன் இந்த விளைவை ஏற்படுத்தினார். அகியாவின் மூலமாக யெரொபெயாமுடன் கர்த்தர் பேசிய அவரது வார்த்தை உண்மையாகும்படி இது நடந்தது. அகியா சிலோனிய ஜனங்களிடமிருந்து வந்தவன். யெரொபெயாம் நேபாத்தின் குமாரன்.
16 இஸ்ரவேல் ஜனங்கள் தம் ராஜாவாகிய ரெகொபெயாம் தமது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டனர். பிறகு அவர்கள் ராஜாவிடம், “நாங்களும் தாவீது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? ஈசாயின் நிலத்தில் நாங்கள் ஏதாவது பெற்றோமா? எனவே இஸ்ரவேலராகிய நாம் நமது வீடுகளுக்குப் போவோம். தாவீதின் குமாரன் தன் சொந்த ஜனங்களை ஆண்டுகொள்ளட்டும்!” என்றனர். பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள். 17 ஆனால் யூத நகரங்களில் இஸ்ரவேல் ஜனங்கள் பலர் இருந்தனர். ரெகொபெயாம் அவர்களை ஆண்டுவந்தான்.
18 கட்டாயமாக வேலைசெய்ய வேண்டும் என நியமிக்கப்பட்ட ஜனங்களுக்கெல்லாம் அதோனிராம் பொறுப்பாளியாக இருந்தான். அவனை ரெகொபெயாம் இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்பி வைத்தான். ஆனால் அவனை இஸ்ரவேல் ஜனங்கள் கல்லெறிந்து கொன்றனர். ரெகொபெயாம் ஓடிப்போய் தேரில் ஏறிக்கொண்டான். அவன் தப்பித்து எருசலேமிற்கு ஓடினான். 19 அன்று முதல் இன்று வரை இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்துக்கு எதிராகவே இருந்து வருகின்றனர்.
2008 by World Bible Translation Center