Historical
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
70 தேவனே, என்னை மீட்டருளும்!
    தேவனே விரைந்து எனக்கு உதவும்!
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள்.
    அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன்.
    உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன்.
    தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்!
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும்.
    மிகவும் தாமதியாதேயும்!
71 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,
    எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.
2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.
    நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.
    நீர் என் கன்மலை என் பாதுகாப்பிடம்.
எனவே என்னைக் காப்பதற்குரிய ஆணையைக் கொடும்.
4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
    கொடியோரும் தீயோருமான ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.
5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.
    நான் சிறுவனாக இருந்தபோதே உம்மை நம்பினேன்.
6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.
    என் தாயின் கருவில் இருந்தபோதே நான் உம்மைச் சார்ந்திருந்தேன்.
    நான் உம்மிடம் எப்போதும் ஜெபம் பண்ணினேன்.
7 நீரே என் பெலத்தின் இருப்பிடம்.
    எனவே நான் பிற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டானேன்.
8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.
9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.
    என் பெலனை நான் இழக்கையில் என்னை விட்டுவிடாதேயும்.
10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.
    அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.
11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!
    தேவன் அவனைக் கைவிட்டார்.
    அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.
12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!
    தேவனே, விரையும்! வந்து என்னைக் காப்பாற்றும்!
13 என் பகைவர்களைத் தோற்கடியும்!
    அவர்களை முழுமையாக அழித்துவிடும்.
அவர்கள் என்னைத் தாக்க முயல்கிறார்கள்.
    அவர்கள் வெட்கமும் இகழ்ச்சியும் அடைவார்கள் என நான் நம்புகிறேன்.
14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.
    நான் உம்மை மென்மேலும் துதிப்பேன்.
15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    நீர் என்னை மீட்ட காலங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.
    எண்ண முடியாத பல காலங்கள் உள்ளன.
16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.
    உம்மையும் உமது நற்குணங்களையும் நான் பேசுவேன்.
17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.
    இன்றுவரை நீர் செய்துள்ள அற்புதமான காரியங்களைக் குறித்து நான் ஜனங்களுக்குக் கூறியுள்ளேன்.
18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.
    ஆனாலும் தேவனே, நீர் என்னை விட்டுவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன்.
    உமது வல்லமையையும், பெருமையையும் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் நான் சொல்லுவேன்.
19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.
    தேவனே, உம்மைப் போன்ற தேவன் வேறொருவருமில்லை.
    நீர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.
20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.
    ஆனாலும் அவை எல்லாவற்றினின்றும் நீர் என்னை மீட்டு, உயிரோடு வைத்தீர்.
    எத்தனை ஆழத்தில் மூழ்கியும் தொல்லைகளிலிருந்து நீர் என்னைத் தூக்கி நிறுத்தினீர்.
21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.
    தொடர்ந்து எனக்கு ஆறுதல் அளியும்.
22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.
    என் தேவனே, நீர் நம்பிக்கைக் குரியவர் என்பதைப் பாடுவேன்.
இஸ்ரவேலின் பரிசுத்தருக்காக,
    என் சுரமண்டலத்தில் பாடல்களை இசைப்பேன்.
23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.
    என் உதடுகளால் துதிப்பாடல்களை நான் பாடுவேன்.
24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.
    என்னைக் கொல்ல விரும்பிய ஜனங்கள், தோற்கடிக்கப்பட்டு இகழ்ச்சி அடைவார்கள்.
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
    உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
    உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
    திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
    அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
    என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
    பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
    சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
    கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
    புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
    ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும்.
    எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார்.
    ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள்.
    ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார்.
    அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.
15 ராஜா நீடூழி வாழ்க!
    அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் ராஜாவுக்காக ஜெபம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
    மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
    நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 ராஜா என்றென்றும் புகழ்பெறட்டும்.
    சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
    அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
    தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
    அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் குமாரனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
புத்தகம் 3
ஆசாபின் துதிப்பாடல்.
73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
2 நான் தவறி வீழ்ந்து,
    பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
3 கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
    பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
4 அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
    வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
5 எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
    பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
6 எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
    அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
7 தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
    தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
8 பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
    அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
    அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
9 தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
    பூமியின் ராஜாக்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
    அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
    உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.”
12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
    ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
    ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
    ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.
15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
    அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
    ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
    அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
    விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
    கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
    எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.
21-22 நான் மூடனாக இருந்தேன்.
    நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
    மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
    நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
    தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
    பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
    நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
    ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
    என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
    உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
    என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
    தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.
2008 by World Bible Translation Center