Historical
ஏதோமுக்கு விரோதமான செய்தி
35 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, சேயீர் மலையைப் பார். அதற்கு விரோதமாக எனக்காகப் பேசு. 3 அதனிடம் சொல், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“‘சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமானவன்!
    நான் உன்னைத் தண்டிப்பேன்.
    நான் உன்னை வெறுமையான நிலமாக்குவேன்.
4 நான் உன் நகரங்களை அழிப்பேன்.
    நீ வெறுமை ஆவாய்.
பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.
5 “‘ஏனென்றால், நீ எப்பொழுதும் எனது ஜனங்களுக்கு விரோதமாக இருந்தாய். நீ உனது வாளை இஸ்ரவேலுக்கு எதிராக அவர்களின் ஆபத்து காலத்தில் அவர்களின் இறுதித் தண்டனை காலத்தில் பயன்படுத்தினாய்!’” 6 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு, உனக்கு மரணம் வரும்படி ஆணையிடுகிறேன். மரணம் உன்னைத் துரத்தும். நீ ஜனங்களைக் கொல்லுவதை வெறுப்பதில்லை. எனவே மரணம் உன்னைத் துரத்தும். 7 நான் சேயீர் மலையைப் பாழான இடமாக்குவேன். அந்த நகரத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். அந்த நகரத்திற்குள் செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். 8 நான் இதன் மலைகளை மரித்த உடல்களால் நிரப்புவேன். உனது குன்றுகள் முழுவதும் மரித்த உடல்களால் நிரம்பும். உனது பள்ளதாக்குகளிலும், உனது ஆற்றுப் படுக்கைகளிலும், உடல்கள் கிடக்கும். 9 நான் உன்னை என்றென்றும் வெறுமையாக்குவேன். உன் நகரங்களில் எவரும் வாழமாட்டார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
10 நீ சொன்னாய், “இந்த இரண்டு குலங்களும், நாடுகளும் (இஸ்ரவேலும் யூதாவும்) என்னுடையதாக இருக்கும். நாங்கள் அவர்களைச் சொந்தமாக எடுத்துக்கொள்வோம்.”
ஆனால் கர்த்தர் அங்கே இருக்கிறார்! 11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீ என் ஜனங்கள் மேல் பொறாமையோடு இருந்தாய். நீ அவர்கள் மீது கோபத்தோடு இருந்தாய். நீ அவர்களை வெறுத்தாய், எனவே எனது உயிரைக்கொண்டு ஆணையிடுகிறேன், நீ அவர்களைப் புண்படுத்திய அதே முறையில் நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைத் தண்டித்து நான் அவர்களோடு இருப்பதை ஜனங்கள் அறியும்படிச் செய்வேன். 12 நான் உனது நிந்தைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை நீ பிறகு அறிந்துகொள்வாய்.
“இஸ்ரவேல் மலைக்கு விரோதமாகப் பல தீயவற்றை நீ சொன்னாய். நீ சொன்னாய், ‘இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருக்கிறது! நான் அவர்களை உணவைப்போன்று சுவைப்பேன்!’ 13 நீ பெருமைகொண்டு, எனக்கு விரோதமானவற்றைச் சொன்னாய். நீ பல தடவை சொன்னாய், நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டிருக்கிறேன். ஆம், நீ சொன்னதைக் கேட்டேன்.”
14 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் உன்னை அழிக்கும்போது பூமி முழுவதும் மகிழும். 15 இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டபோது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். நானும் உன்னை அதைப்போலவே நடத்துவேன். சேயீர் மலையும் ஏதோம் நாடு முழுவதும் அழிக்கப்படும்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
இஸ்ரவேல் நாடு மீண்டும் கட்டப்படும்
36 “மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்குமாறு இஸ்ரவேல் மலைகளிடம் கூறு. 2 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் கூறு: ‘பகைவர்கள் உனக்கு விரோதமாகத் தீயவற்றைச் சொன்னார்கள். அவர்கள் சொன்னார்கள்: ஆ, ஆ! இஸ்ரவேலின் பழங்காலத்து மலைகள் எங்கள் வசமாகும்!’
3 “எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் சொல்: ‘பகைவர்கள் உன் நகரங்களை அழித்தனர். அவர்கள் உன்னைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் நின்று தாக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்தனர். எனவே நீ பிற நாடுகளுக்கு உரியவனானாய். பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பேசி அவதூறு உரைத்தனர்.’”
4 எனவே, இஸ்ரவேல் மலைகளே, எனது கர்த்தரும் ஆண்டவருமானவரின் வார்த்தையைக் கேளுங்கள்! கர்த்தரும் ஆண்டவருமானவர் கொள்ளையடிக்கப்பட்டு, சுற்றியுள்ள நாடுகளால் பரிகாசம் செய்யப்பட்ட மலைகளுக்கும் குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட நகரங்களுக்கும் இவற்றைக் கூறுகிறார். 5 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் எனது பலமான உணர்ச்சிகளை எனக்காகப் பேச அனுமதிப்பேன்! நான், ஏதோமையும் மற்ற நாடுகளையும் என் கோபத்தை உணரச் செய்வேன். ஏதோம் ஜனங்கள் எனது நாட்டை அழிக்கும் நோக்கத்துடன் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அந்த நாட்டை வெறுப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் அந்நாட்டை அழிப்பதற்காக தமக்கே எடுத்துக் கொண்டனர்!”
6 “எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனவே இஸ்ரவேலின் நாட்டிடம் எனக்காகப் பேசு. மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல். கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று கூறு: ‘நான் என் எரிச்சலினாலும் உக்கிரத்தினாலும் பேசுவேன். ஏனென்றால், அந்நாடுகள் செய்த நிந்தையினால் துன்பப்பட்டீர்கள்.’”
7 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகள் அந்த நிந்தைகளுக்காக துன்பப்பட வேண்டும் என்று நானே வாக்களிக்கிறேன்!
8 “ஆனால் இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் புதிய மரங்களை வளர்த்து என் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பழங்களைக் கொடுப்பீர்கள். என் ஜனங்கள் விரைவில் திரும்பி வருவார்கள். 9 நான் உங்களோடு இருப்பேன். நான் உங்களுக்கு உதவுவேன். ஜனங்கள் உங்கள் மண்ணைப் பண்படுத்துவார்கள். ஜனங்கள் உங்களில் விதைகளை விதைப்பார்கள். 10 உங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்வார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் முழுவதும் அங்கே வாழ்வார்கள். நகரங்களில் ஜனங்கள் குடியேற்றப்படுவார்கள். அழிந்துபோன இடங்கள் புதிதாகக் கட்டப்படும். 11 நான் உங்களுக்குப் பல ஜனங்களையும், மிருகங்களையும் கொடுப்பேன். அவர்கள் மேலும் பெருகுவார்கள். முற்காலத்தில் இருந்ததுபோல, வாழ்வதற்காக ஜனங்களை இங்கு நான் கொண்டுவருவேன். நான் உங்களைத் தொடக்கத்தில் இருந்ததை விட சிறப்பாகச் செய்வேன். பின்னர் நான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 12 ஆம், நான் என் ஜனங்கள் பலரையும் உன் நாட்டிற்கு, வழிநடத்துவேன். அவர்கள் உன்னை எடுத்துக்கொள்வார்கள். நீ அவர்களுக்கு உரியவளாவாய். நீ மீண்டும் என்றும் என் ஜனங்கள் மீது மரணத்தைக் கொண்டு வரமாட்டாய்.”
13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் பூமியே, ஜனங்கள் உன்னிடம் கெட்டவற்றைக் கூறுகிறார்கள். நீ உனது ஜனங்களை அழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீ உனது பிள்ளைகளைச் மரிக்க கொடுத்தாய் என்று கூறுகிறார்கள். 14 நீ இனிமேல் ஜனங்களை அழிக்கமாட்டாய். நீ இனிமேல் உன் பிள்ளைகளை மரிக்க கொடுப்பதில்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: 15 “நான் இனிமேல் பிறநாட்டார் உன்னை அவமானம் செய்யும்படி விடமாட்டேன். நீ இனிமேல் அந்த ஜனங்களால் பாதிக்கப்படமாட்டாய். நீ அவர்களை இனிமேல் குழந்தை இல்லாமல் இருக்கும்படிச் செய்யமாட்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
கர்த்தர் அவரது சொந்த நல்ல நாமத்தைக் காத்துக்கொள்வார்
16 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 17 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தம் சொந்த நாட்டில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த நாட்டை தமது கெட்டச் செயல்களால் தீட்டுப்படுத்தினார்கள். எனக்கு அவர்கள் மாதவிலக்கால் தீட்டான பெண்ணைப்போன்று இருந்தார்கள். 18 அவர்கள் அந்த நாட்டில் ஜனங்களைக் கொன்றபோது இரத்தத்தை தரையில் சிந்தினார்கள். அவர்கள் அந்த நாட்டைத் தங்கள் அசுத்த விக்கிரகங்களால் தீட்டாக்கினார்கள். எனவே நான் எவ்வளவு கோபமாய் இருக்கிறேன் என்பதைக் காட்டினேன். 19 நான் பிற நாடுகளுக்குள்ளே அவர்களைக் சிதறடித்தேன். பல தேசங்களில் அவர்கள் தூற்றிப் போடப்பட்டார்கள். அவர்கள் செய்த கெட்ட செயல்களுக்காக நான் தண்டித்தேன். 20 அவர்கள் பிற நாடுகளுக்குச் சென்றனர். அவர்கள் அந்த நாடுகளிலும் என் நாமத்தைக் கெடுத்தார்கள். எப்படி? அந்நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைப்பற்றிப் பேசினார்கள். அவர்கள், ‘இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள். ஆனால் அவர்கள் அவரது நாட்டைவிட்டு வந்தார்கள். அதனால் கர்த்தரிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும்!’ என்று பேசினார்கள்.
21 “இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள் சிதறடிக்கப்பட்டிருந்த நாடுகளில் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கினார்கள். நான் என் நாமத்திற்காக வருத்தப்பட்டேன். 22 எனவே, இஸ்ரவேல் வம்சத்தாரிடம், கர்த்தரும் ஆண்டவருமானவர் இவற்றைக் கூறுகிறார், என்று சொல்: ‘இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் எங்கெல்லாம் போனீர்களோ அங்கெல்லாம் என் பரிசுத்தமான நாமத்தைக் கெடுத்தீர்கள். இதனை நிறுத்த நான் சிலவற்றைச் செய்யப்போகிறேன். இஸ்ரவேலே நான் இதனை உனக்காகச் செய்யவில்லை. நான் இதனை எனது பரிசுத்தமான நாமத்திற்காகவே செய்வேன். 23 எனது பெரும் நாமம் உண்மையில் பரிசுத்தமானது என்பதை அந்த நாடுகளுக்குக் காட்டப்போகிறேன். நீங்கள் அந்நாடுகளில் என் நாமத்தைப் பாழாக்கீனீர்கள். ஆனால் நான் பரிசுத்தமானவர் என்பதை காட்டுவேன். நீங்கள் என் நாமத்தை மதிக்கும்படி செய்வேன். பிறகு அந்த நாட்டவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
24 தேவன் சொன்னார்: “நான் அந்நாடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, ஒன்று சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். 25 பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன். 26 நான் உங்களில் புதிய ஆவியை வைத்து, உங்கள் சிந்தனை முறையையும் மாற்றுவேன். நான் உங்கள் உடலில் உள்ள கல் போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு மென்மையான மனித இருதயத்தைக் கொடுப்பேன். 27 நான் உங்களுக்குள் எனது ஆவியை வைப்பேன். நான் உங்களை மாற்றுவேன். எனவே நீங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிவீர்கள். நீங்கள் கவனமாக என் கட்டளைகளுக்கு அடிபணிவீர்கள். 28 பின்னர் நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வீர்கள். நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள். நான் உங்களது தேவனாயிருப்பேன். 29 நான் உங்களைப் பாதுகாப்பேன், அசுத்தமாகாமல் இரட்சிப்பேன். நான் தானியத்தை முளைக்கும்படி கட்டளையிடுவேன். உங்களுக்கு விரோதமாகப் பஞ்சம் ஏற்படும்படிச் செய்யமாட்டேன். 30 நான் உங்கள் மரங்களிலிருந்து நிறைய பழங்கள் கிடைக்கும்படியும் உங்கள் வயல்களிலிருந்து நல்ல விளைச்சல் கிடைக்கும்படியும் செய்வேன். எனவே நீங்கள் பிற நாடுகளில் பசியால் அவமானப்பட்டதைப்போன்று இனிமேல் மீண்டும் படமாட்டீர்கள். 31 நீங்கள் செய்த கெட்டவற்றை நினைப்பீர்கள். நீங்கள் அவை நல்லவை அல்ல என நினைப்பீர்கள். பிறகு நீங்களே உங்களை வெறுப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த பாவங்களும் பயங்கரமான செயல்களும் மிகுதி.”
32 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீங்கள் இவற்றை நினைவுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இவற்றை உங்கள் நன்மைக்காக செய்யவில்லை! எனது நல்ல நாமத்திற்காகவே நான் இதனைச் செய்தேன்! எனவே இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வாழ்ந்த முறையை எண்ணி வெட்கப்படுங்கள்!”
33 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார், “நான் உங்கள் பாவங்களைக் கழுவும் நாளில் நான் உங்களை உங்களது நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவேன். அந்த அழிந்துபோன நகரங்கள் மீண்டும் கட்டப்படும். 34 காலியான நிலங்கள் பயிரிடப்படும். அந்த வழியாகப் போகிறவர்களின் பார்வையில் இனி பாழாக இராது. 35 அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’”
36 தேவன் சொன்னார்: “பின்னர் உன்னைச் சுற்றியுள்ள அந்நாடுகள் நானே கர்த்தர் என்பதையும் நான் பாழான இடங்களை மீண்டும் கட்டினேன் என்பதையும் அறிவார்கள். காலியாக இருந்த இந்த நிலத்தில் நான் நட்டுவைத்தேன். நானே கர்த்தர் நான் இவற்றைக் கூறினேன் இவை நடக்கும்படிச் செய்வேன்!”
37 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் ஜனங்களையும் கூட என்னிடம் வந்து தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க அனுமதிப்பேன். அவர்கள் மேலும், மேலும் பெருகும்படிச் செய்வேன். அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போன்றிருப்பார்கள். 38 எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப்போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
காய்ந்த எலும்புகளின் தரிசனம்
37 கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. கர்த்தருடைய ஆவி என்னை நகரத்திலிருந்து தூக்கி ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே கொண்டுபோய்விட்டது. அப்பள்ளத்தாக்கு மரித்துப்போன மனிதர்களின் எலும்புகளால் நிறைந்திருந்தது. 2 பள்ளத்தாக்கின் வெட்ட வெளியில் அந்த எலும்புகள் மிகுதியாகக் கிடந்தன. என்னை அந்த எலும்புகள் நடுவே நடக்குமாறு கர்த்தர் செய்தார். நான் அவ்வெலும்புகள் மிகவும் காய்ந்து கிடந்ததைக் கண்டேன்.
3 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்த எலும்புகளுக்கு உயிர்வருமா?”
நான் சொன்னேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உமக்கு மட்டுமே இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்.”
4 எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்! 5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்! 6 நான் உங்களில் தசைநார்களையும், தசைகளையும் வைப்பேன். நான் உங்களை தோலால் மூடுவேன். பின்னர், நான் உங்களுக்குள் மூச்சுக் காற்றை வைப்பேன். நீங்கள் திரும்ப உயிர் பெறுவீர்கள்! பிறகு, நானே கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.’”
7 எனவே, நான் கர்த்தருக்காக எலும்புகளிடம் அவர் சொன்னது போல் பேசினேன். நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தபோது, உரத்த சத்தம் கேட்டது, எலும்புகள் அசைந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொண்டன. 8 அங்கே என் கண் முன்னால் எலும்புகளின் மேல் தசைநார்களும், தசைகளும் சேர்ந்தன. அவற்றைத் தோல் மூடிக்கொண்டது. ஆனால் உடல்கள் அசையவில்லை. அவற்றில் மூச்சுக் காற்று இல்லை.
9 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’”
10 எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப்போன்று நின்றார்கள்!
11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’ 12 எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டுவருவேன்! பின்னர் உங்களை நான் இஸ்ரவேல் நிலத்திற்குக் கொண்டு வருவேன். 13 என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். 14 நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.
யூதாவும் இஸ்ரவேலும் மீண்டும் ஒன்றாகுதல்
15 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, ஒரு கோலை எடுத்து இதனை எழுதிவை: ‘இந்த கோல் யூதாவுக்கும் அதன் நண்பர்களான இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உரியது’ பின்னர் இன்னொரு கோலை எடுத்து இதனை எழுதிவை. ‘இந்தக் கோல் யோசேப்புக்கும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கும் சொந்தம். அதனுடைய பெயர்: “எப்பிராயீமின் கோல்.”’ 17 பின்னர் இரண்டு கோல்களையும் ஒன்று சேர்த்துவிடு. உன் கையில் இரண்டும் ஒன்றாக இருக்கும்.
18 “அதன் பொருள் என்னவென்று விளக்கும்படி உன் ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள். 19 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் சொல்: ‘நான் எப்பிராயீம் கையிலும் அவன் நண்பர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் கையிலும் இருக்கும் யோசேப்பின் கோலை எடுத்து, அக்கோலை யூதாவின் கோலோடு சேர்த்து அவற்றை ஒரே கோலாக்குவேன். என் கையில் அவை ஒரே கோலாக இருக்கும்!’
20 “அக்கோல்களை உன் கையில் அவர்களுக்கு முன்பாகப் பிடி. நீ அக்கோல்களில் அப்பெயர்களை எழுதினாய். 21 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று ஜனங்களிடம் சொல்: ‘நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்கள் சென்ற நாடுகளிலிருந்து அழைத்து வருவேன். நான் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளிலிருந்து சேகரித்து அவர்களது சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவேன். 22 நான் அவர்களை மலைகளின் தேசமாகிய இஸ்ரவேலில் ஒரே நாடாக்குவேன். அவர்கள் அனைவருக்கும் ஒரே ராஜா இருப்பான். அவர்கள் இரு நாட்டினராக இருக்கமாட்டார்கள். அவர்கள் இனிமேல் இரண்டு அரசுகளாக இருக்கமாட்டார்கள். 23 அவர்கள் இனிமேல் அருவருப்பான சிலைகளையும், விக்கிரங்களையும் வணங்கித் தங்களைத் தீட்டாக்கிக் கொள்ளமாட்டார்கள். அல்லது, வேறு குற்றங்களையும் செய்யமாட்டார்கள். ஆனால் நான் அவர்கள் பாவம் செய்த எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவேன். நான் அவர்களைக் கழுவிச் சுத்தமாக்குவேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.
24 “‘அவர்களுக்கு எனது தாசனாகிய தாவீது ராஜாவாக இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே மேய்ப்பன் இருப்பான். அவர்கள் எனது நியாயங்களில் நடந்து என் கட்டளைகளைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் நான் சொன்னவற்றின்படியே நடப்பார்கள். 25 நான் எனது தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்த நாட்டிலேயே அவர்கள் வாழ்வார்கள். உங்கள் முற்பிதாக்கள் அந்த இடத்தில் வாழ்ந்தார்கள். என் ஜனங்களும் அங்கே வாழ்வார்கள். அவர்களும் அவர்களது பிள்ளைகளும் அவர்களது பேரப்பிள்ளைகளும் அங்கே என்றென்றும் வாழ்வார்கள். எனது தாசனாகிய தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாயிருப்பான். 26 நான் அவர்களோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்துகொள்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் தொடர்ந்து இருக்கும். நான் அவர்களது நாட்டை அவர்களிடம் கொடுக்க ஒப்புக்கொள்கிறேன். நான் அவர்கள் மேலும், மேலும் பெருக ஒப்புக்கொண்டேன். நான் எனது பரிசுத்தமான இடத்தை அங்கே அவர்களுடன் என்றென்றும் வைக்க ஒப்புக்கொண்டேன். 27 என் பரிசுத்தமான கூடாரம் அவர்களோடு இருக்கும். ஆம், நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள். 28 மற்ற நாடுகளும் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். எனது பரிசுத்தமான இடத்தினை இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் இருக்கச் செய்வதன் மூலம் அவர்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக்கினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.’”
கோகுக்கு விரோதமான செய்தி
38 கர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு. 3 கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன். 4 நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள். 5 பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள். 6 கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள்.
7 “‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக்கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு. 8 நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள். 9 ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’”
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்குவீர்கள். 11 நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை! 12 நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’
13 “சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக்கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’”
14 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய். 15 நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய். 16 எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூட வரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’”
17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப்பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.”
18 எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன். 19 நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன். 20 அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!”
21 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள். 22 நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன். 23 பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.
2008 by World Bible Translation Center