Historical
வறட்சியும், கள்ளத் தீர்க்கதரிசிகளும்
14 வறட்சிப் பற்றி எரேமியாவிற்கு வந்தகர்த்தருடைய வார்த்தை இது:
2 “யூதா நாடு மரித்துப்போன ஜனங்களுக்காக அழுகிறது.
    யூதா நகரங்களில் உள்ள ஜனங்கள், மேலும், மேலும், பலவீனர்களாகிக்கொண்டிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் தரையிலே கிடக்கிறார்கள்.
எருசலேமிலுள்ள ஜனங்கள் உதவிக்காக தேவனிடம் அழுகிறார்கள்.
3 ஜனங்களின் தலைவர்கள், வேலைக்காரர்களை நீர் கொண்டு வருவதற்காக அனுப்பினார்கள்,
வேலையாட்கள் நீர் தேக்கிவைத்திருக்கும் இடங்களுக்குச் சென்றனர்.
    அங்கே எந்த தண்ணீரையும் கண்டுக்கொள்ளவில்லை.
வேலைக்காரர்கள் காலி ஜாடிகளோடு திரும்பி வருவார்கள்.
    எனவே அவர்கள், அவமானமும், சங்கடமும் அடைகின்றனர்.
    அவர்கள் அவமானத்தால் தங்கள் தலையை மூடிக்கொள்ளுகின்றனர்.
4 எவரும் பயிர் செய்ய பூமியைத் தயார் செய்வதில்லை.
    தரையில் மழை ஏதும் விழவில்லை.
விவசாயிகள் வெட்கப்படுகிறார்கள்.
    எனவே, அவர்கள் வெட்கத்தால் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
5 நிலத்தில் இருக்கும் தாய் மான்கூட புதிதாகப் பிறந்த குட்டியை தனியாக விட்டுவிட்டுப் போய்விடும்.
    அங்கே புல் இல்லாததால் அது அவ்வாறு செய்கிறது.
6 காட்டுக் கழுதைகள் மொட்டைப்பாறைகள் மீது நிற்கும்.
    அவை ஓநாய்களைப்போன்று காற்றை உட்கொள்ளுகின்றன.
ஆனால், அவற்றின் கண்கள் எந்த உணவையும் கண்டு கொள்ள முடியவில்லை.
    ஏனென்றால், அங்கே தின்ன எந்தச் செடிகளும் இல்லை.”
7 “அவற்றுக்கு எங்கள் குற்றங்களே காரணம் என்பது எங்களுக்குத் தெரியும்;
    நமது பாவங்களால் நாம் இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
    கர்த்தாவே, உமது நாமத்தின் நன்மைக்காக எங்களுக்கு உதவ ஏதாவதுச் செய்யும்.
நாங்கள் உம்மை விட்டுப் பலமுறை போனோம்.
    நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
8 தேவனே, நீரே இஸ்ரவேலின் நம்பிக்கை ஆவீர்!
    துன்பக் காலங்களில் இஸ்ரவேலர்களை நீர் காப்பாற்றுகிறீர்.
ஆனால், இப்போது நீர் இந்த நாட்டில் அந்நியனைப் போன்று இருக்கிறீர்.
    ஒருநாள் இரவு மட்டும் தங்குகிற பயணியைப்போன்று நீர் இருக்கிறீர்.
9 ஆச்சரியத்தால் தாக்கப்பட்ட ஒரு மனிதனைப் போன்று நீர் தோன்றுகிறீர்.
    எவரொருவரையும் காப்பாற்ற முடியாத, ஒரு போர் வீரனைப் போன்று நீர் காட்சி தருகிறீர். கர்த்தாவே!
நீர் எங்களோடு இருக்கிறீர்.
    நாங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படுகிறோம்.
    எனவே உதவி இல்லாமல் எங்களை விட்டுவிடாதிரும்!”
10 யூதாவின் ஜனங்களைப்பற்றி கர்த்தர் சொன்னது இதுதான்: “யூதாவின் ஜனங்கள் உண்மையில் என்னை விட்டுவிலக விரும்பினார்கள். அந்த ஜனங்கள் என்னை விட்டு விலகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். இப்போது அவர்கள் செய்த தீயச் செயல்களை கர்த்தர் நினைப்பார். அவர்களது பாவங்களுக்காக கர்த்தர் அவர்களைத் தண்டிப்பார்.”
11 பிறகு கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களுக்கு நற்காரியங்கள் ஏற்படவேண்டும் என்று என்னிடம் ஜெபம் செய்யாதே. 12 யூதாவின் ஜனங்கள் உபவாசமிருந்து என்னிடம் ஜெபிக்கத் தொடங்குவார்கள். ஆனால், நான் அவர்களது ஜெபத்தைக் கேட்கமாட்டேன். அவர்கள் எனக்கு தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் கொடுத்தாலும் நான் அந்த ஜனங்களை ஏற்பதில்லை. நான் யூதாவின் ஜனங்களைப் போரில் அழிக்கப்போகிறேன். நான் அவர்களின் உணவை எடுத்துக்கொள்வேன். யூதாவின் ஜனங்கள் மரணம்வரை முழு பட்டினியாக இருப்பார்கள். நான் அவர்களைப் பயங்கரமான நோய்களால் அழிப்பேன்” என்றார்.
13 ஆனால் நான் கர்த்தரிடம் கூறினேன், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, தீர்க்கதரிசிகள் ஜனங்களிடம் சில வித்தியாசமானவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் யூதாவின் ஜனங்களிடம், ‘பகைவனின் வாளால் நீங்கள் துன்பப்படமாட்டீர்கள். நீங்கள் பசியாலும் துன்பப்படமாட்டீர்கள். இந்த நாட்டில் கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தைக் கொடுப்பார்.’”
14 பிறகு, கர்த்தர் என்னிடம், “எரேமியா, அந்தத் தீர்க்கதரிசிகள் எனது நாமத்தால் பொய்களைப் பரப்புகிறார்கள். அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. நான் அவர்களுக்குக் கட்டளைக் கொடுக்கவோ அவர்களோடு பேசவோ இல்லை. அந்தத் தீர்க்கதரிசிகள், பொய்ச் சாட்சிகளையும், பயனற்ற மந்திரங்களையும், சொந்த ஆசைகளையும் பரப்பியிருக்கிறார்கள். 15 எனவே, நான் இதைத்தான் என் நாமத்தால் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பவர்களைப்பற்றிக் கூறுவது, அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை. அந்தத் தீர்க்கதரிசிகள் சொன்னார்கள், ‘இந்த நாட்டைப் பகைவர்கள் எவரும் வாளால் தாக்கமாட்டார்கள், இந்த நாட்டில் எப்பொழுதும் பசி இருக்காது.’ அத்தீர்க்கதரிசிகள் பசியால் மரிப்பார்கள். பகைவரின் வாள் அவர்களைக் கொல்லும். 16 அத்தீர்க்கதரிசிகள் பேசுகிறதைக் கேட்கிற ஜனங்களும் வீதிகளில் எறியப்படுவார்கள். அந்த ஜனங்கள் பசியாலும், பகைவரின் வாளாலும் மரிப்பார்கள். அந்த ஜனங்களையும் அவர்களது மனைவிகளையும், குமாரர்களையும், குமாரத்திகளையும் புதைக்க எவரும் இருக்கமாட்டார்கள். அவர்கள் செய்த தீமையைக்கொண்டே நான் அவர்களைத் தண்டிப்பேன்.
17 “எரேமியா, யூதாவின் ஜனங்களிடம்
    இச்செய்தியைக் கூறு,
‘எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன.
நான் இரவும் பகவும் நிறுத்தாமல் அழுவேன்.
    நான் எனது குமாரத்தியான கன்னிக்காக[a] அழுவேன்.
நான் எனது ஜனங்களுக்காக அழுவேன்.
    ஏனென்றால், யாரோ ஒருவர் அவர்களைத் தாக்குவர், அவர்களை நசுக்குவர், அவர்கள் மிக மோசமாகக் காயப்படுவார்கள்.
18 நான் நாட்டிற்குள் போனால் வாள்களால்
    கொல்லப்படுகிற ஜனங்களைக் காண்பேன்.
நான் நகரத்திற்குள் போனால்,
    மிகுதியான நோயைப் பார்ப்பேன்.
ஏனென்றால், ஜனங்களுக்கு உணவு இல்லை, ஆசாரியர்களும்,
    தீர்க்கதரிசிகளும் ஒரு அந்நியதேசத்திற்கு எடுத்துக்கொண்டு போகப்பட்டனர்’” என்றார்.
19 கர்த்தாவே, யூதா நாட்டை நீர் முழுமையாக ஒதுக்கிவிட்டீரா?
    கர்த்தரே நீர் சீயோனை வெறுக்கிறீரா?
நாங்கள் மீண்டும் குணம் அடையமுடியாதபடி நீர் எங்களை பலமாகத் தாக்கியுள்ளீர்.
    ஏன் அதனைச் செய்தீர்?
நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
    ஆனால் நன்மை எதுவும் வரவில்லை.
குணமாவதற்குரிய காலத்தை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
    ஆனால் பயங்கரமே வருகிறது.
20 கர்த்தாவே! நாங்கள் தீயவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,
    எங்கள் முற்பிதாக்களும் தீமையைச் செய்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
    ஆம், உமக்கு எதிராக நாங்கள் பாவம் செய்தோம்.
21 கர்த்தாவே உமது நாமத்திற்கு நன்மைக்காக, எங்களை வெளியே தள்ளாதிரும்.
    உமது மகிமையின் சிங்காசனத்திலிருந்து மேன்மையை விலக்காதிரும்.
எங்களோடு உள்ள உடன்படிக்கையை நினையும்.
    அந்த உடன்படிக்கையை உடைக்க வேண்டாம்.
22 அயல்நாட்டு விக்கிரகங்களுக்கு மழையை கொண்டுவரும் வல்லமை கிடையாது.
    வானத்திற்கு மழையைப் பொழியச் செய்யும் அதிகாரம் இல்லை.
நீரே எங்களது ஒரே நம்பிக்கை,
    நீர் ஒருவரே இவை அனைத்தையும் செய்தவர்.
15 கர்த்தர் என்னிடம், “எரேமியா இப்பொழுது மோசேயும் சாமுவேலும் இருந்து யூதாவின் ஜனங்களுக்காக ஜெபம் செய்தாலும் நான் இந்த ஜனங்களுக்காக இரக்கப்படுவதில்லை. என்னைவிட்டு யூத ஜனங்களை தூர அனுப்பு, அவர்களைப் போகும்படி சொல். 2 அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது:
“சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,
    அந்த ஜனங்கள் மரிப்பார்கள்,
சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
    அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.
நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
    அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள்.
நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
    அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.
3 நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
“நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன்.
நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன்.
நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும்
    அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.
4 நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும்
    ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன்.
நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன்.
    ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான்.
    மனாசே எசேக்கியா ராஜாவின் குமாரன்.
    மனாசே யூதாவின் ராஜா.”
5 “உனக்காக எவனும் வருத்தப்படமாட்டான்.
    எருசலேம் நகரமே, எவனும் உனக்காக பரிதாபப்படவோ அழவோமாட்டான்.
    எவனும், ‘நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்க தனது வழியிலிருந்து திரும்பிக் கேட்கமாட்டான்!
6 எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்.”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது:
“மீண்டும், மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே,
    நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன்.
    நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.
7 நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன்.
    நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன்.
எனது ஜனங்கள் மாறவில்லை.
    எனவே, நான் அவர்களை அழிப்பேன்.
    நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.
8 பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள்.
    கடற்கரையில் உள்ள மணல்களை விட விதவைகள் மிகுதியாக இருப்பார்கள்.
மதிய வேளையில் நான் அழிக்கிறவனை அழைத்து வருவேன்.
    யூதாவிலுள்ள இளைஞர்களின் தாய்மார்களை அழிக்கிறவன் தாக்குவான்.
நான் யூதா ஜனங்களுக்கு துன்பத்தையும் பயத்தையும் கொண்டு வருவேன்.
    மிக விரைவில் இது நிகழுமாறு நான் செய்வேன்.
9 எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான்.
    யூதாவிலுள்ள மீதியிருப்பவர்களை அவர்கள் கொல்வார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஏழு குமாரர்கள் இருக்கலாம்.
    ஆனாலும் அவர்கள் மரித்துப்போவார்கள்.
அவள் பலவீனமாகி மூச்சுவிடமுடியாத நிலை அடையும்வரை அழுவாள்.
    அவள் திகைப்பும் குழப்பமும் அடைவாள்.
அவளது ஒளிமயமான பகல் துன்பமான இருட்டாகும்.”
எரேமியா மீண்டும் தேவனிடம் முறையிடுகிறான்
10 தாயே! நீ எனக்கு பிறப்பைக் கொடுத்ததற்காக
    நான் (எரேமியா) வருந்துகிறேன்.
தேசத்துக்கெல்லாம் வாதும் வழக்கும் உள்ளவனாக நான் இருக்கிறேன்.
    நான் கடன் கொடுத்ததுமில்லை,
கடன் வாங்கியதுமில்லை.
    ஆனால் ஒவ்வொருவனும் என்னை சபிக்கிறான்.
11 உண்மையாக கர்த்தாவே, நான் உமக்கு நன்கு தொண்டு செய்துள்ளேன்.
    நெருக்கடி நேரத்தில் என் பகைவர்களைக்குறித்து உம்மிடம் ஜெபம் செய்தேன்.
தேவன் எரேமியாவிற்குப் பதிலளிக்கிறார்
12 “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட
    உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய்.
வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன்.
    எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.
13 யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன.
    நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன்.
அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.
    நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன்.
    ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன.
    யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.
14 யூதாவின் ஜனங்களே! நான் உங்களை உமது பகைவர்களின் அடிமைகளாக்குவேன்.
    நீங்கள் எப்போதும் அறிந்திராத நாடுகளில் அடிமைகளாக இருப்பீர்கள்.
நான் மிகக் கோபமாக இருக்கிறேன்.
    எனது கோபம் சூடான நெருப்பு போல் உள்ளது.
    நீ எரிக்கப்படுவாய்.”
15 கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.
    என்னை நினைவில் வைத்துள்ளீர்.
என்னை கவனித்துக்கொள்வீர்.
    ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள்.
அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்.
    நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர்.
நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால்
    என்னை அழித்து விடாதேயும்.
என்னை நினைத்துப் பாரும்.
    கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.
16 உமது செய்தி எனக்கு வந்தது.
    நான் உமது வார்த்தைகளை உண்டேன்.
உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று.
    நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன்.
உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
17 நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்
    ஒருபோதும் இருந்ததில்லை.
உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
    என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.
18 நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?
    என்று எனக்குப் புரியவில்லை.
    எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?
அல்லது குணப்படுத்த முடியவில்லை?
    என்பது எனக்குப் புரியவில்லை.
கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன்.
    நீர், ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர்.
    நீர், ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
19 பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.
    நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால்,
நீ எனக்கு சேவை செய்யலாம்.
    நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல்,
முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும்.
    யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
20 நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.
அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக,
    வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள்.
யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்.
    ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்.
    நான் உனக்கு உதவுவேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.
    அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள்.
    ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”
அழிவு நாள்
16 கர்த்தருடைய செய்தி எனக்கு வந்தது: 2 “எரேமியா, நீ திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இந்த இடத்தில் உனக்கு குமாரர்களோ, குமாரத்திகளோ இருக்க வேண்டாம்.”
3 கர்த்தர், யூதா நாட்டில் பிறந்த குமாரர்களையும் குமாரத்திகளையும்பற்றி இவ்வாறு சொன்னார். அப்பிள்ளைகளின் தாய்களைப்பற்றியும், தந்தைகளைப்பற்றியும் கர்த்தர் சொன்னது இதுதான்: 4 “அந்த ஜனங்கள் ஒரு பயங்கரமான மரணத்தை அடைவார்கள். அந்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். அவர்களை எவரும் புதைக்கமாட்டார்கள். அவர்களது உடல்கள் தரையில் எருவைப்போன்று கிடக்கும். அந்த ஜனங்கள் பகைவரின் வாளால் மரிப்பார்கள். அவர்கள் பஞ்சத்தால் மரிப்பார்கள். அவர்களது மரித்த உடல்கள், வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும்.”
5 எனவே கர்த்தர், “எரேமியா, மரண உணவு உண்ணும் வீட்டிற்குள் செல்லவேண்டாம். மரித்தவர்களுக்காக அழவும் உனது சோகத்தைக் காட்டவும் நீ போக வேண்டாம். நீ இவற்றை செய்ய வேண்டாம். ஏனென்றால், நான் எனது ஆசீர்வாதத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் யூதாவின் ஜனங்களிடம் இரக்கமாக இருக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 “யூதா நாட்டிலுள்ள முக்கிய ஜனங்களும் பொது ஜனங்களும் மரிப்பார்கள். அந்த ஜனங்களை எவரும் புதைக்கமாட்டார்கள், அவர்களுக்காக அழவும்மாட்டார்கள். அந்த ஜனங்களுக்காக வருத்தம் தெரிவிக்கும்படி எவரும் தம்மைத்தாமே வெட்டிக்கொள்ளவோ, தலையை மொட்டையடித்துக்கொள்ளவோமாட்டார்கள். 7 மரித்தவர்களுக்காக அழுகிறவர்களுக்கு எவரும் உணவு கொண்டு வரமாட்டார்கள். தம் தாயையோ தந்தையையோ இழந்தவர்களுக்கு எவரும் ஆறுதல் சொல்லமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகின்றவர்களுக்கு எவரும் குடிக்கவும் கொடுக்கமாட்டார்கள்.
8 “எரேமியா, விருந்து நடக்கும் வீடுகளுக்குள் நீ போகாதே. அந்த வீடுகளுக்குப் போய் உட்கார்ந்து உண்ணவோ குடிக்கவோ செய்யாதே. 9 நமது இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘களியாட்டு மனிதரின் சத்தத்தை விரைவில் நிறுத்துவேன். திருமண விருந்துகளில் எழுப்பப்படும் மகிழ்ச்சி ஒலிகளை விரைவில் நான் நிறுத்துவேன். உமது வாழ்நாளில் இவை நடைபெறும். நான் விரைவில் இவற்றைச் செய்வேன்.’
10 “எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் நீ இவற்றைக் கூறு. ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள், ‘கர்த்தர் எங்களுக்கு ஏன் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொன்னார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’ 11 நீ அந்த ஜனங்களிடம் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும், ‘உங்கள் முற்பிதாக்களால், பயங்கரமானவை உங்களுக்கு ஏற்படும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னைப் பின் பற்றுவதை விட்டு, அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அந்த அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டனர். உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு விலகினார்கள். எனது சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர். 12 ஆனால் நீங்களோ உங்கள் முற்பிதாக்களை விட மோசமான பாவம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். நீங்கள் விரும்புவதையே செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு கீழ்ப்படிகிறதில்லை. நீங்கள் செய்ய விரும்புவதை மட்டுமே செய்கிறீர்கள். 13 எனவே, நான் உங்களை இந்த நாட்டுக்கு வெளியே எறிவேன். உங்களை அயல் நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்துவேன். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், அறிந்திராத நாட்டிற்குப் போவீர்கள். அந்த நாட்டில் நீங்கள் விரும்பும் அந்நிய தெய்வங்களை இரவும் பகலும் சேவிப்பீர்கள். நான் உங்களுக்கு உதவியோ நன்மையோ செய்யமாட்டேன்.”
14 “ஜனங்கள் வாக்குறுதிச் செய்கிறார்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு, கர்த்தர் ஒருவரே எகிப்து நாட்டுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார்’ என்பார்கள். ஆனால் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்தச் செய்திகளை ஜனங்கள் சொல்லமாட்டார்கள், 15 ஜனங்கள் புதியவற்றைச் சொல்வார்கள். அவர்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு அவர் ஒருவரே வட நாடுகளுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார். அவர்களை அவர் அனுப்பியிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியே அழைத்து வந்தார்’ என்றனர். ஏன் ஜனங்கள் இவற்றைச் சொல்வார்கள்? ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன்.
16 “நான் விரைவில் பல மீன் பிடிப்பவர்களை இந்த நாட்டிற்கு வரும்படி அனுப்புவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த மீனவர்கள் யூதாவின் ஜனங்களைப் பிடிப்பார்கள். அது நிகழந்த பிறகு, இந்த நாட்டுக்கு சில வேட்டைக்காரர்களை அனுப்புவேன். அந்த வேட்டைக்காரர்கள் ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை பிளவுகளிலும், யூதா ஜனங்களை வேட்டையாடுவர். 17 அவர்கள் செய்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் நான் பார்க்கிறேன். யூதா ஜனங்கள் தாம் செய்கின்றவற்றை என்னிடம் மறைக்க முடியாது. அவர்களது பாவம் என்னிடம் மறைக்கப்படாமல் போகும். 18 நான் யூதா ஜனங்களுக்கு அவர்கள் செய்கின்றவற்றுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களது ஒவ்வொரு பாவத்திற்கும் நான் இருமடங்கு தண்டிப்பேன். நான் இதனைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் எனது நாட்டை அருவருப்பான விக்கிரகங்களால் ‘தீட்டு’ ஆக்கிவிட்டனர். நான் அந்த விக்கிரகங்களை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் எனது நாட்டை அந்த விக்கிரகங்களால் நிறைத்துவிட்டனர்.”
19 கர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்!
    நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம்.
உலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும்.
    அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர்.
அவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர்.
    ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள்.
20 ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா?
இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம்.
ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.
21 கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன்.
    இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன்.
பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள்.
    நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.
இதயத்தில் எழுதப்பட்ட குற்றம்
17 “யூதா ஜனங்களின் பாவம், அவர்களால்
    அழிக்க முடியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
    அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன.
    அந்தக் கல்தான் அவர்களது இதயம்.
அப்பாவங்கள் அவர்களது பலிபீடங்களில் உள்ள கொம்புகளில் வெட்டப்பட்டுள்ளன.
2 அவர்களின் பிள்ளைகள் அஷேரா தேவதைக்காக
    அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்களை நினைவுக்கொள்வார்கள்.
அவர்கள் அஷேராவிற்குச் சமர்பிக்கப்பட்ட மரத்தூண்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
    அவர்கள் பச்சை மரங்களுக்குக் கீழேயும், பாறைகளுக்கு மேலேயும் உள்ள பீடங்களை நினைத்துக்கொள்கிறார்கள்.
3 சிறந்த நாடுகளில் உள்ள மலைகளில் மேலே
    உள்ளவற்றை அவர்கள் நினைக்கிறார்கள்.
யூதாவின் ஜனங்களுக்கு பல கருவூலங்கள் உள்ளன.
    நான் மற்ற ஜனங்களுக்கு அவற்றைக் கொடுப்பேன்.
ஜனங்கள், உங்கள் நாட்டிலுள்ள அனைத்து மேடைகளையும் அழிப்பார்கள்.
    நீங்கள் அந்த இடங்களில் சிலைகளைத் தொழுதுகொண்டீர்கள், அது ஒரு பாவம்.
4 நான் கொடுத்த நாட்டை நீங்கள் இழப்பீர்கள்.
    உங்கள் பகைவர்கள் உங்களை சிறைபிடிக்க நான் அனுமதிப்பேன்.
நீங்கள் அறியாத தேசத்தில் அவர்களது அடிமைகளாக இருப்பீர்கள்.
    ஏனென்றால், நான் கோபத்தோடு இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பைப்போன்றது.
    நீங்கள் என்றென்றும் எரிக்கப்படுவீர்கள்.”
ஜனங்களிடம் நம்பிக்கை மற்றும் தேவனிடம் நம்பிக்கை
5 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
    “மற்ற ஜனங்கள் மீது மட்டும் நம்பிக்கை வைக்கின்றவர்களுக்கு தீமை ஏற்படும்.
மற்ற ஜனங்களை பலத்துக்காகச் சார்ந்திருக்கிறவர்களுக்குத் தீமை ஏற்படும்.
    ஏனென்றால், அந்த ஜனங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்தினார்கள்.
6 அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே உள்ள புதரைப் போன்றவர்கள்.
    அப்புதர் ஜனங்களே வாழாத வனாந்தரத்திலே உள்ளது.
    அப்புதர் வெப்பமும் வறட்சியும் உள்ள பூமியில் உள்ளது.
அப்புதர் கெட்ட மண்ணில் உள்ளது.
    அப்புதர் தேவனால் தர முடிகிற நல்லவற்றைப்பற்றி அறியாதது.
7 ஆனால், கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்.
    ஏனென்றால், கர்த்தர் நம்பத்தகுந்தவர் என்பதை காட்டுவார்.
8 அந்த மனிதன் தண்ணீர்க்கரையில் நடப்பட்ட மரத்தைப்போன்ற பலத்தோடு இருப்பான்.
    அந்த மரம் தண்ணீரைக் கண்டுக்கொள்கிற வேர்களை உடையதாக இருக்கும்.
அந்த மரம் கோடைகாலம் வரும்போது உலர்ந்து போவதில்லை.
    அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும்.
மழைப் பெய்யாத ஆண்டுகளில் அது கவலைப்படுவதில்லை.
    அந்த மரம் எப்பொழுதும் பழங்களை உற்பத்தி செய்யும்.
9 “ஒருவனின் இருதயம் மிகவும் தந்திரமானது!
    இருதயம் மிகவும் சுகவீனம் அடையக் கூடும்.
    உண்மையில் எவரும் ஒருவனின் இருதயத்தை புரிந்துகொள்வதில்லை.
10 ஆனால், நானே கர்த்தர்.
    என்னால் ஒருவனின் இருதயத்தைப் பார்க்கமுடியும்.
நான் ஒருவனின் மனதை சோதிக்கமுடியும்.
    ஒவ்வொருவனிடமும் என்ன இருக்கிறது என்பதை என்னால் முடிவு செய்யமுடியும்.
    என்னால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சரியான கூலியைக் கொடுக்கமுடியும்.
11 சில நேரங்களில் ஒரு பறவை, தான் இடாத
    முட்டையைக் குஞ்சு பொரிக்க வைக்கும்.
ஏமாற்றி பொருள் சம்பாதிக்கிற ஒவ்வொருவனும்
    இப்பறவையைப் போன்றவன்.
அவனது வாழ்க்கை பாதியில் இருக்கும்போதே
    அவன் அப்பணத்தை இழப்பான்.
அவனது வாழ்வின் இறுதியில்,
    அவன் ஒரு முட்டாளாக இருந்தான் என்பது தெளிவாகும்.”
12 தொடக்கத்திலிருந்தே, தேவனுக்கு நமது ஆலயமே
    மகிமையான சிங்காசனமாக இருந்தது.
    இது மிக முக்கியமான இடமாகும்.
13 கர்த்தாவே, இஸ்ரவேலர்களின் நம்பிக்கையே நீர்தான்.
    கர்த்தாவே, நீர் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றைப் போன்றவர்.
ஒருவன் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தினால்
    அவன் இகழப்பட்டு அவனது வாழ்வு குறுகியதாக்கப்படும்.
எரேமியாவின் மூன்றாவது முறையீடு
14 கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்தினால்
    நான் உண்மையில் சுகமாவேன்.
என்னைக் காப்பாற்றும்,
    நான் உண்மையில் காப்பாற்றப்படுவேன்.
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
15 யூதாவின் ஜனங்கள் என்னிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்கிறார்கள்.
    அவர்கள் “எரேமியா, கர்த்தரிடமிருந்து வந்த செய்தி என்ன?
    அச்செய்தி எப்பொழுது நிறைவேறும்?” என்கின்றனர்.
16 கர்த்தாவே, நான் உம்மை விட்டு ஓடிப்போகவில்லை.
    நான் உம்மைப் பின்தொடர்ந்தேன்.
    நீர் விரும்புகிற மேய்ப்பனாக நான் இருந்தேன்.
ஒரு பயங்கரமான நாள் வருவதை நான் விரும்பவில்லை.
    கர்த்தாவே, நான் சொன்னவற்றை நீர் அறிவீர்.
    எல்லாம் நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.
17 கர்த்தாவே, என்னை அழித்து விடாதீர்.
    துன்பக் காலத்தில் நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
18 ஜனங்கள் என்னைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஜனங்களை அவமானப்படும்படி செய்யும்.
    என்னை மனந்தளரவிடாதீர்.
அந்த ஜனங்களை பயப்படச் செய்யும்.
    ஆனால் என்னை பயப்படச் செய்யாதிரும்.
எனது பகைவர்களுக்கு அந்தப் பயங்கரமான நாளை வரப்பண்ணும்.
    அவர்களை உடையும், அவர்களை மீண்டும் உடையும்.
ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தல்
19 கர்த்தர் என்னிடம் இவற்றைச் சொன்னார்: “எரேமியா, யூதாவின் ராஜாக்கள் வந்துபோகிற எருசலேமின் ஜனங்கள் வாசலுக்குப்போய் நில். எனது வார்த்தையை ஜனங்களிடம் கூறு. பிறகு எருசலேமின் மற்ற வாசல்களுக்கும் போ. அதே செயலைச் செய்.”
20 அந்த ஜனங்களிடம் சொல்: “கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள்! யூதாவின் ராஜாக்களே, கேளுங்கள்! யூதாவின் ஜனங்களே, கேளுங்கள்! இந்த வாசல்கள் வழியாக எருசலேமிற்குள் வருகின்ற ஜனங்களே, என்னை கவனியுங்கள்! 21 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிச் செல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஓய்வுநாளில் எருசலேமின் வாசல்கள் வழியாகச் சுமையைத் தூக்கிவராதீர்கள். 22 ஓய்வுநாளில் உங்கள் வீட்டுக்கு வெளியே சுமையைத் தூக்கி வராதீர்கள். அந்த நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். நீங்கள் ஓய்வுநாளை ஒரு பரிசுத்த நாளாக்க வேண்டும். நான் இதே கட்டளையை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்தேன். 23 ஆனால் உங்கள் முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் என் மீது கவனம் செலுத்தவில்லை. உங்கள் முற்பிதாக்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். நான் அவர்களைத் தண்டித்தேன். ஆனால் அது அவர்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் என்னை கவனிக்கவில்லை. 24 ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படிவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. ஓய்வு நாளில் நீங்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக சுமையைக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக்க வேண்டும். அந்நாளில் எவ்வித வேலையும் செய்யாமல் இருப்பதே ஓய்வுநாளை பரிசுத்தமான நாளாக வைப்பதாகும்.
25 “‘நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ராஜாக்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த ராஜாக்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்! 26 யூதாவின் நகரங்களில் இருந்து ஜனங்கள் எருசலேமிற்கு வருவார்கள். எருசலேமிற்கு அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்கள் வாழும் நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள். மேற்கு மலை அடிவாரங்களிலிருந்தும், மலை நாடுகளிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். நெகேவிலிருந்தும் ஜனங்கள் வருவார்கள். அந்த ஜனங்கள் எல்லோரும் தகன பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும், ஸ்தோத்திர பலிகளையும் கொண்டு வருவார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு அவர்கள் இந்தப் பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டு வருவார்கள்.
27 “‘ஆனால், நீங்கள் என்னை கவனிக்காமலும் அடிபணியாமலும் இருந்தால் பிறகு தீயவை நிகழும். ஓய்வுநாளில் நீங்கள் எருசலேமிற்குள் சுமைகளைக் கொண்டு வந்தால் பின் நீங்கள் அந்நாளைப் பரிசுத்தப்படுத்தவில்லை. எனவே, உங்களால் அணைக்க முடியாத ஒரு தீயை பற்றவைப்பேன். எருசலேமின் வாசலிலிருந்து அந்த நெருப்பு தொடங்கும். அது அரண்மனைகள்வரை பற்றி எரியும்.’”
2008 by World Bible Translation Center