Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 23-25

சட்டங்களை ஜனங்கள் கேட்கிறார்கள்

23 தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் ராஜா யோசியா அழைத்தான். பிறகு ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு ராஜா உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. ராஜா அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது.

ராஜா (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள்.

பிறகு ராஜா தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.

யூத ராஜா ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்.

யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான்.

பின் ராஜாவாகிய யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். 8-9 அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் ராஜா (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்).

10 தோப்பேத் இன்னோமின் மகனது பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடம். அங்கே ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பலிபீடத்தில் எரித்து மோளேகு என்ற பொய்த்தெய்வத்தை மகிமைப்படுத்தி வந்தனர். ராஜா இந்த இடத்தையும் ஜனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அழித்துப்போட்டான். 11 முன்பு, யூத ராஜா கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. ராஜா குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான்.

12 முன்பு, யூத ராஜாக்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான்.

13 முன்பு, சாலொமோன் ராஜா எருசலேம் அருகிலுள்ள நாசமலையின் அருகில் பொய்த் தெய்வங்களுக்கான மேடைகளை அமைத்தான். அவை மலையின் தென்புறத்தில் இருந்தன. சீதோனியர்களால் தொழுதுகொள்ளப்பட்ட அருவருப்புமிக்க அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவெருப்பு தெய்வமான காமோசிற்கும், அம்மோனியரின் அருவெருப்பு தெய்வமான மில்கோமுக்கும் மேடைகளை சாலொமோன் ராஜா அமைத்திருந்தான். ஆனால் யோசியா அவையனைத்தையும் அழித்துப் போட்டான். 14 அதோடு யோசியா ராஜா ஞாபகக் கற்களையும் அசெரா என்னும் பெண் தேவதையின் விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கினான். பின் மரித்துப்போனவர்களின் எலும்புகளை அவற்றின் மீது தூவினான்.

15 இவன் பெத்தேலில் உள்ள பலிபீடத்தையும் மேடையையும் உடைத்தெறிந்தான். இப்பலிபீடத்தை நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் என்பவன் ஏற்படுத்தியிருந்தான். இவனே இஸ்ரவேலர்களின் பாவத்திற்கு காரணமாக இருந்தான். இவன் அமைத்த பலிபீடம், மேடை ஆகிய இரண்டையும் யோசியா அழித்தான். அவன் பலிபீடக் கல்லை துண்டுத் துண்டாக உடைத்தெறிந்தான். பின் அவற்றைத் தூளாக்கினான். அசேரா விக்கிரகத் தூணையும் எரித்தான். 16 யோசிய திரும்பிபார்த்தபோது மலையின் மீது கல்லறைகளை கண்டான். அவன் ஆட்களை அனுப்பி அவற்றிலுள்ள எலும்புகளை எடுத்துவரச் செய்தான். இப்படி நடக்கும் என்று தீர்க்கதரிசி சொன்னபடியே அவைகளை அந்தப் பலிபீடத்தின் மேல் எரித்தான்.

பின் யோசியா சுற்றிப்பார்த்து தேவமனிதனின் கல்லறையைக் கண்டான்.

17 யோசியா, “நான் பார்க்கும் அந்த நினைவு சின்னம் என்ன?” என்று கேட்டான்.

நகர ஜனங்கள் அவனிடம், “இது யூதாவிலிருந்து வந்த ஒரு தேவமனிதரின் (தீர்க்கதரிசியின்) கல்லறை. பெத்தேல் என்னும் பலிபீடத்தில் நீ செய்தவற்றைப் பற்றி இவர் முன்னரே கூறியுள்ளார்” என்றனர்.

18 யோசியா, “அவரது கல்லறையை விட்டுவிடுங்கள். அவரது எலும்புகளை எடுக்கவேண்டாம்” என்று கூறினான். எனவே அவனது எலும்புகளை சமாரியாவிலிருந்து வெளியே வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு அவர்கள் விட்டுவிட்டனர்.

19 யோசியா சமாரியாவிலுள்ள பொய்த் தெய்வங்களின் மேடைகளையும் அழித்துப்போட்டான். இஸ்ரவேல் ராஜாக்கள் அவற்றைக் கட்டியிருந்தனர். இதனால் கர்த்தருக்குப் பெருங்கோபம் உண்டாகி இருந்தது. பெத்தேலில் உள்ளவற்றை அழித்தது போலவே, யோசியா இவற்றையும் அழித்துவிட்டான்.

20 சமாரியாவின் பொய்த் தெய்வங்களுக்குத் தொழுகைச்செய்த ஆசாரியர்கள் அனைவரையும் யோசியா கொன்றான். பலிபீடங்களைக் கவனித்த ஆசாரியர்களையும் கொன்றான். மனித எலும்புகளை பலி பீடத்தின் மேல் எரித்தான். இவ்வாறு தொழுகைக்குரிய இடங்கள் எல்லாவற்றையும் கறைப்படுத்தினான். பின் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றான்.

யூத மக்கள் பஸ்காவைக் கொண்டாடியது

21 யோசியா ராஜா ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான்.

22 நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் ராஜாக்களோ யூத ராஜாக்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. 23 யோசியாவின் 18வது ஆட்சியாண்டில் அவர்கள் எருசலேமில் கர்த்தருக்காக பஸ்கா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

24 யோசியா, இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஜனங்களால் தொழுதுகொண்டு வந்த சிறு தெய்வங்களையும் மற்ற மந்திரவாதிகளையும் குறிச்சொல்லுகிறவர்களையும் விக்கிரகங்களையும் அழித்துவிட்டான். இவன், அதனை இல்க்கியாவால் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படியவே இவ்வாறு நடந்துக்கொண்டான்.

25 யோசியாவைப்போன்ற ஒரு ராஜா இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த ராஜாவும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை.

26 ஆனாலும் கர்த்தர் யூத ஜனங்கள் மீது தான் கொண்டக் கோபத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. மனாசே செய்த அனைத்து செயல்களுக்காக கர்த்தர் அவர்கள் மீது இன்னமும் கோபங்கொண்டிருந்தார். 27 கர்த்தர், “நான் இந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலர்களை அகற்றிவிட்டேன். இதையே யூதர்களுக்கும் செய்வேன். அவர்களை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவேன். என்னால் எருசலேமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்குள்ள ஆலயத்தை நான் அழிப்பேன். ‘என் பெயர் அங்கு இருக்கவேண்டும்’ என்று நான் சொன்ன போது குறிபிட்டது இந்த இடத்தை தான்” என்றார்.

28 யோசியா செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

யோசியாவின் மரணம்

29 யோசியாவின் காலத்தில், எகிப்திய ராஜாவாகிய பார்வோன்நேகோ ஐபிராத்து ஆற்றுக்கு அசீரியாவின் ராஜாவுக்கு எதிராக போரிடச்சென்றான். யோசியா பார்வோனுக்கு எதிராகப் போரிடப்போனான். ஆனால் மெகிதோ என்ற இடத்தில் யோசியாவை பார்வோன்நேகோ கண்டதும் கொன்றுவிட்டான். 30 மரித்துப்போன யோசியாவின் உடலை அவனது வேலைக்காரர்கள் மெகிதோவிலிருந்து எருசலேமிற்குத் இரதத்தில் எடுத்துச் சென்றனர். அவனது சொந்தக் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.

பிறகு பொது ஜனங்கள் யோசியாவின் குமாரனான யோவாகாசை ராஜாவாக அபிஷேகம் செய்து அவனைப் புதிய ராஜாவாக்கினர்.

யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறான்

31 யோவாகாஸ் ராஜாவாகியபோது, அவனுக்கு 23 வயது. இவன் எருசலேமை மூன்று மாதங்கள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் குமாரத்தி ஆவாள். 32 தவறானவை என்று கர்த்தரால் சொல்லப்பட்டக் காரியங்களையே யோவாகாஸ் செய்துவந்தான். தன் முற்பிதாக்கள் செய்த அதேப் பாவங்களையே அவனும் செய்து வந்தான்.

33 பார்வோன் நேகோ, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் யோவாகாசைப் பிடித்துக்கட்டினான். இதனால் அவனால் எருசலேமை ஆள முடியவில்லை. பார்வோன் நேகோ யூதாவை வற்புறுத்தி 100 தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாக பெற்றான்.

34 பார்வோன் நேகோ யோவாகாசின் குமாரனான எலியாக்கீமை புதிய ராஜாவாக்கினான். எலியாக்கீம் தன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். பார்வோன் நேகோ எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். பார்வோன் யோவாகாசை எகிப்துக்கு கொண்டுபோனான். அங்கேயே அவன் மரணமடைந்தான். 35 யோயாக்கீம் பார்வோன் நேகோவிற்கு வெள்ளியும் பொன்னும் அபராதமாக செலுத்தி வந்தான். இவன் இந்த அபராதத்தை ஜனங்கள் மீது வரியாகச் சுமத்தினான். எனவே நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் பொன்னும் வெள்ளியும் கொடுக்க வேண்டிவந்தது. இவற்றைத் தொகுத்து அதை அவன் பார்வோன் நேகோவிற்கு செலுத்தினான்.

36 யோயாக்கீம் ராஜாவாகியபோது அவனுக்கு 25 வயது. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் செபுதாள் ஆகும். அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாமின் குமாரத்தி ஆவாள். 37 தவறானவையென்று கர்த்தரால் குறிக்கப்பட்ட காரியங்களையே அவனும் செய்து வந்தான். தன் முற்பிதாக்களைப் போலவே அதே செயல்களைச் செய்தான்.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவிற்கு வருகிறான்

24 அவனது காலத்தில், பாபிலோனை நேபுகாத் நேச்சார் என்பவன் அரசாண்டான். அவன் யூத நாட்டிற்கு வந்தான். மூன்றாண்டு காலத்திற்கு யோயாக்கீம் நேபுகாத்நேச்சார்க்கு பணிவிடைச் செய்தான். பிறகு நேபுகாத்நேச்சருக்கு எதிராகக் கலகம் செய்தான். யோயாக்கீமிற்கு எதிராகப் போரிடும் பொருட்டு பாபிலோனியர்களையும் ஆராமியர்களையும் மோவாபியர்களையும் அம்மோனியர்களையும் கர்த்தர் கூட்டம் கூட்டமாக அனுப்பிவைத்தார். யூதாவை அழிப்பதற்காக கர்த்தர் இவ்வாறு அனுப்பினார். இது கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் இவற்றைத் தம் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லியிருக்கிறார்.

யூதாவில் இவையெல்லாம் நடக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார். இவ்வாறு, அவன் யூதர்களை அவனது பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினான். மனாசே செய்த அனைத்து பாவங்களுக்காகவும் அவர் இதனைச் செய்தார். மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றான். அவர்களின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பினான். இத்தகைய பாவங்களை கர்த்தர் மன்னிக்காமலிருந்தார்.

யோயாக்கீம் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோயாக்கீம் மரித்தான். பிறகு அவன் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பின் இவனது குமாரனான யோயாக்கீன் என்பவன் புதிய ராஜா ஆனான்.

அதற்குப்பின் எகிப்தின் ராஜா தன் நாட்டிலிருந்து வரவில்லை. ஏனென்றால் எகிப்து ஆறுமுதல் ஐபிராத்து ஆறுவரையுள்ள எகிப்து ராஜாவுக்குரிய பகுதியைப் பாபிலோனிய ராஜா பிடித்துக் கொண்டான்.

நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றுகிறான்

யோயாக்கீன் அரசானானபோது அவனுக்கு 18 வயது ஆகும். இவன் எருசலேமில் 3 மாதங்கள் ஆண்டான். இவனது தாயின் பெயர் நெகுஸ்தாள் ஆகும். இவள் எருசலேமிலுள்ள எல்நாத்தானின் குமாரத்தி ஆவாள். தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே அவன் செய்தான். அவனுடைய தந்தை செய்த அனைத்து காரியங்களையும் அவனும் செய்தான்.

10 அக்காலத்தில், பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் அதிகாரிகள் எருசலேமிற்கு வந்து அதனை முற்றுகையிட்டனர். 11 பிறகு பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே அவனது வேலைக்காரர்கள் முற்றுகையிட்ட நகரத்திற்கு வந்தான். 12 யூத ராஜாவாகிய யோயாக்கீன் பாபிலோனிய ராஜாவை சந்திக்கச் சென்றான். அவனோடு அவனது தாய், அதிகாரிகள், தலைவர்கள் அலுவலர்கள் அனைவரும் சென்றனர். பின் பாபிலோனிய ராஜா யோயாக்கீனைச் சிறைபிடித்தான். இது நேபுகாத்நேச்சாரின் 8வது ஆட்சியாண்டில் நடந்தது.

13 நேபுகாத்நேச்சார், கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனையிலும் உள்ள கருவூலங்களில் உள்ளப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டுப் போனான். சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்தில் அமைத்திருந்த தங்கத் தட்டுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டான். இதுவும் கர்த்தர் சொன்னபடியே நடந்தது.

14 நேபுகாத்நேச்சார் எருசலேமிலுள்ள அனைவரையும் கைதுசெய்தான். தலைவர்களையும் செல்வர்களையும் கைது செய்தான். அவன் 10,000 ஜனங்களைக் கைதிகளாக்கி அழைத்துக்கொண்டு வந்தான். அவன் திறமைமிக்க வேலைக்காரர்களையும் கைவினைக்காரர்களையும் அழைத்துக்கொண்டுச் சென்றான். ஏழ்மையான சாதாரண பொது ஜனங்களைத் தவிர வேறுயாரையும் இவன் விட்டு வைக்கவில்லை. 15 நேபுகாத்நேச்சார் யோயாக்கீனைச் சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். அதோடு ராஜாவின் தாய், மனைவிமார்கள், அதிகாரிகள் மற்றும் தலைவர்களையும் கொண்டு சென்றான். இவர்களை அவன் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் கைதிகளாகவே அழைத்துக்கொண்டு போனான். 16 அதில் 7,000 வீரர்கள் இருந்தனர். இவ்வெல்லா வீரர்களையும் தகுதிமிக்க 1,000 திறமையுள்ள வேலைக்காரர்களையும் கைவினைக் கலைஞர்களையும் அழைத்துக் கொண்டு போனான். வீரர்கள் நன்கு பயிற்சி பெற்று போருக்குத் தயாராக இருந்தனர். பாபிலோன் ராஜா இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகவே கொண்டுசென்றான்.

சிதேக்கியா ராஜா

17 பாபிலோன் ராஜா மத்தனியா என்பவனை புதிய ராஜாவாக்கினான். அவன் யோயாக்கீனின் சிறிய தகப்பன் ஆவான். அவனது பெயரை சிதேக்கியா என மாற்றிவிட்டான். 18 சிதேக்கியா ராஜாவாகியபோது அவனுக்கு 21 வயது. அவன் 11 ஆண்டுகள் எருசலேமில் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவிலுள்ள எரேமியாவின் குமாரத்தி. 19 தவறானதென்று கர்த்தர் சொன்னவற்றையே அவனும் செய்துவந்தான். யோயாக்கீன் செய்த அனைத்து செயல்களையும் அவன் செய்தான். 20 எருசலேம் மற்றும் யூதா மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொண்டு அங்குள்ள ஜனங்களை அப்புறப்படுத்தினார்.

நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் ஆட்சியை முடித்தது

சிதேக்கியா பாபிலோன் ராஜாவுக்கு அடிபணிய மறுத்து அவனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.

25 எனவே, பாபிலோன் ராஜாவும், அவனது படைகளும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். இது சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் நடந்தது. நேபுகாத்நேச்சார் தன் படையை நிறுத்தி நகரத்திற்குள் யாரும் போகாமலும் வெளியேறாமலும் தடுத்துவிட்டான். பின் நகரத்தைச்சுற்றி கொத்தளச்சுவரைக் கட்டினான். யூத நாட்டின் ராஜாவாகிய சிதேக்கியாவின் 11ஆம் ஆட்சியாண்டுவரை நேபுகாத்நேச்சாரின் படை எருசலேமைச் சுற்றிலும் தங்கியிருந்தது. நகரத்தின் நிலையைப் பஞ்சம் மேலும் மோசமாக்கிற்று. நாலாவது மாதத்தின் ஒன்பதாம் நாளில் பொது ஜனங்களுக்கு உண்ண உணவே இல்லை என்ற நிலை வந்தது.

நேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி ராஜாவின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள். பாபிலோன் படை அவர்களைத் துரத்திப் போய் எரிகோ சமவெளியில் பிடித்துக்கொண்டது. சிதேக்கியாவை விட்டுவிட்டு அவனது வீரர்கள் தப்பித்துக்கொண்டனர்.

பாபிலோனியர்கள் சிதேக்கியாவைப் பிடித்து ரிப்லாவிலிருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைத் தண்டிக்க விரும்பினார்கள். சிதேக்கியாவின் குமாரர்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

எருசலேம் அழிக்கப்படுகிறது

நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாம் மாதத்தின் ஏழாவது நாளில் நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நெபுசராதான் பாபிலோனிய ராஜாவின் பெரிய படையின் ஆணை அதிகாரியாக இருந்தான். இவன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மணையையும் பெரிய வீடுகளையும் கட்டிடங்களையும் எரித்தான். 10 எருசலேமை சுற்றியிருந்த சுவரையும் நெபுசராதானின் பாபிலோனிய படை உடைத்து தள்ளியது. 11 பாபிலோனிய படையின் ஆணை அதிகாரியான நெபுசராதான் நகரத்தில் மேலும் மீதியாக இருந்த ஜனங்களையும் பாபிலோனிய ராஜாவுக்கு வெளியே விழுந்து அழிந்தவர்களையும்கூட (ஆள முயன்றவர்களையும்) இவன் கைது செய்து நாடு கடத்திவிட்டான். 12 அவன் மிக எளிய ஜனங்களையே அங்கே தங்கும்படிவிட்டான். இவர்கள் இங்குள்ள திராட்சைத் தோட்டங்களையும் பயிர்களையும் பார்த்துக்கொண்டனர்.

13 பாபிலேனிய வீரர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள வெண்கல தூண்களை எல்லாம் உடைத்துப்போட்டனர். அதோடு வெண்கல அடிப்பகுதிகளையும், வண்டிகள், தொட்டிகள் போன்றவற்றையும் உடைத்தனர். பின் அவற்றைப் பாபிலோனுக்கு எடுத்துச்சென்றனர். 14 பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர். 15 நெபுசராதானும் படைத்தலைவனும் சுத்தப் பொன்னிலும் வெள்ளியிலுமான தூபகலசங்களை எடுத்துக்கொண்டனர். 16-17 எனவே இவர்கள் எடுத்துக்கொண்டவை: இரண்டு தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 4 1/2 அடி உயரமுள்ள வெண்கலத்தலைப்பும் உடையவை. இவை வெண்கலத்தால் பின்னலும் மாதுளம் பழங்களுமான மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாய் இருந்தன. ஒரு பெரிய வெண்கலத்தொட்டி கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனால் செய்துவைக்கப்பட்ட வண்டிகள். இவ்வெண்கலத்தின் எடையானது அளந்து காணமுடியாத அளவிற்கு இருந்தது.

யூத ஜனங்கள் கைதிகளாதல்

18 நெபுசராதான், தலைமை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாயில் காப்பாளர் மூவரையும் ஆலயத்திலிருந்து கைப்பற்றினான்.

19 நகரத்திலிருந்து நெபுசராதான் படைக்குப் பொறுப்பான 1 அதிகாரியையும், நகரத்திலேயிருந்த 5 அரச ஆலோசகர்களையும், 1 படைத்தளபதியினுடைய செயலாளர். அவன்தான் பொது ஜனங்களின் ஜனத்தொகையை கணக்கெடுத்து அவர்களில் சிலரைப் படைவீரர்களாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த 1 படைத்தளபதியினுடைய செயலாளரையும், நகரத்தில் அகப்பட்ட 60 பேர்களையும் எடுத்துக்கொண்டான்.

20-21 பிறகு நெபுசராதான் அவர்கள் அனைவரையும் பாபிலோனுக்கு அழைத்துச் சென்று ரிப்லாவில் இருந்த பாபிலோனிய ராஜாவிடம் கொண்டு போனான். அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லா என்னும் இடத்தில் வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறே யூத ஜனங்களும் தங்கள் தேசத்திலிருந்து சிறைக்கு கொண்டுப்போகப்பட்டனர்.

யூத நாட்டின் ஆளுநரான கெதலியா

22 யூத நாட்டிலே சிலரை மட்டுமே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் விட்டு வைத்தான், அங்கு சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் குமாரனாகிய கெதலியா இருந்தான். யூத ஜனங்களுக்கு ஆளுநராக நெபுசராதான் கெதலியாவை ஆக்கினான்.

23 நெத்தானியாவின் குமாரனான இஸ்மவேலும், கரேயாவின் குமாரனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது குமாரன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர். 24 கெதலியா அவர்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். அவன், “பாபிலோனிய அதிகாரிகளுக்குப் பயப்படவேண்டாம். இங்கிருந்து அரசருக்கு சேவைச் செய்க. பிறகு உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்” என்றான்.

25 எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் குமாரன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான். 26 பிறகு படை அதிகாரிகளும் ஜனங்களும் எகிப்துக்கு ஓடிப்போனார்கள். அப்போது முக்கியமுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அனைவரும் ஓடிப்போனார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பாபிலோனியர்களிடம் பயம் அதிகம்.

27 பிறகு பாபிலோனின் ராஜாவாக ஏவில் மெரொதாக் ஆனான். இவன் யூத ராஜாவாகிய யோயாக்கீனை விடுதலை செய்தான். இது இவன் சிறைப்பட்ட 37வது ஆண்டு. தான் ஆட்சிக்கு வந்த 12வது மாதத்தின் 27வது நாளில் செய்தான். 28 ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற ராஜாக்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான். 29 யோயாக்கீன் கைதியின் ஆடை அணிவதை ராஜா தடுத்துவிட்டான். அவன் ராஜாவோடு சமமாக ஒரே மேஜையில் அமர்ந்து தனது மீதியான காலம் முழுவதும் உணவு உண்டான். 30 ஏவில்மெரொதாக், யோயாக்கீனுக்கு அவனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உணவளித்து வந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center