Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 11-13

தாவீது பத்சேபாளைச் சந்திக்கிறான்

11 வசந்த காலத்தில் ராஜாக்கள் போர் புரியப்போகும்போது தாவீது யோவாபையும் அதிகாரிகளையும் அனைத்து இஸ்ரவேலரையும் அம்மோனியரை அழிப்பதற்காக அனுப்பினான். யோவாபின் சேனை பகைவர்களின் தலைநகராகிய ரப்பாவைத் தாக்கிற்று.

ஆனால் தாவீது எருசலேமில் தங்கி விட்டான். சாயங்காலத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்தபோது குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் மிகுந்த அழகியாயிருந்தாள். உடனே தாவீது தனது அதிகாரிகளை அழைத்து அப்பெண் யாரென விசாரித்தான். ஒரு அதிகாரி, “அப்பெண், எலியாமின் குமாரத்தியாகிய பத்சேபாள், அவள் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி” என்றான்.

தாவீது பத்சேபாளைத் தன்னிடம் அழைத்து வருவதற்காக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதிடம் வந்தபோது தாவீது அவளோடு பாலின உறவுகொண்டான். அவள் தன் தீட்டுக்கழிய குளித்தப் பின்பு தன்னுடைய வீட்டிற்குச் சென்றாள். ஆனால் பத்சேபாள் கருவுற்றாள். அதனை தாவீதுக்குச் சொல்லியனுப்பி, “நான் கருவுற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தாள்.

தாவீது தன் பாவத்தை மறைக்க முயலுவது

தாவீது யோவாபுக்கு, “ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு” என்று சொல்லியனுப்பினான்.

எனவே யோவாப் உரியாவை தாவீதிடம் அனுப்பினான். உரியா தாவீதிடம் வந்தான். தாவீது உரியாவிடம், “யோவாப் நலமா, வீரர்கள் நலமா, யுத்தம் எப்படி நடக்கிறது?” என்று விசாரித்தான். பின்பு தாவீது உரியாவை நோக்கி, “நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்” என்றான்.

ராஜாவின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். ராஜாவும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான். ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே ராஜாவின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான். 10 காவலர்கள் தாவீதை நோக்கி, “உரியா வீட்டிற்குப் போகவில்லை” என்றனர்.

தாவீது உரியாவிடம், “நீ நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறாய் அல்லவா? ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான்.

11 உரியா தாவீதை நோக்கி, “பரிசுத்தப் பெட்டியும், இஸ்ரவேல் யூதாவின் வீரர்களும் கூடாரங்களில் தங்கியுள்ளனர். எனது ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவருடைய (தாவீதின்) அதிகாரிகளும் வெளியே முகாமிட்டுத் தங்கி இருக்கின்றனர். எனவே வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து மனைவியோடு உறவு கொள்வது எனக்கு முறையன்று” என்றான்.

12 தாவீது உரியாவிடம், “நீ இன்று இங்கே தங்கியிரு. நாளை உன்னைப் போருக்கு அனுப்புகிறேன்” என்றான்.

உரியா மறுநாள் காலைவரை எருசலேமில் தங்கியிருந்தான். 13 அப்போது தாவீது தன்னை வந்து பார்க்கும்படி உரியாவுக்குச் சொல்லியனுப்பினான். உரியா தாவீதுடன் உண்டு குடித்தான். தாவீது உரியாவைக் குடிபோதையில் மூழ்கும்படிச் செய்தான். அப்போதும் உரியா வீட்டிற்குப் போகவில்லை. பதிலாக ராஜாவின் பணியாட்களோடு வீட்டிற்கு வெளியே உரியா தூங்கச் சென்றான்.

தாவீது உரியாவின் மரணத்திற்கு திட்டமிடுகிறான்

14 மறுநாள், காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதை உரியாவிடம் கொடுத்து அனுப்பினான். 15 கடிதத்தில் தாவீது, “உரியாவைக் கடும் போர் நடக்கும் யுத்தமுனையில் தனித்து நிறுத்து. போரில் அவன் கொல்லப்படட்டும்” என்றான்.

16 யோவாப் பலசாலிகளான அம்மோனியர் இருக்கும் இடத்தைக் கவனித்தான். உரியாவை அங்கு அனுப்பினான். 17 ரப்பா நகரத்தின் ஆட்கள் யோவாபை எதிர்த்து போரிட வந்தனர். அப்போது தாவீதின் ஆட்களில் சிலர் கொல்லப்பட்டனர். ஏத்தியனாகிய உரியாவும் அவர்களில் ஒருவன்.

18 யுத்தத்தில் நிகழ்ந்தவற்றைக் குறித்து யோவாப் ஒரு குறிப்பு எழுதி தாவீதுக்கு அனுப்பினான். 19 போரில் நடந்தவற்றை தாவீது ராஜாவுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான். 20 “ராஜா கோபமடையக்கூடும், ‘யோவாபின் படை போரிடுவதற்கு நகரை மிகவும் நெருங்கியதேன்?’ என்று ராஜா கேட்கக் கூடும். அம்புகளை எய்யக்கூடிய ஆட்கள் நகர மதில்களில் அமர்ந்திருப்பார்கள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். 21 எருப்சேத்தின் குமாரனாகிய அபிமெலேக்கை ஒரு பெண் கொன்றாள் என்பதை அவன் நிச்சயமாக அறிவான். அது தேபேசில் நடந்தது. அப்பெண் நகர மதிலில் அமர்ந்திருந்து அரைக்கிற கல்லின் மேல்பாகத்தை அபிமெலேக்கின் மேல் எறிந்தாள். எனவே, ‘ஏன் யோவாப் மதிலுக்கு மிக அருகே சென்றான்?’ என்றும் கேட்கக் கூடும். தாவீது ராஜா இவ்வாறு கூறினால் அவனிடம் இச்செய்தியைக் கூறவேண்டும்: ‘உங்கள் அதிகாரிகளில் ஏத்தியனான உரியாவும் மரித்துவிட்டான்’” என்றான்.

22 செய்தியாளன் தாவீதிடம் சென்று யோவாப் கூறியவற்றையெல்லாம் சொன்னான். 23 அவன் தாவீதிடம், “அம்மோனியர் களத்தில் எங்களை எதிர்த்தார்கள். நாங்கள் போரிட்டு அவர்களை நகரவாயில் வரைக்கும் துரத்தினோம். 24 அப்போது நகரமதிலிலிருந்த ஆட்கள் உங்கள் அதிகாரிகள் மேல் அம்புகளை எய்தார்கள். உமது சில அதிகாரிகள் அதில் மரித்தனர். அவர்களில் ஏத்தியனாகிய உரியாவும் மரித்தான்” என்றான்.

25 தாவீது அத்தூதுவனிடம், “யோவாபுக்கு இச்செய்தியைத் தெரிவி: ‘இதைக் குறித்து மிகவும் கலங்காதே, ஒரு வாள் ஒருவனை மட்டுமல்ல, அடுத்தவனையும் கொல்லக் கூடும். ரப்பாவின் மீது தாக்குதலைப் பலப்படுத்து. நீ வெற்றி பெறுவாய்’ இந்த வார்த்தைகளால் யோவாபுக்கு உற்சாகமூட்டு” என்று சொல்லியனுப்பினான்.

தாவீது பத்சேபாளை மணந்துகொள்கிறான்

26 தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள், 27 அவளது துக்க காலம் முடிந்தபிறகு, தாவீது அவளைத் தனது வீட்டிற்கு அழைத்து வரும்படியாக ஆட்களை அனுப்பினான். அவள் தாவீதின் மனைவியானாள். அவள் தாவீதுக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். ஆனால் தாவீது செய்த இந்த தீமையை கர்த்தர் விரும்பவில்லை.

தாவீதிடம் நாத்தான் பேசுகிறான்

12 கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு குமாரத்தியைப் போல இருந்தது.

“அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான்.

தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.

நாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல்

அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். 10 எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்.’

11 “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! 12 நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக[a] பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.

13 அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான்.

நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். 14 ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் குமாரன் மரிப்பான்” என்றான்.

தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த குமாரனின் மரணம்

15 பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார். 16 தாவீது தேவனிடம் குழந்தையின் பொருட்டு வேண்டினான். தாவீது உண்ணவோ, குடிக்கவோ மறுத்தான். வீட்டிற்குள் சென்று அங்கேயே இருந்தான். இரவு முழுவதும் தரையில் கிடந்தான்.

17 தாவீதின் குடும்பத்திலுள்ள மூப்பர்கள் வந்து தரையிலிருந்து அவனை எழுப்ப முயன்றனர். ஆனால் தாவீதோ எழுந்திருக்க மறுத்தான். அந்த மூப்பர்களுடன் அமர்ந்து உண்ண மறுத்தான். 18 ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.

19 ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர்.

20 அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.

21 தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர்.

22 தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும்? கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். 23 இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான்.

சாலொமோன் பிறப்பு

24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார். 25 கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.

தாவீது ரப்பாவைக் கைப்பற்றுகிறான்

26 ரப்பா அம்மோனியாவின் தலைநகரமாயிருந்தது. அம்மோனியரின் ரப்பாவுக்கு எதிராக யோவாப் போரிட்டான். அவன் அந்நகரைக் கைப்பற்றினான். 27 யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்தேன். நீர்நிலைகளின் நகரத்தை நான் கைப்பற்றினேன். 28 இப்போது பிறரையும் அழைத்து வந்து இந்நகரைத் (ரப்பாவை) தாக்குங்கள். நான் கைப்பற்றும் முன்பு இந்நகரைக் கைப்பற்றுங்கள். நான் இந்நகரைக் கைப்பற்றினால் அது என் பெயரால் அழைக்கப்படும்” என்று கூறினான்.

29 பின்பு தாவீது எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரப்பாவுக்குப் போனான். அவன் ரப்பாவுக்கு எதிராகப் போர்செய்து அந்நகரைக் கைப்பற்றினான். 30 அந்த ராஜாவின் தலையிலிருந்த கிரீடத்தை[b] தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.

31 ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

அம்னோனும் தாமாரும்

13 தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள குமாரன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு குமாரனாகிய அம்னோன் தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.

சிமியாவின் குமாரனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ ராஜாவின் குமாரன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான்.

அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.

யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.

அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது ராஜா அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது ராஜாவிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.

தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள்.

எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.

அம்னோன் தாமாரைக் கற்பழித்தல்

10 அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான்.

எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். 11 அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான்.

12 தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! 13 நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, ராஜாவோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள்.

14 ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். 15 பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான்.

16 தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள்.

ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். 17 அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான்.

18 அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான்.

தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். ராஜாவின் கன்னிப் பெண்கள் (குமாரத்திகள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. 19 தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

20 அப்போது தாமாரின் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “நீ உனது சகோதரன் அம்னோனிடம் சென்றாயா? அவன் உன்னைத் துன்புறுத்தினானா? அமைதியாக இரு, அம்னோன் உனது சகோதரன். நாங்கள் இது குறித்து கவனித்துக்கொள்வோம். அதிகமாக உன் மனதை வருத்தாதே” என்றான். தாமார் எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக அப்சலோமின் வீட்டில் தங்கும்படி சென்றாள்.

21 தாவீது ராஜா இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான். 22 அப்சலோம் அம்னோனை வெறுத்தான். அப்சலோம் அம்னோனிடம் நல்லதோ கெட்டதோ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்ததால், அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.

அப்சலோம் பழிவாங்குதல்

23 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்சலோமின் ஆடுகளிலிருந்து உரோமத்தைக் கத்தரிக்க பாகால்சோரிலிருந்து சிலரை வரவழைத்தான். அதைப் பார்ப்பதற்கென்று ராஜாவின் எல்லாப் பிள்ளைகளையும் அப்சலோம் அழைத்தான். 24 அப்சலோம் ராஜாவிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான்.

25 தாவீது ராஜா அப்சலோமிடம், “இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்” என்றான்.

தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை, ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான்.

26 அப்சலோம், “நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்” என்றான்.

தாவீது ராஜா அப்சலோமிடம், “அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?” என்று கேட்டான்.

27 அப்சலோம் தாவீதை கெஞ்சி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், ராஜாவின் மற்ற குமாரர்களும் அப்சலோமோடு சென்றனர்.

அம்னோன் கொலைச் செய்யப்படுகிறான்

28 பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.

29 ஆகையால் அப்சலோமின் இளம் வீரர்கள் அவன் கூறியபடியே செய்தார்கள். அவர்கள் அம்னோனைக் கொன்றார்கள். ஆனால் தாவீதின் பிற குமாரர்கள் தப்பிப் பிழைத்தார்கள். ஒவ்வொரு குமாரனும் தன் கோவேறு கழுதையின் மேலேறித் தப்பிச் சென்றான்.

தாவீதுக்கு அம்னோனின் மரணச் செய்தி

30 ராஜாவின் குமாரர்கள் தங்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை தாவீது ராஜா முந்திக் கேள்விப்பட்டான். ஆனால் அவனறிந்தச் செய்தி, “ராஜாவின் எல்லா குமாரர்களையும் அப்சலோம் கொன்றுவிட்டான். ஒருவன் கூட உயிரோடு விடப்படவில்லை” என்பதாகும்.

31 தாவீது ராஜா தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர்.

32 ஆனால் தாவீதின் சகோதரனும், சிமியாவின் மகனுமாகிய யோனதாப், “ராஜாவின் எல்லா குமாரர்களும் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்! அம்னோன் மட்டுமே மரித்தான். அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்ததிலிருந்து அப்சலோம் இதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். 33 எனது ஆண்டவனாகிய ராஜாவே, உங்கள் எல்லா குமாரர்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான்.

34 அப்சலோம் ஓடிப்போய்விட்டான். நகரகோட்டைச் சுவரின் மீது ஒரு காவலாள் நின்றுக்கொண்டிருந்தான். மலை மேட்டிலிருந்து பலர் வந்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். 35 எனவே யோனதாப் தாவீது ராஜாவை நோக்கி, “பாருங்கள், நான் சொன்னது சரியே! ராஜாவின் குமாரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

36 யோனதாப் அவ்வாறு கூறி முடித்ததும், ராஜாவின் குமாரர்கள் வந்து சேந்தனர். அவர்கள் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தனர். தாவீதும் அவனது அதிகாரிகளும் அழ ஆரம்பித்தனர். அவர்கள் மிகவும் புலம்பி அழுதனர். 37 தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான்.

அப்சலோம் கேசூருக்குத் தப்பிச் செல்லுதல்

அப்சலோம் அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவிடம் ஓடிப் போனான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39 தாவீது ராஜா அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center