Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 24-27

24 “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்பு அவளிடத்தில் ஏதோ இரகசியமான காரியத்தைக் கண்டு, அதனால் அவள் மீது விருப்பமில்லாதவன் ஆகக்கூடும். அவன் அவளோடு மகிழ்ச்சியாய் இருக்கவில்லையென்றால், விவாகரத்து எழுதிக்கொடுத்து அவளைத் தன் வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும். அவள் அவனது வீட்டைவிட்டுப் போனபின்பு வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம். 3-4 ஆனால் அவளின் அந்த புதிய கணவனும் அவளை விரும்பாது, மீண்டும் அனுப்பிவிட்டால், அவனும் அவளுக்கு விவாகரத்து எழுதிக்கொடுக்கவேண்டும். அல்லது அவன் மரித்துப் போக நேரிட்டால், அதன் பின்பு அவளின் முதல் கணவன் அவளை மீண்டும் மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அவள் அவனுக்கு அசுத்தமானவளாகிவிட்டவள். அப்படி அவன் அவளை மீண்டும் மணந்துகொள்வான் என்றால், அவன் கர்த்தர் வெறுக்கின்ற காரியங்களைச் செய்கின்றான் என்பதாகும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த தேசத்தில் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது.

“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் திருமணம் செய்திருந்தால், அவன் தரைப் படையில் சேவை செய்யப் புறப்பட்டு செல்லவேண்டாம். அதுமட்டுமின்றி வேறு எந்த சிறப்புப் பணியிலும் அவன் ஈடுப்படக் கூடாது. அவன் ஓராண்டிற்குத் தன் வீட்டில் தான் விரும்பியபடி இருந்து, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும்.

“நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்.

“ஒருவன் தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேல் சகோதரன் ஒருவனை கடத்திச் சென்று அவனை அடிமையாக விற்று ஆதாயம் தேடினால், அந்த ஆட்களைக் கடத்தும் திருடனைக் கொன்றுவிட வேண்டும். அவ்வாறாக இந்தத் தீமையை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.

“நீங்கள் தொழுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளானால் லேவியராகிய ஆசாரியர்கள் உங்களுக்கு சொல்வதைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். இதற்காக நான் ஆசாரியரிடம் கொடுத்த கட்டளையின்படியே நீங்கள் செய்ய எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறி புறப்பட்டு வருகின்ற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.

10 “நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம். 11 வெளியே நின்றுவிடுங்கள். பின் அவன் நீங்கள் கொடுத்த கடனுக்கான அடமானத்தை வெளியில் வந்து தருவான். 12 ஒருவேளை அவன் ஏழையாக இருந்தால், (அவன் போர்த்திக்கொள்ள வைத்திருந்த ஆடைகளை கொடுக்க முன் வந்தால்), நீங்கள் அவற்றை இரவு முழுவதும் வைத்துக்கொள்ளாதீர்கள். 13 நீங்கள் அவற்றை ஒவ்வொரு நாள் மாலையிலும் அவனிடம் கொடுத்துவிட வேண்டும். அது அவன் தூக்கத்திற்கு அவசியமானதாகும். அவன் உங்களை ஆசீர்வதிப்பான். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு இத்தகைய நல்ல செயல் உன் வாழ்வின் நியாயத்தை ஏற்கச் செய்திடும்.

14 “நீங்கள் உங்களிடம் காண்கின்ற ஏழை எளிய கூலிக்காரனை வஞ்சனை செய்யக் கூடாது. உங்கள் நகரங்களில் வசிக்கின்ற அந்நியர்களிடமும் அல்லது உங்களது இஸ்ரவேல் சகோதரர்களிடமும் இத்தகைய வஞ்சனை செயல்களைச் செய்யாதீர்கள். 15 அவர்களது ஊதியத்தை ஒவ்வொரு நாள் சாயங்காலத்திலும் கொடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவன் அந்த சம்பளத்தையே எதிர்ப்பார்த்து வாழ்கின்ற ஏழையாக இருக்கின்றான். நீங்கள் அப்படி அவனுக்கு கொடுக்கவில்லையென்றால் அவன் கர்த்தரிடம் உங்களுக்கு எதிராக முறையிடுவான். நீங்கள் பாவம் செய்தவராகிவிடுவீர்கள்.

16 “பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.

17 “உங்களைச் சார்ந்துள்ள அந்நியர்களையும், அநாதைகளையும், நியாயமாகவே நடத்துவதில் உறுதிகொண்டு இருக்க வேண்டும். விதவைகளின் ஆடைகள் துணிமணிகளை அடமானமாக ஒருபோதும் வாங்கிகொள்ளக்கூடாது. 18 எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.

19 “நீங்கள் உங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்து எடுத்து வரும்போது கொஞ்சம் தானியத்தை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்கள் என்றால் அவற்றை எடுக்க நீங்கள் திரும்பிச் செல்லக்கூடாது. அவை அந்நியர்களுக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் இருக்கட்டும். கொஞ்சம் தானியத்தை அவர்களுக்காக அங்கேயேவிட்டு வந்தால், உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பார். 20 நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 21 நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டங்களில் திராட்சைப் பழங்களைப் பறித்து சேர்த்த பின்பு தப்பிக்கிடக்கும் பழங்களைப் பறிப்பதற்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டாம். அந்தத் திராட்சைப் பழங்கள் உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக. 22 நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

25 “இருவருக்குள் வாக்குவாதம் முற்றி அதனால், அவர்கள் தங்கள் வழக்கைத் தீர்க்க நீதிமன்றம் வந்தால் நீதிபதிகள் அவ்விருவரில் யார் நிரபராதி? யார் குற்றவாளி? என்று முடிவு செய்வர். குற்றவாளி சாட்டையால் அடிக்கப்பட வேண்டியவன் என நீதிபதி முடிவு செய்தால், நீதிபதி அக்குற்றவாளியை கீழே முகம் குப்புறப் படுக்கச்செய்து வேறு ஒருவரை வைத்து தம்முன்னால் அவனை அடிக்கச்செய்வார். அந்த அடிகளின் எண்ணிக்கை அவனது குற்றத்திற்கேற்ப அமையும். நாற்பது அடிகளுக்குமேல் அவனை அடிக்க கூடாது. அவ்வாறு நாற்பது அடிகளுக்குமேல் அடித்தால், அவனுடைய உயிர் உங்களுக்கு முக்கியமல்ல என்பது வெளிப்படும். எனவே, நாற்பது அடிகளுக்கு மேல் ஒருவனை அடிக்காதீர்கள்.

“தானியக்களத்தில் போரடிக்கிற ஒரு மாட்டை, அது தின்னாதபடி அதன் வாயைக் கட்டாதீர்கள்.

“இரு சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்துவர, அதில் ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாது மரித்துவிடுவான் என்றால், மரித்தவனின் மனைவியை அந்தக் குடும்பத்தைவிட்டு வெளியே இருக்கிற வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்கக் கூடாது. அவளது கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை, அவளது கணவனின் சகோதரர் அவளுக்குச் செய்ய வேண்டும். பின் அவர்களது முதல் குழந்தைக்கு மரித்த சகோதரனின் பெயரை வைத்து, மரித்தவனின் பெயர் இஸ்ரவேலை விட்டு அழியாதபடி காத்திடவேண்டும். ஆனால் அவன் அவனது சகோதரனின் மனைவியைத் தன் மனைவியாக எடுக்க விரும்பவில்லை என்றால், பின் அவள் ஊர் கூடும் பஞ்சாயத்திற்குச் சென்று ஊர்த் தலைவர்களிடம், ‘என் கணவனின் சகோதரர் அவரது சகோதரரின் பெயர் இஸ்ரவேலில் நிலைத்து நிற்கச் செய்ய மறுக்கிறார். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு இவர் செய்யவில்லை’ என்று முறையிடவேண்டும். பின் ஊர்த் தலைவர்கள் அவனை அழைத்துப் பேசுவார்கள். அதற்கு அவன், ‘நான் அவளை மனைவியாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று பிடிவாதமாக் கூறினால், பின் அவனது சகோதரன் மனைவி ஊர்த் தலைவர்கள் எதிரில் அவனருகில் வந்து, அவனது பாதரட்சைகளை அவன் கால்களிலிருந்து கழற்றி, பின் அவன் முகத்தில் துப்புவாள். அவள், ‘தன் சகோதரன் மனைவியை ஏற்று அவன் குடும்பத்தைக் கட்டிக்காக்கத் தவறியவனுக்கு இப்படியே செய்யவேண்டும்’ என்று கூறவேண்டும். 10 பின் இஸ்ரவேலில் இப்படிப்பட்டவனின் வீடு, ‘செருப்பு கழற்றிப் போடப்பட்டவன் வீடு’ என்று அழைக்கப்படும்.

11 “இருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஒருவனது மனைவி தன் கணவனை அடிக்கின்றவனிடமிருந்து அவனைக் காப்பாற்ற நினைத்து அங்கு வந்து தன் கையை நீட்டி அடிக்கிறவனின் அந்தரங்க உறுப்பை நசுக்கி இழுக்கக்கூடாது. 12 அவள் இப்படிச் செய்தால், அவள் கையைத் துண்டித்துவிட வேண்டும். அவளிடம் இரக்கம் காட்டாதீர்கள்.

13 “ஏமாற்றும் நோக்கத்துடன் ஜனங்களை ஏமாற்ற கூடுதலான அல்லது குறைவான எடைக் கற்களைப் பயன்படுத்தாதீர்கள். 14 உங்கள் வீடுகளில் அதிகமான அல்லது குறைவான அளவுக் கருவிகளை வைத்திருக்காதீர்கள். 15 சரியானதாகவும் பிழையற்றதாகவும் உள்ள எடைக்கற்களையும், அளவு கருவிகளையுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். அப்போது நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீண்ட காலம் வாழலாம். 16 உங்கள் தேவனாகிய கர்த்தர், ஏமாற்றும் எண்ணத்துடன் தவறான எடைக்கற்களையும், அளவுக் கருவிகளையும் பயன்படுத்துபவர்களை வெறுக்கின்றார். ஆம், தேவன் தவறு செய்கின்ற அனைவரையும் வெறுக்கின்றார்.

அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும்

17 “எகிப்திலிருந்து நீங்கள் வருகின்ற வழியில் அமலேக்கிய ஜனங்கள் உங்களுக்கு செய்ததை நினைத்துப் பாருங்கள். 18 அந்த அமலேக்கிய ஜனங்கள் நமது தேவனை மதிக்காமல், நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் இருந்தபொழுது உங்களைத் தாக்கினார்கள். அவர்கள் உங்கள் ஜனங்களில் மெதுவாக எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்தவர்களைத் தாக்கி வெட்டிக் கொன்றார்கள். 19 அதனால் நீங்கள் இந்த அமலேக்கியர்களின் நினைவே இந்த உலகத்தில் இருக்காமல் அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற இந்த தேசத்தில், உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் எதிரிகளை எல்லாம் அழித்து உங்களை இளைப்பாறச் செய்கையில், அமலேக்கியர்களை அழித்துவிட வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்!

முதல் அறுவடை

26 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடிகொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள். கர்த்தர் உங்களுக்கு வழங்கிய நிலத்தில் விளைந்தவற்றை நீங்கள் அறுவடை செய்யும்போது, உங்களின் விளைச்சலின் முதல் பலனை கூடைகளில் எடுத்து வைத்துவிட வேண்டும். பின் நீங்கள் அறுவடை செய்ததின் முதல் பங்கை எடுத்துக்கொண்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த அவரது ஆலயத்திற்கு கொண்டுசென்று, அங்கே ஆலய சேவையில் இருக்கின்ற ஆசாரியரிடம்: ‘கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு ஒரு தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டார். இன்று தேவனாகிய கர்த்தரிடத்தில், நான் அந்தத் தேசத்திற்கு வந்து விட்டேன் என்று அறிக்கையிடுகிறேன்’ என்று கூறு.

“பின் அந்த ஆசாரியன் உன்னிடமிருந்து அந்தக் கூடையை எடுத்து கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பு வைப்பான். பின் அவ்விடத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு நீங்கள்: ‘அலைந்து திரிந்த அரேமியரான எனது முற்பிதாக்கள் எகிப்துக்குச் சென்று அங்கு தங்கினார்கள். செல்லும்போது கொஞ்சம் ஜனங்களே அவன் குடும்பத்தினராய் இருந்தனர். ஆனால் எகிப்தில் அவர்கள் பெரிய ஜனமாக பெருகினார்கள். வலிமை வாய்ந்த ஜனமாக அதிக ஜனங்களை கொண்டவர்களாக இருந்தனர். எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். பின் நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தோம். அவர்களைப்பற்றி முறையீடு செய்தோம். கர்த்தர் நாங்கள் கூறியவற்றைக் கேட்டார். எங்களது இன்னல்களையும், கடின உழைப்பையும், நாங்கள் அடைந்த வருத்தங்களையும் கர்த்தர் பார்த்தார். பின் கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைத் தனது மிகுந்த ஆற்றலாலும், பலத்தினாலும் மீட்டுக்கொண்டு வந்தார். அவர் மிகுந்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பயன்படுத்தினார். வியக்கத்தக்க நிகழ்ச்சிகளைச் செய்தார். அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார். 10 இப்போதும் இதோ கர்த்தாவே நீர் எங்களுக்குத் தந்த தேசத்திலிருந்து நாங்கள் பெற்ற முதல் அறுவடையின் பலனைக் கொண்டு வந்துள்ளோம்’ என்று சொல்ல வேண்டும்.

“பின் நீங்கள் அந்த அறுவடையின் பலனை உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு வைத்து தாழ்ந்து பணிந்து அவரை ஆராதிக்க வேண்டும். 11 பின் நீங்கள் சேர்ந்து உண்டு மகிழ்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தமும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நீங்கள் அந்த நன்மைகளில் எல்லாம் லேவியர்களுக்கும் மற்றும் உங்களைச் சார்ந்து வாழ்கின்ற அந்நியர்களுக்கும் பங்களிக்க வேண்டும்.

12 “ஒவ்வொரு மூன்றாவது ஆண்டும் பத்தில் ஒரு பங்கைச் செலுத்தும் ஆண்டாக இருக்கவேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் அறுவடைப் பலனில் பத்திலொரு பங்கை லேவியருக்கும், உங்கள் நாட்டில் வாழும் அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் கொடுக்க வேண்டும். பின் ஒவ்வொரு நகரத்திலும் அந்த ஜனங்கள் தாராளமாக, திருப்தியாக உண்டு மகிழ்வார்கள். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம், ‘கர்த்தாவே, நான் எனது வீட்டிலிருந்து எனது அறுவடைப் பலனின் பரிசுத்த பங்கு ஒன்றை வெளியே எடுத்துவந்து லேவியருக்கும், அயல் நாட்டு குடிகளுக்கும், அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுத்துள்ளேன். நீர் எனக்குத் தந்த எல்லா கட்டளைகளையும் நான் பின்பற்றியுள்ளேன். நான் உமது எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்ததில்லை. அவற்றை மறந்ததுமில்லை. 14 நான் துக்கமாயிருந்தபோது அதில் எதையும் உண்ணவில்லை. நான் சுத்தமில்லாதவனாக இருந்தபோது அவற்றை சேகரிக்கவில்லை. நான் மரித்தவர்களுக்காக அதிலிருந்து எந்த உணவையும் செலுத்தவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்து இருந்தேன். என் தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் எல்லா செயல்களையும் செய்துள்ளேன். 15 தேவனே பரலோகத்தில் உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து என்னைப் பாரும். உமது இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதியும். நீர் எங்களுக்குக் கொடுத்த தேசத்தை ஆசீர்வதிப்பீராக. எங்கள் முற்பிதாக்களிடம் ஆணையிட்டபடி எல்லா வளங்களும் கொண்ட பாலும், தேனும் ஓடக் கூடிய நீர் தந்த இந்த தேசத்தை ஆசீர்வதியும்’ என்று கூறுவீர்களாக.

தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்

16 “இந்த எல்லாச் சட்டங்களுக்கும், விதிகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய, உங்கள் தேவனாகிய கர்த்தர் இன்று உங்களுக்குக் கட்டளையிடுகின்றார். நீங்கள் உங்கள் ஆத்ம திருப்தியுடனும், முழு மனதோடும், அவற்றைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாய் இருங்கள்! 17 இன்று நீங்கள் கர்த்தரே உங்கள் தேவன் என்று சொல்லியிருக்கிறீர்கள்! தேவன் விரும்பிய நெறிப்படியே நீங்கள் வாழ்வதாக வாக்களித்துள்ளீர்கள்! அவரது போதனைகளுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும், நீங்கள் கீழ்ப்படிவதாக உறுதி செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும்படி கர்த்தர் உங்களுக்குச் சொல்லிய ஒவ்வொன்றையும் செய்வதாகச் சொன்னீர்கள். 18 இன்று உங்களெல்லோரையும் கர்த்தருடைய சிறப்புக்குரிய சொந்த ஜனங்களாக கர்த்தர் ஏற்றுக்கொண்டார்! அவர் இப்படிச் செய்ய உங்களிடம் வாக்களித்துள்ளார். அவரது கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கர்த்தர் சொன்னார். 19 கர்த்தர் தாம் படைத்த மற்றெல்லா ஜனங்களையும்விட, புகழும், பெருமையும், மதிப்பும் கொண்ட சிறந்தவர்களாக உங்களை ஆக்கியுள்ளார். கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடியே, நீங்களும் அவருக்குச் சொந்தமான விசேஷ ஜனங்களாக இருக்க வேண்டும்.”

ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள்

27 மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் (தலைவர்கள்) இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசினார்கள். மோசே, “இன்று நான் கொடுக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக கொடுத்திருக்கிற நாட்டிற்குள் போகும்படி நீங்கள் விரைவில் யோர்தான் ஆற்றைக் கடப்பீர்கள். அந்த நாளில் நீங்கள் பெரிய கற்களை நாட்டவேண்டும். அக்கற்களைச் சாந்து பூசி மூடி பிறகு அக்கற்களின் மேல் இந்த கட்டளைகளையும், போதனைகளையும் எழுத வேண்டும். நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்தவுடன் இதனைச் செய்யவேண்டும். பிறகு நீங்கள் அந்த நாட்டிற்குள் போகலாம். அதை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகக் கொடுத்திருக்கிறார். அந்நாடு பல நன்மைகளால் நிறைந்தது. உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் இந்த நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தார்.

“யோர்தான் ஆற்றைக் கடந்து நீங்கள் போனதும், நான் இன்று கட்டளையிடுகின்றவற்றை நீங்கள் செய்யவேண்டும். அக்கற்களை நீங்கள் ஏபால் மலையின் மேல் நாட்ட வேண்டும். நீங்கள் இக்கற்களைச் சாந்து பூசி மூடவேண்டும். அதோடு சில கற்களைப் பயன்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். கற்களை வெட்டுவதற்கு இரும்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலிபீடம் கட்டும்போது செதுக்கின கற்களைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு இப்பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துங்கள். நீங்கள் சமாதான பலிகளையும் அங்கே செலுத்தி அதனை உண்ணவேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அவற்றைச் சேர்ந்து உண்டு உங்களுக்குள் மகிழுங்கள். நீங்கள் நாட்டிய கற்களில் இந்தப் போதனைகளையெல்லாம் தெளிவாக எழுதவேண்டும். அதனால் அவற்றை வாசிக்க சுலபமாக இருக்கும்” என்றான்.

சட்டத்தின் சாபங்களை ஜனங்கள் ஒப்புக்கொள்கிறார்கள்

மோசேயும், ஆசாரியர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசினார்கள். மோசே, “அமைதியாக இருந்து கவனியுங்கள். இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். 10 எனவே நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இன்று அவற்றை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.

11 அதே நாளில் மோசே ஜனங்களிடம் இதையும் சொன்னான், 12 “யோர்தான் ஆற்றை நீங்கள் கடந்து போனபிறகு, ஜனங்களுக்குரிய ஆசீர்வாதங்களை வாசிக்க சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகியோரின் கோத்திரங்கள் கெரிசீம் மலையின் மீது நிற்பார்கள். 13 ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோரின் கோத்திரங்கள் ஏபால் மலைமீது நின்று சாபத்தை வாசிப்பார்கள்.

14 “லேவியர் உரத்தக் குரலில்:

15 “‘பொய்த் தெய்வங்களைச் செய்து இரகசியமான இடத்தில் அதனை ஒளித்து வைப்பவன் சபிக்கப்பட்டவன். அந்த பொய்த் தெய்வங்கள் எல்லாம் சித்திரவேலைக்காரர்களால் மரத்தாலும் கல்லாலும் அல்லது உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலைகள். கர்த்தர் அவற்றை வெறுக்கின்றார்!’ என்று அவர்கள் சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

16 “லேவியர்கள், ‘தன் தகப்பனுக்கும் தாய்க்கும் மரியாதை செய்யாமலிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

17 “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

18 “லேவியர், ‘குருடனை வழிதப்பச் செய்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“பிறகு எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.

19 “லேவியர், ‘அயல் நாட்டவர், அநாதைகள், விதவைகளின் நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

20 “லேவியர், ‘தனது மாற்றாந்தாயோடு பாலின உறவு வைத்துக்கொள்பவன் சபிக்கப்பட்டவன். ஏனென்றால், அவன் தன் தந்தைக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறான்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

21 “லேவியர், ‘யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

22 “லேவியர், ‘தன் சகோதரியோடும், சகோதரி உறவுள்ளவர்களோடும் பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

23 “லேவியர், ‘தன் மாமியாரோடு பாலின உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்!’ என்று சொல்லும்போது,

“எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

24 “லேவியர், ‘மற்றொருவனைக் கொல்லுகிறவன், பிடிபடாமல் இருந்தால் கூட, சபிக்கப்பட்டவனாக இருப்பான்’ என்று சொல்லும்போது,

“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.

25 “லேவியர், ‘ஒரு அப்பாவியைக் கொன்று அவனது பொருட்களை அபகரிப்பவன் சபிக்கப்பட்டவன்.’ என்று சொல்லும்போது,

“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

26 “லேவியர், ‘இந்த சட்டத்தின் வார்த்தைகளையெல்லாம் ஆதரிக்காமலும் அதற்குக் கீழ்ப்படியும்படி அதற்கு ஒப்புக்கொள்ளாமலும் இருப்பவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது,

“ஜனங்கள் எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்லவேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center