Historical
உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டுவந்தது
13 தாவீது தனது படையின் அனைத்து அதிகாரிகளோடும் பேசினான். 2 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்தான். அவன் அவர்களிடம், “இது நல்ல யோசனை என்று நீங்கள் நினைத்தால், கர்த்தருடைய விருப்பமும் இருந்தால், இஸ்ரவேலின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நமது சகோதரர்களுக்குச் செய்தியை அனுப்புவோம். ஆசாரியர்களுக்கும், நகரங்களிலும், வெளி நிலங்களிலும், நமது சகோதரர்களோடு வாழும் லேவியர்களுக்கும் செய்தியை அனுப்புவோம். நம்முடன் வந்து சேர்ந்துகொள்ளும்படி செய்தி அவர்களுக்குச் சொல்லப்படட்டும். 3 நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்குக் கொண்டுவருவோம். சவுல் ராஜாவாக இருந்தபோது உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம்” என்றான். 4 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இதுவே செய்வதற் கேற்ற சரியான செயல் என்று எண்ணினர்.
5 எகிப்திலுள்ள சீகோர் ஆறுமுதல் லெபோ ஆமாத்தின் எல்லைவரையுள்ள அனைத்து ஜனங்களையும் தாவீது கூட்டினான். அவர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியை கீரியாத் யாரீமிலிருந்து கொண்டுவருவதற்காகக் கூடினார்கள். 6 தாவீதும் அவனோடு இருந்த மற்ற இஸ்ரவேலர்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். (பாலா என்பது கீரியாத்யாரீமின் இன்னொரு பெயர்) உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர அவர்கள் அங்கே போனார்கள். உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனாகிய கர்த்தருடைய பெட்டி. அவர் கேருபீன்களுக்கு மேலே அமர்ந்திருக்கிறார். இப்பெட்டி கர்த்தருடைய நாமத்தாலேயே அழைக்கப்படுகிறது.
7 ஜனங்கள் உடன்படிக்கைப் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து தூக்கி வந்தனர். அதனைப் புதிய வண்டியில் வைத்தனர். ஊசாவும் அகியாவும் அவ்வண்டியை ஓட்டினார்கள்.
8 தாவீதும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தேவனுக்கு முன்பாக கொண்டாடினார்கள். அவர்கள் தேவனை புகழ்ந்து பாடினார்கள். அவர்கள் சுரமண்டலங்களையும், மேளங்களையும், கைத்தாளங்களையும், எக்காளங்களையும் இசைத்தனர்.
9 அவர்கள் கீதோனின் தானியத்தைப் பிரித்தெடுக்கும் களம் வந்தனர். வண்டியை இழுத்து வந்த மாடுகள் இடறின. உடன்படிக்கைப் பெட்டியானது ஏறக்குறைய விழுவது போலானது. ஊசா, அதனை ஒரு கையால் விழாமல் பிடித்துக்கொள்ள கையை நீட்டினான். 10 ஊசாவின் மேல் கர்த்தருக்கு பெருங் கோபம் உண்டாயிற்று, ஊசா பெட்டியைத் தொட்டதால் கர்த்தர் அவனைக் கொன்றுப்போட்டார். எனவே அவன் தேவனுக்கு முன்னால் மரித்துப் போனான். 11 தேவன் தனது கோபத்தை ஊசாவின் மேல் காட்டினார். இதனால் தாவீதுக்குக் கோபம் வந்தது. அன்று முதல் இன்றுவரை இந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.
12 தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான். 13 எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன். 14 உடன்படிக்கைப் பெட்டியானது ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்களுக்கு இருந்தது. ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குரிய அனைத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
தாவீதின் அரசு வளர்ந்தது
14 ஈராம், தீரு எனும் நகரத்தின் ராஜா, ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான். 2 உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.
3 எருசலேம் நகரத்தில் தாவீது மேலும் பெண்களை மணந்துக்கொண்டான். அவனுக்கு ஏராளமாக ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். 4 இவை எருசலேமில் தாவீதின் பிள்ளைகளின் பெயர்களாகும்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 5 இப்கார், எலிசூவா, எல்பெலேத், 6 நோகா, நெப்பேக், யப்பியா, 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் ஆகியோர்.
தாவீது பெலிஸ்தர்களை வெல்கிறான்
8 இஸ்ரவேலின் ராஜாவாகத் தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டதை பெலிஸ்தர்கள் அறிந்தனர். எனவே பெலிஸ்தர்கள் அனைவரும் தாவீதை தேடுவதற்காக வந்தார்கள். இதனை தாவீது கேள்விப்பட்டான். பிறகு தாவீது பெலிஸ்தர்களோடு போரிடச் சென்றான். 9 பெலிஸ்தர்கள், ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கி அவர்களது பொருட்களைக் கொள்ளை அடித்தனர். 10 தாவீது தேவனிடம், “நான் பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிடலாமா? நான் அவர்களைத் தோற்கடிக்கும்படி செய்வீரா?” என்று கேட்டான்.
அதற்குக் கர்த்தர் தாவீதிடம், “போ, நான் உன்னைப் பெலிஸ்தர்களை வெல்லும்படிச் செய்வேன்” என்று பதிலுரைத்தார்.
11 பிறகு, தாவீதும் அவனது ஆட்களும் பாகால் பிராசீம்வரை சென்றனர். அங்கே தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தர்களைத் தோற்கடித்தனர். தாவீது அவர்களிடம், “உடைந்த அணையிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைப்போல, என் எதிரிகளிடமிருந்து தேவன் வெற்றிக் கண்டுள்ளார்! தேவன், இதனை என் மூலம் செய்தார்” என்றான். அதனால் அந்த இடம் பாகால்பிராசீம் என்ற பெயரைப் பெற்றது. 12 பெலிஸ்தர்கள் பாகால்பிராசீமில் தங்கள் விக்கிரங்களை விட்டு, விட்டு ஓடிப் போனார்கள். அவற்றை எரித்துப்போடும்படி தாவீது கட்டளையிட்டான்.
பெலிஸ்தர் மீது மேலும் வெற்றிபெற்றது
13 பெலிஸ்தர்கள், மீண்டும் ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே உள்ள ஜனங்களைத் தாக்கினார்கள். 14 தாவீது மீண்டும் தேவனிடம் ஜெபித்தான். தாவீதின் ஜெபத்திற்குத் தேவன் பதில் சொன்னார். தேவன், “நீ பெலிஸ்தர்களைத் தாக்கும்போது அவர்களுக்கு முன்பாகப் போகாதே. அதற்குப் பதிலாக அவர்களைச் சுற்றிக்கொண்டு செல். நறுமணம் வீசும் திரவங்கள் வடியும் மரங்களுக்குப்பின் மறைந்துக்கொள். 15 அவற்றின் மீது ஏறு. அதன் மேலிருந்து உன்னால் படைகளின் வருகை ஒலியைக் கேட்க முடியும். அப்போது, பெலிஸ்தர்களை நீ தாக்கு. நான் (தேவன்) உனக்கு முன்னால் போய் பெலிஸ்தர்களைத் தோற்கடிப்பேன்!” என்றார். 16 தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள். 17 எனவே, தாவீது அனைத்து நாடுகளிலும் பிரபலமானான். தாவீதிற்கு அனைத்து தேசங்களும் பயப்படும்படி கர்த்தர் செய்தார்.
உடன்படிக்கைப் பெட்டி எருசலேமில்
15 தாவீதின் நகரத்திலே தாவீது தனக்காக வீடுகளைக் கட்டினான். பிறகு, உடன்படிக்கைப் பெட்டியை வைக்கவும் ஒரு இடத்தைக் கட்டினான். அதற்காகக் கூடாரத்தை அமைத்தான். 2 பிறகு தாவீது, “உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வர லேவியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிச் செல்லவும் அவருக்கு எக்காலத்துக்கும் பணிவிடை செய்யவும் கர்த்தர் லேவியர்களையே தேர்ந்தெடுத்துள்ளார்” என்றான்.
3 தாவீது, எருசலேமில் ஜனங்களை எல்லாம் கூட்டி, உடன்படிக்கைப் பெட்டிக்காக அவன் தயார் செய்த இடத்திற்கு அதைக் கொண்டுவர ஏற்பாடு செய்தான். 4 தாவீது, ஆரோன் மற்றும் லேவியர்களின் சந்ததியினரை எல்லாம் அழைத்தான்.
5 கோகாத் கோத்திரத்தில் இருந்து 120 பேர் வந்தனர். ஊரியேல் அவர்களின் தலைவன்.
6 மெராரியின் கோத்திரத்தில் இருந்து 220 பேர் வந்தனர். அசாயா அவர்களின் தலைவன்.
7 கெர்சோன் கோத்திரத்தில் இருந்து 130 பேர். யோவேல் அவர்களின் தலைவன்.
8 எலிசாப்பான் கோத்திரத்தில் இருந்து 200 பேர். செமாயா அவர்களின் தலைவன்.
9 எப்ரோன் கோத்திரத்தில் இருந்து 80 பேர். எலியேல் அவர்களின் தலைவன்.
10 ஊசியேல் கோத்திரத்தில் இருந்து 112 பேர். அமினதாப் அவர்களின் தலைவன்.
தாவீது ஆசாரியர்களோடும் லேவியர்களோடும் பேசுதல்
11 பிறகு தாவீது சோதாக் மற்றும் அபியத்தார் ஆசாரியர்களை அழைத்தான். தாவீது கீழ்க்கண்ட லேவியர்களையும் அழைத்தான். ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் ஆகியோர். 12 தாவீது அவர்களிடம், “நீங்கள் லேவியர் கோத்திரத்திலிருந்து வந்த தலைவர்கள். நீங்களும் மற்ற லேவியர்களும் உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உடன்படிக்கைப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைப்பதற்காக எடுத்து வாருங்கள். 13 சென்ற முறை, உடன்படிக்கைப் பெட்டியை எவ்வாறு எடுத்து வர வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கவில்லை. லேவியர்களாகிய நீங்கள் அதனைத் தூக்கி வரவில்லை, அதனால் கர்த்தர் நம்மைத் தண்டித்தார்” என்றான்.
14 பிறகு ஆசாரியர்களும், லேவியர்களும் தம்மைப் பரிசுத்தமாக்கிக் கொண்டனர். எனவே அவர்களால் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை தூக்கிவர முடிந்தது. 15 மோசே கட்டளையிட்டபடியே, லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தோளில் தூக்கிவர சிறப்பான தடிகளைப் பயன்படுத்தினர். கர்த்தர் சொன்னபடியே அவர்கள் அப்பெட்டியைத் தூக்கி வந்தனர்.
பாடகர்கள்
16 தாவீது, லேவியர்களிடம் அவர்களது சகோதரர்களான பாடகர்களை அழைக்கச் சொன்னான். பாடகர்கள் தங்கள் சுரமண்டலம், கைத்தாளம், ஆகியவற்றோடு வந்து மகிழ்ச்சியுடன் பாடுமாறு கேட்டான்.
17 பிறகு லேவியர்கள், ஏமானையும், அவனது சகோதரர்களான ஆசாப்பையும், ஏத்தானையும் அழைத்தனர். ஏமான் யோவேலின் குமாரன். ஆசாப் பெரகியாவின் குமாரன். ஏத்தான் குஷாயாவின் குமாரன். இவர்கள் அனைவரும் மெராரியின் கோத்திரத்தினர். 18 அங்கே லேவியர்களின் இரண்டாவது குழுவும் இருந்தது. அதில் சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோர் இருந்தனர். இவர்கள் லேவியக் காவலர்கள் ஆவார்கள்.
19 ஏமான், ஆசாப், ஏத்தான் ஆகிய பாடகர்கள் தம் வெண்கலக் கைத்தாளங்களை ஒலித்து பாடினார்கள். 20 சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா ஆகியோர் அல்மோத் என்னும் இசையில் தம்புருவை வாசித்தனர். 21 மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல், அச்சியா, ஆகியோர் செமனீத் எனும் இசையில் சுரமண்டலங்களை வாசித்தனர். இதுவே இவர்களின் வேலையாகும். 22 பாடலுக்குரிய பொறுப்பு லேவியர் தலைவனாகிய கெனானியாவிடம் இருந்தது. இவன் பாடுவதில் வல்லவன். எனவே அவன் அந்த வேலையைச் செய்தான்.
23 பெரகியாவும், எல்க்கானாவும், உடன்படிக்கைப் பெட்டியைக் காவல் காத்தனர். 24 செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் ஆகிய ஆசாரியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எக்காளங்களை ஊதினார்கள். ஓபேத் ஏதோமும், எகியாவும் உடன்படிக்கைப் பெட்டிக்கு வாசல் காவலர்களாக இருந்தனர்.
25 தாவீதும், இஸ்ரவேல் தலைவர்களும், சேர்வைக்காரர்களும் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரச் சென்றனர். அவர்கள் அதனை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து கொண்டு வந்தனர். ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்! 26 உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வரும்படி லேவியருக்கு தேவன் உதவியபடியால், அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டனர். 27 உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வந்த அனைத்து லேவியரும் மெல்லிய ஆடையான சால்வைகளை அணிந்திருந்தனர். பாடகரின் தலைவனாகிய கெனானியாவும், மற்ற பாடகர்களும், மெல்லிய ஆடையான சால்வையை அணிந்திருந்தனர். தாவீது மெல்லிய சணலால் ஆன ஏபோத்தை அணிந்திருந்தான்.
28 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்தனர், எக்காளங்களை ஊதினர், பூரிகைகளை ஊதினர், கைத்தாளங்களை ஒலித்தனர், தம்புருக்களையும், சுரமண்டலங்களையும் வாசித்தனர்.
29 உடன்படிக்கைப் பெட்டியானது தாவீதின் நகரத்திற்குள் வந்தபோது, தன் ஜன்னலின் வழியாக மீகாள் பார்த்தாள். மீகாள் சவுலின் குமாரத்தி. ராஜாவாகிய தாவீது ஆடிப்பாடி வருவதையும் கண்டாள். அவளுக்குத் தாவீது மீது இருந்த மரியாதை போயிற்று. அவனை அவள், ஒரு முட்டாளாக எண்ணினாள்.
2008 by World Bible Translation Center