Print Page Options
Previous Prev Day Next DayNext

Historical

Read the books of the Bible as they were written historically, according to the estimated date of their writing.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 30-32

எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான்

30 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு எசேக்கியா ராஜா செய்திகளை அனுப்பினான். அவன் எப்பிராயீம் மற்றும் மனாசேயின் ஜனங்களுக்கும் கடிதம் எழுதினான். எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் அனைவரையும் எசேக்கியா அழைத்தான். அவன் எல்லா ஜனங்களையும் வந்திருந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அழைத்தான். எசேக்கியா ராஜா தனது அனைத்து அதிகாரிகளிடமும் எருசலேமில் உள்ள சபையார்களிடமும் பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட ஒப்புக்கொண்டான். அவர்கள் சரியான வேளையில் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் பரிசுத்த சேவைசெய்வதற்குப் போதுமான ஆசாரியர்கள் தம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளவில்லை. எருசலேமில் ஜனங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடாததும் இன்னொரு காரணமாகும். இந்த ஒப்பந்தம் எசேக்கியா ராஜாவையும் சபையோரையும் திருப்திப்படுத்தியது, எனவே இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பெயர்செபா முதல் தாண் நகரம்வரை இது பற்றி அறிவிப்பு செய்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாட அனைவரையும் வரும்படி அவர்கள் ஜனங்களிடம் சொன்னார்கள். பஸ்கா பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று மோசே சொன்னபடி நீண்ட நாட்களாக பெரும்பகுதி இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடவில்லை. எனவே தூதுவர்கள் இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதும் ராஜாவின் கடிதத்தைக் கொண்டுபோய் காட்டினார்கள். கடிதத்தில் உள்ள செய்தி இதுதான்:

இஸ்ரவேல் பிள்ளைகளே! ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் அடிபணிந்த தேவனாகிய கர்த்தரிடம் திரும்புங்கள். பின்னர், அசீரியா ராஜாக்களிடமிருந்து தப்பி இன்னும் உயிர் வாழ்கிற ஜனங்களாகிய உங்களிடம் தேவன் திரும்பிவருவார். உங்கள் தந்தையரைப்போலவும் சகோதரர்களைப் போன்றும் இராதீர்கள். கர்த்தரே அவர்களின் தேவன். ஆனால் அவர்கள் அவருக்கு எதிராகிவிட்டனர். எனவே அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படியாகவும் அவர்களுக்கு எதிராகத் தீயவைகளைப் பேசும்படியும் கர்த்தர் செய்தார். இது உண்மை என்பதை உங்கள் சொந்தக் கண்களால் காணலாம். உங்கள் முற்பிதாக்களைப் போன்று பிடிவாதமாக இருக்காதீர்கள். மனப்பூர்வமான விருப்பத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். மகா பரிசுத்தமான இடத்திற்கு வாருங்கள். பின்பு மகா பரிசுத்தமான இடத்தைக் (ஆலயத்தை) கர்த்தர் எக்காலத்திற்கும் பரிசுத்தமாக்கியுள்ளார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். பிறகு கர்த்தருடைய அஞ்சத்தக்க கோபம் உங்களைவிட்டு விலகும். நீங்கள் திரும்பி வந்து கர்த்தருக்கு அடிபணிந்தால் பிறகு உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் சிறை பிடித்தவர்களிடம் இருந்து இரக்கத்தைப் பெறுவார்கள். உங்கள் உறவினர்களும், பிள்ளைகளும் இந்த நாட்டிற்கு திரும்பி வருவார்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அன்பும் இரக்கமும் கொண்டவர். நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் உங்களை விட்டு விலகிப் போகமாட்டார்.

10 தூதுவர்கள் எப்பிராயீம் மனாசே ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்றனர். செபுலோன் நாடுவரையுள்ள வழி எங்கும் போயினர். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்து கேலிச் செய்தனர். 11 ஆனால் ஆசேர், மனாசே, செபுலோன் ஆகிய நாடுகளில் சிலர் அவற்றைக் கேட்டுப் பணிவுடன் எருசலேம் சென்றனர். 12 மேலும், யூதாவில் ஜனங்கள் ராஜாவுக்கும், அவனது அதிகாரிகளுக்கும் கீழ்ப்படியுமாறு தேவனுடைய வல்லமை ஜனங்களை ஒன்றிணைத்தது. இந்தவிதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

13 எருசலேமிற்கு ஏராளமான ஜனங்கள் இரண்டாவது மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாட வந்தார்கள். அது மிகப் பெருங் கூட்டமாக இருந்தது. 14 அவர்கள் அங்குள்ள அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை அகற்றினார்கள். அவற்றுக்கான நறுமணப்பொருட்கள் எரிக்கும் பீடங்களையும் அகற்றி அவற்றை கீதரோன் பள்ளத் தாக்கிலே எறிந்தார்கள். 15 பின்னர் அவர்கள் இரண்டாவது மாதத்தின் 14வது நாளன்று பஸ்காவுக்கான ஆட்டுக்குட்டியை கொன்றார்கள். ஆசாரியரும் லேவியரும் வெட்கப்பட்டனர். தங்களை அவர்கள் பரிசுத்தச் சேவைக்காகத் தயார் செய்துகொண்டனர். ஆசாரியர்களும் லேவியர்களும் தகன பலிகளை கர்த்தருடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தனர். 16 தேவமனிதனாகிய மோசேயின் சட்டம் சொன்னபடி அவர்கள் ஆலயத்தில் தங்களது வழக்கமான இடத்தில் இருந்தார்கள். லேவியர்கள் இரத்தத்தை ஆசாரியர்களிடம் கொடுத்தனர். பிறகு ஆசாரியர்கள் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தனர். 17 அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

18-19 எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் ஆகிய நகரங்களிலுள்ள பெரும்பாலான ஜனங்கள் பஸ்கா பண்டிகையை சரியான வழியில் கொண்டாடத் தம்மைத் தயார் செய்துக்கொள்ளவில்லை. மோசேயின் சட்டம் கூறியபடி அவர்கள் பஸ்காவை முறையாகக் கொண்டாடவில்லை. ஆனால் அவர்களுக்காக எசேக்கியா ஜெபம் செய்தான். எனவே அவன், “தேவனாகிய கர்த்தாவே! நீர் நல்லவர். இந்த ஜனங்கள் உண்மையிலேயே உம்மை சரியாக தொழுதுகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தம்மை சட்டப்படி பரிசுத்தப்படுத்திக் கொள்ளவில்லை. தயவுசெய்து அவர்களை மன்னியும். நீர் எங்கள் முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவன். சிலர் மகா பரிசுத்தமான இடத்திற்குத் தக்கவாறு தம்மை பரிசுத்தப் படுத்திக்கொள்ளாவிட்டாலும் அவர்களை மன்னித்தருளும்” என்று ஜெபித்தான். 20 எசேக்கியாவின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அவர் ஜனங்களை மன்னித்தார். 21 இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர். 22 எசேக்கியா ராஜா, எவ்வாறு கர்த்தருக்குச் சேவைசெய்ய வேண்டும் என்பதை அறிந்த லேவியர்களை உற்சாகப்படுத்தினான். ஜனங்கள் 7 நாட்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி சமாதானப் பலிகளைக் கொடுத்துவந்தனர். தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை அவர்கள் நன்றியுடன் போற்றித்துதித்தார்கள்.

23 அனைத்து ஜனங்களும் இன்னும் 7 நாட்களுக்குத் தங்கிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். 24 எசேக்கியா ராஜா 1,000 காளைகளையும் 7,000 செம்மறி ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்து கொன்று உண்ணச் சொன்னான். தலைவர்கள் 1,000 காளைகளையும், 10,000 ஆடுகளையும் சபையோருக்குக் கொடுத்தனர். பல ஆசாரியர்கள் பரிசுத்தச் சேவைசெய்வதற்குத் தம்மைத் தயார் செய்துக்கொண்டனர். 25 யூதாவின் அனைத்து சபையோர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலில் இருந்து வந்த சபையோர்களும், இஸ்ரவேலிலிருந்து யூதாவிற்குப் பயணிகளாகச் செல்வோரும் மிகவும் மகிழ்ந்தனர். 26 எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் குமாரனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை. 27 ஆசாரியர்களும், லேவியர்களும் எழுந்து நின்று கர்த்தரிடம் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்கள். தேவன் அவற்றைக் கேட்டார். அவர்களின் ஜெபங்கள் கர்த்தருடைய பரிசுத்த வீடான பரலோகத்திற்கு வந்தது.

எசேக்கியா ராஜா செய்த முன்னேற்றங்கள்

31 பஸ்கா பண்டிகை முடிவடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலிருந்து பஸ்கா முடிந்ததும் யூதாவின் ஊர்களுக்கு வெளியேறினார்கள். அந்த நகரங்களில் இருந்த பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களை நொறுக்கினார்கள். அவை பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதற்கான இடங்களாயிருந்தன. அவர்கள் விக்கிரகத் தோப்புகளை அழித்தனர். அதோடு மேடைகளையும் பலிபீடங்களையும் அழித்தனர். யூதா மற்றும் பென்யமீன் நாட்டில் தொழுகை இடங்களையும் பலி பீடங்களையும் அழித்தனர். ஜனங்கள் இல்லத்திலேயே எப்பிராயீம் மற்றும் மனாசே நாடுகளிலும் பொய்யான தெய்வங்களை தொழுதுகொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழிக்கும்வரைக்கும் ஜனங்கள் இவற்றைச் செய்தார்கள். பின்னர் எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் ஊர்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

ஆசாரியர்களும், லேவியர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பான பணி இருந்தது. எனவே எசேக்கியா ராஜா இக்குழுவினர்களிடம் தம் வேலைகளை மீண்டும் செய்யுமாறு கூறினான். எனவே லேவியர்களும், ஆசாரியர்களும் தகனபலிகள் மற்றும் சமாதானப் பலிகள் கொடுக்கும் வேலையைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தின் வாசலில் தேவனைத் துதித்துப் பாடுவது என்றும் ஆலயத்தில் சேவைசெய்வது என்றும் நியமித்தான் ராஜா. எசேக்கியா தனது சொந்த மிருகங்களையும் தகனபலி இடுவதற்காகத் தந்தான். இம்மிருகங்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் செலுத்தப்படும் தகன பலிகளுக்குப் பயன்பட்டன. இம்மிருகங்கள் ஓய்வு நாட்களிலும் பிறைச் சந்திரநாள் பண்டிகைகளிலும் மற்ற சிறப்புக் கூட்டங்களிலும் சர்வாங்க தகன பலிகள் செலுத்த பயன்பட்டன. இவை கர்த்தருடைய சட்டத்தில் எழுதப்பட்டபடியே நடந்தேறின.

ஜனங்கள் தம் அறுவடையிலும் மற்ற பொருட்களிலும் ஒரு பகுதியை ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. எனவே எசேக்கியா ராஜா எருசலேம் நகர ஜனங்களிடம் தம் பங்கை அளிக்குமாறு கட்டளையிட்டான். இவ்வாறு ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சட்ட நெறிகளின்படி விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவு செய்தனர். நாடு முழுவதிலும் உள்ள ஜனங்கள் இந்த கட்டளையைக் கேள்விப்பட்டார்கள். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் முதல் பஸ்காவுக்காக தமது அறுவடை, திராட்சை, எண்ணெய், தேன், வயலில் விளைந்த மற்றபொருட்கள் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தனர். யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.

இக்குவியல்களை அவர்கள் மூன்றாம் மாதத்தில் (மே/ஜுன்) தொடங்கி ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) முடித்தனர். எசேக்கியாவும் தலைவர்களும் வந்த போது தொகுக்கப்பட்ட குவியல்களைக் கண்டனர். அவர்கள் கர்த்தரையும் அவரது ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களையும் போற்றினார்கள்.

பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான். 10 சாதோக்கின் குடும்பத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனாகிய அசரியா என்பவன் எசேக்கியா ராஜாவிடம், “ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் காணிக்கை பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கு உணவு ஏராளமாய் உள்ளது. நாங்கள் எவ்வளவுதான் அதிகமாக தின்றாலும் ஏராளமாக மிகுதியாக உள்ளது. கர்த்தர் உண்மையாகவே தம் ஜனங்களை ஆசீர்வதித்துள்ளார். அதனால் தான் இவ்வளவு மீதியாக உள்ளது.” என்று பதில் சொன்னான்.

11 பின்னர் எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்காக பண்டகச்சாலைகளை அமைக்க கட்டளையிட்டான். அவ்வாறே ஆயிற்று. 12 பிறகு ஆசாரியர்கள் காணிக்கைகளையும், பத்தில் ஒரு பாகத்தையும் கர்த்தருக்கு மட்டுமே கொடுப்பதற்கென்று இருந்த மற்றப் பொருட்களையும் எடுத்து வைத்தார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்தும் ஆலயத்தின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டது. இவற்றிற்கு பொறுப்பாளனாக கொனனியா என்ற லேவியன் இருந்தான். அவனது தம்பியாகிய சிமேயு இரண்டாவது நிலை பொறுப்பாளனாக இருந்தான். 13 கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா ராஜாவும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

14 தேவனுக்கு ஜனங்கள் தாராளமாய்க் கொடுக்கப்பட்ட காணிக்கைகளுக்குக் கோரே பொறுப்பாளியாக இருந்தான். கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட காணிக்கைகளைத் திருப்பி விநியோகிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. கோரே கிழக்கு வாசலுக்குக் காவல்காரனாக இருந்தான். லேவியனாகிய இம்னா என்பவன் அவனது தந்தை ஆவான். 15 ஏதோன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் கோரேவுக்கு உதவியாக இருந்தனர். ஆசாரியர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நகரங்களில் இவர்கள் உண்மையுடன் சேவைசெய்தனர். இவர்கள் வசூலித்த பொருட்களைத் தம் உறவினர்களுக்கும், ஒவ்வொரு ஆசாரியர் குழுவுக்கும் கொடுத்தார்கள். அதே அளவு பொருட்களை அவன் முக்கியம் உள்ளவர்களுக்கும், முக்கியம் இல்லாதவர்களுக்கும் கொடுத்தான்.

16 இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன. 17 வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது. 18 லேவியர்களின் குழந்தைகள், மனைவியர், குமாரர்கள், குமாரத்திகள் ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெற்றனர். இது அனைத்து லேவியர்களுக்கும் அவர் தம் குடும்ப வரலாற்று பட்டியலின்படியே கொடுக்கப்பட்டது. ஏனென்றால் லேவியர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எப்பொழுதும் தம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்பவர்களாகவும் சேவைக்குத் தயாரானவர்களாகவும் இருந்தனர்.

19 ஆசாரியர்களாகிய ஆரோனின் சந்ததியினர்களில் சிலர் லேவியர்கள் குடியிருக்கிற நகரங்களின் அருகில் வயல்களை வைத்திருந்தனர். நகரங்களில் ஆரோனின் சந்ததியினர் மேலும் சிலர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆரோனின் சந்ததியினருக்கும் அவர்களுக்குரிய பங்குப் பொருள்கள் கொடுக்கப்பட்டது. லேவியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் அட்டவணையில் எழுதப்பட்டவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.

20 யூதா முழுவதிலும் இத்தகைய நல்லச் செயல்களை எசேக்கியா ராஜா செய்தான். அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு முன் எது நல்லதோ, எது சரியானதோ, எது உண்மையுள்ளதோ அவற்றைச் செய்தான். 21 அவன் தொடங்கிய அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். தேவனுடைய ஆலய சேவையிலும் சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிற செயலிலும் தேவனைப் பின்பற்றும் முறையிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். எசேக்கியா இவற்றையெல்லாம் தன் முழு இருதயத்தோடு செய்தான்.

அசீரியா நாட்டு ராஜா எசேக்கியாவிற்குத் துன்பம் கொடுக்கிறான்

32 இவையனைத்தையும் எசேக்கியா உண்மையுடன் செய்து முடித்தப் பிறகு, சனகெரிப் எனும் அசீரியா ராஜா யூதா நாட்டைத் தாக்க வந்தான். சனகெரிப்பும் அவனது படைகளும் கோட்டைக்கு வெளியே முகாமிட்டனர். அந்நகரங்களைத் தோற்கடிக்கத் திட்டங்கள் தீட்டும்பொருட்டு அவன் இவ்வாறுச் செய்தான். அவன் அனைத்து நகரங்களையும் தானே வென்றுவிட விரும்பினான். எருசலேமைத் தாக்குவதற்காக சனகெரிப் வந்திருக்கும் செய்தியை எசேக்கியா அறிந்துகொண்டான். பிறகு எசேக்கியா தனது அதிகாரிகளோடும் படை அதிகாரிகளோடும் கலந்தாலோசித்தான். அவர்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே தண்ணீரை விநியோகிக்கும் ஊற்றுக் கண்களை அடைத்துவிட ஒப்புக் கொண்டனர். அந்த அதிகாரிகளும் அலுவலர்களும் எசேக்கியாவிற்கு உதவினார்கள். நாட்டின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த ஓடைகளையும் ஊற்றுகளையும் எராளமான ஜனங்கள் சேர்ந்து வந்தடைத்தனர். அவர்கள், “அசீரியா ராஜா இங்கு வரும்போது அவனுக்கு அதிகம் தண்ணீர் கிடைக்காது!” என்றனர். எசேக்கியா எருசலேமைப் பலமுள்ளதாக ஆக்கினான். இடிந்துபோன சுவர்களை மீண்டும் கட்டினான். சுவர்களின் மேல் கோபுரங்களைக் கட்டினான். முதல் சுவருக்கு அடுத்தாக இரண்டாம் சுவரையும் கட்டினான். எருசலேமின் பழைய பகுதியில் உள்ள கிழக்கு பாகத்தைப் பலமுள்ளதாகக் கட்டினான். அவன் பல்வேறு ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தான். 6-7 ஜனங்களுக்குத் தலைமைத் தாங்கும் போர்த் தலைவர்களை எசேக்கியா தேர்ந்தெடுத்தான். நகர வாசலுக்கருகில் அவன் இந்த அதிகாரிகளை அழைத்துப் பேசினான். எசேக்கியா அவர்களோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தினான். அவன், “நீங்கள் பலமாகவும், தைரியமாகவும் இருங்கள். அசீரியா ராஜாவைப்பற்றியோ, அவனது பெரும் படையைப் பற்றியோ பயமும் கவலையும் அடையாதீர்கள். அசீரியா ராஜாவுக்கு இருக்கிற பலத்தைவிட மாபெரும் வல்லமை நமக்கு பலமாக இருக்கிறது. அசீரியா ராஜாவிடம் மனிதர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்மிடமோ நமது தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்! நமது தேவன் நமக்கு உதவுவார். நமது போர்களில் அவர் சண்டையிடுவார்” என்று பேசினான். இவ்வாறு யூதா ராஜாவாகிய எசேக்கியா ஜனங்களை உற்சாகப்படுத்தி அவர்களைப் பலமுள்ளவர்களாக உணரச்செய்தான்.

சனகெரிப்பும் அவனது படைகளும் லாகீசுக்கு எதிராக முற்றுகை இட்டனர். அதனைத் தோற்கடிக்க முடியும் என்றும் எண்ணினர். சனகெரிப் தனது வேலைக்காரர்களை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடமும் எருசலேமில் உள்ள யூதா ஜனங்களிடமும் அனுப்பினான். எசேக்கியாவிற்கும், எருசலேமில் உள்ள ஜனங்களுக்கும் எடுத்துச்சொல்ல சனகெரிப்பின் வேலைக்காரர்களிடம் ஒரு செய்தி இருந்தது.

10 அவர்கள், “அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் சொல்வதாவது, ‘முற்றுகை இடப்பட்ட எருசலேமிற்குள் எந்த நம்பிக்கையின் பேரில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்? 11 எசேக்கியா உங்களை முட்டாளாக்குகிறான். நீங்கள் தந்திரமாக எருசலேமிற்குள் தங்கவைக்கப்படுகிறீர்கள். எனவே நீங்கள் பசியாலும் தாகத்தாலும் மரித்துப்போவீர்கள். எசேக்கியா உங்களிடம், “நமது தேவனாகிய கர்த்தர் அசீரியா ராஜாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறான். 12 எசேக்கியாவே கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அப்புறப்படுத்தினான். அவன் யூதாவுக்கும் எருசலேமிற்கும் ஒரே பலிபீடத்தையே தொழுதுகொள்ளுங்கள், நறு மணப்பொருட்களை எரியுங்கள் என்று சொன்னான். 13 நானும் என் முற்பிதாக்களும் மற்ற நாடுகளிலிருந்த அனைத்து ஜனங்களுக்கும் என்ன செய்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களையே காப்பாற்ற முடியாமல்போனது. அந்தத் தெய்வங்களின் ஜனங்களை நான் அழிக்கும்போதுகூட, அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. 14 என் முற்பிதாக்கள் அந்நாடுகளை அழித்தார்கள். தனது ஜனங்களை அழிப்பதிலிருந்து என்னைத் தடுக்கும் தேவன் யாரும் இல்லை. எனவே, உங்கள் தெய்வம் என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா? 15 எசேக்கியா உங்களை முட்டாளாக்கவோ, உங்களிடம் தந்திரம் செய்யவோ அனுமதிக்காதீர்கள். அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் எந்த நாட்டையும், அரசையும் என்னிடமிருந்தும், என் முற்பிதாக்களிடமிருந்தும் எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லை. எனவே என்னுடைய தாக்குதலில் இருந்து உங்கள் தெய்வம் உங்களைக் காப்பாற்றுவார் என்று எண்ணாதீர்கள்’” என்றார்கள்.

16 அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள், தேவனாகிய கர்த்தருக்கும், அவரது தொண்டனான எசேக்கியாவுக்கும் எதிராக மிக மோசமாகப் பேசினார்கள். 17 அசீரியா ராஜா மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா ராஜா தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.” 18 பிறகு அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் சுவர்களின் மேலே இருந்த எருசலேமின் ஜனங்களைப் பார்த்து சத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் எபிரெய மொழியைப் பயன்படுத்தினர். எருசலேம் ஜனங்கள் அஞ்சவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துக்கொண்டனர். தாம் அந்நகரத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று நம்பினார்கள். 19 உலக ஜனங்கள் தொழுதுகொண்ட தேவனுக்கு எதிராக அந்த வேலைக்காரர்கள் கெட்ட செய்திகளைக் கூறினார்கள். அந்த தெய்வங்கள் அந்த ஜனங்களின் கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே. இதைப்போலவே எருசலேமின் தேவனுக்கும் அதேபோன்ற தீமைகளை அந்த வேலைக்காரர்கள் செய்தார்கள்.

20 இந்தப் பிரச்சனையைப்பற்றி எசேக்கியா ராஜாவும், ஆமோத்தின் குமாரனாகியா ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள் பரலோகத்தை நோக்கி மிகச் சத்தமாக ஜெபம் செய்தனர். 21 பிறகு கர்த்தர் அசீரியா ராஜாவின் முகாமிற்கு ஒரு தேவ தூதனை அனுப்பினார். தேவதூதன் அசீரியாவின் படையில் உள்ள எல்லா வீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் கொன்றான். எனவே, அசீரியா ராஜா தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போனான். அவனது ஜனங்கள் அவனுக்காக வெட்கப்பட்டனர். அவன் தனது பொய்த் தெய்வங்களின் கோவிலிற்குப் போனான். அங்கே அவனது குமாரர்கள் அவனை வாளால் கொன்றனர். 22 இவ்வாறு கர்த்தர், அசீரியா ராஜாவாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார். 23 எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு பலரும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் யூதா ராஜாவாகிய எசேக்கியாவுக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்தனர். அந்நாளிலிருந்து அனைத்து நாடுகளும் எசேக்கியாவை மதித்தன.

24 அந்நாட்களில் எசேக்கியா நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் விழுந்தான். அவன் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் எசேக்கியாவிடம் பேசினார். அவனுக்கு ஒரு அடையாளம் காட்டினார். 25 ஆனால் எசேக்கியாவின் மனதில் கர்வ உணர்வு தோன்றியது. எனவே அவன் தேவனுடைய கருணைக்காக அவருக்கு நன்றி செலுத்தவில்லை. இதனால் தேவனுக்கு எசேக்கியாவின் மீது கோபம் ஏற்பட்டது. அதோடு யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. 26 ஆனால் எசேக்கியாவும் எருசலேமில் உள்ள ஜனங்களும் தங்கள் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் பணிவுள்ளவர்கள் ஆனார்கள். பெருமை உணர்வுக்கொள்வதை நிறுத்தினார்கள். அவர்கள் மேல் கர்த்தருக்கு எசேக்கியா உயிரோடு இருந்தவரை கோபம் வரவில்லை.

27 எசேக்கியாவுக்கு ஏராளமான செல்வமும், சிறப்பும் இருந்தது. அவன் வெள்ளி, தங்கம், விலைமதிப்புள்ள நகைகள், நறுமணப்பொருட்கள், கேடயங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களைப் பண்டகசாலைகள் கட்டி சேமித்தான். 28 ஜனங்கள் அனுப்பித் தரும் உணவு தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேகரித்து வைக்கும் கட்டிடங்கள் அவனிடம் இருந்தன. அவன் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தொழுவங்களை அமைத்தான். 29 எசேக்கியா அநேக நகரங்களையும் கட்டினான். அவன் ஏராளமான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையுங்கூட பெற்றான். கர்த்தர் அவனுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தார். 30 எசேக்கியா கீகோன் என்னும் ஆற்றிலே அணையைக் கட்டினான். அந்த நீரை மேற்கேயிருந்து தாழ தாவீதின் நகரத்திற்குத் திரும்பினான். அவனது செயல்கள் அனைத்திலும் வெற்றிபெற்றான்.

31 ஒருமுறை பாபிலோனில் உள்ள தலைவர்கள் எசேக்கியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் தம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புதுவிதமான அடையாளத்தைப் பற்றிக் கேட்டனர். அப்போது தேவன் அவனைத் தனியாகவிட்டார். அவன் இதயத்தில் உண்டான அத்தனையையும் அறியும்படி அவனைச் சோதித்தார்.

32 எசேக்கியா செய்த மற்ற செயல்களும், அவன் எவ்வாறு கர்த்தரை நேசித்தான் என்ற விபரமும் ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயாவின் தரிசனம் என்ற புத்தகத்திலும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளன. 33 எசேக்கியா மரித்தான். அவன்தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். தாவீதின் முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் உள்ள மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியா மரித்ததும் யூதா மற்றும் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் அனைவரும் அவனுக்கு மரியாதைச் செய்தார்கள். மனாசே என்பவன் அவனுக்குப் பிறகு எசேக்கியாவின் இடத்தில் புதிய ராஜா ஆனான். மனாசே எசேக்கியாவின் குமாரன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center