Daily Reading for Personal Growth, 40 Days with God
42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தை விட்டுச் செல்லும்பொழுது, அடுத்த ஓய்வு நாளில் மீண்டும் வந்து இவற்றைக் குறித்து இன்னும் பல விஷயங்களை அவர்களுக்குச் சொல்லுமாறு மக்கள் கூறினார்கள். 43 இக்கூட்டத்திற்குப் பின், அந்த இடத்திலிருந்து யூதர்கள் பலர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். யூதர்களோடு யூத மதத்திற்கு மாறிய பலரும் இருந்தார்கள். இவர்களும் உண்மையான தேவனை வணங்கினார்கள். பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்குமாறு அவர்களை உற்சாகமூட்டினார்கள்.
44 அடுத்த ஓய்வு நாளில் அநேகமாக நகரத்தின் எல்லா மக்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக ஒருமித்துக் கூடினார்கள். 45 யூதர்கள் அந்த எல்லா மக்களையும் அங்கே கண்டார்கள். அது அவர்களுக்கு மிகுந்த பொறாமையை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வெகு தீமையான சில காரியங்களைக் கூறி பவுல் கூறிய வார்த்தைகளுக்கு எதிராக விவாதித்தார்கள். 46 ஆனால் பவுலும் பர்னபாவும் மிகவும் துணிச்சலாகப் பேசினார்கள். அவர்கள், “யூதர்களாகிய உங்களுக்கு முதலில் தேவனுடைய செய்தியை நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழக்கப்பட்டவர்களாக நித்தியமான வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறீர்கள்! எனவே நாங்கள் இப்போது வேறு தேசங்களின் மக்களிடம் செல்வோம்! 47 இதைத் தான் நாங்கள் செய்யும்படியாக ஆண்டவர் எங்களிடம் சொல்லியிருக்கிறார். கர்த்தர் கூறினார்:
“‘இரட்சிப்பின் பாதையை உலகின் எல்லா மக்களுக்கும் நீங்கள்
காட்டும் பொருட்டு உங்களை வேறு தேசங்களுக்கு ஒளியாக்கினேன்.’” (A)
48 பவுல் இவ்வாறு கூறியதை யூதரல்லாத மக்கள் கேட்டபோது அவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். அவர்கள் கர்த்தரின் செய்திக்கு மதிப்பளித்தனர். பல மக்கள் செய்தியை நம்பினர். இவர்கள் நித்தியமான வாழ்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாவர்.
49 எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது. 50 ஆனால் யூதர்கள் சில முக்கியமான பக்தியுள்ள பெண்களையும், நகரத் தலைவர்களையும் சினமடையும்படியாகவும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிராகவும் நகரத்திலிருந்து கிளப்பி விட்டனர். இந்த மக்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் எதிரான செயல்களைச் செய்து அவர்களை ஊரை விட்டு வெளியேறும்படிச் செய்தனர். 51 எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள். 52 ஆனால் அந்தியோகியாவிலுள்ள இயேசுவின் சீஷர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து பரிசுத்த ஆவியால் நிரம்பினர்.
2008 by World Bible Translation Center