Daily Reading for Personal Growth, 40 Days with God
நிரூபித்துக் காட்டுங்கள்
(மத்தேயு 12:38-42; மாற்கு 8:12)
29 மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு[a] நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும். 30 நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யோனா ஓர் அடையாளமாக இருந்தான். மனித குமாரனுக்கும் அதுவே பொருந்தும். இக்காலத்தில் வாழும் மக்களுக்கு மனித குமாரனே ஓர் அடையாளமானவர்.
31 “நியாயம் தீர்க்கின்ற நாளில் இன்று வாழும் மக்களோடு தெற்கு தேசங்களின் இராணி எழுந்து நின்று, அவர்கள் செய்வது தவறு எனச் சுட்டிக்காட்டுவாள். ஏனெனில் அந்த இராணி சாலமோனின் ஞானமான போதனைகளைக் கேட்பதற்காகத் தொலை தூரத்தில் இருந்து வந்தவள். ஆனால், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
32 “நியாயம் தீர்க்கிற நாளில் இன்று வாழும் மக்களோடு நினிவேயின் மக்கள் எழுந்து நின்று, நீங்கள் தவறுடையவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏனெனில் அம்மக்களுக்கு யோனா போதித்தபோது, அவர்கள் தம் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நான் யோனாவைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
உலகின் ஒளி நீங்கள்
(மத்தேயு 5:15; 6:22-23)
33 “யாரும் பாத்திரத்தை விளக்கின் மேல் கவிழ்த்து வைப்பதோ, விளக்கை மறைத்து வைப்பதோ இல்லை. அதற்குப் பதிலாக விளக்கை விளக்குத் தண்டின்மீது வைத்து உள்ளே வருபவர் பார்க்கும்படியாக ஏற்றி வைப்பார்கள். 34 உங்கள் சரீரத்திற்கு உங்கள் கண்ணே விளக்காக இருக்கிறது. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரமும் ஒளி உடையதாக இருக்கும். உங்கள் கண்கள் கெட்டவையாக இருந்தால், உங்கள் சரீரமும் இருள் நிரம்பிக் காணப்படும். 35 எனவே கவனமாக இருங்கள். உங்களில் இருக்கும் ஒளி இருளாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 36 உங்கள் முழு சரீரமும் ஒளி வீசி எந்தப் பகுதியும் இருளாகாதபடி இருந்தால் நீங்கள் மின்னலைப்போல் ஒளி வீசுவீர்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center