Imprimir Opciones de la página Listen to Reading
Anterior Día anterior Día siguienteSiguiente

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 8-9

இஸ்ரவேலர் ஒரு அரசன் வேண்டும் என்று கேட்கிறார்கள்

சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். அவனது மூத்த மகனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது மகன்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் மகன்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு அரசனைத் தாருங்கள்” என்று கேட்டனர்.

எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு அரசனை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு அரசன் அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு அரசன் எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.

10 அவர்கள் சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். 11 அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு அரசன் வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் மகன்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி அரசனின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும்.

12 “அரசன் உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள்.

“அரசன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!

13 “அரசன் உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.

14 “அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். 15 உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான்.

16 “அரசன் உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். 17 உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.

“நீங்களோ அரசர்களுக்கு அடிமையாவீர்கள், 18 காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.

19 ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம். 20 அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர்.

21 சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான். 22 கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார்.

பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.

சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுகிறான்

பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் மகன். அபியேல் சேரோரின் மகன், சேரோர் பெகோராத்தின் மகன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் மகன். கீஸுக்கு சவுல் என்ற மகன் இருந்தான். இவன் அழகான இளைஞன். இவனைப்போல் அழகுள்ளவன் யாரும் இல்லை. இஸ்ரவேலில் எல்லோரும் இவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரம் இருந்தான்.

ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் மகன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான். சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக, சவுலும் வேலைக்காரனும் சூப் நாட்டிற்கு வந்தனர். சவுல் தன் வேலைக்காரனிடம், “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றான்.

ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான்.

சவுல் தன் வேலைக்காரனிடம், “உறுதியாக, நாம் நகருக்குள் போவோம், ஆனால் அவருக்கு எதைக் கொடுப்பது? தேவமனிதனுக்கு கொடுக்க அன்பளிப்புகள் எதுவுமில்லை. நம்மிடம் உணவு கூட இல்லையே?” என்றான்.

மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான்.

9-11 சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள்.

சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.)

12 அந்த இளம் பெண்கள், “ஆம், சீயர் இங்குதான் இருக்கிறார். அவர் சாலையில் சற்று தூரத்தில் தங்கி இருக்கிறார். அவர் இன்றுதான் ஊருக்கு வந்தார். சமாதான பலிகளைச் செலுத்துவதற்காக இன்று சிலர் அவரை ஆராதனை இடத்தில் சந்திக்கிறார்கள். 13 ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள்.

14 சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான்.

15 சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம், 16 “நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார்.

17 சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர், “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார்.

18 சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.

19 அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன். 20 மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான்.

21 அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பந்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான்.

22 பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான். 23 சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான்.

24 சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.

25 அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான். 26 சவுல் அதில் உறங்கினான்.

மறுநாள், அதிகாலையில் சவுலை மேல் வீட்டிற்கு அழைத்தான். “எழு, நான் உன்னை உன் வழியிலே அனுப்புவேன்” என்றான். அவனும் தயார் ஆகி சாமுவேலோடு வீட்டைவிட்டு வெளியேறினான்.

27 சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.

யோவான் 6:22-42

மக்கள் இயேசுவைத் தேடுதல்

22 மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். 23 அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன. 24 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.

ஜீவ அப்பமான இயேசு

25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.

26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.

28 “நாங்கள் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?” என்று மக்கள் இயேசுவிடம் கேட்டனர்.

29 “தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார்” என இயேசு பதிலுரைத்தார்.

30 “தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்? 31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ [a] என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.

32 “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு.

34 “ஆண்டவரே, எப்பொழுதும் அந்த அப்பத்தை எங்களுக்குத் தாரும்” என்றனர் மக்கள்.

35 “நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை. 36 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். 37 எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம்மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். 38 நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை. 39 தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான். 40 குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு.

41 பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார். 42 அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் மகன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர்.

சங்கீதம் 106:32-48

32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
    மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
    எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.

34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
    ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
    அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
    பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
    பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
    அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
    தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
    தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
    தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
    அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
    ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
    ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
    தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
    ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
    தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
    எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
    அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!
    கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.

நீதிமொழிகள் 14:34-35

34 நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்.

35 அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center