Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 15-16

யூதாவில் அசரியா அரசாண்டது

15 இஸ்ரவேலின் அரசனான யெரொபெயாமின் 27வது ஆட்சியாண்டின் போது அமத்சியாவின் மகனான அசரியா யூதாவின் அரசனானான். அசரியா அரசாள வந்தபோது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயார் எருசலேமின் எக்கோலியாள் ஆகும். அசரியா தன் தந்தையைப் போலவே, கர்த்தர் சொன்ன சரியான வழியில் வாழ்ந்து வந்தான். அமத்சியா செயலாற்றிய விதத்திலேயே அசரியாவும் பின்பற்றிச் செயலாற்றினான். இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. அந்த இடங்களில் ஜனங்கள் தொடர்ந்து பலி கொடுத்தும், நறுமணப் பொருட்களை எரித்தும், தொழுதுகொண்டும் வந்தனர்.

அசரியாவிற்குத் தொழுநோய் வரும்படி கர்த்தர் செய்தார். மரிக்கும்வரை இவன் தொழுநோயாளியாகவே இருந்தான். இவன் தனி வீட்டில் வாழ்ந்தான். இவனது மகனான யோதாம், அரண்மனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஜனங்களை நியாயம்தீர்த்து வந்தான்.

அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அசரியா மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். அசரியாவின் மகனான யோதாம் அவனுக்குப் பிறகு புதிய அரசனானான்.

இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி

யெரொபெயாமின் மகனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அரசாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது. கர்த்தரால் தவறானவை என்று சொல்லப்பட்ட அனைத்துக் காரியங்களையும் சகரியா செய்தான். அவன் தன் முற்பிதாக்கள் செய்த பாவங்களையே செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.

10 யாபேசின் மகனான சல்லூம் என்பவன் சகரியாவிற்கு எதிராக திட்டம் தீட்டினான். ஜனங்களுக்கு முன்பு இப்லேயிமில் கொன்று விட்டு புதிய அரசனானான். 11 சகரியா செய்த மற்ற செயல்களைப்பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 12 இவ்வாறு கர்த்தருடைய வார்த்தைகள் உண்மையானது. கர்த்தர் யெகூவிடம் அவனது சந்ததியார் 4 தலைமுறையினர் இஸ்ரவேல் தேசத்தை ஆள்வார்கள் என்று கூறியிருந்தார்.

இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி

13 யாபேசின் மகனான சல்லூம் என்பவன், யூதா வின் அரசனான உசியாவின் 39ஆம் ஆட்சியாண்டில் இஸ்ரவேலின் அரசனானான். சல்லூம் ஒரு மாதம் சமாரியாவிலிருந்து ஆண்டான்.

14 காதியின் மகனான மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து யாபேசின் மகனான சல்லூமை வெட்டிக்கொன்றான். பிறகு அவன் புதிய அரசன் ஆனான்.

15 சகரியாவுக்கு எதிராக, சல்லூம் செய்த சதிகள் உட்பட, அவனுடைய எல்லா மீதியான செயல்களைப் பற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது

16 சல்லூம் மரித்தபிறகு, மெனாகேம் திப்சாவையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தோற்கடித்தான். ஜனங்கள் அவனுக்கு நகர வாசலைத் திறக்க மறுத்தனர். எனவே அவன் அவர்களைத் தோற்கடித்ததும் நகரத்திலுள்ள கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.

17 மெனாகேம் எனும் காதியின் மகன் இஸ்ரவேலின் புதிய அரசன் ஆனபோது, யூதாவில் அசரியாவின் 39வது ஆட்சியாண்டு நடைபெற்றது. மெனாகேம் பத்து ஆண்டுகள் சமாரியாவிலிருந்து அரசாண்டான். 18 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட செயல்களையெல்லாம் மெனாகேம் செய்து வந்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.

19 அசீரியாவின் அரசனான பூல், இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிடவந்தான். மெனாகேம் அவனுக்கு 75,000 பவுண்டு வெள்ளியைக் கொடுத்தான். இவ்வாறு கொடுத்ததன் மூலம் பூலின் உதவியைப் பெற்று தனது அரசை வலுப்படுத்திக்கொண்டான். 20 அனைத்து செல்வர்களிடமும் வல்லமை உள்ளவர்களிடமும் வரி வசூல் செய்து மெனாகேம் செல்வத்தைப் பெருக்கினான். அவன் ஒவ்வொருவருக்கும் 50 வெள்ளி சேக்கல் வரி விதித்தான். பிறகு அதனை இவன் அசீரியாவின் அரசனுக்குக் கொடுத்து வந்தான். எனவே, அசீரியாவின் அரசன் இஸ்ரவேலில் தங்காமல் விலகிப்போனான்.

21 மெனாகேம் செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 22 மெனாகேம் மரித்ததும் இவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது மகனான பெக்காகியா புதிய அரசன் ஆனான்.

இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது

23 மெனாகேமின் மகனான பெக்காகியா இஸ்ரவேலை சமாரியாவிலிருந்து ஆளத் தொடங்கினான். அப்போது யூதாவில் அசரியாவின் 50வது ஆட்சியாண்டு நடந்துக் கொண்டிருந்தது. பெக்காகியா இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். 24 கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களையெல்லாம் பெக்காகியா செய்து வந்தான். இவனும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.

25 பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் மகனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா அரசனின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய அரசன் ஆனான்.

26 பெக்காகியா செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது

27 ரெமலியாவின் மகனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான். 28 கர்த்தரால் தவறென்று சொல்லப்பட்ட செயல்களையே பெக்கா செய்துவந்தான். இவன், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.

29 அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசர், வந்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டான். அப்போது இஸ்ரவேலில் பெக்காவின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. திகிலாத்பிலேசர், ஈயோன், பெத்மாக்கா எனும் ஆபேல், யனோவாக், கேதேஸ், ஆத்சோர், கீலேயாத், கலிலேயா, நப்தலியின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி இப்பகுதியிலுள்ள ஜனங்களைச் சிறைபிடித்து அசீரியாவிற்குக் கொண்டுபோனான்.

30 ஏலாவின் மகனான ஒசெயா என்பவன் ரெமலியாவின் மகனான பெக்காவிற்கு எதிராகச் சதிசெய்தான். அவனை உசியாவின் மகனாகிய யோதாமின் 20ஆம் ஆட்சியாண்டில் வெட்டிக்கொன்றான். புதிய அரசனானான்.

31 பெக்காவின் மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

யூதாவை யோதாம் அரசாண்டது

32 உசியாவின் மகனான யோதாம் யூதாவின் அரசனானான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் மகனான பெக்காவின் இரண்டாவது ஆட்சியாண்டு நடந்தது. 33 யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் மகள் ஆவாள். 34 யோதாம் தன் தந்தை உசியாவைப் போன்று, கர்த்தர் சரி என்று சொன்னதை செய்துவந்தான். 35 ஆனால் இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடர்ந்து அந்த இடங்களில் பலியிட்டும் நறு மணப் பொருட்களை எரித்தும் தொழுதுகொண்டும் வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மேல் கதவைக் கட்டினான். 36 யோதாமின் மற்ற அருஞ்செயல்களெல்லாம் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

37 அப்போது, கர்த்தர் ஆராமின் அரசனான ரேத்சீனையும், ரெமலியாவின் மகனான பெக்காவையும் யூதாவிற்கு எதிராகப் போரிட அனுப்பத் தொடங்கினார்.

38 யோதாம் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது மகனான ஆகாஸ் என்பவன் புதிய அரசன் ஆனான்.

ஆகாஸ் யூதாவின் அரசன் ஆனது

16 யோதாமின் மகனான ஆகாஸ் என்பவன் யூதாவின் அரசன் ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் மகனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது. ஆகாஸ் அரசனாகும்போது அவனது வயது 20, அவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். நல்லதென்று கர்த்தர் சொன்னவற்றை ஆகாஸ் செய்யவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்த தனது முற்பிதாவான தாவீதைப்போன்று இவன் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. இவன் இஸ்ரவேலின் மற்ற அரசர்களைப்போன்று ஆண்டு வந்தான். அவன் தன் மகனையும் தகனபலியாகக் கொடுத்தான். இஸ்ரவேலர்கள் வந்தபொழுது, கர்த்தர் நாட்டை விட்டுத் துரத்திய ஜனங்கள் செய்துவந்ததுபோன்ற பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தான். ஆகாஸ் மேடைகளில் பலியிட்டும் நறுமணப் பொருட்களை எரித்தும் வந்தான். மேடை, மலைஉச்சி, ஒவ்வொரு மரத்தடி என அனைத்து இடங்களிலும் தொழுதுகொண்டு வந்தான்.

பிறகு, ஆராமின் அரசனான ரேத்சீன் என்பவனும், இஸ்ரவேலின் அரசனாகிய ரெமலியாவின் மகனான பெக்கா என்பவனும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். அவர்கள் ஆகாசை முற்றுகையிட்டனர். ஆனால், தோற்கடிக்க முடியவில்லை. அப்போது ஆராம் அரசனான ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பப் பெற்றான். ஏலாத்திலிருந்து யூதர்கள் அனைவரையும் திரும்ப எடுத்துக் கொண்டான். ஆராமியர்கள் ஏலாத்தில் குடியேறினார்கள். இன்றுவரை அங்கே அவர்கள் இருக்கின்றனர்.

ஆகாஸ் அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசரிடம் தூதுவனை அனுப்பினான். “நான் உங்கள் சேவகன். நான் உங்களுக்கு மகனைப் போன்றவன். என்னை ஆராம் அரசனிடமிருந்தும் இஸ்ரவேல் அரசனிடமிருந்தும் வந்து காப்பாற்றுங்கள். அவர்கள் என்னோடு போர் செய்ய வருகிறார்கள்!” என்று தூதுவிட்டான். ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் காணிக்கையாக அனுப்பினான். அசீரியாவின் அரசன், ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.

10 அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசரை சந்திக்க அரசன் ஆகாஸ் தமஸ்குவுக்குப்போனான். ஆகாஸ் அங்கே பலி பீடத்தைப் பார்த்தான். அவன் அதனுடைய மாதிரியையும் வடிவத்தையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அதேபோல ஒரு பலிபீடம் செய்வதற்காக அனுப்பினான். 11 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பி வருவதற்குள் ஆசாரியன் உரியா அரசனால் அனுப்பப்பட்ட மாதிரியின்படியே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான்.

12 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பியதும், பலிபீடத்தைப் பார்த்தான். அதில் பலிகளைச் செலுத்தினான். 13 அதில் அவன் தகன பலியையும் தானிய காணிக்கைகளையும் செலுத்தினான். அதோடு, பானங்களின் காணிக்கையையும் சமாதானப் பலியின் இரத்தத்தையும் இந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

14 கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான். 15 ஆசாரியனாகிய உரியாவிற்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “நீ இந்த பெரிய பலிபீடத்தின் மேல் காலைச் சர்வாங்க தகனபலியையும் மாலை தானியக் காணிக்கையையும் தேசத்தின் ஜனங்களின் சர்வாங்கத் தகன பலியையும் அவர்களது தானியக் காணிக்கைகளையும் பானங்களின் காணிக்கையையும் செலுத்தவேண்டும். அதன்மேல் சர்வாங்க தகனபலி மற்றும் உயிர் பலிகளின் இரத்தத்தையும் தெளிப்பாய். நான் என் சொந்தக் காரியத்துக்கு தேவனிடம் கேட்க, (விசாரிக்க), (வழிகாட்ட) மட்டும் வெண்கலப் பலிபீடத்தைப் பயன்படுத்துவேன்” என்று கூறினான். 16 அதன்படியே ஆசாரியன் உரியா அனைத்தையும் ஆகாஸ் அரசன் அவனுக்குக் கட்டளையிட்டபடி செய்தான்.

17 மேலும் ஆகாஸ் அரசன் வண்டிகளில் உள்ள சவுக்குகளை (பீடங்களை) அறுத்தான். அவற்றின் மேலுள்ள கொப்பறைகளை எடுத்தான். வெண்கலக் காளைகளின் மேலிருந்த பெரிய (கடல்) தொட்டியை இறக்கி கற்களின் தள வரிசையில் வைத்தான். 18 ஆலயத்தின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் (மண்டபத்தை) ஆகாஸ் நீக்கினான். மேலும் அரசன் பிரவேசிக்கும் மண்டபத்தையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நீக்கினான். இவை அனைத்தையும் ஆலயத்திலிருந்து நீக்கி அரசன் அவற்றை அசீரியரின் அரசனுக்குக் கொடுத்தான்.

19 ஆகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 20 ஆகாஸ் மரித்ததும் தாவீது நகரத்திலே தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனது மகனான எசேக்கியா புதிய அரசன் ஆனான்.

அப்போஸ்தலர் 19:13-41

13-14 சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு மகன்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர்.

15 ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது.

16 மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள்.

17 எபேசுவின் எல்லா ஜனங்களும், யூதரும் கிரேக்கரும் இதனை அறிந்தனர். தேவனிடம் மிகுந்த மரியாதை கொள்ளத் துவங்கினர். கர்த்தராகிய இயேசுவின் பெயரை மக்கள் அதிகமாக மகிமைப்படுத்த ஆரம்பித்தனர்.

18 விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள். 19 சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன. 20 இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.

பவுல் பயணத்திட்டம்

21 இக்காரியங்களுக்குப் பிறகு, பவுல் எருசலேமுக்குச் செல்லத் திட்டமிட்டான். மக்கதோனியா, அகாயா நாடுகள் வழியாகச் சென்று, பின் எருசலேமுக்குச் செல்லப் பவுல் திட்டமிட்டான். பவுல், “நான் எருசலேமை அடைந்த பிறகு, ரோமையும் பார்க்க வேண்டும்” என்று எண்ணினான். 22 தீமோத்தேயுவும், எரஸ்துவும் பவுலுக்கு உதவியவர்களில் இருவர். மக்கதோனியாவுக்கு அவர்களைத் தனக்கு முன்பாகவே பவுல் அனுப்பினான். ஆசியாவில் இன்னும் சிலகாலம் பவுல் தங்கியிருந்தான்.

எபேசுவில் குழப்பம்

23 ஆனால் அக்காலத்தில் எபேசுவில் மிகத் தீவிரமான ஒரு குழப்பம் ஏற்பட்டது. தேவனுடைய வழியைக் குறித்த குழப்பம் அது. அவையெல்லாம் இவ்வாறு நிகழ்ந்தன. 24 தெமெத்திரியு என்னும் பெயர் கொண்ட மனிதன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளி வேலை செய்பவனாக இருந்தான். ஆர்தமிஸ் தேவதையின் தேவாலயத்தைப் போன்று தோற்றமளித்த வெள்ளியாலான சிறிய மாதிரி தேவாலயங்களை அவன் செய்து வந்தான். இவ்வேலையைச் செய்தவர்கள் மிகுந்த பணம் சம்பாதித்தார்கள்.

25 இதே வேலையைச் செய்து வந்தவர்கள் அனைவரையும் அதன் தொடர்பான வேலையைச் செய்தவர்களையும் தெமெத்திரியு ஒன்று கூட்டினான். தெமெத்திரியு அவர்களை நோக்கி, “நமது வளம் இத்தொழிலைச் சார்ந்துள்ளதை அறிவீர்கள். 26 ஆனால் இந்த மனிதன் பவுல் செய்துகொண்டிருப்பதைப் பாருங்கள்! அவன் சொல்வதைக் கேளுங்கள்! பவுல் மனிதர்களைத் தூண்டி, மனம் மாற்றிவிட்டான். எபேசுவிலும் அநேகமாக ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதைச் செய்திருக்கிறான். மனிதன் செய்கின்ற கடவுள் சிலைகள் உண்மையானவை அல்ல என்று பவுல் சொல்கிறான். 27 பவுல் சொல்கின்ற இந்தக் காரியங்கள் மக்களை, நமது வேலைக்கெதிராகத் திருப்பக்கூடும். ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. பெரிய தேவியான ஆர்தமிஸின் தேவாலயம் முக்கியமானதல்ல என்று மக்கள் நினைக்கக் கூடும். அவளது பெருமை அழிக்கப்படக்கூடும். ஆசியாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் வழிப்படுகின்ற தேவதை ஆர்தமிஸ் ஆவாள்” என்றான்.

28 அம்மனிதர்கள் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமுற்றனர். அவர்கள், “எபேசு பட்டணத்தார்களின் தேவியான ஆர்தமிஸே பெரியவள்” என்று உரக்க கூவினர். 29 நகரத்தின் எல்லா மக்களும் குழப்பமான நிலையில் காயுவையும், அரிஸ்தர்க்குவையும் பிடித்தார்கள். (இவ்விருவரும் மக்கதோனியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பவுலோடு பயணம் செய்துகொண்டிருந்தனர்.) பின் எல்லா மக்களும் அரங்கிற்குள் ஓடினார்கள். 30 பவுல் உள்ளே சென்று கூட்டத்தில் பேச விரும்பினான். ஆனால் இயேசுவின் சீஷர்கள் அவனைப் போக அனுமதிக்கவில்லை. 31 மேலும் நாட்டின் சில தலைவர்கள் பவுலின் நண்பர்களாக இருந்தனர். இத்தலைவர்கள் அவனுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அவர்கள் பவுல் அரங்கிற்குள் செல்ல வேண்டாமென்று கூறினர்.

32 ஒருவர் சத்தம் போட்டு ஒன்றையும் இன்னொருவர் சத்தம் போட்டு இன்னொன்றையும் சொன்னார்கள். மேலும் அவர்கள் எதற்காகக் கூடியிருக்கிறார்கள் என்பதைப் பெரும்பாலோர் அறியாதவாறு கூட்டத்தில் குழப்பம் மிகுந்திருந்தது. 33 யூதர்கள் அலெக்ஸாண்டர் என்னும் பெயருள்ள ஒருவனை மக்கள் முன்பாக நிறுத்தினர். அவன் செய்ய வேண்டியதை மக்கள் அவனுக்கு விளக்கினார்கள். மக்களுக்குக் காரியங்களை விளக்கவேண்டியிருந்ததால் அலேக்ஸாண்டர் தனது கையை அமைதிக்காக அசைத்தான். 34 அலெக்ஸாண்டர் ஒரு யூதன் என்பதை மக்கள் அடையாளம் கண்டபோது அவர்கள் எல்லோரும் உரத்த குரலில் கூச்சலிட ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மக்கள் “எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை பொருந்தியவள்! எபேசுவின் ஆர்தமிஸ் பெருமை மிக்கவள்! ஆர்தமிஸ் பெரியவள்!” என்றனர்.

35 நகர அலுவலன் மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினான். அவன், “எபேசுவின் மக்களே! ஆர்தமிஸ் தேவியின் தேவாலயத்தையும் பரலோகத்திலிருந்து விழுந்த அவளது பரிசுத்தப் பாறையையும் [a] பெற்ற நகரம் எபேசு என்பதை எல்லா மக்களும் அறிவர். 36 இவற்றை யாரும் மறுக்க முடியாது. எனவே நீங்கள் அமைதியாக இருங்கள். முரட்டுத்தனமாக எதையும் செய்யாதீர்கள்

37 “நீங்கள் இந்த மனிதர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால் நமது தேவிக்கு விரோதமாக அவர்கள் எதுவும் கூறவில்லை. அவள் தேவாலயத்திலிருந்து அவர்கள் எதையும் திருடவில்லை. 38 நம்மிடம் நீதி வழங்கும் மன்றங்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள். தெமெத்திரியுக்கும், தொழில் வல்லுநர்களுக்கும் எவருக்கேனும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றனவா? அவர்கள் நீதிமன்றத்திற்குப் போக வேண்டும்! அங்கே குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுக்களையும் வைக்கலாம்.

39 “நீங்கள் பேசவேண்டியது வேறு ஏதேனும் உள்ளதா? அப்படியானால் மக்களின் நகரமன்றம் நமக்கிருக்கிறது. அங்கு முடிவெடுக்கலாம். 40 நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று ஒருவன் இந்தத் தொல்லையைப் பார்த்துவிட்டு, நாம் கலகத்தை உண்டாக்குகிறோம் என்று கூறலாம். இந்தத் தொல்லையை நம்மால் விளக்க முடியாது, ஏனெனில் இக்கூட்டத்திற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை” என்றான். 41 நகர அலுவலன் இவற்றைக் கூறிய பிறகு, அவன் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு கூறினான். எல்லா மக்களும் கலைந்தார்கள்.

சங்கீதம் 147

147 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள்.
    அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது.
கர்த்தர் எருசலேமைக் கட்டினார்.
    சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார்.
தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி,
    அவர்கள் காயங்களைக் கட்டுகிறார்.
தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார்.
    ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.
நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
    அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
    அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை.
கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார்.
    ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார்.
கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள்.
    கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார்.
    தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
    தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார்.
தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார்.
    தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார்.
10 போர்க் குதிரைகளும்
    வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள்.
11 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள்.
    அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
12 எருசலேமே, கர்த்தரைத் துதி!
    சீயோனே, உன் தேவனைத் துதி!
13 எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார்.
    தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.
14 உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார்.
    எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை.
    உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது.
15 பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார்.
    அது உடனே கீழ்ப்படிகிறது.
16 நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார்.
    உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
17 தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார்.
    அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது.
18 அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது.
    பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது.

19 தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார்.
    தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார்.
20 தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை.
    தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.

கர்த்தரைத் துதியுங்கள்!

நீதிமொழிகள் 18:4-5

ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.

ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center