Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 13-14

யோவாகாசின் ஆட்சி தொடக்கம்

13 சமாரியாவில் யெகூவின் மகனான யோவாகாஸ் இஸ்ரவேலின் புதிய அரசன் ஆனான். இது அகசியாவின் மகனான யோவாசின் 23வது ஆட்சியாண்டின்போது ஏற்பட்டது. யோவாகாஸ் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

கர்த்தருக்கு வேண்டாதவற்றையே யோவாகாஸ் செய்து வந்தான். இஸ்ரவேலரின் பாவத்துக்குக் காரணமாயிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவச்செயல்களை இவனும் பின்பற்றினான். அதனைச் செய்வதை நிறுத்தவில்லை. அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் அரசன் ஆசகேலின் கையிலும், ஆசகேலின் மகனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் இரக்கம் காட்டுகிறார்

பிறகு தமக்கு உதவி செய்யும்படி யோவாகாஸ் கர்த்தரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தரும் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். ஆராம் அரசன் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்துவதைக் கவனித்தார்.

எனவே கர்த்தர் இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒருவனை அனுப்பினார். இஸ்ரவேலர்கள் ஆராமியர்களிடமிருந்து விடுதலை பெற்றனர். முன்பு போல, அவர்கள் தமது கூடாரங்களுக்கு (வீடுகள்) சென்றனர்.

எனினும் அவர்கள் தாம் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் பாவம் செய்வதற்குக் காரணமான யெரொபெயாமின் குடும்பத்தார் பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அவர்கள் சமாரியாவில் அஷெரா தூண்களையும் வைத்திருந்தனர்.

ஆராமின் அரசன் யோவாகாசின் படையைத் தோற்கடித்தான். படையில் பல வீரர்களைக் கொன்றான். 50 குதிரை வீரர்கள், 10 இரதங்கள், 10,000 காலாட் வீரர்களை மட்டுமே விட்டுவிட்டான். யோவாகாசின் வீரர்கள் காலடியில் மிதிபட்ட தூசியைப்போன்று ஆனார்கள்.

யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.

யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டது

10 யோவாகாசின் மகன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் அரசன் ஆனான். இது யூதாவின் அரசனாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான். 11 யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த, பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான். 12 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் அரசனான அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 13 யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் அரசனாக அமர்ந்தான்.

யோவாஸ் எலிசாவை சந்திக்கிறான்

14 எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் அரசனான யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” [a] என்றான்.

15 எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான்.

யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான். 16 பிறகு எலிசா இஸ்ரவேல் அரசனிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை அரசனின் கையோடு வைத்தான். 17 எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான்.

யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான்.

18 எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் அரசனிடம் கூறினான்.

யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான். 19 அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.

எலிசாவின் கல்லறையில் நிகழ்ந்த அதிசயம்

20 எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். 21 சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!

ஆராமியர்களோடு போரிட்டு யோவாஸ் இஸ்ரவேலிய நகரங்களை மீட்டது

22 யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் அரசனான ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான். 23 ஆனால் கர்த்தர் இஸ்ரவேலர்கள் மேல் கருணையோடு இருந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக கர்த்தர் இஸ்ரவேலர்களை அழிப்பதில்லை. இன்னும் அவர்களை தூர எறியவில்லை.

24 ஆராமின் அரசனான ஆசகேல் மரித்தான், அவனது மகனான பெனாதாத் புதிய அரசன் ஆனான். 25 அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான். ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் மகனான பெனாதாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.

யூதாவில் அமத்சியா ஆட்சி செய்தல்

14 இஸ்ரவேலின் அரசனாகிய யோவாகாசின் மகன் யோவாசின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யூதாவின் அரசனாகிய யோவாசின் மகன் அமத்சியா அரசன் ஆனான். அவன் தனது 25வது வயதில் அரசன் ஆனான். எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் எருசலேம் நகரத்தைச் சேர்ந்த யொவதானாள். அவன் கர்த்தரால் சரியானவை என்று சொல்லப்பட்ட காரியங்களைச் செய்தான். ஆனால் தனது முற்பிதா தாவீதைப் போன்று முழுமையாக தேவனைப் பின்பற்றவில்லை. தந்தை யோவாஸ் செய்த பல செயல்களை இவனும் செய்தான். இவனும் பொய் தெய்வங்களின் கோவில்களை அழிக்கவில்லை. ஜனங்கள் அங்கு தொழுதுக் கொள்ள பலிகள் இடுவதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.

அமத்சியா கையில் ஆட்சி உறுதியான போது, தனது தந்தையைக் கொன்ற வேலைக்காரர்களை (அதிகாரிகளைக்) கொன்றான். ஆனால் அவன் மோசேயின் சட்டங்களின் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, கொலையாளிகளின் குழந்தைகளைக் கொல்லவில்லை. கர்த்தர் தன் ஆணைகளையே அந்த புத்தகத்தில் மோசே மூலம் எழுதியுள்ளார். மோசே, “குழந்தைகள் செய்த தவறுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் கொல்லப்படக் கூடாது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு மாத்திரமே மரணத்தை அடையவேண்டும்” என்று எழுதியுள்ளான்.

அவன் 10,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் கொன்றுபோட்டான். சேலாவைப் போர் மூலம் பிடித்து அவனை “யொக்தியேல்” என்று அழைத்தான். அந்த இடம் இன்றும் “யொக்தியேல்” என்று அழைக்கப்படுகிறது.

அமத்சியா யோவாசுக்கு எதிராகப் போர்செய்ய விரும்பியது

அமத்சியா தூதுவர்களை யெகூவின் மகனும் யோவாகாசின் மகனும், இஸ்ரவேலின் அரசனுமான யோவாசிடம் அனுப்பினான். அவன், “வா, நேரில் ஒருவரையொருவர் சந்தித்து போரிட்டுப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டான்.

இஸ்ரவேலரின் அரசனான யோவாஸ் அதற்குப் பதிலாக யூத அரசன் அமத்சியாவிற்கு, “லீபனோனிலுள்ள முட்செடியானது கேதுரு மரத்தை நோக்கி, ‘நீ உன் மகளை என் மகனுக்கு மணமுடித்துக் கொடு’ என்று சொல்லச்சொன்னது. ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10 நீ ஏதோமியரைத் தோற்கடித்ததால் உன் மனம் உன்னைக் கர்வம் கொள்ளச்செய்தது. நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலேயே இரு! நீ இதனைச் செய்தால், நீ விழுவாய், யூதாவும் உன்னோடு விழும்” என்றான்.

11 ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் அரசனாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர். 12 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள். 13 பெத்ஷிமேஸ், என்னும் இடத்தில் இஸ்ரவேலின் அரசனான யோவாஸ், அகசியாவின் மகன் யூதாவின் அரசனான அமத்சியாவைச் சிறை பிடித்தான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோய், எருசலேமிலுள்ள சுவரை, 600 அடி நீளத்திற்கு எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல்மட்டும் இடித்துப்போட்டான். 14 பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.

15 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவன், அமத்சியாவிற்கு எதிராக எவ்வாறு போரிட்டான் என்ற விளக்கமும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 16 யோவாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் இஸ்ரவேல் அரசர்களோடு கூடவே சமாரியாவில் அடக்கமானான். யோவாசின் மகனான யெரொபெயாம் புதிய அரசன் ஆனான்.

அமத்சியாவின் மரணம்

17 இஸ்ரவேல் அரசனான யோவாசின் மகனான அமத்சியா, இஸ்ரவேலின் அரசனான யோவாகாசின் மகனான யோவாஸ் மரித்தபின், 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். 18 அமத்சியாவின் மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 19 எருசலேமில் அமத்சியாவிற்கு எதிராக ஜனங்கள் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஆனால் ஜனங்கள் லாகீசுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் அவனை அங்கே கொன்றனர். 20 ஜனங்கள் அமத்சியாவின் உடலைக் குதிரையில் வைத்துக் கொண்டுவந்தனர். அவனை தாவீதின் நகரத்தில் எருசலேமில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

யூதாவில் அசரியா தனது ஆட்சியைத் தொடங்குதல்

21 பிறகு யூதாவிலுள்ள அனைத்து ஜனங்கள், அமத்சியாவின் மகன் அசரியாவைப் புதிய அரசனாக்கினர். அப்போது அவனுக்கு 16 வயது. 22 ஆகையால் அமத்சியா அரசன் மரித்து அவனது முற்பிதாக்களோடு அடக்கமான பிறகு அசரியா மீண்டும் ஏலாதைக்கட்டி, அதனை யூதாவிற்குத் திரும்பக் கொடுத்தான்.

இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி தொடங்கியது

23 யோவாசின் மகனான பெரொபெயாம் இஸ்ரவேல் அரசனாக சமாரியாவில் ஆட்சியைத் தொடங்கி 41 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அப்போது யூதாவின் அரசனாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்தாம் ஆட்சியாண்டில் இருந்தான். 24 தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே யெரொபெயாம் செய்துவந்தான். இஸ்ரவேலுக்கு பாவத்தைக் கொண்டுவந்த நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவச்செயல்களை இவன் நிறுத்தவில்லை. 25 யெரொபெயாம் லெபொ ஆமாத்தின் எல்லை முதல் அரபா கடல் மட்டுமுள்ள இஸ்ரவேல் பகுதிகளைத் திரும்ப சேர்த்துக்கொண்டான். இது, இஸ்ரவேலின் கர்த்தர் தமது ஊழியக்காரனான அமித்தாயின் மகனான யோனாவான காத்தேப்பேரிலிருந்து வந்த தீர்க்கதரிசி மூலம் சொன்னபடி நிகழ்ந்தது. 26 இஸ்ரவேலில் ஒவ்வொருவரும், அவர்கள் அடிமைகளாகவோ அல்லது சுதந்திரமானவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் துன்பப்படுவதைக் கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர்களுக்கு உதவ ஒருவர் கூட மீதியாக இருக்கவில்லை 27 உலகத்திலிருந்து இஸ்ரவேலர்களின் பெயரை எடுத்து விடவேண்டுமென்று கர்த்தர் என்றும் சொன்னதில்லை. எனவே கர்த்தர் யோவாசின் மகனான யெரொபெயாம் மூலம் இஸ்ரவேல் ஜனங்களைக் காப்பாற்றினார்.

28 யெரொபெயாம் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவரது வலிமையும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் யெரொபெயாம் தமஸ்குவையையும் ஆமாத்தையும் போரிட்டு இஸ்ரவேலோடு சேர்த்துக் கொண்டதும் உள்ளது. (இந்நகரங்கள் யூதாவோடு சேர்ந்திருந்தது) 29 யெரொபெயாம் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். யெரொபெயாமின் மகனான சகரியா அடுத்த புதிய அரசன் ஆனான்.

அப்போஸ்தலர் 18:23-19:12

23 பவுல் அந்தியோகியாவில் சிலகாலம் தங்கியிருந்தான். பின் அவன் கலாத்தியா, பிரிகியா நாடுகள் வழியாகச் சென்றான். இந்நாடுகளில் பவுல் ஊர் ஊராகப் பயணம் செய்தான். அவன் இயேசுவின் சீஷர்கள் அனைவரையும் பலப்படுத்தினான்.

அப்பொல்லோவின் ஊழியம்

24 அப்பொல்லோ என்னும் பெயருள்ள யூதன் எபேசுவிற்கு வந்தான். அப்பொல்லோ, அலெக்ஸாண்டிரியா நகரத்தில் பிறந்தவன். அவன் கல்வியில் தேர்ந்தவன். அவன் வேத வாக்கியங்களை வல்லமையுடன் பயன்படுத்தினான். 25 கர்த்தரைப் பற்றி அவன் கற்றிருந்தான். அப்பொல்லோ ஆன்மீக உற்சாகம் நிரம்பியிருந்தான். இயேசுவைக் குறித்து மக்களிடம் பேசிக்கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்து சரியான கருத்துக்களையே அப்பொல்லோ கற்பித்தான். அவனுக்குத் தெரிந்தது யோவானின் ஞானஸ்நானம் மட்டுமே. 26 அப்பொல்லோ ஜெப ஆலயங்களில் துணிவாகப் பேசத் தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவன் துணிவுடன் அதைச் செய்தான். அவன் பேசுவதைப் பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் கேட்டனர். அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தேவனுடைய வழியை இன்னும் துல்லியமாக அறிய உதவினார்கள்.

27 அகாயா நாட்டிற்குப் போவதற்கு அப்பொல்லோ விரும்பினான். அதற்கு எபேசுவின் சகோதரர்கள் அவனுக்கு உதவினர். அகாயாவிலுள்ள இயேசுவின் சீஷர்களுக்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் அப்பொல்லோவை இச்சீஷர்கள் வரவேற்குமாறு அவர்கள் கேட்டனர். அகாயாவில் உள்ள இந்தச் சீஷர்கள் தேவனுடைய கிருபையின் மூலமாக இயேசுவில் விசுவாசம் வைத்திருந்தார்கள். அப்பொல்லோ அங்கு வந்து சேர்ந்தபொழுது அவன் அவர்களுக்கு மிகவும் உதவினான். 28 அவன் எல்லா மக்களுக்கும் முன்பாக யூதர்களுக்கு எதிராக மிக வன்மையாக வாதிட்டான். யூதர்கள் தவறான போதனைகளைப் பெற்றிருந்தார்கள் என்பதை நிரூபித்தான். அவன் வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி இயேசுவே கிறிஸ்து என்று காட்டினான்.

எபேசுவில் பவுல்

19 அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.

இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர்.

எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான்.

அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள்.

பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான்.

அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.

பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். 10 பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர்.

ஸ்கேவாவின் பிள்ளைகள்

11 சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். 12 பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன.

சங்கீதம் 146

146 கர்த்தரை துதி!
    என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
    என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
    ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
    அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
    கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
    தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
    குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
    விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
    சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!

கர்த்தரைத் துதியுங்கள்!

நீதிமொழிகள் 18:2-3

மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.

ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center