Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 9:14-10:31

யெகூ யெஸ்ரயேலுக்குச் சென்றது

14 எனவே நிம்சியின் மகன் யோசபாத்தின் மகனான யெகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான்.

அப்போது, யோராமும் இஸ்ரவேலரும் சேர்ந்து ஆராமின் அரசனான ஆசகேலிடமிருந்து ராமோத் கீலேயாத்தை பாதுகாக்க முயன்றனர். 15 யோராம் அரசன் ஆசகேலுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் ஆராமிய வீரர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். அவனும் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போனான்.

எனவே யெகூ, அதிகாரிகளிடம, “என்னை நீங்கள் புதிய அரசனாக ஏற்றுக்கொள்வதானால் நகரத்திலிருந்து எவரும் தப்பித்துப் போய் இந்தச் செய்தியை யெஸ்ரயேலின் சொல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.

16 யோராம் யெஸ்ரயேலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். எனவே யெகூ இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். அப்போது யூதாவின் அரசனான அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.

17 ஒரு காவல்காரன் யெஸ்ரயேல் நகரக் கோபுரத்தின் மீது நின்று பார்த்தான். யெகூவின் பெரிய கூட்டம் வருவதைக் கவனித்து, “ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்றான்.

யோராம், “சிலரைக் குதிரையில் அனுப்பி அவர்களை சந்தித்து, அவர்கள் சமாதானத்தோடு வருகிறார்களா என்று விசாரியுங்கள்” என்றான்.

18 எனவே, தூதுவன் யெகூவை சந்திக்க குதிரையில் சென்றான். தூதுவன், “நீங்கள் சமாதானத்தோடு வருகிறீர்களா? என்று அரசன் கேட்கச் சொன்னார்” என்று கேட்டான்.

அதற்கு யெகூ, “சமாதானத்துடன் எந்த சம்பந்தமும் உனக்கு இல்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.

காவல்காரன் யோராமிடம், “தூதுவன் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டான். அவன் திரும்பி வரவில்லை” என்றான்.

19 பிறகு யோராம் இரண்டாவது தூதுவனை குதிரையில் அனுப்பினான். அவன் யெகூவிடம் சென்று, “யோராம் அரசன் ‘சமாதானம்’ சொன்னான்” என்றான்.

அதற்கு யெகூ, “சமாதானத்திற்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.

20 காவல்காரனோ யோராமிடம், “இரண்டாவது தூதுவனும் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டான். அவனும் திரும்பி வரவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போன்று ஒருவன் இரதத்தை ஓட்டுகிறான். நிம்சியின் மகனான யெகூவைப்போல அவன் தேரோட்டுகிறான்” என்றான்.

21 யோராம், “எனது இரதத்தைக் கொண்டு வா!” என்றான்.

வேலைக்காரர் அரசனின் இரதத்தைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலின் அரசனாகிய யோராமும் யூதாவின் அரசனான அகசியாவும் யெகூவை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் அவனை யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே சந்தித்தனர்.

22 யோராம் யெகூவைப் பார்த்து, “யெகூ, நீ சமாதானமாக வந்திருக்கிறாயா” என்று கேட்டான். அதற்கு யெகூ, “உன் தாயான யேசபேல் விபச்சாரமும் சூன்யமும் செய்து கொண்டிருக்கும்வரை சமாதானமாக இருக்கமுடியாது” என்றான்.

23 யோராம் குதிரையில் வேகமாகத் திரும்பினான். அவன் அகசியாவிடம், “அகசியா, இது தந்திரம்” என்றான்.

24 ஆனால் யெகூ தன் பலத்தையெல்லாம் கூட்டி வில்லில் அம்பை எய்தான். அம்பு அவனது முதுகில் துளைத்து இதயத்தின் வழியாகச் சென்றது. அவன் இரதத்திலிருந்து விழுந்து மரித்தான்.

25 யெகூ தனது இரத ஓட்டியான பித்காரிடம், “யோராமின் உடலை எடுத்து யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயலில் ஏறி. நானும் நீயும் யோரோமின் தந்தையான ஆகாபோடு பயணம் செய்யும்போது, இவனுக்கு இவ்வாறே நிகழும் என்று கர்த்தர் சொன்னதை எண்ணிப்பார். 26 கர்த்தர், ‘நேற்று நான் நாபோத் மற்றும் அவனது பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்த்தேன். நான் ஆகாபை இதே வயலில் தண்டிப்பேன்’, என்று சொன்னார்! எனவே, அவர் சொன்னபடியே, யோராமின் உடலை எடுத்து வயலுக்குள் வீசு!” என்றான்.

27 யூதாவின் அரசனான அகசியா இதனைப் பார்த்து ஓடிப்போனான். அவன் தோட்ட வீட்டிற்குப்போக, யெகூ அவனைத் துரத்திப்போனான். யெகூ, “அகசியாவை அவன் இரதத்தில் வெட்டிப் போடுங்கள்” என்றான்.

எனவே யெகூவின் ஆட்கள் அகசியாவை இப்லேயாம், அருகிலுள்ள கூர் மலைக்கான சாலையில் எய்தனர். அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கேயே மரித்துப்போனான். 28 அகசியாவின் வேலைக்காரர்கள் அவனது உடலை எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர். தாவீது நகரத்தில் முற்பிதாக்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.

29 இஸ்ரவேல் அரசன் யோராமின் 11வது ஆட்சியாண்டில் அகசியா யூதாவின் அரசனாகினான்.

யேசபேலின் பயங்கரமான மரணம்

30 யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். இச்செய்தியை யேசபேல் அறிந்தாள். தலையைச் சிங்காரித்து அலங்காரம் செய்து கொண்டு பிறகு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். 31 யெகூ நகரத்து வாசலில் நுழைந்ததும் அவள், “சிம்ரி! அவனை போல நீயும் உன் எஜமானனைக் கொன்றிருக்கிறாய்” என்றாள்.

32 யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, “என் பக்கத்தில் இருப்பது யார்?” என்று கேட்டான்.

மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள். 33 அவர்களிடம் யெகூ, “யேசபேலைக் கீழே தள்ளுங்கள்” என்றான்.

அவர்களும் அவ்வாறே கீழே அவளைத் தள்ளினார்கள். அவளது இரத்தத்தில் கொஞ்சம் சுவர் மீதும் குதிரைகள் மீதும் தெளித்தது. குதிரைகள் அவள் மேலே நடந்துச் சென்றன. 34 யெகூ, வீட்டிற்குள் போய் உண்டு குடித்தான். அவன், “இப்போது சபிக்கப்பட்ட இந்தப் பெண்ணைப் பாருங்கள். அரசனின் மகளாகையால் அவளை அடக்கம் செய்யுங்கள்” என்றான்.

35 அந்த ஆட்கள் அவளை அடக்கம்பண்ணச் சென்றனர். ஆனால் அவளது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அவளது கபாலம், கால்கள், கைகள், ஆகியவற்றையே கண்டுபிடித்தனர். 36 அவர்கள் யெகூவிடம் திரும்பிவந்தனர். பிறகு யெகூ, “இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தமது தொண்டனைக் கொண்டு சொன்ன வார்த்தை: ‘யெஸ்ரயேலின் நிலத்தில் யேசபேலின் மாமிசத்தை நாய்கள் தின்னும், என்றும் 37 இதுதான் யேசபேல் என்று சொல்ல முடியாதபடி அவளது பிணம் வயல் வெளியில் போடப்படும் எருவைப் போன்று ஆகும்’” என்றான்.

சமாரியாவின் தலைவர்களுக்கு யெகூ எழுதியது

10 ஆகாபின் 70 மகன்கள் (பேரன்கள்) சமாரியாவில் இருந்தனர். யெகூ, சமாரியாவில் அவர்களை வளர்க்கிறவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும், தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதி அனுப்பினான். 2-3 அதில் “இக்கடிதம் கண்டதும், உங்கள் எஜமானனுடைய பிள்ளைகளில் மிக நல்லவனும் மிகத் தகுதியானவனுமாகிய ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் இரதங்களும் குதிரைகளும் இருக்கின்றன. நீங்கள் பலப்படுத்தப்பட்ட நகரத்தில் இருக்கின்றீர்கள். உங்களிடம் ஆயுதங்களும் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுத்தவனை அவனுடைய தந்தையின் சிங்காசனத்தில் உட்கார வையுங்கள். பின் உங்கள் தந்தையின் குடும்பத்திற்காகப் போராட வாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் யெஸ்ரயேலில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் பயந்தனர். அவர்கள் “யெகூவை இரண்டு அரசர்களாலும் தடுக்க முடியவில்லை, எங்களாலும் முடியாது!” என்று சொன்னார்கள்.

ஆகாபின் வீட்டைப் பாதுகாத்தவர்களும் நகரத்தைப் பரிபாலித்தவர்களும் மூப்பர்களும் ஆகாபின் மகன்களைக் கவனிப்பவர்களும் யெகூவிற்குத் தூது அனுப்பி, “நாங்கள் உங்கள் சேவகர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்கிறோம். வேறு எவரையும் அரசனாக்கமாட்டோம். நீங்கள் நல்லதென நினைப்பதை செய்யுங்கள்” என்றனர்.

சமாரியாவின் தலைவர்கள் ஆகாபின் மகன்களைக் கொல்கிறார்கள்

பிறகு யெகூ அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினான். அதில், “நீங்கள் எனக்கு அடிபணிந்து உதவுவதாக இருந்தால், ஆகாப் மகன்களின் தலையை வெட்டிப்போடுங்கள். நாளை இந்நேரத்திற்குள் அவர்களை என் முன்னால் யெஸ்ரயேலுக்கு கொண்டு வாருங்கள்” என்றான்.

ஆகாபுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவர்கள் நகரத் தலைவர்களால் வளர்க்கப்பட்டனர். அவர்கள் யெகூவின் கடிதத்தைக் கண்டதும், அந்த 70 மகன்களையும் கொன்றுபோட்டனர். தலைகளைக் கூடைகளுக்குள் போட்டு யெஸ்ரயேலிலுள்ள யெகூவிடம் அனுப்பினார்கள். ஒரு தூதுவன் யெகூவிடம் வந்து, “அவர்கள் அரசனது மகன்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான்.

யெகூ, “விடியும்வரை நகர வாசலில் இரண்டு குவியலாக அத்தலைகளை வைத்திருங்கள்” என்று கட்டளையிட்டான்.

காலையில், யெகூ வெளியே வந்து ஜனங்கள் முன்பு நின்றான். அவன் ஜனங்களிடம், “நீங்கள் ஏதும் அறியாதவர்கள். நான் என் எஜமானனுக்கு எதிராகத் திட்டங்கள் பல வைத்திருந்தேன். நான் அவனைக் கொன்றேன். ஆனால் அவனது பிள்ளைகளைக் கொன்றது யார்? அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் தான்! 10 கர்த்தர் சொன்னபடி எல்லாம் நடக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். ஆகாபின் குடும்பத்தைப் பற்றி கர்த்தர் எலியாவின் மூலம் கூறியிருக்கிறார். இப்போது கர்த்தர் தான் செய்வதாகச் சொன்னவற்றைச் செய்து முடித்துள்ளார்” என்றான்.

11 இவ்வாறு யெகூ யெஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். அதோடு முக்கியமான மனிதர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஆசாரியர்களையும் கொன்றுப் போட்டான். ஆகாபின் ஆட்கள் யாருமே உயிரோடு விடப்படவில்லை.

அகசியாவின் உறவினர்களை யெகூ கொன்றது

12 யெகூ யெஸ்ரயேலை விட்டு சமாரியாவிற்குப் போனான். வழியில் மேய்ப்பனின் முகாம் என்று அழைக்கப்படும் இடத்தில் நின்றான். பெத்ஏகத்திற்குச் செல்லும் பாதையின் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றான். அங்கே மேய்ப்பர்கள் ஆட்டு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தார்கள். 13 யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்களை அங்கே சந்தித்தான். யெகூ அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?” என்றான்.

அதற்கு அவர்கள் “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். நாங்கள் அரசனின் மகன்களையும் ராஜ மாதாவின் (யேசபேல்) மகன்களையும் பார்ப்பதற்கு வந்திருக்கிறோம்” என்றனர்.

14 யெகூ (தன் ஆட்களிடம்) “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கூறினான்.

அவனது ஆட்கள் அவர்களை உயிரோடு பிடித்தனர். அவர்கள் மொத்தம் 42 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி பெத்ஏகத் கிணறுக்கு அருகில் அவர்களை கொன்றுபோட்டனர்.

யெகூ யோனதாபை சந்தித்தது

15 அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, “நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?” என்று கேட்டான்.

யோனதாபும், “ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்” என்றான்.

யெகூ, “அப்படியானால் உன் கையைக் கொடு” என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.

16 யெகூ, “என்னோடு வா, நான் கர்த்தரிடம் எவ்வளவு உறுதியான பக்தி வைத்திருக்கிறேன் என்று அறிந்துகொள்ளலாம்” என்றான்.

எனவே யோனதாப் யெகூவின் இரதத்தில் பயணம் செய்தான். 17 யெகூ சமாரியாவிற்கு வந்து அங்கு உயிரோடுள்ள ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றுபோட்டான். கர்த்தர் எலியாவிடம் சொன்னபடியே அவன் செய்து முடித்தான்.

பாகாலின் பக்தர்களை யெகூ அழைத்தது

18 பிறகு யெகூ அனைத்து ஜனங்களையும் சேர்த்துக் கூட்டினான். அவன் அவர்களிடம், “ஆகாப், பாகாலுக்குச் சிறிது சேவைசெய்தான். ஆனால் யெகூ அவனுக்கு மேல் இன்னும் கூடுதலாக சேவை செய்வான்! 19 இப்போது பாகாலின் பக்தர்களையும் ஆசாரியர்களையும் கூப்பிடுங்கள். இக்கூட்டத்திற்கு யாரையும் தவறவிடாதீர்கள். பாகாலுக்குக் கொடுக்க பெரும்பலி இருக்கிறது!. இக்கூட்டத்திற்கு வராதவர்களைக் கொல்வேன்!” என்று ஆணையிட்டான்.

இவ்வாறு யெகூ தந்திரம் செய்தான். அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதுதான் அவனது திட்டம். 20 யெகூ, அவர்களிடம், “பாகாலுக்காக ஒரு பரிசுத்த கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். ஆசாரியர்களும் அறிவித்தனர். 21 பிறகு யெகூ இஸ்ரவேல் நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பினான். பாகாலின் பக்தர்கள் அனைவரும் வந்தனர். எவரும் வீட்டிலே இல்லாமல் பாகாலின் ஆலயத்திற்கு வந்தனர். ஆலயம் ஜனங்களால் நிரம்பியது.

22 யெகூ மேலாடைகளை வைத்திருந்த வேலைக்காரனிடம், “பாகாலின் பக்தர்களுக்கெல்லாம் மேலாடைகளைக் கொண்டு வா” என்று சொன்னான். எனவே அந்த வேலைக்காரனும் பாகாலின் பக்தர்களுக்கு மேலாடைகளைக் கொண்டு வந்தான்.

23 பிறகு யெகூவும் ரேகாபின் மகனான யோனதாபும் பாகாலின் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். பாகாலின் தொண்டர்களிடம், “இங்கே பாகாலின் பக்தர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதை சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியர்கள் இருக்கக் கூடாது” என்று ஆணையிட்டான். 24 அதன்படி பாகாலின் பக்தர்கள் காணிக்கைகளையும் தகனபலிகளையும் செலுத்த ஆலயத்திற்குள் சென்றனர்.

வெளியே, யெகூவின் 80 ஆட்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “யாரையும் தப்பித்து போகும்படி விடாதீர்கள். எவனாவது எவனையாவது தப்பிக்கவிட்டால், அவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டும்” என்றான். 25 பிறகு யெகூ விரைவாகத் தகனபலி கொடுத்தபின், தனது அதிகாரிகளிடமும் தளபதிகளிடமும், “உள்ளே போய் அனைவரையும் கொல்லுங்கள், உயிரோடு எவனையும் வெளியே வரவிடாதீர்கள்” என்றான்.

எனவே தளபதிகள் தம் மெலிந்த வாள்களால் பாகாலின் பக்தர்களைக் கொன்று போட்டு பிணங்களை வெளியே எறிந்தனர். பின் ஆலயத்தின் உள்ளறைக்குள் சென்றனர். 26 ஞாபகக்கற்களை (தூண்கள்) பாகாலின் வீட்டைவிட்டு வெளியே எடுத்துப்போட்டு அவற்றை எரித்தனர். 27 பிறகு பாகாலின் நினைவுக் கற்களையும் பாகாலின் வீட்டினையும் நொறுக்கினார்கள். ஆலயத்தை ஓய்வறையாக ஒதுக்கினார்கள். எப்போதும் அசுத்தமாக வைத்திருந்தனர். ஜனங்கள் அந்த இடத்தை கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

28 இவ்வாறு யெகூ பாகால் ஆராதனையை இஸ்ரவேல் நாட்டில் அழித்தான். 29 ஆனால் யெகூ முழுவதுமாக நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களிலிருந்து திரும்பவில்லை. இஸ்ரவேலின் பாவத்துக்குக் காரணமான பெத்தேல், தாண் ஆகிய இடங்களில் உள்ள தங்கக் கன்றுக் குட்டிகளை அவன் அழிக்கவில்லை.

இஸ்ரவேல் மீது யெகூவின் ஆட்சி

30 கர்த்தர் யெகூவிடம், “நல்லது செய்தாய், நான் நல்லவை எனச் சொன்னதைச் செய்தாய். நீ ஆகாபின் குடும்பத்தினரை அழித்துவிட்டாய். எனவே இஸ்ரவேலை உனது சந்ததியார், நான்கு தலை முறைகளுக்கு ஆண்டு வருவார்கள்” என்றார்.

31 ஆனால் யெகூ முழுமனதோடு கர்த்தருடைய சட்டப்படி கவனமாக வாழவில்லை. அவன் யெரொபெயாமின் பாவங்களை விட்டுவிடவில்லை.

அப்போஸ்தலர் 17

தெசலோனிக்கேயில் பவுலும் சீலாவும்

17 அம்பிபோலி, அப்போலோனியா நகரங்கள் வழியாகப் பவுலும் சீலாவும் பிரயாணம் செய்தனர். அவர்கள் தெசலோனிக்கே நகரத்திற்கு வந்தனர். அந்நகரில் யூதர்களின் ஜெப ஆலயம் ஒன்று இருந்தது. யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான். வேதவாக்கியங்களை யூதர்களுக்கு பவுல் விவரித்தான். கிறிஸ்து இறக்க வேண்டும் என்பதையும், மரணத்திலிருந்து எழ வேண்டும் என்பதையும் காட்டினான். பவுல் “நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற மனிதனாகிய இயேசுவே கிறிஸ்து ஆவார்” என்றான். அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டு பவுலுடனும் சீலாவுடனும் இணைந்தார்கள். ஜெப ஆலயத்தில் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்க மனிதர்கள் இருந்தனர். அங்கு முக்கியமான பெண்மணிகள் பலரும் இருந்தனர். இவர்களில் பலரும் பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டனர்.

ஆனால் விசுவாசியாத யூதர்கள் பொறாமை கொண்டனர். நகரத்திலிருந்து சில தீய மனிதர்களை கூலிக்காக அமர்த்திக்கொண்டனர். இத்தீய மனிதர்கள் பல மக்களைச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் கலகம் விளைவித்தனர். பவுலையும் சீலாவையும் தேடிக்கொண்டு இந்த மனிதர்கள் யாசோனின் வீட்டிற்குச் சென்றனர். பவுலையும் சீலாவையும் நகர சபையின் முன்பாக அழைத்து வரவேண்டுமென்று அம்மனிதர்கள் கேட்டனர். ஆனால் அவர்கள் பவுலையும் சீலாவையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே மக்கள் யாசோனையும், வேறு சில விசுவாசிகளையும் நகரின் தலைவர்கள் முன்பாக இழுத்து வந்தனர். மக்கள் எல்லோரும், “இம்மனிதர்கள் உலகத்தின் எல்லா இடங்களிலும் கலகமுண்டாக்கினார்கள். இப்போது இவர்கள் இங்கும் வந்துவிட்டனர்! யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வைத்திருக்கிறான். இராயரின் சட்டங்களுக்கு எதிரான செயல்களை அவர்களெல்லாம் செய்கின்றனர். இயேசு என்னும் இன்னொரு மன்னன் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்” என்று கூக்குரலிட்டனர்.

நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள். யாசோனும் பிற விசுவாசிகளும் தண்டனைப் பணம் செலுத்தும்படியாகச் செய்தனர். பின் விசுவாசிகளை விடுதலை செய்து போகும்படி அனுமதித்தனர்.

பெரேயாவில் ஊழியம்

10 அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். 11 தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். 12 இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர்.

13 தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். 14 எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். 15 பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.

அத்தேனேயில் பவுல்

16 அத்தேனேயில் பவுல் சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் காத்துக்கொண்டிருந்தான். நகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு பவுல் மனக்கலக்கமடைந்திருந்தான். 17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான். 18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள்.

அவர்களில் சிலர், “தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்றுகொண்டிருக்கிறான்?” என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். எனவே அவர்கள், “வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாகப் படுகிறது” என்றனர்.

19 அவர்கள் பவுலைக் கண்டுபிடித்து அரியோபாகஸ் [a] சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், “நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள். 20 நீங்கள் சொல்லுபவை எங்களுக்குப் புதியவை. இவற்றைக் குறித்து நாங்கள் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இப்போதனையின் பொருள் என்ன என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர். 21 (அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)

22 அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், “அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 23 நான் உங்கள் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நீங்கள் வழிபடுகின்ற பொருட்களைப் பார்த்தேன். ‘ அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதப்பட்ட ஒரு பீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாத ஒரு தேவனை வழிபடுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற தேவன் அவரே!

24 “அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. 25 உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. 26 ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார்.

27 “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.

28 “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’

29 “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. 30 கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார். 31 தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார்” என்றான்.

32 இயேசு மரணத்தினின்று எழுதல் என்பதைக் கேள்விப்பட்டபோது அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்கள், “உங்களிடம் இதைக் குறித்து மேலும் பின்னர் கேட்போம்” என்றனர். 33 எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான். 34 ஆனால் மக்களில் சிலர் பவுலை நம்பி அவனோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவன் தியொனீசியு, அவன் அரியோபாகஸ் சங்கத்தின் உறுப்பினன். வேறொருத்தி தாமரி என்று அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி. இன்னும் சில மக்களும் அவர்களுடன் விசுவாசிகளாக மாறினர்.

சங்கீதம் 144

தாவீதின் ஒரு பாடல்

144 கர்த்தர் என் கன்மலை.
    கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார்.
    கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.
    மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தர் என்னை விடுவிக்கிறார்.
    கர்த்தர் எனது கேடகம்.
நான் அவரை நம்புகிறேன்.
    நான் என் ஜனங்களை ஆள்வதற்கு கர்த்தர் உதவுகிறார்.

கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?
    நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.
    மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.

கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.
    மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.
    உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!
    பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும்.
    இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
இப்பகைவர்கள் பொய்யர்கள்.
    அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.

கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
    நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
    பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.

11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    இப்பகைவர்கள் பொய்யர்கள்.
    அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
    நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
    நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
    எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
    நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
    ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.

15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

நீதிமொழிகள் 17:27-28

27 அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான்.

28 அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக்கொள்வார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center