Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NET. Switch to the NET to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 8:1-9:13

எலிசா சூனேமியப் பெண்ணைப் போகச் சொன்னது

எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், “நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்” என்றான்.

எனவே, அப்பெண் தேவமனிதன் சொன்னது போலவே நடந்துகொண்டாள். பெலிஸ்திய நாட்டில் ஏழு ஆண்டுகள் வசிப்பதற்கு அவள் தன் குடும்பத்தோடு சென்றாள். ஏழு ஆண்டுகள் முடிந்ததும் அவள் பெலிஸ்தியர்களின் நிலத்திலிருந்து திரும்பினாள்.

அவள் அரசனோடு பேசுவதற்குச் சென்றாள். தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்காக முறையிட்டாள்.

அரசன் தேவமனிதனுடைய வேலைக்காரனான கேயாசியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எலிசாவின் வேலைக்காரனிடம், “எலிசா செய்த அருஞ்செயல்களையெல்லாம் கூறு” எனக்கேட்டான்.

கேயாசி, மரித்துப்போன குழந்தைக்கு எலிசா உயிர் கொடுத்ததைப்பற்றிச் சொன்னான். அப்போது அந்தப் பெண் அங்கு வந்து, தனது வீட்டையும் நிலத்தையும் திரும்பப்பெற உதவவேண்டும் என்று அரசனிடம் வேண்டினாள். அவளைக் கண்டதும் கேயாசி, “எனது ஆண்டவனாகிய ஆண்டவனே! இவள் தான் அந்தப்பெண்! இந்தப் பையனுக்குத்தான் எலிசா உயிர்கொடுத்தான்!” என்று கூறினான்.

அரசன் அவளது விருப்பத்தை விசாரிக்க அவளும் விளக்கிச் சொன்னாள்.

பிறகு அரசன் ஒரு அதிகாரியை அவளுக்கு உதவுமாறு நியமித்தான். அவனிடம், “இவளுக்குரியவற்றையெல்லாம் இவள் பெறுமாறு செய். இவள் இந்த நாட்டைவிட்டு போன நாள் முதல் இன்றுவரை இவள் நிலத்தில் விளைந்த தானியத்தையும் இவள் பெறுமாறு செய்” என்றான்.

பெனாதாத் ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினது

எலிசா தமஸ்குவுக்குச் சென்றான். ஆராம் தேசத்து அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். ஒருவன் அவனிடம். “தேவமனிதர் (தீர்க்கதரிசி) இங்கே வந்துள்ளார்” என்றான்.

பிறகு பெனாதாத் ஆசகேலிடம், “அன்பளிப்போடு போய் தேவமனிதரை (தீர்க்கதரிசி) சந்தி, நான் நோயிலிருந்து குணமடைவேனா என்று அவரை கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறு” என்றான்.

எனவே, ஆசகேல் எலிசாவை சந்திக்க சென்றான். தன்னோடு அன்பளிப்பையும் எடுத்துச்சென்றான். தமஸ்குவிலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொண்டு சென்றான். அவற்றை 40 ஒட்டகங்களில் எடுத்துச் சென்றான். அவன், “உங்கள் தொண்டனான ஆராமின் அரசரான பெனாதாத் என்னை உங்களிடம் அனுப்பினார். நோயிலிருந்து தான் குணமாவேனா என்று கேட்கச்சொன்னார்” என்றான்.

10 பிறகு எலிசா ஆசகேலிடம், “போய் பெனாதாத்திடம், ‘நீ நோய் நீங்கிப் பிழைப்பாய்’ என்று கூறு. எனினும், கர்த்தர் ‘அவன் மரித்துப்போவான்’ என்றே கூறுகிறார்” என்றான்.

எலிசா ஆசகேலைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னது

11 எலிசா ஆசகேலை உற்றுப் பார்த்து பிறகு அழுதான். 12 ஆசகேல் அவனிடம், “ஐயா ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான்.

அதற்கு எலிசா, “நீ இஸ்ரவேலர்களுக்குச் செய்யப்போகும் தீமைகள் என்னென்ன என்பதை நான் அறிவேன். அதற்காக அழுகிறேன். நீ அவர்களின் கோட்டையுள்ள நகரங்களை எரிப்பாய். நீ வாளால் இளைஞர்களைக் கொல்வாய், குழந்தைகளைக் கொல்வாய், கருவிலுள்ள குழந்தைகளையும் கீறிப்போடுவாய்” என்றான்.

13 ஆசகேல், “நான் வல்லமையுள்ளவன் அல்ல! என்னால் இவ்வளவு பெரிய காரியங்களைச் செய்ய முடியாது!” என்று கூறினான்.

அதற்கு எலிசா, “நீ ஆராம் நாட்டின் அரசனாவாய் என்று கர்த்தர் என்னிடம் காட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான்.

14 பிறகு ஆசகேல் எலிசாவிடமிருந்து கிளம்பி அரசனிடம் போக, அவன் இவனிடம், “எலிசா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று கேட்டான்.

ஆசகேல், “நீர் பிழைப்பீர் என்று எலிசா சொன்னார்” என்றான்.

ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்கிறான்

15 ஆனால் மறுநாள், ஆசகேல் ஒரு போர்வையை எடுத்து தண்ணீரில் நனைத்து அதனை பெனாதாத்தின் முகத்தில் மூடினான். மூச்சை நிறுத்தினான். பெனாதாத் மரித்துப்போனான். எனவே ஆசகேல் புதிய அரசன் ஆனான்.

யோராம் ஆளத்தொடங்குகிறான்

16 யூதாவில் யோசபாத்தின் மகனான யோராம் அரசனாக இருந்தான். இவனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஆகாபின் மகனான யோராம் அரசனாக இருந்தபோது அவன் ஆளத் தொடங்கினான். 17 யோராம் ஆளத் துவங்கும்போது அவனுக்கு 32 வயது. எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். 18 ஆனால், அவன் இஸ்ரவேலின் அரசர்களைப் போன்றே கர்த்தருக்குப் பிடிக்காதப் பாவங்களைச் செய்து வந்தான். அவனது மனைவி ஆகாபின் மகளானதால் யோராம் ஆகாபின் குடும்பத்தவர்களைப் போன்றே வாழ்ந்து வந்தான். 19 ஆனால் தன் வேலையாள் தாவீதிற்கு கர்த்தர் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால் யூதாவை அழிக்கமாட்டார். அவர் ஏற்கெனவே தாவீதின் குடும்பத்தில் உள்ளவனே அரசனாக எப்பொழுதும் இருப்பான் என்று ஆணையிட்டுள்ளார்.

20 யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்து ஏதோம் கலகம் செய்ததால் உடைந்துவிட்டது, அவர்கள் தங்களுக்குரிய அரசனைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

21 அதனால் யோராம் (யூதாவைச் சேர்ந்தவன்) இரதங்களோடு சாயீருக்குப் போனான். அவர்களை ஏதோமிய படை சூழ்ந்தபோது, யோராமும் அவனது தளபதிகளும் ஏதோமியர்களைத் தாக்கினார்கள். யோராமின் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குத் தப்பிச் சென்றார்கள். 22 எனவே ஏதோம் யூதாவின் ஆட்சியிலிருந்து (கலகத்தால்) உடைந்துவிட்டது. இன்றுவரை அவர்கள் சுதந்திரமாகவே உள்ளனர்.

அப்போது, லிப்னாத்தும் யூதாவின் ஆட்சியில் இருந்து பிரிந்தது.

23 யோராம் செய்த மற்ற செயல்களும் அவன் செய்த அனைத்தும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

24 இவன் மரித்தப்போது இவனை தாவீது நகரத்தில் முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். அவனது மகன் அகசியா அரசனானான்.

அகசியா தனது ஆட்சியைத் தொடங்குகிறான்

25 யோராமின் மகனான அகசியா யூதாவின் அரசனானான். அப்போது, இஸ்ரவேலில் ஆகாபின் மகனான யோராம் 12வது ஆட்சியாண்டில் இருந்தான். 26 அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி அரசனின் மகள். 27 தவறு என்று கர்த்தர் குறிப்பிட்ட செயல்களையே அவனும் செய்தான். ஆகாபின் குடும்பத்தவர்களைப்போன்றே ஆண்டான். ஏனெனில் அவன் ஆகாபின் மருமகன்.

ஆசகேலுக்கு எதிரான போரில் யோராம் புண்பட்டது

28 யோராம் ஆகாபின் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆராமிய அரசனான ஆசகேலோடு ராமோத் கீலேயாத்தில் போரிடுவதற்காக அகசியா யோராமுடன் சென்றான். ராமோத் கீலேயாத்தில் ஆராமியர்கள் யோராமைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். 29 அரசனான யோராம் இஸ்ரவேலுக்குத் திரும்பித் தன்னைக் காயங்களிலிருந்து குணப்படுத்திக் கொள்ள யெஸ்ரயேல் பகுதிக்குச் சென்றான். யோராமின் மகனான அகசியா யூதாவின் அரசனாயிருந்தான். அகசியா யோராமைக்காண யெஸ்ரயேலுக்குச் சென்றான்.

யெகூவை அபிஷேகம் செய்யும்படி எலிசா இளம் தீர்க்கதரிசிக்கு சொல்கிறான்

தீர்க்கதரிசிகளின் குழுவிலிருந்து தீர்க்கதரிசியான எலிசா ஒருவனை அழைத்தான். அவனிடம், “புறப்படத் தயாராகு. இச்சிறிய குப்பியில் உள்ள எண்ணெயை உன் கையில் எடுத்துக்கொண்டு ராமோத் கீலேயாத்துக்குப் போ! நீ அங்கு போனதும், நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூவைக் கண்டுபிடி. அவன் வீட்டிற்குள் போ. அவனது சகோதரர்களிடமிருந்து அழைத்து உள் அறைக்குப் போ. இந்த சிறிய எண்ணெய்க் குப்பியை எடுத்துக்கொண்டு எண்ணெயை அவன் தலையில் ஊற்றி, ‘இது கர்த்தர் சொன்னது: உன்னை இஸ்ரவேலுக்கு அரசன் ஆக்குகிறேன்’ என்று சொல். பிறகு கதவைத் திறந்துக்கொண்டு ஓடிவந்துவிடு. அங்கே தங்காதே” என்றான்.

எனவே இந்த இளம் தீர்க்கதரிசி, ராமோத் கிலேயாத்திற்குச் சென்றான். அவன் அங்கு நுழைந்ததும், படைத்தளபதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். இவன் அவனிடம், “தலைவரே, உங்களுக்காக என்னிடம் ஒரு செய்தி உண்டு” என்றான்.

அதற்கு யெகூ, “இங்கு இருக்கிற அனைவரிலும் உமது செய்தி யாருக்குரியது?” என்று கேட்டான்.

உடனே இளம் தீர்க்கதரிசி, “இந்த செய்தி உங்களுக்குரியதுதான் தளபதியே” என்றான்.

யெகூ எழுந்து வீட்டிற்குள் சென்றான். இளம் தீர்க்கதரிசி அவனது தலையில் எண்ணெயை ஊற்றி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னதைக் கூறுகிறேன்: ‘நான் உன்னை இஸ்ரவேலில் கர்த்தருடைய ஜனங்களின் மேல் அரசனாக அபிஷேகம் செய்கிறேன். நீ உனது அரசனான ஆகாபின் குடும்பத்தை அழிக்கவேண்டும். இதன் மூலம், எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழியையும் கர்த்தருடைய மரித்துப்போன சகல தொண்டர்களின் இரத்தப்பழியையும் யேசபேலின் கையிலே வாங்குவேன். ஆகையால், ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரும் மரிப்பார்கள். ஆகாப் குடும்பத்திலுள்ள எந்த ஆண் குழந்தையையும் உயிரோடு விடமாட்டேன். அந்த ஆண் அடிமையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரவேலில் சுதந்திரமுள்ள ஆளாக இருந்தாலும் சரியே. நான் ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்தைப் போலவும் அகியாவின் மகனான பாஷாவின் குடும்பத்தைப் போலவும் அழிப்பேன். 10 நாய்கள், யெஸ்ரயேல் பகுதியில் யேசபேலை தின்னும். அவள் அடக்கம் செய்யப்படமாட்டாள்’” என்றான்.

பிறகு அந்த இளம் தீர்க்கதரிசி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

யெகூவை அரசனாக வேலைக்காரர்கள் அறிவிக்கிறார்கள்

11 அரசனின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) இருந்த இடத்திற்கு யெகூ போனான். அந்த அதிகாரிகளில் ஒருவன், “எல்லாம் சரியாக உள்ளதா? ஏன் அந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தான்” என்று கேட்டான்.

யெகூ வேலைக்காரர்களிடம், “உங்களுக்கு அவனையும் அவனது பைத்தியகாரத்தனச் செயலையும் தெரியுமே” என்றான்.

12 அதற்கு அதிகாரிகள், “இல்லை! உண்மையைச் சொல். அவன் என்ன சொன்னான்?” என்று கேட்க, யெகூ இளந்தீர்க்கதரிசி சொன்னதைக் கூறினான்: “அவன் என்னிடம், ‘கர்த்தர் சொன்னதாவது: நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்கிறேன்’ என்றான்” என்று சொன்னான்.

13 உடனே ஒவ்வொரு அதிகாரியும் தனது ஆடையைப் படிகளின் மேல் விரித்தனர். எக்காளத்தை ஊதி, “யெகூ அரசன் ஆனான்!” என்று அறிவித்தனர்.

அப்போஸ்தலர் 16:16-40

சிறையில் பவுலும் சீலாவும்

16 ஒரு நாள் பிரார்த்தனை செய்யுமிடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு வேலைக்காரச் சிறுமி எங்களைச் சந்தித்தாள். அவளுக்குள் ஒரு விசேஷ ஆவி இருந்தது. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைப்பற்றிக் கூறும் வல்லமையை இந்த ஆவி அவளுக்குக் கொடுத்தது. அவளது உரிமையாளர்களுக்கு இதைச் செய்து மிகுந்த பணத்தை அவள் சம்பாதித்துக்கொடுத்தாள். 17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் தொடர்ந்து வந்தாள். அவள் உரத்த குரலில் “இம்மனிதர்கள் மிக உன்னதமான தேவனின் ஊழியர்கள்! உங்களுக்கு இரட்சிப்பின் வழியை அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றாள். 18 அவள் இதையே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாள். மேலும் அதைப் பொறுக்கமுடியாத பவுல் அந்த ஆவியைப் பார்த்து, “இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் அவளிடமிருந்து வெளியே வருமாறு உனக்குக் கட்டளையிடுகிறேன்!” என்றான். உடனே ஆவி வெளியேறிற்று.

19 அந்த வேலைக்காரப் பெண்ணின் உரிமையாளர்கள் இதைக் கண்டனர். அப்பெண்ணைப் பணம் சம்பாதிப்பதற்கு இனிமேல் பயன்படுத்த முடியாது என்பதை அம்மனிதர்கள் அறிந்தனர். எனவே அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து வந்து நகரத்தின் சந்தியில் நிறுத்தினர். நகர அதிகாரிகள் அங்கிருந்தனர். 20 தலைவர்களின் முன்பு அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் கொண்டு வந்தனர். அவர்கள், “இம்மனிதர்கள் யூதர்கள். நகரத்தில் துன்பத்தை விளைவிக்கிறார்கள். 21 நமக்குத் தகாத காரியஙகளைச் செய்யும்படியாக அவர்கள் மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் ரோம மக்கள். இக்காரியங்களைச் செய்ய முடியாது” என்றார்கள்.

22 பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள். 23 அம்மனிதர்கள் பவுலையும் சீலாவையும் பல முறை அடித்தார்கள். பின் அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறையில் தள்ளினார்கள். தலைவர்கள் சிறை அதிகாரியை நோக்கி, “கவனமாக அவர்களைக் காவலில் வையுங்கள்!” என்றார்கள். 24 சிறையதிகாரி இந்தச் சிறப்புக் கட்டளையைக் கேட்டான். எனவே அவன் பவுலையும் சீலாவையும் சிறையின் மிக உட்பகுதிக்கு அழைத்துச் சென்று அடைத்து காவலில் வைத்தான். பெரிய மரத்தூண்களுக்கிடையில் அவர்கள் கால்களைக் கட்டினான்.

25 நள்ளிரவில் பவுலும், சீலாவும் பிரார்த்தனை செய்துகொண்டும் தேவனை நோக்கி துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டுமிருந்தனர். மற்ற சிறைக் கைதிகள் அவர்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். 26 திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. சிறையின் அஸ்திபாரத்தை அசைக்கும்படியாக அது பலமாக இருந்தது. பின் சிறைச் சாலையின் கதவுகள் எல்லாம் திறந்தன. எல்லா கைதிகளும் அவர்களது விலங்குகளிலிருந்து விடுபட்டனர். 27 சிறையதிகாரி விழித்தெழுந்தான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதை அவன் கண்டான். சிறைக் கைதிகள் ஏற்கெனவே தப்பித்துப் போயிருக்க வேண்டுமென அவன் நினைத்தான். எனவே சிறையதிகாரி தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள இருந்தான். 28 ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.

29 சிறையதிகாரி விளக்குகளைக் கொண்டுவருமாறு ஒருவனுக்குப் பணித்தான். பின் அவன் உள்ளே ஓடினான். அவன் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் பவுல், சீலா ஆகியோர் முன்பாகக் கீழே விழுந்தான். 30 பின் அவன் அவர்களை வெளியே அழைத்து வந்து அவர்களிடம், “நான் இரட்சிப்படைய என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

31 அவர்கள் அவனை நோக்கி, “கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாயிரு. நீயும் உன் வீட்டாரும் இரட்சிப்பு அடைவீர்கள்” என்றார்கள். 32 எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர். 33 சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் அழைத்துச் சென்று அவர்களது காயங்களைக் கழுவினான். பின் சிறையதிகாரியும் அவன் வீட்டிலிருந்த அனைவரும் ஞானஸ்நானம் பெற்றனர். 34 அதன் பிறகு சிறையதிகாரி பவுலையும் சீலாவையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்தான். அவன் வீட்டிலிருந்த அனைவரும் தேவன் மீதுகொண்ட விசுவாசத்தால் மகிழ்ந்தார்கள்.

35 மறுநாள் காலையில், தலைவர்கள் சில வீரர்களைச் சிறையதிகாரியிடம், “அம்மனிதர்களை விடுதலை செய்!” என்று கூற அனுப்பினர்.

36 சிறையதிகாரி பவுலிடம், “உங்களை விடுதலை செய்யும்படியாகக் கூறி தலைவர்கள் இந்த வீரர்களை அனுப்பியுள்ளனர். நீங்கள் போகலாம். அமைதியாகச் செல்லுங்கள்” என்று அறிவித்தான்.

37 ஆனால் பவுல் வீரரை நோக்கி, “உங்கள் தலைவர்கள் எங்களை விசாரணை செய்யவில்லை. ஆனால் மக்கள் முன்பாக அவர்கள் எங்களை அடித்துச் சிறையில் அடைத்தார்கள். நாங்கள் ரோம மக்கள். எங்களுக்கு உரிமை உள்ளது. இப்போது தலைவர்கள் நாங்கள் இரகசியமாகப் போக வேண்டுமென விரும்புகிறார்கள். முடியாது, தலைவர்களே வந்து எங்களை வெளியேற்றட்டும்!” என்றான்.

38 பவுல் கூறியவற்றை வீரர்கள் தலைவர்களுக்குக் கூறினர். பவுலும் சீலாவும் ரோம மக்கள் என்பதைத் தலைவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் பயந்தார்கள். 39 எனவே அவர்கள் வந்து பவுலிடமும், சீலாவிடமும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் சிறைக்கு வெளியே அழைத்துவந்து அவர்களை நகரத்தை விட்டுப்போகுமாறு கூறினர். 40 ஆனால் பவுலும் சீலாவும் சிறையினின்று வந்தபோது அவர்கள் லிதியாளின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் விசுவாசிகள் சிலரைக் கண்டு, அவர்களை ஆறுதல்படுத்தினார்கள். பின் பவுலும் சீலாவும் வெளியேறினர்.

சங்கீதம் 143

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று

143 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
    நீர் உண்மையாகவே நல்லவரும் நேர்மையானவருமானவர் என்பதை எனக்குக் காட்டும்.
உமது ஊழியனாகிய என்னை நியாயந்தீர்க்காதேயும்.
    என் ஆயுள் முழுவதும் ஒருபோதும் களங்கமற்றவன் என நான் நியாயந்தீர்க்கப்படமாட்டேன்.
ஆனாலும் என் பகைவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
    அவர்கள் என் உயிரை புழுதிக்குள் தள்ளிவிட்டார்கள்.
    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன் மரித்தோரைப்போன்று என்னை இருண்ட கல்லறைக்குள் தள்ளுகிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன்.
    என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன்.
    நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்!
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும்.
    நான் என் தைரியத்தை இழந்தேன்.
    என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும்.
    கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும்.
கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும்.
    நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன்.
கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
10 நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும்.
    நீரே என் தேவன்.
11 கர்த்தாவே, என்னை வாழவிடும்.
    அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும்.
    என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
12 கர்த்தாவே, உமது அன்பை எனக்குக் காட்டும்.
    என்னைக் கொல்ல முயல்கிற என் பகைவர்களைத் தோற்கடியும்.
    ஏனெனில் நான் உமது ஊழியன்.

நீதிமொழிகள் 17:26

26 தவறு செய்யாதவனைத் தண்டிப்பது தப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center