Print Page Options
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the NIV. Switch to the NIV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 3:1-4:17

யோராம் இஸ்ரவேலின் அரசனானான்

சமாரியாவில் ஆகாபின் மகனாகிய யோராம் இஸ்ரவேலின் அரசன் ஆனான். யூதாவின் அரசனாகிய யோசபாத்தின் பதினெட்டாம் ஆண்டில் அவன் அரசாளத் துவங்கினான். யோராம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டான். தவறு என்று கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் அவன் செய்தான். ஆனால் அவன் தன் தந்தையைப்போலவும் தாயைப்போலவும் இல்லை. அவன் தந்தை தொழுதுகொள்வதற்காக நிறுவிய பாகாலின் தூணை அகற்றிவிட்டான். ஆனாலும் அவன் நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். யோராம் இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யச் செய்தான். யோராம், யெரொபெயாமின் பாவத்தை நிறுத்தவில்லை.

மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது

மேசா மோவாபின் அரசன். அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் அரசனுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான். ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.

பிறகு யோராம் சமாரியாவிற்கு வெளியே சென்று இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேர்த்தான். அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் அரசனான யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் அரசன் எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான்.

அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.

மூன்று அரசர்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள்

யோசாபாத் யோராமிடம், “நாம் எந்த வழியில் போவது?” என்று கேட்டான்.

அதற்கு யோராம், “நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.

எனவே இஸ்ரவேல் அரசன் யூதாவின் அரசனோடும் ஏதோமின் அரசனோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை. 10 இறுதியாக இஸ்ரவேலின் அரசன், “ஓ! கர்த்தர் நமது மூன்று அரசர்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.

11 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி இங்கே இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என அவரிடமே கேட்போம்” என்றான்.

இஸ்ரவேல் அரசரின் வேலைக்காரர் ஒருவன், “சாப்பாத்தின் மகனான எலிசா இங்கே இருக்கிறார். அவர் எலியாவின் வேலைக்காரர்” என்றான்.

12 யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான்.

எனவே இஸ்ரவேலின் அரசனும் யோசபாத்தும் ஏதோமின் அரசனும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.

13 எலிசா இஸ்ரவேல் அரசனான யோராமிடம், “நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!” என்றான்.

அதற்கு இஸ்ரவேலின் அரசன், “இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்” என்றான்.

14 அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் அரசனாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்! 15 இப்போது சுரமண்டலம் வாசிக்கிற ஒருவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது, கர்த்தருடைய வல்லமை எலிசாவின் மேல் இறங்கியது. 16 பிறகு எலிசா, “இப்பள்ளத்தாக்கிலே துளைகளைப் போடுங்கள். கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: 17 நீங்கள் காற்றையும் மழையையும் பார்ப்பதில்லை. ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறையும். பின் நீங்களும் உங்கள் பசுக்களும் மற்ற மிருகங்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கும். 18 இதனை கர்த்தர் எளிதாகச் செய்வார். மோவாப் ஜனங்களை நீங்கள் வெல்லும்படியாகவும் செய்வார்! 19 நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.

20 காலையில், பலியைச் செலுத்தும் போது ஏதோம் சாலை வழியாக தண்ணீர் வந்து பள்ளத்தாக்கை நிரப்பிற்று.

21 மோவாபிலுள்ள ஜனங்கள் அரசர்கள் தம்மோடு போரிட வருவதை கேள்விப்பட்டனர். எனவே, ஆயுதம் தரிக்கக்கூடிய வயதுடைய அத்தனை ஆண்களும் கூடினார்கள். அவர்கள் எல்லையில் போரிடத் தயாராகிக் காத்திருந்தனர். 22 அவர்கள் காலையில் விழித்தபோது சூரியன் தண்ணீரில் பிராகாசிப்பதை இரத்தம் நிறைந்திருப்பதைப் போல் கண்டனர். 23 அவர்கள், “இரத்தத்தைப் பாருங்கள், அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அழித்துக்கொண்டனர். மரித்த பிணங்களிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றனர்.

24 மோவாப் ஜனங்கள் இஸ்ரவேலர்களின் முகாம்களுக்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலர்களால் தாக்கப்பட்டனர். தப்பித்து ஓட முயன்றதும் இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி மோவாபுக்குள்ளும் புகுந்து தாக்கினார்கள். 25 இஸ்ரவேலர்கள் மோவாப் நகரங்களை நொறுக்கித்தள்ளினார்கள். ஒவ்வொரு நல்ல வயல்களில் கற்களை எறிந்தனர். நீரூற்றுகளை அடைத்தனர், நல்ல மரங்களையெல்லாம் வெட்டி எறிந்தனர். அவர்கள் மோவாபின் தலைநகரத்தின் கிர்கரசேத்தில் உள்ள கற்கள் விடுபட்டு நிற்கும்வரை விரட்டினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் சுற்றிவளைத்து அவர்களை தாக்கினார்கள்.

26 மோவாபின் அரசனுக்கு இந்த போர் மிகவும் பலமாக (அவனுக்கு எதிராக) இருந்தது. அவன் 700 வாள் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஏதோம் அரசனைத் தாக்கிக் கொல்லச் சென்றான். ஆனால் அவர்களால் ஏதோம் அரசனை நெருங்க முடியவில்லை. 27 பிறகு தன்னைத் தொடர்ந்து ஆட்சியில் அமர இருக்கிற தன் மூத்த மகனை மோவாபின் அரசன் அழைத்தான். நகரைச்சுற்றியுள்ள சுவரில் தன் மகனையே சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான். இது இஸ்ரவேல் ஜனங்களைப் பெரிதும் பாதித்தது. எனவே அவர்கள் மோவாபை விட்டு விட்டு தங்கள் நாட்டிற்குப் போய்விட்டனர்.

ஒரு தீர்க்கதரிசியின் விதவை எலிசாவிடம் உதவி கேட்டல்

தீர்க்கதரிசிகளுள் ஒருவனுக்கு ஒரு மனைவி இருந்தாள். அந்த தீர்க்கதரிசி மரித்துப்போயிருந்தான். அவள் எலிசாவிடம் வந்து, “என் கணவன் உங்கள் ஊழியனாக இருந்தார். இப்போது மரித்துப்போனார். அவர் கர்த்தரை மதித்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் ஒருவனிடம் பணம் வாங்கியிருந்தார். அதற்காக இப்போது அந்த ஆள் என் இரண்டு பிள்ளைகளை அடிமையாக்கிக்கொள்ள வந்திருக்கிறான்!” என்று அழுதாள்.

அதற்கு எலிசா, “நான் எவ்வாறு உதவமுடியும்? உன் வீட்டில் என்ன இருக்கிறது என்று சொல்” என்று கேட்டான்.

அப்பெண்ணும், “என் வீட்டில் எதுவுமில்லை. ஒரு ஜாடி (ஒலிவ) எண்ணெய் மட்டும் உள்ளது” என்றாள்.

உடனே எலிசா அவளிடம், “நீ போய் உனது பக்கத்து வீட்டுக்காரர் அனைவர்களிடமும் கிண்ணங்களைக் கடனாக வாங்கி வா. அவை காலியாக இருக்கட்டும். நிறைய கிண்ணங்களை கடன் வாங்கு. உன் வீட்டிற்குள் போய் கதவுகளை மூடிக்கொள். வீட்டிற்குள் நீயும் உன் பிள்ளைகளும் மட்டும் தான் இருக்கவேண்டும். ஒலிவ எண்ணெயை எல்லாக் கிண்ணங்களிலும் ஊற்றி நிரப்ப அது நிறைந்ததும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அப்புறம் வை” என்றான்.

எனவே அந்தப் பெண் எலிசாவிடமிருந்து கிளம்பிப்போய் வீட்டுக்கதவுகளை அடைத்துக்கொண்டாள். அவளும் அவள் பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவளது மகன்கள் அவளிடம் கிண்ணங்களைக் கொண்டுவந்தனர். அவற்றில் அவள் எண்ணெயை ஊற்றினாள். அனைத்து கிண்ணங்களும் நிரம்பியபோது அவள் தன் மகனிடம், “இன்னொரு கிண்ணம் கொண்டு வா” என்றாள்.

ஆனால் அவன் அவளிடம், “கிண்ணங்கள் வேறு எதுவுமில்லை” என்றான். அப்போது ஜாடியில் இருந்த எண்ணெயும் பெருகுவது நின்று போயிற்று.

பின் அவள் வந்து தேவனுடைய மனுஷனுக்கு (எலிசா) அதைச் சொன்னாள். அவரோ, “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனை அடைத்துவிடு, மீதியுள்ள பணத்தில் நீயும் உன் பிள்ளைகளும் வாழுங்கள்” என்றான்.

சூனேமிலுள்ள ஒரு பெண் எலிசாவிற்கு அறைவீடு கொடுத்தது

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றான். அங்கு ஒரு முக்கியமான பெண் இருந்தாள். அவள் எலிசாவை (தடுத்து) தன் வீட்டில் உணவு உண்ண அழைத்தாள். எனவே ஒவ்வொரு நேரமும் அவர் அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவன் உணவு உண்பதற்காக நிறுத்தப்பட்டான்.

அவள் தன் கணவனிடம், “இதோ பாருங்கள், எலிசா தேவனுடைய பரிசுத்தமான மனிதன் என்பதைத் தெரிந்துக்கொண்டேன். எப்பொழுதும் நம் வீட்டைக் கடந்தே போகிறார். 10 அவருக்காக நாம் கூரைமீது ஒரு சிறு அறை ஏற்பாடு செய்வோம். அதில் படுக்கையிட்டு, ஒரு மேஜை, நாற்காலி, விளக்குத் தண்டு ஆகியவற்றையும் வைத்துவிடுங்கள். அவர் இங்கு வரும்போது தன் உபயோகத்திற்காக இந்த அறையை வைத்துக்கொள்ளலாம்” என்றாள்.

11 ஒரு நாள் எலிசா அவளது வீட்டிற்கு வந்தான். அவன் அங்குள்ள அறைக்குச் சென்று அங்கே ஓய்வெடுத்தான். 12 எலிசா தனது வேலையாளான கேயாசிடம், “அந்த சூனேமியாளைக் கூப்பிடு” என்றான்.

அந்த வேலையாள் சூனேமியாளை அழைத்தான். அவளும் கிளம்பிவந்து எலிசாவின் முன்னிலையில் நின்றாள். 13 எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான்.

அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.

14 எலிசா தன் வேலைக்காரனிடம், “நாம் இவளுக்காக என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

அதற்கு கேயாசி, “எனக்குத் தெரியும். இவளுக்கு குழந்தையில்லை. இவள் கணவனுக்கு வயதாகிவிட்டது” என்றான்.

15 பிறகு எலிசா, “அவளைக் கூப்பிடு” என்றான்.

வேலைக்காரன் அவளை அழைத்தான். அவள் கதவருகில் வந்து நின்றாள். 16 எலிசா அவளிடம், “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் நீ உனது சொந்த ஆண் குழந்தையை அணைத்துக்கொண்டிருப்பாய்” என்றான்.

அதற்கு அவள், “இல்லை! தேவமனிதரே, நீங்கள் உங்கள் வேலைக்காரியிடம் பொய் சொல்லவேண்டாம்” என்றாள்.

சூனேமிய பெண் ஆண் மகனைப் பெறுதல்

17 ஆனால் அப்பெண் கருவுற்றாள். எலிசா சொன்னதுபோல அடுத்த ஆண்டு அதே பருவ காலத்தில், அவள் ஆண் குழந்தையைப் பெற்றாள்.

அப்போஸ்தலர் 14:8-28

லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்

பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.

11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.

14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். [a] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.

16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.

18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

19 பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.

அந்தியோகியாவுக்குத் திரும்புதல்

21 பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22 அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.

24 பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25 அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.

26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.

27 பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.

சங்கீதம் 140

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்

140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
    அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.
கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
    அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
    என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
    அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.

கர்த்தாவே, நீரே என் தேவன்.
    கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
    நீரே என் மீட்பர்.
    போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
    அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.

கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
    அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
    என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
    அவர்களைக் குழியில் தள்ளும்,
    அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
    அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.
12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
    தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
    நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

நீதிமொழிகள் 17:22

22 மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center