Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GNT. Switch to the GNT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 20-21

பெனாதாத்தும் ஆகாபும் போரிடல்

20 பெனாதாத் ஆராமின் அரசன். அவன் தனது படையைத் திரட்டி 32 அரசர்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான். அவன் இஸ்ரவேலின் அரசனான ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது. “உனது வெள்ளியையும் பொன்னையும் எனக்குக் கொடுக்கவேண்டும். உனது தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியரையும் குழந்தைகளையும் எனக்குக் கொடுக்கவேண்டும்.”

இஸ்ரவேலரின் அரசனோ, “என் எஜமானனாகிய அரசனே, இப்போது நான் உமக்குரியவன் என்னைச் சார்ந்த அனைத்தும் உமக்கு உரியது ஆகும்” என்றான்.

மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். “நாங்கள் அரசனிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கெனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். நாளை என் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் உங்கள் வீடுகளுக்கும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் வருவார்கள். உங்களது மதிப்பிற்குரிய பொருட்களைக் கொடுத்துவிட வேண்டும்’ என்றான்” என்றனர்.

எனவே ஆகாப் தன் நாட்டிலுள்ள மூப்பர்களை அழைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டான். அவன், “பாருங்கள், பெனாதாத் தொல்லை தர வந்துள்ளான். முதலில் அவன் எனது வெள்ளி, பொன், மனைவி, ஜனங்கள் அனைத்தையும் கேட்டான். நான் அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் எல்லாவற்றையும் விரும்புகிறான். நாம் என்ன செய்யலாம்” என ஆலோசித்தான்.

ஆனால் மூப்பர்களும் மற்றவர்களும், “அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொன்னபடி செய்ய வேண்டாம்” என்றனர்.

எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, “நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்றான்.

பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான். 10 அவனது ஒரு தூதுவனை அனுப்பி, “நான் சமாரியா முழுவதையும் அழிக்கப்போகிறேன். நகரத்தில் எதுவும் மீதியாகாது. எனது ஆட்கள் எடுத்துக்கொள்ள எதுவும் இருக்காது! இவ்வாறு நான் செய்யாவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.

11 அதற்கு ஆகாப், “பெனாதாத்திடம் சொல். ஆயுதம் அணிந்திருப்பவன் ஆயுதத்தை உரிந்து போடுபவனைப் போன்று பெருமைபடக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான்.

12 கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல, சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.

13 அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, “அரசனே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.

14 அதற்கு ஆகாப், “யார் மூலம்?” என்று கேட்டான்.

அதற்கு அத்தீர்க்கதரிசி, “அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.

மேலும் அரசன், “போரை யார் துவக்க வேண்டும்?” என்று கேட்க,

தீர்க்கதரிசி, “நீ தான்” என்று பதில் சொன்னான்.

15 எனவே ஆகாப் அரசாங்க அதிகாரிகளின் இளம் உதவியாளர்களில் 232 பேரைச் சேர்த்தான். இதனோடு இஸ்ரவேல் படையின் எண்ணிக்கை 7,000 ஆயிற்று.

16 நடுமத்தியான வேளையில் அரசனான பெனாதாத்தும் அவனது உதவிக்கு வந்த 32 அரசர்களும் குடித்துக்கொண்டு தம் கூடாரத்தில் மயங்கிக்கிடந்தார்கள். அப்போது, ஆகாப் அவர்களைத் தாக்கினான். 17 முதலில் இளம் உதவியாளர்கள் தாக்கினர். பெனாதாத்தின் ஆட்கள் அரசனிடம் சென்று இவர்கள் சமாரியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். 18 அதற்கு அவன், “அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.

19 ஆகாபின் இளைஞர்கள் தீவிரமாகத் தாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து இஸ்ரவேலின் படை சென்றது. 20 எதிரே வருபவர்களைக் கொன்றனர். சீரியாவிலிருந்து வந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இஸ்ரவேல் படை அவர்களை விரட்டியது. பெனாதாத் இரதத்தில் ஏறி தப்பித்து ஓடினான். 21 ஆகாப் அரசன் படையோடு போய் சீரியா நாட்டு குதிரைகளையும் இரதங்களையும் கைப்பற்றிக் கொண்டான். சீரியாவின் படையின் மீது ஆகாப் பெருவெற்றியை பெற்றான்.

22 பிறகு தீர்க்கதரிசி, ஆகாபிடம் போய், “சீரியாவின் அரசனான பெனாதாத் மீண்டும், அடுத்த ஆண்டு போரிட வருவான். எனவே உங்கள் படையைப் பலப்படுத்துங்கள். அவனிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள கவனமாக திட்டங்களைச் செய்யுங்கள்” என்றான்.

பெனாதாத் மீண்டும் தாக்கினான்

23 பெனாதாத்தின் அதிகாரிகள், “இஸ்ரவேலின் தெய்வங்கள் மலைத் தெய்வங்களாக உள்ளனர். அதனால் வென்றுவிட்டனர். எனவே நாம் சமவெளியில் போர்செய்யவேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்! 24 இனிமேல் செய்ய வேண்டியது இதுதான். 32 அரசர்களும் கட்டளையிடும்படி அனுமதிக்காதே. ஒவ்வொரு தளபதியும் தம் படைகளை நடத்தட்டும். 25 இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்” என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.

26 அடுத்த ஆண்டில், அவன் ஆப்பெக்குக்கு இஸ்ரவேலரோடு சண்டையிடச் சென்றான்.

27 இஸ்ரவேலரும் போருக்குத் தயாராக இருந்தனர். அவர்கள் சீரியாவுக்கு எதிராக முகாம்கள் அமைத்தனர். சீரியா படையோடு ஒப்பிடும்போது, இவர்கள் படை சிறிய ஆட்டு மந்தையைப்போல் இருந்தனர். ஆனால் சீரியா, வீரர்கள் முழு பகுதியையும் சூழ்ந்தனர்.

28 இஸ்ரவேல் அரசனிடம் தேவமனிதன் ஒருவன் கீழ்க்கண்ட செய்திகளோடு வந்தான். கர்த்தர் சொன்னார், “‘கர்த்தராகிய நான் மலைகளின் தேவன் என்று ஆராமியர் சொன்னார்கள். சமவெளிப் பிரதேசங்களுக்கு நான் தேவன் அல்ல’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த பெரும் படையைத் தோற்கடிக்க உன்னை அனுமதிக்கிறேன். பிறகு நீங்கள் அனைவரும் எல்லா இடங்களுக்கும் நானே கர்த்தர் என்பதை உணர்வீர்கள்.”

29 படைகள் ஒன்றுக்கொன்று எதிராக ஏழு நாட்கள் முகாமிட்டிருந்தன. ஏழாவது நாள் போர் தொடங்கியது, ஒரே நாளில் 1,00,000 பேரை இஸ்ரவேலர்கள் கொன்றனர். 30 பிழைத்தவர்கள் ஆப்பெக் நகருக்குள் ஓடிப் போனார்கள். மீதியுள்ள 27,000 பேர் மீது சுவரிடிந்து விழுந்தது. பெனாதாத்தும் ஓடிப்போனான். ஒரு அறைக்குள் ஒளிந்துக்கொண்டான். 31 அவனிடம் அவனது வேலைக்காரர்கள், “இஸ்ரவேல் மன்னர்கள் இரக்கமுள்ளவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாங்கள் இரட்டுகளை இடுப்பிலும் கயிறுகளைத் தலையிலும் கட்டி அவர்களிடம் போய் கெஞ்சினால் உம்மை உயிரோடுவிடுவர்” என்றனர்.

32 பின் அவ்வாறே போய் இஸ்ரவேல் அரசனை சந்தித்தனர். “உங்கள் அடிமையான பெனாதாத் ‘எங்களை உயிரோடு விடுங்கள்’ என்று வேண்டுகிறார்” என்றனர்.

அதற்கு ஆகாப், “அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான். 33 அவர்கள், பெனாதாத்தைக் கொல்லாமல் இருக்க வாக்குறுதிகளைக் கேட்டனர். ஆகாப் பெனாதாத்தைச் சகோதரன் என அழைத்ததும் அவனது ஆலோசகர்களும், “ஆமாம், அவன் உன் சகோதரன்” என்றனர்.

ஆகாப், “என்னிடம் அவனைக் கொண்டு வா” என்றான். எனவே பெனாதாத் அரசனிடம் வந்தான். ஆகாப் அரசன் அவனிடம், அவனோடு இரதத்தில் ஏறுமாறு சொன்னான்.

34 பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான்.

ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.

ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசி பேசியது

35 ஒரு தீர்க்கதரிசி இன்னொருவனிடம், “என்னைத் தாக்கு!” என்றான். ஏனென்றால் கர்த்தருடைய கட்டளை என்றான். அவனோ தாக்கவில்லை. 36 அதற்கு அவன், “நீ கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உன்னை ஒரு சிங்கம் கொல்லும்” என்றான். அவ்வாறே அவன் அந்த இடத்தை விட்டுப்போனதும் சிங்கம் அவனைக் கொன்றது.

37 அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், “என்னைத் தாக்கு” என்றான்.

அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான். 38 எனவே, அந்த தீர்க்கதரிசி தன் முகத்திலே சாம்பலைப்போட்டு வேஷம்மாறி அரசனுக்காக வழியில் காத்திருந்தான். 39 அரசன் வந்ததும் அவனிடம், “நான் போரிட சென்றேன். நம்மில் ஒரு மனிதன் பகை வீரனை அழைத்து வந்தான். அவன், ‘இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு. இவன் தப்பினால் இவனுக்காக உன் உயிரைக் கொடுக்கவேண்டும் அல்லது அபராதமாக 75 பவுண்டுகளைத் தரவேண்டும்’ என்றான். 40 நான் வேறு வேலைகளில் இருந்தபோது அவன் தப்பித்துவிட்டான்” என முறையிட்டான்.

அதற்கு இஸ்ரவேல் அரசன், “நீ ஒரு வீரனை தப்பவிட்டதற்கான குற்றவாளி ஆகிறாய். எனவே அவன் சொன்னபடிசெய்” என்றான்.

41 பிறகு அவன் தன் முகத்தில் உள்ள துணியை விலக்கவே, அரசனுக்கு அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பது தெரிந்தது. 42 தீர்க்கதரிசி அரசனிடம், “கர்த்தர் உம்மிடம், ‘நான் உன்னிடம், மரிக்க வேண்டும் என்று சொன்னவனை விடுதலைச் செய்தாய். எனவே நீ அவனது இடத்தை அடுத்து நீ மரிப்பாய்! உனது ஜனங்கள் அவர்களின் பகைவர்களது இடத்தை எடுப்பார்கள். உன் ஜனங்களும் மரிப்பார்கள்!’ என்று சொல்லச்சொன்னார்” என்றான்.

43 இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து அரசன் சமாரியாவிற்கு திரும்பினான்.

நாபோத்தின் திராட்சை தோட்டம்

21 சமாரியாவில் ஆகாப்பின் அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். ஒரு நாள் அரசன் அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக்கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான்.

அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான்.

எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை அரசன் விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான்.

ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான்.

அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் அரசன்! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள்.

பிறகு அவள் சில கடிதங்களை எழுதி அரசனின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். அக்கடிதத்தில்,

“நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். 10 அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் அரசனுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது.

11 எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். 12 தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். 13 பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் அரசனுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். 14 அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர்.

15 அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 16 அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான்.

17 அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், 18 “அரசனிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். 19 அவனிடம், ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும்’ என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார்.

20 எனவே எலியா ஆகாபிடம் சென்றான். அரசனோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான்.

அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். 21 எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். 22 உனது குடும்பமானது நேபாத்தின் மகனான அரசன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். 23 கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். 24 உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான்.

25 ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். 26 அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார்.

27 எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான்.

28 கர்த்தர் எலியாவிடம், 29 “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.

அப்போஸ்தலர் 12:24-13:15

24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.

25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.

விசேஷ அழைப்பு

13 அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார்.

எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.

சீப்புருவில் பர்னபாவும் சவுலும்

பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).

அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, 10 “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! 11 இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான்.

அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். 12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.

தொடர் ஊழியம்

13 பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான். 14 அவர்கள் பயணத்தைத் தொடர்ந்து பெர்கேவிலிருந்து பிசிதியாவுக்கு அருகேயுள்ள நகராகிய அந்தியோகியாவுக்குப் போனார்கள். அந்தியோகியாவில் ஓய்வுநாளில் யூத ஜெப ஆலயத்திற்குள் போய் அமர்ந்தார்கள். 15 மோசேயின் நியாயப் பிரமாணமும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் வாசிக்கப்பட்டன. பின் ஜெப ஆலயத் தலைவர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு செய்தி அனுப்பினர். “சகோதரரே, நீங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவுமாறு ஏதேனும் கூறவேண்டியிருந்தால் தயவு செய்து பேசுங்கள்” என்றனர்.

சங்கீதம் 137

137 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து
    சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள்
    கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள்.
    அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
    சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய
    பாடல்களைப் பாட முடியவில்லை!
எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
    நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
    நான் என்றும் பாடேன்.
    நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.

ஆண்டவரே ஏதோமியர்களை நினையும்.
    எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்”
    என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்!
    நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
உனது குழந்தைகளை இழுத்துச்சென்று,
    அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

நீதிமொழிகள் 17:16

16 அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center