Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GNT. Switch to the GNT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 19

சீனாய் மலையில் எலியா

19 எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.

எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.

பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.

மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான். அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான்.

அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.

10 அதற்கு எலியா, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னால் முடிந்தஅளவு சிறப்பாக சேவை செய்திருக்கிறேன். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை அழித்தனர். உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். இப்பொழுது ஒரே தீர்க்கதரிசியான என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்!” என்று முறையிட்டான்.

11 கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல! 12 அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது.

13 எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.

14 எலியாவோ, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என்னால் முடிந்தவரை உமக்கு எப்போதும் சேவை செய்து வருகிறேன். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது உடன்படிக்கையில் இருந்து நழுவி மீறிவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை உடைத்தனர். அவர்கள் உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். நான் மட்டுமே ஒரே தீர்க்கதரிசியாக உயிரோடு இருக்கிறேன். இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்” என்றான்.

15 கர்த்தர், “சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம் செய், 16 பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய். 17 ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான். 18 எலியா, நீ மட்டும் இஸ்ரவேலில் உண்மையானவன் என்றில்லை. இன்னும் பலர் இருக்கிறார்கள். நான் 7,000 பேரின் உயிரை மீதியாக வைப்பேன். 7,000 இஸ்ரவேலர் பாகாலை வணங்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் பாகாலின் விக்கிரகத்தை முத்தமிடுவதில்லை” என்றார்.

எலிசா தீர்க்கதரிசியாகிறான்

19 எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் மகனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான். 20 உடனே அவன் தன் மாடுகளை விட்டு விட்டு, எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான்.

21 எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.

அப்போஸ்தலர் 12:1-23

சபையைத் துன்புறுத்துதல்

12 அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது) ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.

பேதுரு விடுவிக்கப்படுதல்

இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.

அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.

தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். 10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.

11 நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.

12 பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியாளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட்டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். 14 ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள். 15 விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.

16 ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், “நடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.

18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.

ஏரோது அகிரிப்பாவின் மரணம்

பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.

21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.

சங்கீதம் 136

136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவாதி தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

நீதிமொழிகள் 17:14-15

14 வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து.

15 தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center