Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GNT. Switch to the GNT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 18

எலியாவும் பாகாலின் தீர்க்கதரிசிகளும்

18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம், “போய் ஆகாப் அரசனைப் பார். நான் மழையை அனுப்புவேன்” என்றார். எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான்.

அப்போது, சமாரியாவில் உணவே இல்லை. எனவே அரசன் அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன். ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.) அரசன் ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான். நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள். ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், “எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா?” என்று கேட்டான்.

அதற்கு எலியா, “ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் அரசனிடம் கூறு” என்றான்.

பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் அரசனிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? 10 தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். அரசன் உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு அரசனிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்! 11 நான் அரசனிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால் 12 பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, அரசன் உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன். 13 நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன். 14 இப்போது நீர் இங்கிருப்பதாக அரசனிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான்.

15 எலியாவோ, “சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் அரசன் முன்பு நிற்பேன்” என்றான்.

16 எனவே ஒபதியா அரசனிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். அரசனும் எலியாவைப் பார்க்க வந்தான்.

17 அரசன் எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான்.

18 அதற்கு எலியா, “இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள். 19 இப்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் என்னை கர்மேல் மலையில் சந்திக்கும்படி கூறுங்கள். பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் வரட்டும். ஆஷரா பொய்த்தேவதை அரசியின் ஆதரவு பெற்ற 400 தீர்க்கதரிசிகளும் வரட்டும். இந்த தீர்க்கதரிசிகள் அரசி யேசபேலின் உதவிபெற்றவர்கள்” என்றான்.

20 எனவே ஆகாப் அனைத்து இஸ்ரவேலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தான். 21 எலியா அங்கு வந்து, “யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!” என்றான்.

ஜனங்கள் எதுவும் கூறவில்லை. 22 எனவே எலியா, “நான் இங்கு கர்த்தருடைய ஒரே தீர்க்கதரிசி. நான் தனியாக இருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு 450 தீர்க்கதரிசிகள் உள்ளனர். 23 எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம், பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன். 24 பாகால் தீர்க்கதரிசிகளே, நீங்கள் உங்கள் தெய்வத்தை நோக்கி ஜெபியுங்கள். நான் என் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன். அந்த ஜெபத்திற்கு செவிசாய்த்து விறகுகளைத்தானாக எரிய வைக்கிறவரே உண்மையான தேவன்” என்றான்.

இது நல்ல திட்டம் என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

25 எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்” என்றான்.

26 அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். “பாகால் எங்களுக்கு பதில் கூறும்!” என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை.

27 எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான். 28 அவர்களும் சத்தமாக ஜெபித்தார்கள். அவர்கள் தங்களை வாளாலும் ஈட்டியாலும் காயப்படுத்திகொண்டனர். இது ஒருவகையான தொழுதுகொள்ளுதல். இரத்தம் கொட்டும்வரை இவ்வாறு செய்தனர். 29 மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை!

30 இப்போது எலியா ஜனங்களிடம், “இப்போது என்னிடம் வாருங்கள்” என்று கூப்பிட ஜனங்கள் அவனைச் சுற்றிக் கூடினார்கள். உடைந்த கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டான். 31 எலியா அதில் 12 கற்களைக் கோத்திரங்களுக்கு ஒன்று வீதமாகக் கண்டுபிடித்தான். இது யாக்கோபின் 12 மகன்களைக் குறிக்கும். கர்த்தரால் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டவராக யாக்கோபு இருந்தார். 32 எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதைச்சுற்றிலும் குழி அமைத்தான். 7 கலன் தண்ணீர் பிடிக்குமாறு அக்குழி இருந்தது. 33 பின் பலிபீடத்தில் விறகை வைத்து, காளையைத் துண்டுகளாக்கி மேலே வைத்தான். 34 எலியா, “ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்” என்று சொன்னான். அவன், “மீண்டும் செய்க” என்றான். பிறகு அவன், “மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்” என்று சொன்னான். 35 அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது.

36 இது மாலை பலிக்கான நேரம். எனவே பலிபீடத்தின் அருகில் எலியா சென்று, ஜெபம் செய்தான். “கர்த்தாவே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் தேவனே, நீர்தான் இஸ்ரவேலின் தேவன் என்பதை நிரூபியும் என்று நான் இப்போது உம்மைக் கேட்கிறேன். நான் உம்முடைய ஊழியன் என்பதையும் நிரூபியும், நீர்தான் இவற்றை செய்ய கட்டளையிட்டுள்ளீர் என்பதைக் காட்டும். 37 கர்த்தாவே! என் ஜெபத்திற்கு பதில் சொல்லும். பிறகு அவர்கள் கர்த்தாவே நீர்தான் தேவன், என்று அறிவார்கள். நீர் அவர்களது இதயங்களை மீண்டும் திருப்பிக்கொண்டிருக்கிறீர்” என்றான்.

38 எனவே கர்த்தர் நெருப்பை அனுப்பினார். மாமிசம், விறகு, பலிபீடம், பலீபீடத்தைச் சுற்றிய இடமும் பற்றி எரிந்தது. தண்ணீரும் வற்றியது. 39 அனைவரும் இதனைப் பார்த்து, தரையில் விழுந்து வணங்கி, “கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன்” என்றனர்.

40 பிறகு எலியா, “பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தப்பிவிடாதபடி பிடியுங்கள்!” என்றான். ஜனங்கள் அவர்களைப் பிடித்தனர். அவர்கள் அனைவரையும் கீசோன் என்ற இடத்தில் கொன்றனர்.

மழை மீண்டும் வந்தது

41 எலியா ஆகாப் அரசனிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான். 42 எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து, 43 தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான்.

வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல, 44 ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான்.

எலியா அவனிடம், “ஆகாப் அரசனிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான்.

45 சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். 46 கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு அரசனுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.

அப்போஸ்தலர் 11

எருசலேமில் பேதுரு

11 யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர். எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர். அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள்.

எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான். பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது. நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன். ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.

“ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன்.

“ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’

10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. 11 பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள். 12 சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். 13 கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். 14 அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான்.

15 “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் [a] பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். 16 அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார். 17 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான்.

18 யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர்.

அந்தியோகியாவிற்கு நற்செய்தி

19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள். 20 இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர். 21 கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர்.

22 எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர். 23-24 பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர்.

25 பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான். 26 அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.

27 அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர். 28 அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது) 29 யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர். 30 அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர்.

சங்கீதம் 135

135 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
    கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
தேவனுடைய ஆலய முற்றத்தில்,
    கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
    இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
    சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
    தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
    தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
    எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
    பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
    தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
11 எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
    பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
    கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
    ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
    அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
    சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
    சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
    ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
    அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.

கர்த்தரைத் துதியுங்கள்!

நீதிமொழிகள் 17:12-13

12 தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது.

13 உனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு, நீ தீமை செய்யாதே. அவ்வாறு செய்தால் நீ உனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவாய்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center