Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the GNT. Switch to the GNT to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 15:25-17:24

இஸ்ரவேல் அரசனான நாதாப்

25 ஆசாவின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரவேலின் அரசனானான். அவன் 2 ஆண்டுகள் ஆண்டான். 26 இவன் கர்த்தருக்கு எதிராகக் கெட்ட காரியங்களை தந்தையைப்போலவே செய்தான். ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.

27 அகியா என்பவனின் மகன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான். 28 இது யூதாவின் அரசனான ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆனான்.

பாஷா இஸ்ரவேலின் அரசன்

29 இவன் அரசன் ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார். 30 இவ்வாறு நிகழ யெரொ பெயாம் செய்த பாவங்களும் ஜனங்களைப் பாவம் செய்ய வைத்ததும் காரணமாயிற்று, இவையே இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தைத் தந்தது.

31 நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 32 பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் அரசனான ஆசாவோடு போரிட்டான்.

33 ஆசாவின் மூன்றாவது ஆட்சி ஆண்டில்தான் இஸ்ரவேலின் அரசனாக அகியாவின் மகனான பாஷா அரசன் ஆனான். திர்சாவில் அவன் 24 ஆண்டுகள் ஆட்சிசெய்தான். 34 பாஷா கர்த்தருக்கு விரோதமான செயல்களைச் செய்தான். யெரொபெயாமைப்போல் தானும் பாவம்செய்து ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டினான்.

16 பிறகு கர்த்தர் ஆனானியின் மகனான யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: “நான் உன்னை ஒரு முக்கியமான மனிதனாகச் செய்தேன். உன்னை இஸ்ரவேலின் அரசனாக்கினேன். ஆனால் நீ யெரொபெயாமின் வழியில் என் ஜனங்களை பாவத்துக்குள்ளாக்குகிறாய். இது எனக்குப் பெரும்கோபத்தை உண்டாக்கிற்று. எனவே நான் பாஷாவையும் அவனது குடும்பத்தையும் அழிப்பேன். நான் நாபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோலவே செய்வேன். இந்நகரத் தெருக்களில் நாய்கள் உண்ணும்படி உன் குடும்பத்தினர் சிலர் மரிப்பார்கள். இன்னும் சிலர் வயல்வெளிகளில் மரிப்பார்கள். அவர்கள் பிணங்களைப் பறவைகள் தின்னும்.”

பாஷாவைப்பற்றிய அவன் செய்த பெருஞ் செயல்களைப்பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. பாஷா மரித்ததும் திர்சா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனது மகனான ஏலா அடுத்த அரசனானான்.

எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் மகனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.

இஸ்ரவேலின் அரசனான ஏலா

யூதாவின் அரசனான ஆசா 26ஆம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் அரசனானான். பாஷாவின் மகனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான்.

சிம்ரி ஏலாவின் அதிகாரிகளுள் ஒருவன். இரதப் படையின் பாதிக்குத் தளபதி. இவன் ஏலாவிற்கு எதிராகக் திட்டமிட்டான். அரசன் திர்சாவில் அர்சாவின் வீட்டில் குடித்தும் குடிக்க வைத்துக்கொண்டும் இருந்தான். அர்சா அரண்மனை பொறுப்பாளி. 10 சிம்ரி அந்த வீட்டிற்குப்போய் அரசனைக் கொன்றுவிட்டான். இது யூதாவின் அரசனாக ஆசா 27ஆம் ஆண்டில் இருந்தபோது நடந்தது. பின்னர் சிம்ரி அடுத்து அரசனானான்.

இஸ்ரவேலின் அரசனான சிம்ரி

11 சிம்ரி அரசனானதும், பாஷாவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. பாஷாவின் நண்பர்களையும் கொன்றான். 12 இது பாஷாவிக்கு எதிராக யெகூ தீர்க்கதரிசியிடம் கர்த்தர் சொன்னதுபோலவே ஆயிற்று. 13 இது, பாஷாவும் அவனது மகன் ஏலாவும் செய்த பாவத்தால் ஆயிற்று. அவர்கள் தாம் பாவம் செய்ததோடு இஸ்ரவேல் ஜனங்களும் பாவம் செய்ய காரணமானார்கள். அவர்கள் பல விக்கிரகங்களைச் செய்து தொழுதுகொண்டதால் கர்த்தரால் கோபம்கொள்ளக் காரணமானார்கள்.

14 ஏலா செய்த பிறசெயல்கள் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.

15 யூதாவின் அரசனாக ஆசா 27வது ஆண்டில் இருக்கும்போது சிம்ரி அரசனானான். அவன் திர்சாவிலிருந்து 7 நாட்கள்தான் ஆண்டான். இஸ்ரவேல் படைகள் பெலிஸ்தியரின் கிபெத்தோனுக்கு அருகில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் போருக்குத் தயாராயிருந்தார்கள். 16 சிம்ரி அரசனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் அரசனைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான். 17 ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள். 18 சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான். 19 தனது பாவத்தால் சிம்ரி மரித்துப்போனான். இவன் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தான். யெரொபெயாம் பாவம் செய்தது போலவே இவனும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்வதற்கும் காரணம் ஆனான்.

20 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சிம்ரி செய்தசதிகளும் பிறசெயல்களும் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஏலாவிற்கு எதிராகக் கிளம்பியதும் சொல்லப்பட்டுள்ளது.

இஸ்ரவேலின் அரசனான உம்ரி

21 இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் மகனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் அரசனாக்க விரும்பினார்கள். 22 ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி அரசனானான்.

23 யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் அரசனாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான். 24 உம்ரி சமாரியா மலையை சேமேரிடமிருந்து வாங்கினான். அதன் விலை 2 தாலந்து வெள்ளி. அதில் நகரத்தைக் கட்டி அதன் சொந்தக்காரனான சேமேரின் பெயரால் சமாரியா என்று பெயரிட்டான்.

25 உம்ரி கர்த்தருக்கு எதிராகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களை விட மோசமாக இருந்தான். 26 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களையெல்லாம் இவனும் செய்தான். யெரொபெயாம் தானும் பாவம் செய்து, ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானான். பயனற்ற விக்கிரகங்களையும் தொழுதுகொண்டான்.

27 இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் உம்ரி செய்த மற்ற செயல்களையும் அவர் செய்த அருஞ்செயல்களும் எழுதப்பட்டுள்ளன. 28 உம்ரி மரித்து சமாரியா நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். இவனது மகன் ஆகாப் புதிய அரசனானான்.

இஸ்ரவேலின் அரசனான ஆகாப்

29 யூதாவின் அரசனான ஆசா 38வது ஆண்டில் இருக்கும்போது ஆகாப் இஸ்ரவேலின் புதிய அரசனானான். இவன் சமாரியாவில் இருந்து 22 ஆண்டுகள் ஆண்டான். 30 இவனும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவங்களைச் செய்தான். அவனுக்கு முன்னால் உள்ளவர்களைவிட மோசமாக இருந்தான். 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த அதே பாவங்களைச் செய்வது இவனுக்குப் போதுமானதாயிருக்கவில்லை. அவன் சீதோனியரின் அரசனான ஏத்பாகாலின் மகள் யேசபேலை மணந்து பாகாலையும் தொழுதுகொண்டான். 32 சமாரியாவில் பாகாலுக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆலயத்தில் பலிபீடமும் அமைத்தான். 33 ஒரு சிறப்பான தூணையும் அஷெராவை தொழுதுகொள்ள உருவாக்கினான். அவனுக்கு முன்பு இஸ்ரவேலின் அரசனாக இருந்த மற்றவர்களைவிட இவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அதிகமாகக் கோபப்படுத்தினான்.

34 இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தமகனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய மகன் செகூப் மரித்தான். நூனின் மகனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.

எலியாவும் மழையற்ற காலமும்

17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் அரசனான ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.

பிறகு கர்த்தர் எலியாவிடம், “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.

மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. கர்த்தர் எலியாவிடம், “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.

10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.

12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் மகனும் மரிக்கவேண்டும்” என்றாள்.

13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.

15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் மகனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.

17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் மகன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் மகனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

19 எலியா அவளிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? மகன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.

22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் மகன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.

24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.

அப்போஸ்தலர் 10:24-48

24 அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.

25 பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். 26 ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். 27 பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.

28 பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். 29 அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான்.

30 கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். 31 அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 32 எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். 33 எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான்.

கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு

34 பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். 35 சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். 36 தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார்.

37 “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. 38 நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று.

39 “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். 40 ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். 41 ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.

42 “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். 43 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.

யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி

44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். 45 பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். 46 ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு 47 “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். 48 கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.

சங்கீதம் 134

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
    இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
    கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
    கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

நீதிமொழிகள் 17:9-11

ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும்.

10 சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான்.

11 தீயவன் தவறுகளைச் செய்யவே விரும்புகிறான். முடிவில் தேவன் தன் தூதனை அனுப்பி அவனைத் தண்டிப்பார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center