Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 14:1-15:24

யெரொபெயாம் மகனின் மரணம்

14 அப்போது, யெரொபெயாமின் மகன் அபியா என்பவன் நோய்வாய்ப்பட்டான். அரசன் தன் மனைவியிடம், “சீலோவிற்குப் போ. அகியா தீர்க்கதரிசியைப் பார். அவர்தான் நான் இஸ்ரவேலின் அரசனாவேன் என்று கூறினார். ஜனங்கள் அடையாளம் காணமுடியாதவாறு ஆடை அணிந்துக்கொள். தீர்க்கதரிசிக்கு 10 துண்டு அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு ஜாடி தேனையும் கொடு. நம் மகனுக்கு என்ன ஏற்படும் என்றும் கேள். அகியா தீர்க்கதரிசி உனக்கு சரியாகச்சொல்லுவார்” என்றான்.

அரசன் சொன்னதுபோலவே அவனது மனைவியும் செய்தாள். அவள் தீர்க்கதரிசியான அகியாவின் வீட்டிற்குப் போனாள். அவன் முதுமையடைந்து பார்வையற்றுப் போய் இருந்தான். ஆனால் கர்த்தர் அவனிடம், “யெரொபெயாமின் மனைவி தன் மகனைப்பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். ஏனென்றால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்றார். அவன் என்ன சொல்லவேண்டும் என்பதையும் கர்த்தர் அவனுக்கு சொல்லியிருந்தார்.

அரசனின் மனைவி அகியாவின் வீட்டிற்கு வந்தாள். தன்னை யாரென்று ஜனங்கள் அறிந்துக்கொள்ளாதபடி நடந்துக்கொண்டாள். அவள் கதவருகே வந்ததை அறிந்ததும் அவன், “யெரொபெயாமின் மனைவியே வருக, உன்னைப்பற்றி மற்றவர்கள் வேறுயாராகவோ நினைக்கும்படி ஏன் நீ நடந்துக்கொள்கிறாய்? உனக்கு ஒரு கெட்டச்செய்தியை வைத்திருக்கிறேன். யெரொபெயாமிடம் போய் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்ன சொன்னார் என்பதைப் போய் சொல். கர்த்தர், ‘யெரொபெயாம், நான் உன்னை அனைத்து இஸ்ரவேலர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தேன். எனது ஜனங்களை ஆளும்படிச் செய்தேன். தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான். ஆனால் நீ பெரும் பாவங்களை செய்துவிட்டாய். உனது பாவங்கள் உனக்கு முன்னால் ஆண்டவர்களின் (ஆட்சி செய்தவர்களின்) பாவங்களைவிட மிக மோசமானது. என்னைப் பின்பற்றுவதைவிட்டு, நீயே விக்கிரகங்களையும் அந்நிய தெய்வங்களையும் செய்தாய். இது எனக்கு கோபமூட்டியது. 10 எனவே உனது குடும்பத்திற்குத் துன்பங்களைத் தருவேன். உன் குடும்பத்திலுள்ள அனைத்து ஆண்களையும் கொல்வேன். நெருப்பு, சாணத்தை அழிப்பது போன்று நான் உன் குடும்பம் முழுவதையும் அழித்துப்போடுவேன். 11 இந்நகரில் மரித்துப்போகும் உன் குடும்பத்தானின் பிணத்தை நாய்கள் உண்ணும். வயலில் மரிப்பவர்களை பறவைகள் உண்ணும். இவற்றைக் கர்த்தர் சொன்னார்’” என்றான்.

12 பின் அகியா தீர்க்கதரிசி மேலும் யெரொபெயாமின் மனைவிடம் பேசினான், “இப்போது வீட்டிற்குப் போ. நீ எப்பொழுது நகரத்திற்குள் நுழைகிறாயோ அப்போது உன் மகன் மரிப்பான். 13 இஸ்ரவேலர்கள் அனைவரும் அவனுக்காக அழுது அடக்கம் செய்வார்கள். உன் குடும்பத்தில் அவன் மட்டுமே அடக்கம் செய்யப்படுவான். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு அவன் ஒருவன் மட்டுமே யெரொபெயாமின் குடும்பத்தில் பிடித்தமானவன் என்பதுதான் காரணம். 14 இஸ்ரவேலருக்குப் புதிய அரசனை கர்த்தர் ஏற்படுத்துவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழிப்பான். இது விரைவில் நடைபெறும். 15 பிறகு கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தாக்குவார். அவர்கள் ஆற்றங்கரையிலுள்ள நாணலைப்போன்று அசைவார்கள். அவர்களை இந்த நல்ல நாட்டினின்றும் கர்த்தர் துரத்துவார். இந்த நாடு கர்த்தரால் அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர் அவர்களை ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் கோபத்தோடு இருப்பதால் இவ்வாறு செய்வார். காரணம் அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு கம்பங்கள் அமைத்து தொழுதுகொண்டனர். 16 ரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேல் ஜனங்களையும் பாவத்துக்குட்படுத்தினான். எனவே கர்த்தர் அவர்களைத் தோற்கடிப்பார்” என்றான்.

17 அரசனின் மனைவி திர்சாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது மகன் மரித்தான். 18 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்காக அழுது அவனை அடக்கம் செய்தனர். இது கர்த்தர் சொன்னது போலவே நடந்தது, கர்த்தர் தன் ஊழியனான, தீர்க்கதரிசி அகாயாவின் மூலம் இதைச் சொன்னார்.

19 அரசன் வேறுபல செயல்களைச் செய்தான். பல போர்களைச் செய்து தொடர்ந்து ஜனங்களை ஆண்டான். இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் அவன் செய்தது எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது 20 அவன் 22 ஆண்டுகள் அரசாண்டான். அவன் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனக்குப் பின் அவனது மகன் நாதாப் அரசன் ஆனான்.

யூதாவின் அரசன் ரெகொபெயாம்

21 சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவின் அரசனான போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.

22 யூதாவிலுள்ள ஜனங்களும் பாவம் செய்தனர். அவர்களின் பாவம் அவர்களின் முற்பிதாக்களின் பாவத்தைவிட மிகுதியாயிற்று. இதனால் கர்த்தருக்கு அவர்கள் மீது கோபமும் மிகுதியானது. 23 அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு உருவங்களும், நினைவு சின்னங்களும், தூண்களும் கட்டினார்கள். அவர்கள் இவற்றை ஒவ்வொரு மலை மீதும் ஒவ்வொரு பசுமையான மரத்தடியிலும் அமைத்தனர். 24 பாலின உறவுக்காக தங்கள் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்கு பணி செய்த ஆண்கள் இருந்தார்கள். இதனால் யூதா நாட்டினர் பல தவறுகளைச் செய்தனர். இந்நாட்டில் இதற்கு முன்னால் இருந்தவர்களும் இது போல் தீயசெயல்களைச் செய்ததால் அவர்களின் நாட்டை தேவன் இஸ்ரவேலர்களிடம் கொடுத்துவிட்டார்.

25 ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவன் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டான். ஆராம் நாட்டு அரசனிடம் தாவீது அபகரித்து வந்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக்கொண்டான். 27 அதனால் அரசன் அவற்றுக்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து அவற்றை வாயில் காப்போர்களின் தலைவரின் பொறுப்பில் வைத்தான். 28 ஒவ்வொரு தடவையும் அரசன் வரும்போது, இவர்கள் கேடயங்களை கர்த்தருடைய ஆலயத்திற்குள் எடுத்து வருவார்கள். பின் பழையபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.

29 ரெகொபெயாம் அரசன் செய்தவற்றையெல்லாம் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 30 ரெகொபெயாமும் யெரொபெயாமும் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.

31 ரெகொபெயாம் மரித்து தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீது நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். (அவனது தாயின் பெயர் நாமாள், அவள் அம்மோனியள்.) அவனது மகனான அபியா அடுத்து அரசனானான்.

யூதாவின் அரசனான அபியா

15 நேபாத் என்பவனின் மகனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் அரசனாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது மகன் அபியா யூதாவின் அரசன் ஆனான். அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் மகளான மாகாள்.

அவன் தன் தந்தையைப்போலவே அனைத்து பாவங்களையும் செய்தான். அபியா தன் தாத்தாவாகிய தாவீதைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவனாக இல்லை. கர்த்தர் தாவீதை நேசித்தார். அதனால், கர்த்தர் அபியாவிற்கு எருசலேமின் ஆட்சியைக் கொடுத்தார். அவனுக்கு ஒரு மகனையும் எருசலேமிற்குப் பாதுகாப்பையும் தாவீதிற்காக கர்த்தர் கொடுத்தார். கர்த்தருக்குப் பிடித்த சரியான காரியங்களை மட்டுமே எப்பொழுதும் தாவீது செய்துவந்தான். அவன் எப்பொழுதும் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். அவன் ஒரே ஒருமுறைமட்டும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. அது ஏத்தியனான உரியாவிற்கு செய்ததாகும்.

ரெகொபெயாமும் யெரொபெயாமும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அபியா செய்த பிற செயல்களெல்லாம் யூதாவின் அரசர்கள் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

அபியா அரசனாக இருந்த காலம்வரை அவன் யெரொபெயாமோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது மகனான ஆசா அரசனானான்.

யூதாவின் அரசனான ஆசா

யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் அரசனானான். 10 ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் மகள்.

11 ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான். 12 அப்போது ஆண்கள் பாலின உறவுக்காக தம் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்குச் சேவைசெய்து வந்தனர். இத்தகையவர்களை ஆசா நாட்டை விட்டுத் துரத்தினான். அவன் முற்பிதாக்களால் செய்யப்பட்ட பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களையும் எடுத்தெறிந்தான். 13 அவன் தனது பாட்டியான மாகாவையும், அரசி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான். 14 அவன் பொய்த் தெய்வங்களை தொழுவதற்கான மேடைப் பகுதிகளை அழிக்கவில்லை. ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு நம்பிக்கையாளனாக இருந்தான். 15 ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர்.

16 அப்போது, இஸ்ரவேலின் அரசனாக இருந்த பாஷாவோடு, ஆசா அடிக்கடி சண்டையிட்டான். 17 பாஷா யூதாவிற்கு எதிராக, இஸ்ரவேல் ஜனங்களை அங்கே போகவோ வரவோ அனுமதிக்காமல் சண்டையிட்டான். அவன் ராமா நகரத்தைப் பலம் பொருந்தியதாக ஆக்கினான். 18 எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் அரசன் பெனாதாத் தப்ரிமோனின் மகன். தப்ரிமோன் எசியோனின் மகன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம். 19 ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் அரசனான பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான்.

20 அரசனான பெனாதாத் ஒப்பந்தத்தின்படி ஆசாவோடு ஒரு படையை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களான ஈயோன், தாண், பெத்மாக்கா எனும் ஆபேல், கின்னரோத், நப்தலி ஆகியவற்றில் போர் செய்து வென்றான். 21 பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான். 22 பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான்.

23 ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது. 24 அவன் மரித்ததும் தனது முற்பிதாவான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். பின் இவனது மகனான யோசபாத் அரசனானான்.

அப்போஸ்தலர் 10:1-23

பேதுருவும் கொர்நேலியுவும்

10 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.

கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.

தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.

மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. 10 பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. 11 திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. 12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. 13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.

14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.

15 ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. 16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

17 இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். 18 அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.

19 பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 20 எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். 21 எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.

22 அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். 23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.

மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர்.

சங்கீதம் 133

ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று

133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
    மிகவும் நல்லதும் இன்பமுமானது.
அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
    கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
    வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
    ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.

நீதிமொழிகள் 17:7-8

அறிவற்றவன் அதிகமாகப் பேசுவது அறிவுள்ள செயல் அல்ல. இதுபோலவே, ஆள்பவன் பொய் சொல்லுவதும் அறிவுள்ள செயல் அல்ல.

சிலர், லஞ்சத்தை இனிமையான அதிர்ஷ்டப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அது பணியைச் செய்துமுடிக்கப் பயன்படுவதாக நினைக்கிறார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center