Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the VOICE. Switch to the VOICE to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 11:1-12:19

சாலொமோனும் அவனது பல மனைவியரும்

11 சாலொமோன் அரசன் பெண்களை நேசித்தான்! அவன் இஸ்ரவேலில் உள்ள பெண்களை மட்டுமல்லாமல் பார்வோனின் மகள், ஏத்தியர், மோவாப், அம்மோன், ஏதோம், சீதோன் எனப் பல நாட்டுப் பெண்களை விரும்பினான். முன்பு, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம், “அடுத்த நாட்டு பெண்களை மணந்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்க வேண்டியது வரும்” என்றார். ஆனால், சாலொமோன் இதுபோன்ற பெண்களை நேசித்தான். சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி அவனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர். அவர்கள் அவனை தேவனுடைய வழியிலிருந்து திருப்பினார்கள். அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை. சாலொமோன் அஸ்தரோத்தை தொழுதுகொண்டான். இது சீதோனியரின் தெய்வமாகும். அவன் மில்கோமையும் தொழுதுகொண்டான். இது அம்மோனியரின் அருவருப்பான விக்கிரகமாகும். எனவே சாலொமோன் கர்த்தருக்கு முன் தவறு செய்தான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று கர்த்தரை முழுமையாகப் பின்பற்றவில்லை.

சாலொமோன் காமோஸ் என்னும் பொய்த்தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு இடத்தைக் கட்டினான். இது மோவாபியரின் அருவருப்பான விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் ஆலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் அருவருப்பான தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுவதிலிருந்து அவன் விலகிப்போனான். எனவே, கர்த்தர் சாலொமோன் மீது கோபங்கொண்டார். கர்த்தர் அதற்கு முன்பு அவனிடம் இருமுறை தோன்றினார். 10 அவர் அவனிடம் அந்நியதெய்வங்களை பின்பற்றக் கூடாது என்று கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை 11 எனவே கர்த்தர் சாலொமோனிடம், “என்னோடு செய்த உடன்படிக்கையை மீற முடிவெடுத்துவிட்டாய். நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உனது அரசை உன்னிடமிருந்து விலக்குவேன் என்று வாக்குறுதிக்கொடுக்கிறேன். அதனை உன் வேலைக்காரர்களில் ஒருவருக்குக் கொடுப்பேன். 12 ஆனால் நான் உன் தந்தையான தாவீதை நேசித்தேன். எனவே நீ உயிரோடு இருக்கும்வரை இவ்வரசை உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளமாட்டேன் உன் மகன் அரசனாகும்வரை உனக்காகக் காத்திருப்பேன். பிறகு இதனை அவனிடமிருந்து எடுத்துக்கொள்வேன். 13 இதுவரை, நான் உனது மகனிடமிருந்து ராஜ்யத்தை விலக்கியதில்லை. அவன் ஆள்வதற்கு நான் அவனுக்கு ஒரு கோத்திரத்தை விட்டுவிடுகிறேன். இதனை நான் தாவீதிற்காகச் செய்கிறேன். அவன் ஒரு நல்ல ஊழியன். அதோடு எருசலேமுக்காகவும் இதனைச் செய்கிறேன். இது என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம்!” என்றார்.

சாலொமோனின் பகைவர்கள்

14 அதே காலத்தில், ஏதோமியனாகிய ஆதாத்தை சாலொமோனின் பகைவனாக கர்த்தர் உருவாக்கினார். அவன் ஏதோம் அரசனின் குடும்பத்தைச் சார்ந்தவன். 15 இப்பகைமை இவ்வாறுதான் வளர்ந்தது. முன்பு தாவீது ஏதோமைத் தோற்கடித்தான். தாவீதின் படையில் யோவாப் தளபதியாக இருந்தான். அவன் மரித்தவர்களைப் புதைப்பதற்காக ஏதோமுக்குச் சென்றான். யோவாப் அப்போது அங்கே உயிரோடு இருந்தவர்களையும் கொன்றுபோட்டான். 16 யோவாபும் மற்ற இஸ்ரவேலர்களும் ஏதோமில் 6 மாதங்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து ஆண்களையும் கொன்றுவந்தனர். 17 ஆனால் அப்போது ஆதாத் சிறுவனாக இருந்தான். அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவனுடைய தந்தையின் வேலைக்காரர்களும் அவனோடு போனார்கள். 18 அவர்கள் மீதியானை விட்டு பாரானுக்குச் சென்றனர். பாரானில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். பின் அனைவரும் எகிப்துக்குப் போய் பார்வோன் மன்னனிடம் உதவி கேட்டனர். மன்னன் அவனுக்கு ஒரு வீடும், கொஞ்ச நிலமும் கொடுத்தான். இன்னும் பல உதவிகளையும் உணவும் கொடுத்து வந்தான்.

19 பார்வோன் ஆதாத்தை மிகவும் விரும்பி, திருமணமும் செய்துவைத்தான். அவள் பார்வோனின் மனைவியின் தங்கைஆவாள். அவன் மனைவியோ தாப்பெனேஸ் என்னும் அரசகுமாரி. 20 ஆதாத்துக்கு கேனுபாத் என்னும் மகன் பிறந்தான். தாப்பெனேஸ் அவனைத் தன் குழந்தைகளோடு அரண்மனையில் வளரவிட்டாள்.

21 தாவீது, மரித்துப்போனதை ஆதாத் எகிப்தில் அறிந்தான். யோவாப் தளபதியும், மரித்துப்போனதை அறிந்துக்கொண்டான். எனவே அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த நாட்டுக்குப் போக அனுமதியுங்கள்” என்றான்.

22 ஆனால் பார்வேன், “உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

ஆனால் ஆதாத்தோ, “தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்” என்றான்.

23 சாலொமோனுக்கு எதிராக இன்னொரு பகைவனை உருவாக்கவும் தேவன் தாமே காரணமானார்.

அவன் பெயர் ரேசோன், இவன் எலியாதாவின் மகன். இவன் தன் எஜமானனிடமிருந்து ஓடிப் போனான். இவனது எஜமானன் சோபாவின் அரசனான, ஆதாதேசர். 24 தாவீது சோபாவைத் தோற்கடித்த பிறகு, ரேசோன் சில வீரர்களைச் சேர்ந்து அவர்களுக்கு தலைவன் ஆனான். அவன் தமஸ்குவுக்கு போய் அங்கே தங்கி இருந்தான். பின் அதன் அரசன் ஆனான். 25 அதோடு ஆராமையும் ஆண்டான். அவன் இஸ்ரவேலர்களை வெறுத்து, தொடர்ந்து அவர்களுக்குப் பகைவனாக சாலொமோன் காலம்வரை இருந்தான். ஆதாத்தும் ரேசானும் இஸ்ரவேலுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர்.

26 நேபாத்தின் மகனான யெரோபெயாம் சாலொமோனின் ஊழியக்காரன். இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவன் சேரேதா ஊரினன். இவன் தாயின் பெயர் செரூகாள். இவனது தந்தை மரித்துப்போனான். இவனும் சாலொமோனுக்கு எதிராக எழும்பினான்.

27 யெரோபெயாம் சாலொமோனுக்கு எதிராக எழும்பிய கதை இதுதான். சாலொமோன் தாவீது நகரத்தில் மில்லோவும் சுவரும் கட்டினான். 28 யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான். 29 ஒருநாள் யெரோபெயாம் எருசலேமிற்கு வெளியே பயணம் போனான். சாலையில் அகியா எனும் சீலோனியனான தீர்க்கதரிசியை சந்தித்தான். அகியா புதிய அங்கியை அணிந்திருந்தான். இருவரும் தனியாக இருந்தார்கள்.

30 அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான். 31 பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். ‘நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன். 32 தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன், 33 சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான். 34 எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் அரசனாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன். தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன். 35 ஆனால் நான் சாலொமோனின் மகனிடமிருந்து அரசை விலக்குவேன். நான் உன்னை, பத்து கோத்திரங்களை ஆட்சி செய்ய வைப்பேன். நீ இஸ்ரவேல் முழுவதையும் ஆள்வாய். 36 நான் சாலொமோனின் மகனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன். 37 ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய். 38 நீ என்னைப் பின்பற்றி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் உன்னை இவ்வாறு ஆக்குவேன். நீ தாவீதைப்போன்று சட்டங்களையும், கட்டளைகளையும் மீறாமல் நடந்துக்கொண்டால், நான் உன்னோடு இருப்பேன். நான் உனது குடும்பத்தையும் தாவீதின் குடும்பத்தைப்போன்று அரச குடும்பமாகச் செய்வேன். நான் உனக்கு இஸ்ரவேலைத் தருவேன். 39 நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்’” என்றான்.

சாலொமோனின் மரணம்

40 சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் அரசனை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான்.

41 சாலொமோன் தனது ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த அறிவுள்ள செயல்களைச் செய்தான். அவை அனைத்தும் சாலொமோனின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 42 இவன் எருசலேமிலிருந்துகொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். 43 பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அரசனானான்.

ஜனங்களின் போராட்டம்

12 சாலொமோனிடமிருந்து ஓடிப் போன நேபாத்தின் மகனான யெரோபெயாம் எகிப்திலேயே இருந்தான். சாலொமோன் மரித்ததை அறிந்ததும் (சேரதாவுக்குத்) திரும்பினான். இது எப்பிராயிம் மலைப்பகுதியில் இருந்தது.

சாலொமோன் அரசன் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அதன் பிறகு அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள். அவர்கள், ரெகொபெயாமை அரசனாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான். ஜனங்கள் அவனிடம், “உங்கள் தந்தை நாங்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இப்போது, அவற்றை எளிதாக்க வேண்டும். உங்கள் தந்தையைப் போல் கடுமையான வேலைகளைக் கொடுக்கவேண்டாம். அவ்வாறானால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம்” என்றனர்.

அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள்.

சாலொமோன் உயிரோடு இருந்தபோது அவனுக்கு யோசனை சொல்வதற்காகச் சில முதியவர்கள் இருந்தனர். அவர்களிடம் ரெகொபெயாம் என்ன செய்வது என்று கேட்டான். ரெகொபெயாம், “இந்த ஜனங்களுக்கு நான் என்னபதில் சொல்ல வேண்டும்?” என்று கலந்து ஆலோசித்தான்.

அதற்கு மூப்பர்கள், “இன்று நீ அவர்களுக்குச் சேவகனானால், பிறகு அவர்களும் உண்மையான சேவகர்களாக உனக்கு இருப்பார்கள். அவர்களுடன் இரக்கத்தோடு பேசினால், பின் அவர்கள் உனக்காக எப்பொழுதும் வேலை செய்வார்கள்” என்றனர்.

ஆனால் அந்தப் புத்திமதியை அவன் கேட்கவில்லை. அவன் தன் இளைய நண்பர்களைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஜனங்கள் என்னிடம் வந்து, ‘உங்கள் தந்தையைப்போன்று கடினமான வேலையைக் கொடுக்கவேண்டாம். எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நான் என்ன பதில் சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? நான் என்ன சொல்லவேண்டும்?” என்ற கலந்து ஆலோசித்தான்.

10 அரசனிடம் இளைய நண்பர்களோ, “சிலர் உன்னிடம் வந்து, ‘உங்கள் தந்தை கடினமான வேலையைக் கொடுத்தார். நீங்கள் எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நீ அவர்களிடம், ‘என் சிறிய விரல் தந்தையின் முழு சரீரத்தைவிட பல மிக்கது என்று சொல்லவேண்டும். 11 என் தந்தை கடினமான வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிட கடினமான வேலையைத் தருவேன்! அவர் சாட்டை மூலம் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அடித்து கட்டாயப்படுத்துவேன். எனது அடிகள் தேளின் கொடுக்கைப் போலிருக்கும்’ என்றுசொல்!” என்றனர்.

12 ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர். 13 அப்போது அவர்களிடம், அரசன் கடுமையாகப் பேசினான். அவன் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளவில்லை. 14 அவன் தன் இளைய நண்பர்கள் சொல்லச் சொன்னதையே சொன்னான். அவன் அவர்களிடம், “என் தந்தை கடின வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிடவும் கடின வேலைகளைத் தருவேன். என் தந்தை உங்களைச் சவுக்கால் அடித்தார். நானோ தேள் கடியைப்போல வேதனையடையுமாறு அடிப்பேன்!” என்றான். 15 எனவே ஜனங்கள் விரும்பியது போன்று அரசன் செய்யவில்லை. கர்த்தர்தாமே இவ்வாறு நிகழும்படி செய்தார். நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இவ்வாறு செய்தார். கர்த்தர் அகியாவின் மூலமாக இந்த வாக்குறுதியைச் செய்தார். அகியா சீலோ நாட்டைச் சேர்ந்தவர்.

16 இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய அரசன் தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் அரசனிடம்,

“நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா?
    இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா?
இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும்.
    தாவீதின் மகன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!”

என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். 17 ஆனால் ரெகொ பெயாம் யூதா நகரங்களில் வாழும் இஸ்ரவேலர்கள் முழுவதையும் ஆண்டு வந்தான்.

18 அதோனிராம் என்பவன் வேலைக்காரர்களின் பொறுப்பாளனாக இருந்தான். அரசன் அவனை ஜனங்களிடம் பேசிப்பார்க்குமாறு அனுப்பினான். ஆனால் ஜனங்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றனர். பின் அரசன் தனது இரதத்தில் ஏறி எருசலேமிற்குத் தப்பித்து ஓடினான். 19 இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்திற்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் இன்றும் தாவீதின் குடும்பத்திற்கு எதிராக உள்ளனர்.

அப்போஸ்தலர் 9:1-25

சவுல் மனம் மாறுதல்

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.

எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.

சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.

அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.

சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.

10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.

அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.

11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.

13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.

15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.

17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.

சவுல் தமஸ்குவில் போதித்தல்

சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.

21 சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.

22 ஆனால் சவுலோ மென்மேலும் வல்லமையில் பெருகினான். அவன் இயேசுவே கிறிஸ்து என நிரூபித்தான். தமஸ்குவில் அவன் சான்றுகள் வலுவாக இருந்தபடியால் யூதர்கள் அவனோடு வாக்குவாதம் செய்ய இயலவில்லை.

சவுல் தப்பிச் செல்லுதல்

23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். 24 சவுலுக்காக நகரத்தின் கதவுகளை இரவும் பகலும் யூதர்கள் காவல் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர். ஆனால் சவுல் அவர்களின் சதித்திட்டத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தான். 25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.

சங்கீதம் 131

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
    நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
    எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
நான் அமைதியாக இருக்கிறேன்.
    என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
    என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
    அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.

நீதிமொழிகள் 17:4-5

தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர்.

சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center