Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 இராஜாக்கள் 9-10

தேவன் சாலொமோனிடம் மீண்டும் வருதல்

இவ்வாறு சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடித்தான். அவன் கட்ட விரும்பியவற்றையெல்லாம் கட்டிமுடித்தான். பிறகு கர்த்தர் மீண்டும் அவன் முன் கிபியோனில் தோன்றியதுபோல தோன்றினார். கர்த்தர் அவனிடம்,

“நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன். உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும். “நீ இவ்வாறு செய்து வந்தால், இஸ்ரவேலரின் அரசன் உன் குடும்பத்தவனாகவே இருப்பான். இந்த வாக்குறுதியைத்தான் உனது தந்தையான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறேன். நான் அவனிடம், ‘இஸ்ரவேல் உன் சந்ததியிலிருந்தே எப்பொழுதும் ஆளப்படும்’ என்று கூறியிருக்கிறேன்.

6-7 “ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன். இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள். மற்றவர்களோ, ‘அவர்கள் தமது தேவனாகிய கர்த்தரை விட்டு விலகினார்கள். அதனால் இவ்வாறு ஆயிற்று. அவர்களது முற்பிதாக்களை அவர் எகிப்திலிருந்து மீட்டார். ஆனால் அவர்களோ அந்நிய தெய்வங்களை நாடினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இது போன்ற தீமைகளைச் செய்தார்’ என்பார்கள்” என்றார்.

10 சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயின. 11 அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் கொடுத்து வந்தான். 12 எனவே, தீரு என்னும் நகரில் இருந்து பயணப்பட்டு சாலொமோன் கொடுத்த நகரங்களை எல்லாம் ஈராம் பார்வையிட்டான். அப்போது அவன் திருப்தியடையவில்லை. 13 ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது. 14 ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான்.

15 சாலொமோன் ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட அடிமைகளை கட்டாயப்படுத்தினான். மேலும் அவர்களைப் பயன்படுத்தி பலவற்றைக் கட்டினான். அவன் மில்லோவைக் கட்டினான். எருசலேம் நகரைச் சுற்றி ஒரு சுவரையும் பின்னர் ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

16 முன்பு, எகிப்து மன்னன் கேசேரைச் சண்டையிட்டு எரித்துவிட்டான். அங்கு வாழ்ந்த கானானியரையும் கொன்றான். சாலொமோன் பார்வோன் மன்னனின் மகளையும் மணந்துக்கொண்டான். எனவே திருமணப் பரிசாக இந்நகரத்தைச் சாலொமோன் பெற்றுக்கொண்டான். 17 சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான். 18 மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும், 19 தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான்.

20 அந்நாட்டில் இஸ்ரவேலர் அல்லாதாரும் வாழ்ந்தனர். அவர்கள் எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோராகும். 21 இஸ்ரவேலர்களால் சிலர்களை அழிக்க முடியவில்லை. ஆனால் சாலொமோன் அவர்களை அடிமைகள்போல வேலைசெய்ய கட்டாயப்படுத்தினான், அவர்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றனர். 22 சாலொமோன் இஸ்ரவேலர்களை அடிமையாக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இரத ஏவலர்களாகவும் இருந்தனர். 23 சாலொமோனின் திட்டக்குழுவில் 550 மேற்பார்வையாளர்கள் இருந்தனர். இவர்கள் வேலைக்காரர்களின் எஜமானர்கள்.

24 பார்வோன் மன்னனின் மகள் தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான்.

25 ஒவ்வொரு ஆண்டும் மூன்றுமுறை சாலொமோன் பலிபீடத்தில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். இது சாலொமோனால் கர்த்தருக்காகக் கட்டப்பட்ட பலிபீடம். அவன் கர்த்தருக்கு முன் நறுமணப் பொருட்களை எரித்தான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவந்தான்.

26 சாலொமோன் அரசன் ஏசியோன் கேபேரிலே கப்பங்களைச் செய்வித்தான். அந்நகரம் ஏலோத்துக்கு அருகில் செங்கடலின் கரையில் ஏதோம் நாட்டில் இருந்தது. 27 ஈராம் அரசனின் ஆட்களில் சிலருக்குக் கடல் பற்றி அறிவு அதிகமாக இருந்தது. அவர்களை அவன் சாலொமோனிடம் அனுப்பி கப்பற்படையில் பணிபுரியச் செய்தான். 28 சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.

சேபாவின் அரசி சாலொமோனைப் பார்க்க வருதல்

10 சேபாவின் அரசி சாலொமோனின் புகழைப்பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள். ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள். சாலொமோன் அனைத்துக்கும் விடை சொன்னான். எந்தக் கேள்வியும் அவனுக்குப் பதிலளிக்க கஷ்டமாக இல்லை. அவள் சாலொமோனிடம் அறிவுத் திறனைக் கண்டுகொண்டாள். அவன் கட்டிய அரண்மனையின் அழகையும் பார்த்தாள். அரசனின் மேஜையில் இருந்த உணவுப்பொருட்களையும் பார்த்தாள். அவள் அதிகாரிகளின் கூட்டத்தையும் பார்வையிட்டாள். அரண்மனையில் வேலைக்காரர்களும் நன்றாக உடை அணிந்திருப்பதைக் கவனித்தாள். அவள் ஆலயத்தில் அவன் அளித்த விருந்துகளையும் பலிகளையும் பார்த்தாள். இவையெல்லாம் உண்மையில் அவளுக்கு வியப்பை உண்டாக்கி அவளது பெருமூச்சை வரவழைத்தது.

எனவே அரசி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை. நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும். உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தரைத் துதிக்கிறேன்! உங்களை இஸ்ரவேலின் அரசனாக்கியதில் அவர் திருப்தியடைவார். தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பெரிதும் நேசிக்கிறார். அதனால்தான் உங்களை அவர்களின் அரசன் ஆக்கினார். நீங்கள் சட்டங்களைப் பின்பற்றி ஜனங்களிடம் அன்பாய் இருக்கிறீர்கள்” என்றாள்.

10 பிறகு அரசி சாலொமோனுக்கு 9,000 பவுண்டு பொன்னைக் கொடுத்தாள். அவள் மேலும் மணப் பொருட்களையும் நகைகளையும் கொடுத்தாள். அதுவரை இஸ்ரவேலில் யாரும் பெற்றிராத அளவிற்கு சாலொமோனுக்கு மணப்பொருட்களைக் கொடுத்தாள்.

11 ஈராமின் கப்பல்கள் ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவந்தன. அவை சிறப்புமிக்க மரத் துண்டுகளையும் நகைகளையும் கொண்டு வந்தன. 12 சாலொமோன் இம்மரத்தடிகளை ஆலயத்திலும் அரண்மனையிலும் உதவிக்காகப் பொருத்தினான். அவற்றை இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்தினான். இஸ்ரவேலருக்கு இதுவரை எவரும் இது போன்ற மரத்தைக் கொண்டுவந்ததில்லை, இதுவரைப் பர்ர்த்ததுமில்லை.

13 பிறகு சாலொமோன் ஒரு அரசன் இன்னொரு நாட்டு அரசனுக்கு கொடுப்பது போன்று சேபா நாட்டு அரசிக்கு பரிசுகளைக் கொடுத்தான். மேலும் அவள் விருப்பப்படி கேட்டதையெல்லாம் கொடுத்தான். அதன்பின், அரசியும் வேலைக்காரர்களும் தம் நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள்.

14 ஒவ்வொரு ஆண்டும் சாலொமோன் அரசன் 79,920 பவுண்டு தங்கத்தைப் பெற்றான். 15 அவன் தர்ஷீசிலிருந்து பெற்ற தங்கத்திற்கு மேலாக அவன் வியாபாரிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடமிருந்தும், அரேபிய அரசர்களிடமிருந்தும், நாட்டு ஆளுநர்களிடமிருந்தும் பொன்னைப் பெற்றான்.

16 சாலொமோன் அரசன் அடித்தப் பொன் தகட்டால் 200 கேடயங்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 15 பவுண்டு தங்கமுடையதாக இருந்தது. 17 அதோடு 300 சின்ன கேடயங்களையும் செய்தான். அது ஒவ்வொன்றும் 4 பவுண்டு எடையுள்ளது. அரசன் அவற்றை, “லீபனோனின் காடு” என்ற கட்டிடத்தில் வைத்தான்.

18 சாலொமோன் அரசன் தந்தத்தினால் ஒரு சிங்காசனத்தைச் செய்தான். அதனைப் பொன் தகட்டால் மூடினான். 19 அதில் ஏறிச்செல்ல 6 படிகள் இருந்தன. அதன் பின் பகுதியின் உச்சியில் வட்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் கை வைப்பதற்கான பிடிமானங்கள் இருந்தன. 20 அதன் அருகில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் 12 சிங்கங்கள் நின்றன. எந்த அரசாங்கத்திலும் இதுபோல் அமைக்கப்படவில்லை. 21 அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!

22 அரசனுக்கு வியாபாரத்தின்பொருட்டு வேறு தேசங்களுக்கு அனுப்பப்பட்ட பல தர்ஷீசின் கப்பல்களும் இருந்தன. இவையனைத்தும் ஈராமின் கப்பல்கள், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அவை பொன், வெள்ளி, யானைத்தந்தம், விலங்குகள் போன்றவற்றை பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரும்.

23 பூமியிலே சாலொமோன் மிகப் பெரிய அரசனாக விளங்கினான். அவன் மற்றவர்களைவிட செல்வத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினான். 24 எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள் சாலொமோனைப் பார்க்க விரும்பினார்கள். தேவன் கொடுத்த ஞானத்தை அவன் மூலம் கேட்க விரும்பினார்கள். 25 ஒவ்வொரு ஆண்டும் ஜனங்கள் அரசனைப் பார்க்கவந்தனர். ஒவ்வொருவரும் அவனுக்குப் பரிசுகளையும் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கம், வெள்ளி, துணி, ஆயுதம், மணப் பொருள், குதிரை, கோவேறு கழுதை எனக் கொண்டு வந்தனர்.

26 எனவே சாலொமோனுக்கு ஏராளமான இரதங்களும் குதிரைகளும் இருந்தன. அவனிடம் 1,400 இரதங்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. இதற்கென்று ஒரு தனி நகரத்தையே உருவாக்கினான். அவன் சில இரதங்களை எருசலேமில் வைத்திருந்தான். 27 அவன் இஸ்ரவேலைச் செல்வம் செழிக்கச் செய்தான். அவன் நாட்டில் வெள்ளியானது பாறைகளைப்போல பொதுவாகக் கிடந்தது, கேதுரு மரங்கள் மலைப்பகுதியில் உள்ள காட்டத்தி மரங்களைப் போல மிகுதியாக வளர்ந்திருந்தன. 28 எகிப்திலிருந்தும் குவையிலிருந்தும் அரசன் சாலொமோன் குதிரைகளை வரவழைத்தான். வியாபாரிகள் அவற்றைக் கொண்டுவந்தனர். 29 எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு இரதம் 15 பவுண்டு வெள்ளியும், ஒரு குதிரை 33/4 பவுண்டு வெள்ளியும், மதிப்புடையதாக இருந்தது. சாலொமோன் இரதங்களையும், குதிரைகளையும் ஏத்தியர் மற்றும் சீரியர்களுக்கு விற்பனை செய்தான்.

அப்போஸ்தலர் 8:14-40

14 அப்போஸ்தலர்கள் இன்னும் எருசலேமில் இருந்தனர். தேவனுடைய வார்த்தையை சமாரியாவின் மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டார்கள். 15 ஆகவே பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பினார்கள். பேதுருவும் யோவானும் வந்தபோது சமாரிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். 16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர். 17 இரண்டு அப்போஸ்தலர்களும் அவர்கள் கைகளை மக்கள் மீது வைத்தார்கள். அப்போது அம்மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.

18 அப்போஸ்தலர்கள் தமது கைகளை மக்கள் மீது வைத்தபோது ஆவியானவர் அவர்களுக்கு அளிக்கப் பெற்றதை சீமோன் பார்த்தான். எனவே சீமோன் அப்போஸ்தலர்களிடம் பணத்தைக் கொண்டுவந்து 19 “நான் ஒருவன் மீது எனது கையை வைத்ததும், அவன் பரிசுத்த ஆவியைப் பெறும்படிக்கு இந்த வல்லமையை எனக்குத் தாருங்கள்” என்றான்.

20 பேதுரு சீமோனை நோக்கி, “நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய். 21 இந்த வேலையில் நீ பங்கைப் பெறமுடியாது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் நேர்மையாக இல்லை. 22 உனது மனதை மாற்று! நீ செய்த இந்தத் தீய காரியத்திலிருந்து விலகி விடு. கர்த்தரை நோக்கி பிரார்த்தனை செய். நீ இவ்வாறு நினைத்ததை அவர் மன்னிக்கக் கூடும். 23 நீ வெறுப்பினாலும், பொறாமையினாலும் நிரம்பி, பாவத்தால் ஆளப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.

24 சீமோன் பதிலாக, “கர்த்தரிடம் நீங்கள் இருவரும் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் சொன்னவை எனக்கு நேராதபடிக்கு பிரார்த்தனை செய்யுங்கள்!” என்றான்.

25 தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.

எத்தியோப்பிய அதிகாரியும் பிலிப்புவும்

26 தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான்.

27 எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் அரசியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். 28 இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.

29 ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார். 30 எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான்.

31 அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான். 32 வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ,

“அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார்.
    அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார்.
33 அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன.
உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது.
    அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” (A)

34 அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான். 35 பிலிப்பு பேச ஆரம்பித்தான். அவன் வேதவாக்கியத்தின் இந்தப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, அம்மனிதனுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.

36 அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான். 37 [a] 38 அதிகாரி இரதத்தை நிறுத்தக் கட்டளையிட்டான். பிலிப்புவும் அதிகாரியும் நீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39 அவர்கள் நீரிலிருந்து வெளிவந்தபோது கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அதிகாரி அவனை மீண்டும் பார்க்கவில்லை. அதிகாரி தனது வீட்டை நோக்கிப் பயணமானான். அவன் மகிழ்வுடன் இருந்தான். 40 ஆசோத்து என்னும் பட்டணத்தில் பிலிப்பு பின்னர் காட்சி தந்தான். அவன் செசரியா என்னும் நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் நற்செய்தியை ஆசோத்திலிருந்து செசரியா செல்லுகிற எல்லா ஊர்களிலும் போதித்தான்.

சங்கீதம் 130

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
    எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
    உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
    நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
    அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.

கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
    கர்த்தர் நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறார்.
    கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.

நீதிமொழிகள் 17:2-3

அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட மகனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் மகனைப்போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான்.

பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center